தீண்டாத தீ நீயே Kindle ebook link

0
3112

“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே இருந்தாலும் அவர் வீட்டுக்குள் எந்த பயலாலும் நுழைய முடியாது”என்றார் பெருமையாக.
“ஹுக்கும்… செவுத்துல கரண்ட் ஷாக் வச்சா அப்புறம் எவன் வருவான்’ என்று உள்ளுக்குள் திட்டித் தீர்த்தாள் வானதி.
அவள் மௌனமாக சாப்பிட அவளுக்கு உணவு பரிமாறிய வண்ணம் அவளிடம் ஈஸ்வர் புகழ் பாடத் தொடங்கினார் பவுனம்மா.
“தம்பி ரொம்ப நல்ல பையன் கண்ணு… மத்த இளந்தாரிப் பசங்க மாதிரி கிடையாது. தண்ணி,சிகரெட்ன்னு ஒரு கெட்டப் பழக்கம் கிடையாது. எப்பவும் தொழிலே கதின்னு கிடப்பார்…. அவரைத் தேடி ஒரு பெண் வந்தது கிடையாது. பொண்ணுங்க அப்படின்னா அவ்வளவு மரியாதையா தான் பேசும்.” என்ற ரீதியில் அவர் பேசிக் கொண்டே போக அவளுக்கு, ‘இரண்டு காதிலும் நெருப்பை வைத்துக் கொண்டால் என்ன?’ என்று தோன்ற ஆரம்பித்தது.
அவர் சொன்ன எல்லாமே உண்மை என்பது அவள் அறிந்த ஒன்று தானே… அவளை அவன் கடத்தி வைத்து இருந்த நாட்களில் ஒருநாள் கூட அவன் குடித்தோ, சிகரெட் பிடித்தோ அவள் பார்த்தது இல்லை. அவளிடம் கூட கண்ணியமாகத் தானே நடந்து கொண்டான். அந்த ஒரு கொடிய இரவைத் தவிர…
‘சே…என்ன இது எங்கே சுத்தினாலும்…மறுபடி மறுபடி அதையே நினைச்சுக்கிட்டு…’என்று எண்ணியவள் பாதி சாப்பாட்டில் எழ பவுனம்மா பதட்டமானார்.
“ஏன்மா… பாதி சாப்பாட்டில் எழுந்துட்டீங்க…”
“போதும் …” என்றவள் அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டு அறைக்கு சென்று விட அடுத்து சில நிமிடங்கள் கழித்து வீட்டுக்குள் வந்தான் ஈஸ்வர்.அவன் முகம் முழுக்க யோசனையும், குழப்பமும் சூழ்ந்து இருந்தது. எதுவுமே பேசாமல் சாப்பிட அமர்ந்தவன் மௌனமாக சாப்பிட்டு எழ… பவுனம்மா வானதி சரியாக சாப்பிடாததை கூற அவன் கேள்வியாக அவர் முகம் பார்த்தான்.
“என்ன நடந்துச்சு? ஏன் பாதி சாப்பாட்டில் எழுந்து போனா?”
“ஒண்ணுமில்லை தம்பி…உங்களை பத்தி நல்ல அபிப்பிராயம் வரட்டும்னு உங்களைப் பத்தி கொஞ்சம் நல்ல விதமா சொன்னேன்…படக்குனு பாதி சாப்பாட்டில் எழுந்து போய்ட்டாங்க” என்றார் வருத்தத்துடன்…
“அவளுக்கு என் மேல் கெட்ட அபிப்பிராயம்ன்னு உங்களுக்கு யார் சொன்னதுமா? அவளுக்கு என்னைப் பத்தி ரொம்ப நல்லாவே தெரியும். என் மேல் அவளுக்கு ரொம்பவும் நம்பிக்கை இருக்கு…மரியாதை இருக்கு…அது தான் அவளோட கோபத்திற்கு காரணம்” என்றான் தெளிவாக…
“ஒண்ணும் புரியலையே தம்பி”
‘நான் பொய்த்துப் போனதை அவளால தாங்கிக்க முடியலை…அது தான் நிஜம்’ என்று உள்ளுக்குள் வருத்தத்துடன் சொல்லிக் கொண்டவன் வெளியே சாதாரணமாக சிரித்து வைத்தான்.

****

“எதுக்கு இப்படி வேகமா என்னை இழுத்துக்கிட்டு வர்றீங்க? இந்த மாதிரி நேரத்தில் வேகமாக நடக்கக் கூடாதுன்னு பவுனம்மா சொல்லி இருக்காங்க.பாப்பாவுக்கு ஆகாதாம்” என்றவள் அவனது கையை பிடிக்காமல் பூமிக்கு நோகுமே என்று அஞ்சி நடப்பதைப் போல மென்நடை நடந்து சோபாவில் அமர்ந்தாள். விரும்பாத குழந்தையாக இருந்தாலும் அதை முழுமனதாக வெறுக்க முடியாததால் குழந்தையின் நன்மைக்காக ஒவ்வொரு சிறு செயலையும் பார்த்து பார்த்து செய்தாள் வானதி.
அவளின் நடவடிக்கைகளைப் பார்த்த ஈஸ்வரின் முகத்தில் தோன்றிய பாவனையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். அத்தனை சோகத்தை தாங்கி இருந்தது அவன் முகம். ஆனால் இது சோர்ந்து போகும் நேரம் இல்லையே… எதிரில் இருந்தவர்களை ஆத்திரத்துடன் உற்றுப் பார்த்தவனின் கண்களில் வெளிப்பட்ட ஆத்திரத்தை பூபதி சட்டை செய்யவே இல்லை… கண்களால் இறைஞ்சியபடி அவனை சமாதானம் செய்ய முயன்ற வைத்தீஸ்வரனின் புறம் அவன் திரும்பவும் இல்லை.
அவனது கவனம் முழுக்க வானதியின் புறமே இருந்தது.
“நீ மாடிக்குப் போ சில்லக்கா… நான் அங்கே வந்து பேசறேன். இங்கே வெளியாட்கள் முன்னாடி குடும்ப விஷயம் பேச வேண்டாம்” என்று பட்டு கத்தரித்தது போல பேசியவன் அங்கே நிற்கக் கூட விரும்பாமல் வானதியுடன் அறையை விட்டு வெளியேற வைத்தீஸ்வரன் அழும் குரலில் ஏதோ பேசத் தொடங்க… பூபதியின் முகமோ பயங்கரமா மாறிப் போயிற்று.
‘நேற்று வந்த அவளுக்காக என்னையே யாரோவாக்கி விட்டாயா ஈஸ்வர்?’ என்று சினத்துடன் எண்ணினார்.
‘இதுக்காக கண்டிப்பா நீ ஒருநாள் வருத்தப்படுவ ஈஸ்வர்…’ என்று மனதுக்குள் சூளுரைத்தவர் வைத்தீஸ்வரன் அமர்ந்து இருந்த சக்கர நாற்காலியை தள்ளிய வண்ணம் அங்கிருந்து சென்று வெளியே சென்று விட்டார்.
ஈஸ்வர் அதே நேரம் வானதியுடன் தங்களது அறையில் தீவிர யோசனையுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான்.
‘எதுக்கு இப்படி நடை பயிலுறார்? அப்படி என்ன யோசனை?’ என்று அவனையே ஊன்றி பார்த்துக் கொண்டு இருந்தாள் வானதி.
“எதுவும் பிரச்சினையா?” தயங்கிபடியே கேட்க… ஈஸ்வரின் நடை நின்றது.
“சில்லக்கா … இப்போ நான் கேட்கிற கேள்விக்கு நல்லா யோசிச்சு பதில் சொல்லு… உனக்கு வேணும்னா டைம் கூட எடுத்துக்கோ… ஆனா எனக்கு உன்னோட உறுதியான முடிவு என்னன்னு தெரியணும்” என்று பலமாக பீடிகை போட தலையும் புரியாமல் வாலும் புரியாமல் கொஞ்சம் குழம்பித் தான் போனாள் வானதி.
“உனக்கு கண்டிப்பா… இந்த கு… குழந்தை வேணுமா? என்ன தான் ஆயிரம் சமாதானம் சொன்னாலும் இது உனக்கு பிடிக்காத விதத்தில் வந்த குழந்தை தானே? இதை… இதை அழிச்சிடலாமா?” என்று உடல் இறுக கேட்டவன் அவளை பார்க்கும் துணிவின்றி ஜன்னல் கம்பிகளில் முகம் புதைத்துக் கொண்டான். அவனுக்கு அவளது பதில் என்னவாக இருக்கும் என்பது தெரிந்து இருந்தாலும் கூட அதை அவள் வாயால் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம்.
‘என்ன பேசுறார் இவர்?’ தன்னுடைய காதுகளில் விழுந்த வார்த்தை நிஜம் தானா? என்ற சந்தேகத்துடன் காதுகளை அழுந்த தேய்த்துக் கொண்டவளை பரிதாபத்துடன் பார்த்தான் ஈஸ்வர். அவளின் ஒவ்வொரு செய்கையிலும் அந்த குழந்தை மீது அவள் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு வெளிப்பட அவன் உடலும், முகமும் மேலும் இறுகி கற்பாறையானது.
“உங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சு இருக்கா?” கோபத்தில் தன்னை மறந்து கத்த தொடங்கினாள் வானதி.
“….”
“எனக்கு வெறுப்பு இந்த குழந்தை மேல கிடையாது. அது உருவான விதம் மேல தான். கோபத்தில் நான் ஆயிரம் வார்த்தை பேசுவேன். அதுக்காக என்னோட குழந்தையை அழிக்க நினைப்பீங்களா? அது என்னோட குழந்தை… எனக்கு வேணும்… என் குழந்தைக்கு மட்டும் எதுவும் ஆச்சு…. அப்புறம்… அப்புறம் உங்களை நான் மன்னிக்கவே மாட்டேன்.. உங்க மூஞ்சியில கூட முழிக்க மாட்டேன்… நானும் உயிரோடவே இருக்க மாட்டேன்” என்று மூச்சு வாங்காமல் படபடப்புடன் பேசிக் கொண்டே போனவளை ஒரே எட்டில் பாய்ந்து வந்து அணைத்துக் கொண்டான்.
அவனது அணைப்பில் இருந்து அவள் துள்ளி விலக முயற்சிக்க, அவனது அணைப்போ மேலும் இறுகியது. அவள் விலக, விலக அவன் அணைப்பு மேலும் இறுகத் தொடங்க ஒரு கட்டத்தில் வானதி சோர்ந்து போனாள்.
‘இப்போ எதுக்கு இந்த பேச்சு? ஒருவேளை இந்த குழந்தையை எதுவும் செஞ்சுடுவாரோ?’ என்ற எண்ணம் தோன்ற உடலும், மனமும் ஒருசேர அதிர்ந்தது அவளுக்கு.
“எ…என்னோட குழந்தையை எதுவும் செஞ்சுடுவீங்களா?” என்று மிரட்சியுடன் அவள் கேட்க.. அந்த கேள்வியின் கணத்தை தாங்க முடியாமல் , மேலும் அவளுக்குள் மூழ்கத் தொடங்கினான் ஈஸ்வர்.அவளுக்கு ஆறுதல் சொல்வதற்காக அவளை அணைத்துக் கொண்டானா அல்லது அவளது அணைப்பில் அவன் ஆறுதல் தேடினானா என்பது அவனுக்கே தெரியாமல் போனது தான் விந்தை.

 

****

“ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்கோ சில்லக்கா…நீ நிலத்தில் இருக்கிற வரை போற பாதையை நீ தீர்மானிக்க முடியும்.ஆனா நீ இப்ப இருக்கிறது கடல்ல…கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டா..அது எந்த திசைக்கு உன்னை தள்ளுதோ அந்த திசையில் தான் நீ பயணம் செஞ்சாகணும்.கடலோட ஆக்ரோஷத்துக்கு முன்னாடி நீ எடுக்கிற எல்லா முயற்சியும் வீண் தான்” என்றவனின் அமைதியான அணுகுமுறை கண்டு அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
“…”
“சரி இந்தா காபியை குடி…”
“எனக்கு ஒரு மண்ணும் வேண்டாம்…”ஆத்திரத்தில் வெடித்து சிதறினாள் வானதி.
“இதை குடிச்சா..உனக்கு ஒரு நல்ல சேதி சொல்வேன்…சம்ஹார மூர்த்தியைப் பற்றி”என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே வேகமாக அவன் கையில் இருந்த காபி கோப்பையை பறித்தவள் கடகடவென்று குடித்து முடித்தாள்.
“அந்த காபி கசப்பா இருக்குமே…உனக்கு அதோட டெஸ்ட் வேற பிடிக்காது…இருந்தும் அதை இவ்வளவு வேகமா குடிச்சு முடிச்சுட்டியே”என்று சிலாகித்தான் ஈஸ்வர்.
“அதை விடுங்க சார்……அவர்..அவருக்கு என்ன? சொல்லுங்க சார்”
“அவ்வளவு லவ்வா அவன் மேல”என்றான் ஒரு மாதிரிக் குரலில்…
அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லாத வானதி அவனை தொடர்ந்து நச்சரித்தாள்.
“சொல்லுங்க சார்…ப்ளீஸ்”
“சம்ஹார மூர்த்தி ஜெயிலில் இருந்து விடுதலை ஆகிட்டான்”என்று அவன் சொல்லி முடித்ததும் அவள் முகமெங்கும் மத்தாப்பூவாக மலர்ந்தது.
“டிவியில் சில விளம்பரம் வரும் பார்த்து இருக்கியா சில்லக்கா”என்றான் முகம் முழுக்க புன்னகையுடன்.அவனுடைய இந்த முகம் அவளுக்குள் திகிலூட்ட அவனையே பயத்துடன் பார்க்கத் தொடங்கினாள்.
“எண்ணெய் வாங்கினா கப் இலவசமா கொடுப்பாங்க…சோப் வாங்கினா டப்பா ஒண்ணு இலவசமா தருவாங்க..அதே மாதிரி நல்ல செய்தி ஒண்ணு சொன்னா என்கிட்டே உனக்கான இன்னொரு கெட்ட செய்தியும் இலவசமா கிடைக்கும்.”
“எ…என்ன சார்”
“கொஞ்ச நேரம் முன்னாடி நீ குடிச்சியே அந்த காபியில் மயக்க மருந்து கலந்துட்டேன்”
“பொ… பொய் சொல்றீங்க”என்றாள் நடுங்கும் இதயத்துடன்…
“அதுக்கான அவசியம் எனக்கு இல்லை”
“எதுக்கு இப்படி செஞ்சீங்க? எ…என்னை என்ன செய்யப் போறீங்க”என்று அவள் கேட்க,அவன் பார்வை ஒருவித சுவாரசியத்துடன் அவளை வருடியது.அவன் என்ன சொல்லப் போகிறானோ என்று ‘திக் திக்’ என அதிரும் மனதுடன் , உயிரை கண்ணில் தேக்கியபடி அவள்,அவனையே பார்த்துக் கொண்டு இருக்க… மெல்லிய தோள் குலுக்கலுடன் தொடர்ந்து பேசினான்.
“இன்னும் கொஞ்ச நேரத்தில் நாம இங்கே இருந்து கிளம்பியாகணும்…நீ முழிச்சுக்கிட்டு இருந்தா ரொம்ப தொந்தரவு செய்வ…உன்னை கையை கட்டி,காலை கட்டி தூக்கிட்டுப் போறதுல எனக்கு இஷ்டம் இல்ல…”அமர்த்தலாக அவன் பேசிக் கொண்டு இருக்க செய்வது அறியாமல் திகைத்துப் போய் அமர்ந்து இருந்தாள் வானதி.
“இந்த மூர்த்தி என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான் வானதி…அப்படியே லட்டு மாதிரி உன்னை அவன் கிட்டே தூக்கி கொடுத்துட்டு அவன் முன்னாடி தோத்துப் போய் தலை குனிஞ்சு நிற்பேன்னா…நெவர்…நான் சொன்ன அந்த மூணு மாச கெடுவும் முடியற வரை எந்த கொம்பனாலும் உன்னை என்கிட்டே இருந்து காப்பாத்த முடியாது சில்லக்கா….அவன் எத்தன்னா… நான் ஜித்தன்…
அவன் எப்போ எந்த மாதிரி யோசிப்பான்னு அவனை விட எனக்கு நல்லாவே தெரியும் சில்லக்கா…இந்நேரம் நம்ம பக்கத்தில் எந்த துறைமுகமும் இல்லை அதனால சுலபமா என்னை பிடிச்சிடலாம்ன்னு நினைச்சு ரொம்ப வேகமா நம்மை தேடி வந்துக்கிட்டு இருப்பார்.உன்னோட அவர்…” என்று அவன் ஒரு வித வெறியோடு பேசிக் கொண்டே போக வானதிக்கு சுற்றுப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கியது.
“ஆனா அவன் இப்போ தேடி வர்றது உன்னை இல்ல…அவனோட அழிவை” வேங்கையின் சீற்றத்தோடு பேசிக் கொண்டே போனவனை இயலாமையுடன் வெறித்து பார்த்தவாறே மயங்கி சரிந்தாள் வானதி

 

 

தீண்டாத தீ நீயே

Facebook Comments Box
What’s your Reaction?
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here