மின்மினியின் மின்சார காதலன் 34 tamil novels

0
329

அத்தியாயம் 34

“ப்ரோ நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. நான் எங்க டிபார்ட்மென்ட் மூலமா அது யார்னு கண்டுபிடிக்க என்னால முடிஞ்ச அளவுக்கு எல்லா உதவியும் செய்றேன். இப்போ நீங்க ஊருக்கு கிளம்புங்க”

அருந்ததியின் மனநிலை என்னவாக இருக்கக்கூடும் என்பது தெரியாததால் மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான் அக்னி.

அவள் பெட்டியில் இருவரின் உடைமைகளையும் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அவள் தன்னை புரிந்து வைத்திருப்பதை எண்ணி அவனையும் அறியாமல் ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.

“நான் இங்கே வந்த வேலை முடியலை கண்ணா… இப்போ ஊருக்கு திரும்பினா இத்தனை நாள் இங்கே இருந்தது வேஸ்ட் ஆகிடும்”என்று அருந்ததியின் காதுகளில் விழுந்து விடாத வண்ணம் குரலை குறைத்து பேசினான்.

“ஒரு நாளில் எதுவும் மாறிடப் போறது இல்ல ப்ரோ. நீங்க முதல்ல அம்மா, அப்பாவை பார்த்துட்டு வாங்க. அப்போ தான் உங்களுக்கு கொஞ்சம் மன அமைதி கிடைக்கும். மூளை இன்னும் பிரஷ்ஷா ஆகும்.உள்ளுக்குள்ளே இவ்வளவு அழுத்தத்தை வச்சுக்கிட்டு உங்களால அருந்ததியை மட்டுமில்லை உங்களையே பார்த்துக்க முடியாது.” என்று சொல்ல, அக்னிக்கும் அதற்கு மேல் அங்கே தாக்கு பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை. அன்னை, தந்தையின் கால்களில் விழுந்து கதற வேண்டும் போல இருந்தது.

“எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டேன்… நான் ரெடி… கண்ணா நீயும் எங்களோட வர தானே?”

“பின்னே நான் மட்டும் இங்கே இருந்து என்ன செய்ய போறேன். ஹனிமூனா கொண்டாட போறேன். கிளம்பலாம்” என்று கிண்டலாக சொல்லி விட்டு மூவருமாய் கிளம்பி ஊருக்கு சென்றனர். பிரயாணத்தின் பொழுது அக்னி ஏதோ ஒரு வகையில் அருந்ததியை சார்ந்தே இருந்தான். அவளின் அருகாமை மட்டுமே அவனுக்கு அந்த சூழலில் கொஞ்சம் நிம்மதியை அளிப்பதாய் இருந்தது.

 அவர்கள் ஏர்போர்ட்டை விட்டு வெளியேறியதும் அங்கே முகப்பில் அக்னி, அருந்ததி என்று போர்டை கையில் வைத்திருந்த அந்த புதிய நபரை மூவரும் கேள்வியாய் பார்க்க, கூர்ந்து பார்த்த அருந்ததி அதிர்ந்து போனாள்.

ஏனெனில் வந்து இருந்தவனின் கைகளில் அவள் முன்பொரு நாள் பார்த்த அதே டாட்டூ. அருந்ததியின் அதிர்ந்த முக பாவனையை தொடர்ந்து தானும் அவளது பார்வை போகும் திசையை கண்ட அக்னி அவன் டாட்டூவை பார்த்து அதிர்ந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

கொஞ்சம் தள்ளி பின்னால் வந்து கொண்டிருந்த கண்ணனுக்கு அவசரமாய் கண்ணால் ஒரு எச்சரிக்கையை கடத்தி விட்டு அருந்ததியுடன் முன்னேறினான்.

ஒன்றும் அறியாதவன் போல அந்த நபருக்கு அருகில் போய் நின்றான்.

“யார் நீங்க? எங்க நேம் போர்டை எதுக்காக வச்சுக்கிட்டு இருக்கீங்க?” என்று ராணுவ வீரனுக்கே உரிய மிடுக்குடன் கேட்டான்.

“உங்களை அழைச்சுட்டு வர சொல்லி எனக்கு ஆர்டர்… வர்றீங்களா?”

“அழைச்சுட்டு வர சொன்னாங்களா? யாரு? அவங்களுக்கு பேர் இல்லையா?” என்றான் கொஞ்சம் கடுமையாக

“இதைப் பார்த்தா நீங்களே வருவீங்கன்னு சொன்னார்” என்றவன் அக்னியின் கரங்களில் மொபைலை திணிக்க எச்சரிக்கையான முக பாவத்துடன் அதை வாங்கிப் பார்த்தான்.

அவனது தந்தை தாய் மட்டுமின்றி அருந்ததியின் பெற்றோர்களும் ஏதோவொரு இடத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்தார்கள். அதுவும் துப்பாக்கி முனையில். பார்த்தவுடன் கண்கள் ரத்தமென சிவந்து போனது அவனுக்கு.

“ஏய்!” என்று சுற்றுபுறம் மறந்து கர்ஜித்தவன் அந்த நபரின் சட்டையை கொத்தாக பற்றி அவனை அப்படியே அந்தரத்தில் தூக்கி நிறுத்தினான். ஆனால் வந்தவனுக்கோ துளியும் பதட்டமே இல்லை என்பது கண்களிலேயே தெரிய, அவனையே கூர்ந்து பார்த்தபடி மெல்ல அவனை கீழே இறக்கி விட்டான் அக்னி.

“எங்க பாஸ் சொன்னார்… இப்படி தான் ஏதாவது ஏடாகூடமா செய்வனு… அப்படி ஏதாவது செய்ய நினைச்சா மறுபடி ஒருமுறை அதே வீடியோவையும் அதுல இருக்கிற துப்பாக்கியையும் நல்லா பார்த்துக்க சொன்னார்.” என்று நக்கலாக சொல்ல, அக்னி கோபத்தை அடக்க பெரும்பாடுபட்டான்.

“இப்போ என்ன செய்யணும் நான்?”

“சத்தம் போடாம… தப்பிக்க எந்த முயற்சியும் செய்யாம நீ, உன் பொண்டாட்டி.. அப்புறம் அந்த போலீஸ்காரன் எல்லாரும் என்கூட கிளம்பி வாங்க…”

“க… கண்ணனா? அவன் எங்க கூட வரலையே”

“ஹ… இதானே வேண்டாம்கிறது. அந்த ஆளும் உன் கூடவே தானே பிளைட்டில் ஏறினார். ஒழுங்கா அவரையும் வர சொல்லு… உங்க தில்லுமுல்லு எதுவும் எங்க பாஸ் கிட்டே நடக்காது. எல்லாத்தையும் எங்க கிட்டே விலாவாரியா சொல்லி தான் இங்கே அனுப்பி இருக்கார்.. ம்ம்ம்.. சீக்கிரம்” என்று அவன் அவசரப்படுத்த தூரத்தில் மறைவாக நின்று கொண்டிருந்த கண்ணனை அங்கே வரும்படி கண்ணால் அழைப்பு விடுக்க குழப்பமான முக பாவனையுடன் அவர்களை நெருங்கினான் கண்ணன்.

வெறுமையான கண்களுடன் கண்ணனின் கரத்தில் வீடியோவை கொடுக்க, நொடியில் நிலையை புரிந்து கொண்டான் கண்ணன்.

“இப்ப என்ன செய்யணுமாம் ப்ரோ..”

“நம்ம எல்லாரையும் கூட்டிட்டு வர சொல்லி இருக்கானாம். இவனோட பாஸ்ஸ்ஸ்ஸ்”அக்னி பற்களை கடிக்கும் சத்தம் எதிரில் இருந்தவனுக்கும் கூட கேட்டு அவன் வயிற்றில் புளியைக் கரைத்தது.

“சும்மா பேசி நேரத்தை கடத்தாம சீக்கிரம் வாங்க… ம்ம்ம்” கண்களில் இருந்த பயம் தெளிவாய் வெளியே தெரிந்தாலும் அக்னியை சேர்ந்தவர்கள் அவனது முதலாளியின் பிடியில் இருப்பதால் கொஞ்சம் தைரியமாகவே இருந்தான்.

“சரியான கோழை… அவன் நேரில் வராம யாரையோ அனுப்பி வச்சு இருக்கான் பாருங்க ப்ரோ”

“ஹலோ எங்க பாசை பத்தி தெரியாம பேசாதீங்க…அவரை நேரில் சந்திக்காத வரை தான் உங்களோட ஆயுசு…”

“சந்திச்சா?”

“அடுத்த நிமிசமே உங்க உயிர் போய்டும்”

“கொரோனோவை விட பெரிய வைரஸா இருப்பான் போல. ப்ரோ…”

“நீ வேற கண்ணா… அவளோ எல்லாம் ஒர்த் இல்லை… கொசுமருந்து அடிச்சு விரட்டிடுவோம்” என்று அக்னி  கிண்டல் செய்ய… எதிரில் இருந்தவன் குழம்பிப் போனான்.

‘இவனுங்க ரெண்டு பேரும் என்ன கொஞ்சமும் பயப்படவே மாட்டேங்கிறாங்க’

“அரட்டை அடிச்சது போதும்.. சத்தம் போடாம போய் வண்டியில் ஏறுங்க”

“டெம்போ எல்லாம் வச்சு கடத்த போறீங்களா பாஸ்… உள்ளே டிவி இருக்கா? நல்ல சில்க் ஸ்மிதா படமா ஒன்னு போட்டு விடுங்க சார்” என்ற கண்ணன் மற்றவர்களை முந்திக்கொண்டு அவர்களின் ஜீப்பில் போய் ஏறிக் கொள்ள, அவர்களை அழைத்து செல்ல வந்தவனோ மண்டை காய்ந்தான்.

“டேய் ! ரொம்ப ஓவரா பேசுற… உன்னை மட்டும் பாஸ் கிட்டே சொல்லி தனியா கவனிக்க சொல்றேன்டா” என்று ஆத்திரத்துடன் பல்லைக் கடித்தவன் அவர்கள் மூவரையும் யாருக்கும் சந்தேகம் வராதபடி ஜீப்பில் ஏற்றிக் கொண்டவன் ஜீப்பை  விட்டு இறங்கும்போது அரண்டு போன முகத்துடன் இறங்கினான்.

அவன் பின்னாலேயே உரசிக்கொண்டு வந்த கண்ணன், “ அண்ணே பதில் சொல்லிட்டு போங்க”

“என்ன தான்டா வேணும் உனக்கு?” எரிந்து விழுந்தான் அடியாள்.

“உள்ளே ஐட்டம் டான்ஸ் ஆடுற பொண்ணு இருக்கா இல்லையா? அவ பேர் என்ன? வயசு எத்தனை?” என்று இதுநேரம் வரை கேட்டு கேட்டு காதில் ரத்தம் வரவழைத்த அதே கேள்விகளை கேட்க, விட்டால் அழுது விடுபவனை போல முகத்தை வைத்துக் கொண்டான் அவன்.

“சத்தியமா அப்படி எல்லாம் யாரும் இல்லை தம்பி… என்னை விட்டுடு…”என்று கதறியவர்… உள்ளே செல்லக் கூட தெம்பு இல்லாமல் அந்த பிரம்மாண்ட பங்களாவின் வாசலியேயே அமர்ந்து விட்டார்.

“நீங்க மட்டும் உள்ளே போங்க… நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்… பேசி பேசியே மயக்கம் வர வச்சுட்டான். கடன்காரன்” என்று முனகியபடி வாசலில் அமர்ந்து கொள்ள கண்ணன் திரும்பி அக்னியை பார்க்க, அவனோ, “ ஏன்டா?” என்றான் கண்களில் கேள்வியை தேக்கியபடி.

“அது ஒன்னுமில்லை ப்ரோ… கொஞ்ச நேரம் உங்க வேலையை நான் செஞ்சு பார்த்தேன்… கூட இருந்தவனை பேசி பேசி..டயர்டாக்கி அவனை அடுத்து என்ன செய்றதுனே மறந்து போய் கன்பியூஸ் ஆக்குறது.. சரியா செஞ்சேனா?” என்று பேசிக் கொண்டே வீட்டின் பின்பக்கம் மூவரும் வந்து விட்டனர்.

பேசிக் கொண்டே வந்தாலும் அக்னி, கண்ணன் இருவரின் பார்வையும் சுற்றுப்புறத்தை அலசிக் கொண்டே வந்தது.

“உள்ளே போங்க.. பாஸ் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கார்.” அங்கே ஒருவன் வழி காட்ட… முடிந்த அளவு முகத்தில் உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு இருவரும் உள்ளே செல்ல, அருந்ததியின் முகமோ கலவரமாய் இருந்தது.

அக்னி, கண்ணன் இருவரும் அவள் மேல் சிறு துரும்பு விழக் கூட அனுமதிக்க மாட்டார்கள் என்பது புரிந்தாலும் அந்த சூழல் அவளை இயல்பாய் இருக்க விடவில்லை என்பது தான் உண்மை.

பெற்றவர்களை நேரில் பார்க்கும் வரை அவள் முகத்தில் பதட்டம் நிரம்பி வழிந்தது.

பல அறைகளை தாண்டி… அந்த வீட்டின் உள் பகுதியில் இருந்த ரகசிய பாதை மூலமாக வீட்டின் அடியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக தனியாக ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

உள்ளே வரவும், வெளியே செல்லவும் அது ஒன்று தான் வழி… வழி முழுக்க ஆயுதம் ஏந்திய அடியாட்கள். எப்படியும் ஒரு நூறு பேராவது இருப்பார்கள். இத்தனை பேரையும் அக்னி, கண்ணன் இருவரால் மட்டும் சமாளித்து வெளியே வருவது என்பது நடக்காத காரியம். அருந்ததி பயத்தோடு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக் கொண்டிருக்க… அக்னி, கண்ணன் இருவருமே சுற்றுப்புறத்தை கண்களால் அலசிக் கொண்டே நடந்தனர்.

“ஏன் ப்ரோ.. இந்த வேலையை செய்றது யார்னு உங்களுக்கு எதுவும் ஐடியா இருக்கா?” கண்ணன் மென்குரலில் கேட்க.. அக்னியோ அவனை எரிச்சலாய் பார்த்தான்.

“என்ன ப்ரோ ரொம்ப அன்பா பார்க்கறீங்க?”

“உன்னை எல்லாம் எவன் போலீஸ் வேலைக்கு எடுத்தான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்”

“ஏன் ப்ரோ” என்றான் பாவமாக…

“வாயை மூடிட்டு வாடா.. இல்ல நானே உன்னை கொன்னுடுவேன்”

“எனக்கு என்னவோ அருந்ததியை கடத்த நினைச்சவங்க தான் இதை செய்றாங்கன்னு தோணுது…”

“அதுக்கு எதுக்குடா என்னோட அப்பா, அம்மாவை கடத்தணும்?”

“அட.. ஆமா..அப்படின்னா ஜெனிபர் பாப்பாவை கொன்ன கொலைகாரனா இருப்பானோ?”

“அவன் எதுக்குடா அருந்ததியோட அப்பா அம்மாவை தூக்கணும்…”

“ஆஆஆ.. மண்டை காயுதே…”

“கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு வா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் தெரியும்”

“சை! ஒரு போலிஸ்காரனுக்கு கொஞ்சம் கூட மரியாதையே இல்லை இங்கே…”

“ஆர்மி நானே அமைதியா வர்றேன்… உனக்கு மட்டும் என்ன வந்துச்சு? வேட்டிக்குள்ளே ஓணான் புகுந்த மாதிரி அலப்பறை பண்ணிட்டு இருக்காம அமைதியா அப்சர்வ் பண்ணி பாரு”

பேசிக் கொண்டே வந்தவர்கள் அந்த அறையின் கடைசி பகுதிக்கு வர, அங்கே இருந்த திரை விலக்கப்பட அங்கே அக்னி, அருந்ததி இருவரின் பெற்றோர்களும் துப்பாக்கி முனையில் கட்டி வைக்கப்பட்டு இருந்தார்கள்.

அக்னிக்கு ஏற்கனவே ஜெனிபரின் இறப்பிற்கு பின்னால் இருந்த சூது தெரிந்து விட்டதால் பெற்றவர்கள் இருவரையுமே கண்ணாற பார்த்து அவர்களிடம் பார்வையால் இறைஞ்சினான். மகனின் பார்வையில் தெரிந்த பரிதவிப்பு பெற்றவர்கள் இருவரையும் தவறாமல் சென்று சேர அதுவே அவர்களுக்கு புது தெம்பையும் கொடுத்தது.

அக்னி, கண்ணன் இருவரில் ஒருவர் அசைந்தாலும் சுட்டுத் தள்ள தயாராய் இருந்தார்கள் அங்கே இருந்தவர்கள்.

“எங்கேடா உங்க பாஸ்… எங்களை கூட்டிட்டு வர சொல்லிட்டு அவன் எங்கே போய் ஒளிஞ்சுக்கிட்டான்” அக்னியின் அதட்டலில் மொத்த அறையும் அதிர்ந்தது.

“எனக்கு ஒளிஞ்சு எல்லாம் பழக்கம் இல்லை … நான் உனக்கு மேலே இருக்கேன் அக்னி” என்று குரல் மட்டும் வர… மூவரும் நிமிர்ந்து பார்க்க அந்த அறைக்கு மேலே நடுநாயகமாக பால்கனி போல அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் சேரில் சாய்ந்து அமர்ந்து அவர்களை கேலியாக பார்த்துக் கொண்டிருந்தான் சிபி.

‘யார் இவன்?’ மூவரும் தங்களுக்குள் குழம்பிக் கொண்டிருக்க…அவனோ அறையே அதிரும்படி அட்டகாசமாய் சிரித்தான்.

“உங்க யாருக்கும் என்னை அடையாளம் தெரியலை… இல்லையா? ஆனா என்ன செய்றது? உங்க  எல்லாரோட சாவுக்கும் காரணமா இருக்கப் போறது நான் தான்”

“நாங்க தான் வந்துட்டோமே.. அவங்களை அவுத்து விடுடா…”

“ஹா ஹா… இன்னும் ஆரம்பிக்கவே இல்லை… அதுக்குள்ளே அவங்களை அனுப்ப சொன்னா எப்படி? நடக்கிறது எல்லாத்தையும் அவங்க கண்ணாலே அவங்களும் பார்த்து ரசிக்கணுமே… அதுக்கு அப்புறம் நானே வெளியே விட்டாலும் அவங்களுக்கு உயிர் வாழுற ஆசை இருக்கக் கூடாது.” என்று கண்கள் பழிவெறியில் மின்ன பேசுபவனைக் கண்டு அக்னி யோசனையானான்.

“இவனை உங்களுக்குத் தெரியுமா?” என்று பெற்றவர்கள் பக்கம் திரும்பி கேட்க… ஒருபுறம் இருந்தவர்களின் தலை குழப்பமாய் அசைய…எதிர்புறம் இருந்த ஒருவரின் தலை தானாகவே தாழ்ந்தது.

அக்னியின் பார்வை கூர்மையுடன் அவர் மேல் பதிந்தது.

“எல்லாமே தெரிஞ்சும் மறைச்சுட்டீங்க இல்ல” அவன் பார்வை அவரை குத்தி கூறு போட்டது.

Free download novels
Madhumathi Bharath
Facebook Comments Box
What’s your Reaction?
+1
5
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here