கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

0
2372

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின் மனம் அந்த அழகில் நிலைக்கவில்லை. மாறாக அன்றைய தினத்தை நோக்கி பயணித்து தோழிக்காக வருந்திக் கொண்டிருந்தது..

அன்று அந்த புதியவனை அறைந்த பிறகு தான் இருக்கும்  சூழல் உறைக்க… தன்னை சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். அங்கே இருந்த அத்தனை பேரின் பார்வையிலும் அவள் மீதான பரிதாபமே தொக்கி நிற்க… அதற்குக் காரணம் தான் அவளுக்கு புரியவில்லை.

‘நான் இவனை அடிச்சா.. இவங்க எல்லாரும் என்னை ஏன் பரிதாபமா பார்க்கணும்… கோபமா பார்த்தாக் கூட ஒரு அர்த்தம் இருக்கு’

“என்ன டாலி… ஒரு அடியோட நிறுத்திட்ட… என் மேலே உள்ள கோபம் அவ்வளவு தானா?” என்று கேட்டவன் சாட்சாத் ஆதி சேஷனே தான். முகத்தில் இருந்த புன்னகை இம்மி அளவு கூட குறையாமல் அந்த பழுப்பு நிற கண்கள் அவளை விட்டு ஒரு அடி கூட நகர்த்தாமல் பேசியவனைக் கண்டு அவளுக்கு கோபம் அதிகரித்தது.

‘எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பேசுவான்’ என்று கொதித்தவளுக்கு பாவம் உண்மையில் அவனுடைய தைரியத்தின் அளவு தெரியாமல் போனது வேதனை தான். இன்னமும் பேசிப்பேசி அவனைத் தான் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதையும் அவள் அறியவில்லை.

“நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை கொஞ்சுவாங்களா? எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட டிரெஸ்ஸை கிழிச்சு இருப்ப? கொன்னுடுவேன் ராஸ்கல்”

“நீ கொஞ்சுனாலும் எனக்கு ஓகே தான் டாலி… ஆனா இதெல்லாம் நடக்கும்ன்னு தெரியாமலா மாடலிங் செய்ய வந்த டாலி… அக்ரீமென்ட்ல எல்லாமே தெளிவா இருக்குமே… ஐ கான்ட் பிலீவ் திஸ்” அளவுக்கு அதிகமான ஆச்சரியம் அவன் குரலில்.

“அக்ரீமென்ட்டா? நான்சென்ஸ்… நான் ஜஸ்ட் என்னோட பிரண்டுக்கு உதவி செய்றதுக்காக வந்தேன்…”

“இருந்துட்டு போகட்டும்.. ஏத்துகிட்ட வேலையை அதே பொறுப்போட செஞ்சு முடிக்க வேண்டாமா டாலி” அவளிடம் பேசிக் கொண்டே சுற்றிலும் நின்று அவர்களை வேடிக்கைப் பார்த்தவர்களை ஒரு அனல் பார்வை பார்த்து வைத்தான். அடுத்த நிமிடம் அந்த அறையில் இருந்த அனைவரும் கல் எறிந்த காக்காய் கூட்டமாய் பறந்து போய் இருந்தார்கள்.

“சை! முதல்ல அப்படி கூப்பிடறதை நிறுத்து… ஏய்! நிவேதிதா இங்கே வாடி… நான் கிளம்புறேன்… இந்த கிறுக்கனோட எல்லாம் என்னால பேச முடியாது. உனக்காகத் தானே நான் இங்கே வந்தேன்” என்று கத்த மூச்சிறைக்க அங்கே ஓடி வந்து நின்றாள் நிவேதிதா.

அபிநய வர்ஷினிக்கு தன் வாழ்நாளிலேயே அந்த அளவிற்கு கோபம் வந்தது கிடையாது. எப்பொழுதும் மற்றவர்களிடம் இறங்கிப் போய் தன்மையாகத் தான் பேசுவாள். இன்றோ அவளின் உடை மீது ஒருவன் கையை வைக்கவும் கண் மண் தெரியாத அளவிற்கு கோபம் வந்தது.

இதுநாள் வரை கட்டிக் காத்த தன்னுடைய மானத்தை இப்படி எல்லார் முன்னிலையிலும் அவன் காற்றில் பறக்க விட்டது, ஏனோ தன் மீது சேற்றை வாறி பூசியதைப் போல அருவருத்துப் போனாள். காலேஜ் படிக்கும் பொழுது கூட அவள் மாடர்ன் உடை அணிந்தாலும் அதில் ஒரு கண்ணியம் இருக்கும். மற்றவர்களின் பார்வை அவள் மீது ரசனையாக பதிந்து இருக்கிறது. அதை அவளும் அறிவாள்.

இன்று அரைகுறை ஆடையில் தன்னை ஒரு நிமிடம் கண்ணாடியில் பார்த்தவளால் அவன் செய்த காரியத்தை கொஞ்சமும் மன்னிக்க முடியவில்லை.

நிவேதிதாவிற்கு அங்கே நடக்கும் விஷயம் எதுவும் புரியவில்லை என்றாலும் உடன் வேலை செய்பவர்களின் திகில் நிறைந்த பார்வையும், அபிநய வர்ஷினியின் கோப முகமும், ஆதிசேஷனின் புன்னகை முகமும்  எதுவோ சரியில்லை என்று உணர்த்த பதட்டமானாள்.

“என்ன அபி! என்னாச்சு? ஏன் கத்துற? மெதுவா பேசுடி” என்று அவளின் காதோரம் குனிந்து கெஞ்சலாக பேசியவளின் கண்கள் மட்டும் அச்சத்துடன் எதிரில் சிரிக்கும் முகத்துடன் இருந்தவனின் மீதே இருந்தது.

“இங்கே பாருடி! இந்த கிறுக்கன் என்னோட டிரெஸ்ஸை எப்படி கிழிச்சு இருக்கான் பாரு… நீ என்ன சொன்ன?… லாங் கவுன்… கால் கட்டை விரல் கூட வெளியே தெரியாதுன்னு சொன்னியே” என்று ஆத்திரமாக சொன்னவள் அங்கிருந்த ஒரு நீளத் துணியை எடுத்து இடுப்போடு கட்டிக் கொண்டாள்.

“அபி ப்ளீஸ்! கத்தாதே.. அவரு தான் என்னோட கம்பெனி எம்டி… நீ இப்படி செஞ்சா என்னோட வேலை கண்டிப்பா காலி” குரலில் அழுகையை கொண்டு வந்தாள் நிவேதிதா. தோழியின் கண்ணீர் முகம் கண்டு அபியின் கோபம் கொஞ்சம் குறைந்தது.

“சரி நிவி நான் கிளம்புறேன்… இதுக்கு மேல என்னால இங்கே இருக்க முடியாது. அதுவும் இந்த கிறுக்கன் கிழிச்சு தர்ற டிரெஸ்ஸை எல்லாம் போட்டுக்கிட்டு இவன் முன்னாடியே வாக் செய்றது எல்லாம் கொஞ்சமும் நடக்காத காரியம்” என்று தாழ்ந்த குரலில் முணுமுணுத்தாள்.

“ஆமாமா… கிளம்ப சொல்லுங்க மிஸ். நிவேதிதா… டாலிக்கு ஏதோ வேலை இருக்கும் போலவே… இப்போ நம்ம ஷோவோட ட்ரையல் பார்க்கிறதா முக்கியம்… டாலி கிளம்பட்டும்” என்றான் அக்கறை மிகுந்த குரலில்.

‘ஒட்டுக் கேட்கிறானோ’ என்று சந்தேகமாகப் பார்க்க… ‘நீ சந்தேகம் எல்லாம் பட வேண்டாம். நீ இனி என்ன செஞ்சாலும் , பேசினாலும் எனக்குத் தெரியாம நடக்காது’ என்பது போல இருந்தது அவனின் பார்வை.

“நிவி … இந்தாளு கிட்டே எனக்கென்ன பேச்சு? எங்கே ரூம் இருக்குனு சொல்லு… நான் இந்த கருமத்தை கழட்டி எறிஞ்சுட்டு கிளம்புறேன்” என்றவள் தோழியின் கைகளை அழுத்தமாகப் பற்ற… அவளின் பார்வையோ பயத்துடன் எதிரில் நிற்பவனைப் பார்த்தது.

“கோபி.. என்னோட ரூம் சும்மா தானே இருக்கு.. டாலியை அங்கே அழைச்சுட்டுப் போ… அவ டிரெஸ்ஸை மாத்திக்கட்டும்”

“ஏய்! இப்போ நீ ஒழுங்கா வேற ரூமை எனக்கு காட்டப் போறியா இல்லையாடி?” என்றவளின் குரல் அமைதியை விடுத்து கொஞ்சம் உயர… புன்னகை முகமாகவே தலை அசைத்தான் ஆதிசேஷன்.

அவனிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் தோழிக்கு நிவேதிதா அறையைக் காட்ட… அறைக்குள் நுழைந்தவள் பரபரவென்று ஆடைகளை கழட்டி விட்டு தன்னுடைய சுடிதாரை அணிந்து கொண்டாள். நிவேதிதாவின் அறிவுரைப்படி அந்த அறையில் இருந்து பின் வாசல்  வழியாக அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

அங்கிருந்து நேராக வீட்டிற்கு வந்து பெற்றவர்களுடன் ஊட்டிக்கு கிளம்பி விட்டாள். மறந்தும் பெற்றவர்களிடம் அன்று நடந்த விஷயத்தைப் பற்றி மூச்சு விடவில்லை அவள்.

‘எதற்கு தேவை இல்லாத மன சங்கடம் அவர்களுக்கு.. எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் அவள் வெளிநாடு கிளம்பி விடுவேனே’ என்று எண்ணி அவள் மறைக்க… அதுவே அவளுக்கு வினையாகிப் போகும் என்பதை அறியாமல் போனாள்.

இடையில் எத்தனையோ முறை நிவேதிதாவிற்கு அழைத்து பேசிவிட கைகள் துடித்தாலும் அதை செய்ய விடாமல் ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது. மிஞ்சிப்போனால் என்ன நடந்திருக்கும்…

‘அந்த கிறுக்கன் அவளை வேலையை விட்டு தூக்கி இருப்பான்… தனக்குத் தெரிந்த வேறு ஏதாவது டிசைனிங் கம்பெனியில் அவளுக்கு வேலை வாங்கித் தந்திடணும்’ என்று முடிவு செய்தவளின் மனது தோழிக்காக வருந்தியது.

தோழிக்காக அவள் வருந்திக் கொண்டிருக்க… அவளை அந்த சூழலுக்குள் இழுத்து விட்ட நிவேதிதாவோ அந்த நிமிடம் வரை அவளைப் பற்றி கவலைப்படவே இல்லை. நிவேதிதாவின் எண்ணம் முழுக்க அவளைப் பற்றி மட்டுமே சுயநலமாகவே இருந்ததை ஏனோ அபிநய வர்ஷினி அறிந்திருக்கவில்லை.

அவள் அறியாததும் ஒன்று இருக்கிறது.. அன்று அவள் பின் வாசல் வழியாக வெளியேறுவதை அறிந்தாலும் அதை தடுக்கவில்லை ஆதிசேஷன். அதே நேரம் தன் முன்னால் வெளிறிய முகத்துடன் கைகளை பிசைந்து கொண்டு நின்ற நிவேதிதாவைப் பார்த்தான். அவள் கைகளில் இருந்த அபிநய வர்ஷினியின் உடுத்தி இருந்த உடையைப் பார்த்தவன் அதை டேபிளில் வைக்குமாறு சொன்னான்.

“உன் பிரண்டோட பேர் அபின்னு சொன்னியே… முழு பேர் என்ன?”அவன் கைகளில் டேபிள் வெயிட் உருண்டு கொண்டிருக்க பார்வை அபிநய வர்ஷினியின் உடுத்தி கழட்டிப் போட்ட அந்த உடை மீதே இருந்தது.

“அ…அபிநய… அபிநய வர்ஷினி”

“நைஸ்.. அப்படியே அவளைப் பத்தி உனக்கு தெரிஞ்சதெல்லாம் சொல்லு”

“சார்…”அவளது குரல் தயக்கத்துடன் உள்ளே போனது

“ரியல்லி” என்றவன் அவளையே கூர்மையாகப் பார்க்க.. அவளால் அந்த பழுப்பு நிற கண்களை எதிர்கொள்ள முடியாமல் போனதென்னவோ நிஜம். அப்பொழுதும் சில நொடி தயங்கி நின்றாள் நிவேதிதா.

“உன்னோட சம்பளத்தை இருபது பர்சன்ட் அதிகமாக்கலாம்னு நினைக்கிறேன்… நீ என்ன சொல்ற?”

“சார்… அவ என்னோட பெஸ்ட் பிரண்டு… எனக்கு நிறைய சமயத்தில் உதவி செஞ்சு இருக்கா?”

“முப்பது பர்சன்ட்?”

“என்னோட தம்பியோட படிப்பு செலவுக்குக் கூட அவ கிட்டே தான் உதவி கேட்டு இருக்கேன்”

“நாற்பது பர்சன்ட்?”

“நாளைக்கே என்னோட வீட்டு வாடகைக்கு பணம் வேணும்னு கேட்டா கூட அவ கிட்டே தான் போயாகணும்.. எனக்கு அவ ஒரு பணம் காய்ச்சி மரம் மாதிரி… என்னோட தம்பி படிப்பு நல்லபடியா முடியற வரை அவளை நான் பகைச்சுக்க முடியாது”

“ஐம்பது பர்சன்ட்.. அதோட சேர்த்து உன் தம்பியோட படிப்பு செலவும் என்னோடது”

அடுத்த நிமிடம் நிவேதிதாவின் வாயில் இருந்து அபிநய வர்ஷினியைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருவி போல கொட்டத் தொடங்கியது. அவளது தந்தை ட்ராவல்ஸ் கம்பெனி வைத்து இருப்பதில் தொடங்கி… அவளது தாயார் அசைவம் சமைப்பதில் எக்ஸ்பர்ட் என்பது மட்டுமில்லாமல் அவளுக்கு பிடித்த நிறம் ஆகாய நீல நிறம் என்பது வரை ஒப்புவித்து முடித்திருந்தாள்.

‘நீ போகலாம்’ என்று அவன் தலையை அசைக்க… மேலும் சில நிமிடங்கள் அங்கேயே தயங்கி நின்றாள் நிவேதிதா.

‘என்ன?’

“சார்.. என்னோட வேலை…”

‘உன்னை வச்சுத்தானே அந்த திமிரழகியை பிடிக்க முடியும்’ என்று நினைத்தவன்… ‘போ’ என்று மட்டும் தலையை அசைக்க.. தன்னுடைய வேலை தப்பித்த மகிழ்வை முகத்தில் அப்படியே  பிரதிபலித்தாள்.

“சார்…. அந்த டிரெஸ்ஸை கொடுத்தா.. வேற மாடலுக்கு போட்டு…”

“நோ… இனி இந்த ட்ரெஸ் வேற யாரும் போடுறதுக்கு இல்லை…” என்று அழுத்தமாக சொன்னவன் கதவை நோக்கி கை காட்ட… தப்பித்தால் போதும் என்ற உணர்வுடன்  வேகமாக வெளியேறினாள் நிவேதிதா.

அறைக்குள் இருந்தவனோ அபிநய வர்ஷினி உடுத்தி இருந்த உடையை எடுத்து தனக்கு முன்னால் இருந்த மேஜையில் முழுதாக விரித்து வைத்தான். அவள் அதை உடுத்தி இருந்த நொடிகளையும், அந்த நொடிகளில் தன் கரங்கள் உணர்ந்த அவளின் ஸ்பரிசத்தையும் மனதுக்குள் கொண்டு வர முயன்றான்.

கடைசியாக கண்கள் கோபத்தில் சிவக்க அவள் அவனை எல்லார் முன்னிலையிலும்  அடித்த காட்சியும் மனக்கண்ணில் தோன்றி மறைய… அவன் கைகள் ஒருவித அழுத்தத்துடன் அவனது கன்னத்தை தடவிக் கொண்டது. கண்ணைத் திறந்து அந்த உடையை வெறித்தவனின் பார்வையில் சிறுத்தையின் ஆக்ரோஷம் நிரம்பி வழிந்தது.

‘அத்தனை பேர் முன்னாடி என் கன்னத்தில் அறைஞ்சுட்ட இல்ல.. எதுக்காக? கேவலம் உன்னோட உடம்பில் உன் அனுமதி இல்லாம கை வச்சதுக்கு தானே… இனி நடக்கப் போறதைப் பார்… உன் அனுமதியோடவே உன் உடம்பில் கை வைக்கிறேன். நான் அனுபவிச்ச வேதனையை விட ஆயிரம் மடங்கு நரக வேதனையை உனக்குத் திருப்பிக் கொடுக்கலைனா நான் எல்லாம் என்ன ஆம்பளை!’ என்று சூளுரைத்தவனின் விழிகளில் இருந்த வன்மத்திற்கு நேர்மாறாக இதழ்களில் அழகிய புன்னகை நெளிந்து கொண்டிருந்தது.

ஆதிசேஷன் நினைத்து இருந்தால் அபிநய வர்ஷினியைப் பற்றி விவரங்கள் சேகரிக்கும் பொறுப்பை ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியிடம் ஒப்படைத்து எல்லா விவரங்களையும் அறிந்து இருக்கலாம்.

‘இனி அவளோட நிழலைக் கூட வேற ஒரு ஆம்பளை நெருங்கக் கூடாது. அவ நிழலும், நிஜமும் எனக்கு மட்டும் தான் சொந்தம்’ என்று எண்ணியவனின் விழிகளில் இருந்த தீவிரம் அவனது பேருக்கு ஏற்றவாறு பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனை தாங்கிக் கொண்டிருக்கும் அந்த ஆதிசேஷனை ஒத்திருந்தது.

இது எதையும் அறியாத அபிநய வர்ஷினி ஊட்டிக்கு வந்ததில் இருந்தே தோழியைக் குறித்து வருந்திக் கொண்டிருந்தாள்.

உலகம் அறியாத பேதை… மற்றவர்களுக்கு நாம் உதவினாலும் அவர்களுக்கு தேவை என்ற ஒன்று  ஏற்பட்டு விட்டால் உதவியவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அவர்களை குழிக்குள் தள்ளி விடும் வஞ்சகம் நிறைந்த நெஞ்சங்கள் நிறைந்த உலகம் என்பதை அறியாமல் போனாள்.

‘என்னால அவளுக்கு வேலை போய் இருக்குமோ’ என்ற சிந்தனையுடன் எழுந்தவள் எதேச்சையாக நிமிர்ந்து பார்க்க… அதிர்ந்து போனாள்.

எதிர்வீட்டு பால்கனியில் நின்றவன் அதே கிறுக்கன் தான்.

‘இவனுக்கு எப்படி இந்த இடம் தெரியும்?’ அபிநய வர்ஷினியின் உடல் நடுங்கத் தொடங்கியது நிச்சயம் குளிரினால் அல்ல…

 

கந்தகம் எரிக்கும்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here