கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 1

0
1921

இளங்காலைப் பொழுதில்  தன்னுடைய கார் பயணத்தை சுகமாக ரசித்து அனுபவித்தபடியே பயணித்துக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. இன்னும் சூரியனின் கதிர்கள் பூமியை தொட்டு… தன்னுடைய ஆட்சியை செலுத்தி இருக்காததால் , லேசான குளிருடன் இருந்த அந்த காலைப் பொழுது அவளது வாழ்வையே மாற்றப் போவதை அறியாமல் காரின் ஜன்னலின் வழியே வந்து கொண்டிருந்த காற்றை ஆழ்ந்து சுவாசித்து மகிழ்ச்சியுடன்  நுரையிரலில் நிரப்பிக் கொண்டாள்.

இன்னும் சற்று நேரத்தில் அவளுடைய குடும்பத்துடன் ஒரு வாரம் மலைகளின் அரசி ஊட்டியை நோக்கி செல்பவளுக்கு அவளது வாழ்வை மாற்றப் போகும் தோழி நிவேதிதாவை தேடிச் சென்று கொண்டு இருக்கிறாள்.

நேற்று இரவு  அபிநய வர்ஷினியை சந்தித்து அவளது தம்பியின் படிப்பிற்கு பண உதவி பெறுவதற்காக அவளது வீட்டிற்கு வந்திருந்த நிவேதிதா அவளது கைப்பையுடன், மொபைல், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை அடங்கியவைகளை அவளது வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு சென்று இருக்க… அவற்றை திருப்பி தந்து விட்டு ஊட்டிக்கு கிளம்பி செல்வதற்காகவே அவளைத் தேடி சென்று கொண்டிருக்கிறாள்.

‘பாவம் ஏற்கனவே கஷ்ட ஜீவனம் அவளுக்கு…அப்பா, அம்மாவும் இப்போ உயிரோட இல்லை. சொந்தங்களும் கை விட்டாச்சு. இப்போ கையில் இருக்கிற பணம் மட்டும் இல்லாம.. ஏடிஎம் கார்டும் என்கிட்டே மாட்டிகிச்சு… இப்போ கொடுக்காம ஊட்டிக்கு போய்ட்டா பாவம் நான் திரும்பி வர்ற வரை ரொம்ப கஷ்டப்படுவா’

அபிநய வர்ஷினி… பூமாதேவியின் மறுவடிவம் அவள். பிறர் துன்பம் பொறுக்க மாட்டாதவள். கஷ்டம் என்று சொல்லி  யாரேனும் ஒரு துளி கண்ணீர் விட்டாலும் அவளால் தாங்க முடியாது. இளகிய மனம் படைத்தவள். ஓரளவிற்கு வளம் நிறைந்த குடும்பத்தில் ஒற்றைப் பெண்ணாய் பிறந்தவளுக்கு பெற்றவர்களான அன்பழகியும், கிருஷ்ணனும் எந்த விதத்திலும் குறை வைத்ததும் இல்லை.

மற்றவரின் துயர் பொறுக்கமுடியாமல் அவள் ஓடியோடி உதவி செய்வதைப் பார்த்து மகிழ்ந்து தான் போவார்கள். அவளிடம் பத்தாயிரம் பணத்தைக் கொடுத்தால் அந்த பணத்தில் அவளுக்கு என்று எதுவும் வாங்கிக் கொள்ள மாட்டாள்.

அந்தப் பணம் சென்னையில் உள்ள ஏதேனும் ஒரு அனாதை விடுதிக்கோ, அல்லது யாரோ ஒருவரின் படிப்பு செலவுக்கோ தான் போகும். மகள் செய்வது கண்டு பெற்றவர்களும் ஒருநாளும் வருந்தியது இல்லை. அபிநய வர்ஷினி கெட்ட வழியில் சென்றால் வருத்தப்படலாம். தானம் அளிப்பதற்கெல்லாம் வருந்த முடியுமா? பெருமை தானே பட வேண்டும்.

அதே நேரம் அப்படி அவளிடம் கண்ணீர் விட்டு பணம் வாங்கி சென்றவர்கள் அவளை ஏமாற்றியதை அறிந்தாலும் அதைப்பற்றி அவள் வருந்தியது இல்லை. அதே கதையை சொல்லி வேறு யாரேனும் உதவி கேட்டாலும் அதை மறுக்காமல் செய்வாள்.

யாரோ ஒருவர் ஏமாற்றியதை மனதில் வைத்துக்கொண்டு உதவி உண்மையில் தேவைப் படுபவருக்கு செய்யாமல் விடக்கூடாது என்பது அவள் எண்ணம்.

‘நான் உதவி செய்கிறேன்… என்னை ஏமாற்றி பணம் பறித்தாலும், அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தால் சரிதான்’ என்று எண்ணுபவள். அதற்காக அவள் பயந்தாங்கொள்ளி எல்லாம் இல்லை. துணிச்சல் நிறைந்த  பெண் தான். ஆனால் துன்பப்படுகிறவர்களிடம் அவளுக்கு கோபம் வராது. அதே நேரம் வீண் சண்டைகளில் விருப்பம் இல்லாதவள். தான் இருக்கும் இடம் எப்பொழுதும் அமைதியாக இருப்பதையே விரும்புவாள்.

அவளின் அமைதிக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாத ஒரு அசுரனை இன்று அவள் சந்திக்கப் போகிறாள். பூ போன்றவளை புயலாய் அவன் தாக்குவான். தளிர்க்கொடி அதை தாங்குவாளா?

நிவேதிதா தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு சென்றவள் அவளுக்காக காத்திருக்க… அவள் அங்கே இல்லை… இன்று விடியற்காலையிலேயே கிளம்பி அவள் அலுவலக வேலையாக வெளியே சென்று இருப்பது தெரியவர… அங்கேயே நேரில் போய் அவளை சந்திப்பது என்று முடிவு செய்தாள் அபிநய வர்ஷினி.

அவளது அறைத் தோழியிடம் இடத்தை விசாரித்துக்கொண்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

நிவேதிதாவின் பொருட்களை அவளது கையிலேயே ஒப்படைத்தால் தான் அவளுக்கு நிம்மதி. வேறு யாரிடமும் கொடுத்து விட்டு… அந்த பொருள் சரியாக அவளிடம் சென்று சேர்ந்ததோ இல்லையோ என்பது போன்ற வீணான டென்ஷனை தவிர்க்க நினைத்தாள்.

நிவேதிதா வேலை செய்வது பிரபலமான பேஷன் உடைகள் தயாரிக்கும் ஏ எஸ் நிறுவனத்தில். இருவரும் பேஷன் டெக்னாலஜி கோர்சை ஒன்றாகத் தான் படித்தார்கள். நிவேதிதா படிப்பை முடித்த கையுடன் வேலைக்கு சேர்ந்து விட, அபிநய வர்ஷினி மேல்படிப்பிற்காக வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் விண்ணப்பித்து  இருந்தாள்.

அடுத்த மாதம் அவள் இலண்டனுக்கு சென்று கல்லூரியில் சேர வேண்டும். அதற்கு முன் பெற்றவர்களுடன் சில நாட்களை இன்பமாக கழிப்பதற்காகத் தான் ஊட்டி பயணமும்…

அங்கே போன பிறகு வாழ்க்கை எப்படி மாறுமோ என்ற யோசனையுடன் காரை ஒட்டிக் கொண்டிருந்தவள் ஹோட்டல் தாஜை வந்து அடைந்தாள்.

ரிசெப்ஷனில் விசாரித்துக் கொண்டு நிவேதிதாவை தேடி அந்த பிரமாண்டமான ஹாலுக்குள் நுழைந்தாள். அங்கே இருந்த அனைவரும் பரபரப்பாக காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டதைப் போல பம்பரமாய் சுழன்று வேலை செய்து கொண்டிருக்க யாரிடம் கேட்பது என்று புரியாமல் தடுமாறி நின்றாள்.

அவளின் கெட்ட நேரமோ, நிவேதிதாவின் நல்ல நேரமோ கலவரமான முகத்துடன் பக்கவாட்டு அறையில் இருந்து வெளியே வந்த நிவேதிதா அபிநய வர்ஷினியை பார்த்ததும் முகம் மத்தாப்பூவாக மலர்ந்தது.

அவளின் மகிழ்ச்சிக்கான காரணத்தை தவறாக ஊகித்துக் கொண்டாள் அபிநய வர்ஷினி.

‘பாவம்… ஹேண்டு பேக் இல்லாம ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா போல’

“அபி…” என்று பாய்ந்து வந்தவள் அவளின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு பக்கவாட்டு அறைக்குள் நுழைந்தாள்.

“ஹே… என்னடி இவளோ எமோஷனல் ஆகுற? அதுதான் நான் உன்னோட பேகை கொண்டு வந்துட்டேனே… இந்தா வச்சுக்கோ” என்று அவளிடம் நீட்ட… அதை வாங்கி அறையின் மூலையில் எறிந்தவள் அபிநய வர்ஷினியின் கரங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

“சரியான நேரத்தில வந்த அபி… நீ தான்டி என்னோட கடவுள்… எனக்கு உதவி தேவைப்படும் நேரத்துல எல்லாம் சரியா அங்கே வந்து நிற்கிற” என்று சொல்ல.. இன்னமும் பேக் விஷயத்தை மட்டுமே மனதில் எண்ணி வெளியே அழகாக சிரித்து வைத்தாள் அபிநய வர்ஷினி.

“இதெல்லாம் ஒரு மேட்டரா? சரி விடு… நான் இப்போ கிளம்புறேன்… ஊட்டிக்கு போகணும். வீட்டில அப்பாவும், அம்மாவும் கிளம்பிட்டு இருக்காங்க… நான் போகணும்” என்று கிளம்புவதற்கு வாயிலை நோக்கி நகர… வழியை மறைத்தபடி அவள் முன்னே வந்து நின்றாள் நிவேதிதா.

“அபி… ப்ளீஸ்! எனக்கு ஒரு உதவி வேணும்… இந்த நிமிஷம் உன்னால மட்டும் தான் எனக்கு உதவ முடியும்” என்று சொல்ல தலையும் புரியாமல் காலும் புரியாமல் திருதிருத்தாள் அபிநய வர்ஷினி.

“சுத்தமா ஒண்ணுமே புரியலை… எதுக்கும் நீ கொஞ்சம் தமிழ்ல பேசேன்… எனக்கு ஏதாவது புரியுதா பார்க்கலாம்” என்று தோழியை கிண்டல் செய்ய.. அதை கவனிக்கும் மனநிலையில் மற்றவள் இல்லை.

“அபி… உனக்கே நல்லா தெரியும்… நான் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த கம்பெனில வேலைக்கு சேர்ந்தேன். சேர்ந்து ஒரு மாசம் கூட ஆகலை… ஆறு மாசம் ட்ரைனிங் பீரியட்… அதுவரைக்கும் என் பேர்ல எந்த பிளாக் மார்க்கும் இல்லாம இருந்தா தான் என்னோட வேலையை பெர்மனென்ட் செய்வாங்க”

“இதெல்லாம் நீ வேலைக்கு சேர்ந்த அன்னிக்கே என்கிட்டே சொல்லிட்டே… மறுபடியும் எதுக்குடி ரீ டெலிகாஸ்ட் செய்ற?” செல்லமாய் சலித்துக் கொண்டாள்.

“இன்னிக்கு எனக்கு கொடுத்த முதல் அசைன்மென்ட் அபி… இந்த ஈவன்ட் நல்லபடியா நடந்து முடிஞ்சாகணும்… இல்லைனா என்னோட வேலை காலி”

‘…’

“இன்னிக்கு நடக்கப் போறது பேஷன் ஷோவோட ட்ரையல் தான்… அதுக்கே இந்த அளவுக்கு கிராண்டா இருக்குன்னா அப்போ அடுத்த வாரம் நடக்கப் போற ஷோ எப்படி இருக்கும்? இதுல மட்டும் நான் சொதப்பிட்டா கண்டிப்பா என்னோட வேலை காலி.. ஏன்னா எங்க எம்டி இன்னிக்கு வர்றார்”

“இப்ப வரைக்கும் நீ என்ன பிரச்சினைனு சொல்லவே இல்லை நிவி” என்றாள் பொறுமையை இழுத்து பிடித்தபடி

“இன்னிக்கு ஷோவில் வர வேண்டிய ஒரு மாடலுக்கு உடம்பு சரியில்லாம வர முடியாம போச்சு…அதனால…”

“அதனால ?” என்றாள் கண்களில் கேள்வியுடன்…

“அந்த மாடலுக்கு பதிலா நீ இன்னிக்கு ஸ்டேஜ்ல வாக்(WALK) பண்ண முடியுமா?” என்று ஒரு வழியாக திக்கித் திணறி கேட்டு விட்டாள் நிவேதிதா.

“என்னடி விளையாடுறியா? நான் ஜஸ்ட் உன்னோட பேகை கொடுக்கத்தான் இங்கே வந்தேன்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் ஊட்டிக்கு கிளம்பணும்”

“தெரியும் அபி… ஆனா காலேஜ்ல நடந்த நம்ம டிபார்ட்மெண்ட் போட்டியில எல்லாம் நீ இந்த மாதிரி பேஷன் ஷோவில் கலந்துக்கிட்டு பரிசு வாங்கி இருக்க தானே?”

“ஹே… அதுவும் இதுவும் ஒண்ணா? அது ஏதோ சும்மா… ஆனா இது அப்படி இல்லை…”

“அபி.. ப்ளீஸ்டி… என்னோட வாழ்க்கையே உன்னோட பதில்ல தான் இருக்கு… நீ பயப்படுற அளவுக்கு இது ஒண்ணும் ஷோ இல்லையே… ஜஸ்ட் ஒரு ட்ரையல் தானே… எனக்காக அபி..” கண்களால் இறைஞ்சி கைகளை இறுகப்பற்றி இருந்த தோழியை ‘எக்கேடோ கெட்டுப் போ’ என்று உதறித் தள்ள முடியவில்லை அபிநய வர்ஷினியால்.

“வீட்டில் அம்மாவும், அப்பாவும் வேற ஊட்டிக்கு போக  காத்துக்கிட்டு இருப்பாங்கடி…”

“நான் அவங்க கிட்டே பேசிக்கிறேன்… ஜஸ்ட் ஒரு மணி நேரம் தான்… ப்ளீஸ்” என்று மேலுமாய் கெஞ்ச… தோழிக்காக அரை மனதாய் தலை அசைத்தாள்.

“முதல்ல நான் போட்டுக்கப் போற டிரஸ்ஸை எனக்கு காட்டு… பார்க்கறதுக்கு முகம் சுளிக்கிற மாதிரி இருந்தா  போட மாட்டேன். அப்புறம் என்னை குறை சொல்லக் கூடாது சரியா?” என்றாள் கறாராக…

“அது ஒண்ணும் பிரச்சினை இல்லைடி… நீ போட்டுக்கப் போறது கவுன் மாதிரி தான்… கால் விரல் கூட வெளியே தெரியாது…” என்று சொன்னவள் வேகமாக ஒரு உடையை எடுத்துக் கொண்டு ஓடிவர… அபிநய வர்ஷினியும் அதை பார்வையிட்டாள்.

ஆலிவ் பச்சை நிறத்தில் நீளமான கவுன்… அழகாகவே இருந்தது… துணியும் நல்ல கனமாகவே இருந்ததால் சரியென்று தலை அசைத்தவளை வேகமாக மாடல்கள் இருக்கும் அறைக்குள் இழுத்து சென்றவள்… அவளுக்கு உடையை அணிவித்து விட்டு முகத்திற்கு மேக்கப் செய்யும்படி பணித்து விட்டு அடுத்தடுத்த வேலைகளை நோக்கி ஓடினாள்.

அடுத்த சில நிமிடங்களில் ஷோவிற்கு தயாராகி அழகாக நின்றவளை அருகில் இருந்த மாடல்கள் பொறாமையோடு பார்த்ததை அவள் அறியாமல் போனாள். அவளுக்கு உள்ளுக்குள் இருந்த பதட்டத்தில் அவர்களை எல்லாம் அவள் கண்டுகொள்ளவே இல்லை.

வீட்டிற்கு தகவல் சொல்லியாயிற்று. அம்மாவும், அப்பாவும் அவளுக்காக காத்திருப்பார்கள். அதெல்லாம் அவளுக்கு பிரச்சினையாக இல்லை. மனதுக்குள் ஏதோவொரு இனம்புரியாத படபடப்பு… ஏதோவொரு தவிப்பு… அவளையும் அறியாமல் அவள் நகங்களைக் கடிக்கத் தொடங்கினாள்.

அவளை அலங்காரம் செய்து கொண்டிருந்த பெண் அவளை எழுந்து நிற்க சொல்லவும்… எழுந்து நின்றவளின் மனம் அந்த இடத்திலேயே இல்லை. அவளது இடுப்பில் பெல்ட் ஒன்றை அணிந்து விட்டு அந்தப் பெண் கண்ணாடியில் சரிபார்க்க… அதே நேரம் அந்த மொத்த அறையும் நிசப்தமானது.

எல்லாரின் கவனமும் வாசலிலேயே பதிந்து இருக்க… அழுத்தமான காலடியுடன் ஒவ்வொரு பெண்களையும், அவர்களின் உடையையும் கூரான பார்வையுடன் பார்வையிட்டுக் கொண்டே வந்தான் ஏஎஸ் நிறுவனத்தின் எம்டி ஆதிசேஷன்.

எல்லா பெண்களையும் வரிசையாக பார்வையிட்டுக்கொண்டே வந்தவனின் நடை அபிநய வர்ஷினியின் அருகில் சற்று வேகம் குறைந்தது. எல்லாரும் தங்களுக்குள் உறைந்து விட, அபிநய வர்ஷினியோ அதை கொஞ்சமும் உணர்ந்தாளில்லை.

தனக்கு பின்னால் நின்று கொண்டிருந்த தன்னுடைய உதவியாளன் கோபியை திரும்பிப் பார்க்க.. அடுத்த நிமிடம் அவனுக்கு முன்னே ஒரு ட்ரே நீட்டப்பட்டது.

நின்றுகொண்டு இருந்த அபிநய வர்ஷினியின் அருகே முழங்காலிட்டு குனிந்தவன் அவள் அணிந்து இருந்த நீள கவுனை கத்திரியால்  வெட்டத் தொடங்கினான். கிட்டத்தட்ட முட்டிக்கும் கொஞ்சம் மேலாக வெட்டியவன் அடுத்து பெரிதாக மஞ்சள் நிறப்பூ வேலைப்பாடு நிறைந்த லேசை அதன் அடியில் வைத்து தைக்கும் எண்ணத்தோடு நிமிர்ந்தவனின் கண்ணில் பட்டது  கோபம் நிறைந்த அபிநய வர்ஷினியின் விழிகளைத் தான்.

அவன் அவளை துளைக்கும் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே மின்னலென அபிநய வர்ஷினியின் கரங்கள் அவன் கன்னத்தில் அழுத்தமாக பதிந்து போனது.

சுற்றி இருந்த மொத்த கூட்டமும் மூச்சு விடக் கூட பயந்தவர்களாக இறுகிப் போய் நிற்க… அடி வாங்கியவனின் முகத்திலோ துளி மாறுதல் கூட இல்லை.

“ரியலி” என்று கேட்டபடியே தன்னுடைய பழுப்பு நிற கண்களில் ஒன்றை சிமிட்டி அவளையே புன்னகை மாறாமல் பார்த்திருந்தான்.

அந்தப் புன்னகையில் இருந்தது என்ன?… நிச்சயம் சிநேகம் இல்லை… அபிநய வர்ஷினியின் இதயம் துடித்ததோ இல்லையோ… அந்த ஹாலில் கூடி இருந்த அத்தனை பேரின் இதயமும் இடியோசையைப் போல பெரிதாக ஒலிக்கத் தொடங்கியது.

‘சேஷன் சார் சிரிக்கிறாரா? போச்சு… இந்த பொண்ணோட நிலைமை என்ன ஆகப் போகுதோ?’

கந்தகம் எரிக்கும்…

 

 

 

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here