Arooba Mohini 5

1
764

அத்தியாயம் 5

ஆவிகளைப் பற்றி:

மெழுகுவர்த்திச் சுடர் திடீரென நீல நிறத்தில் மாறினாலோ அல்லது எந்தவொரு காற்றுமின்றி திடீரென அணைந்தாலோ, கண்டிப்பாக அங்கே பேய்கள் உள்ளது.

தாமோதரனின் கண்கள் நிலைக்குத்திப் போய் இருந்தது. வாய் திறந்து பேச முடியாத நிலையில் இருந்தார். அவர் உள்ளே வந்ததும் காரின் கதவுகள் தன்னாலேயே மூடிக் கொண்டதும் மிரண்டு போய் பார்வையை திருப்பியவரின் கண்களில் பட்டது மோகினியின் உருவமாயிற்றே…

“என்ன டாக்டர்… அப்படி பார்க்கறீங்க… என்னை நியாபகம் இல்லையா? அவளின் கண்கள் மெல்ல மெல்ல வெள்ளை நிறத்திற்கு மாறுவதைக் கண்டதும் அவரின் உடலில் ரத்தம் சில்லிடத் தொடங்கியது.

“ஒருவேளை இப்போ நியாபகம் வருதா பார்க்கலாம்” என்று சொன்னவள் தன்னை மறைத்து இருந்த அந்த வெள்ளைத் துணியை பரபரவென்று தன்னுடைய கூரிய நகத்தால் கிழித்தெறிய… ஆடையில்லா அவளது மேனியின் தரிசனம் அவருக்கு கிளுகிளுப்பை அளிக்கவில்லை. பயந்து போய் கண்களை மூடிக் கொண்டார்.

“ஏன் டாக்டர்… அன்னிக்கு நீ ரசிச்ச இந்த கோலம்… இன்னிக்கு உனக்கு பிடிக்கலையா… கண்ணை நல்லா திறந்து வச்சு பாரு” என்று சொன்னவளின் கை நகங்கள் அவரது தொடையில் ஒரு பக்கம் புகுந்து மறுபக்கமாக வெளிவர… ரத்தம் பீறிட்டு தெறித்தது. வலியில் கதறினார் தாமோதரன்.

“என்னை விட்டுடு… தெரியாம…”

“ஏன் விடணும்? நீ என்ன நல்லவனா? உன் உயிர் மட்டும் உனக்கு அத்தனை பெருசு… என்னோட உயிரைப் பத்தி கவலைப்படலியே நீ…. நான் உயிரோட இருக்கிறது தெரிஞ்சும்… கேட்க யாருமில்லை அப்படிங்கிற எண்ணம் தானே… ரத்த சகதியா இருந்த என்கிட்டே உன்னை மிருகமா நடந்துக்க வச்சது..” நொடிக்கு நொடி அவளுடைய குரலில் ஆத்திரம் கூடிக்கொண்டே போனது.

“அன்னிக்கு நீ இருந்த கோலம்… நான் போதையில்…”

“சீ… நாயே… நீ ஒரு டாக்டராடா… பெத்த தாய்கிட்டே கூட காட்டாத உடம்பை ஒரு பொண்ணு டாக்டர் கிட்டே தானே காட்டுவாள். அதுக்கு காரணம் டாக்டர்களை தெய்வத்துக்கு சமமா மதிக்கிறதால தானே… எதிரில் இருக்கிறவங்க எப்பவும் உன் கண்ணுக்கு நோயாளியா மட்டும் தானேடா தெரியணும்… ரத்தம் முக்கால்வாசி வெளியேறி செத்துக்கிட்டு இருந்த என்னை… நீ நினைச்சு இருந்தா காப்பாத்தி இருக்கலாம்… ஆனா… நீ ஒரு டாக்டர் அப்படிங்கிறதயே மறந்துட்டு குடிபோதையில் வெறி கொண்ட மிருகமாய் மாறி என்னை குதறி எடுத்தியே… நீ எல்லாம் உயிரோட இருக்கவே அருகதை இல்லாதவன்… செத்துப்போ” என்று பேசியபடியே அவனை நெருங்க அலறி அடித்துக் கொண்டு காரை விட்டு இறங்கினார் தாமோதரன்.

காரை விட்டு இறங்கிய ஓடியவரை காற்றில் அலைந்தபடியே பின் தொடர்ந்தாள் மோகினி. ஏற்கனவே வெகுநேரம் ஓடிக் கொண்டிருந்ததால் களைத்துப் போய் தடுமாறி பலமுறை கீழே விழுந்து வைத்தார். அவரது உடலில் பல இடங்களில்  காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்தம் வழிந்த முகத்துடன் கீழே விழுந்தவர் மறுபடியும் ஓட முடியாமல் கை எடுத்து கும்பிட்டு கெஞ்சினார்.

“என்னை விட்டுடு … நா… நான் தெரியாமல் செஞ்சுட்டேன்”

“உன்னை எல்லாம் உயிரோட விட்டு வச்சா நீ இன்னும் எத்தனை பேரை காவு வாங்குவியோ… நீ உயிரோட இருந்தா இந்த நாட்டில் இன்னும் எத்தனையோ பெண்கள் உயிரை விடணும். சாவு தான் உனக்கான தண்டனை” என்று சொன்னபடியே துரத்தினாள்.

தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருந்தவனின் காலை அவள் இடறி விட… கீழே விழுந்தவரால் சட்டென்று எழுந்திரிக்க முடியவில்லை.

“த… தண்ணி” நா வறண்டு போய் கெஞ்சினார்.

“தண்ணி தானே… வரும்… வேணும்கிற அளவு குடிச்சுக்கோ” என்று அரக்கத்தனமான குரலில் சொன்னவள் மறைந்து போக…

தாமோதரன் விழுந்த இடமோ சட்டென்று நீரால் சூழப்பட்டது. அந்த நீர் ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டதைப் போல… அவரை சுற்றிலும் சூழ்ந்து அகழியாக மாறியது.

தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவன் பார்வையை உயர்த்தி சுற்றிலும் அவளைத் தேட… அவளைக் காணவில்லை.

தண்ணீரை விட்டு வெளியே வரவும் அவரால் முடியவில்லை.  அவருடைய காலை ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி தண்ணீருக்குள் இழுப்பதைப் போல உணர்ந்தவருக்கு பயம் இன்னும் அதிகரித்தது. எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் அந்த குழியை விட்டு வெளியே வர முடியவில்லை.

சாதாரணமான தண்ணீர் நேரம் செல்ல செல்ல… கருப்பான… புழுக்கள் நிறைந்த சாக்கடைத் தண்ணீராக மாறியது.

அவரின் தலை வரை தண்ணீர் அதிகரித்தது. அதே நொடியில் அவரின் கால்களுக்கு மேல் ஊர்ந்து தண்ணீரின் மேல்பரப்பை அடைந்தாள் மோகினி.

“நீ எல்லாம் சாக்கடை… உன்னோட தாகத்தைத் தீர்க்க சாக்கடை தண்ணி தான் சரியா இருக்கும்… வேணும்கிற அளவுக்கு குடிடா… பொறுக்கி” என்றவளின் குரலில் இருந்த வெறியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அந்த சாக்கடை நீரால் கொஞ்சம் கொஞ்சமாக தாமோதரன் துடித்து உயிர் விடுவதை திருப்தியுடன் பார்த்தவளுக்கு அப்பொழுதும் கூட வெறி தணியவில்லை.இன்னும் சிலர் உயிரோடு இருக்க அவளது வெறி எப்படி தணியுமாம்?

காற்றோடு காற்றாக அலைந்து திரிபவளுக்கு வேகம் மட்டும் குறைவாக இருக்குமா என்ன? காற்றை கிழித்துக் கொண்டு பறந்தாள். சூறாவளியாக …

 அடுத்து அவள் சென்ற இடம் சந்திரனின் வீடு.

வீட்டில் எல்லா கதவுகளையும் பூட்டி விட்டு ஹாலில் சந்திரன் உலாத்திக் கொண்டிருந்ததை அவளால் பார்க்க முடிந்தது.

“உன்னை எத்தனை தூரம் நம்பினேன்… பாவி” என்று வாய் விட்டு சொன்னவள் அவனை நெருங்க முடிவு செய்தாள்.

ஹாலில் அமர்ந்து இருந்த சந்திரனின் மனம் முழுக்க அவனுக்கு நேர்ந்த அந்த அமானுஷ்ய நிகழ்வு மட்டுமே நிரம்பி வழிந்தது.

‘ஒருவேளை இதெல்லாம் என்னுடைய மனதின் கற்பனையா?’ என்று குழம்பிய நிலையில் இருந்தான்.

அந்த கும்மிருட்டு நேரத்தில் யாரோ அவன் வீட்டு கதவை தட்டுவதைப் போல மெல்லிய சத்தத்தைக் கேட்டான். மணியைப் பார்த்தான்.

நள்ளிரவு பன்னிரெண்டு முப்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.

‘சே… இந்த நேரத்தில் நம்ம வீட்டுக்கு யார் வரப் போறது? வேற யார் வீட்டுக்காவது இருக்கும்’ என்று அசட்டை செய்ய… சில நொடிகள் கழித்து அவன் வீட்டுக் கதவை பத்து பேர் சேர்ந்து உடைப்பதைப் போல பெருஞ்சத்தம் கேட்டது.

தூக்கி வாரிப்போட்டது சந்திரனுக்கு… தயங்கிக் கொண்டே போய் கதவை திறந்தவன் அங்கே யாரும் இல்லாததைக் கண்டு குழப்பமும், பயமும் அதிகரிக்க வேகமாக கதவை பூட்டி விட்டு மீண்டும் ஹாலுக்கு வந்து அமர்ந்து கொண்டான்.

‘இல்ல.. இதெல்லாம் என்னோட கற்பனை…’ என்று மனதுக்குள் பாராயணம் செய்தபடி இருந்தான். அப்பொழுது தான் அந்த சத்தத்தை கேட்டான்.

ஹாலில் அவன் அமர்ந்து இருந்த சோபாவின் வலது பக்கமாக இருந்த அறையில் இருந்து தான் வித்தியாசமான சத்தம் கேட்டது.

இதயம் தொண்டைக்கு வந்து துடிக்கத் தொடங்க… அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்தான்.

மரத்தால் ஆன ஏதோவொரு பொருளை யாரோ கூரிய ஆயுதத்தால் கிழிக்கும் சத்தம். நன்றாக உற்று கவனிக்கத் தொடங்கினான்.

“கிறீச்”

“கிறீச்”

“கிறீச்”

 அறை முழுக்க தேடி சலித்தவன் அறையின் மூலையில் இருந்த மர பீரோவில் பார்வையை பதித்தான்.

அடி மேல் அடி எடுத்து வைத்து அவன் அதை நோக்கி செல்ல… ஒவ்வொரு நிமிடமும் அந்த சத்தம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

கதவுக்குப் பின்னால் யாரோ நகத்தால் பிறாண்டுவது போல இருந்த அந்த சத்தம் அவனுக்குள் திகிலை கிளப்பியது.

இன்னும் சில அடிகள் தான்.. அந்த கதவை அவன் நெருங்கி விடுவான் என்ற நிலையில்… அன்றைய தினத்தைப் போலவே இன்றும் கரண்ட் கட் ஆனது.

காற்றில் வீசிய ரத்த வாடை அவனை முன்னேற விடாமல் தடுத்தது.

‘அன்னிக்கும் இதே மாதிரி தானே இருந்தது.’ என்ற நினைவு அவனுடைய பயத்தை அதிகரிக்கவே செய்தது.

பட்டென்ற சத்தத்துடன் அவன் இருந்த அறையின் கதவு ஓங்கி சாத்தப்பட… இப்பொழுது சந்திரனுக்கு அந்த அறையினுள் இருக்க துளி கூட தைரியமே இல்லை.

அந்த அறையை விட்டு வெளியேறினால் போதும் என்ற எண்ணம் வரத் தொடங்க… வேகமாக கதவை நோக்கி பாய்ந்தான்.

அறையில் சட்டென்று விளக்கு எரிவதும், அணைவதுமாக இருக்க… திரும்பிப் பார்க்க சொல்லி அவனின் உள்ளுணர்வு உந்தியது. மெதுவாக கழுத்தை மட்டும் திருப்பிப் பார்த்தான்.

இருளும் , வெளிச்சமும் மாறி மாறி வந்து போன அந்த அறையில் அந்த மர பீரோவின் அருகில் தெரிந்த அந்த உருவம் அவனது முதுகுத்தண்டை சில்லிட வைத்தது.

ஒவ்வொரு முறை இருள் வரும் பொழுதும்  இருட்டில் மட்டுமே தெரிந்த அந்த உருவம் ஒவ்வொரு நொடியும் தன்னை நோக்கி நெருங்கி வருவதை உணர்ந்தான். சந்திரனுக்கு கால்கள் தள்ளாடியது.

‘இது அன்று பார்த்த அதே உருவம் தான்’ என்று அவன் மனம் அலறியது.

பூட்டிய அறைக்குள் அவனும்… அதுவும்… எப்படி தப்புவது? உடல் வேர்த்து வடிந்தது அவனுக்கு.

கோரைப்பற்களையும், கூர் நகங்களையும் தன்னை நோக்கி நீட்டியபடி நெருங்கிய அந்த உருவத்தைக் கண்டதும் அன்றைய தினத்தைப் போலவே மயங்கி விழுந்தான் சந்திரன்.

“மயங்கிட்டியா… நீ முழிச்சுட்டு இருக்கும் பொழுதே உன்னை அணுஅணுவா சித்திரவதை செஞ்சு கொல்லணும்டா… அந்த நாள் ரொம்ப தூரத்தில் இல்லை… உனக்கும் நாள் குறிச்சுட்டேன்… சீக்கிரமே அது நடக்கும்.. அதுவரை ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைக்கணும் நீ” என்று கருவியவள் காற்றோடு காற்றாக கரைந்து போனாள்.

மோகினி வருவாள்…

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 5]

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here