
பொதுவாகவே அபிமன்யு விடியற்காலை நேரம் தன்னுடைய ஜாக்கிங்கை செய்வதற்கு சில காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கிய காரணம் யாருடைய தொந்தரவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் என்பது தான்.இதுவரை அவன் இப்படி இந்த நேரத்தில் ஜாகிங் செய்த பொழுது ஒருமுறை கூட கடற்கரையில் ஆட்கள் கூட்டத்தை பார்த்தது கிடையாது.எனவே எப்பொழுதும் போல ஓடிக் கொண்டு இருந்தவன் தூரத்தில் ஒரு படகிற்கு சற்று தள்ளி இருந்த அந்த பெண்ணை பார்த்தான்.
முழங்கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.எதிரே தெரிந்த கடலின் அலைகளை பார்த்தபடியே இருந்தவள் அப்படியே குனிந்து முழங்கால்களில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.இருள் நிறைந்த அந்த நேரத்தில் அவளை பார்ப்பதற்கு ஒரு மோகினியைப் போலவே தோன்றியது அபிமன்யுவிற்கு.
இந்த நேரத்தில் இங்கே அமர்ந்து என்ன செய்கிறாள் ஒருவேளை தற்கொலை எதுவும் செய்து கொள்ள வந்து இருப்பாளோ என்று ஒரு நிமிடம் சிந்தித்தவன் மறுநொடியே தன்னை சுதாரித்து, ‘இது உனக்கு தேவை இல்லாதது அபிமன்யு….அவள் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.நீ வந்த வேலையை மட்டும் பார்!. நீ இந்த நேரத்தில் அவளுடன் நின்று பேசுவதை யாரேனும் பார்த்தால் அது தேவை இல்லாத வீண் வதந்திகளுக்கு வழி வகுக்கும்’ என்று தனக்கு தானே அறிவுறுத்தியவன் தன்னுடைய போக்கில் ஓடியபடியே அவளை கடந்து சென்றான்.
ஏனோ அபிமன்யுவிற்கு அவள் செத்தால் நமக்கென்ன என்று நினைக்க முடியவில்லை.அவளை கடக்க போகும் கடைசி நொடியில் லேசாக திரும்பி அவள் முகத்தை தெளிவாக பார்க்க முயற்சி செய்தான்.ஆனால் அவளின் அழுகை ஒலி மட்டும் அவனது செவியை தீண்டியது. அவனுக்கு உதவி செய்ய சூரியனுக்கு மனம் இல்லை போலும்.பொழுது சரியாக விடியாததால் அவளின் முகத்தை தெளிவாக அவனால் பார்க்க முடியவில்லை.லேசாக மனம் சலித்தவாறே அவளை கடந்து ஓடினான்.
எப்பொழுதும் அபிமன்யு பெண்களின் பின்னால் சென்று பழக்கம் இல்லாதவன்.தேவை இல்லாமல் எந்த பெண்ணிடமும் நின்று பேச மாட்டான்.அவனுடைய ரசிகைகள் தாங்களாகவே வந்து வழிமறித்து பேசினால் கூட லேசான ஒரு சிரிப்போடு அவர்களை கடந்து சென்று விடுவான். இன்று அவனுக்கு ஏனோ அந்த பெண்ணின் முகத்தை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று தோன்றவே எப்பொழுதும் கடற்கரையில் நேராக ஓடுபவன் அன்று தன்னுடைய ஓட்டத்தை பாதி வழியில் திரும்பி அரை வட்டமடித்து மீண்டும் அவளை நோக்கி ஓடலானான்.
ஹ்ம்ம்… இப்பொழுதும் அவளின் முக தரிசனம் அவனுக்கு கிடைக்கவில்லை .லேசான ஏமாற்றத்தோடு அவளை கடந்து சென்றவன் ஏதோ தோன்ற திரும்பி பார்த்தான்.அவளை நோக்கி ஒரு புதியவன் ஓடி வந்து அவளின் அருகில் அமர்ந்தான் அதுவும் கைகளில் பெட்டியோடு.
‘ஓ !!!! இது ஊரை விட்டு ஓடும் கேஸ் போல’ என்று நினைத்தவன் மனதில் ஒரு வலி தோன்ற சட்டென தன்னுடைய காருக்குள் அமர்ந்து அவர்களை நோட்டம் விட தொடங்கினான்.முகம் கூட தெரியாத ஒருத்தி எப்படி போனால் என்ன என்று அவனால் நினைக்க முடியவில்லை.ஏதோ ஒரு சக்தி அவளை நோக்கி தன்னை ஈர்ப்பதை போன்றதொரு உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.காருக்குள் இருந்தபடியே அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தான் அபிமன்யு.
அந்த புதியவனின் தோளில் சாய்ந்து எதையோ பேசிக் கொண்டு இருந்தாள் அவள். ‘கொஞ்சமாவது பொது இடம் என்ற நினைப்பு இருக்கிறதா? இப்படியா பல பேர் வந்து போகும் இடத்தில் ஒருவனிடம் தோளில் சாய்ந்து கொஞ்சிக் கொண்டு இருப்பது’ என்று ஆத்திரமாக என்ன தொடங்கினான்.
ஆனால் அவனுக்கே ஒரு விஷயம் மறந்துவிட்டது.அது விடியற்காலை நேரம் அந்த நேரத்தில் கடற்கரையே காலியாகத் தான் இருந்தது.அங்கே அந்த நேரத்தில் கடற்கரையில் இருந்தது மொத்தம் ஐந்து பேர் தான்.ஒன்று அபிமன்யு,இரண்டாவது அவள்,மூன்றாவது அந்த அவன்,நாலாவது ஒரு நண்டு ஐந்தாவது ஒரு குருவி…..
அந்த புதியவனும் அவளது தலையை ஆதரவாக தடவிக் கொடுத்தவாறே அமர்ந்து இருந்தான்.அழுகிறாள் போலும் அடிக்கடி கண்களை துடைத்து விட்டுக் கொண்டு இருந்தாள்.நேரம் ஓடிக் கொண்டே இருந்ததே தவிர அவர்கள் இருவரும் அந்த இடத்தை விட்டு அசையவில்லை.
அபிமன்யுவிற்கு திடீரென ஒரு எண்ணம் வந்தது.ஊரை விட்டு ஓடிப் போகிறவர்களாக இருக்கும் பட்சத்தில் இந்நேரம் அவர்கள் கிளம்பி ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்திற்கு சென்று இருக்க வேண்டும்.அதுவும் இல்லாவிட்டால் அட்லீஸ்ட் பஸ் ஸ்டாண்ட் அல்லது ரயில்வே ஸ்டேஷன் என்று இப்படி ஏதாவது ஒரு இடத்திற்கு சென்று இருக்க வேண்டும்.அப்படி இல்லாமல் அவர்கள் இருவரும் பொறுமையாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததே அவனுக்குள் இருந்த சந்தேகத்தை தீர்த்தது.அவள் ஊரை விட்டு காதலனுடன் ஓடி போவதற்க்காக வரவில்லை என்ற எண்ணம் ஏனோ அபிமன்யுவின் நெஞ்சிற்கு நிம்மதியை அளித்தது.தன்னுடைய எண்ணம் போகும் போக்கை உணர்ந்த அபிமன்யுவிற்கு திக்கென்றானது.
‘அவள் யாரோ… எவரோ…. இன்னும் அவள் முகத்தை கூட முழுதாக பார்க்கவில்லை…அவளை பற்றி எனக்கு ஏன் இப்படி எல்லாம் எண்ணம் தோன்றுகிறது என்று தன்னை தானே குட்டு வைத்துக் கொண்டான்.ஆனால் அவளின் முகத்தை பார்க்காமல் அங்கிருந்து கிளம்பி தன்னால் நிம்மதியாக வேலை செய்யமுடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை.
மேலும் தன்னை முதன் முதலாக ஒரு பெண் இந்த அளவிற்கு பாதித்து இருக்கிறாள் அவளை பார்க்காமல் எப்படி போவது?.எனவே ஒரு முடிவுக்கு வந்தவனாக காருக்குள் அமர்ந்து கண்ணாடியை நன்றாக ஏற்றிவிட்டுக் கொண்டு பொழுது விடிவதற்காக காத்திருக்க தொடங்கினான்.
அபிமன்யுவின் காரில் கறுப்பு நிற கண்ணாடிகள் பொறுத்தப்பட்டு இருப்பதால் அவனை வெளியில் இருக்கும் யாராலும் பார்க்க முடியாது.ஆனால் அவனால் காரில் இருந்து எல்லாரையும் தெளிவாக பார்க்க முடியும்.காரில் இருந்தபடியே அவர்களை பார்த்துக் கொண்டே இருந்தான் அபிமன்யு.
சற்று நேரம் அழுது ஓய்ந்தவள் லேசாக விடிய தொடங்கியதும் அவனது தோளில் இருந்து தலையை எடுத்து விட்டு அவனிடம் எதையோ சொல்லிவிட்டு எழுந்து நின்றாள்.எழுந்து நிற்கும் பொழுது தான் அவளை நன்றாக கவனிக்க ஆரம்பித்தான் அபிமன்யு.நீண்ட கருங்கூந்தல் காற்றில் அசைந்தாட அதை பின்னலிட்டு அழகாக ஒற்றை ரோஜா பூவை மட்டும் சூடி இருந்தாள்.
அவளை குண்டு என்றும் சொல்ல முடியாது ஒல்லி என்றும் சொல்ல முடியாது அளவான கச்சிதமான உடல் அமைப்பு.இளம் சிவப்பு நிறத்தில் ஒரு காட்டன் புடவை அவளை சுற்றி தழுவி இருக்க மெதுவாக எழுந்தவள் மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து கடலை நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.அவளுடைய ஒவ்வொரு அசைவிலும் பெண்மையின் மென்மையை அபிமன்யுவால் உணர முடிந்தது.நடக்கும் பொழுது வீண் அலட்டல்கள் இன்றி பூமி நோகுமோ என்று அஞ்சியவள் போல மெல்ல தரையில் பாதம் பதித்து நடந்தாள்.
‘என்ன செய்ய போகிறாள்’ என்று அபிமன்யு பார்த்துக் கொண்டு இருக்கும் போதே கடலின் அலைகளில் கால் நனைத்த படியே அங்கேயே கொஞ்ச நேரம் நின்று கொண்டு இருந்தாள்.அவளது பார்வை கடலை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தது.மெல்ல மெல்ல சூரியன் உதயமானான்.சூரியன் பூமியை முழுதாக ஆக்கிரமித்த அந்த நொடியில் அவளும் திரும்பினாள்.அவள் எப்பொழுது திரும்புவாள் என்று காத்துக் கொண்டு இருந்த அபிமன்யுவிற்கு தன்னுடைய முக தரிசனத்தை தந்தாள்.அபிமன்யுவின் பார்வை அவளை முழுதாக கவ்விக் கொண்டது.
சூரியன் பின்னால் எழும்பி அந்த இடத்தையே தங்க நிறத்தில் மாற்றி இருக்க லேசான சிவப்பு நிற புடவையில் அவளை பார்த்தவனுக்கு அந்த இடம் பூமி என்ற நினைவு துளி கூட வரவில்லை.அவள் அழகாக இருந்தாள்.இயல்பாக சிரித்தாள்.இது அத்தனையையும் தாண்டி ஏதோ ஒரு ஈர்ப்பு அவளிடம் இருந்தது.அது என்னவென்று அபிமன்யுவால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை.
அவன் பார்க்காத அழகிகளா….எத்தனை கதாநாயகிகளோடு சேர்ந்து அவன் ஆடி இருக்கிறான்.அவர்கள் யாரிடமும் இல்லாத ஒரு ஈர்ப்பு விசை இவளிடம் இருந்தது.அவள் முகம் பளிங்கு போல இருந்தது. கண்களில் ஒரு துளி கல்மிஷம் இல்லை.ஒருவித நேர்மை இருந்தது.இன்னும் எத்தனை நேரம் அவன் அப்படி பார்த்துக் கொண்டு இருந்தானோ அவனுக்கு தெரியாது.
அவளாகவே கிளம்பி அந்த புதியவனிடம் வந்து தன்னுடைய பேகையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நடந்து வெளியேற தொடங்கினர்.காரில் இருந்தபடியே அவர்களுக்கு சந்தேகம் இல்லாதவாறு மெதுவாக பின் தொடர்ந்தான் அபிமன்யு.
சற்று தூரம் போனதும் எதிரே வந்த ஆட்டோவை கை காட்டி இருவரும் அதில் ஏறிக் கொண்டனர்.அவர்களுக்கு சந்தேகம் வரக் கூடாது என்று கொஞ்சம் விலகி தூரத்தில் இருந்தே அவர்களை பின் தொடர்ந்தவன் ஒரு சிக்னலில் அவர்களை தவற விட்டான்.அடுத்து என்ன செய்வது? எப்படி அவளை கண்டுபிடிப்பது என்று ஒன்றுமே புரியாமல் யோசித்தவன் தன்னை உலுக்கி சுய உணர்வை அடைந்தான்.
‘அவள் யாரென்றே தெரியாது.அவளை எதற்காக நான் தேட வேண்டும்? நான் நினைத்தால் ஆயிரம் பெண்களை என் பின்னால் வர வைப்பேன் நான் எதற்காக இவளின் பின்னால் இப்படி அலைய வேண்டும்?இவள் என்ன அப்படி என்ன பெரிய உலக அழகியா?ஏதோ விடிகாலை நேரம் சூரிய உதயத்தின் போது அவளை பார்த்தோம்.அதனால் ஏதோ கொஞ்சம் (!) என் கண்களுக்கு அழகாக தெரிகிறாள்.மற்றபடி வேறு ஒன்றும் இல்லை.எனக்கு இவள் எப்படி இணையாவாள்?ஒரு இரண்டு நாள் கழித்து இவள் முகம் கூட தனக்கு நினைவுக்கு வர போவதில்லை’ என்று எண்ணி மனதை தேற்றியவன் அப்பொழுது அறியவில்லை அவன் மனதினை…
ஆட்டம் தொடரும்…