Kadhale Nee Kaanala Tamil Novels 13

0
2105
Madhumathi Bharath Tamil Novels

எவ்வளவு நேரம் அழுது கொண்டே இருந்தாளோ அறையில் இன்டர்காம் ஒலிக்கவும் எடுத்து வேண்டா வெறுப்பாக எடுத்துக் காதில் வைத்தாள்.எதிர்புறம் பேசியது அவளுடைய அருமைக் கணவன் விக்ரமாதித்யன் தான்.


“பொழில்…கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு…வெளியே போய்ட்டு வரேன்.வர எப்படியும் லேட்டாகும்.எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிட்டு விடு.”


“…”


“ஹல்லோ… பொழில் லைன்ல இருக்கியா? ஹலோ…ஹலோ பொழில்”பதட்டத்துடன் ஒலித்தது விக்ரமாதித்யனின் குரல்.


“ம்”உணர்ச்சிகள் துடைத்த குரலில் பதில் சொன்னாள் பொழிலரசி.


“என்னடா இப்ப தான் தூங்கி எழுந்தியா?…குரல் கூட ஒரு மாதிரி இருக்கு”கனிவாகக் கேட்டவனின் குரல் அவள் கோபத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரித்தது.


“ம்”


“இன்னைக்கு ரொம்ப நேரம் கால் வலிக்க நின்னுக்கிட்டே இருந்த இல்லையா? அதான் உடம்பு கொஞ்சம் அசதி ஆகியிருக்கும்…நீ இன்னும் கொஞ்ச நேரம் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுடா…நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வர்றேன்”


“ம்”


“ரொம்ப உடம்பு முடியலையா பொழில்…நான் வேணும்னா இன்னைக்கு நைட் எந்த ஏற்பாடும் செய்ய வேண்டாம்னு சொல்லிடட்டுமா?”


“வேண்டாம்…வேண்டாம்”அவசரமாக ஒலித்தது பொழிலரசியின் குரல்.


“ஹா ஹா…என்ன பொழில் ஏன் இவ்வளவு பதட்டம்? நீயும் என்னைப் போலத் தானா…நமக்கான நேரத்திற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறாயா? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உன்னைத் தேடி ஓடி வந்து விடுகிறேன் பேபி.எனக்காகக் காத்திரு” கிறக்கமாகத் தாபத்துடன் ஒலித்தது அவன் குரல்.


“வாடா…வா உனக்காகத் தான் காத்திருக்கிறேன்”என்று வன்மமாக நினைத்தவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் போனை வைத்து விட்டாள்.போனை வைத்த பிறகும் கூடப் பொழிலரசியின் காதில் கணவனின் குரலே ஒலித்துக் கொண்டு இருந்தது.


‘என்ன ஒரு நடிப்பு…என்னவோ உருகி உருகி காதலிக்கும் காதலனைப் போல எப்படிப் பேசுகிறான் பார்.இப்படி எல்லாம் பேசித் தானே என்னை ஏமாற்றினாய்? இதற்கு எல்லாம் நீ இன்று பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று நினைத்தவளின் கண் முன்னே சற்று நேரத்திற்கு முன்,கணவன் தன்னுடைய அன்னை பத்மாவதியிடம் பேசும்போது சொன்ன விஷயங்கள் அனைத்தும் ஒரு படம் போல மீண்டும் அவளின் நினைவுக்கு வந்தன.


விக்ரமாதித்யனின் தந்தையின் படத்தின் முன் நின்று அன்னையின் கைகளைப் பிடித்துச் சத்தியம் செய்தவன் தொடந்து பேசினான்.


“அம்மா…இப்போ நான் சொல்ற அத்தனையும் அப்பா மீது சத்தியமா நூறு சதவீதம் உண்மை.இப்போ நான் சொல்ற விஷயம் எதுவும் உங்களைத் தாண்டி வேற யாருக்கும் தெரியக் கூடாது.இதை எல்லாம் உங்ககிட்ட முன்னாடியே விளக்கமா சொல்லி இருக்கலாம்.ஆனா அதுக்கான நேரம் என்கிட்டே அப்போ இல்லை.


அதுவும் இல்லாம என்னோட கல்யாணத்தை நினைச்சு நீங்க இன்னமும் வருத்தத்தில் தான் இருக்கீங்க…அது தேவை இல்லைமா. ஏன்னா நான் காரணம் இல்லாம அவளைக் கல்யாணம் செஞ்சுக்கலை.


தனியா விட்டா அவளுக்குத் தன்னோட அப்பா நியாபகம் வரலாம்.அப்படி வந்துச்சுன்னா அவரோட சாவுக்குப் பின்னாடி இருக்கிற காரணத்தைத் தேடி அவ கண்டிப்பா போவாள்.அ…அதை நான் விரும்பலை.”முகம் கறுக்கச் சொல்லிக் கொண்டு இருந்தான்.


“அதனால நமக்கு என்னடா நஷ்டம் வந்தது?அந்த ஆளே ஒரு கொலைகாரன்…இப்ப அந்த ஆள் உயிரோட வேற இல்லை.அவனுக்கு எத்தனை எதிரியோ? அதில யார் அவனைக் கொன்னாங்களோ…”விட்டேற்றியாகப் பேசினார் பத்மாவதி


“அப்படி அவ குற்றவாளியைத் தேடிப் போனா…அவளோட அப்பா சா… சாவுக்கு நான் தான் காரணம்ங்கிற உண்மையும் அவளுக்குத் தெரிய வருமே” குற்ற உணர்வுடன் தலையைக் குனிந்த படி சொல்லி முடித்தான் ஆதி.


“ஆதீதீதீதீ…நீ…நீ என்னடா சொல்ற?”அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை அவரால்.


“நான் சொல்வது அத்தனையும் உண்மை.இவளுக்கு இங்கே எந்தக் குறையும் இல்லாம இருந்தா தான் அவளுக்கு ஏக்கம் வராது.அதனால ‘எல்லா விஷயத்திலயும்’ அவ மனசு கோணாம நான் நடந்துக்கிறேன்.”


“ஒருவேளை நாளைக்கே அவளுக்கு அவங்க அப்பா நினைவு வந்து அவரோட இறப்பில் ஏதாவது சந்தேகம் வந்துடாதா… அவ அதைப்பத்தி விசாரிக்கக் கிளம்பிட்டா என்னடா செய்றது?”


“அவ நிச்சயம் போக மாட்டா…கடந்த வந்த இத்தனை நாளில் அவளுக்கு அவளுடைய அப்பாவின் நினைவே வராத மாதிரி நான் பார்த்துகிட்டேன்.இனியும் நான் அவளுக்கு அவரோட நினைவு வர விட மாட்டேன்”உறுதியோடு சொன்னான் விக்ரமாதித்யன்.


அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த பொழிலரசிக்கு உலகமே இருண்டு விட்டது போல இருந்தது.இத்தனை நாள் கணவன் தன்னிடம் கனிவாகப் பேசியது,அணைத்தது இது அத்தனையும் காதலால் என்று எண்ணிக் கொண்டு இருந்தவளால் அது அப்படி அல்ல என்று தெரிந்த போது அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.


‘என்னுடைய தந்தையைக் கொன்று விட்டு அதற்குப் பிராயச்சித்தமாக என்னை மணந்து கொண்டானா? யார் இவன்? எனக்குத் தாலி கட்டியதால் மட்டுமே இவன் நல்லவன் ஆகி விட முடியுமா? பாவி…இரக்கமே இல்லாத ராட்சசன்… அந்தப் பக்கம் என் தந்தையைக் கொன்று புதைத்து விட்டு இந்தப் பக்கம் எனக்குத் தாலி கட்டி இருக்கிறான்.ஒருவேளை இந்த உண்மை தெரிந்த பின் இவனை நான் போலீசில் மாட்டி விடுவேன் என்பதற்காகத் தான் இப்படிச் செய்தானா…


என் அப்பா என்னடா தப்புச் செய்தார்? ஈ,எறும்புக்கு கூடத் துரோகம் நினைக்காதவர் ஆயிற்றே…அவரைக் கொல்ல உனக்கு எப்படி மனம் வந்தது? எல்லாப் பெண்களையும் போல நானும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று சொல்லி அவனின் இந்தப் பாவத்தைப் பொறுத்து,அவனை மன்னித்து அவனுடன் குடும்பம் நடத்துவேன் என்று நினைத்தானா?


தன்னுடைய தந்தையைக் கொன்றவன் விக்ரமாதித்யன் என்ற எண்ணம் அவளுக்குக் கொடுத்த தாக்கத்தை விட அதிக அதிர்ச்சியைக் கொடுத்தது கணவனின் வாக்குமூலம் தான்.தந்தையை மறக்க வைப்பதற்காகத் தன்னிடம் அவன் நெருங்கி இருக்கிறான் என்ற உண்மை அவளுக்குப் புரியவர உச்சபட்ச அறுவருப்பில் குமட்டிக் கொண்டு வந்தது பொழிலரசிக்கு.


தன்னை எவ்வளவு கீழ்த்தரமாக நினைத்து இருக்கிறான்…இரண்டு முறை ஆசையாகப் பேசி அணைத்து விட்டால் பெற்ற தந்தையை மறந்து விடுவேனா நான்…அப்படி அவள் நினைக்கும் போதே உள்ளுர அவளது மனசாட்சி கடந்து சென்ற நாட்களில் அவள் தந்தையைப் பற்றி அவள் நினைத்துக் கூடப் பார்க்காததைச் சுட்டிக் காட்டி எள்ளி நகையாடியது.அந்த கோபமும் அவன் மீதே திரும்பியது.


“பெண் என்றால் அத்தனை கேவலமா போயிடுச்சா உனக்கு?வெறும் உடல் சுகத்துக்கு மயங்கி உன்னை அப்படியே தப்பிக்க விட்டு விடுவேன்னு நினைச்சியா?இதுவரைக்கும் நீ பொழிலரசியைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கலை…இனி தெரிஞ்சுப்ப…தெரிஞ்சுக்க வைப்பேன்” என்று சூளுரைத்தவள் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்று மனதுக்குள் திட்டங்கள் தீட்டத் தொடங்கினாள்.


“இந்த லிப்ஸ்டிக் வேண்டாம். அந்தச் சிகப்பு கலரை போட்டு விடுங்க…” உத்தரவிட்டாள் பொழிலரசி.


அன்றைய இரவிற்காக அவளுக்கென்று விக்ரமாதித்யன் கொடுத்து அனுப்பிய பட்டுப் புடவையை மறுத்து விட்டுப் பீரோவில் இருந்து ஒரு அழகிய டிசைனர் புடவையை எடுத்து உடுத்தி இருந்தாள்.சிவப்பில் கறுப்பு நிற வேலைப்பாட்டுடன் இருந்த புடவை,ஆங்காங்கே பதிக்கப்பட்டு இருந்த கற்களால் மின்னியது.
அந்தப் புடவையை விட அதிகப் பளபளப்புடன் காணப்பட்டது பொழிலரசியின் கண்கள்.புடவையை மடிப்பு வைத்து கட்டிவிட முயன்ற பார்லர் பெண்ணைத் தடுத்து விட்டு ஒற்றையாக அப்படியே விரித்து விட்டுக் கொண்டாள்.


காதில் சிகப்பு கல் வைத்த பெரிய சைஸ் ஜிமிக்கியும்,கைகளில் அதே நிறத்தில் கல் பதித்த வளையலும் அணிந்து கொண்டவள் கண்ணாடி முன் நின்று தன்னைச் சரி பார்த்துக் கொண்டாள்.கழுத்தில் இருந்த முத்துக்கள் பதித்த நெக்லஸை எடுத்து விட்டு அதற்குப் பதிலாகச் சிவப்புக் கல் பதித்த அட்டிகையைப் போட்டுக் கொண்டாள்.


ஓரளவு திருப்தியானதும் உடன் இருந்தவர்களை வெளியேற்றி விட்டுத் தன்னைச் சுற்றி இருந்த நகைகளைப் பார்வையிட்டாள்.அந்த வீட்டின் பரம்பரை நகைகள் என்று கொஞ்ச நேரத்திற்கு முன் தான் வேலையாள் மூலம் விக்ரமாதித்யன் கொடுத்து அனுப்பி இருந்தான்.
உதட்டில் தோன்றிய ஒரு இகழ்ச்சியான புன்னகையுடன் அதைப் பார்வையிட்டவள்,அதில் இருந்த மெல்லிய வைரம் பதித்த கழுத்துச் சங்கிலியை எடுத்து இடுப்பில் ஒட்டியாணம் போலக் கட்டிக் கொண்டாள்.


தலையை அழகாகச் சீவி சின்னதாக ஒரு கிளிப் மட்டும் போட்டு அவளது கற்றை முடியை அடக்கியவள், மிச்சம் இருந்த கூந்தலை பின்னாமல் அப்படியே விரித்து விட்டாள் . டேபிளில் இருந்த மல்லிகையை எடுத்துச் சரம் சரமாக இருபுறமும் வழியுமாறு அழகாக வைத்துக் கொண்டாள்.


அலங்காரம் முடிந்தது என்ற நினைவுடன் எழுந்து கண்ணாடியின் முன் நின்று தன்னை மீண்டும் ஒருமுறை சரி பார்த்துக் கொண்டாள் . எப்பொழுதும் குத்துவிளக்கை போலச் சுடர் விட்டு எரியும் அழகை கொண்ட பொழிலரசி , இன்று அந்த வட்டத்தைத் தானே உடைத்து இருந்தாள்.
ஒற்றையாகச் சரிய விட்டு இருந்த அவளுடைய புடவை அது செய்ய வேண்டிய வேலையைச் சரி வர செய்யாமல் விட்டு இருந்தது லோ ஹிப் ( Low Hip) வைத்து அவள் கட்டி இருந்த புடவை அவளின் இடுப்பு வளைவுகளின் அழகை பறை சாற்றிக் கொண்டு இருந்தது.வைரம் பதித்த அந்த ஒற்றைச் சங்கிலியோ அவள் அசையும் போதெல்லாம் மின்னி கண்களை அதன் புறமே ஈர்த்தது.


இரண்டு ,மூன்று முறை கண்ணாடி முன் நின்று மோகனமாகப் புன்னகைத்துப் பார்த்தாள்.சரியாக வராதது போலத் தோன்றவே கண்களை ஒரு நிமிடம் இறுக மூடி கணவன் கூறிய வார்த்தைகளை முயன்று மனதில் கொண்டு வந்தாள்.அதற்குப் பிறகு அவள் அவ்வளவு சிரமப்பட வேண்டி இருக்கவில்லை.


எல்லாவற்றையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டவள் கடைசியாகக் கண்களில் லேசாக மையைத் தீட்டிக் கொண்டு அதில் திருப்தி அடைந்த பின் அங்கிருந்து நகர்ந்தாள்.


“வர்றேன்டா என் ஆசை மச்சான்” என்று வார்த்தைகளை வன்மத்துடன் உரைத்தவள் ஒயிலாக நடந்து கணவனின் அறைக்குச் சென்றாள்.


இரவு பத்து மணியைக் கடந்த பிறகு எல்லாரும் அவரவரின் அறைக்குள் முடங்கி இருக்க,யாரையும் இந்தக் கோலத்தில் எதிர்கொள்ள வேண்டி இருக்குமோ என்ற சங்கடம் எதுவுமின்றி மெதுவாக நடந்து கணவனின் அறைக்குள் நுழைந்தாள் பொழிலரசி.முன்புறத்தில் இருந்த ஹாலை தாண்டி உள்ளே சென்றவள் நேராகப் படுக்கையை நோக்கி சென்றாள்.


அறை முழுக்க மலர்களால் நிரம்பி இருந்தது.நடைபாதை எங்கும் ரோஜாக்கள் வாரி இறைக்கப்பட்டு இருக்க,மெதுவாக நடந்து சென்று கட்டிலை அடைந்தாள்.கட்டில் முழுவதும் மல்லிகை சரங்களாகத் தொங்க, படுக்கை முழுவதும் விதமான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.மொத்த அறையும் பூக்களால் நிரம்பி இருக்க அதிலிருந்து கிளம்பிய வாசனை மனதுக்கு இதமாகவே இருந்தாலும் அவைகளால் அவளின் மனவெம்மையைக் குறைக்க முடியாமல் போயிற்று.


அறைக்குள் வந்து அரைமணி நேரம் ஆகியும் விக்ரமாதித்யன் வந்து சேரவில்லை.கொஞ்ச நேரம் காற்றாட நிற்கலாம் என்று பால்கனி அருகில் நின்று சற்று நேரம் வேடிக்கை பார்த்தாள்.அவ்வபோது எடுத்து வந்து இருக்கும் பொருள் அதே இடத்தில் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து உறுதி செய்து கொண்டாள்.


‘திருமணம் முடிந்த பிறகு ஒவ்வொரு பெண்ணும் ஆவலாக எதிர்பார்க்கும் முதலிரவு.எல்லாரும் எந்த மாதிரியான மனநிலையில் இருப்பார்கள்…எனக்கு மட்டும் ஏன் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைக் கொடுத்தாய் இறைவா?நான் என்ன தவறு செய்தேன்? எவ்வளவு எதிர்பார்ப்போடு இருந்தேன்.ஆனால்…’
தனக்குள் மூழ்கி இருந்தவளை கலைத்தது பின்னிருந்து ஒலித்த விசில் சத்தம்.பின்னால் நிற்பவன் யார் என்று அவளுக்குத் தெரியாதா? முகத்தைக் கஷ்டப்பட்டுச் சிரித்தபடி வைத்துக் கொண்டவள் ஒயிலாகத் திரும்பிப் பார்த்தாள்.


அவளின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் அங்கே நின்று அவளையே விழுங்கும் பார்வையுடன் பார்த்துக் கொண்டு இருந்தவன் விக்ரமாதித்யன் தான்.அவள் திரும்பிப் பார்த்ததும் மயங்கி கீழே விழுவது போல நடித்தவன் வாய் கொள்ளா புன்னகையுடன் பேசினான்.


“பொழில்…அலங்காரம் செம…அள்ளுது…பின்னுது…தூக்கலா இருக்கு…இன்னும் ஊப்ப்ப்ஸ்…ஒரு அஞ்சே நிமிஷம் இரு.நான் குளிச்சுட்டு வந்திடறேன்…”என்று சொன்னவன் நேராகக் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.


அது நேரம் வரை இல்லாமல் இருந்த பதட்டம் இப்பொழுது வந்து தொலைத்தது அவளுக்கு.தன்னுடைய தந்தையின் முகத்தையும்,ஆதித்யன் பேசிய பேச்சுக்களையும் முயன்று கண் முன்னே கொண்டு வந்தவளின் உடல் மறுநொடியே நாணேற்றிய வில்லாக இறுக, அவளை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் விக்ரமாதித்யன் குளியல் அறையை விட்டு வெளியே வந்தான்.


இரவு உடையில் வந்தவன் அவளைப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான்.முயன்று எல்லாப் பற்களையும் காட்டி சிரித்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் அது முடியாமல் போகவே வெட்கப்படுவது போலக் கீழே குனிந்து கொண்டாள்.


“இந்த அலங்காரம் ரொம்பவே நல்லா இருக்கு பொழில்…முதலிரவுக்கு ஏற்ற அலங்காரம்.இதுக்காகவே அந்தப் பார்லர் பெண்களுக்குப் பேசியதை விட அதிகத் தொகை கொடுக்கப் போகிறேன்” என்று பாராட்டினான்.பேசிக் கொண்டே பொழிலரசியை நெருங்கிக் கொண்டு இருந்தான் விக்ரமாதித்யன்.


பொழிலரசி அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.அவன் அருகில் நெருங்கி விட்டதை உணர்ந்து வெட்கப்பட்டுச் செல்வது போல அங்கிருந்து திரும்பி சென்று சுவற்றின் மூலையில் போய் நின்று கொண்டாள்.


“என்ன பொழில்…அதுக்குள்ளே எங்கே ஓடப் பார்க்கிற…இனி நீ எங்கும் ஓட முடியாது…நானும் நீ என்னை விட்டு விலக அனுமதிக்கவே மாட்டேனாக்கும்” என்று சரசமாகப் பேசியபடியே பின்னிருந்து அவளை அணைத்தான்.


இதழ்களால் அவளுடயை பின்னங்கழுத்தில் அவன் கோலமிட,பொழிலரசியின் உடல் அதிர்ந்தது.அதை அவன் உணர்ந்து கொண்டாலும் அவனின் செய்கையை அவன் நிறுத்திக் கொள்ளவில்லை.அவன் கரங்கள் மேலும் முன்னேறி அவளின் இடையில் பதிய பொழிலரசி பல்லைக் கடித்துத் தன்னுடைய உணர்வுகளை அடக்கிக் கொண்டாள்.


மெதுவாக அவளைத் திருப்பி அவள் முகத்தில் முத்தத்தின் ஊர்வலத்தைத் தொடங்கினான்.உச்சந்தலையில் தொடங்கி நெற்றி,கண்கள்,கன்னம் என்று முத்த படையெடுப்பு எடுத்தவன் அடுத்து அவளின் இதழ்களை நோக்கி தாபத்துடன் குனிய அதுவரை வெளியே தெரியாமல் பல்லைக் கடித்து உணர்வுகளை அடக்கிக் கொண்டு இருந்த பொழிலரசி மெல்ல தன்னுடைய உடையில் மறைத்து வைத்து இருந்த அந்தச் சின்னக் கத்தியை எடுத்தவள் விக்ரமாதித்யன் அசந்த நேரம் அவனின் வயிற்றில் ஓங்கிக் குத்தி விட்டாள்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here