Arooba Mohini Final 2

0
421

நடந்தது அத்தனையும் கேட்ட சந்திரன் அதிர்ச்சியில் பேச வார்த்தைகள் கூட வராமல் தந்தையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 என்னை காதலித்ததை தவிர வேறு எந்த குற்றத்தையும் செய்யாத அந்த பெண்ணிற்கு இப்படி ஒரு தண்டனை தரத் துணிந்த தந்தையை அவன் பார்த்த பார்வையில் இருந்த வெறுப்பு ராமனுக்கு அந்த ஜென்மத்தில் மறக்காது. ஒரு அருவருப்பான ஜந்துவை பார்ப்பது போல தந்தையை பார்த்து வைத்தான்.

“ ஏன்பா இப்படி செஞ்சீங்க? அந்த பொண்ணு என்னப்பா தப்பு செஞ்சா? எனக்கு பணக்கார வாழ்க்கை எல்லாம் வேண்டாம்.. எனக்கு சந்தோஷமா.. நிம்மதியான வாழ்க்கை தான் வேணும். நீங்க கல்யாணம் பண்ணி வச்சீங்களே அவ கூட இந்த ஆறு மாசத்தில்  ஒரு நாள் கூட நான்  மனசு ஒத்து வாழலை.  கல்யாணம் ஆனதிலிருந்து அவ என்மேல வெறுப்பா தான் இருந்தா.

வீட்டோட மாப்பிளையா வந்த என்னை அவளுக்கு பிடிக்கலை.  என்னோட மனசுலயும் மோகினி பத்தின விஷயம் உறுத்திட்டே இருந்துச்சு…அதனால தான் நானும் அனுவை விட்டு விலகியே இருந்தேன். என்னை காதலிச்சதா சொன்ன பொண்ணு அடுத்த நாளே வேற யார் கூடவோ ஓடிப் போனதா சொன்னதை என்னால நம்ப முடியலை.

அதுக்காக எனக்கு மோகினி மேல காதல் எல்லாம் இல்லை… ஒருவேளை நான் கல்யாணம் செஞ்சுக்க மறுத்ததால அவ தற்கொலை எதுவும் செஞ்சுகிட்டாளோனு பயந்தேன். அந்த பொண்ணோட சாவுக்கு நான் காரணமா இருந்துட்டேனோனு குற்ற உணர்ச்சியில் தவிச்சேன். அதனால தான் அனுவை தள்ளி வச்சேன்.

ஆனால் நடுவுல எனக்கு அடிபட்டப்போ அவ துடிச்சதுல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா என் மனசு அவ  பக்கம் போக ஆரம்பிச்சுடுச்சு.  அது எல்லாத்தையும் தாண்டி அவளுக்கு ஆபத்துன்னு தெரிஞ்சப்போ  என் மனசு துடிச்ச துடிப்பில் தான்பா அவ மேல நான் எந்த அளவுக்கு உயிரையே வச்சிருக்கேன்னு எனக்கு தெரிஞ்சது.  

ஆனால் எனக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது ஏன் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தீங்க?” என்று சரமாரியாக கேள்விகளை கேட்டான் சந்திரன்.

“ இல்ல தம்பி சின்ன வயசுல இருந்து எனக்கு சரியான வருமானம் இல்லை. என்னால உன்னை படிக்க வைக்க முடிஞ்சது… மூணு வேளை சோறு போட முடிஞ்சுது. அதைத் தாண்டி உனக்குன்னு எந்த சொத்தையும் என்னால சேர்த்து வைக்க முடியல .உனக்காக ஏதாவது செய்யணும் அப்படின்னு தோணுச்சு. ஒரு பணக்கார இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டா நீயாவது என்னை மாதிரி பணத்தை பத்தி கவலை இல்லாமல் சந்தோஷமாக நிம்மதியாக குடும்பத்தை நடத்துவன்னு நினைச்சேன். “

“ஆனா அதுக்காக ஒரு பொண்ணோட உயிரை பலி கொடுத்து இருக்கீங்களேப்பா அது தப்பில்லையா?” என்று மோகினிக்காக தந்தையிடம் வாதாட அவர்கள் இருவரையும் பேச்சுக்களையும் அசுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தாள் மோகினி.

 “டேய் சந்திரா… எனக்கு என்னடா தெரியும் இப்படி ஆகும்னு… நான் ஒண்ணும் இந்த  மோகினியை  கொல்ல  சொல்லி சொல்லலைடா. அவளை அடித்து மிரட்டி பயமுறுத்தி உன் கல்யாணம் முடியற வரைக்கும் உன் கண்ணில் படக்கூடாதுனு மட்டும் தான் நினைச்சேன். அவளை கொல்லுற அளவிற்கு நான் மனசாட்சி இல்லாதவன் இல்லடா” என்று கெஞ்சினார்.

 “உங்களை விட  மனசாட்சி இல்லாத மிருகங்க நிறைய பேர் இந்த உலகத்தில் இருக்காங்களே… அவங்களுக்கு நீங்க வழி காட்டி இருக்கீங்க. அவளை மிரட்டுறதுக்கு நீங்க  தாமோதரன் வீட்டுக்கு போகாமல் இருந்திருந்தால்  அவளுடைய கண்ணை திருடலாம்னு நினைக்கிற எண்ணம்  அவருக்குள்ள வந்திருக்காது. அவளோட மானமும் போய் இருக்காது. அவள் உடம்பிலிருந்த எல்லா உறுப்புகளையும் திருடிட்டு  அவளை புதைச்சு இருக்காங்க. இது எல்லாத்துக்கும் காரணம் உங்களோட பேராசை தான்” என்று தந்தையை சாடினான் சந்திரன்.

“இல்ல சந்திரா… நான் வேணும்னு எதையும் செய்யலை”

“என்ன சொல்லி என்னப்பா… மோகினியோட உயிர் போறதற்கு முக்கியமான காரணம் நீங்க தான். அதை உங்களால் மறுக்க முடியாது. மோகினியோ இல்லை என்னையோ கூப்பிட்டு வச்சு பேசி இருந்தா  கூட இந்த விஷயம் சாதாரணமா  முடிஞ்சிருக்கும்.” என்று சொல்ல ராமன் வேகமாக மறுத்துப் பேசினார்.

“ இல்லடா மோகினியை  நீ முதல்ல பார்த்தப்போ அவ உன்கிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் தான் பேசி இருப்பான்னு சொன்ன… அந்த அஞ்சு நிமிஷத்துக்கு அவ கண்ணுல இருந்த காதலை பார்த்துட்டு அவளைப் பத்தியே தொடர்ந்து புலம்பினவன் நீ… உன்கிட்டே  அவளை நான் வேண்டாம்னு சொல்லி இருந்தா நீ ஒத்துக்க மாட்டேன்னு நினைச்சேன். அதனாலதான் கொஞ்ச நாள் உன்னோட  கல்யாணம் முடியற  வரைக்கும் அவளை கொஞ்சம் உன் கண்ணுல படாம  மறைச்சு வச்சா நீ அவளை மறந்துட்டு நான் பார்த்து வச்ச அனுவை  கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்ப… எல்லாமே உன் நல்லதுக்கு தான்டா செஞ்சேன்” என்று மன்றாடினார்.

“வேண்டாம்பா… எனக்கு எதுவுமே வேண்டாம். மோகினி , கணேசன், டாக்டர் தாமோதரன் இவங்க எல்லாரோட மரணத்துக்கும் நீங்கதான் காரணம்” என்று குற்றம் சாட்ட  பதில் பேச முடியாமல் மௌனமானார் ராமன்.

சந்திரனுக்கு தெரிய வேண்டிய உண்மைகள் தெரிய வந்ததும்  அந்த கட்டத்தில் அனுவின் உடலில் இருந்து மோகினி வெளியேற அனு அப்படியே மயங்கி விழுந்தாள். மோகினி காற்றில் அலைந்தபடியே சந்திரனிடம் பேசத் தொடங்கினாள்.

“என்னோட சாவுக்குக் காரணமான எல்லாரையும் நான் கொன்னுட்டேன். மிச்சம் இருக்கிறது நீயும் உங்க அப்பனும் தான். இப்போ சொல்லு… உங்க ரெண்டு பேரில் யாரை முதலில் கொல்லட்டும்”

“…”

“மோகினி உன்னோட சாவில் எனக்கு எந்த பங்கும் இல்லையே…”

“பொய் சொல்லாதே… என்னோட சாவில் எல்லாருக்கும் பங்கு இருக்கு…

நம்பி வந்த பொண்ணை ஏமாத்தின அந்த கணேசன்….

மகனுக்கு பணக்கார சம்பந்தம் கிடைக்கணும்னு ஆசைப்பட்டு எதுவுமே தெரியாம என்னை அடிச்சு… கை, காலை முறிக்க சொன்ன உன்னோட அப்பா…

நிராதரவான ஒரு பொண்ணு கிடைச்சதும் அவளை காப்பாத்த வேண்டிய டாக்டர் அவளை வச்சு தன்னோட இச்சையை தீர்த்துக்கிட்டதோட மட்டும் இல்லாம… என் உடம்பில் இருக்கிற எல்லா பாகத்தையும் திருடிட்டு என்னை புதைக்க சொன்ன அந்த தாமோதரன்.

கல்யாணம் பண்ணிக்கறேன்னு நம்ப வச்சு  அத்தனை  பணத்தை வாங்கிட்டு ஏமாத்தின நீ” என்று சந்திரனை குற்றம் சாட்ட… சந்திரன் திகைத்து நின்றான்.

“நான் எந்த பணமும் வாங்கலையே…”

“பொய் சொல்லாதே… அந்த கணேசன் மூலமா  நீ பணம் வாங்கலை”

“இல்லம்மா… என் பையன் எந்த பணமும் வாங்கலை.. பணத்தை வாங்கிட்டு உன்னை ஏமாத்தினது அந்த கணேசன். அதைப் பத்தி எதுவுமே அவனுக்குத் தெரியாது.” என்று ராமன் இடையில் புகுந்து மகனுக்காக வக்காலத்து வாங்க… மோகினி கொதிப்புற்றாள்.

“சாகப் போற கடைசி நிமிஷத்தில் கூட மகனை காப்பத்தணும்னு துடிக்கறியா?”

“இல்லம்மா… நிஜமாத் தான் சொல்றேன்… அந்த கணேசன் பய என்கிட்டே இதெல்லாம் சொல்லி இருக்கான். உண்மையில் உன்கிட்டே பணத்தை வாங்கி ஏமாத்தினது அவன் தான். என் பையனுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த கணேசன் பயலோட பணத் தேவைக்கு உன்னை அவன் பயன்படுத்திக் கொண்டான். கடைசியில் உன்னோட பிணத்தில் இருந்த செயினை கூட எடுத்துக்கிட்டு அடகு வைக்கப் போகும்போது என்கிட்டே  வசமா மாட்டிக்கிட்டான்.

அந்த செயின் இப்போ கூட என்கிட்டே தான் இருக்கு.. அப்பப்போ என்கிட்டே வந்து பணம் வாங்கிட்டுப் போவான்… கடைசியா அவன் வந்து என்னைப் பார்த்தப்போ கூட உன் பேரை சொல்லி மிரட்டி என்கிட்டே கோடிக்கணக்கில் பணம் கேட்டான்.

நானும் அவனுக்கு பயந்து பயந்து எத்தனை நாள் தான் வாழுறது? இந்த முறை போலீசில் நடந்த எல்லாத்தையும் சொல்லி நானே சரண்டர் ஆகிடலாம்னு தான் நினைச்சேன்.ஆனா அதுக்குள்ளே…”

“ஹ… இதை நான் நம்பணும்னு நீ எதிர்பார்க்கறியா? உன்னோட வம்சத்தை காப்பாத்திக்க நீ சொல்ற பொய்யா தான் எனக்குத் தெரியுது” மோகினியின் குரலில் கோபம் கொப்பளித்தது.

“நான் சொல்றதை நம்பு மோகினி…”

“நீ சொல்லி எதையும் கேட்கும் இடத்தில் நான் இல்லை… உன்னை நியாயப்படுத்திக்கிற அளவுக்கு  உன்கிட்டே நேர்மையும் இல்லை…”மோகினியின் வார்த்தைகள் சாட்டையாய் சுழன்றது.

“ஐயோ… இப்போ நான் எப்படித் தான் உனக்கு உண்மையை புரிய வைக்கிறது? செத்துப்போன கணேசனா வந்து சாட்சி சொல்ல முடியும்?”

“செத்துப்போன கணேசன் வர வேண்டாம்… உயிரோட இருக்கிற மோகினி வந்து சொல்லட்டும்…நான் நம்புறேன்”

“நீ தான் செத்துட்டியே…”என்றார் ராமன் குழப்பமாக…

“நான் செத்துட்டேன் தான்… நான் சொல்றது உயிரோட இருக்கிற… உன் பையனை காதலிச்ச மோகினியை” என்றவள் கூறிய வார்த்தையின் பொருள் விளங்காமல் சந்திரனும்,ராமனும் சில நொடிகள்  ஒருவரையொருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.

பொருள் புரிந்த பின்னரோ அவர்கள் இருவரின் இதயமும் ஒரு நிமிடம் தனது இயக்கத்தையே நிறுத்தி விட்டது.

“நீ… நீ… என்ன சொல்ற மோகினி?” என்று சந்திரன் உச்சபட்ச அதிர்ச்சியுடன் கேட்க… அந்த தோப்பில் புகை மூட்டத்தின் நடுவே  புதிதாக ஒரு உருவம் உள்ளே வந்தது.  

“அதை நான் சொல்றேன் சந்திரன்” குரலுக்கு சொந்தக்காரி  மோகினி… சந்திரனையும் அவனை சுற்றி இருப்பவர்களை எல்லாம் பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் ஆவியின் உடன் பிறந்தவள்.

‘இவளுக்கு இங்கே என்ன வேலை? இவளுக்கு எப்படி இந்த இடம் தெரியும்? இவள் முகம் அன்றைய தினத்தைப் போலவே உணர்ச்சிகள் துடைத்து மரத்துப் போய் இருப்பது எதனால்? இவளுக்கு எல்லா உண்மைகளும் முன்னமே தெரியும் எனில் இத்தனை நாள் அமைதி காத்தது எதனால்?’ வரிசையாக கேள்விகள் சந்திரனின் மண்டைக்குள் குடைய… வந்தவள் பேசத் தொடங்கினாள்.

“என்ன தலை சுத்துதா?”

“…”

“உன் அப்பனோட பேராசைக்கு பலியாக வேண்டிய மோகினி நான் தான்… பாவம்.. அநியாயமா என் தங்கச்சி பலியாகிட்டா…” என்று கதற… இப்பொழுது அதிர்வது ராமனின் முறையானது.

‘என்ன சொல்றா இந்த பொண்ணு’

“புரியலையா?… அன்னிக்கு கணேசன் வந்து கூப்பிட்டப்போ அவன் கூட போனது உன்னை காதலிச்ச நான் இல்லை… என்னோட காதலை உனக்குப் புரியவச்சு நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறதா சொல்லிட்டு கிளம்பிப் போன என்னோட தங்கச்சி ஜீவ மோகினி” என்று அந்த தோப்பே அதிரும்படி கத்தியவள் அந்த உணர்வு கொடுத்த  வலி தாங்காமல் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அழத் தொடங்கினாள்.

அவளின் அழுகையில் அந்த தோப்பே அதிர்ந்தது.

‘எத்தனை பெரிய பாவத்தை செய்து விட்டேன்’ ராமன் தலையில் அடித்துக் கொண்டு கதறினார்.

‘மகனின் வளமான வாழ்வுக்கு தடையாக இருந்ததால் தான் அவளுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட நான் காரணமாகி விட்டேன்  என்று  இதுநாள் வரை மோகினியின் இறப்பிற்கு தானும் ஒரு காரணமாக இருந்ததற்கு அவரிடம் ஒரு சப்பைக்கட்டு இருந்தது. ஆனால் இப்பொழுதோ எல்லாமே தலைகீழாகி விட்டதே…

அக்காவுக்காக பேச வந்த தங்கையையா நான் கொன்றேன்! அந்தப் பெண்ணை ஒரு வார்த்தை கூட பேச விடவில்லையே… கடவுளே!’ என்று வருந்தியவருக்கு தான் செய்து இருக்கும் தவறின் அளவு இமாலய மலையையும் தாண்டியதாய் இருப்பதை உணர முடிந்தது. தன்னைத்தானே தண்டித்துக் கொள்ள முயன்றவர் ஆவேசத்துடன் அருகில் இருந்த மரத்தின் கிளையை ஒடித்து தன்னுடைய கழுத்தில் சொருகி உயிரை மாய்த்துக் கொள்ள முனைய… நொடிபொழுதில் அதை தடுத்து நிறுத்தினாள் ஜீவ மோகினி.

“மரணம்கிறது உன்னை மாதிரி ஆளுக்கு ஒரு நிமிஷ தண்டனை…உன்னோட முட்டாள் தனத்தால சம்பந்தமேயில்லாமல் என்னோட உயிர் போய்டுச்சு… சட்டுன்னு உன்னோட உயிரை எடுக்கிறதா இருந்தா நான் எப்பவோ செஞ்சு இருப்பேன். ஆனா எனக்கு வேண்டியது அது இல்லை.. உனக்கு கிடைக்கப் போற தண்டனையோட அளவு பெருசா இருக்கணும்.”என்று உக்கிரமாக பேசியவளுக்கு மறுமொழி சொல்லக் கூட யாருமே முன் வரவில்லை.

ஜீவ மோகினியின் இறப்பிற்கு காரணமான அனைவருமே தண்டிக்கப் பட வேண்டியவர்கள் தான் என்பது அங்கிருந்த எல்லாருக்கும் புரிந்தது. மோகினியின் மரணத்திற்கு தான் காரணமில்லை என்று அதுவரை வாதாடிக் கொண்டிருந்த சந்திரன் கூட இப்பொழுது தனக்கு கிடைக்கப் போகும் தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாரானான்.

“என் தங்கச்சியை அனுப்பி வச்சுட்டு அவ திரும்பி வரும் பொழுது சந்திரனையும் கூட்டிட்டு வந்து எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பானு நான் கனவு கண்டுக்கிட்டு இருந்தேன். ஆனா அவ வரலை… கூட்டிட்டு போன கணேசனோ அவ காதலனோட ஓடிப் போயிட்டான்னு சொல்றான்… ஆனா அது எப்படி சாத்தியம்?

சந்திரனை காதலிச்சவ நான் தானே… இதுல ஏதோ பிரச்சினை இருக்குனு புரிஞ்சது… ஒருவேளை எனக்காக எதுவும் உதவி செய்யறதுக்காக ஜீவ மோகினி சந்திரன் கூட போய் இருப்பானு தான் நானும் நினைச்சேன். ஒரு நாளில் அவ திரும்பிடுவானு நினைச்சேன். ஆனா அவ வரலை. மத்தவங்களுக்குத் தெரியாம அவளை தேட ஆரம்பிச்சேன்… அவளோட போன் சுவிட்ச் ஆப்(switch off) ஆகி இருந்தது.

ஒருவேளை சந்திரனை சேர்ந்தவங்களுக்கு எதுவும் தெரியுமானு உங்க வீட்டுக்கு வந்து பார்த்தேன்… ஹ… அன்னிக்கு தான் உன் பையனுக்கு கல்யாணம்… யாரை கல்யாணம் செஞ்சுக்கணும்னு ஆசை ஆசையாய் காத்துக்கிட்டு இருந்தேனோ அவனுக்கு வேற ஒரு பொண்ணோட கல்யாணம்… என் நெஞ்சே வெடிச்ச மாதிரி இருந்துச்சு.

எனக்கு வந்த ஆத்திரத்துக்கு உன் கல்யாணத்தை உடனே நிறுத்தணும்னு நினைச்சேன்.ஆனா அப்போ என் கண்ணுக்கு என்னோட காதல் தெரியலை. பிறந்ததில் இருந்தே என் கூடவே இருந்த என் தங்கச்சி மட்டும் தான் தெரிஞ்சா.

என் தங்கச்சி என்ன ஆனாள்னு தேட ஆரம்பிச்சேன்… இருட்டில் கறுப்புத் துணியை தேடுற மாதிரி எனக்கு எதுவுமே புரியலை… கணேசன் கிட்டே இருந்தே ஆரம்பிக்கலாம்னு ஒருநாள் அவனை அளவுக்கதிகமா குடிக்க வச்சு… அவன் மூலமா எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்டேன். அப்பவே உண்மை எல்லாத்தையும் போலீசில் சொல்லி உங்க எல்லாரையும் கொல்லணும்னு என் மனசு துடியா துடிச்சது.

ஆனா நான் தான் உன்னை காதலிச்ச மோகினின்னு தெரிஞ்சா என்னை கொல்லவும் நீங்க  தயங்க மாட்டீங்கனு எனக்குத் தெரியும். என்ன செய்யலாம்னு ராத்திரியும் பகலுமா யோசிச்சேன்… அப்போ தான் எனக்குத் தெரிஞ்சவங்க மூலமா ஆவிகளோட பேசுற மந்திரவாதியை தேடிப் போய் சாந்தி இல்லாம அலைஞ்சுக்கிட்டு இருந்த மோகினியோட ஆவியை வரவழைச்சுப் பேசினேன்.

நான்னு நினைச்சு நீங்க எல்லாரும் சேர்ந்து அவளுக்கு செஞ்ச கொடுமையையும்… அதுக்கு காரணமா இருந்த வெறி பிடிச்ச மிருங்கங்களையும் தெரிஞ்சுக்கிட்டேன். உங்க எல்லாரையும் பழி வாங்கணும்னு முடிவு செஞ்சு நான் தான் அவளை வரவழைச்சேன்”என்றவளின் கண்கள் இரை தேடும் புலியாக பளபளக்க அங்கிருந்த அனைவருமே உறைந்து போனார்கள்.

“அம்மாடி ரூப மோகினி… ஆயிரம் தான் இருந்தாலும் நீ என் பையனை காதலிச்சவ… எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு.. அவனை விட்டுடு மா… வேணும்னா அனுவை விவாகரத்து செஞ்சுட்டு அவனை உனக்கே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்று ராமன் கெஞ்சினார்.

“சீ” என்ற ஒற்றை வார்த்தையில் தன்னுடைய வெறுப்பு,உதாசீனம் எல்லாவற்றையும் ஒன்றாக காட்டினாள் ரூப மோகினி.

“என்னோட தங்கச்சிக்கு சாவுக்கு காரணமானவன்னு என்னிக்கு தெரிஞ்சதோ அப்பவே இவன் மேல வச்சு இருந்த காதலை நான் துடைச்சு எறிஞ்சுட்டேன். இப்போ எனக்குள்ளே இருக்கிறது முழுக்க பழி வாங்குற வெறி மட்டும் தான். என்னோட தங்கச்சியின் உயிர் போனதுக்கு காரணமா இருந்த எல்லாருமே தண்டனையை அனுபவிச்சு தான் ஆகணும்” என்று குரலை உயர்த்த… அதுநேரம் வரை மயக்கத்தில் இருந்து விழித்த  அனு இவர்களின் பேச்சை கேட்டு விட்டு ஒரு முடிவுக்கு வந்தவளாக பேசத் தொடங்கினாள்.

“உன் தங்கச்சியோட சாவுக்கு காரணமான எல்லாரையும் பழி வாங்கணும்னு நினைச்சா உன்னோட உயிரையும் தான் இழக்க வேண்டி இருக்கும்” என்றவளின் குரலில் அங்கிருந்த எல்லாருமே அதிர்ந்து போனார்கள்.

மருமகளுக்கு உண்மை தெரிந்து போனதால் அவமானத்துடன் தலையை குனிந்து கொண்டார் ராமன். சந்திரனுக்கோ மனைவியின் முகத்தை விட்டு பார்வையை நகர்த்தக் கூட விரும்பாமல் அவளையே விழிகளால் பருகிக் கொண்டிருந்தான்.

‘இன்றோடு தன்னுடைய வாழ்நாள் முடிந்து விட்டால் அதன் பின் அவளை பார்க்க முடியாதே…’

“என்ன உளறுறே?” ரூப மோகினி ஆவேசம் கொள்ள அனுவோ அமைதியாய் எதிர்கொண்டாள்.

“அவளோட சாவுக்கு முதல் காரணம் நீ தான்… ஒருவேளை அன்னிக்கு நீ வந்து இருந்தா… இந்நேரம் உன்னோட தங்கச்சி உயிரோட இருந்து இருப்பா… நீ அவரை காதலிச்சது கூட தெரியாம… உனக்காக தன்னோட அப்பாகிட்டே பேசினது என்னோட கணவர் செஞ்ச குற்றம்னா உனக்கு பதிலா அவளை அனுப்பினது மட்டும் குற்றம் இல்லையா?” என்ற அனுவின் ஆணித்தரமான கேள்வியில் மோகினிகள் இருவருமே வாயடைத்துப் போனார்கள்.

“எனக்கு இவளை கொல்லப் போறாங்கனு தெரியாதே… அதுவும் இல்லாம இவ தான் வலிய வந்து உனக்காக நான் பேசி உன்னோட காதலனோட சேர்த்து வைக்கிறேன்னு கிளம்பினா”

“அப்படித் தானே… என்னோட கணவருக்கும் மற்றவங்க உன்னைக் கொல்லப் போறாங்கனு தெரியாதே… அவருக்கு மட்டும் நீ எப்படி தண்டனையை கொடுக்கலாம்? உன் தங்கச்சி உனக்காக உயிரை விட்டதுக்கு என் கணவர் ஏன் உயிரை விடணும்? அப்படி அவர் உயிரை எடுத்து தான் தீருவதுன்னு முடிவு செஞ்சா உன் உயிரையும் சேர்த்து தான் இழக்கணும்.. அப்போ தான் உன் தங்கச்சியின் சாவுக்கு முழுமையாக நியாயம் கிடைக்கும்” என்றவளின் பேச்சில் இருந்த உண்மை சகோதரிகள் இருவரையும் சிந்திக்க வைத்தது.

“உன் புருஷனை காப்பாத்த பார்க்கறியா?”

“இல்லை… உங்க தங்கச்சியோட சாவுக்கு முழுமையான நியாயம் கிடைக்கணும்னு சொல்றேன்” தங்கையை இழந்த ரூப மோகினியும், கணவனை இழந்து விடக் கூடாதே என்ற எண்ணத்தில் அனுவும் ஒருவரையொருவர் எதிர்கொண்டார்கள். அனுவின் பேச்சை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாமலும், மறுக்க முடியாமலும் ரூப மோகினி திண்டாட… இறந்து ஆவியான தமக்கை அவளை சமாதானம் செய்தாள்.

“அக்கா… நீ ஏன் கலங்குற… நீ என்ன நான் சாகப் போறேன்னு தெரிஞ்சா அனுப்பி வைச்ச… இந்த பாவிங்க செஞ்ச தப்புக்கு உன்னை ஏன் வருத்திக்கிற?”

“இல்லை… இந்த அனு சொல்வது ஒரு விதத்தில் நியாயம் தானே?” ரூப மோகினியின் குரல் தழுதழுத்தது.

“அக்கா… அவ புருஷனை காப்பத்தணும்னு உன்னை குழப்பி விடுறா.. அம்மாவைப் பத்தி யோசிச்சு பாருக்கா… ஏற்கனவே அவங்க ஒரு பெண்ணை பறி கொடுத்தாச்சு… அடுத்து நீயும் இல்லாம போனா அவங்களால தாங்க முடியாது.”

“உங்க அக்கா இல்லாம போனா உன்னோட அம்மா கஷ்டப்படுவாங்க… அதே மாதிரி என்னோட புருஷன் இல்லன்னா நானும் தானே கஷ்டப்படுவேன்” கணவனுக்காக களத்தில் இறங்கி வாதாடினாள் அனு. சந்திரன் அவள் தனக்காக பரிந்து கொண்டு பேசுவதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

தங்கையின் இறப்பிற்கு தானும் ஒரு காரணமோ என்ற குழப்பத்தின் காரணமாக ரூப மோகினியால் ஆரம்பத்தில் இருந்ததைப் போல ஆக்ரோஷத்துடன் வாதிட முடியவில்லை. அவளது மனம் தளரத் தொடங்கியதை உணர்ந்த அனு தொடர்ந்து கணவனுக்கு ஆதரவாக பேசினாள்.

மருமகள் மகனை காப்பாற்ற போராடிக் கொண்டிருப்பதை உணர்ந்த ராமன் தானும் பேசினார்.

“நடந்த குற்றத்தில் என் மகனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை மோகினி… தப்பு செஞ்சது எல்லாமே நான் தான்… என் உயிரை எடுத்துக்கோ… அவனை விட்டுடு… அவன் வாழ வேண்டியவன்… தப்பே செய்யாத ஒரு நல்லவன் உயிரை விட்டா அப்புறம் உன்னை மாதிரி தானே அவனும் ஆவியா சுத்துவான். எனக்காக பார்க்க வேண்டாம்… நியாய தர்மத்தை நீயே யோசிச்சுப் பாரு” கெஞ்சினார் ராமன்.

“எனக்கும் இதுல பங்கு இருக்குனு நீ சொல்றதை மறுக்க முடியாது தான்.ஆனா அந்த ஒரு காரணத்துக்காகவே உன் புருஷனையும், மாமனாரையும் இங்கே இருந்து உயிரோட அனுப்புவோம்ன்னு நினைக்கறியா?”

“இல்லம்மா… எனக்கு உயிர் வாழும் ஆசை இல்லை… என் பையனை வாழ விடுங்க அது போதும்…”

“உனக்கான தண்டனை மரணம் மட்டும் கிடையாது”

“என் பையனோட உயிரைத் தவிர வேற எதைக் கேட்டாலும் நான் தர தயாரா இருக்கேன்”

“நான் கேட்பதை செய்ய வேண்டியவன் நீ இல்லை… உன் பையன்…”

“எதுவா இருந்தாலும் அவன் செய்வான் மோகினி.. நீ சொல்லு” வேகமாக வாக்களிக்க… அவரைப் பார்த்து சிரித்தாள் ஜீவ மோகினி.

“அவசரப்பட்டு வாக்கு கொடுத்துட்டியே”

“என் பையனோட உயிருக்கு இணையா எதையும் தர நான் தயாரா இருக்கேன்.நான் சொன்னா அவன் மீற மாட்டான்”

“சரி … உன் உயிரை எடுத்துக்கிறேன்… எனக்கு உன் பையனோட உயிர் வேண்டாம்… அதுக்கு பதிலா…”

“சொல்லு மோகினி” “நீ அவனுக்கு தகப்பன் அப்படிங்கிறதையே அவன் மறந்துடணும்… புரியலையா? நீ செத்த பிறகு… உனக்கு கொள்ளி வைக்கிறதில் இருந்து கருமாதி ,திதி இப்படி எதையுமே அவன் செய்யக் கூடாது. நீயும் என்னை மாதிரியே ஆவியா சுத்தணும். ஆவியா மாறின பிறகும் கூட எனக்கு அடிமையா தான் இருக்கணும். இப்போ தாமோதரனும்,கணேசனும் இருக்காங்களே அதே மாதிரி…சம்மதமா?” என்றவளின் கேள்வியில் ராமன் வாயடைத்துப் போனார்.

“மோகினி… அது…”

“நீ செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிக்க இது ஒண்ணு தான் வழி… என்னைப் போலவே நீயும் ஆவியா அலையணும். உன்னோட வம்சத்தில் பிறந்தவங்க யாரும் உனக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்யலைன்னா நீயும் என்னை மாதிரியே சாந்திக்கும் போக முடியாம இங்கேயே அலைஞ்சுட்டு இருப்ப இல்லையா… எனக்கு அது தான் வேணும்” என்றவளின் கோபாவேசமான குரல் அந்த தோப்பு முழுக்க எதிரொலிக்க… அந்த குரலுக்கு பணிவதைத் தவிர அங்கிருந்த யாருக்கும் வேறு வழி தெரியவில்லை. சந்திரனின் கண்கள் பரிதவிப்புடன் தந்தையை பார்த்துக் கொண்டிருந்தது.

அதை கவனிக்காதவள் போல ஜீவ மோகினி  காற்றில் அலைந்த படியே பேசினாள்.

“சந்திரா உன் மனைவியோட புத்திசாலிதனத்தால மட்டும் தான் இன்னிக்கு உனக்கு உயிர் வாழுற வாய்ப்பு கிடைச்சு இருக்கு. ஒரு விஷயம் நல்லா நியாபகம் வச்சுக்க… இங்கே நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் மறந்துட்டு தான் நீ இந்த இடத்தை விட்டு வெளியே போகணும்… மீறி வெளியே யார் கிட்டயும் சொன்னா… அதுக்கு அப்புறம் உன்னோட உயிர் உனக்கு சொந்தமில்லை”

“இல்ல ஜீவ மோகினி… நாங்க யார் கிட்டயும் சொல்ல மாட்டோம்” அவனை முந்திக் கொண்டு வாக்கு கொடுத்தாள் அனு.

“இனி உங்க அப்பன் முகத்தில் கூட நீ முழிக்கக் கூடாது… அவனோட போட்டோ கூட  உன் வீட்டில் இருக்கக் கூடாது. அவனோட பொருள் ஒண்ணு விடாம எல்லாத்தையும் கொளுத்தி இருக்கணும்.” என்று கட்டளையிட்ட  ஜீவ மோகினி ராமன் இருந்த இடத்தைப் பார்த்தாள்.

அவரை புகை மண்டலம் சூழ்ந்து கொண்டது. சில நொடிகளுக்குப் பிறகு  ராமன் இருந்த அந்த இடம் காலியாக இருந்தது.

“என்னோட மனசு மாறுவதற்கு முன்னாடி உன் புருஷனை அழைச்சுக்கிட்டு இங்கிருந்து கிளம்பிடு… என் கண் பார்வையிலேயே படாம எங்கேயாவது போய்டுங்க”என்ற ரூப மோகினியின் குரலில் இருந்த ஆத்திரத்தை உணர்ந்தவர்கள் எதுவுமே பேசாமல் ஒருவர் கையை மற்றவர்கள் பற்றியபடி அங்கிருந்து வேகமாக வெளியேறினார்கள்.

இணைந்திருந்த அவர்களின் கைகளையே வெறுமையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ரூப மோகினி.

“சந்திரனை இழந்துட்டதா வருத்தப்படறியா ரூபா?”

“இல்லை ஜீவா… என்னை காதலிக்கவே இல்லாதவனுக்காக என் மேல உயிரையே வச்சு இருந்த என் தங்கையை இழந்துட்டேன்னு தான் கஷ்டமா இருக்கு”

“என் விதி.. அதுக்கு உன் மேலே ஏன் பழியைப் போட்டுக்கிற?… அம்மாவுக்கு கடைசி வரை இந்த உண்மை எதுவும் தெரியாம பார்த்துக்கோ அக்கா… தெரிஞ்சா அவங்க தாங்க மாட்டாங்க”

“…”

“நீ இப்படியே தனிமரமாய் இருந்தா அம்மாவுக்கு சந்தேகம் வரும் ரூபா… சீக்கிரமே கல்யாணம் செஞ்சுக்கோ”

“ஹ… கல்யாணமா? எனக்கா?” கசந்து வழிந்தது அவள் குரல்.

“அம்மாவுக்காக ரூபா… அவங்களைப் பொறுத்தவரை ரூப மோகினி தானே அரூபமாகி இருக்கா… ஜீவ மோகினியோட வாழ்க்கையை நீ வாழு… எனக்கும் சேர்த்து நூறு வயசு சந்தோசமா வாழு” என்று சொன்னவள் சிரித்தபடியே மறைந்து விட்டாள்.

தோப்பின் வாசலில் அவர்களுக்காக காத்திருந்த ராஜா, முனியன், அனுவின் பெற்றோர்கள் இருவரையும் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

‘உள்ளே என்ன நடந்தது? எப்படி தப்பினீர்கள்?’ என்ற மற்றவர்களின் கேள்விக்கு இருவருமே மௌனத்தையே பரிசாக கொடுத்தார்கள். ராஜாவும் , முனியனும் இருவரையும் கேள்வியாக பார்த்தாலும் மேற்கொண்டு எதையும் கேட்டு அவர்களை தூண்டி துருவவில்லை.

வீட்டினுள் அவர்கள் நுழைந்ததுமே மருத்துவமனையில் இருந்து அவர்களுக்கு அழைப்பு வந்தது. ராமன் இறந்து விட்டதாக… சந்திரன் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்க… போனை வாங்கிப் பேசினாள் அனு.

“என்னோட கணவருக்கு லேசா ஜுரமா இருக்கு… கொரோனாவா இருக்குமோனு சந்தேகமா இருக்கு… ஒருவேளை என்னோட மாமனாருக்கும் கூட பரவி இருக்கலாம். அதனால பாடியை நீங்களே அடக்கம் செஞ்சிடுங்க”

“….”

“சார் என்னோட மாமனார் வெளியூரில் இருந்து இரண்டு நாள் முன்னாடி தான் இங்கே வந்தார். அதுக்கு முன்னாடி இருந்தே என்னோட கணவருக்கு ஜுரம் இருக்கு… என்னோட மாமனாருக்கு பரவி இருந்தாலும் வெளியே தெரிய நாட்கள் ஆகுமே… என் கணவரை நாங்க வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கிறோம்.” என்று சொன்னாள்.

மருத்துவமனையில் அவர்கள் கேட்ட முழு தொகையையும் உடனே செலுத்தி விட… அவர்களும் அனாவசிய கேள்விகள் இன்றி… ராமனின் உடலை ஏற்கனவே கொரோனாவால் இறந்து போன சிலரின் உடலோடு சேர்த்து அடக்கம் செய்தார்கள்.

அனுவின் பெற்றோருக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் ராமனுக்கு கொரோனா என்று மட்டும் சொல்ல… துணிந்து அவரது உடலை கடைசியாகப் பார்க்க யாருமே முன் வரவில்லை. உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர் ராமனின் ஆத்மா அனாதையைப் போல தன்னுடைய இறுதி சடங்கில் யாருமே இல்லாததைப் பார்த்து கதறினார்.

இறுதி மரியாதைகள் கூட எதுவுமே செய்யாமல் குப்பையை தள்ளுவது போல தன்னுடைய உடலை குழிக்குள் தள்ளுவதைப் பார்த்து துடித்தார்.

அவரின் அருகிலேயே நின்று அத்தனையையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இன்னும் சிலர்… தாமோதரன், கணேசன், ஜீவ மோகினி… இறந்த பின்னாலும் கூட மோகினியிடம் இருந்து விடுபட முடியாமல் அவர்கள் இருவரும் கதற… இப்பொழுது ராமனும் மோகினியிடம் சிக்கிக் கொண்டார்.

ஆவிகளின் உலகத்தில் தினமும் இவர்கள் மூவரின் கதறலும், மோகினியின் சிரிப்பு சத்தமும் கேட்ட வண்ணமே இருந்தது. வாழ்நாள் முழுக்க மட்டுமில்லை… வாழ்நாள் முடிந்த பிறகும் கூட அவர்களால் மோகினியிடம் இருந்து தப்ப முடியாமல் போனது. ஜீவ மோகினி கண்களுக்கே தெரியாமல் அரூப மோகினியானதற்கு காரணமான எல்லாரையும் கொன்று தன்னுடைய பகையை தீர்த்துக் கொண்டாள்.

முற்றும்…..            

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 1]
Previous PostArooba Mohini pre final
Next PostSiragilla Devathai 6
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here