A few words about the places where I enjoyed
ஜேடர்பாளையம் ஊர் பெயரை முதன்முதலாக கேட்கும் பொழுது எனக்கு அந்த அளவிற்கு ஈர்ப்பு வரவில்லை. ‘இது என்ன ஊர் பெயர் இப்படி இருக்கிறது… கரடுமுரடாக… என்று நான் நினைத்தது உண்மை. நானும் என்னால் முடிந்த வரை அந்த ஊரின் பெயர் காரணத்தை அறிந்து கொள்ள எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தேன்.
ஆனால் எனக்குத் தெரியவில்லை. சரி நமக்கு வேறு வழியில்லை என்று நினைத்துக் கொண்டு நேராக கூகுளின் காலில் விழுந்து விட்டேன்.ஆனால் பலன் தான் பூஜ்ஜியம்.இதை எல்லாம் எதுக்கு இவ்வளவு விவரமா உங்ககிட்டே சொல்றேன்னா,உங்களில் யாருக்கு என்னோட கேள்விக்கு பதில் தெரியுமோ…அவங்க நல்ல பிள்ளையா வந்து அந்த ஊரோட பேருக்கு என்ன அர்த்தம்னு சொல்லுங்க…
குளித்தலையில் இருந்து சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்தால் நாமக்கல் அருகில் உள்ள ஜேடர்பாளையம் வந்து விடலாம்.பெரியவர்கள் குளித்து விளையாட அணைக்கட்டு,குழந்தைகளுக்கு பூங்கா என்று இரண்டு இடங்கள் இருக்கிறது.பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டு இருக்கும் கொஞ்சம் கூட ஆழமே கிடையாது.என்னுடைய மூன்று வயது மகனின் தோள் வரை தான் ஆழம் இருந்தது.
ஆழம் இல்லை என்று அசால்டாக இருக்க வேண்டாம் மக்களே…தண்ணீரின் வேகம் அதிகம்.அதனால் குழந்தைகளை கையில் பத்திரமாக பிடித்துக் கொள்ளவும்.சரி முக்கியமான விஷயத்திற்கு வருவோம். நம்ம கண்ணு முன்னாடியே அப்பொழுது தான் பிடித்த மீனை எந்த விதத்தில் கேட்டாலும் சமைத்து கொடுத்து விடுவார்கள்.
வறுவல் வேண்டுமென்றாலும் சரி…குழம்பு வேண்டுமென்றாலும் சரி… கிலோவுக்கு இத்தனை ரூபாய் என்று கணக்கு. ஆத்து மீன் ருசிக்கு கேட்கவா வேண்டும்.அருமையா இருந்தது.வீட்டில் இருந்து வெறும் சாதம் மட்டும் வடித்து எடுத்துக் கொண்டு போனால் போதும்.ஆத்துல நல்லா ஆட்டம் போட்ட பிறகு,கூடுதலா இரண்டு கவளம் சோறு உள்ளே போகும்.
குழந்தைகளை தண்ணீர் அடித்துக் கொண்டு போகுமோ என்ற பயமின்றி நிம்மதியாக குளித்து மகிழலாம்.உண்மையில் குற்றாலத்தை விட இந்த அணைக்கட்டை நான் மிகவும் ரசித்தேன்.இயற்கையான சூழல்.அருமையான வாய்க்கு ருசியான உணவு…வேறு என்ன வேண்டும்?
நாம் தொலைத்துக் கொண்டு இருக்கும் இயற்கையின் மிச்சங்கள் இப்படி இன்னும் நிறைய இடத்தில் கொட்டிக் கிடக்கிறது.நேரம் கிடைக்கும் பொழுது இங்கெல்லாம் சென்று அந்த இடத்தை பற்றி நம்முடைய சந்ததிகளுக்கும் காட்டுங்கள் நட்புகளே…இல்லையென்றால் அவர்கள் வளர்ந்த பிறகு இது போல ஒரு காட்சியை அவர்களால் காண முடியாமல் போகும்.
இப்பொழுது என் பிள்ளை கேட்கிறானே திருச்சியில் வறண்டு கிடக்கும் காவேரியை பார்த்து… “இது எந்த ஊர் அம்மா…இப்படி வறண்டு போய் பாலைவனம் மாதிரி இருக்கிறது” என்று .அது போல நாளை உங்கள் பிள்ளையும் கேட்க கூடும்.
பயணங்கள் தொடரும்…