ஒளியைத் தேடி

0
246

மண்ணத் தொட்டு கும்பிட்டுட்டு
பொட்டொண்ணு வைச்சுக்கம்மா
வெள்ளைக் கல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
தெக்கால ஓடுற காவிரியாறும் சந்தங்கள் பாடட்டுமே
வடக்கால ஓடுற வைகையும் வந்து
வாழ்த்துக்கள் கூறட்டுமே

“மணி… மணி… அம்மா தம்பி எங்கேம்மா? ரொம்ப நேரமா தேடுறேன்… கண்ணிலயே பட மாட்டேங்கிறான்”
“அந்த கூத்தை ஏன் வள்ளி கேட்கிற? நாளைக்கு உனக்கு கல்யாணம் முடிஞ்சதும் நீ உன் புருஷன் வீட்டுக்குப் போயிடுவன்னு சொன்னதும் அழுதுகிட்டே போய் கட்டிலுக்கு அடியில் ஒளிஞ்சவன் தான். வெளியே வரவே மாட்டேங்கிறான்.”
“நீ சும்மாவே இருக்க மாட்டியா? தம்பியை அழுக விடுறதே உனக்கு பொழைப்பா போச்சு”சலித்துக் கொண்டாள் வள்ளி.
“நான் என்னத்த இல்லாததையா சொன்னேன்… அக்காவும், தம்பியும் இப்படி சிலுப்பிக்கறீங்க”
“பேசாதம்மா… நான் மணியை சமாதானம் செஞ்சு இங்கே கூட்டிட்டு வர்றேன்… அதுவரைக்கும் நீ அந்தப் பக்கம் வரக் கூடாது சொல்லிட்டேன்” என்று மிரட்டலாக மொழிந்த வள்ளி, தன்னுடைய எட்டு வயது தம்பி மணிகண்டனைத் தேடிப் போனாள்.
“மணி… இங்கே என்னடா தங்கம் செய்ற?”
“அக்கா… நிசத்தை சொல்லு.. நாளைக்கு உனக்கு கல்யாணம் முடிஞ்ச பின்னாடி நீ இங்கே இருக்க மாட்டியா?”அழுதழுது சிவந்து வீங்கிய கண்களுடன் இருந்த தம்பியிடம் உண்மையை சொல்ல முடியாமல் தடுமாறினாள் வள்ளி.
“சாப்பிட்டியா மணி?”
“அக்கா பேச்சை மாத்தாதே… உனக்கு கல்யாணம் ஆகி போய்ட்டா நான் உன்னை பார்க்கவே முடியாதா?”
“டேய்! அப்படி எல்லாம் இல்லைடா… நான் எங்கே போறேன்!… பக்கத்து ஊருக்கு தானே?… நீ அக்காவை பார்க்கணும்னு நினைச்சா அடுத்த பத்தே நிமிசத்தில் பார்க்கலாம்… அக்காவும் தினமும் உன்னை வந்து பார்ப்பேன்.”
“தினமும் வருவியா?”
“கண்டிப்பா வருவேன்” என்று அவள் அழுத்தமாக சொல்ல… அதில் விரவிய உண்மையில் சமாதானம் அடைந்தவன் கட்டிலின் அடியில் இருந்து வெளியேறி வள்ளியின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டான்.
“அக்கா… மாமா வந்த பிறகு உன்னை பார்க்கவே விட மாட்டார்னு அம்மா சொன்னாங்களே… அப்போ மாமா கெட்டவரா?”
“தம்பி… உனக்கு அம்மாவைப் பத்தி தெரியாதா? சும்மா உன்னை வம்பு இழுத்து இருப்பாங்க… மாமா ரொம்ப நல்லவர் தம்பி” என்று சொன்னவளின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கத் தொடங்கியது.
பிறந்ததில் இருந்தே மணிகண்டன் அவனுடைய அன்னையிடம் இருந்ததை விட வள்ளியிடம் தான் அதிக நேரம் இருந்தான். மணிகண்டனுக்கும் அம்மா என்றதும் வள்ளியின் முகம் மட்டுமே நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு இருவரும் ஒருவர்மேல் மற்றொருவர் பாசத்தை அள்ளி வழங்குவார்கள்.
வள்ளியின் தந்தை மணிகண்டனின் இரண்டாவது வயதிலேயே தவறி விட… அவர்களின் அன்னை கனகத்திற்கு வீட்டில் இருக்கும் இரண்டு பிள்ளைகளையும் வளர்ப்பதற்கு வேண்டிய பொருள் ஈட்டுவதற்கே பொழுது சரியாகிவிட… மணிகண்டனை வளர்க்கும் பொறுப்பை மிக இயல்பாகவே ஏற்றுக் கொண்டாள் வள்ளி.
அவளுக்கும் மணிகண்டனுக்கும் பதினோரு வயது வித்தியாசம் இருந்ததெல்லாம் அவளது கருத்தில் பதியவே இல்லை. அக்காவின் அணைப்பிலேயே வளர்ந்த மணிகண்டனும் எப்பொழுதும் வள்ளியின் கூடவே சுற்றி கொண்டிருப்பான். அவனது உலகம் வள்ளியை சுற்றி தான் இயங்கிக் கொண்டிருந்தது.
இனி கல்யாணம் நடந்த பிறகு முன் போல தம்பியிடம் ஒட்டி உறவாட முடியாது என்பதை அவள் நன்கு அறிவாள். ஆனால் அதை இவனிடம் இப்பொழுது சொன்னால் அவனால் தாங்க முடியாது. ஏற்கனவே அழுதழுது முகம் வீங்கிப் போய் இருக்கிறது. கொஞ்ச நாளில் சரியாகி விடுவான் என்று எண்ணி மனதை தேற்றிக் கொண்டாள்.
அவளுக்கு வேறு வழியும் இல்லை. வள்ளிக்கு வயது பதினெட்டு தான் ஆகிறது. கனகம் பிள்ளைகளுக்காக ஓயாமல் உழைப்பவள் தான். ஆனால் பத்து பைசா கூட சேமிக்கத் தெரியாது. வள்ளியை எப்படியோ பத்தாவது வரை படிக்க வைத்தார்.
அதற்கு மேல் வசதி இல்லாமல் அவளது படிப்புக்கு முழுக்கு போட்டாயிற்று. இப்பொழுது பக்கத்து ஊரில் இருந்து நல்ல வரன் வந்திருப்பதாக சொல்லி வள்ளியை படாதபாடுபட்டு சம்மதிக்க வைத்திருக்கிறார்.
வருங்கால மாப்பிள்ளை மணிகண்டனின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக வாக்களித்து இருப்பதாக சொல்ல… வள்ளியும் தம்பிக்காக சம்மதித்தாள். அவனது படிப்பும் பாதியிலேயே நின்றுவிடக் கூடாது என்று எண்ணினாள்.
வள்ளியின் திருமணம் அடுத்த நாள் சிறந்த முறையில் நடந்தேறியது. அக்காவின் பேச்சை முழுமனதாக நம்பி இருந்த மணிகண்டனோ… வள்ளியை எதிர்நோக்கி தினமும் காத்திருக்கத் தொடங்கினான்.
உடனடியாக வேறு நல்ல நாள் இல்லாததால் மறுவீட்டு விருந்தும் திருமணம் முடிந்த அன்றே நடந்து இருக்க… நான்கு நாட்களுக்கு மேல் மணிகண்டனால் தாக்கு பிடிக்க முடியவில்லை. வள்ளியை எதிர்பார்த்து ஏங்கிப் போனவனுக்கு ஜுரம் வந்து விட…. கனகத்திற்கு வேறு வழி தெரியாமல் மகளுக்கு தகவல் சொல்லி அனுப்ப பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தாள் வள்ளி.
தம்பியின் நிலையை காண சகிக்கவில்லை அவளுக்கு… வெறும் நாலே நாளில் மணிகண்டன் பாதியாக இளைத்துப் போய் விட்டான். இப்படியே விட்டால் அவனது உயிருக்கு தானே எமனாகி விடுவோம் என்பது புரிய… உடன் வந்திருந்த கணவன் குமரேசனிடம் பேசத் தொடங்கினாள்.
“தம்பியையும், அம்மாவையும் நம்ம ஊருக்கே கூட்டிட்டு போய்டலாம்ங்க… நம்ம வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு வீட்டை பார்த்து கொடுத்துடலாம். இப்படியே போனா என் தம்பி ஏங்கியே செத்துடுவான்” என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தை வராமல் கணவனின் தோளிலேயே சாய்ந்து அழுக… குமரேசனுக்கும் மணிகண்டனின் நிலை புரிந்தது.
அடுத்தடுத்து எல்லா வேலைகளும் மளமளவென்று நடந்தேற அன்றே மணிகண்டனும், கனகமும் குமரேசனின் வீட்டிற்கு குடிபெயர்ந்தார்கள்.
“தனியா வேற வீட்டில் எங்களை குடி வச்சு இருக்கலாமே மாப்பிள்ளை?” தயங்கி தயங்கி கேட்டார் கனகம். ஊராரின் முணுமுணுப்புகள் அவரை அப்படி பேச வைத்திருந்தது.
‘பெண்ணை கட்டிக் கொடுத்த வீட்டில் கல்யாணம் முடிஞ்ச நாலே நாளில் இப்படி பிள்ளையோட வந்து உட்கார்ந்துகிட்டாளே இந்த பொம்பளை… என்ன குடும்பமோ? என்ன வழமையா?”
“அத்தை… ஊரில் பேசுறவங்க பேசிகிட்டே தான் இருப்பாங்க. அதை எல்லாம் பார்த்தா நாம வாழவே முடியாது. இந்த வீட்டில் நான் மட்டும் தான் இருக்கேன். உங்களுக்கும் மணிக்கும் மட்டும் எதுக்கு தனியா உலை வைக்கணும். எங்களுக்கும் வீட்டில் உங்களை மாதிரியே ஒரு பெரியவங்க இருந்தா நல்லது தானே..
எங்களுக்கு சமைக்கும் பொழுது உங்க இரண்டு பேருக்கும் சேர்த்து கூட ஒரு கைப்பிடி அரிசி போட்டா வேலை முடிஞ்சது. கண்டதையும் யோசிக்காம நிம்மதியா இருங்க…” என்றவன் அடுத்த வேலையை பார்க்கப் போய்விட வள்ளிக்கு மனதில் பெரும்பாரம் நீங்கிய உணர்வு.
நாட்கள் உருண்டோடியது.
வள்ளி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். குடும்பமே ஆனந்த கூத்தாடியது.
‘ஜோதி’ என்று அவளுக்கு பெயர் சூட்டினார்கள்.
மணிகண்டன் அவள் பிறந்ததில் இருந்து கையை விட்டு அவளை இறக்கவே இல்லை. உள்ளங்கையில் தாங்கினான். அவனது நாளின் பெரும்பொழுது அவளுடன் தான் கழிந்தது.
நாட்கள் இறக்கை கட்டி பறக்க… மொத்த குடும்பமும் சந்தோசத்தில் மிதந்து கொண்டிருந்தது. ஜோதிக்கு இரண்டு வயதாகும் பொழுது அவர்களின் தலையில் இடியை இறக்குவது போல அந்த நிகழ்வு நடந்தது.
வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த குமரேசனை மின்சாரம் தாக்க… கணவனை காப்பாற்றப் போய் வள்ளியும் மின்சாரத்தால் தாக்கப்பட்டாள். இருவரின் உயிரும் அடுத்த சில நிமிடங்களில் பிரிந்தது.
சேதியைக் கேட்ட மணிகண்டனுக்கு அழக் கூட தோன்றாமல் பிரமை பிடித்தவனைப் போல அமர்ந்திருந்தான்.
பெற்றவர்களை பறி கொடுத்த உண்மையைக் கூட அறியாமல் வாயில் கட்டை விரலை வைத்து சூப்பிக் கொண்டு , முகம் நிறைய புன்னகையை பூசிக் கொண்டிருந்த ஜோதியைக் கண்டவன் பாய்ந்தோடி அவளை கையில் அள்ளிக் கொண்டு கதறித் தீர்த்தான்.
அவனுக்கு பன்னிரெண்டு வயது.. என்ன, ஏது ஒன்றுமே புரியாத நிலை… கனகம் ஒரு பக்கம் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழ… மணிகண்டனுக்கோ உலகமே இருண்டு போன நிலை.
அவன் கண் முன்னேயே வள்ளிக்கும், குமரேசனுக்கும் இறுதி சடங்குகள் நடந்தது. பிறந்ததில் இருந்தே தாயின் ஸ்தானத்தில் இருந்த வள்ளியை ஒரு பிடி சாம்பலாக்கி அவன் கையில் கொடுத்த அந்த கொடிய தருணத்தை நம்ப முடியாமல் மிரண்டு அழுதான்.
வீட்டிற்குள் வரும் வரையில் நிறுத்தாமல் அழுது கொண்டே இருந்தான். வள்ளி, குமரேசன் இருவரின் படங்களுக்கு கீழே அஸ்தியை வைத்தவனின் பார்வை முதலில் தேடியது ஜோதியைத் தான். தரையில் பாயில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
யாருமே இல்லாத நிராதாரவான அந்த தோற்றம் கண்டு அவன் நெஞ்சம் அதிர்ந்தது. பெரும்பாலும் உறங்கும் நேரங்களில் வள்ளியின் அருகே படுத்து உறங்கும் ஜோதி இன்று தனியாக படுத்த இருந்த அந்த கோலம் அவனது நெஞ்சை வாள் கொண்டு அறுத்தது.
கண்களில் வழிந்த கண்ணீரைக் கூட துடைக்கத் தோன்றாமல் அவள் அருகே சென்றவன் உறங்கிக் கொண்டிருந்த ஜோதியை அள்ளி தன்னுடைய நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
“இனி மாமா இருக்கேன்டா உனக்கு” அவளை நெஞ்சிலேயே தட்டிக் கொடுத்தவன் அதன் பிறகு அவளை அவன் நெஞ்சில் இருந்து கீழே இறக்கவே இல்லை. ஜோதிக்காக தன்னுடைய படிப்பை நிறுத்தினான்.
குமரேசனுக்கு இருந்த கொஞ்ச நிலத்தில் கனகத்தின் உதவியோடு விவசாயம் பார்த்தான். ஆடு, கோழி எல்லாம் வளர்த்தான். ஜோதிக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தான்.
அவனைப் போலவே ஜோதிக்கும் , மணிகண்டன் என்றால் உயிர்… பெற்றோர்களின் நினைவே அவளுக்கு வரக் கூடாது என்பதில் வெகு கவனத்துடன் இருந்தான் மணிகண்டன்.
ஜோதியும் அவனுக்கு சளைத்தவள் அல்ல… மணிகண்டனின் மீது உயிரையே வைத்திருந்தாள்.
“ஏன் மாமா நானும் உன்னை மாதிரியே ஆறாம் வகுப்போட பள்ளிக்கூடத்துக்கு போறதை நிறுத்திடணுமா?”
“அடக் கழுத… எனக்கு படிப்பு ஏறல… அதான் படிப்பை நிறுத்திட்டேன். ஆனா நீ அப்படியா? உங்க ஸ்கூல்லயே நீ தான் நல்லா படிக்கறனு உங்க டீச்சரம்மா கூட நேத்து என்னை பார்த்தப்போ சொன்னாங்களே” என்றான் பெருமையாக…
ஒன்றாம் வகுப்பு படிக்கும் அக்கா மகளை வெள்ளிக்கிழமை என்பதால் நல்லெண்ணெயும், அரப்பும் தேய்த்து குளிப்பாட்டியபடியே அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“பொய் சொல்லாதே மாமா… நேத்து அம்மாச்சி சொல்லுச்சு… நீ நல்லா படிப்பியாம்.. எனக்காகத்தான் படிப்பை நிறுத்திட்டியாம்”
‘இந்த அம்மாவுக்கு வேற வேலை இல்லை… பழைய விஷயங்களை பொலம்புறதே வேலையா போச்சு…’
“அதெல்லாம் இல்லை கண்ணு… அம்மாச்சிக்கு என்னை உசத்தி பேசணும் இல்லையா.. அதுக்காக அப்படி சொல்லி இருப்பாங்க.. எனக்கு சுத்தமா படிக்கவே தெரியாது… ரெண்டும் ரெண்டும் இருபத்திரெண்டுனு சொல்வேன்.. கணக்குனா எனக்கு வேப்பங்காய்” அவளை சமாதானம் செய்யும் பொருட்டு வாயில் வந்த பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டான்.
“மாமா?”
“என்னடா கண்ணு”
“வந்து… அம்மாச்சி சொல்லுச்சு”
“என்னவாம்?”
“நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆகிட்டா அதுக்கு அப்புறம் உன் பொண்டாட்டி பேச்சைத் தான் கேட்பியாம்… நானும் வர்ற அத்தையின் சொல்பேச்சு கேட்டு அவங்க மனசு கோணாத மாதிரி நடந்துக்கணுமாம். இல்லைனா உனக்கு என்னை பிடிக்காம போயிடுமாம்” என்று கண் கலங்க உதட்டை பிதுக்கிக் கொண்டு சொன்ன பத்து வயது ஜோதியைக் கண்டதும் அவன் கண்கள் கலங்கியது.
‘வரலாறு திரும்புகிறதோ’
“இந்த கிழவிக்கு வேற வேலை இல்லை… அதெல்லாம் நீ நம்பாதே கண்ணு… மாமா எப்பவும் உன் கூடவே தான் இருப்பேன்” என்று அழுத்தமாக உரைத்து அவளை சமாதானம் செய்தான்.
நாட்கள் விரைந்தன.
பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தவுடன் கல்லூரியில் அவளை சேர்ப்பதற்காக மிகுந்த கவனத்துடன் பணத்தை சேர்த்துக் கொண்டிருந்தான் மணிகண்டன்.
“என்னடா கண்ணு படிக்கப் போற?”
“நீயே சொல்லு மாமா”
“டீச்சருக்கு படிக்கறியா கண்ணு”
“அதெல்லாம் வேண்டாம் மாமா.. என்னை டைலரிங் கிளாசில் சேர்த்து விடு”
“ஏங்கண்ணு… நீ டீச்சருக்கு படிச்சா நாலு பேருக்கு படிப்பு சொல்லி கொடுக்கலாம்ல… உனக்கு அந்த படிப்பு கஷ்டமா இருக்குமா?” என்றான் பதட்டமாக
“டீச்சருக்கு படிக்க நிறைய செலவாகும்ல அதனால அது வேண்டாம் மாமா.. அதுக்கு பதிலா டையிலரிங் படிச்சா ஆறே மாசத்தில் நானும் சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவேன்.”
“பணத்தை பத்தி நீ எதுக்கு கண்ணு கவலைப்படுற… அதெல்லாம் மாமா ஏற்கனவே ரெடி பண்ணி வச்சுட்டேன். நீ நல்ல பிள்ளையா படிக்கிற வேலையை மட்டும் செய் கண்ணு.”
“ஏன் மாமா… நான் உனக்கு அளவுக்கதிகமா கஷ்டம் கொடுக்கிறேனா?” மணிகண்டனின் சக்திக்கு மீறி அவனை செலவு செய்ய வைக்கிறோமோ என்ற கவலை அவளுக்கு வந்தது.
இதுநாள்வரை அவன் தனக்கென்று எதையும் செய்து அவள் பார்த்ததில்லை. தூக்கத்தில் கூட மணிகண்டனுக்கு ஜோதியின் நினைவு தான். அப்படிப்பட்டவனுக்கு மேலும் துன்பத்தைக் கொடுக்கக் கூடாது என்று நினைத்தாள்.
அப்படி அவள் நினைப்பதற்கு அவளது அம்மாச்சியும் ஒரு காரணம்.
“பொம்பளை புள்ளைக்கு எதுக்கு படிப்பெல்லாம்… இதுநாள்வரை படிச்சதெல்லாம் போதாதா? இவ படிப்புக்கே என் புள்ளை ராவு,பகல் பார்க்காம வயலே கதின்னு கிடக்கிறான்… இன்னும் இவளுக்கு கல்யாணம் செய்ற செலவும் அவன் தலையில் விழும்.. அவனுக்குத் தான் புத்தியில்லை… இந்த சிறுக்கியாவது அதை புரிஞ்சுக்கிட்டு வீட்டோட அடங்கி இருக்கலாமே” என்று அவளிடம் அங்கலாய்த்தது அவளின் கண் முன்னே வந்து போனது.
“நீ இப்படி எல்லாம் நினைக்கிறது தான் கண்ணு எனக்கு சங்கடமா இருக்கு. இனியொருமுறை இது மாதிரி நினைக்கக்கூட கூடாது” என்று அவளுக்கு கட்டளையிட்டான்.
“சரி மாமா… என்ன மாமா இன்னிக்கு சனிக்கிழமை எண்ணெய் தேய்ச்சு குளிக்கணுமே.. மறந்துட்டியா?”
“அட ஆமாங்கண்ணு.. மறந்துட்டேன் பாரு… நீ போய் எண்ணெயும், அரப்பும் கொண்டு வா” என்று சொல்ல இரட்டை சடையை பின்னால் சுழன்றடித்தவாறே மானாக ஓடினாள் ஜோதி.
ஜோதியை டீச்சிங் படிப்பிற்காக டவுனில் உள்ள பெரிய காலேஜில் சேர்த்து விட்டான். தினமும் வந்து போவது அவளுக்கு உடல் சோர்வை கொடுக்கக்கூடும் என்றெண்ணி அந்த கல்லூரியிலேயே விடுதியில் அவளை சேர்த்து விட்டு வந்தான் மணிகண்டன். விடுதியின் உள்ளே அவளை ஒப்படைத்து விட்டு வந்தவனின் கண்கள் குளமாக மாறியது.
பிறந்ததிலிருந்து ஒருநாள் கூட மணிகண்டனை விட்டு அவள் பிரிந்திருந்தது இல்லை.இரவு தூங்கும்போது கூட அவனின் நெஞ்சில் தான் படுத்து உறங்குவாள் அவள். வயதுக்கு வந்த பின்னர் தான் கனகத்தின் சொல்படி அவளை தனியே படுக்க வைத்து பழகினான் மணிகண்டன். கண்ணெதிரில் தான். அதுவே அவர்கள் இருவருக்கும் தாள முடியாத துன்பமாக இருந்தது.
மணிகண்டனுக்கு அப்பொழுது ஓரளவு விபரம் புரிகின்ற வயது என்பதால் கனகம் சொன்னதை அவன் மறுத்து பேசவில்லை. ஆனால் ஜோதியால் அதை ஏற்க முடியாமல் இரவெல்லாம் அழுகையில் கரைந்தாள். அவளால் அத்தனை எளிதில் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கனகத்திடமும், மணிகண்டனிடமும் போராடிப் பார்த்தாள். இருவருமே கொஞ்சமும் அசையவில்லை.
மணிகண்டனுக்கு ஜோதியை எப்படியாவது நல்ல பணக்கார இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அவளது திருமணத்திற்காக என்று நகை சீட்டும் போடத் தொடங்கி இருந்தான்.
அவளுக்காக அவன் அத்தனை தூரம் யோசித்து இருக்க… ஜோதியோ ஒரே வாரத்தில் வீட்டுக்கு திரும்பி விட்டாள்.
“இங்கே இருந்து போறதுனா நான் போய் படிக்கறேன்.. உங்களை எல்லாம் விட்டுட்டு போய் தான் படிக்க முடியும்னா எனக்கு படிப்பே வேண்டாம்” என்று திட்டவட்டமாக அறிவித்து விட கனகம் வாய் ஓயாமல் அவளை திட்டித் தீர்த்தார்.
“என் பையன் கிறுக்கனாட்டம் இவளுக்காக ஆடு வளர்த்து, கோழி வளர்த்து குருவி சேர்க்கிற மாதிரி காசு சேர்த்து இவளை படிக்க அனுப்பினா… இந்த கிறுக்கச்சி இப்படி ஒரே வாரத்தில் வீட்டுக்கு திரும்பி வந்து நிக்குறாளே”
“அம்மாச்சி நான் என்ன படிக்கவே மாட்டேன்னா சொன்னேன்… இங்கே இருந்தே தினமும் போய் படிச்சுக்கிறேன்னு தானே சொன்னேன்”
“ஏன் கண்ணு.. அங்கே எதுவும் பிரச்சினையா? யாரும் தொந்தரவு செய்றாங்களா?” என்றான் அக்கறையாக.
‘இவனிடம் எப்படி சொல்வது? இவனை விட்டு பிரிந்திருப்பது என்பது உயிரையே பிரிந்து இருப்பதைப் போல என்று’
இதுநாள் வரை அவளே அறியாத உணர்வாய் இருந்தது அது. அவன் கூடவே ஒட்டுப்புல் போல பழகி திரிந்த காலத்தில் எல்லாம் அது போல அவளுக்கு தோன்றியதில்லை. அவனோடு உடன் திரிந்த பொழுதுகளில் தோன்றாத உணர்வு… அவனை பிரிந்த ஒரே வாரத்தில் அவளுக்கு தெரிந்து போனது. அவனை தினமும் பார்க்காமல் அவனோடு பேசாமல் அவளால் இருக்க முடியாது என்று… அதற்கு அவன் வைத்திருக்கும் பெயர் பாசம்… அவள் வைத்த பெயர் காதல்.
இதை மணிகண்டனிடம் சொல்லி அவனை திருமணம் செய்து கொண்டு படிப்பை தொடர வேண்டும் என்ற முடிவுடன் தான் வீட்டுக்கு கிளம்பி வந்து விட்டாள் ஜோதி.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா… எனக்கு அங்கன தங்கி படிக்க பிடிக்கலை… உங்களை எல்லாம் பார்க்காம இருக்க முடியலை… இங்கே இருந்தா எனக்கு எப்பவும் அப்பா, அம்மா கூடவே இருக்கிற மாதிரி இருக்கும்” என்று சொல்ல அதற்கு மேல் அவன் எதையும் கேட்கவில்லை.
அவனுக்குமே பல நேரங்களில் தோன்றிய உணர்வல்லவா அது… அவனுக்கே அப்படி இருக்கும் பொழுது ஜோதிக்கு மட்டும் தோன்றாதா என்ன? மறுத்து பேசாமல் அப்படியே அமைதியாகி விட்டான்.
ஆனால் அதன்பிறகு ஜோதியின் நடவடிக்கைகளில் அவனுக்கு பெரும் வித்தியாசம் தெரிந்தது.
அவன் பார்க்காத நேரங்களில் அவனை பார்ப்பதும்… அவன் பார்த்தால் பார்வையை அவசரமாக வேறுபுறம் திருப்புவதுமாக இருந்தாள்.
அவளது உடைகளுடன் அவனது ஆடைகளையும் சேர்த்து துவைக்கத் தொடங்கினாள்.
அவனை தினமும் பூ வாங்கிக் கொண்டு வர சொன்னாள். அவனோடு சேர்ந்து கோவிலுக்கு போனாள்.
அப்பொழுதெல்லாம் கூட அவனுக்கு பெரிதாக எதுவும் தோன்றவில்லை. ஒரு வாரம் பிரிந்து இருந்ததால் ஜோதி ஏங்கிப் போய் விட்டாள் போலும் என்று மட்டுமே நினைத்துக் கொண்டான்.
அன்று சனிக்கிழமை… அவன் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம். மறந்தார் போல குளிக்க சென்றவனுக்கு அப்பொழுது தான் நினைவு வர… உள்ளிருந்தே குரல் கொடுத்தான்.
“யம்மா… எண்ணெயும், அரப்பும் கொண்டு வர மறந்துட்டேன். கொஞ்சம் கொண்டு வந்து கொடு…” என்று சொல்ல சில நிமிடங்களில் அந்த கூரை தட்டியால் வேய்ந்த கதவுகளை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் ஜோதி. அவளை அங்கே எதிர்ப்பார்க்காத மணிகண்டனோ வேகமாக துண்டை எடுத்து தோளை சுற்றி போட்டுக் கொண்டான்.
“வெளியே இருந்தே கொடுத்து இருக்கலாமே கண்ணு”
“ஏன் மாமா?”
“அது…”
“என்ன மாமா நீ இவ்வளவு யோசிக்கற… சின்ன வயசுல என்னை நீ குளிப்பாட்டி கூட விட்டு இருக்க.. இப்ப மட்டும் என்ன வந்துடுச்சு… நான் என்ன உன்னை குளிப்பாட்டவா வந்தேன்” என்றாள் துடுக்காக.
அவனுக்கு எப்படி அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் தயங்கி நின்றான் அவன்… அவளை குளிப்பாட்டும் பொழுது அவளுக்கு வயது இரண்டு… அவனுக்கு பனிரெண்டு வயது. விகல்பமில்லாத பருவம்.
அதுவும் இதுவும் ஒன்றா? இப்பொழுது அவளுக்கு பதினெட்டு வயது.. அவனுக்கோ இருபத்தெட்டு வயது. வெளியாள் யாரேனும் பார்த்தால் என்ன நினைக்ககூடும்? கனகமே பார்த்தாலுமே கூட இருவரையும் வாய் ஓயாமல் திட்டித் தீர்த்து விடுவாள்.
“சரி கண்ணு நீ கிளம்பு” அவளை வெளியேற்றுவதிலேயே குறியாக இருக்க அவளோ பேச்சை வளர்ப்பதில் குறியாக இருந்தாள்.
“இதப் பாரு மாமா… சும்மா நான் சின்ன பொண்ணுன்னு நினைக்காதே… நான் வளர்ந்துட்டேன். நம்மூர்ல என் வயசு பொண்ணுங்க முக்கால்வாசி பேருக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்தாச்சு” என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட… மணிகண்டன் ஆடாமல் அசையாமல் நின்று விட்டான்.
‘ஒருவேளை ஜோதிக்கு கல்யாண ஆசை வந்துடுச்சா… யாரையும் காதலிக்கிறாளோ’
அரை குறையாக குளித்து முடித்தவன் ஜோதி பேசிய பேச்சுக்களின் நினைவில் தலையைக் கூட துவட்டாமல் திண்ணையில் மறந்து விட அந்தப் பக்கமாக வந்த ஜோதி தன்னுடைய தாவணி முந்தானையை எடுத்து தலையை துவட்டி விடத் தொடங்கினாள்.
‘எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் வள்ளியின் புடவை முந்தானையில் தலை துவட்டிக் கொண்ட நினைவு… அவன் மனக்கண்ணில் வந்து போனது. அதே நினைவுடன் பார்வையை திருப்பியவன் அங்கே நின்ற ஜோதியைக் கண்டதும் தூக்கி வாரிப் போட வேகமாக எழுந்தவன் அதற்கு மேல் அங்கே நொடி கூட தாமதிக்காமல் இடுப்பில் கட்டிய வேட்டியுடனும் , தோளில் போட்டிருந்த துண்டுடனும் வெளியே சென்று விட்டான்.
அவனது வேகத்தையும், பதட்டத்தையும் கண்களில் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜோதி.
‘மணிகண்டனால் அவளது மனதில் இருப்பதை ஊகிக்க முடியவில்லை. சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறாளோ’ என்ற ஐயமும் அவன் மனதில் தோன்றியது. என்ன தான் திருமணம் செய்து கொள்ளும் முறை மாமனாகவே இருந்தாலும் சிறுவயது முதல் அவளை அவனே வளர்த்து வந்ததாலோ என்னவோ அவனால் அவளை அந்தக் கோணத்தில் யோசித்துப் பார்க்க முடியவில்லை.
அவனைப் பொறுத்தவரை ஜோதியில் நல்லபடியாக படிக்க வைத்து, அவனை விட வசதியான வீட்டில் அவளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது.
ஜோதி அவ்வபொழுது நேரம் கிடைக்கும் பொழுதோ… வாய்ப்பை உண்டாக்கிக் கொண்டோ மணிகண்டனிடம் தன்னுடைய மனதை வெளிப்படுத்த தவறவில்லை.
ஆரம்பத்தில் அவற்றை ஒதுக்கி வைத்தவனால் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் போனது.
அவள் இல்லாத நேரத்தில் உள்ளூர் தரகரை வரவழைத்து அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும்படி சொல்ல… விஷயம் தெரிந்ததும் ஆடித் தீர்த்து விட்டாள் ஜோதி.
“இந்தா பாரு கிழவி… உன் மவனை சிவனேன்னு இருக்க சொல்லு… எனக்கு மாப்பிள்ளை பார்க்கிற வேலை எல்லாம் வச்சுக்கிட்டா அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்”
“என்னடி குரலை உசத்திப் பேசுற? வாயை கிழிச்சுப்புடுவேன்… அவன் என்ன உன்னை கிணத்தில் தள்ளவா பார்க்கிறான்? உனக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை தானே பார்க்கிறான்? அதுவும் நம்ம தகுதியை மீறி…கடனை வாங்கி உனக்கு கல்யாணம் செய்ய போறான்” என்று மகனுக்கு பரிந்து பேசினார் கனகம்.
“இந்தாரு கிழவி… இன்னொருக்கா உன் மவன் எனக்கு மாப்பிள்ளை பார்த்துச்சுனு வை.. சொல்லாம கொள்ளாம எங்கேயும் போய்டுவேன்” என்று அதட்டல் போட… திண்ணையில் அமர்ந்து அவளது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மணிகண்டனுக்கு தூக்கி வாரிப்போட்டது.
‘கொஞ்ச நாளைக்கு ஆறப் போட்டு , பிறகு பார்த்துக் கொள்ளலாம்.’
நாளுக்கு நாள் ஜோதிக்கு அவன் மீதான காதல் பெருகியது. மனிகண்டனுக்கோ வீட்டில் இருப்பதே முள்ளில் மேல் இருப்பதைப் போல அவஸ்தையாக இருந்தது.
வீட்டில் இருக்கும் நேரத்தைக் குறைத்துக் கொண்டான். பொறுத்து பொறுத்து பார்த்த ஜோதி.. ஒருநாள் அவனைத் தேடி வயலுக்கே சென்று விட்டாள். பரணில் படுத்துக் கொண்டிருந்தவன் அந்த அழகிய மாலைப்பொழுதில் ஜோதியை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பதை அவனது வியந்த பார்வையே சொன்னது.
“இங்கே எதுக்கு வந்த?”
“ஏன் மாமா நான் வரக் கூடாதா?”
“….”
“உனக்கு என்னை ரொம்ப பிடிக்கும்னு நினைச்சேனே மாமா… இப்போ ஏன் என்னை விட்டு விலகி போற?”
“உன்னை எனக்கு எப்பவும் பிடிக்கும் கண்ணு.. அக்கா போன பிறகு நான் இன்னும் உசுரோட இருக்கிறதே உனக்காகத் தான்”
“நான் நம்ப மாட்டேன் மாமா…”
“நிசந்தான் கண்ணு”
“இல்லை மாமா… நீ பொய் சொல்ற… என்னால உன்னை பார்க்காம இருக்கவே முடியல… அதான் ஹாஸ்டலில் இருந்து வந்துட்டேன். ஆனா நீ ? உன் மனசு கல்லாகிடுச்சா மாமா… அதுல எனக்கு இடமில்லையா?”
“ஜோதி… நீ”
“ஆமா மாமா… எனக்கு உன்னைய பிடிச்சு இருக்கு… கட்டிக்கிற அளவுக்கு…”
“ஜோதி… நான் வளர்த்த பிள்ளைடா நீ… உன்னைப் போய்…”
“அது உன் எண்ணம் மாமா… என் மனசுல இருக்கிறதை நான் சொல்லிட்டேன். நீயும் யோசிச்சு சொல்லு”
“எனக்கு என்ன வயசுன்னு தெரியுமா உனக்கு?”என்றான் சற்றே குரலை உயர்த்தி.
“அம்மாச்சிக்கும் , தாத்தாவுக்கும் பதினைஞ்சு வயசு வித்தியாசம் இருந்ததாம்”என்றாள் பதிலுக்கு.
“இது நடக்காது ஜோதி… கண்டதையும் யோசிச்சு மனசை குழப்பிக்காதே… முதல்ல உன் படிப்பு முடியட்டும்… அப்புறம் நானே நல்ல மாப்பிள்ளையா பார்த்து…” என்று பேசிக் கொண்டே போக ஆத்திரத்துடன் இடைமறித்தாள் ஜோதி.
” இந்தாரு மாமா… நீ கட்டிக்க மாட்டேன்னு சொல்லு… நான் ஏத்துக்கிறேன்… வேற ஒருத்தனை கட்டி வைக்க பார்த்தே… அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று எச்சரிக்கை போல விரல் உயர்த்தி பேசியவள் அங்கிருந்து சென்று விட மணிகண்டன் யோசனையானான்.
‘இந்த பெண் என்ன இத்தனை பிடிவாதம் பிடிக்கிறாள். வள்ளி இல்லாத குறையே தெரியக்கூடாது என்று இவளுக்கு பாசம் காட்டி வளர்த்தது இப்படியாகி விட்டதே ‘ என்று கவலை கொண்டான்.
அவள் படிப்பு முடியட்டும் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவன் அதன் பிறகு அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையை செய்யவில்லை. வீட்டில் இருக்கும் நேரத்தை குறைக்க முயன்றாலும் அவனை தேடி ஜோதி வரத் தொடங்கவே வீட்டில் அவளிடம் பேசுவதை மட்டும் குறைத்துக் கொண்டான்.
ஜோதி தினமும் ஒரு வகையில் முயற்சி செய்தாள்.
“நீ கட்டி வைக்கிறவன் என்னை கொடுமை செஞ்சா…
அவனை பிடிக்காம நானே கொன்னுட்டா…”மணிகண்டன் கொஞ்சமும் அசையவில்லை.
“உன்னை மனசுல வச்சுக்கிட்டு அவனோட வாழ பிடிக்காம நான் நாண்டுகிட்டு செத்து போ…”பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மணிகண்டனின் கரம் இடியென அவள் கன்னத்தில் இறங்கியது.
கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தாலும் மேற்கொண்டு ஒரு வார்த்தை அவளும் பேசவில்லை… அவளை அந்த கோலத்தில் பார்க்க முடியாமல் அவனும் நிற்கவில்லை.
சிறுவயதில் இருந்தே ஒருமுறை கூட அவளை அவன் அடித்தது இல்லை.அவனுக்கு மனது தாளவில்லை.வேகமாக அவளைத் தேடிப்போய் பார்த்தான். அவளது கன்னத்தில் அவனது விரல் தடம் ஆழமாக பதிந்து இருந்தது. உள்ளம் பதறியது அவனுக்கு.
‘நானா இப்படி அடித்தேன்!’அவன் பார்வை அவள் கன்னத்திலேயே இருக்க…ஜோதி தானாகவே முன்வந்து பேசினாள்.
“எனக்கு கொஞ்சம் கூட வலிக்கலை மாமா…”சிரிக்க முயன்று தோற்றாள்.அவனை முந்திக்கொண்டு அவள் சமாதானம் செய்ய முன்வந்தது அவனை குற்றவுணர்வுக்கு உள்ளாக்கியது.
‘அக்கா… என் தங்கத்தை நானே அடிச்சுட்டுட்டேனே… என்னை மன்னிப்பியாக்கா?’
அவள் கன்னத்தில் இருந்த விரல் தடத்தை நோக்கி கையை நீட்டியவன் கடைசி நொடியில் விலக்கி கொண்டு வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்று விட்டான்.
அதன் பிறகு அவன் அவளுடன் பேசுவதை மட்டுமில்லாமல் பார்ப்பதைக் கூட தவிர்த்து விடத் தொடங்கினான்.
கனகம் இவர்கள் இருவரின் நடவடிக்கைகளைப் பார்த்தாலும் பெரிதாக எதுவும் கண்டுகொள்ளவில்லை. அவருக்கு ஜோதியின் மனமும் புரிந்தது. மணிகண்டனின் மனமும் புரிந்தது.
ஜோதிக்கு மாமனின் மீது வந்த காதல் தவறு என்றும் சொல்ல முடியவில்லை. வளர்த்த அக்கா மகளை எப்படி திருமணம் செய்வது என்று தவிக்கும் மகனிடமும் பேச முடியவில்லை.
யாருக்கும் பரிந்து பேச அவருக்கு மனமில்லை. இருவரின் தரப்பில் இருக்கும் நியாயம் புரிந்ததால் அவர்களே ஒரு முடிவுக்கு வரட்டும் என்று ஒதுங்கி கொண்டார்.
ஜோதி இறுதியாண்டு படித்துக்கொண்டு இருந்தாள். இன்னும் ஒரு மாதம் மட்டுமே மீதம் இருந்தது.
அன்று ஜோதிக்கு தெரியாமல் அவளது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் போனான் மணிகண்டன்.
செல்லும் வழியில் ஒரே கூட்டம்… தன்னுடைய வண்டியை விட்டு இறங்கி சென்று பார்த்தவனின் உலகம் இருண்டது.
ரத்த வெள்ளத்தில் ஜோதி…
பஸ்ஸில் மணிகண்டனின் நினைவால் கவலையுடன் பயணித்துக் கொண்டிருந்த ஜோதி, கம்பியை பிடிக்காமல் நின்று கொண்டிருக்க… டிரைவர் சடன் பிரேக் போட்டதில் தடுமாறி கீழே விழுந்தாள்.
அவள் தலை தரையில் மோதி ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.
ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லி இன்னும் வராததால் எல்லாரும் அதற்காக காத்திருக்க… மணிகண்டன் ஓடிப்போய் அவளை அள்ளி மடியில் போட்டுக்கொண்டான்.
இமை பிரிக்க வெகுவாக சிரமப்பட்டவள் சில நொடிகளுக்குப் பிறகு தன்னை மடியில் ஏந்தி இருப்பவனை அடையாளம் கண்டு கொண்டாள்.
அவள் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு… சந்தோசம்…
ஆறு மாதத்திற்கு பிறகு…

“அண்ணாச்சி… வெள்ளிக்கிழமையும் அதுவுமா ஏன் இவ்வளவு லேட்டா கடை திறக்கறீங்க… நான் ரொம்ப நேரமா காத்திருக்கேன் தெரியுமா?”
“அது வந்து…நீயேன் மணி வந்த? நானே அப்புறமா கொண்டு வந்து இருப்பேன்ல”
“சரி சரி… அதனாலென்ன… பரவாயில்லை…நேரமாகுது… அவ காத்துகிட்டு இருப்பா… சீக்கிரமா எண்ணெயும், அரப்பும் கொடுங்க” என்று துரிதப்படுத்த… அவரும் ஒன்றுமே சொல்லாமல் அவன் கேட்ட பொருட்களை எடுத்து கொடுத்து அனுப்பினார்.
பொருட்களை கையில் அள்ளிக் கொண்டவன் ஒரே ஓட்டமாக வீட்டை நோக்கி ஓடினான்.
“ஜோதி… சீக்கிரம் வா… வந்து குளி… நேரமாகுது பார்” என்று அவன் கத்திக் கொண்டிருக்க… வீட்டின் உள்ளே ஜோதியின் மாலையிட்ட போட்டோவின் கீழ் அமர்ந்து கதறிக் கொண்டிருந்தார் கனகம்.

 

 

 

 

 

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here