Arooba Mohini 6

0
510

அத்தியாயம் 6

ஆவிகளைப் பற்றி:

அமானுஷ்ய அமைதி நிலவும் இடங்களில் தான் ஆத்மாக்களின் அட்டகாசத்தை உணர முடியும். சத்தம் நிறைந்த இடங்களில் இருக்க ஆவிகள் விரும்புவதில்லை. எனவே தான் ஊரே உறங்கும் நடுநிசி நேரங்களில் ஆவிகள் தங்களின் வேலைகளை ஆரம்பிக்கின்றன.

சந்திரன் மறுநாள் நினைவு திரும்பியதில் இருந்து இயல்பு நிலைக்கு வரவே இல்லை. அவனை நெருங்கி ஆறுதல் படுத்த முயன்ற அனைவருக்கும் மிஞ்சியது தோல்வி மட்டுமே… அனு, ராஜா எல்லாருமே முயன்று பார்த்து விட்டு தோல்வியுடன் திரும்பினார்கள்.

மருத்துவர் கேசவனின் அறிவுறுத்தலின் படி, அனுவும் சந்திரனும் அவர்களின் ஊட்டி பங்களாவுக்கு சென்றார்கள். சந்திரனும் அதே வீட்டில்  இருந்தால் தொடர்ந்து அது போல அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கக் கூடும் என்று அஞ்சி உடனடியாக அங்கிருந்து கிளம்பி விட்டான்.

ராஜாவிற்கு நண்பனின் மனநிலை குறித்து கவலை அதிகரித்தது. சந்திரன் பயந்த சுபாவம் உள்ளவன் தான்.ஆனால் இப்பொழுது போல இருட்டை பார்த்தாலே அஞ்சி நடுங்குவது அவனது இயல்பே இல்லையே.எதையாவது செய்து நண்பனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உந்த… கடைசியாக சந்திரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்தப் பெண்ணின்  வீட்டை நோக்கி புறப்பட்டான். ஒருவேளை அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களை சொன்னால் நண்பனின் மனநிலையில் மாற்றம் ஏற்படலாமோ என்ற எண்ணமே ராஜாவை அவ்வாறு செய்யத் தூண்டியது.

காலை பத்து மணி அளவில் அந்த வீட்டின் கதவைத் தட்டினான் ராஜா… நிமிடங்கள் அமைதியாகவே கழிய… ஒரு வயதான பெண்மணி களை இழந்த முகத்துடன் அவனை நோக்கி வந்தார்.

யார் தம்பி  நீங்க? உங்களுக்கு யார் வேணும்?”

“வ… வந்து”

நண்பனுக்காக என்று எண்ணி அவ்வளவு தூரம் வந்தவனால் ஏனோ சட்டென்று பேசி விட முடியவில்லை. அவனோ ஒரு கல்யாணம் ஆகாத வாலிபன். அந்த வீட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பற்றி அவன் கேட்டால் கண்டிப்பாக அது பெரிய பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளது என்ற எண்ணமே அவனை தடுமாற செய்தது.

என்ன செய்வது என்று யோசித்தவன் எதிரில் நிற்பவர் தன்னையே யோசனையுடன் பார்ப்பதை உணர்ந்து வேறு வழியின்றி பேச்சைத் தொடங்கியவன் வாயில் வந்ததை புளுகித் தள்ளினான்.

“என்னோட பேரு ராஜா… என்னோட தங்கச்சி சரண்யா உங்க பொண்ணோட பிரண்டு…”

“ஓ.. அப்படியா தம்பி… உள்ளே வாங்க…” என்று வீட்டினுள் அழைத்தார். மறுக்காமல் உள்ளே சென்றவன் கண்களால் வீட்டை அளந்தான்.

ஆடம்பரம் இல்லாத எளிமையான வீடு…

“சொல்லுங்க தம்பி என்ன விஷயம்?”

“வந்து… என் தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயம் செஞ்சு இருக்கோம்மா… உங்க பொண்ணோட போன் நம்பரை தொலைச்சுட்டா போல.. அதான்… நம்பரை வாங்கிட்டு வர சொல்லி என்னை அனுப்பினா”

ஓ.. நல்லது  தம்பி.. மாப்பிள்ளை என்ன செய்றார்?”

“அ… அவர் கம்பெனி வச்சு இருக்கார்..”

“ ரொம்ப சந்தோசம்…” என்று சொன்னவர் தடுமாறியபடியே  மெல்ல எழுந்து ப்ரிட்ஜில் இருந்து ஜூஸை டம்ளரில் ஊற்றிக் கொடுக்க… மறுக்காமல் வாங்கி குடித்தான் ராஜா. ஏனோ அந்த வீட்டினுள் நுழைந்த அந்த நொடியில் இருந்தே அவன் மனம் பதட்டமாகவே இருந்தது. யாரோ தன்னை உற்றுப் பார்ப்பது போல…

“உங்க பொண்ணோட நம்பர்” லேசாக இழுக்க… பக்கத்தில் இருந்த அவரது கீ பேடு(Keypad) போனை எடுத்து அவனிடம் நீட்டினார்.

“எனக்கு நம்பர் எல்லாம் எடுக்கத் தெரியாது தம்பி… நீங்களே தேடி எடுத்துக்கோங்க… இன்னிக்கு காலையில் கூட எனக்கு போன் பேசினா…”

“காலையில் ஒன்பது மணிக்கு வந்து இருக்கே..அந்த நம்பரா?”

“மோகினின்னு சேவ்(Save) ஆகி இருக்கே… அதுவா?” என்று கேட்க  ஒரு பெருமூச்சுடன் தலை அசைத்தார்.

“அவங்க இப்போ எங்கே இருக்காங்க?…”

“பெங்களூரில் வேலை பார்க்கிறா தம்பி… மாசத்தில் ஒருமுறை வந்துட்டு போவா…”

“ஓ… அப்படியா? அப்படின்னா நாங்க பத்திரிக்கை எப்படி கொடுக்கிறது?… இந்த மாசத்தில் அவங்க வர வாய்ப்பு இருக்கா?” அவருக்கு சந்தேகம் வராத அளவிற்கு கேள்விகளை எழுப்பி தனக்கு வேண்டியதை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ள முயன்றான் ராஜா.

“ம்ம்ம்.. அடுத்த வாரத்தில் அவ வருவா தம்பி.. அப்போ இங்கே வாங்க… அப்படி அவ வரலைன்னா அவளோட பெங்களூர் அட்ரஸ்க்கு அனுப்பிடுங்க” என்று சொல்ல தலை அசைத்தவன் வேறு கேள்விகள் கேட்காமல் யோசனையுடன் வெளியேறினான்.

அந்த வீட்டிற்குள் அவன் நுழைந்தது முதல் அவன் பேசிய அத்தனை வார்த்தைகளையும், அதற்கு தன்னுடைய தாயார் அளித்த பதில்களையும் கோபமும், வலியும் சரிபாதியாக கலந்திருக்க … கண்ணீர் வழியும் கண்களுடன் அரூபமாக பார்த்துக் கொண்டிருந்தாள் மோகினி.

வீட்டை விட்டு வெளியேறியவன் பாதி வழியிலேயே தனது வண்டியை ஒரு மரத்தின் கீழே நிறுத்தி சந்திரனுக்கு அழைத்தான்.

போனை எடுத்து பேசிய அனு… சந்திரனின் நிலை குறித்து சொல்லி போனை அவனிடம் கொடுக்க மறுத்தாள். பிடிவாதமாக அவளிடம் பேசிய ராஜா… அவளை கட்டாயப்படுத்தவே வேறு வழியில்லாமல் சந்திரனிடம் போனைக் கொடுத்தாள்.

“சந்திரா… நான் ராஜா பேசுறேன்டா… நான் இப்போ தான் அந்த பொண்ணு வீட்டுக்கு போய் விசாரிச்சுட்டு வர்றேன்…

என்னடா சொன்னாங்க”

“அந்த பொண்ணு பெங்களூரில் வேலை பார்த்துட்டு இருக்காம் சந்திரா.. இன்னிக்கு காலையில் கூட அவங்கம்மா கிட்டே போனில் பேசி இருக்கு…” என்று சொல்ல சந்திரனின் குரல் போனில் வீறிட்டது.

“இல்ல.. அவங்க சொன்னது உண்மை இல்லை.. அது பொய்”

“டேய்! லூசு மாதிரி பேசாதே… அவங்க எதுக்கு பொய் சொல்லணும்… அந்த பொண்ணோட நம்பரில் இருந்து இன்னிக்கு காலையில் கூட போன் வந்து இருக்கு… நான் பார்த்தேன்…”

“இல்லை ராஜா இதுல ஏதோ ஏமாற்று வேலை இருக்கு… நீ அந்த நம்பரை எனக்கு அனுப்பு.. நிச்சயம் அது தப்பான நம்பரா தான் இருக்கும்” என்று உறுதியாக சொன்னான் சந்திரன்.

சந்திரனின் பேச்சில் தெரிந்த அசைக்க முடியாத நம்பிக்கையை உணர்ந்து கொண்டான் ராஜா.

“என்னடா சந்திரா நானே நேர்ல போய் பார்த்துட்டு வந்து சொல்றேன். இன்னமும் உனக்கு நம்பிக்கை வரலையா?”லேசான ஏமாற்றம் தெரிந்தது ராஜாவின் குரலில்.

“இல்லை ராஜா… தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோ… என்கிட்டே காரணம் எல்லாம் கேட்காதே.. ஆனா என்னோட மனசு தவிக்குது… இனம்புரியாத ஏதோ ஒரு பயம்  என்னை ஆட்டி வைக்குது. எதுவோ சரியில்லைன்னு என்னோட மனசு கதறுது…”

“சரிடா… இப்போ என்ன செய்யணும்னு சொல்ற?”

“அந்த நம்பரை எனக்கு அனுப்பு… நான் பேசிப் பார்க்கிறேன்” என்று சொல்ல அரைமனதாக சந்திரனுக்கு அந்த எண்ணை அனுப்பி வைத்தான்.

அந்த எண் கைக்கு வந்த அடுத்த நொடியே சந்திரன் அந்த எண்ணுக்கு அழைக்க.. அதே நேரம் ராஜாவும் அந்த எண்ணிற்கு அழைத்தான்.

ராஜாவின் அழைப்பு ரிங் போய் அடுத்த சில நிமிடங்களில் எடுக்கப்பட்டது.

“ஹலோ… மோகினி மேடம் இருக்காங்களா?”

“எஸ்… சொல்லுங்க…” என்று எதிர்முனையில் ஒரு பெண் குரல் கேட்க… தொடர்ந்து என்ன பேசுவதென்று புரியாமல் தயங்கினான் ராஜா.

“ஹலோ… யாருங்க?”

“…..”

“ஹலோ…”

“நீங்க சுந்தரி மேடத்தோட பொண்ணு மோகினி தானே?”

“ஆமாங்க… உங்களுக்கு என்ன வேணும்?”

“உங்க அம்மாவோட பேரில் பேங்க் லோன் ஒண்ணு அப்ரூவல் ஆகி இருக்கு.. நீங்க வந்தா… அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம்”

“எங்க அம்மாவா? அவங்க எந்த லோனுக்கும் அப்ளை செஞ்சு இருக்க மாட்டாங்களே…” என்று மறுமுனை கொஞ்சம் சந்தேகமாக இழுக்க…

ராஜா சுதாரித்தான்.

“நீங்க இப்பவே கிளம்பி பேங்குக்கு வாங்க மேடம்… இல்லேன்னா எங்கே வரணும்னு சொல்லுங்க நான் வர்றேன்”அவளால் இப்பொழுது வர முடியாது என்று தெரிந்து கொண்டே சொன்னான்.

“சார் நான் இப்போ பெங்களூரில் இருக்கேன். உடனே வர முடியாது. அடுத்த வாரம் ஊருக்கு வருவேன். அப்போ பேசிக்கலாம். நீங்க எந்த பேங்க், எந்த பிராஞ்ச்?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்க..

“நா… நான் XXXXX பேங்க்… திருச்சி பிரான்ஞ்ச்…”

“சரி நான் அடுத்த வாரம் அம்மாவோட அங்கே வர்றேன்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே போனை கட் செய்தான் ராஜா.

‘வாய்க்கு வந்த பேங்க் பேரையும், பிரான்ஞ்சையும் சொல்லிட்டேன். இந்த பொண்ணு பேசுறதைப் பார்த்தா… அடுத்த வாரம் கண்டிப்பா அங்கே போய் விசாரிக்கும் போலவே…

அங்கே போனா நான் சொன்னதெல்லாம் பொய்ன்னு தெரிஞ்சுடுமே… அப்புறம் என்னாகுமோ? இந்த போன் நம்பரை போலீசில் கொடுத்து கம்ப்ளைன்ட் செஞ்சிடுமோ’ என்றெல்லாம் எண்ணம் தோன்ற… பயத்தில் போனை அப்படியே பக்கத்தில் இருந்த சாக்கடையில் போட்டு விட்டு வீடு நோக்கிப் போனான்.

அதே நேரம் சந்திரன் தன்னுடைய போனில் ராஜா அனுப்பிய எண்ணுக்கு முயற்சி செய்ய… முதல் ரிங்லேயே எடுக்கப்பட்டது.

“ஹலோ.. ஹலோ.. யார் பேசுறது?” பரபரப்பாக கேள்விகளை கேட்டான் சந்திரன்.

“….”

“பேசுங்க… ப்ளீஸ்!… தயவு செஞ்சு பேசுங்க…”

“பேசணுமா?” ஆழ்ந்து ஒலித்தது  அந்த அமானுஷ்ய குரல்…

“நீ.. நீ…”தொண்டையில் இருந்து வார்த்தைகள் வெளிவராமல் சந்திரன் உறை நிலைக்கு செல்ல… போனின் மறுமுனையில் அந்த குரலுக்கு சொந்தக்காரியின் சிரிப்பு சத்தம் கேட்டது.

பேய் சிரிப்பு…

அமானுஷ்யம் கலந்த சிரிப்பு…

உயிரை உறைய வைக்கும் சிரிப்பு…

அந்த சிரிப்பில் விரவி இருந்த வன்மம் தாங்க முடியாமல் சந்திரன் அலற… அவளது சிரிப்புச் சத்தம் போனை தாண்டியும் அவன் காதுகளை தீண்டி.. அவனது காது சவ்வுகளை கிழித்தது. ரத்தம் வழியும் காதுகளோடும் , நடுங்கும் கரங்களுடன்  போனை பயத்துடன் பார்த்தான் சந்திரன்.

மொபைல் திரையில் அவனுக்கு ஏற்கனவே அறிமுகமான அதே வெள்ளை கருவிழிகளுக்கு சொந்தக்காரி விழிப்படலம் முழுவதும் ரத்தத்தால் நிறைய ,அதே கண்களுடன்  அவனைப் பார்த்து சிரிக்க… போனை விட்டெறிந்தான் சந்திரன்.

சத்தம் கேட்டு அருகே வந்த அனு  கணவனின் நிலை கண்டு அதிர்ச்சிக்குள்ளானாள் .

மோகினி வருவாள்…

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 2 Average: 4.5]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here