
விருந்தினர்களின் வருகை கொஞ்சம் குறைந்த போதும் முற்றிலுமாக நின்று போகவில்லை.பெரும்பாலும் எல்லாரும் வாழ்த்தி முடித்து இருக்கவே இன்னும் சற்று நேரத்தில் எல்லாரும் கிளம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்த சமயம் அந்த ஹாலில் ஒரு சலசலப்பு.துப்பாக்கி ஏந்திய காவலர்கள் முன்னே வர அவர்களுக்குப் பின்னே ஒரு குடும்பம் வந்து கொண்டு இருந்தது.
யானை வரும் பின்னே அதன் ஓசை வரும் முன்னே என்னும் பழமொழிக்கு ஏற்ப அவர்கள் அறைக்குள் வருவதற்குள் அங்கிருந்த கேமராக்கள் அவர்களைச் சுற்றி சுற்றி போட்டோவை எடுத்துத் தள்ள மின்னல் மின்னுவது போல அந்த இடமே கொஞ்ச நேரம் மாறி விட்டது.மற்றவர்களின் செய்கையால் பொழிலரசியின் கவனம் இப்பொழுது வாசல் புறம் திரும்ப விக்ரமாதித்யன் மெல்லிய குரலில் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டான்.
“ம்ச்…நான் இங்கே இருக்கிறேன்…அங்கே என்ன பார்வை?”கோபத்திற்குப் பதிலாக ஏக்கம் இருந்தது அவன் குரலில்.
“யாரோ வர்ற மாதிரி இருக்கு…அதான்”பார்வையை இன்னும் அவன் புறம் திருப்பவில்லை அவள்.
“ரிஷப்ஷன் முடியற வரை யாராவது வந்துக்கிட்டு தான் இருப்பாங்க…அவங்களையே பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி…கொஞ்சம் கடைக்கண் பார்வையை என் பக்கமும் திருப்புறது…”
லேசாக அவன் புறம் திரும்பியவள் கண்ணைச் சுருக்கி ஒற்றைச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள்.விக்ரமாதித்யன் அடுத்து என்ன பேசி இருப்பானோ மேடையில் ஏறி வந்தவர்கள் புறம் எதேச்சையாகத் திரும்பியவனின் முகம் இருண்டது.கணவனின் முக மாறுதலுக்கான காரணம் என்னவென்று புரியாமல் அவளும் திரும்பிப் பார்த்தாள்.
அந்தக் குடும்பம் இப்பொழுது மேடை ஏறிக் கொண்டு இருந்தது.கணவன்,மனைவியாகச் சற்று பருத்த தேகத்துடன் உடலெங்கும் வைரங்கள் வாரி இறைக்க இருவரும், அவர்களுக்குப் பின்னால் தேவதை போன்ற அழகுடன் ஒரு பெண்ணும் வந்து கொண்டு இருந்தனர்.
‘இவர்களைப் பார்த்து இவர் முகம் ஏன் இப்படி மாறுகிறது?அவருக்கு எதிரியோ? அப்படிப்பட்டவர்களாக இருந்து இருந்தால் இவர்கள் ஏன் இங்கே வர வேண்டும்?இவ்வளவு தூரம் வெறுக்கின்ற ஒரு குடும்பத்திற்குத் தன்னுடைய கணவன் நிச்சயம் அழைப்பு விடுத்து இருக்க மாட்டார்’ என்று அவள் உறுதியாக நம்பினாள்.
எதுவாக இருந்தாலும் பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தவள் திரும்பி நின்று வந்தவர்களைப் பார்த்து வரவேற்பாகப் புன்னகைத்தாள்.திடீரென்று எங்கிருந்தோ அந்த இடத்திற்கு வேகமாக ஓடி வந்தான் ஆதித்யனின் தம்பி விஜயேந்திரன்.
‘இவர் ஏன் இப்படி ஓடி வருகிறார்?’ என்று அவள் நினைத்துக் கொண்டே விஜயேந்திரனைப் பார்த்தாள்.அவன் பார்வை முழுக்க முழுக்க அவர்களின் கூட வந்து இருந்த அந்தப் பெண்ணின் மீதே இருந்தது.அவளும் அப்போது அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள் கண்களில் மையலுடன்…பொழிலரசிக்கு எதுவோ புரிவது போல இருந்தது.
அதை உறுதிப்படுத்திக் கொள்ளத் திரும்பி கணவனின் முகத்தைப் பார்த்தவள் திகைத்துத் தான் போனாள்.அவ்வளவு நேரம் வரை இருந்த இலகு நிலை மாறி முகம் கல்லென இறுக நின்று கொண்டு இருந்தான்.அதை எல்லாம் அவர்களில் ஒருவரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
முகம் எல்லாம் பல்லாக இருந்தவர்கள் இருவரின் அருகிலும் நின்று போட்டோவிற்கு அழகாகப் போஸ் கொடுத்து விட்டுக் கையில் கொண்டு வந்து இருந்த நகைப் பெட்டியை பொழிலரசியிடம் நீட்ட மறுப்பின்றி வாங்கிக் கொண்டாள்.ரிஷப்ஷனுக்கு வந்து கொடுக்கும் போது அதை மறுப்பது அநாகரீகம் ஆயிற்றே…என்று வாங்கியவள் கணவனின் கோபமான பார்வையில் திகைத்துப் பின் சமாளித்துக் கொண்டாள்.
விஜயேந்திரன் வந்து இருந்தவர்களை ஒவ்வொருவராக அவளுக்கு அறிமுகம் செய்து வைக்க விக்ரமாதித்யனோ யாருக்கு வந்த விருந்தோ என்ற பாவனையில் எதிரே சுவற்றில் இருந்த அலங்கார விளக்கை ரசித்துக் கொண்டு இருந்தான்.
“இவங்க மேனகா…இவர் மேனகாவோட அப்பா,இவங்க அம்மா,இவங்க ராஜ வம்சம்.எங்க சொந்தத்தில் எங்களுக்கு இணையா இருக்கிறவங்க இவங்க தான்.அது மட்டும் இல்லாம எனக்கும் மேனகாவுக்கும்…” என்று தயங்கியவனின் முகத்தில் லேசான வெட்கத்தின் சாயல் மின்னி மறைய அவனுக்கு அதிகச் சிரமம் கொடுக்காமல் “புரிந்தது” என்று தலை அசைத்தாள் பொழிலரசி.
“சீக்கிரமே எங்க கல்யாணத்தை வச்சுக்கலாம்னு இரண்டு பேர் வீட்டிலயும் பேசி முடிச்சு இருக்காங்க…”
“ரொம்பச் சந்தோசம்…வாழ்த்துக்கள்” உளமாறச் சொன்னாள் பொழிலரசி.
“சரி நான் இவங்களை நல்ல படியா கவனித்து அனுப்பி வைக்கணும்” என்று சொன்னவன் ஆட்டுக் குட்டி போல அந்தக் குடும்பத்தின் பின்னாலேயே சென்றான். மேனகா மட்டும் ஒற்றைத் தலையசைப்பால் அங்கிருந்து கிளம்புவதாகச் சொல்ல மகிழ்ச்சியுடன் பொழிலரசியும் விடை கொடுத்தாள்.
அவர்கள் சென்று வெகு நேரம் கழித்துக் கூடக் கணவனின் முகம் இயல்புக்கு திரும்பாததை உணர்ந்தாலும் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.மதியம் இரண்டு மணி அளவில் பெரும்பான்மையான கும்பல் குறைந்து இருக்க,இருவரும் தனித்தனியாகத் தங்கள் அறைகளில் ஓய்வு எடுத்துக் கொள்ளச் சென்றார்கள். “அறையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு.அங்கேயே ஓய்வெடு” என்று மரத்த குரலில் கணவன் சொல்ல உள்ளுக்குள் கொஞ்சம் செல்லமாகக் கணவனைச் சலித்துக் கொண்டாள் பொழிலரசி.
‘என்னவாம்…இவ்வளவு நேரம் எவ்வளவு ஆசையா பேசுனீங்க…இப்போ மட்டும் என்ன வந்துச்சு?’ என்று உள்ளுக்குள் புலம்பியபடியே தன்னுடைய அறைக்குச் சென்றாள் பொழிலரசி.
முதல் வேலையாக அந்த உடைகளையும், நகைகளையும் கலைந்தவள் வள்ளியை இன்டர்காமில் அழைத்து உணவு கொண்டு வர சொன்னாள்.வள்ளி வருவதற்குள் முகத்தைக் கழுவி விட்டு அங்கிருந்த ஒற்றைச் சோபாவில் சற்று ஓய்வாக அமர்ந்தவள் கதவு தட்டும் ஒலியில் திடுக்கிட்டாள்.
‘வள்ளிக்கு போன் செய்து ஐந்து நிமிடம் கூட இருக்காதே…அதுக்குள்ள எப்படி வந்தா? ஒருவேளை அவரா இருக்குமோ?அவராக இருந்தால் கதவை தட்டி அனுமதி எல்லாம் கேட்க மாட்டாரே’ என்று எண்ணியவள் அப்பொழுது தான் கதவை கவனித்தாள்.உடை மாற்றுவதற்காக அறையின் கதவில் தாழ்ப்பாள் போட்டு இருப்பதை.வேக வேகமாகச் சென்று கதவை திறந்தவள் அங்கே இருந்தவளை பார்த்து ஆச்சரியத்தில் விழி விரித்தாள்.அங்கே நின்று கொண்டு இருந்தவள் மேனகா.
“உள்ளே வரலாமா? உங்களுக்குத் தொந்தரவு ஒண்ணும் இல்லையே” என்று இயல்பாகக் கேட்ட படியே அறைக்குள் பிரவேசித்தாள் மேனகா.
“அ…அதெல்லாம் ஒண்ணும் இல்லை…உள்ளே வாங்க”
“அங்கே மேடையில் உங்ககிட்ட சரியா பேச முடியலை.அதான் இங்கே வந்தேன்.உங்களுக்கு ஓய்வு எடுக்கணும்னா சொல்லுங்க…நான் போயிட்டு அப்புறமா வரேன்”கிளம்ப எத்தனித்தவளின் கைகளைப் பிடித்து நிறுத்தினாள் பொழிலரசி.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை …வாங்க.தனியா இருக்க ரொம்பப் போர் அடிச்சுப் போய் இருந்தேன்.நல்லவேளை நீங்க வந்தீங்க…உட்காருங்க கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க” என்று சொன்னவள் அவளின் கைகளைப் பிடித்துச் சோபாவில் அமர வைக்கச் சற்று நேரம் என்ன பேசுவதென்று தெரியாமல் இருவரும் மௌனமாகவே இருந்தனர்.
“சின்னவரை உங்களுக்கு எப்படித் தெரியும்?”கதை கேட்கும் ஆவலில் கேட்டாள் பொழிலரசி.
“இங்கே எங்கள் எல்லாருடைய வீட்டிலும் வாரத்திற்கு ஒருமுறையாவது பார்ட்டி நடக்கும்.அப்படி அடிக்கடி எல்லாரும் சந்திச்சுப்போம்.”
“ஓ…சரி சரி …கல்யாணம் ஏன் ஒரு வருஷம் கழிச்சு முடிவு செய்து இருக்காங்க…”
“எங்க வீட்டில் எல்லாருக்கும் சம்மதம் தான்.உடனே செய்து வைக்க அவங்க தயார் .ஆனா இங்கே தான்…”
“ஏன்…ஜாதி பிரச்சினை அது மாதிரி எதுவுமா?” உங்களைப் போல ஒரு அழகியை மறுக்கணும்னா வேற ஏதாவது காரணம் இருக்குமே…”குழப்பம் நிறைந்த குரலில் கேட்டாள் பொழிலரசி.
“பெரியத்தானுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை…அதனால”
“ஏன்?” கூரிய பார்வையுடன் கேட்டாள் பொழிலரசி.
“தெரியலை…அவருக்கு எங்களை ஏனோ பிடிக்கலை.என்னை தனியே கூப்பிட்டு மிரட்டிக் கூட இருக்கார்.ஆனா நானும் விஜியும் எங்க காதலில் உறுதியா இருந்தோம்.அதனால அவரோட எண்ணம் ஈடேறவில்லை.அ…அதுக்கு அப்புறம் எங்க வீட்டு ஆட்களைக் கொல்ல கூட முயற்சி செய்தார்.ஏதோ கடவுள் புண்ணியத்தில் நாங்க தப்பிச்சுட்டோம்.அதுக்கு அப்புறம் தான் நாங்க வெளியே எங்கே போனாலும் இது மாதிரி ப்ளாக் கேட்ஸ் கூட்டிட்டு போக ஆரம்பிச்சோம்.ஹலோ…என்னங்க…என்ன ஆச்சு? நான் பேசுறதை கேட்கறீங்களா இல்லையா?”பதட்டத்துடன் பொழிலரசியின் தோள் தொட்டு உலுக்கினாள் மேனகா.
“ஆங்…நீங்க சொல்றதெல்லாம் நிஜமா?”அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளிவர முடியவில்லை அவளால். ‘தன்னுடைய கணவன் கொலை செய்யக் கூடத் தயங்காதவனா? இதனால் தான் அன்று விஜயேந்திரன் பேசிய பொழுது கூட அவர் கொலை செய்து விடுவார் என்று சொன்னாரோ’ உள்ளுக்குள் மிகப் பெரிய பிரளயமாக மாறி இருந்தது அவள் உள்ளம்.
“எங்க காதல் மேல சத்தியம்”உணர்ச்சிப் போங்க பேசிய மேனகா பொழிலரசி கரத்தில் தன்னுடைய கைகளை அழுத்தி சத்தியம் செய்தாள்.
‘இதை எப்படி நம்பாமல் இருக்க முடியும்?’ என்ற கேள்வி தோன்றிய உடனேயே மற்றொரு கேள்வியும் தோன்றியது அவள் உள்ளத்தில். அதை மறக்காமல் மேனகாவிடம் கேட்கவும் செய்தாள்.
“உங்களைக் கொல்ல நினைக்கிறவரின் வீட்டு விசேஷத்திற்கு எதுக்காக வந்தீங்க? இப்போ மட்டும் உங்க உயிருக்கு ஆபத்து இல்லையா?”
“நிச்சயம் ஆபத்து இருக்கு தான்.அதுக்காக என்னால் இங்கே வராமல் இருக்க முடியாதே…விஜி என்கிட்டே இங்கே நான் வந்தே ஆகணும்னு ஒரே பிடிவாதம்.இன்னைக்கு அவரோட சொந்தங்கள் முன்னாடி வச்சு எங்க கல்யாணத்தை உறுதி செஞ்சுட்டா,அதுக்குப்பிறகு பெரியத்தான் கொஞ்சம் இறங்கி வந்து தானே ஆகணும்.
அதுவுமில்லாம குறைந்தபட்சம் உங்க முன்னாடி அவர் நல்லவர் வேஷம் போடுவார் இல்லையா?அது எங்களுக்குச் சாதகமான விஷயம்.அந்த வாய்ப்பை நழுவ விட நாங்க இரண்டு பேருமே தயாரா இல்லை.அதுதான் ரிஸ்க்னு தெரிஞ்சே இந்த வேலையில் இறங்கினோம்.”
“…”
“ஆனா எனக்கும் அவருக்கும் புரியாத விஷயம் ஒண்ணே ஒண்ணு தான்.இவ்வளவு பணக்காரக் குடும்பத்தில் பிறந்த என்னையே அவர் வீட்டுக்கு வர ஏற்ற மருமகள் இல்லைன்னு சொல்லி என்னை விரட்ட கொலை செய்யும் அளவுக்குப் போய் இருக்கார்.உங்களை ஏன்?…”
“இதையெல்லாம் என்கிட்ட சொல்லத் தான் இப்ப வந்தீங்களா?”உணர்வுகள் மரத்த நிலையில் கேட்டாள் பொழிலரசி.
“இல்லைன்னு மறுக்க மாட்டேன்.இதை எல்லாம் உங்களுக்குச் சொல்லி உங்களைக் கொஞ்சம் எச்சரிக்கலாம்ன்னு நினைச்சேன்.பெரியத்தான் ஒரு விஷயத்தில் இறங்கிட்டா அதில வெற்றி அடைய என்ன வேணும்னாலும் செய்வார்.அது அவர் கூடவே பழகின எங்களுக்குத் தெரியும்…உங்களுக்குத் தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லையே”
“உங்க அக்கறைக்கு நன்றி…நான் பார்த்துக்கிறேன்.நீங்க கிளம்புங்க” முயன்ற அளவு இயல்பாகவே இருப்பதைப் போலக் காட்டிக் கொள்ள முயன்றாள் பொழிலரசி.
“நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா…”
“அது தான் சொல்லிட்டேனே … நான் பார்த்துக்கிறேன்ன்னு …நீங்க கிளம்புங்க.உங்களைச் சின்னவர் தேடப் போறார்”அவளை தள்ளி விடாத குறையாக அறையை விட்டு அனுப்பி விட்டு மீண்டும் அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தாள் பொழிலரசி.
அதன் பிறகு வள்ளி கொண்டு வந்து வைத்து விட்டுப் போன உணவு கேட்பாரின்றிக் கிடந்தது.பொழிலரசி இப்பொழுது நிச்சயம் உணவு சாப்பிடும் மனநிலையில் இல்லை.இதைப்பற்றிக் கணவனிடம் உடனே கேட்டுத் தெளிவுப் பெற்றுக் கொள்ளும் எண்ணம் உந்தவே அதற்கு மேல் அறைக்குள் இருக்கப் பிடிக்காது அறையை விட்டு புயலென வெளியேறினாள்.
அவள் மனதில் கணவன் மீது மலையளவு நம்பிக்கை இருந்தது.இருப்பினும் யாரோ ஒரு பெண் தன்னுடைய கணவனைப் பற்றிக் குற்றம் சாட்டி பேசுவதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.குறைந்தபட்சம் கணவன் இதை மறுத்து பேசும் போது கணவனைப் பற்றி மேனகா இப்படித் தவறாகச் சித்தரிப்பதற்குப் பின்னே இருக்கக் கூடிய காரணத்தை அறிந்து கொண்டே தீர வேண்டும் என்ற எண்ணத்தினால் அவள் வேகமாகக் கணவனின் அறைக்கு விரைந்தாள்.
கணவனின் மனம் புண்படாதவாறு இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்ற,விக்ரமாதித்யனின் அறை வாசலியே நின்று விட்டாள். அழகாக வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டு நாலைந்து முறை மனதுக்குள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டு அறையின் உள்ளே சென்றவளை வரவேற்கத் தான் அங்கே அவன் இல்லை.
விக்ரமாதித்யனின் அறையில் பணியாட்கள் அவனுடைய அறையைச் சுத்தம் செய்து கொண்டும்,அன்றைய இரவுக்கான பிரத்யேக அலங்கரிப்பிலும் ஈடுபட்டு இருந்தனர்.அறைக்குள் நுழைந்த பொழிலரசி சற்று நேரம் கண்களால் கணவனைத் துழாவினாள்.அவளுடைய கண்களுக்குத் தட்டுப்படாததால் அங்கிருந்த வேலையாளை அழைத்து விபரம் கேட்டாள்.
பத்மாவதியின் அறைக்குச் சென்று இருப்பதாகத் தகவல் வரவே, ஒரு நிமிடம் அங்கே செல்வதா வேண்டாமா என்று தயங்கியவள் அடுத்த நொடி அங்கிருந்து புறப்பட்டு நேராகப் பத்மாவதியின் அறைக்குள் சென்றாள்.கதவு திறந்தே இருக்கவே லேசாகக் கதவை ஒரு முறை தட்டி விட்டு உள்ளே சென்றாள்.
அறைக்குள் அவள் வருவதையே கவனிக்காமல் பத்மாவதியின் அறையில் உள்ள ஹாலை கடந்து உள்பக்கமாக இருந்த தனி அறைக்குள் இருவரும் செல்வதைக் கவனித்து அவளும் அவர்களின் பின்னாலேயே சென்றாள்.
பொழிலரசி அறைக்குள் வந்ததைக் கவனிக்காமல் பத்மாவதியும் , விக்ரமாதித்யனும் பேச ஆரம்பித்தனர்.தொண்டையை லேசாகக் கனைத்து அவர்களுக்குத் தானும் அங்கே இருப்பதை உணர்த்த முயன்றவள் கணவன் அடுத்துப் பேசிய பேச்சில் அப்படியே ஆடாது அசையாது நின்று போனாள்.
தொண்டையை விட்டு வார்த்தை வெளியே வர மாட்டேன் என்று அப்படியே நின்று விட்டது.யாரோ தன்னைப் பிடித்து எரிமலை குழம்பில் பிடித்துத் தள்ளியதை போல உடம்பெல்லாம் பற்றி எரிய வந்த ஓசையே தெரியாமல் பொம்மை போல நடந்து தன்னுடைய அறைக்குள் வந்து சேர்ந்தாள்.
அறைக்குள் வந்தவளின் காதுகளுக்குக் கணவன் பேசிய பேச்சுக்கள் மீண்டும் எதிரொலி போல அறை முழுவதும் கேட்க காதுகள் இரண்டையும் பொத்திக் கொண்டவள் வாய் விட்டு கதறி அழுதாள்.