
வானதி அதிர்ந்து போய் சிலையாக அமர்ந்து விட்டாள்.ஏனெனில் அந்தக் கார்க்காரனை காரில் ஏற்றிய பொழுது அவளும் தானே அருகில் இருந்தாள்.அவனுடைய கைகள் பின் பக்கமாக கட்டப்பட்டு இருந்தது.அவனுக்கு இருபுறத்திலும் ஆஜானுபாகுவான ஆட்கள் இருந்தார்கள்.அவர்களிடம் நிச்சயம் கத்தி,துப்பாக்கி போன்ற ஏதேனும் ஒரு ஆயுதம் இருந்து இருக்கும்.அப்படி இருந்தும் அவன் தப்பி இருக்கிறான் என்றால்,அவன் எவ்வளவு பெரிய ஜித்தனாக இருப்பான் என்று எண்ணி அதிர்ந்து போனாள் அவள்.
இப்பொழுது தப்பித்தவன் சும்மா இருப்பானா? கண்டிப்பாக அவளை சும்மா விட மாட்டான்.இன்று போல சம்ஹார மூர்த்தி அருகில் இல்லாத சமயம் பார்த்து நிச்சயம் ஏதேனும் வம்பு செய்வான் என்று எண்ணியவளுக்கு பயத்தில் முகமெல்லாம் வேர்க்கத் தொடங்கியது.
அவள் பயத்துடன் இருந்தாள் என்றால் சம்ஹார மூர்த்தியோ ஆங்காரத்துடன் இருந்தான்.அவனுடைய வேலை ஆட்களை போனிலேயே காய்ச்சி எடுத்து விட்டான்.
“உங்களுக்கு ஆளைப் பிடிக்கத் தான் வக்கு இல்லை…பிடிச்சு கொடுத்தவனை ஒழுங்கா பத்திரமா நம்ம இடத்தில் கொண்டு போய் சேர்க்கக் கூடவா துப்பு இல்லை…சீ! நீங்க எல்லாம் என்னடா அடியாட்கள் அப்புறம்…நானா கூப்பிடாம நீங்க யாரும் என்னோட கண்ணுல பட்டுடாதீங்க…மீறி பட்டீங்க..தொலைச்சுடுவேன்”என்று பொறிந்து தள்ளியவன் வானதியின் முகத்தைப் பார்த்ததும் தன்னுடைய கோபத்தை கொஞ்சம் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தான்.
“என்னோடு புறப்படு வானதி” என்றவன் அவளின் கைகளைப் பற்றி இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டு வந்தவன் காரில் ஏறி அமர்ந்ததும் புயல் வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டு வந்து ஆசிரமத்தை அடைந்தான்.
காரை விட்டு இறங்க முயன்றவளை தடுத்து நிறுத்தியது அவனது குரல்.
“கொஞ்சம் உட்கார் வானதி…உன்கிட்டே பேசணும்…”
‘என்ன விஷயமா இருக்கும்’ என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே கல்யாணம் செய்து கொள்வதற்கு கேட்பான் என்று துளியும் எதிர்பார்க்காதவள் அதிர்ந்து போய் சிலையென அமர்ந்து விட்டாள்.
“எனக்கு உன்னை ரொம்பவே பிடிச்சு இருக்கு வானதி…உன்னை கல்யாணம் செஞ்சுக்கிற முடிவை நான் எடுத்து ரொம்ப நாள் ஆச்சு…ஆனா உன்னோட படிப்பு முடிஞ்ச பிறகு தான் இதை எல்லாம் சொல்லணும்ன்னு நானும்,சுந்தரேசன் அய்யாவும் முடிவு செஞ்சு இருந்தோம்.ஆனா இப்போ இருக்கிற சூழ்நிலையில் இனியும் இந்த விஷயத்தை தள்ளிப் போட முடியும்னு எனக்குத் தோணலை. அதான் இப்பவே சொல்லிட்டேன்.இனியும் நம்ம கல்யாணத்தை தள்ளிப் போடுறது நல்லதா எனக்குப் படலை.
அந்தக் கார்க்காரனால உனக்கு எப்ப எந்த ஆபத்து வருமோ தெரியலை.இந்த முறை அவன் தப்பிச்சு போனதினால அடுத்த முறை இதை விட ரொம்ப ஜாக்கிரதையா எல்லாத்தையும் செய்வான்.அசந்த நேரத்தில் உனக்கு ஏதாவது ஆபத்து வந்துட்டா என்னால அதை தாங்கிக்கவே முடியாது வானதி.அப்படி இருக்கும் பொழுது உன்னை இங்கே விட்டுட்டு என்னால எப்படி வீட்டில் நிம்மதியா இருக்க முடியும்…அதனால அடுத்த மூஹூர்த்தத்திலேயே நம்ம கல்யாணத்தை முடிச்சிடலாம் வானதி.”
அவன் பேசப் பேச அவளுக்கோ ஒன்றுமே புரியாத நிலை…மலங்க மலங்க அவனைப் பார்த்து விழித்துக் கொண்டிருந்தாள்.அவளின் அதிர்ந்த தோற்றம் கண்டு அவனுக்கு என்னவோ போல இருந்தது.
“சாரி வானதி..இந்த விஷயத்தை இப்படி பட்டுன்னு சொல்லணும்ன்னு நான் நினைக்கலை.எப்படி எல்லாமோ சொல்லணும்ன்னு நினைச்சு இருந்தேன்.ஆனா சூழ்நிலை காரணமா இப்படி சொல்ல வேண்டியதா போச்சு…உன்னை கல்யாணம் செஞ்சு எப்படி எல்லாம் வச்சுக்கணும்ன்னு இருக்கேன் தெரியுமா?நம்ம கல்யாணம் நடந்துட்டா நான் எப்பவுமே உன் பக்கத்தில் இருக்க முடியும்.ப்ளீஸ்டா…முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதே…ம்ம்ம்… எ..என்னை கல்யாணம் செஞ்சுக்க உனக்கு சம்மதம் தானே?”
அவன் கேட்க அவளால் இன்னும் வாய் திறந்து எதையும் பேச முடியவில்லை.
அவளுக்கு அவனது உயரம் தெரியும்… ‘அப்படிப்பட்டவன் தன்னை மணந்து கொள்ள விரும்பி கேட்கிறானா?இது எப்படி சாத்தியம்?கோடீஸ்வரன் அவன் எங்கே? அனாதை நான் எங்கே?இது எப்படி சாத்தியம்? இவர் ஒருவர் இதை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதுமா? இவரை சார்ந்தவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?’என்றெல்லாம் எண்ணியவள் பதிலே பேசாமல் காரை விட்டு கீழே இறங்க முற்பட சம்ஹார மூர்த்தியின் அழுத்தமான குரலில் மீண்டும் அப்படியே அமர்ந்து விட்டாள்.
“பதிலே பேசாமல் எழுந்து போனா என்ன அர்த்தம் வானதி?எனக்கு ஒரு பதிலை சொல்லிட்டு அப்புறம் கிளம்பு…எ..என்னைப் பிடிக்கலையா?”
“…”
“பதில் பேசு வானதி…நீ படிச்சுக்கிட்டு இருக்கிற பொண்ணு..எந்த சூழ்நிலையிலும் உன்னோட படிப்பை கெடுத்துடக் கூடாதுன்னு இதுவரை கட்டுப்பாடோட இருக்கேன் வானதி.இந்த நிமிஷம் வரை என்னோட விரல் நுனி கூட உன்னைத் தொட்டது இல்லை.அதுக்குக் காரணம் உன்னோட மனசுல இந்த வயசுல எந்த சலனத்தையும் உண்டாக்கிடக் கூடாதுங்கிற எண்ணம் மட்டும் இல்லை.
என்னோட காதலை எவ்வளவு அழகா உன்கிட்டே சொல்லணும்ன்னு நினைச்சு இருந்தேன் தெரியுமா?உன்னோட மனசில் காதல் தானாவே வரணும்.நான் கேட்டோ,மத்தவங்க வறுபுறுத்தியோ வரக்கூடாதுன்னு நினைச்சேன்.அதனால தான் உன் கூடவே இருக்கிற மாதிரி பார்த்துகிட்டேன்.என்னோட பேசும் பொழுதும்,பழகும் பொழுதும் என்னைப் பத்தியும்,என்னோட காதலைப் பத்தியும் நீ தெரிஞ்சுப்பன்னு நினைச்சேன்.உ…உனக்கு புரியுது தானே வானதி”தவிப்புடன் கேட்டான் சம்ஹார மூர்த்தி.
அவளுக்கு அவனது பேச்சும்,அதில் உள்ள நியாயமும் புரிந்தாலும் ஏனோ அவளால் அவனை மணந்து கொள்ள சம்மதம் சொல்ல முடியவில்லை.மௌனமாக காரை விட்டு இறங்கி நேராக சுந்தரேசன் அய்யாவின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அங்கே சுந்தரேசன் சேரில் அமர்ந்து ஏதோ கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டு இருக்க இயந்திரம் போல நடந்து சென்றவள் அவரின் மடியில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டாள்.
“வானதி…என்னடா என்ன ஆச்சு?”என்று வாஞ்சையாக அவளது தலையை தடவியபடி பேசினார் சுந்தரேசன்.
“அடுத்த முஹூர்த்தத்தில் கல்யாணத்தை செஞ்சுக்கலாம்ன்னு சொன்னேன் அய்யா..அதுக்குத் தான் இப்படி மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கா…நான் சொன்னா அவளுக்கு உண்மை நிலவரம் புரிய மாட்டேங்குது”என்று வருத்தத்துடன் சொன்னவன் அந்தக் கார்க்காரனை பிடிப்பதற்கு அவன் செய்த ஏற்பாடுகளையும்,அவன் தப்பி ஓடியதையும் சொல்லி விட்டு,உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் எடுத்து சொன்னான் சம்ஹார மூர்த்தி.
எல்லாவற்றையும் கொஞ்சம் பதட்டத்துடன் கேட்டுக் கொண்டு இருந்த சுந்தரேசன் அவன் தப்பி விட்ட செய்தி கேட்டு மேலும் பதறித் தான் போனார்.இந்த சூழ்நிலையில் சம்ஹார மூர்த்தி எடுத்து இருக்கும் முடிவு தான் சரி என்றே அவருக்கும் தோன்றியது.அவரால் கண்டிப்பாக சம்ஹார மூர்த்தி அளவிற்கு அவளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள முடியாது என்பதையும் அவர் நன்கு அறிவார்.
“தம்பி சொல்றது சரி தானே வானதி…தம்பி என்கிட்டே ஏற்கனவே உன்னை கல்யாணம் செஞ்சுக்க விரும்புறதா சொல்லி இருந்தார்.நானும் அவரைப் பத்தி வெளியில் விசாரிச்சேன்.எனக்கு பரம திருப்தி.அதுக்கு அப்புறம் தான் நான் அவருக்கு சம்மதம் சொன்னேன்.நீயும் அவரை கல்யாணம் செஞ்சுகிட்டா ரொம்ப நல்லா இருப்ப வானதி…”
“அது எப்படி அய்யா…நான் ஒரு அனாதை…என்னை கல்யாணம் செஞ்சுக்க அவர் வீட்டில் இருக்கிறவங்க எப்படி ஒத்துப்பாங்க”
“அதெல்லாம் என் கவலை…நீ சம்மதம்னு ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லு … அது போதும்.. மற்ற விஷயத்தைப் பத்தி நான் பாத்துக்கிறேன்”அவளை முந்திக்கொண்டு பேசினான் சம்ஹார மூர்த்தி
.
“…”
“என்ன வானதி…இன்னும் என்னம்மா தயக்கம்? அந்த தம்பி அருமையான பிள்ளை…இவ்வளவு தூரம் சொல்லுதே..அப்புறமும் என்ன தயக்கம்?உன் மனசில் வேற எதுவும் எண்ணமிருக்கா ?”என்று லேசாக ஐயப்பட்டு பேசினார் சுந்தரேசன்.
“அதெல்லாம் இல்லை அய்யா…”வேகமாக அவள் மறுத்த பிறகு தான் சம்ஹார மூர்த்திக்கு மூச்சே வந்தது.
“அப்புறம் என்னடா யோசனை?”
“எனக்கு என்னமோ எல்லாம் ரொம்ப வேகமா நடக்கிற மாதிரி இருக்கு…மனசு ஏதோ தெளிவில்லாம இருக்கிற மாதிரி கொஞ்சம் குழப்பமா இருக்கு”
“உனக்கு என்னைப் பார்த்து கொஞ்ச நாள் தான் ஆன மாதிரி இருக்கா வானதி..எனக்கு உன்னோட ஜென்ம ஜென்மமா பழகின மாதிரி ஒரு எண்ணம்.கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு வானதி”என்று அவன் மேலும் கெஞ்ச அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
“நீங்க என்னை விரும்பறீங்க…ஆனா நான் உங்களை அந்த அளவுக்கு நேசிக்கிறேனான்னு எனக்கு தெரியலையே…அப்படி இருக்கும் பொழுது இந்த கல்யாணம் எப்படி சாத்தியம்?”
“இதோ பார் வானதி…நான் உன்னை விரும்பறேன் தான்.அதுக்காக நீயும் என்னை விரும்பியே ஆகணும்ன்னு நான் சொல்லலை…நம்ம கல்யாணம் வரைக்கும் நேரம் இருக்கு..அதுவரை ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முயற்சி செய்வோம்.கல்யாணம் ஆன பிறகு காதல் கண்டிப்பா வரும்.அப்படி உடனே வரலைனாலும் பரவாயில்லை.உனக்காக எவ்வளவு நாள் வேணும்னாலும் நான் காத்திருப்பேன்.
இப்போ நான் இந்த கல்யாணத்தை உடனடியா நடத்த நினைக்கிறதுக்கு காரணம் உன்னோட பாதுகாப்பு தான்.என்னோட காதலை விட உன்னோட பாதுகாப்பு எனக்கு ரொம்பவே முக்கியம் வானதி.உனக்கு ஏதாவது ஆச்சுனா அப்புறம் என்னாலேயே என்னை மன்னிக்க முடியாது.
நாம இரண்டு பேரும் முதலில் கல்யாணம் செஞ்சுக்கலாம்.நீ வழக்கம் போல படி…பாட்டு கிளாசுக்கு போ…இன்னும் உனக்கு என்ன எல்லாம் செய்யணுமோ அதை எல்லாம் செய்.நான் தடுக்க மாட்டேன்.ஆனா நம்ம கல்யாணம் மட்டும் உடனே முடிஞ்சாகணும்.அதுவும் அந்தக் கார்க்காரனையோ அவனது கும்பலையோ பிடிக்கிற வரை இந்த கெடுபிடி எல்லாம்.அதுக்கு அப்புறம் இந்த அளவுக்கு உனக்கு அழுத்தம் கொடுக்க மாட்டேன்.இந்த ஒரு விஷயத்தில் மட்டும் என்னோட பேச்சை கேளுடா ப்ளீஸ்”என்று அவன் கெஞ்ச சுந்தரேசனுக்கு உள்ளம் உருகிப் போனது.
“வானதி…தம்பி இவ்வளவு தூரம் சொல்லியும் அப்புறமும் என்ன பிடிவாதம் உனக்கு…சம்மதம் சொல்லு”என்று லேசாக வற்புறுத்தவே அரை மனதுடன் தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தாள் வானதி.
அதற்கே சம்ஹார மூர்த்தி வானத்துக்கும் பூமிக்குமாக குதித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிபடுத்தினான்.
“சார் நான் ஒரு இரண்டு நிமிஷம் வானதி கிட்டே பேசலாமா?”சுந்தரேசனிடம் கேட்க அவர் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு கிளம்பி விட வானதியை நெருங்கி நின்றான் சம்ஹார மூர்த்தி.
“ரொம்ப தேங்க்ஸ் வானதி…இந்த நிமிஷம் இந்த உலகத்திலேயே ரொம்ப சந்தோஷமான மனுஷன்னா…அது நான் தான்…”என்று கரகரப்பான குரலில் பேசியவன் சட்டென்று சீண்டத் தொடங்கினான்.
“இதுவரைக்கும் உன்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக் கூடாதுன்னு நினைச்சு தான் நான் ரொம்ப நல்ல பிள்ளையா நடந்துக்கிட்டேன்.இப்ப தான் மேடம் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியாச்சே…ஸோ இனியும் நல்ல பிள்ளை வேஷம் எல்லாம் போட மாட்டேன்.”என்று அவன் குறும்பாக பேச அவள் திணறலுடன் அவனைப் பார்த்தாள்.
“ஹலோ மேடம்..இந்த பார்வை எல்லாம் இனி செல்லாது …இனி என்னை பார்த்து ரொமாண்டிக்கா மட்டும் தான் லுக்கு விடணும்…புரிஞ்சுதா?”என்றவன் அவளைப் பார்த்து குறும்பாக ஒற்றைக் கண்ணை சிமிட்ட விதிர்த்துப் போய் பார்வையை அவன் புறமிருந்து திருப்பி தலையை குனிந்து கொண்டாள்.
“உனக்கு தான் இன்னும் என் மேல காதல் வரலையே…கல்யாணம் வரைக்கும் உன்கிட்டே இருந்து பதிலுக்கு நானும் காதலை எதிர்பார்க்க மாட்டேன்.ஆனா நான் உன்னை எந்த அளவுக்கு விரும்பறேன்னு நீ தெரிஞ்சுப்ப”என்று சொன்னவன் அவளின் கன்னம் தீண்டுவதற்கு நீண்ட கைகளை கடைசி நொடியில் பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.
“நம்ம கல்யாணம் முடியற வரை உன்னை தொடக் கூடாதுன்னு ஏற்கனவே முடிவு செஞ்சு இருக்கேன் வானதி…ஏன் தெரியுமா?”என்று ஆழப் பார்வை ஒன்றை அவளிடம் செலுத்தி விட்டு அவன் கேட்க அவளோ தலையை குனிந்து கொண்டு தெரியாது என்பதாக தலையை இடமும் வலமுமாக ஆட்டினாள்.
“எனக்குள்ள காதல் வந்த அந்த நிமிஷத்தில் இருந்து நீ எனக்கு சொந்தமாகுற அந்த நொடியைத் தான் நான் ஆவலோட எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்.அதுக்கு அப்புறம் தான் நான் உடலளவில் எந்த அளவுக்கு உன்னை நேசிக்கிறேன்னு உனக்கு சொல்ல விரும்பறேன்.அதுவரைக்கும் என்னோட காதல் உன்னோட உள்ளத்தை மட்டும் தான் தீண்டும்.என்னோட காதல் உடல் அழகைப் பார்த்து வந்தது இல்லை…அபப்டின்கிறதை நீயும் நல்லா பதிய வச்சுக்கோ வானதி”
அவன் பேசப் பேச அவனையே வியப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் வானதி.அவளது கல்லூரியிலேயே சில பெண்கள் சக மாணவர்களை காதலிப்பதும்,காதலை ஏற்றுக் கொண்ட அடுத்த நொடியே அந்த மாணவர்கள் அந்தப் பெண்ணின் மீது உரிமை எடுத்துக் கொள்வதும்,தொட்டுப் பேசுவதும்,தோளோடு தோள் சேர்த்து நின்று கொள்வது இது போல எல்லாம் பார்த்து பழகியவளுக்கு சம்ஹார மூர்த்தியின் கண்ணியம் மிகவும் பிடித்திருந்தது.
காதலியிடம் கூட கண்ணியம் காக்கும் அவனது அந்த செயல் அவளை மிகவும் ஈர்த்தது என்று தான் சொல்ல வேண்டும்.முதன்முறையாக அவனை ஆசையுடன் பார்த்தவளின் பார்வையின் பொருளை உணர்ந்து கொண்டவனின் கண்கள் வைரமென மின்னியது.
“ஊஹும்…உன் பார்வை சரியில்லை…நான் கிளம்புறேன்.அடுத்த முஹூர்த்ததில் நம்ம கல்யாணம்…நிறைய வேலை இருக்கு…அதெல்லாம் நான் தானே செய்யணும்…இப்போ கிளம்புறேன்.காலையில் வர்றேன்…நீ கிளம்பி தயாரா இரு” என்றவன் ஒற்றை தலை அசைவில் துள்ளலான நடையுடன் அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.
அவன் போகும் திசையை முதன்முதலாக தன்னை மறந்து ஆசையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் வானதி.
தீ தீண்டும்…
Superb update. I think marriage won’t be in the next update ?. Waiting for their marriage eagerly. Thank you.
no ma.next epi mrg than
super ud sis
தேங்க்ஸ் மா