Kaadhal karuvarai 6

0
966

கரு 6:

“பரத்” என்ற பெரியம்மாவின் குரலில் அவளை ஒருமுறை ஆழமாய் பார்த்து விட்டு திரும்பி சென்றான். அதுவரை அந்த நிலையிலேயே இருந்தவள் அவன் நகர்ந்ததும் ஒரு நொடி கூட தாமதிக்காமல் நகர, அப்பொழுதுதான் புடவை சிக்கிக்கொண்டு இருப்பதை பார்த்தாள்,

கண்களை கண்ணீர் மறைக்க புடவையை அப்படியே இழுத்தாள், இழுத்த வேகத்தில் புடவையின் நுனி கிழிந்தது, இவன் வருகையால் மனமே கிழிந்துவிட்டது புடவை கிழிந்தால் என்ன என்று தோன்றியது, புடவையை அப்படியே இழுத்து சுருட்டி பிடித்துக்கொண்டு தன் ரூமைநோக்கி நடந்தவள் எதிரில் வந்த குணாவிடம் தலை வலிப்பதாகவும் ரூமிற்கு போய் ரெஸ்ட் எடுப்பதாக பெரியம்மாவிடம் கூற சொல்லி கூறி சென்றாள்.

ரூமிற்கு வந்தவளுக்கு அவ்வளவு நேரம் அடக்கி வைத்த அழுகை பீறிட்டது. தன் பர்ஸை பிரித்தவள் அதிலிருந்து தன் தாயின் படத்தை எடுத்து பார்த்தாள் இருந்தவரை யாருக்கும் தீங்கு நினைக்காத ஜீவன், யார் துன்பப்பட்டாலும் அதை தீர்க்க நினைப்பவர் இன்று தன் மகளின் துன்பத்தை போக்கமுடியாமல் பார்த்துக்கொண்டிருப்பது போல் தோன்றியது, மறுபடியும் அதே கேள்வியை தாயைப்பார்த்து கேட்டாள்

“இந்த நிராதரவான நிலையில் என்னை விட்டுவிட்டு ஏம்மா போன, அன்னைக்கு நீயாவது கூட இருந்த இன்னைக்கு நான் அனாதையாக நிக்கறேன்”

மனம் அவளுடைய அன்னையின் ஸ்பரிசத்தை தேடியது, ஓடி சென்று அவள் மடியில் படுத்தால் போதும் இவ்வளவு நாள் பட்ட துன்பம் அனைத்தும் போய்விடும், ஆனால் தேடினாலும் கிடைக்காத தூரத்திற்கு துயில் கொள்ள சென்றுவிட்டாள். அன்னை இல்லாத துயரம் இன்று அவளை பெரியதாய் தாக்க, மடிந்து அமர்ந்து அப்படியே அழ ஆரம்பித்தாள்.

இன்று அவனை பார்த்ததும் தன் கோபங்களும் இயலாமையும் ஒருபுறம் அவளை தாக்க, அவனின் கோபமும் அவள் கருத்தில் பதிந்தது, தன் வாழ்நாள் முழுவதும் அவளை வஞ்சிக்க அவன் கொண்ட வெறி அதில் இருந்தது.
அதேபோல் மனுபரதனின் மனமும் கொதித்துக்கொண்டு இருந்தது எவளை தன் வாழ்நாளில் சந்திக்கக்கூடாது என்று நினைத்தானோ அவளை பார்த்ததும் தன் உடம்பு முழுவதும் கொதி நிலையை அடைந்தவன் முயன்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு பெரியம்மா அழைத்ததும் அவரிடம் சென்றான்,

பங்க்ஷன் முடியும் வரை காத்திருந்து அனைவரையும் உபசரித்து தொழிலாளர்களை விசாரித்து அனுப்பிவிட்டு, குணாவிடம் பேசி அவளை கலகலப்பாய் மாற்றிவிட்டு தன் அறைக்கு வந்தவன் பெரியம்மா அவர்கள் அறைக்கு செல்லும் வரை காத்திருந்தான், சோர்வு ஒருபுறம் இருந்தாலும் அதைபற்றி கவலைப்படாமல் நேரே பெரியம்மாவின் அறைக்கு சென்றான்.

அவன் வரவை ஆவலாய் எதிர்பார்த்திருந்தவர் போல் அவனுக்காக பெரியம்மா காத்திருந்தார்
“பரவாயில்லை இன்று வரமாட்டாய் என்று நினைத்தேன்”

“நான் கடவுள் போல் நேசித்த மனிதரின் நினைவு தினம், கண்டிப்பாக எங்கிருந்தாலும் நான் இன்று இங்கு வருவேன் என்று உங்களுக்கு தெரியும்” என்றவனை ஆசை தீர பார்த்தார்,

ஏழு வயதில் தன்னிடம் அண்ணன் விட்டுப்போனபோது அவர்களை பிரிகிறோம் என்ற வருத்தம் இருந்தாலும் அத்தையின் மனதிற்காக தன் முகம் மாறாமல் அவர்களை பற்றிக்கொண்டான்

.
அன்றிலிருந்து இன்றுவரை அவர்களை அதே அன்புடன் பார்த்துக் கொண்டான், இவ்வளவு வளங்கள் இருந்தும் அவன் தன்னை நிரூபிப்பதற்காக, தனக்கான தொழிலை தனியாக நடத்தி காண்பித்து ஜெயித்தான் இது அனைத்தும் அவனின் மாமாவிற்கு எவ்வளவோ பெருமை ,

அதிலும் அவர் புது தொழில் எதற்கு என்று கேட்ட பொழுது அவரிடம் கற்ற தொழில் திறமைகளை தான் சொந்த முயற்சியால் நடத்தி காண்பித்து அவரின் மாணவனாக ஜெயிக்க வேண்டும் என்று கூறி சாதித்தான்.

அதுவும் அவன் மாமா இறந்தபொழுது அவன் துக்கத்தை கூட வெளிக்காட்டாமல் பாதிப்பில் இருந்த தனக்கு துணை நின்றவன் அவன் இல்லையென்றால் தன் நிலையை நினைத்து பார்க்கவே அவருக்கு பயமாக இருந்தது, அதன்பின் காலம் நிறைய மாற்றங்களை தந்தது, அவனுள்ளும் அது தெரிந்தது அன்றிருந்த அறியா முகம் இப்பொழுது சுத்தமாக இல்லை, அவனின் அடர் மீசை அந்த மாநிற முகத்திற்கு மேலும் அழகை கொடுத்தது நெடுநெடுவென்று ஆறடி உயரம் உடற்பயிற்சி என்று உடம்பை கட்டுக்கோப்பாய் வைத்திருந்தான்.

சிறு வயதில் அவன் நல்ல நிறம் அடையவேண்டும் என்று பயறு அரைத்து தேய்ப்பாள் அதை அவரது கணவர் பார்த்து சிரித்துக்கொண்டே அவளுக்கு வேண்டியதை எடுத்துக்கொடுத்துக் கொண்டே கூறியதும் நினைவு வந்தது “ சொர்ணம்மா , நிறத்தில் என்ன இருக்கிறது இவன் வளர்ந்ததும் பார் கம்பீரத்தின் மறுஉருவாய் இருப்பான், அப்பொழுது பார் , இருக்கும் பெண்கள் எல்லாம் உனக்கு மருமகளாய் மாற போட்டி போடுவார்கள்” என்பார்.

இவன் மாமா இருந்திருந்தால் இவனை பார்த்து பெருமை பட்டிருப்பார் என்று தன் அண்ணன் மகன் நினைவில் ஆரம்பித்து தன் கணவனின் நினைவில் வந்து முடித்தார்

அவர் தன்னை அளப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் சிறிது நேரம் அவர் நினைவுகளுக்கு மதிப்புக் கொடுத்து அமைதியாக இருந்தான் அவரின் நினைவுகள் கணவனிடம் முழ்கிவிட்டால் திரும்பி வருவது கடினம் என்பதால் அதை கலைக்க எண்ணி அவர் எதிரில் அமர்ந்து பேச ஆரம்பித்தான்

“என்ன அத்தை, வீட்டில் நிறைய மாறுதல்கள் இருக்கு போல” என்ற அவனின் பேச்சு அவரை நிஜ உலகிற்கு மீட்டெடுத்தது

“ மாறுதலா?, அது என்னதுப்பா எனக்கு தெரியாம இந்த வீட்டில மாறியது “என்று கேட்டு சிரித்தார் அவர் தன்னிடம் விளையாடுகிறார் என்பதை புரிந்தவன் லேசாக சிரித்தபடி

“மாறுவது என்பதைவிட தேவையில்லாத விஷயங்கள் புதிதாக முளைத்தது போல இருக்கிறது என்றான் “

“ தேவை இருப்பதால் தானே புதிய விஷயங்கள் முளைக்கிறது” என்று அவனுக்கு சளைக்காமல் பதில் அளித்தார் அவன் மேலும் ஏதோ கூற வருவதற்கு முன் தானே பேச ஆரம்பித்தார்

“நீ, தருவை பற்றி பேசுகிறாய் என்று நினைக்கிறேன், நான்தான் என் கணக்குகளை பார்க்க அவளை வரவழைத்தேன், அவள் சிதம்பரம் அங்கிளிற்கு நெருங்கிய உறவு, அவர்தான் அவளை இப்பொழுது பார்த்துக்க சொல்லி நம்மிடம் அனுப்பிவைத்தார், அவளை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, மிகவும் நன்றாக பழகும் பெண், வேலையில் அவ்வளவு நேர்த்தி, எதிலும் ஒரு குறை கூட கூற முடியாது” என்று மடமடவென்று பேசியவரை கையமர்த்தியவன்,

“ஈஸீ அத்தை, கொஞ்சம் மூச்சுவிட்டுக்கொண்டு அவளை புகழுங்கள், இப்பொழுது அவளை நான் இங்கிருந்து அனுப்பிவிடக்கூடாது என்பதற்காக உங்களின் வாதங்களை அடுக்குகிறீர்கள் இல்லையா?” என்றவன் அவரை கூர்மையாய் பார்த்தான்,
அவனின் அத்தையும் அவனுக்கு சளைத்தவர் இல்லையே என்பது போல் தன் பார்வையால் மகனின் மனம் படிக்க முயற்சித்தார், ஆனாலும் இவனுக்கு கழுகு பார்வை, இவன் பார்வை தீட்சண்யத்தை வளர்த்தவள் என்னாலேயே சமாளிக்கமுடியவில்லை, இவனின் மனைவி எப்படித்தான் சமாளிக்கப்போகிறாளோ, சீக்கிரம் இவனுக்கு மணமுடிக்க வேண்டும்” என்று யோசித்து பெருமையாய் பெருமூச்செறிந்தவரை அடுத்தடுத்த கேள்விகளால் ஆட்டம் காண வைத்தான் அவரில் வளர்ப்பு மைந்தன்

“எனக்கு கல்யாணம் பண்ணிக்கொள்ளும் எண்ணம் இப்பொழுதைக்கு இல்லை என்று நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லிவிட்டேன், அதை பிறகு பார்ப்போம், இப்பொழுது அந்த பெண் தாராவோ ,தருவோ ஏதோ சொன்னீர்களே” என்று தனக்கு தெரியாதது போல் கேட்டான்.

“தரு, அவள் முழுப்பெயர் தாருண்யா”
ஆக இங்கே அவளை அவள் தெரியப்படுத்திக்கொள்ளவில்லை என்பது அதிலேயே மனுபரதனுக்கு புரிந்தது “ம்ம், சரி அந்த தாருண்யாவிற்கு நான் கேட்டதும் இவ்வளவு நற்சான்றிதழ் கொடுக்கிறீர்கள் என்றால் அவளுக்கும் சந்தோஷிக்கும் பிரச்சனை நடந்திருக்கிறது அப்படித்தானே” என்று அவரை அதிரவைத்தவன்

“அது போக அவள் சந்தோஷியை சமாளித்திருக்கிறாள், அதனால் அவள் உங்கள் மதிப்பையும் பெற்றிருக்கிறாள் ஆனால் நாளை சந்தோஷி என்னிடம் அந்த பெண்ணை பற்றி குறை கூறி ,நான் அவளை அனுப்பி விடக்கூடாது என்பதற்காக என்னிடம் நற்சான்றிதழ் கொடுகின்றீர்கள், அப்படித்தானே அத்தை”

“ஆனாலும், நீ இவ்வளவு புத்திசாலியாய் இருந்திருக்கவேண்டாம் டா “ என்று பெருமையாய் சலித்தவரிடம் தன் கூர்மையான பார்வையை செலுத்தியவன்
“எனக்கு புத்தி கொஞ்சம் மட்டுதான் அத்தை, அதனால்தானோ என்னவோ, அந்த தாருண்யா வெறும் கணக்கு எழுதவந்தவளாக எனக்கு மட்டும் தோன்றவே இல்லை, தவிர இது சந்தோஷிக்கான ஏற்பாடு என்றுகூட என் மந்தபுத்தி நினைக்கிறது” என்றவனின் பேச்சில் தாருண்யாவும் அதே போன்று கேட்டது நினைவு வர, அதே போல் கேட்கிறான் என்று அப்பட்டமான அதிர்ச்சியை காட்டினார் பெரியம்மா.

அவரின் பார்வையில் கனிந்தவன் “நான் என்றைக்கும் உங்களுக்கு எதிராக குரல் கொடுத்ததாக ஞாபகம் இல்லை , இப்பொழுது மட்டும் என்ன பயம் அத்தை” என்றதும் தான் அவர்களுக்கு சீராக மூச்சு வந்தது

“இல்லைதான் பரதா, இருந்தாலும் உன்னிடம் சொல்லாமல் செய்கிறேன் நீ எப்படி எடுத்துக்கொள்வாயோ என்றுதான் பயந்தேன் இப்பொழுதுதான் நிம்மதியாக இருக்கிறது, சந்தோஷி அவளை பற்றி ஏதாவது கூறினாலும் நீ கோபம் கொள்ளாதே இங்கு எல்லாம் என் பார்வையில்தான் நடந்தது என்பதை மட்டும் நீ நினைவில் வைத்துக்கொள்” என்றவரிடம் சிரிப்பாய் பார்வையை பதித்தவன்.

“ஆக, நான் சம்மதம் கொடுத்துவிட்டேன் என்று நீங்களே எடுத்துக்கொண்டுவிட்டீர்கள், அப்படித்தானே, எனக்கும் இதில் மறுக்க ஒன்றுமில்லை ஆனால் அது சந்தோஷியை மனதளவில் காயப்படுத்தாதவரை மட்டுமே மீறினால் நான் உங்களுக்கு ஒத்துப்போகமாட்டேன் “ என்றவன் அவரிடம் விடைபெறும் வண்ணமாக எழுந்து தலையசைப்புடன் வெளியேற நடந்தவன் நின்று திரும்பி

“எதற்கும் நான் இன்று அந்த பெண்ணை சந்தித்து பேசவேண்டும் இப்பொழுது மிகவும் களைப்பாக இருக்கிறது நான் ரெஃப்ரெஷ் செய்ததும் என் அறைக்கு அனுப்புங்கள் “ என்று விட்டு சென்றான்.

ஒருவழியாக ஒத்துக்கொண்டானே என்று தோன்றியது என்னதான் அவன் தன்னை மதிப்பான் என்றாலும் அவனுக்கு சந்தோஷி மீது உள்ள பாசம் அவள் பேச்சை கேட்டு தாருண்யாவை வெளியே அனுப்ப வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதே அவருக்கு ஒரு கவலையை அளித்துக்கொண்டு இருந்தது, இப்பொழுது அந்த பாரம் இறங்கியவராய் இனி தாருண்யாவிடம் பேசலாம் என்று நினைத்தவர் தாருண்யாவிற்கு போன் செய்தார்..

அழுதழுது ஓய்ந்து போனவளின் மனம் அடுத்ததை யோசிக்கவே பயந்தது, இனி இங்கிருந்து போகவேண்டும், யார் என்ன நினைத்தாலும் சரி, பெரியம்மா, குணா என்று எல்லாரையும் விட்டு போகவேண்டும் பிரிவின் வலி தன்னுடன் இருந்துகொண்டே தான் இருக்கும் போல், முதலில் பெற்றவள், இப்பொழுது அன்னையை போல் நினைக்கும் பெரியம்மா, தங்கை போல பழகும் குணா என்று நினைக்கும் போதே நெஞ்சு கனத்தது.

அப்பொழுதுதான் குணாவிற்கு அவள் கூறிய நம்பிக்கை வார்த்தைகள் நினைவில் வந்து அவளை கலங்கடித்தது, எது நடந்தாலும் தான் இங்கிருந்து போகமாட்டோம் சந்தோஷிக்கு நல்லது நடக்காமல் போக மாட்டேன் என்று உறுதி கூறியது எல்லாம் மேலும் அவளை கலங்கடித்தது, அதற்காக அவள் இங்கு எப்படி வாழ முடியம், தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் ஆயிற்றே, இங்கு வாழ்வது அவளின் நிலைமைக்கே கேடு இதில் சந்தோஷியின் நிலையை எப்படி தன்னால் பார்க்க முடியும், இல்லை போய்விடுவது தான் நல்லது
அதுவும் அவனின் பழிவெறியை கண் கூடாக பார்த்தாயிற்று இனி இங்கு மூச்சு விடுவது கூட அவளிற்கு பாரம்தான், அன்று சந்தோஷி கோபத்தில் கத்திய வார்த்தைகள் நினைவில் வந்தது “என் மாமா வர்ற நாள்தான் உனக்கு கடைசி நாள்” என்றாளே அதுதான் நிஜமாகிவிட்டது அப்பொழுது கூட இவ்வளவு பெரிய வலி திரும்பி வரும் என்று அவள் நினைக்கவே இல்லையே என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவளின் போன் அடிக்க எடுத்தவள் அதில் பெரியம்மா நம்பரை பார்த்தாள், அதை காதிற்க்கு கொடுத்தவளிடம் “தரும்மா” என்ற அழைப்பே அவளை எடுத்த முடிவிலிருந்து பலமிழக்க செய்வதாய் இருந்தது.

“நான் பரத் கிட்ட எல்லாம் பேசிட்டேன், நீ இங்க இருக்கபோரத சொல்லி கேட்டப்ப சந்தோஷிக்கு பாதிப்பில்லாத வரை அவனுக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட்டான், இப்பொழுது தான் எனக்கு எந்த உறுத்தலும் இல்லாம நிம்மதியா இருக்கு, இனி சந்தோஷியால கூட உன்னை வெளியே அனுப்பமுடியாது, எந்த நிலையிலும் பரத் தான் சொன்ன விஷயத்தில் இருந்து பின் வாங்க மாட்டான், அவன் உன்னிடம் பேசவேண்டும் என்கிறான், சும்மா சந்தோஷிக்காக ஏதாவது சொல்லுவான் நீ கேட்டு விட்டு வந்துரு டா, இன்னும் ஐந்து நிமிடம் கழித்து அவனை மாடியில் உள்ள கடைசி அறையில் பார்த்து பேசிட்டு என் ரூமிற்கு வா” என்று அவளிடம் எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் வைத்துவிட்டார்,

அவரை பொருத்த வரையில் தாருண்யா இங்கு கண்டிப்பாக இருப்பதாகத்தான் உறுதிகூறி இருக்கிறாளே அவருக்கு அந்த நம்பிக்கையே போதுமானதாக இருந்தது.
அந்த நம்பிக்கையை உடைக்கப்போகும் பயமே அவளை வாட்டியது, இதற்காகவே தான் முதலில் அவனிடம் பேசுவதே பரவாயில்லை என்று தோன்றியது,

மற்றவர்களிடம் தானாக இதை சொல்வதை விட அவனுடன் பேசிய பிறகு அவனே அவளை அனுப்பிவிடுவான் அதனால் வெறும் பிரியும் வேதனையுடன் போய்விடலாம், அவர்களிடம் தான் போகவேண்டிய சூழ்நிலையை சொல்லி, இருக்கும் தன் வேதனையை அவளால் கிளறி பார்க்க முடியாது. இதனால் தான் அவள் மனுபரதனிடம் சென்றாள்.

கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவளுக்கு அவன் ஃபைலில் எதையோ உன்னிப்பாக பார்த்து கொண்டிருப்பது கண்களில் பட , மேலே செல்ல முடியாமல் கால்கள் பின்னிற்று இருந்தாலும் முயன்று வரவழைத்த தைரியத்துடன் உள்ளே சென்றவளை சிறிதும் சட்டை செய்யாமல் பார்த்துக் கொண்டிருந்தான்

“நான்,… நான் இங்கே இருந்து போகிறேன் , நீங்களே ஏதோ ஒரு காரணம் சொல்லி என்னை அனுப்பிவிடுங்கள்”

நிமிர்ந்து அவளை பார்த்தவன் சிரித்தான் , பேய் சிரிப்பாய் இருந்தது அதில் தெரிந்த வெறியை கண்டு அவளுக்கு அடி வயிற்றில் பயப்பந்து உருண்டது,

“நீ என்னிடம் சிக்கிக்கொண்டதாக நான் கூறினேன், கைதிகளுக்கு தண்டனையை பற்றி பேசவே உரிமையில்லை இதில் விடுதலையை பற்றி நீ கேட்பதுதான் எனக்கு விந்தையாய் உள்ளது”

இப்பொழுது தாருண்யாவுக்குமே கோபம் வந்தது தப்பு செய்தது முழுக்க இவன் ஆனால் நாம் ஏன் பயப்பட வேண்டும் என்று தோன்றியது, தலை நிமிர்ந்தவள்
“ நான் கைதி என்பதை சொல்ல இங்கு இருப்பவர் நீதிபதியல்லவே, நானும் ஒரு குற்றவாளியிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்”

அவளை நிதானமாக பார்த்தவன் நன்றாக சாய்ந்து கொண்டு “ நானும் என்றால், அப்பொழுது நீயும் குற்றவாளி என்பதை ஒத்துக்கொள்கிறாய், அதுவும் என்னிடம் தண்டனை வாங்கவென்று வந்திருக்கும் குற்றவாளி”

தாருண்யாவிற்கு நெஞ்சு காந்தியது, ஆத்திரத்தில் நிமிர்ந்தவள் “தண்டனை கொடுக்கவும் ஒரு தகுதி வேண்டும் என்று சொன்னேனே , அதில் தகுதி என்ற வார்த்தைக்கும், உனக்கும் சம்பந்தம் இல்லை, வாழ்வில் நான் உன்னை சந்தித்த அந்த நாட்களுக்கு பிறகு என் வாழ்வை பாழாக்கி என்னை நிம்மதியில்லாமல் கதரவிட்ட உனக்கு தண்டனை கொடுக்கும் உரிமை எங்கிருந்து வந்தது, பார்க்கும் பெண்களை எல்லாம் நீ பார்த்த பார்வைகளும் உன் பழக்கங்களும் உன்னை பற்றி சொல்லும் நீ எவ்வளவு கீழ்தரமானவன் என்று”

“ஏய்,” என்ற கர்ஜனையுடன் தடுத்தது பரத்தின் குரல் “ தகுதியை பற்றி நீ பேசுகிறாயா, உனக்கு வாழ்க்கையில் கிடைத்த தகுதிகளால்தான் நான் என் நிம்மதி இழந்து சுத்திக்கொண்டிருக்கிறேன், அதற்க்கு நீ முதலும் வட்டியுமாக என்னிடம் தண்டனை பெறவேண்டாமா, அனு அனுவாக சித்திரவதைகள் நீ அனுபவிக்கத்தான் நான் வழி பார்த்துக்கொண்டிருக்கிறேன், உன்னை வெளியே அனுப்ப அல்ல” என்று கோபத்தில் ஆரம்பித்தவன் ஏளனமாக அவளை பார்த்து முடித்தான், பிறகும் தனக்குள் யோசனை செய்வது போல் நடித்தவன் “சரி, இன்னும் உனக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது “ என்று அவளை பார்த்து ஏளனமாக சிரித்தவனின் பார்வையில் இருந்தே அவன் எதை பற்றி கேட்கிறான் என்பது புரிந்தது அவளுக்கு, அது அவளுக்கு, ஒன்று சேர பயத்தையும் சோகத்தையும் கொடுத்தது.

“சொல்லு,எங்கே அவள்? உன் கூற்றை நம்பி என்னை எனக்காக பார்க்காமல், உன் வழி செய்தியை காட்டி என்னை ஏளனப்படுத்தியவள், எனக்கு காதல் என்று ஒன்று இருப்பதாக நினைத்து அதை அவளுக்காக வளர்க்க நினைக்கும் பொழுது என் மனதை கொன்றவள், என்னை ஏமாற்ற உன்னிடம் காரணம் கேட்டு, நீங்கள் வகுத்த திட்டத்தில் ,மீனாக நான் மாட்டியதற்கு காரணமானவள்”

“சொல்லு எங்கே மித்திலா” என்று அவளிடம் வெறி பிடித்து கத்தியவன் அவள் எதிரே பார்த்துக்கொண்டிருந்த ஃபைலை அவள் முன் வீசினான் “அதில் ஒரு இளம்பெண் அழகாக அவளை பார்த்து சிரித்தாள் ,

அது தாருண்யாவிடம் “இனி நீ தப்பவே முடியாது “ என்று கூறுவது போல் இருந்தது

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here