Kadhal kathakali Tamil Novel 8

0
147

அத்தியாயம் 8

படக்குழுவில் இருந்த முக்கியஸ்தர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு துரைசாமி அய்யாவின் வீட்டிற்கு சென்றான் அபிமன்யு.

தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த வேலையாளை அழைத்து “வெளியூரில் இருந்து வந்து இருக்கிறோம்.ஒரு முக்கியமான உதவிக்காக அய்யாவை பார்க்க வந்து இருப்பதாக சொல்லுங்கள்”. என்று பவ்யமாக  கூறிவிட்டு உடன் வந்து இருந்த அனைவரிடமும் தான் பார்த்துக் கொள்வதாக உத்திரவாதம் அளித்தவன் அவர் வரும் வரை காத்திருந்தான்.  

அவரை அழைத்து வருவதற்காக வேலையாள் உள்ளே போனதும் வீட்டை இந்த முறை மேலும் கண்ணாலே அலசினான்.எங்கேனும் அவள் தென்படுகிறாளா என்று பார்வையாலேயே துளாவினான்.பார்வைக்கு அவள் சிக்கவே இல்லை.காதுகளை தீட்டி எங்கேனும் அவள் குரல் கேட்கிறதா என்று பார்த்தவனுக்கு மாடியில் இருந்து லேசான கொலுசொலி ஒன்று மட்டும் அவனுக்கு கேட்டது.

அது தன்னுடைய தேவதை தானா என உடனே அறிந்து கொள்ள துடித்தான்.ஆனால் அவசரப்பட்டால் காரியம் கெட்டு விடும் என்பதால் மாடியை நோக்கி ஓடத் துடித்த கால்களை கட்டுப்படுத்திக் கொண்டு அங்கேயே அமர்ந்து இருந்தான்.   மீசை முறுக்கியபடி அங்கே வந்த துரைசாமி அய்யாவை பார்த்ததும் மரியாதைக்கு எழுந்து நின்றவன் அவரை கை கூப்பி வணங்கினான்.  

“என்ன விஷயம் சொல்லுங்க” என்றார் துரைசாமி…ஏதோ முதல் முறை பார்ப்பது போல…  

“ஒண்ணும் இல்லை சார்…நாங்க சென்னையில இருந்து இங்கே ஷூட்டிங் எடுக்க வந்து இருக்கிறோம்… ஆனா பாருங்க இங்கே சில பேர் எங்களுக்கு பிரச்சினை கொடுக்கறாங்க… நாங்க இங்கே ஷூட்டிங் எடுப்பதற்கு தடையாக இருக்காங்க…. நாங்க வேறு இந்த ஊருக்கு புதிது.எங்களுக்கு யாரிடம் சென்று உதவி கேட்பது என்பது தெரியவில்லை.ஊருக்குள்  விசாரித்ததில் நீங்கள் தான் இந்த ஊரில் பெரிய மனிதர் என்று சொன்னாங்க அதான்…. உங்களிடம் உதவி கேட்டு வந்து இருக்கிறோம்” என்று பவ்யமாக கூறி நிறுத்தினான் அபிமன்யு.  

மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு இருந்த துரைசாமியின் கைகள் ஒரு நிமிடம் நின்று பிறகு கடகடவென சிரிக்க தொடங்கினார்.திருடன் கையிலேயே சாவியை கொடுத்த கதையாக பிரச்சினையை ஏற்படுத்தியவரிடமே வந்து நின்று பிரச்சினையை ஏற்படாமல் காக்க உதவுங்கள் என்று கேட்கும் அபிமன்யுவை பார்த்த பார்வையில் இப்பொழுது கொஞ்சம் மதிப்பு கூடி இருந்தது.

  “பலே ஆளு தான் தம்பி நீங்க….என்கிட்டே உதவி கேட்டு வந்துட்டீங்க இல்ல…இனி நான் பார்த்துக் கொள்கிறேன்…இனி உங்க வேலையை நீங்க பார்க்கலாம்…ஷூட்டிங் எந்த தடையும் இல்லாமல் நடைபெறும்” என்று உறுதி அளித்தவர் உட்புறமாக திரும்பி “மேகலா” என்று குரல் கொடுத்தார்.  

மங்களகரமான முகத்துடன் நாற்பதுகளை கடந்த வயதில் ஒரு பெண்மணி வந்தார்.டீ கடைக்காரன் சொன்னது போலவே இருந்தவர் அமைதியாக வந்து நின்றார்.எதிரில் அமர்ந்து இருந்தவர்களை நிமிர்ந்தும் பாராமல் கணவனின் அருகில் வந்து நின்றார் அவர்.  

“மேகலா … இவங்க நம்ம ஊருக்கு ஷூட்டிங் விஷயமா வந்து இருக்காங்க….நம்ம பண்ணை வீட்டில் இவங்க தங்கிக் கொள்ளட்டும்… சரி தானே?சாவியை நம்ம முருகன்கிட்ட கொடுத்துவிடு.முருகன் இவங்களுக்கு உதவியா அங்கேயே தங்கி கொள்ளட்டும். அது மட்டும் இல்லாமல் வேளாவேளைக்கு இவர்களுக்கு வேண்டிய காபி பலகாரம் எல்லாம் நம்முடைய வீட்டில் இருந்து சென்று விட வேண்டும் .அதை எல்லாம் பார்த்துக் கொள்வது உன் பொறுப்பு சரிதானா?… இப்பொழுது இவர்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துக் கொண்டு வா” என்றவர் அவரை பேசவே விடாமல் எல்லாவற்றையும் தானே பேசி அவரை உள்ளே அனுப்பி விட்டு இவர்களை நோக்கித் திரும்பினார்.

அபிமன்யு இந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் இருவரையும் ஊன்றி கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.அவருடன் பேசிக் கொண்டு இருந்த அந்த நேரத்தில் அவரின் மனைவி மறந்தும் இவர்கள் பக்கம் திரும்பவில்லை.அதற்காக முகம் ஒன்றும் பயத்தில் வெளிறியோ அல்லது ஒரு அலட்சிய பாவனையோ இல்லை.

துரைசாமி பேசி முடிக்கும் வரை அவரையே பார்த்துக் கொண்டு இருந்தவர் அங்கிருந்து கிளம்பும் முன் மெதுவாக அங்கு இருந்தவர்களை பார்த்து பொதுவாக ஒரு தலை அசைப்பை கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார். அவர் கண்களில் மெலிதாக இருந்த சோகமும்,அவரது முக ஜாடையும் தன்னுடைய தேவதையை நினைவு படுத்த அவன் உள்மனம் ஒருவித பரபரப்புடன் சுற்றி இருக்கும் விஷயங்களை ஆழ்ந்து உற்று நோக்கத் தொடங்கியது.

“ரொம்ப நன்றி சார்….நாங்க கேட்காமலேயே இவ்வளவு உதவி செய்றீங்க…உங்களுக்கு எத்தனை குழந்தைங்க சார்?”பேச்சுவாக்கில் கேட்பது போல கேட்டான்.

  “நன்றி எல்லாம் எதுக்கு தம்பி…என்னை தேடி வந்துட்டா எந்த உதவியும் நீங்க கேட்காமலே உங்களை தேடி வரும்”   ‘என்னை பகைத்துக் கொண்டால் என்னுடைய இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்’ என்பதையும் மறைமுகமாக அவர் சொல்வது அபிமன்யுவிற்கு நன்றாகவே புரிந்தது.   ஆத்திரத்தில் வார்த்தைகளை விட துடித்த வாயை கட்டுப்படுத்திக் கொண்டு அவரிடம் சிரித்த முகமாவே இருந்தான்.அவனுக்கு காரியம் ஆக வேண்டுமே….

  “எனக்கு ரெண்டு குழந்தைங்க தம்பி…ஆண் ஒண்ணு… பெண் ஒண்ணு….சத்யா … விஷ்வா…என்றவர் கொஞ்சம் இடைவெளிவிட்டு சத்யா டிகிரி படிச்சுட்டு என் கூட பண்ணை வேலைகளில் என்னுடன் ஒத்தாசையா இருக்கான்.விஷ்வா டிகிரி முடிச்சுட்டு வீட்டிலே தான் இருக்கா…”

“என்ன அய்யா பேரை மாத்தி ஏதும் சொல்றீங்களா? பொண்ணு பேரு தான் சத்யாவா? ஆர்வத்தை அடக்கிக் கொண்டு பேசினான் அபிமன்யு.  

“இல்லை தம்பி…பையன் பேரு சத்யநாதன்…பொண்ணு பேரு விஷ்வ சஹானா… நான் எப்பவும் இப்படி தான் கூப்பிடுவது…”அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே வெள்ளி டம்ளரில் பதநீர் கொண்டு வரப்பட அதை குடித்துக் கொண்டே  மெதுவாக வீட்டை நோட்டம் விட்டான்.

  ‘வந்த வேலை முடிந்தாயிற்று…ஆனால் எப்படி கிளம்புவது….இன்னும் அவன் வந்த வேலை முடியவில்லையே…என்ன செய்வது என்று யோசித்தவன் மற்றவர்களை கிளம்பி போகுமாறு கண் ஜாடை செய்தவன் அவர்கள் அங்கிருந்து கிளம்பியதும் துரைசாமியிடம் திரும்பி பேசலானான்.

  “விஷ்வ சஹானா”…தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டவன், “உங்க பொண்ணு பேரு வித்தியாசமா இருக்கே…அதுக்கு என்ன அர்த்தம் அய்யா…தெரிஞ்சுக்கலாமா???”   “அது என் மனைவி வைத்த பெயர்…அர்த்தம்…” என்று கூறிவிட்டு தாடையை நன்றாக சொரிந்து விட்டு “அது என்னமோ என் சம்சாரம் சொன்னா …அது” என்று இழுத்தவர் நினைவு அடுக்குகளில் விடையை தேடிக் கொண்டு இருந்தார்.

  “ஆங்!! நியாபகம் வந்துடுச்சு….உலகத்தையே ஆள பிறந்தவள்ன்னு அர்த்தம் ….. சஹானா….ஏதோ ராகத்தோட பேரு…”   மகளை பற்றியே மேலும் தோண்டி துருவாமல் “அய்யா உங்களால் எனக்கு இன்னும் ரெண்டு உதவி ஆகணுமே ….நீங்க செய்வீங்கன்னு நம்புறேன்.”..என்றான் பவ்வியமாக.  

அவர் என்ன என்பது போல அபிமன்யுவை பார்க்க….  

“ஒண்ணும் இல்லை அய்யா…நாங்க ஏற்கனவே தங்கவேல்ன்னு ஒருத்தர் வீட்டில் தங்கி இருக்கிறோம்…இப்படி சட்டுன்னு உங்க வீட்டுக்கு வந்தா அவர் மனசு வருத்தப் படுவார் இல்லையா…அதனால் நான் நேரில் சென்று அவரை பார்த்து பேசிவிட்டு வருகிறேன்….என்ன தான் இப்பொழுது நீங்கள் உதவி செய்தாலும் ஆரம்பத்தில் இந்த ஊரில் யாரையுமே தெரியாத பொழுது எங்களுக்கு உதவியவர் அவர் தான்.அவர் மனம் புண்படுமாறு ஒரு காரியத்தை செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை.அதனால் அவரிடம் நானே நேரில் சென்று பேச விரும்புகிறேன்…. அதை நீங்கள் தவறாக எடுத்தக் கொள்ள கூடாது.  

அடுத்தது …. எனக்கு உங்க வீடு ரொம்ப பிடிச்சு இருக்கு… அதாவது வீடு கட்டி இருக்கும் முறை ரொம்ப வித்தியாசமா இருக்கு.சிட்டியில இந்த மாதிரி ஒரு வீட்டை பார்க்கவே முடியாது. ஒரு முறை உங்கள் வீட்டை சுத்தி பார்த்து அதை போட்டோ எடுத்துக் கொள்ளலாமா? சென்னையில் இருக்கும் என்னுடைய வீட்டிலும் இதே மாதிரியான சில மாறுதல்களை செய்ய விரும்புகிறேன் அதுதான்…” என்று பதில் உரைத்தவன் அவரின் பதிலுக்காக காத்திருந்தான்.

  தாடையை தடவி சற்று நேரம் யோசித்தவர்… “பாருங்க தம்பி…கிராமத்தில் அவ்வளவு சீக்கிரம் யாரையும் வீட்டிற்குள் விட மாட்டாங்க….அதனால உங்களை உள்ளே அனுமதிக்க எனக்கு விருப்பம் இல்லை….ஆனாலும் அடுத்தவங்க மனசு நோக கூடாதுன்னு இவ்வளவு தூரம் யோசிக்கும் உங்களின் மனதை கஷ்டபடுத்த நான் விரும்பவில்லை ….என்று சொன்னவர் சிறிது இடைவெளி விட்டு, “என் பொண்ணு அறையை தவிர மற்ற அறைகளை தாராளமா போய் பார்த்து விட்டு வாங்க” என்று அனுமதி அளித்தார்.

  ‘பார்க்க வந்ததே உங்க பொண்ணை தான்…இதிலே இப்படி தடை போட்டால் எப்படி’ என்று நினைத்தவன் …. ‘பரவாயில்லை எப்படியாவது அவளை பார்த்து விட வேண்டியது தான்.இந்த அளவிற்கு அவர் அனுமதி தந்ததே பெருசு’ என்று நினைத்தவன்  மனதில் எழுந்த மகிழ்ச்சி எங்கே தன்னை மீறி முகத்தில் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் முகத்தை கொஞ்சம் இறுக்கமாகவே வைத்து இருந்தான்.  

“எலேய்….ராமசாமி…இங்கே வா….இவருக்கு நம்ம வீட்டை சுத்தி காட்டு…” என்று கூறிவிட்டு வாசலில் நின்ற மற்ற வேலையாட்களிடம் வேலை ஏவ வாசலுக்கு விரைந்து சென்றார்.  

வீட்டு வேலைக்காரன் ஒவ்வொரு இடமாக சுற்றி காட்ட பேருக்கு அதை எல்லாம் பார்த்துக் கொண்டே வந்தவன் யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்று தன்னுடைய போனில் ஒரு சில இடங்களை போட்டோ எடுத்துக் கொண்டான்.

மாடியில் ஏறத் தொடங்கியதும் அவனது இதய துடிப்பு சட்டென்று எகிற கண்களை நன்கு சுழட்டியவாறே மாடிக்கு ஏறினான்.   முதலில் இருந்த அறையை திறந்து விட்டவன் இது சின்ன  அய்யா அறை….என்று காட்டியதும் உள்ளே நுழைந்து லேசாக பார்வையிட்டான்.அறைக்குள் முழுக்க முழுக்க தேக்கு மரத்தில் ஆன கட்டில் டேபிள் என்று இருக்க…ஆடம்பர பொருட்கள் என்று எதுவும் இல்லாமல் அறை சுத்தமாக இருந்தது.  

அந்த அறையை கடந்து வெளிவந்தவன் அடுத்த அறைக்குள் நுழைவதற்கு முன் கண்களாலேயே துழாவினான்.அந்த அறைக்குள் உள்ளே நுழையவும் அவனால் முடியவில்லை.ஏற்கனவே கீழே துரைசாமி சொல்லிவிட்டு அனுப்பியது ஒரு காரணம் என்றால் ஒரு வேளை நூற்றில் ஒரு வாய்ப்பாக இது அவளுடைய வீடாக இல்லாமல் வேறு யாரேனும் ஒரு பெண்ணுடைய அறையாக இருந்தால் என்ன செய்வது…என்ற யோசனை ஒரு புறம்.

இனி ஒரு முறை இதை போல ஒரு சந்தர்ப்பம் ஏற்படுவது அரிது.எனவே இப்பொழுதே எப்படியாவது அவளை பார்த்து விட வேண்டும் என்று உறுதி செய்தான். கூடவே இருக்கும் இந்த வேலையாளை ஏமாற்றி அறையின் உள்ளே செல்லவும் முடியாது…என்ன செய்வது என்று யோசித்தவன் அவரிடம் திரும்பி, “ரொம்ப தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொண்டு வரீங்களா? என்று கேட்க. “இருங்க தம்பி நான் போய் எடுத்துக்கிட்டு வரேன்….அந்த அறைக்குள் மட்டும் போய் விடாதீங்க “ என்று மீண்டும் ஒரு முறை ‘பணிவாக’ எச்சரித்தவன் அபிமன்யுவை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே படிகளில் கீழே இறங்கினான்.

அவன் கண் பார்வையை விட்டு கீழே இறங்கிய மறு நிமிடம் மின்னலென அறைக்குள் நுழைந்தவன், தான் பார்த்த காட்சியில் கண்ணை ஒரு நிமிடம் கூட அகற்றாது அப்படியே சிலையென நின்று விட்டான் அபிமன்யு.              

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here