Kadhale Nee Kaanala Tamil Novels 17

0
2138
Madhumathi Bharath Tamil Novels

பொழிலரசி சுவரோடு சுவராக ஒண்டிக் கொண்டாள்.அவள் கண்களில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தாலும் விக்ரமாதித்யன் தன்னுடைய நடையை நிறுத்தவில்லை.அவனின் நடையில் இருந்த நிதானம் அவன் நிச்சயம் பின் வாங்கப் போவதில்லை என்பதைத் தெரிவிக்கப் பொழிலரசிக்குப் பயத்தில் இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது.

அவன் நெருங்க நெருங்க இதயத்தின் வேகம் அதிகரிக்கவே ஒரு கையால் நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.இப்பொழுது அவளின் முகத்தைப் பார்த்து , அவனுடைய நடையின் வேகம் கொஞ்சம் குறைந்தாலும் நடையை நிறுத்தாமல் அவளின் அருகே வந்து நின்றான்.

“இதோ பார்…என்னைப் பொறுத்தவரை நான் நல்லவன் தான்.உன்னிடம் நான் நல்லவனா நடந்துகிறதும் கெட்டவனா மாறுவதும் உன் கையில் தான் இருக்கிறது.நான் சொல்வதை அப்படியே கேட்டு நடந்தால் உனக்கு இந்த மாமன் ஹீரோ தான்.அதை விட்டுட்டு வேற எதையாவது செஞ்சு வச்சே…உனக்கு வில்லன் ஆகிடுவேன்.அதுக்கு அப்புறம் என்னைக் குறை சொல்லாதே…புரிந்ததா?” அழுத்தமாக அவன் பேசும் போது புரியவில்லை என்று சொல்லி விடுவாளா அவள்!.வேகமாகப் பூம் பூம் மாடு போலத் தலையை இடமும் புறமுமாக ஆட்டினாள்.

“குட் … இது நல்ல பிள்ளைக்கு அழகு.இனி நீ தப்புச் செய்ய மாட்டே.ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ எனக்கு எதிரா ,நான் சொன்ன வார்த்தையை மீறி நடந்துக்க முயற்சி செஞ்சியே? அதுக்கு உனக்கு என்ன தண்டனை தரலாம்.”என்று மோவாயை தடவியவன் அவளை ஆழமான பார்வை ஒன்று பார்த்து வைத்தான்.

“நான் தான் எதுவுமே செய்யலையே?”பதறிக் கொண்டு பேசினாள் பொழிலரசி.பொழிலரசியை அவன் அடித்து இருந்தால் கூட அவள் இந்த அளவிற்குப் பயந்து இருக்க மாட்டாள்.அவன் பார்வையில் நேரம் ஆக ஆக ஒரு வித மாற்றம் தெரிய ஆரம்பித்தது.அவன் பார்வை மாறிய விதம் அவளுக்கு உள்ளுக்குள் குளிரை பரப்பியது.

“அந்த வாய்ப்பை உனக்கு நான் கொடுக்கலை…கொஞ்சம் அசந்து இருந்தாலும் நீ மடத்தனமா எதையாவது செய்து வைத்து இருப்பாயே”

“அதைத் தான் தடுத்தாச்சே… அப்புறமும் என்ன?”தயக்கத்தையும் மீறி சுள்ளென்று வந்து விழுந்தது வார்த்தைகள்.

“அது எப்படிச் சும்மா விடுவது? இனி ஒரு முறை எனக்கு எதிராக எதையும் செய்ய உனக்குத் தைரியம் வரக் கூடாது இல்லையா?அதுக்கு உனக்கு ஏதாவது தண்டனை கொடுத்தே ஆகணுமே…”என்றவனின் பார்வையில் இருந்த பொருளை உணர விரும்பாமல் பார்வையை வெறுப்பாகத் திருப்பிக் கொண்டாள் பொழிலரசி.

“என்கிட்டே இப்படி முகம் திருப்பாதேன்னு உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேன் பொழில்…நான் சொல்ற எதையும் கேட்கக் கூடாதுன்னு ஒரு முடிவோட தான் இருக்கியா?”கோபம் போல அவன் கேட்க முயன்றாலும் அவன் கண்களில் கோபத்திற்கான அறிகுறிக்கு பதிலாகத் தாபத்திற்க்கான அறிகுறியே தெரிந்ததில் அரசி மேலும் அரண்டாள்.

ஆதித்யன் பேசிக் கொண்டே மெல்ல அவளை நெருங்கி விட்டு இருக்க,அவனைத் தள்ளி விட்டுக் கொண்டு வெளியே செல்ல எத்தனித்தவளின் முயற்சியை நொடியில் தடுத்தவன் அடுத்த நொடி அவளில் முழுகத் தொடங்கினான்.

பொழிலரசியின் உடல் முழுவதும் ஒரு நடுக்கம் ஓடியது. அவன் விரல் பட்ட இடங்கள் கூசி சிலிர்க்கத் தான் செய்தது.ஆதித்யனின் தொடுகையை வெறுத்தாலும் பெண்மைக்கே இயல்பாக இருந்த கூச்சம் அவளின் ஒவ்வொரு நரம்பிலும் பனிக் கத்தியை சொருகியது போல அவளைத் துவளச் செய்தது.

எது எப்படியோ பொழிலரசிக்கு நிச்சயம் இதை அவன் தன் மீது இருக்கும் கோபத்தால் செய்யவில்லை என்பது புரிந்தாலும் அவனையோ, அவனது தொடுகையையோ ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள்.

அவனுடைய ஆலிங்கனத்தில் கோபம் இல்லை.அதற்குப் பதிலாக மென்மையும்,தாபமும் இருந்ததை அவளால் உணர முடிந்தது.அவளின் இதழோடு இதழ் உரசி அவன் குளிர் காய அவளின் நினைவுகளோ பின்னோக்கி சென்றது.

அன்று அவன் அவளைக் கட்டியணைத்த தருணம் நினைவிற்கு வர, அவளின் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஓடியது.அன்றைய நாளில் அவன் கரம் பட்டதுமே அவளுடைய உடல் குழைந்ததும் அவளின் நினைவிற்கு வந்து தொலைத்தது.அன்று அவன் தொட்ட போது குளிர்ந்த அவள் மேனி இன்று அவன் மீது ஏற்பட்டு இருக்கும் வெறுப்பால் நெருப்பாகக் கொதித்தது.

பொழிலரசிக்கு அவன் மேல் இன்னமும் ஆத்திரம் இருக்கிறது தான்.அவளின் தந்தையின் மரணத்திற்குக் காரணமான அவனை வாய்ப்பு கிடைத்தால் அவள் கொன்று விடுவாள் தான்.ஆனால்… அவளின் ஆழ்மனதில் கணவன் மீது பதிந்து விட்ட காதல் அவளைத் தின்று தீர்த்துக் கொண்டு இருந்தது.அவளுள் காதல் துளிர்த்து சில நாட்களே ஆகி இருந்த பொழுதும் அந்தச் சின்னத் தீப்பொறி கொஞ்சம் கொஞ்சமாகச் செந்தணலாக மாறி இருந்தது.

அவளின் ஆசை கொண்ட மனதோ கணவனின் கைகளுக்குள் பாந்தமாக அடங்கிக் கொள்ளச் சொல்ல, மறுபுறமோ தந்தையின் நினைவில் அவள் மனம் அவனோடு ஒன்றை முடியாமல் தடுக்க, தனக்குள்ளேயே தோன்றிய இருவேறு கருத்துக்களால் போராடினாள் பொழிலரசி. எது எப்படி இருந்தாலும் அவன் செய்த தவறுக்கு அவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற முயன்று அவனைத் தன்னிடம் இருந்து பிரிக்க முயன்றாள்.

அவளின் மறுப்பை உணர்ந்தாலும் அவளிடம் இருந்து ஆதித்யன் ஒரு இன்ச் கூட அவளை விலக அனுமதிக்கவில்லை.நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன் என்று அவள் மனம் நிராசை அடைந்த நேரம் அவளின் கன்னங்களில் இருந்து வழிந்த கண்ணீரை அவன் உணர அடுத்த நொடியே அவளைத் தள்ளி விட்டு உடல் கல்லென இறுக அவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டான் விக்ரமாதித்யன்.

“மாமா வீட்டை விட்டு கிளம்பும் வரை உன்னுடைய வால் தனங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விடு…இல்லேன்னா அடுத்த முறை இதுக்கு மேலயும் போவேன்.ஜாக்கிரதை”கை முஷ்டி இறுக கரகரப்பான குரலில் அவன் கூற பொழிலரசிக்கு சற்று முன்பு வரை உடலில் இருந்த சிலிர்ப்புக் காணாமல் போய் விட்டது.

“ஒரு பெண்ணை இந்த முறையில் அடக்க நினைக்கறீங்களே வெட்கமாக இல்லை உங்களுக்கு”உடல் நடுங்க ஆத்திரத்துடன் அவனைப் பார்த்துக் கேள்வி கேட்டாள் பொழிலரசி.

“இதில் வெட்கப்பட என்ன இருக்கு…நான் ஒரு வியாபாரி என்பதை மறந்து விடாதே.எதை செய்தால் காரியம் நடக்குமோ அதைத்தான் நான் செய்வேன்.நீ ஒருவேளை அடிக்கு பயந்து இருந்தால் உன்னை அடித்து,உதைத்து என்னுடைய வழிக்கு வரவைத்து இருப்பேன்.ஆனா அப்படி அடி உதைக்குப் பயப்படுபவளா நீ?அதனால் தான் உனக்கு ஏற்ற வழியைக் கடைபிடித்தேன்”என்று தோளை குலுக்கியபடி அசால்ட்டாகச் சொன்னவனைப் பார்க்கும் பொழுது அவளின் கோபம் மேலும் பெருகியதே ஒழிய குறையவில்லை.

“நீங்க ஜெயிக்க எந்த வழியா இருந்தாலும் அதைக் கடைபிடிப்பீங்களா?”

“நிச்சயமா… என்னோட இலக்கு வெற்றி மட்டும் தான்.அதுக்கு நான் பயன்படுத்துற பாதை இல்லை”அசால்ட்டாகச் சொன்னான்.

“அப்படி உங்களோட எந்த வெற்றியை என்னுடைய அப்பா தடுத்தார்?”கூரிய அம்பாக வெளிவந்தது வார்த்தைகள்.

“அது உனக்குத் தேவை இல்லாதது…” என்று அமர்த்தலான குரலில் சொன்னவன் மேற்கொண்டு அவள் எதுவும் பேசும் முன் அறையை விட்டு வெளியேறினான்.அவனின் வேக நடை தடைப்பட்டது பொழிலரசியின் எள்ளலான குரலில்.

“கேள்வி கேட்டா பயந்து ஓடுறது தான் உங்களுக்குத் தெரியுமா? நான் எப்போ கேள்வி கேட்டாலும் ஓடி விடறீங்க?”பரிகாசம் இருந்தது அவள் குரலில்.

“நான் ஓடுறேன் தான்.ஆனா உன் கேள்விக்குப் பயந்து இல்லை…”என்று சொன்னவன் அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்து விட்டு மறுபுறம் திரும்பி நின்று கொண்டான்.அவன் தன்னுடைய இரு கைகளாலும் தலையை மாறி மாறி அழுந்த கோதிய பின் அவள் புறம் திரும்பாமலே பதில் அளித்தான்.

“இனி இந்தப் புடவையைக் கட்டாதே…நான் எவ்வளவு தான் உன்னைப் பார்க்கக் கூடாது என்று முயற்சி செய்தாலும் என்னால் அது முடியவில்லை.அதே நேரம் நீ எவ்வளவு தான் உன் அழகை மறைத்து புடவையைக் கட்டி இருந்தாலும் என்னால் …”என்றவன் பாதிப் பேச்சிலேயே நிறுத்தி விட்டு , அதற்கு மேலும் எதையும் சொல்லப் பிடிக்காமல் ஒரு ஆழ்ந்த பார்வை மூலம் தான் சொல்ல வந்ததை அவளுக்குள் செலுத்தி அவளைத் திணறடித்து விட்டு அந்த அறையை விட்டு வெளியே போய் விட்டான்.

‘இவர் சொல்வதற்கும்,நடவடிக்கைக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்? இவர்கிட்டே ஏதோ ஒரு ரகசியம் நிச்சயம் ஒளிந்து இருக்கு…அதை கண்டுபிடிச்சே ஆகணும்.ஏற்கனவே இவர்கிட்டே நிறையப் பல்பு வாங்கியாச்சு.இனியாவது இப்படி நடக்காம ஜாக்கிரதையா பார்த்துக்கணும்.’ என்று எண்ணிக் கொண்டவள் அறையை விட்டு தயக்கத்துடன் வெளியே வந்து மற்றவர்கள் யாரும் பார்க்கும் முன் தன்னுடைய அறைக்குச் சென்று வேறு புடவையை மாற்றிக் கொண்டாள்.

பொழிலரசிக்கு கணவனின் செயல்பாடுகளில் சில முரண்பாடுகளை உணர முடிந்தது.அவன் காட்டும் கோபமும் பொய்யில்லை,அதே நேரம் தன்னை அணைத்த போது அவனுடைய அணைப்பிலும் பொய்யில்லை.அந்த அணைப்பு வெறுமனே தன்னை மிரட்டுவதற்காகச் செய்த ஒன்று என்பதைப் பொழிலரசியின் ஆழ்மனம் நம்ப மறுத்தது.

தன்னுடைய தயக்கத்தையும் கேள்விகளையும் உதறிக் கொண்டு மீண்டும் ஹாலுக்கு வர,அங்கே டைனிங் ஹாலில் அந்த வீட்டு மாப்பிள்ளைக்கு ராஜ உபசாரம் நடந்து கொண்டு இருந்தது.அங்கே டைனிங் டேபிளில் ஒரு ஓரமாக அமர்ந்து இருந்த பரசுராமன் அங்கே நடப்பதை எல்லாம் பிரமிப்புடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க,இயல்பாகப் பேசியபடியே அவருக்கு அருகில் அமர்ந்தவள் அவருக்கு வேண்டியதை பார்த்து பார்த்து பரிமாறினாள்.

தனக்கு மிகவும் பரிச்சயமான அழுத்தமான காலடி ஓசையைக் கேட்டதும் அவள் உடல் ஒரு நிமிடம் லேசாக அதிர்ந்து பின் இயல்பானது.அவளின் ஒவ்வொரு செய்கையையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருந்த விக்ரமாதித்யனுக்கு அவளின் இந்த அதிர்வு தெரியாதா என்ன? அவள் வேறு புடவை மாற்றி இருப்பதைக் கண்டு திருப்தி அடைந்தாலும் உடனே மனசு கொஞ்சம் சுணங்கித் தான் போயிற்று அவனுக்கு.

‘மத்த விஷயத்தில் எல்லாம் சொல் பேச்சு கேட்கிறதே இல்ல…இப்ப என்னடான்னா உடனே போய் வேற புடவை மாத்திக்கிட்டு வந்து நிற்கிறதை பாரு..நான் தானே பார்த்து ரசிக்கப் போகிறேன்.அப்படியே அதே புடவையில் இருந்து இருந்தால் தான் என்ன’ என்று அவனுடைய மனதில் அதற்கும் அவள் மேல் கோபம் வந்தது.

அதற்குப் பிறகு அவனுக்குத் தன்னுடைய மாமாவை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கச் சரியாகச் சில பல நிமிடங்களில் கடந்ததும் தன்னுடைய கை கடிகாரத்தைக் குறிப்பாக ஒரு பார்வை பார்த்த ஜெகன் நாதன், “சரி நேரம் ஆச்சு.நான் கிளம்பறேன்” என்றார்.

“நானும் உங்க கூட வீட்டுக்கு கிளம்பட்டுமா”ஆவலாகக் கேட்டார் திலகவதி.

“நீ அங்கே வந்து என்ன செய்யப் போற…இங்கேயே இரு” பட்டுக் கத்தரித்தாற் போலப் பேசினார் ஜெகன் நாதன்.

“அக்காவுக்கும் அங்கே வரணும்னு ஆசை இருக்காதா மாமா…எவ்வளவு நாள் தான் பிள்ளைகளையும் உங்களையும் பார்க்காமல் இருப்பாங்க”சகோதரியின் முகம் வாடுவது பொறுக்காமல் அவளுக்காகப் பரிந்து பேசினான் விக்ரமாதித்யன்.

“இங்கே என்றால் அவளைப் பார்த்துக் கொள்ள இத்தனை பேர் இருக்காங்க…அங்கே வீட்டில் இவளும் தனியாகத் தானே இருப்பா…அம்மா உயிருடன் இருந்த போது நிலைமை வேறு…இப்போ இருக்கும் நிலைமை வேறு…வீட்டு வேலையாட்களை நம்பி இவளை தனியே விட்டுட்டு என்னால் எப்படி வெளிவேலையைக் கவனிக்க முடியும்.”எதார்த்தத்தைப் புரிய வைக்க முயன்றார் ஜெகன் நாதன்.

அவர் சொல்வதில் இருக்கும் உண்மை புரிந்தாலும் தமக்கையின் வாடிய முகம் மேலும் பேசத் தூண்டியது ஆதித்யனை.

“சரி மாமா பசங்களை மட்டுமாவது விட்டுட்டு போகலாமே…அக்காவுக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கும்”

“அதெப்படி இன்றைய தினத்தை விட்டா அதுக்குப் பிறகு இவர்களின் ராசிக்கு கிட்டத்தட்ட பதினைந்து நாள் கழித்துத் தானே நல்ல நாள் இருக்கு.அதுவரைக்கும் அவங்க இரண்டு பேரும் இங்கேயே இருந்தா… அவங்க படிப்பு என்ன ஆகும்?”லேசான மறுப்பு அவர் குரலில்.

“சின்னப் பிள்ளைகள் தானே மாமா…அதுவும் இல்லாம அவங்களுக்கும் அக்கா கூட இருக்கணும்னு ஏக்கம் இருக்கும் இல்லையா?நீங்களே சொன்ன மாதிரி அங்கே வீட்டில் பெரியவங்க துணை இல்லாம குழந்தைகள் மட்டும் எப்படித் தனியே இருக்க முடியும்?”அவரின் வார்த்தைகளைக் கொண்டே அவரைச் சம்மதிக்க வைத்த கணவனின் சாமார்த்தியத்தை மனதுக்குள் மெச்சிக் கொண்டாள் பொழிலரசி.

“சரி சரி…இங்கேயே இருக்கட்டும்.ஆமா விஜயன் எங்கே ஆளையே காணோம்?”

“அ…அது வந்து மேனகாவை இன்னைக்கு அவளோட காலேஜில் ஹால் டிக்கட் வாங்கிக்க வர சொல்லி இருக்காங்க.அதுதான் அவனும் கூடத் துணைக்குப் போய் இருக்கான்.”என்று தயங்கியபடியே கணவருக்குப் பதில் அளித்தார் திலகவதி.

“இது என்ன திலகா பழக்கம்…நான் இன்று இங்கே வருவது தெரிந்த பிறகும் கூட அவன் எப்படிக் கிளம்பிப் போகலாம்? வீட்டு மாப்பிள்ளை எனக்குக் கொஞ்சம் கூட மரியாதையே இல்லையா? என்ன தான் நாளைக்குத் திருமணம் செய்து போறவங்களாக இருந்தாலும்,அடிக்கடி இப்படித் தனியே வெளியே போவது எனக்கு என்னவோ பிடிக்கலை.அவர்கள் திருமணமும் இன்னும் வெறும் பேச்சளவில் மட்டும் தான் இருக்கு.

நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு கெளரவம் இருக்கு இல்லையா?உன் தம்பியிடம் கொஞ்சம் சொல்லி வை.இதனால் ஏதாவது கெட்ட பேர் வந்தா அதுக்கு அப்புறம் நான் இங்கே வருவதைப் பற்றி யோசிக்க வேண்டி இருக்கும்”அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

“அய்யயோ…அப்படி எல்லாம் பேசாதீங்க.நான் அவனிடம் கண்டிச்சு சொல்லிடறேன்”கணவனைச் சமாதானம் செய்ய முயன்றார் திலகவதி.

“எனக்கு நம்பிக்கை இல்லை திலகா…நான் இங்கே வீட்டுக்கு வரப் போவதில்லை என்று குறிப்பு காட்டி பேசிய பிறகும் கூட உன்னுடைய வீட்டு ஆட்கள் யாரும் கொஞ்சம் கூடப் பதறவே இல்லையே…அப்போ அவங்களுக்கு எல்லாம் நான் இங்கே வராமல் இருந்தால் சந்தோசம் போலவே…”

“என்ன மாமா இப்படிப் பேசறீங்க?” என்று பதட்டத்துடன் ஆதித்யன் குரலும், “அப்படி எல்லாம் பேசாதீங்க மாப்பிள்ளை” என்று பயக் குரலும் அவருக்கு ஓரளவிற்குத் திருப்தியை கொடுத்தது போலும்.

“ஹ்ம்ம்…அது சரி திலகா…உன் தம்பி திடீரென்று காதல் திருமணம் செஞ்சுகிட்டார்ன்னு எனக்குத் தெரியும்.ஏதோ அவங்க அப்பாவுக்கு உடம்புக்கு ரொம்ப முடியாம இருந்ததால அவசர அவசரமா செய்ய வேண்டிய சூழ்நிலைன்னு என்கிட்ட உன் தம்பி சொன்னான்.அந்தப் பொண்ணு இது தானே” என்று பொழிலரசியை நோக்கி கையை நீட்டினார்.

“ஆம் “ என்பது போலச் சுற்றி இருந்த எல்லார் தலையும் ஆடியது.

“பொண்ணு நம்ம இனம் தானே…”பொழிலரசியைத் தவிர மற்ற எல்லாரும் மறுபடியும் பூம்பூம் மாடாக மாறினார்கள்.

“வசதி எல்லாம் எப்படி?”

“நம்ம அளவுக்கு இல்லைனாலும் ஓரளவுக்கு வசதி தான்”வேகமாகப் பேசினார் திலகவதி.

பொழிலரசிக்கு தான் இந்தக் காட்சிகள் எதுவும் பிடித்தம் இல்லாமல் போனது.பொழிலரசிக்கு சிறுவயது முதலே யாராவது என்ன ஜாதி என்று கேட்டால் அவர்களுக்குப் பதில் சொல்லப் பிடிக்காது.மௌனமாகக் கடந்து விடுவாள்.

கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு அப்படிக் கேட்பவர்களிடம் சண்டை கூடப் போட்டு இருக்கிறாள்.இப்பொழுதும் அவளுக்குக் கோபம் சுறுசுறுவென ஏறவே அவரை எதிர்த்து பேசும்முன் தன்னுடைய முகத்தையே கெஞ்சலாகப் பார்த்துக் கொண்டு இருந்த திலகவதி படவும் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

“சரி நான் கிளம்பணும்.சீக்கிரம் வந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க”என்று மிடுக்காகச் சொன்னவர் கைகளைக் கழுவி விட்டு ஹாலுக்குச் சென்றார்.

‘இனி இவர் பின்னாலேயே ஓட வேண்டுமா?’ என்ற எரிச்சல் தோன்றினாலும் மறுக்கும் வகைத் தெரியாது அவரைப் பின் தொடர்ந்து போனாள் பொழிலரசி.வந்து நின்றவர்களை உடனேயும் ஆசிர்வாதம் செய்யவில்லை அவர்.கடிகாரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தவர் முகம் பிரகாசம் அடைய பேசினார்.

“ம் இப்போ நேரம் நல்லா இருக்கு.இப்போ காலில் விழுங்க”என்று சொல்லிவிட்டுக் கிழக்கு பார்த்து நிற்க பொழிலரசி அவரின் காலில் விழுந்து வணங்க தயக்கம் காட்டினாள்.

கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த விக்ரமாதித்யன் அவள் கைகளைப் பற்றி இழுத்து இருவருமாகச் சேர்ந்து அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் படி செய்தான்.இருவரும் எழுந்ததும் அவர் வீட்டு முறையாக ஒரு தட்டில் பட்டு வேஷ்டி,பட்டுப்புடவையும்,வைர நகையும் வைத்து இருவரிடமும் நீட்ட பொழிலரசி இப்பொழுது முன்னைக் காட்டிலும் அதிகத் தயக்கத்தோடு அதை வாங்க மறுத்தாள்.

“வாங்கிக்கோ அரசி.முறைப்படி உங்க இரண்டு பேரையும் எங்க வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து வச்சு அங்கே தான் இதையெல்லாம் கொடுத்து இருக்கணும்.ஆனா என்னால இப்போ அங்கே போய் அதையெல்லாம் செய்ய முடியாது.இன்னும் ஒரு மாசத்துக்கு எழுந்து நடக்கக் கூடாதுன்னு டாக்டர் வேற சொல்லி அனுப்பி இருக்காங்க.

அதனால தான் இங்கே வச்சு கொடுக்க வேண்டி இருக்கு.தப்பா எடுத்துக்காம வாங்கிக்கோ அரசி”என்று திலகவதி கொஞ்சம் வருத்தமாகச் சொல்லவும் மறுக்க மாட்டாமல் வாங்கியவள் அதைக் கொண்டு போய் அறையில் பத்திரப்படுத்தும் படி வள்ளியிடம் பணித்து விட்டு திரும்புவதற்குள் ஜெகன் நாதன் வேகமாக ஹாலை விட்டு வெளியேறி காருக்குள் ஏறி இருந்தார்.

அவருக்குப் பின்னால் கார் டிக்கியில் நிறையப் பழங்கள் கூடை கூடையாக ஏற்றப்பட்டுக் கொண்டு இருந்தது.எல்லா பொருட்களையும் ஏற்றி முடிக்கும் வரை ஜெகன் நாதனுக்குத் துளியும் பொறுமை இல்லை என்றே சொல்ல வேண்டும். “போதும் நேரமாகி விட்டது.நல்ல நேரத்துக்குள் கிளம்ப வேண்டும்” என்று அங்கிருந்த எல்லாரையும் பாடாய் படுத்தி வைத்து விட்டுத் தான் அங்கிருந்து கிளம்பினார்.

அவர் சென்றதும் வீடே அமைதியானது போல இருந்தது பொழிலரசிக்கு.மற்றவர்கள் மீண்டும் வீட்டை பழையபடி மாற்றுவதில் ஈடுபட்டு இருக்க, அதற்கு மேலும் நேரத்தை வீணாக்காமல் மாமாவை தனியே அழைத்துப் பேசினாள்.தங்க வைத்து இருக்கும் அறைக்குச் சென்று அவருடைய பொருட்களை எடுத்துக் கொண்டு இன்னும் பத்து நிமிடத்தில் கிளம்பி கீழே வருமாறு சொல்லி அவரை அனுப்பி விட்டு ஹாலை நோட்டமிட்டாள்.

கண்ணுக்கு எட்டிய வரை விக்ரமாதித்யன் தென்படாததால் நெஞ்சில் நிம்மதி பூக்க பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.பூனை போலப் பதுங்கி பதுங்கி கார் நிறுத்தும் இடத்திற்குச் சென்றவள், ஏற்கனவே அங்குக் காத்துக் கொண்டு இருந்த அவளுடைய மாமாவையும் சட்டென அருகில் இருந்த காரில் முன் பக்கத்தில் தள்ளி விடாத குறையாக ஏற்றி விட்டபின்,டிரைவரை காரை எடுக்கும்படி மிடுக்காக உத்தரவு ஒன்றை பிறப்பித்தாள்.

டிரைவர் ஒன்றும் பேசாமல் காரில் ஏறி முன்பக்கத்தில் அமர்ந்து வண்டியை ஓட்டத் தயாராகவும்,குஷியாகப் பின் பக்க கதவை திறந்து ஏறப் போனவள் அதிர்ந்து சிலையானாள்.

அதி நவீன வில்லன் சிரிப்பொன்றை உதிர்த்துக் கொண்டே, கண்களில் கேலியை தாங்கியபடி உடல் இறுக அமர்ந்து இருந்தவன் சாட்சாத் அவளது கணவன் விக்ரமாதித்யனே தான்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here