Kadhale Nee Kaanala Tamil Novels 14

2
2086
Madhumathi Bharath Tamil Novels

“எவ்வளவு நேரம் அப்படியே நிற்ப பொழில்…கால் வலிக்கலை?…” ஒன்றுமே நடக்காதது போல அமர்த்தலாகப் பேசியவனை இன்னொரு முறை கத்தியால் குத்தினால் என்ன என்று அவளுக்குத் தோன்ற ஆரம்பித்தது.

“முறைக்கிறது எல்லாம் அப்புறம் செய்துக்கலாம்.இப்போ போய் முதலில் இந்தப் புடவை மாத்திக் கொண்டு வா”

“மாட்டேன்.நீ சொல்லி நான் என்ன கேட்கிறது?”

“அதானே எதுக்குக் கேட்கணும்…நீ இப்படியே இரு.அது தான் என் கண்ணுக்கும் குளுகுளுன்னு இருக்கும்” என்றவனின் பார்வை மாறிய விதத்தில் பட்டென்று எழுந்து அருகில் இருந்த உடை மாற்றும் அறைக்குச் சென்றவள் வேகமாக வேறு காட்டன் புடவைக்கு மாறி இருந்தாள்.

உடை மாற்றும் அறைக்குள் இருந்து வெளியே வருவதற்கு முன் சற்று முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவளின் நினைவுகளில் ஆடியது.கத்தியை அவள் குத்திய அதே நேரம் அதை ஏற்கனவே எதிர்பார்த்தவன் போல நொடியில் சரேலென்று விலகி இருந்தான் விக்ரமாதித்யன்.விலகியது மட்டும் இல்லாமல் அவள் கையில் இருந்த அந்தச் சின்னக் கத்தியையும் நொடியில் கைப்பற்றி இருந்தான்.என்னதான் விலகி இருந்தாலும் அந்தக் கத்தி லேசாக அவனின் வயிற்றைக் கீறி இருந்தது.

“பழம் வெட்டி சாப்பிட இவ்வளவு சின்னக் கத்தியா எடுத்துட்டு வருவாங்க…ஏன் பொழில் வெட்டணும்னு முடிவு செஞ்ச பிறகு கொஞ்சம் பெரிய கத்தியாவே கொண்டு வந்து இருக்கலாமே…”என்று இயல்பாகச் சொல்வது போலச் சொல்லி அவளை அதிர வைத்தவன் கொஞ்சம் கூடப் பயமோ பதட்டமோ அடையவில்லை.

“இன்னைக்கு உன்கிட்ட எல்லாத்திலயும் ஒரு தாராளம் இருந்தது பொழில்…அதை நீ கொஞ்சம் குறைச்சு இருந்து இருக்கலாம்.அது தான் எனக்குக் கொஞ்சம் சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது” என்று சொன்னவனின் விழிகள் அவள் உடையையும்,அலங்காரத்தையும் சுட்டிக் காட்ட அவனின் பிடியில் இருந்து கரங்களை வெறுப்புடன் உருவ முயன்றாள் பொழிலரசி.அது அவ்வளவு எளிதா என்ன?

“அவ்வளவு சீக்கிரம் நீ தப்பிக்க முடியாது பொழில்…உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா இப்படி ஒரு காரியத்தைச் செய்ய நினைச்சு இருப்ப?”என்று கூறி பிடியை மேலும் இறுக்கியவன் மேலும் சற்று நேரம் அவளுக்கு ஆட்டம் காட்டிய பிறகே கைகளை விடுவித்தான்.அவளை விடுவித்து விட்டு படுக்கைக்கு அருகில் இருந்த டேபிளை திறந்தவன் அதில் இருந்த முதலுதவிப் பெட்டியை திறந்து தனக்குத்தானே வைத்தியமும் பார்த்துக் கொண்டான்.அவனையே ஆத்திரமாக உறுத்து விழித்துக் கொண்டு இருந்த பொழிலரசியைத் ஒன்றுமே நடக்காதது போலப் பேசித் தான் இப்பொழுது உடை மாற்ற அனுப்பி வைத்து இருக்கிறான்.

உடை மாற்றிய பிறகும் அறையை விட்டு வெளியே வராமல் அங்கேயே குட்டி போட்ட பூனை போல உலாத்திக் கொண்டு இருந்தாள் பொழிலரசி.

‘சே…எப்படி கண்டுபிடித்தான்…இன்னும் கொஞ்சம் ஆழமா குத்தி இருக்கணுமோ…?இப்போ வெளியே போனா என்ன செய்வான்?அவனைக் கொல்ல முயற்சி செய்து இருக்கேனே சும்மா விடுவானா?அப்பாவை கொன்ன மாதிரியே என்னையும் கொல்ல முயற்சி செய்வானோ?இப்போ என்ன செய்றது?’ என்று யோசித்தபடியே பதட்டத்துடன் அறைக்குள் நடைப் போட்டுக் கொண்டு இருந்தாள்.

“வெளியே வா…எவ்வளவு நேரம் தான் அதுக்குள்ளயே இருப்ப” இயந்திரத் தன்மையுடன் ஒலித்த அவன் குரலில் நடப்புக்கு வந்தவள் அவன் மேல் இருந்த ஆத்திரம் கொஞ்சமும் குறையாமல் அறையை விட்டு வெளியேறி அவனை நிமிர்வோடு எதிர்கொண்டாள்.

பொழிலரசியின் மனதில் கொஞ்சம் கூடக் குற்றவுணர்ச்சி இல்லை.அவளுக்குத் தெரிந்தது எல்லாம் அவளுடைய தந்தையின் மரணத்திற்குக் காரணமானவனைக் கொன்று அவனைப் பழி தீர்க்க வேண்டும் என்றே எண்ணினாள்.அதில் தவறு இருப்பதாக அவள் கருதவே இல்லை.

சிறுவயதில் இருந்தே தாய் இல்லாமல் வளர்ந்த பொழிலரசிக்கு தாயுமானவராய் இருந்தவர் அவளுடைய தந்தை மகேந்திரன்.அவரின் மரணத்திற்கு யார் காரணமோ அவனைக் கொன்றால் அன்றித் தன்னுடைய ஆத்திரம் குறையாது என்று நினைத்ததாலேயே அவள் இந்த முடிவுக்கு வந்தாள்.இப்பொழுது கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பின்னும் கூட அவளுக்குக் கொஞ்சமும் பயம் ஏற்படவில்லை.

அவளின் நிமிர்வை கண்டுகொண்டதற்கு அடையாளமாக அவனுடைய கண்களில் சிறு மின்னல் ஒன்று வந்து போனது.

“கொஞ்சம் கூடப் பயமே இல்லாமல் தைரியமா வந்து நிற்கிற”அவன் குரலில் இருந்தது பாராட்டா? கேலியா? இனம் காண முடியவில்லை அவளால்.

“எனக்கென்ன பயம்?அதுவும் உன்னை மாதிரி ஒருத்தன் கிட்ட…” மரியாதையைக் கை விட்டு இருந்தாள் பொழிலரசி.

“நான் உன் புருஷன் …அதை மனசுல வச்சுக்கிட்டுக் கொஞ்சம் மரியாதையா பேசு…”துளைக்கும் பார்வையுடன் அழுத்தமாகச் சொன்னான் விக்ரமாதித்யன்

“மரியாதை எல்லாம் ஒருத்தர் நடந்துக்கிற விதத்தை வச்சு நாமளா கொடுக்கணும்.கேட்டு வாங்கினா அதுக்குப் பேரு பிச்சை”அலட்சியமாகச் சொன்னவளின் கழுத்தை அடுத்த நொடி இறுக்கி இருந்தது விக்ரமாதித்யனின் கரங்கள்.

“இன்னும் கொஞ்சம் வேகமா அழுத்தினேன்னு வை…மொத்தமா போய்ச் சேர்ந்துடுவ…என் வீட்டில் இருந்துக்கிட்டு என்கிட்டயே என்னைப் பத்தி இப்படிப் பேச உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்”

“உண்மையைச் சொல்ல நான் எதுக்குப் பயப்படணும்…நீ பெரிய ஆளா இருந்தா அது உன்னோட வச்சுக்கோ… எனக்கு என்ன வந்துச்சு? என் அப்பாவை கொன்னவனுக்கு நான் இவ்வளவு தான் மரியாதை கொடுப்பேன்.இஷ்டம் இருந்தா கேளு… இல்லாட்டி அதோ அங்கே இருக்கு பார் சுவர் அதுல போய் முட்டிக்கோ”ஆத்திரத்தில் பேசிக் கொண்டே போனாள் பொழிலரசி.

அவனைக் கொன்று இருந்தால் அவளுக்கு இத்தனை ஆத்திரம் வந்து இருக்காதோ என்னவோ! கொல்லத்தான் முடியவில்லை.அவள் குத்திய கத்தி கொஞ்சம் ஆழமாகப் பாய்ந்து இருந்தால் கூட அவள் கொஞ்சம் நிம்மதி அடைந்து இருப்பாள்.

இது எதுவுமே நடக்காமல் அவன் சாதுர்யமாகத் தப்பி விட்டதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அதை வார்த்தைகளால் வெளிப்படுத்தினாள் பொழிலரசி.அவள் கூறியது அனைத்தையும் கண்கள் இடுங்க கேட்டுக் கொண்டு இருந்தானே தவிர ஒரு வார்த்தை மறுத்து பேசவில்லை.

“அம்மாவோட அறைக்கு நீ எதுக்காக வந்த?” யோசனையுடன் அவளுடைய முகப் பாவங்களைக் கவனமாக அளவிட்ட படியே கேட்டான் விக்ரமாதித்யன்.

“கண்டிப்பா உன்னோட கொஞ்சிக் குலாவ வரலை”ஆத்திரம் பெருக எரிமலையாக வெடிக்க ஆரம்பித்தாள் பொழிலரசி.

“திமிர்தான்டி உனக்கு…அதுவும் உடம்பு பூரா இருக்கு…என்னையே கொல்ல முயற்சி செஞ்சுட்டுக் கொஞ்சம் கூடப் பயம் இல்லாம என்கிட்டயே இவ்வளவு தெனாவெட்டா பேசறியே…உன்னை என்ன செய்யலாம்?” விக்ரமாதித்யனின் கண்கள் இருளில் கூட இரை தேடும் புலியைப் போலப் பளபளத்தது.

“கொன்னுடு…அதுதான் உனக்குக் கைவந்த கலையாச்சே…என்னை விட்டு வச்சா அப்புறம் அதோட விளைவுகள் இன்னும் மோசமா இருக்கும்”கண்களில் வெறுப்பைத் தேக்கி எச்சரித்தாள்.

“அப்படி என்ன பொல்லாத விளைவுகள்…”சுவாரசியம் இல்லாதவனைப் போலக் கேட்டான்.

“எவ்வளவோ இருக்கே…பக்கத்தில் தூங்கும் போது உன் தலையில் கல்லை போட்டு கொன்னுடுவேன்.அது முடியலையா … நீ சாப்பிடும் சாப்பாட்டில் விஷம் வச்சு உன்னைச் சாகடிப்பேன்.அதுவும் இல்லையா கரண்ட் ஷாக் அடிச்சு நீ சாகுறது ஏற்பாடு செய்வேன்…இப்படி ஆயிரம் வழி இருக்கு.இதில் ஏதாவது ஒரு வழியில் உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன்”

“இந்த முடிவில் மாற்றமே இல்லையா பொழில்…”அவன் கண்களில் சிறு எதிர்பார்ப்பு மின்னியது.

“நிச்சயம் இல்லை…என்னை உயிரோடு விட்டு வச்சா நேரம் கிடைக்கும் போது உன்னைக் கொன்னுடுவேன்…பாவி பாவி! எவ்வளவு நம்பினேன் உன்னை!எப்படி எல்லாம் என்னை ஏமாற்றி இருக்கிறாய்…அதுக்காகவே உன்னைக் கொல்லணும்டா. எப்படியெப்படி? இதுநாள் வரை என்னோட அப்பா நியாபகம் வராம பார்த்துகிட்ட மாதிரியே இனியும் பார்த்துப்பியா…இனியொரு முறை என்கிட்டே வந்து பார்…உன் குடலை உருவி மாலையா போட்டுருவேன்”

“அச்சு அசல் பத்திரகாளியே தான்”சிரிப்பு இருந்தது அவன் குரலில்.

“உன்னை மாதிரி ஒரு அரக்கனை கொன்னு தீர்த்தா தான் எனக்குச் சந்தோசம்.”

“அது நடக்க வாய்ப்பு இல்லை…வேணும்னா இப்படி நடக்கும்”

“எப்படி? அதையும் நீயே சொல்லித் தொலை”

“நான் உன்னை மன்னிச்சு பெருந்தன்மையா உனக்கு உயிர் பிச்சை போடலாம்”அலட்சியம் போலக் காட்டிக் கொண்டாலும் அவன் கண்களில் அசாத்திய கூர்மை இருந்தது.

“யாருக்கு வேணும் நீ போடும் பிச்சை? நீயே கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி என்கிட்டே மரியாதையைப் பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தவன்.நீ எனக்கு உயிர் பிச்சை போடறியா?”உதாசீனமாகப் பேசினாள் பொழிலரசி.அவள் பேசப்பேச விக்ரமாதித்யனின் கண்கள் இடுங்குவதையும்,கையில் உள்ள நரம்புகள் கோபத்தில் புடைப்பதை உணர்ந்தாலும் பொழிலரசி கொஞ்சமும் அமைதியாக இருக்கவில்லை.

“எனக்கு மட்டும் என்ன ஆசையா? உன்னை இப்படி எல்லாம் பேச விட்டு கேட்டுக் கொண்டு இருக்க? நீ இப்போ இந்த நிமிஷம் உயிரோட இருக்கிறதுக்கு ஒரே ஒரு காரணம் மட்டும் தான்…”என்று சொன்னவன் சற்று இடைவெளி விட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.

பொழிலரசிக்கு அவன் என்ன காரணம் சொல்லப் போகிறானோ என்று உள்ளுக்குள் ஒரு கேள்வி இருந்தாலும் அதைக் கண் ஜாடையில் கூடத் தெரியப்படுத்தாமல் கல் போல இறுகிப் போய் இருந்தாள்.

“உன்னை மாதிரி என்னையும் நினைச்சியா? நான் ஆதித்யா…தி கிரேட் விக்ரமாதித்யா…நான் கல்யாணம் செய்து கொண்ட பெண் முதலிரவில் செத்துப் போனா அது எனக்கு மிகப் பெரிய அவமானம்.அதனால…”

“எனக்கு உயிர் பிச்சை போட போறியா?”நக்கலாகவே கேட்டாள்.

“கண்டிப்பா இல்லை…நீ இவ்வளவு திமிரா பேசின பிறகும் உன்னை விட்டு வைக்க நான் என்ன பைத்தியமா?… உன்னுடைய ஆயுளை இன்னும் கொஞ்ச காலம் நீட்டிச்சு இருக்கேன்.எப்போ எந்த நிமிஷம் எனக்குத் தோணுதோ அப்ப உன்னோட திமிருக்கு நான் என்னுடைய பாணியில் பதில் தருவேன்.ஆனா அது நிச்சயம் மரண அடியாகத் தான் இருக்கும்.”சிங்கத்தின் ஆக்ரோஷம் அவன் குரலில்.

“அதுவரைக்கும் நான் உன்னை விட்டு வைப்பேன்னு வேற உனக்கு நினைப்பு இருக்கா?”எகத்தாளம் அவள் குரலில் துள்ளி விளையாடியது.

“உன்னால் ஆன மட்டும் என்ன செய்ய முடியுமோ செய்…ஆனா இந்த விஷயம் இந்த அறையை விட்டு வெளியே போகக் கூடாது.”

“அப்படி வெளியே சொன்னா என்னடா செய்வ…” உனக்கு அஞ்சி அடங்கி விடுவேனா நான் சவால் இருந்தது அவள் குரலில்.

“கொன்னுடுவேன்…உன்னை இல்லை.நீ யார்கிட்டே சொல்றியோ அவங்களை…”

“என்னடா மிரட்டி பார்க்கறியா?”

“டா போட்டு பேசாதடி…பல்லை உடைச்சுருவேன்.நான் உன் புருஷன் புரிஞ்சதா?”ஆத்திரத்தில் அவன் பல்லைக் கடிப்பது அவளுக்குத் தெளிவாகக் கேட்டது.

“உன்னால் முடிஞ்சதை பார்த்துக்கடா…என் அப்பாவை கொன்ன கொலைகாரனுக்கு நான் அவ்வளவு தான் மரியாதை கொடுப்பேன்.உன்னால என்ன பண்ண முடியும்? என்னை அடிப்பியா,உதைப்பியா? இல்லை கொன்னு போடுவியா என்ன வேணா செஞ்சுக்கோ…உனக்கு என்கிட்ட மரியாதை இருக்காது.போடா”

“உனக்கு ஊரில் ரொம்ப நெருங்கின பிரண்டு ஒருத்தி இருக்கா இல்ல…அவ பேரு கூட”யோசிப்பது போலத் தாடையைத் தடவினான் விக்ரமாதித்யன்.

விக்ரமாதித்யனின் தோரணையில் அவளுடைய முதுகுத்தண்டு சில்லிட்டது.அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கப் பெரும்பாடு பட்டாள் பொழிலரசி.

“என்னடா இப்படி எல்லாம் பேசினா நான் பயந்துடுவேன்னு நினைக்கறியா?உனக்கு இன்னும் இந்தப் பொழிலரசியைப் பத்தி எதுவும் தெரியலை…உன்னோட இந்தப் பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்.”

“அப்போ உன் சொந்தக் காரங்க…உன் கூடப் பேசிப் பழகினவங்க…இப்படி ஒருத்தர் விடாம மொத்தமா குடும்பத்தோட அழிச்சுடுவேன்.ஒழுங்கா மரியாதையா எனக்கு அடங்கி நட…இல்லைனா நான் பாவம் புண்ணியம் எல்லாம் பார்க்க மாட்டேன்.மொத்தமா உன்னோட கிராமத்தையே கொளுத்திடுவேன்”அசால்டாகச் சொன்னான் விக்ரமாதித்யன்.

தோளைக் குலுக்கி விட்டு அமைதியாக நின்றவனைப் பார்க்க பார்க்க அவளுள் ஆத்திரம் கட்டுகடங்காமல் பெருகியது.ஒரே எட்டில் பாய்ந்து அவனின் நைட் கவுனை பற்றியவள் ஆத்திரம் தீரும் மட்டும் உலுக்கினாள்.

“ஏன்? ஏன் இப்படிச் செஞ்ச? எங்கப்பா உனக்கு என்ன கெடுதல் செய்தார்?எனக்குனு இருந்தது அவர் ஒருத்தர் மட்டும் தானே? அவரை ஏன் இப்படிச் செஞ்ச? அந்தப் பக்கம் அவரைப் புதைக்கக் குழி தோண்டிட்டு இந்தப்பக்கம் என் கழுத்தில் தாலி கட்டி இருக்கியே … நீ எல்லாம் மனுஷன் தானா?செஞ்ச பாவம் பத்தலியா?இப்போ என்னோட கிராமத்தையே அழிச்சுடுவேன்னு சொல்ற?”

“என்னை அந்த அளவுக்குத் தூண்டி விடறது நீ தான்…ஒழுங்கா சொல் பேச்சு கேட்டு எனக்கு நல்ல மனைவியா நடந்துக்கிட்டா இது எதையும் நான் செய்ய மாட்டேன்”உத்திரவாதம் அளிப்பது போலப் பேசியவனை என்ன செய்தால் தகும் என்று சிந்திக்க ஆரம்பித்தாள் பொழிலரசி.

“ரொம்ப எல்லாம் யோசிக்காதே…என்கிட்டே இருக்கிற பணத்தை வச்சு என்ன வேணா செய்ய முடியும்.இது எல்லாத்தையும் விட நீ ஒரு பைத்தியம்.நீ என்னைப் பத்தி வெளியே சொன்னா உன்னை யார் நம்புவாங்க”சரியான இடத்தில் அடித்தான் விக்ரமாதித்யன்.

சோர்ந்து போய் அப்படியே தரையில் பொத்தென விழுந்தாள் பொழிலரசி. ‘உண்மை தானே இங்கே இருக்கும் வேலைக்காரர்கள் முதற்கொண்டு என்னை இன்னும் ஒரு பைத்தியமாகத் தானே பார்க்கிறார்கள்.இவனைப் பற்றி நான் சொன்னால் யார் நம்புவார்கள்?’என்று நினைத்தவள் சோர்ந்து போய் மூலையில் ஒடுங்கி விட்டாள்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here