Kadhale Nee Kaanala Tamil Novels 11

0
1948
Madhumathi Bharath Tamil Novels

அத்தியாயம் 11
அதிகாலை நேரத்தில் எழுந்து குளித்து முடித்துத் தயாராய் இருந்த பொழிலரசிக்கு அதன் பிறகு வேறு எதைப் பற்றியும் சிந்திக்கக் கூட நேரம் இல்லை.முதலில் அழகு நிலைய பெண்கள் கொண்டு வந்த உடையை உடுத்திக் கொண்டாள்.அன்று அவள் கேட்டுக் கொண்டதற்காக அதனுடைய தாவணி மட்டும் மாற்றி அமைக்கப் பட்டு இருந்தது.


முன்பு இருந்த அதே தாவணி தான்.ஆனால் தாவணி முழுக்க எம்ப்ராய்டரி செய்யப்பட்டு இருந்தது.அந்த உடைக்குப் பொருத்தமாக ஆங்காங்கே கற்களும் பொருத்தப்பட்டு வைரத்தால் நெய்தது போல அந்தத் தாவணி மின்னிக் கொண்டு இருந்தது.தனக்காகக் கணவன் செய்யும் சின்னச் சின்னச் செயல்களும் எப்பொழுதும் போல இப்பொழுதும் பொழிலரசியைத் தாக்க கணவனிடம் உடனே இது குறித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று பரபரத்தாள்.


ஆனால் எப்படிச் செல்ல அவளைச் சுற்றிலும் எந்நேரமும் ஆட்கள் சூழ்ந்து கொண்டு இருந்தார்கள்.அவளிடம் அப்பொழுது மொபைலும் இல்லை.அதை விட முக்கியம் கணவனின் எண்ணும் அவளிடம் இல்லை.சட்டெனக் கையில் கிடைத்த வெள்ளை காகிதத்தில் இரண்டே இரண்டு வரி எழுதி வள்ளியிடம் கொடுத்து அனுப்பினாள்.


“ நன்றி.தாவணி அழகாக இருக்கிறது.எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கிறது.”


சில நிமிடங்களில் திரும்பி வந்த வள்ளியின் கரங்களில் அதே பேப்பரை காணவும் பொழிலரசியின் முகம் வாட்டமானது.


“ஏன் வள்ளி அவரிடம் கொடுக்க முடியவில்லையா?”


“அய்யா படிச்சுட்டு வேற எதையோ எழுதிக் கொடுத்து இருக்கார்” என்று சொல்லவும் நொடி கூடத் தாமதிக்காமல் வள்ளியின் கரத்தில் இருந்த காகிதத்தைக் கைப்பற்றினாள்.


“சுயநலம் தான்!.ரசிக்கப் போவது நான் தானே!… பிடித்திருப்பது தாவணியை மட்டும் தானா?”


சுற்றி அத்தனை பேரும் சூழ்ந்து இருக்கக் கன்னங்களில் ஏற்படும் சிவப்பினைத் தடுக்க முயன்று கொண்டு இருந்தாள் பொழிலரசி.அவளின் நடவடிக்கைகளை ஆராய்ச்சி கண்ணோடு பார்த்துக் கொண்டு இருந்தாள் வள்ளி. ‘இவள் கடிதத்தைப் படித்ததும் ஐயாவின் முகம் மலர்ந்ததே…அவருடைய கடிதத்தைப் படித்ததும் இவள் முகம் சிவக்கிறது! நாம் தான் எதையாவது தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறோமோ’ என்ற சிந்தனையுடன் பொழிலரசியை மேலும் ஊன்றி கவனித்தாள் வள்ளி.


விக்ரமாதித்யனின் கடிதத்தை ஏதோ பொக்கிஷத்தை பாதுகாப்பவள் போலக் கைகளில் பொத்தி வைத்துக் கொண்டாள் பொழிலரசி.அவள் முகத்தில் இருந்த நாணம் வள்ளியை குழப்பமடையச் செய்தது.
சுற்றி இருந்தோர் அத்தனை பேரும் பம்பரமாய்ச் சுழல, பொழிலரசி பொம்மை போல அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்து இருந்தாள்.மேக்கப் முடித்து,நகைகளை அணிவித்த பின் கண்ணாடியின் முன் தெரிந்த தன்னுடைய பிம்பத்தைப் பார்த்தவள் அசந்து தான் போனாள்.


பொழிலரசி இயல்பாகவே நல்ல அழகி தான் என்றாலும் ஒருநாள் கூடத் தன்னுடைய அழகை அதிகப்படுத்திக் காட்டும் விதமாக உடைகளை அணிந்து கொண்டது இல்லை.உண்மையைச் சொல்லப் போனால் இப்படி எல்லாம் தன்னை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கூட அவள் நினைத்தது இல்லை.


எப்பொழுதும் இயற்கை அழகுடன் மின்னும் பொழிலரசி,இன்று பார்லர் பெண்களின் உபயத்தில் மேலும் மெருகேறி கண்களைப் பறிக்கும் மின்னலை போல இருந்தாள்.


அடர் பச்சை நிறத்தில் இருந்த பாவாடையில் ஆங்காங்கே மயில்கள் நெய்யப்பட்டு இருக்கத் தாவணியில் இருந்த முக்கியமான விஷயம் அவள் கண்ணில் பட்டு முகம் செந்தூரமானது.


விக்ரமாதித்யனை குறிக்கும் வகையில் முப்பத்திரண்டு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருக்க,படிக்கட்டுகள் முடியும் இடத்தில் ஒரு ஒற்றைச் சிம்மாசனம் ஆனால் அது ராஜாவின் சிம்மாசனத்தைப் போல இல்லாமல் காதலை குறிக்கும் வகையில் இதய வடிவில் இருந்தது.


அதில் இருந்து ஒவ்வொரு படியாக ஏறி ஒரு ஆணும் , பெண்ணும் அந்தச் சிம்மாசனத்தை அடைவது போல இருந்தது.மிகவும் ரசித்துப் பார்த்தாள் கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிம்பத்தையும் அந்தத் தாவணியையும்.இது நிச்சயம் கணவனின் தேர்வாகத் தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினாள்.எவ்வளவு ஆசை இருந்து இருந்தால் இப்படி எல்லவாற்றையும் பார்த்து பார்த்துச் செய்து இருப்பார்.என்ற எண்ணம் தோன்றி உள்ளுக்குள் தானாகவே நீரூற்று போல ஒரு உற்சாகம் பொங்கி வழிந்தது.


அவளின் உடைக்குப் போட்டியாக அவளின் கழுத்தில் மின்னிய வைர நகைகள் கண்ணைப் பறித்தன.சிலை போன்ற அவளின் உடலில் ஆடையும்,நகையும் செவ்வனே பொருந்தி இருக்கப் பொழிலரசிக்கு உள்ளூர லேசான தைரியம் கூட வந்தது.அது அத்தனையையும் தாண்டி புது மணப் பெண்ணுக்கே உரித்தான வெட்கம் அவள் முகத்தில் நிரம்பி வழிந்தது.


“எல்லாரும் வர ஆரம்பித்து விட்டார்களாம்.மேடம் உங்களைக் கீழே வர சொல்லி ஐயா சொன்னார்”பணிவாகச் சொல்லி விட்டு வேலைக்காரி வெளியேற படபடக்கும் இதயத்துடன் சுற்றி இருந்தோர் அத்தனை பேரையும் நிமிர்ந்து பார்த்தாள்.யாரும் அவளுக்குத் துணையாக வரத் தயாராயில்லை என்பது அவர்களது முகப் பாவனையிலேயே தெரிந்தது. சோர்ந்த மனதை நொடியில் திடப்படுத்திக் கொண்டு விழா நடக்கும் இடத்திற்குத் தனியாக நடந்து சென்றாள் பொழிலரசி.


இதுவரை பொழிலரசிக்கு அந்த வீட்டில் எல்லா இடங்களும் அவ்வளவு பரிச்சயமானது இல்லை.வந்த புதிதில் யாரையும் பார்க்கப் பிடிக்காமல் அறைக்குள்ளேயே முடங்கி இருந்ததால்,அந்த வீட்டின் மற்ற பகுதிகளை அவள் பார்த்தது இல்லை.


இன்று தான் அந்த வீட்டின் மிகப்பெரிய ஹாலுக்குள் நுழைந்தாள்.அதுவும் சாதாரணமாக இல்லை ஒரு அரசியைப் போல.ஹாலுக்குள் அவள் நுழைந்ததும் மத்தாப்பு மழை பொழிய மேற்கத்திய பாணியில் பெண் குழந்தைகள் அவளைச் சூழ்ந்து கொண்டு அவளின் கரம் பற்றி மேடையை நோக்கி அழைத்து வரப் பட்டாள்.


வந்து இருந்தோர் அத்தனை பேரின் முகங்களும் பொழிலரசியை ஆர்வத்துடன் பார்க்க கொஞ்ச சங்கோஜப் பட்டு லேசாகத் தலையைக் குனிந்தவாறு நடந்து வந்தவளின் காதில் தெளிவாக விழுந்தது திலகவதியின் முணுமுணுப்பு.


“நீ வெட்கப்படறியா? இல்லை மற்றவர்களின் கேள்விகளுக்கும்,இகழ்ச்சியான பார்வைக்கும் பயந்து தலையைக் கீழே தொங்கப் போட்டுக் கொள்கிறாயா?”


அதுவரை சங்கோஜத்தில் குனிந்து நடந்து வந்து கொண்டு இருந்தவள் மெல்ல திரும்பி ஒரு பார்வை திலகதியை நோக்கி செலுத்த அவளோ , “உன் பார்வைக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன்” என்று சொல்லாமல் சொல்வது போல முறைப்புடன் நின்று கொண்டு இருந்தாள்.


முகத்தில் லேசான புன்னகை அரும்பத் தலையை நேராக நிமிர்த்தி அதே நேரம் ஒரு அரசிக்கு உண்டான கம்பீரத்துடன் நடக்க ஆரம்பித்தவள் எழிலாகத் திரும்புவது போலத் திரும்பி திலகவதியை பார்த்து பார்வையாலேயே கேட்டாள் ‘எப்படி’ என்று.அவளுக்குப் பதில் சொல்லாமல் முகத்தைக் கோபமாகத் திருப்பிக் கொண்டாலும் திலகவதிக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி தான்.


திலகவதியை பற்றி அறிந்து இருந்ததினால் உதட்டில் உறைந்த புன்னகையுடன் கம்பீரமாக நடந்து வந்தவள் மெதுவாகப் பார்வையைச் சுழல விட்டவாறே மேடையில் ஏறி நின்றாள்.அவள் மட்டுமே மேடையில் நிற்க, ‘இன்னும் அவரைக் காணோமே… இந்த உடையையும் , அலங்காரத்தையும் அவரிடம் காட்டி எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமே’ என்று பரபரத்துக் கொண்டு இருந்தது அந்தப் பேதையின் மனம்.


திடீரென்று மொத்த இடமும் அமைதியாகி விடப் பேண்டு வாத்தியங்கள் முழங்க, ஒரு அரசனின் கம்பீரத்தோடு அந்த இடத்திற்குள் நுழைந்தான் விக்ரமாதித்யன்.வெள்ளை நிற ஷெர்வானி உடை அவனை ஒரு இந்திரனைப் போலவே காட்டியது.


வந்து இருந்த அனைவருக்கும் ஒரு மரியாதை கலந்த தலை அசைப்பை அளித்தவன் சிங்கத்தின் கம்பீரத்துடன் மேடையை நோக்கி சென்றான்.அலட்டல் இல்லாத ஆளை மயக்கும் சிரிப்புடன் மேடை ஏறி வரும் கணவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் பொழிலரசி.


‘என்ன நடை…அதில் எத்தனை கம்பீரம்…அதிலும் இந்த உடை அவருக்கு எவ்வளவு அழகை கொடுக்கிறது’ என்று திருமணத்தின் போது தான் கவனிக்காத ஒவ்வொரு விஷயத்தையும் இப்பொழுது பார்த்து,பார்த்து மகிழ்ந்தாள் பொழிலரசி.கணவனின் அழகை ரசித்துக் கொண்டே இருந்தவளின் கண்கள் தன்னையும் அறியாமல் அவனுடைய கண்களை நோக்க அந்த நேரம் அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.


அவன் கண்கள் பொழிலரசியை விட்டு இம்மியும் நகரவில்லை.சுற்றி இருந்தோர் யாரும் அவன் கண்ணில் பட்டதாகக் கூடத் தெரியவில்லை.பொழிலரசியின் இந்த அலங்காரம் அவனை வேரோடு சாய்த்தது என்றே சொல்லலாம்.அவனுடைய துளைக்கும் பார்வையைத் தாங்க முடியாமல் பொழிலரசி வெட்கத்துடன் தலை கவிழ்ந்து விட அவனின் ஆண்மை சிலிர்த்து எழுந்தது.


இதை விட ஒரு ஆணுக்கு என்ன பெருமை இருக்கிறது?தன்னுடைய மனைவி தன்னைப் பார்த்ததும் நாணத்துடன் தலையைக் கவிழ்ந்து கொள்வது.நெஞ்சு நிறையப் பூரிப்போடு அவளின் அருகில் சென்று லேசாக உராய்ந்தவாறே நின்றான்.பொழிலரசியும் ஏதோ மயக்கத்தில் இருப்பவளை போலக் கணவனையே விழி அகற்றாமல் பார்த்தபடி அசையாமல் நின்றாள்.


கீழே இருந்தபடி இவர்களின் பார்வை பரிமாற்றத்தை ரசிக்க முடியாமல் இருந்தவர் பத்மாவதி ஒருவரே.என்ன தான் பொழிலரசி நல்ல அழகியாகவே இருந்தாலும் இருவரின் பொருத்தம் கண்ணுக்கு லட்சணமாகவே இருந்தாலும் அவரால் ஒன்றுமே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த ஒரு பெண்ணைத் தன்னுடைய மகனின் மனைவியாக நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.


இளையராஜாவின் இன்னிசை கச்சேரி ஒருபுறம் களைகட்ட,உணவு பஃப்பே முறைப்படி பரிமாறத் தயாராக இருந்தது.இதற்கிடையில் விருந்தினர்கள் ஒவ்வொருவாராக மேடையேறி வாழ்த்து சொன்ன வண்ணம் இருந்தனர்.வந்த விருந்தினர்களுக்குச் சலிப்பு தட்டாத விதத்தில் ஒரே நேரத்தில் வித விதமான கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தன.


விக்ரமாதித்யன் மேடையில் ஏறிய பிறகு மெதுவாகப் பிறர் கருத்தை கவராத வண்ணம் பொழிலரசியின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.அவளின் கைகள் ஒரு நொடி சிலிர்த்துப் பின் அவன் கைகளுக்குள் பாந்தமாய் அடங்கியது.மற்றவர்களை அறிமுகப் படுத்துவது போல வேண்டுமென்றே மனைவியின் காதருகில் குனிந்து பேசினான் விக்ரமாதித்யன்.ஒவ்வொரு முறை அவன் பேசி விட்டு நிமிரும் வரை அடக்கி வைத்து இருந்த மூச்சை, அவன் கொஞ்சம் நகர்ந்த பின் தான் விடுவாள் பொழிலரசி.


கணவனின் சின்னச் சின்னச் சீண்டல்களில் தேகம் மெல்ல பதறத் தொடங்கியது.அதிலும் அன்று அவன் கோடு காட்டி பேசிய பேச்சு இன்று அவள் நினைவில் வந்து இம்சித்தது.


முகம் சிவக்க ஓரக்கண்ணால் கணவனைப் பார்க்க அவனும் அவளைத் தான் குறுகுறுவென்று பார்த்து வைத்தான்.வந்தவர்கள் அனைவரும் விக்ரமாதித்யனின் புகழ் பாடினார்கள்.தன் கணவனின் வீரதீர பிரதாபங்களைக் கேட்க எந்தப் பெண்ணுக்குத் தான் பிடிக்காது.கணவனின் பெருமைகளைக் காது குளிர கேட்டாள் பொழிலரசி. அதே பெருமையைக் கண்களில் தேக்கியவாறே கணவனைக் காதலோடு ஒரு பார்வை பார்த்தாள்.


அதற்காக…அந்த ஒரு பார்வைக்காகத் தானே அவன் காத்திருப்பதும்.இரும்பை இழுக்கும் காந்தமென அவன் பார்வை அவளை இழுத்துக் கொண்டது. ‘ஒற்றைப் பார்வையில் மூச்சை திணறடிக்க முடியுமா? இதோ இவனால் முடிகிறதே…’ என்று நினைத்துக் கொண்டாள் பொழிலரசி.


கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியதும் அருகில் இந்தச் சோபாவில் இருவரும் சற்று நேரம் ஓய்விற்காக அமர இது தான் சாக்கு என்று மனைவியை வெகுவாகப் பார்வையிட ஆரம்பித்தான் விக்ரமாதித்யன்.அவனின் பார்வையில் முகம் சிவந்தவள் தலையை நிமிர்த்தவே இல்லை.


“பொழில்”உள்ளங்கையை மெதுவாக அழுத்தினான்.


“ம்”மெல்லிய முணுமுணுப்பு மட்டுமே பதிலாக


“எப்போ இதெல்லாம் முடியும்ன்னு இருக்கு… நமக்கான நேரத்திற்காக என்னை ரொம்பவும் ஏங்க வைக்கிற பொழில்…உனக்கு இந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லையா?”


“…”


“இன்னைக்கு உன்னோட அலங்காரம் என்னைப் பாடாய் படுத்துது பொழில்…ஆமா வள்ளியிடம் மறுபடியும் நான் எழுதிக் கொடுத்தது உனக்குக் கிடைச்சுதா? இல்லையா?”


“ம்”


“அப்புறம் ஏன் பதில் சொல்லலை..?”


“…”


“பதில் பேச மாட்டியா?இப்ப வேணா நீ அமைதியா இருந்து என்கிட்ட இருந்து தப்பிக்கலாம்.ஆனா நைட் எப்படித் தப்பிக்கிறன்னு நானும் பார்க்கிறேன்”உல்லாசம் வழிந்து ஓடியது அவன் குரலில்


“…”


“பொழில் உன் வெட்கம் என்னை மேலும் முன்னேற சொல்லித் தூண்டுது.தயவு செய்து எதையாவது பேசிடு.இப்படி நீ அமைதியா இருந்தா,அப்புறம் சுத்தி இத்தனை பேர் இருக்கிறாங்க அப்படிங்கிற விஷயம் எனக்கு மறந்துடும்.”பொழிலின் அமைதியை பொறுக்க முடியாமல் பேசிக் கொண்டே போனான் விக்ரமாதித்யன்.அவனின் குரலில் இருந்தது ஏக்கமா,ஆதங்கமா,தாபமா பிரித்தறிய முடியவில்லை அவளால்.


“ஷ்… என்ன பேச்சு இதெல்லாம் அதுவும் சுற்றிலும் இத்தனை பேரை வைத்துக் கொண்டு…யார் காதிலாவது விழுந்தால்…”


“என் பொண்டாட்டி நான் பேசுவேன்…என்னை யார் கேள்வி கேட்பாங்க?”சவால் இருந்தது அவன் குரலில்.


“ஆமா…ஆமா… நீங்க பெரிய இவராயிற்றே…உங்களை யாராலும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது தான்.”போலிப் பணிவு காட்டி கேலி செய்தாள் பொழிலரசி.


“கேலியா செய்கிறாய்? உன்னை” என்று காதை பிடித்துத் திருகியவனின் கரங்கள் மெல்ல அவளுடைய கன்னங்களை நோக்கி பயணிக்கப் பொழிலரசி ஒரு நிமிடம் உறைந்தவள் சட்டெனச் சுற்றுபுறம் உறைக்க அவன் கைகளைத் தட்டி விட்டாள்.


“என்ன இது? எல்லாரும் நம்மைத் தான் பார்க்கிறாங்க?”கோபம் போலக் காட்டிக் கொள்ள முயன்றாள் பொழிலரசி.


“இன்றைய விழாவின் நாயகனும்,நாயகியும் நானும் நீயும் தான் பொழில்.ஸோ எல்லாரும் நம்மைத் தான் பார்ப்பாங்க…அதுக்குத் தான் சொல்றேன் சீக்கிரம் ரூம்க்கு போகலாம்ன்னு”அவன் விழிகள் சொன்ன சேதியில் கன்னங்கள் மீண்டும் சூடேறத் துவங்கியது.


“மணி இப்போ தான் ஒண்ணு ஆகுது…அதுக்கு இன்னும் ரொம்ம்ம்ப நேரம் இருக்கு”வேண்டுமென்றே நீட்டி முழக்கினாள்.


“உனக்குக் கொஞ்சம் கூட என் மீது இரக்கமே இல்லை…”என்று சொன்னவன் குழந்தை போல முகத்தைத் திருப்பிக் கொண்டான்.


“ஆக்கப் பொறுத்தவர், ஆறப் பொறுக்க மாட்டீங்களா?”


“வாட்? கம் அகெய்ன்” என்றான் அவள் சொன்னதின் அர்த்தம் புரியாமல்.


“இன்னும் சில மணி நேரம் காத்திருப்பதால் குடி முழுகி விடாது என்று சொன்னேன்” என்று அவனுக்குப் புரியும்படி மெல்லிய சிரிப்போடு விளக்கியவளுக்கு அப்பொழுது தெரிந்து இருக்கவில்லை.உண்மையில் குடி முழுகத் தான் போகிறது என்று.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here