Kadhal kathakali Tamil Novel 5

5
218

அத்தியாயம் 5

காரை நேரே வீட்டுக்கு ஓட்டிச் சென்றவன் வீட்டிற்கு உள்ளே நுழையும் முன் தன்னை சுதாரித்துக் கொள்ள கொஞ்ச கால அவகாசம் எடுத்துக் கொண்ட பிறகே காரை விட்டு கீழே இறங்கினான்.தோட்டத்தில் தாயையும் தந்தையையும் தேடியவன் அவர்கள் அங்கே இல்லாததால் நேராக வீட்டிற்குள் சென்றான்.  

டைனிங் டேபிளில் அனைவரும் அமர்ந்து உணவு உண்டு கொண்டு இருக்க அவர்களின் அருகில் சென்று கோபமாக அமர்ந்தான்.

“ஏன் மாம் ….நான் வர கொஞ்ச நேரம் ஆச்சுன்னா எனக்காக வெயிட் பண்ண மாட்டிங்களா? நான் சாப்பிட்டேனா இல்லையான்னு கொஞ்சம் கூட கவலைப்படாமல் நீங்க பாட்டுக்கு எல்லாரும் சாப்பிடறீங்க ?” என்று பொரிந்து தள்ளியவன் அவர்களின் குழம்பிய முக பாவனையில் தன்னுடைய பேச்சை நிறுத்தினான்.

  “என்ன ஆச்சு அபி….நீ காலையில் நேரமாகவே கிளம்பி டைரக்டர் வீட்டிற்கு போய் இருக்கணுமே….இன்னும் போகவில்லையா???? எப்பொழுதும் வெளியூர் ஷூட்டிங் போவதற்கு முதல் நாள் டைரக்டர் வீட்டிற்கு போய் ஹீரோ ஹீரோயின் உடன் டான்ஸ் ப்ராக்டிஸ் செய்வாயே! இன்னைக்கு ஏன் இன்னும் கிளம்பாமல் இருக்கிறாய்?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினார் பார்வதி.

  அவரின் கேள்விகளை கேட்ட பிறகு தான் , தான் இன்று டைரக்டர் வீட்டிற்கு போகாமல் விட்டது நினைவுக்கு வந்தது. ‘எல்லாம் அவளால் வந்தது’ என்று மனதுக்குள் அவளை திட்டியவன் உடனே முகத்தை மாற்றி சமாளித்து கொண்டு தாயிடம் விளக்க முற்பட்டான்.

  “இல்ல மாம்….இன்னைக்கு கொஞ்சம் லேட்டா தான் போவேன். டைரக்டர்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்.கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சுட்டு தான் போகணும்.”

  “அது எங்களுக்கு தெரியாதே அபி…..நீ எப்பொழுதும் போல கிளம்பி போய் விட்டாய் என்று நினைத்து தான் நாங்கள் சாப்பிட உட்கார்ந்தோம். அதற்கு ஏன் இப்படி கோபப்படுற?” என்று மகனின் முகத்தை கூர்மையாக அளவிட்டவாறே கேள்விகளை கேட்டார் ராஜேந்திரன்.  

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை டாடி….இன்னிக்கு ஒரு வேலை முடிச்சுட்டு வர லேட் ஆகிடுச்சு….வந்து உங்க எல்லாரோடையும் சேர்ந்து சாப்பிடலாம்னு பார்த்தா நீங்க சாப்பிட்டுக்கிட்டு இருந்தீங்களா அதான்….” என்று ஏதேதோ சொல்லி உளறி கொட்டியவன் விறுவிறுவென தன்னுடைய அறைக்குள் புகுந்து குளித்து விட்டு பத்து நிமிடத்தில் கீழே வந்து சாப்பிட அமர்ந்தான்.

  நேற்று இரவு வம்பு இழுத்ததில் இருந்து அஞ்சலி அவனிடம் பேசவே இல்லை.அதற்காக அஞ்சலி அவனிடம் கோபித்துக் கொண்டு பேசாமல் இருக்கவில்லை.எப்பொழுதும் தானாகவே வந்து பேசும் அண்ணன் இன்று தன்னை கண்டு கொள்ளவேயில்லையே என்று ஒரு நிமிடம் யோசித்தவள் ‘ஒருவேளை நேத்து நாம கிராமத்துக்கு வரலைன்னு சொன்னதால அண்ணன் என்கிட்ட பேசவில்லையோ’ என்று நினைத்தவள் அபிமன்யுவிடம் தானாகவே முன் வந்து பேசினாள்.  

“அண்ணா….ஏன் என்கிட்ட பேசலை….என் மேல கோபமா இருக்கியா? நானும் வேணும்னா உன் கூட கிளம்பி வரேன் அண்ணா….ஆனா அதுக்காக என்கிட்ட இப்படி பேசாம இருக்காதே…. ப்ளீஸ்! பேசு அண்ணா” என்றாள் அஞ்சலி.  

‘சே! யாரோ ஒருத்தியை நினைத்துக் கொண்டு இப்படி அஞ்சலியை வருந்த வைத்து விட்டோமே என்று தன்னையே ஒரு நிமிடம் நொந்தவன் தங்கையை இயல்பாக்கும் பொருட்டு அவளை சீண்ட தொடங்கினான்.  

“எப்படி ….எப்படி…நீ எனக்காக வர்றியா? நல்லா கதை விடற  நீ….உனக்கு உள்ளுக்குள்ள ஆசை… அங்கே வந்தால் மரத்துக்கு மரம் நல்லா தாவி விளையாடலாம்ன்னு அதை நேரடியா சொல்ல வேண்டியது தானே…அதை விட்டு விட்டு ஏன் இப்படி என்னமோ எனக்காக வர மாதிரி சீன் போடுற?”

“போடா …. நீ தான் மலை குரங்கு…..போனா போகுதுன்னு வந்து பேசினேன் பார்…என்னை சொல்லணும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகல முயன்றாள் அஞ்சலி.

  “இப்போ வேண்டாம் அஞ்சு….இப்போ ஷூட்டிங் நேரத்தில் உனக்கு சரியாக ஊரை சுற்றி காட்ட முடியாது.கடைசி நாள் கிளம்பி வா….உனக்கு நானே கூட வந்து எல்லா இடத்தையும் சுற்றிக் காட்டுகிறேன்.சரி தானா?அஞ்சு பேபி” என்று தங்கையை மேலும் கொஞ்சம் சமாதானபடுத்திவிட்டு அங்கிருந்து சென்று தன்னுடைய அறைக்குள் நுழைந்து டைரக்டரிடம் பேசினான்.

தான் வர கொஞ்சம் கால தாமதம் ஆகும் என்பதை தெரிவித்தான்.அபிமன்யு இதுவரை இப்படி சொன்னது கிடையாது என்ற காரணத்தால் டைரக்டரும் உடனே ஒத்துக்கொண்டு விட்டார்.

  அவரிடம் பேசிவிட்டு போனை வைத்தவன் அப்படியே படுக்கையில் விழுந்து யோசிக்க தொடங்கினான். ‘தேவை இல்லாமல் அவளுக்காக காத்திருக்க போய் தான் இன்று டைரக்டர் வீட்டிற்கு போகவே இல்லை.அது மட்டுமா? அம்மா அப்பாவிடமும் சண்டை போட்டு இருக்கேன். தங்கையிடம் கூட பேசாமல் இருந்து இருக்கிறேன். இதற்கெல்லாம் அவள் தான் காரணம்’ என்று அவளை திட்டியபடி அவளையே நினைத்துக் கொண்டு இருந்தான்.

  கண்களை மூடினாலும் அவள் முகம் அவனின் மனக்கண்ணை விட்டு அகல மறுத்தது.மீண்டும் மீண்டும் அவள் முகம் அவனின் கண் முன்னே தோன்றி அவனை இம்சித்தது. ‘இது என்னடா வம்பா போச்சு’ என்று மனதுக்குள் நொந்தவன் ‘சும்மா இருந்தால் இப்படி தான் எதாவது நினைக்க தோன்றும் பேசாம கிளம்பி டைரக்டர் வீட்டுக்கு போய் விட வேண்டியது தான்’ என்று நினைத்தவன் நொடியும் தாமதிக்காது தனக்கு வேண்டிய உடமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். ஹாலில் அமர்ந்து இருந்த தாயையும் தந்தையையும் கவனிக்கும் நிலைமையில் அவன் இல்லை. அவன் பாட்டிற்கு அவர்களை கடந்து சென்று காரில் ஏறி கிளம்பி போய் விட்டான். “என்னங்க…இன்னிக்கு இவன் போக்கே கொஞ்சம் கூட சரி இல்ல.ஒரு மாதிரியாவே இருக்கான்.என்ன விஷயமா இருக்கும்?” என்று கவலை கொண்டார் பார்வதி. “அவன் என்ன சின்ன பிள்ளையா பார்வதி அவனை பற்றி கவலை படுகிறாய் … எதுவாக இருந்தாலும் அவன் சமாளித்துக் கொள்ளுவான்….நீ போய் உன் வேலையை பார்” என்று சமாதனம் கூறி மனைவியை அனுப்பி விட்டாலும் அவருக்கும் உள்ளுக்குள் கொஞ்சம் யோசனையாகவே இருந்தது.   டைரக்டர் வீட்டிற்கு சென்றவன் அங்கே தனியறையில் இருந்த ஹீரோ ,ஹீரோயின் மற்றும்  டைரக்டருக்கு லேசானதொரு சிரிப்பை பதிலாக  கொடுத்துவிட்டு தான் சொல்லி தர வேண்டிய பாடலை கேட்க ஆரம்பித்தான்.இசையை ஆழ்ந்து கேட்டவன் தாளத்தை நன்கு ஊன்றி கேட்டு எந்த இடத்தில் எந்த மாதிரியான நடனம் வர வேண்டும் என்று மனதுக்குள் ஒரு முறை ஒத்திகை பார்த்துக் கொண்டான்.இடையில் டைரக்டரிடம் பாடல் ஏற்படும் சிஷுவேஷனை கேட்க டைரக்டர் விவரிக்க ஆரம்பித்தார்.   “அபி நல்லா கேட்டுக்கோங்க…. வேலை விஷயமா வெளியூர் போன காதலன் திரும்பி தன்னோட காதலியை தேடி அவளோட ஊருக்கு போறான்.அப்படி போகும் போது ஹீரோயின் அப்படியே தனியா ஒரு அருவிக்கரையில் உட்கார்ந்து அருவியை பார்த்து அழுதுக்கிட்டு இருக்கிறா தன் காதலனை நினைச்சு.காதலி  தனக்காக அழுவதை ஹீரோவால தாங்க முடியாம ஓடிப் போய் அவளை கட்டி பிடிச்சுக்கிறார்.இது தான் சீன்.அங்க இருந்து அப்படியே கட் பண்ணி சாங் வருது.”   காட்சியை உள்வாங்கிக் கொண்டவன் அந்த படத்தின் கதாநாயகியை மனதில் வைத்துக் கொண்டு நடனத்தை ஆட ஆரம்பித்தான்.ஆனால் அங்கே தான் ஒரு சின்ன சிக்கல் மனதில் டைரக்டர் காட்சியை விவரிக்க விவரிக்க அவனுக்கு கதையின் நாயகி மட்டும் நினைவுக்கு வரவில்லை.தன்னுடைய நாயகியும் சேர்ந்தே நினைவுக்கு வந்தாள்.இங்கே அருவி ………. அங்கே கடல் ………. இங்கே கதாநாயகி காதலை நினைத்து அழுகிறாள்….அங்கே அவளும் அழுகிறாள்….ஆனால் அவள் அழுததற்கு காரணம் கண்டிப்பாக காதல் இல்லை என்று தனக்கு தானே ஒருமுறை சொல்லி தன்னை தேற்றிக் கொண்டான். ‘பின்னே அவள் எப்படி காதலனை நினைத்து அழ முடியும் . நான் தான் இங்கே இருக்கிறேனே!.பிறகு எதற்கு அவள் அழ வேண்டும்! அவளை நான் அழவே விட மாட்டேன் தெரியுமா?’ என்று தான் போக்கில் சிந்தித்துக்கொண்டே போனவன் அப்படியே விக்கித்து நின்றான்.

  ‘இதற்கு என்ன அர்த்தம்? நான் அவளை காதலிக்கிறேனா?எப்படி இது சாத்தியம்? பார்த்து ஒரு நாள் கூட முழுதாக ஆகவில்லை அதற்குள் இது எப்படி சாத்தியம்? அவளை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று என்னுடைய மனம் இப்படி துடிக்கிறதே… அவளின் முகம் முழுதும் நிறைந்து கிடந்த சோகத்தை மாற்றியே தீர வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றுகிறதே…ஏன்?’ ஒரு வேளை இது இனக்கவர்ச்சியோ என்று எண்ணியவன் அடுத்த நொடியே அதை புறம் தள்ளினான்.

   ‘நான் என்ன டீன் ஏஜ் பையனா இப்படி எல்லாம் நினைக்க’ என்று தன்னை தானே கேள்வி கேட்டுக் கொண்டான். ‘அப்போ இது காதல் தான்னு ஒத்துக் கொள்கிறாயா?’ என்ற அவனின் மனசாட்சியின் கேள்விக்கு அவனால் உடனடியாக இல்லை என்ற பதிலை சொல்ல முடியவில்லை.அதிலேயே அவனுக்கு தன்னுடைய மனதை குறித்த ஒரு புரிதல் வந்து விட்டு இருந்தது.  

இருப்பினும் இன்னும் தன்னுடைய மன நிலையை தெளிவாக தெரிந்து கொள்ள கொஞ்ச காலம் காத்திருத்தல் அவசியம் என்று அவனுக்கு பட்டது.

‘இந்த ஒரு வாரம் நல்லா படியாக ஷூட்டிங்கை முடித்து விட்டு வந்து பிறகு இதை பற்றி யோசிக்கலாம்.அதன் பிறகும் அவள் நினைவு எனக்கு இருந்தால் அவள் தான் என் மனைவி இதை மாற்ற யாராலும் முடியாது.நான் கேட்டு பெண்ணை தர மாட்டேன் என்று சொல்லி விடுவார்களா என்ன? அப்பாவும் அம்மாவும் என் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள்.என்னை திருமணம் செய்து கொள்ள அவளுக்கு மட்டும் கசக்குமா என்ன?’  

அவளை முதலில் எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும்.அவள் பேர் என்ன? ஊர் என்ன? எதற்காக இன்று காலையில் அழுதாள்? முக்கியமாக அவன் யார் என்று தெரிய வேண்டும்? இதை எல்லாம் தெரிந்து கொண்டு தான் திருமண பேச்சை ஆரம்பிக்க வேண்டும்.   அபிமன்யுவின் மனது திட்டங்களை எளிதாக தீட்டியது.ஆனால் அது அத்தனை சுலபமா நடந்து விடுமா என்ன?        

Facebook Comments

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here