Kadhale Nee Kaanala Tamil Novels 18

0
2006
Madhumathi Bharath Tamil Novels

கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டு இருந்தது.காரில் இருந்த பரசுராமனும்,ஆதித்யனும் ஒருவருக்கு ஒருவர் எதையாவது பேசி சலசலத்த வண்ணம் இருந்தனர்.முதலில் லேசாகப் பின்புறம் திரும்பி பார்த்தவாறே பேசிக் கொண்டு வந்த பரசுராமன் கூட ஆதித்யன் மனைவியின் தோளில் கைப் போட்டு லேசாக அணைத்த வண்ணம் வருவதைப் பார்த்ததும் கொஞ்சம் சங்கோஜப் பட்டவர் அதற்குப் பிறகு பின்புறம் திரும்பவே இல்லை.

புதுமணத் தம்பதிகளின் நெருக்கம் தன்னால் பாதிக்கப் படக் கூடாது என்று எண்ணி விட்டார் போலும்.அவரிடம் பேசிக் கொண்டு இருந்தாலும் ஆதித்யனின் மொத்த கவனமும் பொழிலரசி மீது தான் இருந்தது.உணர்ச்சிகளின் குவியலாகக் காணப் பட்டாள் பொழிலரசி.நிமிர்ந்து யார் முகத்தையும் அவள் பார்க்கவில்லை என்றாலும் அவள் உடலில் இருந்த விறைத்த தன்மை அவளின் மனநிலையை அவனுக்குப் புரிய வைத்தது.

“நல்லவேளை மாப்பிள்ளை…ஏற்கனவே என்கிட்ட உங்க மாமா கிளம்பியதும் நாம ஊருக்கு போகலாம்னு தயாரா இருங்கன்னு சொல்லி இருந்தீங்க.அதான் அரசி கூப்பிட்டதும் உடனே கிளம்பி வந்துட்டேன்.இல்லேன்னா நான் கிளம்பி வர கொஞ்சம் தாமதம் ஆகி இருக்கும்” என்று இயல்பாகப் பேசினார் பரசுராமன்.

‘ஓஹோ…ஏற்கனவே இவர்கள் இருவரும் பேசி விட்டார்கள் போல…இது தெரியாமல் நான் என்னவோ இவனை ஏமாற்றி விட்டுக் கிளம்பப் போவதாக நினைத்துக் கொண்டு இருந்து இருக்கிறேன்.கிளம்பச் சொன்னதும் மறு வார்த்தை கூடப் பேசாமல் மாமா கிளம்பிய போது கூட எனக்குச் சந்தேகம் வரவில்லையே…

அது மட்டுமா டிரைவர் நான் சொன்னதுமே என்னுடைய மிரட்டலுக்குப் பயந்து தான் வண்டியை எடுக்கிறார் என்று எவ்வளவு சந்தோசப் பட்டேன்.ஏற்கனவே எல்லாரும் கிளம்பி தயாராக இருக்கும் போது நான் வந்து இப்படிச் சொன்னதும் தான் டிரைவரும் மறுத்து பேசவில்லை போலும்.எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்து இருக்கிறேன்’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் பொழிலரசி.

அவளருகில் வேடிக்கை பார்ப்பது போல நெருங்கி அமர்ந்த விக்ரமாதித்யன் யாரும் அறியா வண்ணம் அவள் கைகளில் கர்சீப்பை திணித்தான்.

“வச்சுக்கோ தேவைப்படலாம்” என்று சொல்லி விட்டு ஒன்றும் அறியா பிள்ளை போல முகத்தை வைத்துக் கொண்டான்.

‘என்ன நினைத்துக் கொண்டான் இவன்? இப்படி நடந்து விட்டதற்காகக் கண்ணீர் விட்டு கதறி அழுவேன் என்றா?’ என்று முறைப்பாக அவனைப் பார்த்தவள் நிமிர்ந்து நேராக அமர்ந்து கொண்டாள்.

“என்ன பொழில் நிமிர்ந்து உட்கார்ந்துட்ட…இப்ப அழ மாட்டியா? சரி விடு.இந்த சந்தர்ப்பம் இல்லேன்னா வேற ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போய்டும் நீ அழ!” வேண்டுமென்றே வார்த்தைகளால் அவளைக் கோபப்படுத்தினான்.

‘இனி நான் அழப் போவதில்லை.போறது என்னோட ஊருக்கு.அங்கே போனதும் உன்னை என்ன செய்கிறேன் பார்’என்று மனதுக்குள் சூளுரைத்தவள் கணவனின் பேச்சை கவனிக்காதவள் போல வெளியே திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.

விக்ரமாதித்யனுக்கு அதெல்லாம் எதுவும் பெரிதாகவே தோன்றவில்லை போலும்.பின் சீட்டில் வாகாகச் சாய்ந்து அமர்ந்தவன் கண் மூடி உறங்கத் தொடங்கினான்.இவன் உண்மையில் தூங்குகிறானா அல்லது தூங்குவது போல நடிக்கிறானா என்று தெரியவில்லையே…காரில் டிரைவர் இருக்கும் போது மாமாவிடம் எதுவும் பேச வேண்டாம் என்று முடிவு செய்து பொழிலரசியும் மௌனமாகவே வந்தாள்.

‘பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்த்த கதையாக இவனைக் கூடவே வைத்துக் கொண்டு எப்படி அப்பாவை பற்றியும்,என்னுடைய கடந்த காலத்தைப் பற்றியும் விசாரிப்பது?’ என்று அவள் யோசிக்கத் தொடங்கிய வேளையில் உள்ளூர அவளுக்குக் கொஞ்சம் நம்பிக்கையும் இருந்தது.ஒரு சின்னச் சந்தர்ப்பம் கிடைத்தால் கூடப் போதுமே…ஒன்றுமே தெரியாமல் முழித்துக் கொண்டு நிற்பதற்கு ஒரு சிறு துரும்பு அளவிற்கு ஏதேனும் கிடைத்தால் கூடப் போதும்.கடவுளே அதற்கு உதவி செய்’ என்று மனமார கடவுளை வேண்டிக் கொண்டாள்.

இரவு வெகுநேரம் கடந்த பிறகு பொழிலரசியின் ஊருக்குள் கார் நுழைந்தது.சுற்றிலும் இருள் சூழ்ந்து இருந்தாலும் தன்னுடைய சொந்த ஊரை அவளுக்குத் தெரியாதா என்ன?உடல் எல்லாம் புது ரத்தம் பாய்ந்தது போல அரசிக்குக் கொஞ்சம் தெம்பாக இருந்தது.தன்னுடைய வீடு இருக்கும் தெருவுக்குள் கார் நுழையும் போதே பொழிலரசியைத் தந்தையின் நினைவுகள் ஆட்டுவிக்கத் தொடங்கியது.

முகம் இறுக திரும்பி பக்கத்தில் இருப்பவனைப் பார்க்க அவனோ ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருந்தான்.அவளுக்கு வந்த ஆத்திரத்தில் அப்பொழுது மட்டும் கைக்கு ஏதாவது பொருள் கிடைத்து இருந்தால் நிச்சயம் அவன் மண்டையை உடைத்து இருப்பாள்.அந்த அளவிற்கு அவளின் கோபம் இருந்தது.ஆனால் ஓடிக் கொண்டு இருக்கும் காரில் அப்படி எந்தப் பொருளும் கிடைக்காததால் விக்ரமாதித்யனின் தலை தப்பியது.

நேரம் நடுநிசியை நெருங்கிக் கொண்டு இருக்க, இருட்டைக் கிழித்துக் கொண்டு சென்ற அவர்களின் கார் நேராகப் பொழிலரசியின் வீட்டு வாசலுக்கு வந்து நின்றது.அந்த நேரத்தில் ஊர் மக்கள் யாரையுமே பார்க்க முடியாது என்று எண்ணிக் கொண்டு இருந்தவளுக்கு அந்த நடுநிசியிலும் அவளுக்காக அவள் வீட்டு வாசலில் காத்துக் கொண்டு இருந்தவர்களைக் கண்டு அவளையும் அறியாமல் கண்கள் கலங்கியது.

இங்கே கூடி இருக்கும் இத்தனை பேரும் நிச்சயம் தன் ஒருத்திக்காக மட்டுமே இங்கே வந்து நிற்கவில்லை என்பதை அறியாதவளா அவள்? தன்னுடைய தந்தையின் மீது வைத்து இருக்கும் அன்பினாலும்,மரியாதையினாலும் தானே? எப்படிப்பட்ட மனிதர் அவர்! அன்பை தவிர வேறு என்ன தெரியும் அவருக்கு? அவரைப் போய்க் கொன்று விட்டானே இந்தப் பாவி…இவனை…இவனை’ மனதுக்குள் எண்ணிய வார்த்தைகள் அப்படியே அந்தரத்தில் நின்று போயின.

கண்களில் கனிவை தாங்கியபடி கர்சீப்பை அவள் கரங்களில் திணித்து ‘துடைத்துக் கொள்’என்று கண்களாலேயே பேசிக் கொண்டு இருந்தான் விக்ரமாதித்யன்.

‘இவன் எப்பொழுது விழித்தான்? தூங்கிக் கொண்டு தானே இருந்தான்… ஒருவேளை அந்தத் தூக்கமும் கூட நடிப்பு தானோ? எங்கே விழித்து இருந்தால் நான் எதையாவது கேட்டு வைத்து விடுவேனோ என்று வேண்டுமென்றே தூங்குவது போல நடித்து இருக்கிறான் பாவி…இவனை’ என்று அவள் பல்லைக் கடித்த சத்தம் தெளிவாக விக்ரமாதித்யன் காதுக்குக் கேட்டாலும் அவன் முகப் பாவனையில் எந்த மாற்றமும் இல்லை.

ஏதோ கொஞ்ச நேரம் முன்பு தான் உலக இன்பத்தையெல்லாம் துறந்து முற்றும் துறந்த முனிவன் ஆனதை போல இருந்தது அவன் பார்வை.அவன் மனதில் என்ன ஓடிக் கொண்டு இருக்கிறது என்பதை யாரும் கணிக்க முடியாதபடியான ஒரு பார்வை.

அதற்கு மேல் அவனையோ அவனது பார்வைகளைப் பற்றியோ ஆராய்ச்சியில் ஈடுபட மனமின்றிக் கிராமத்து மக்கள் அவளைச் சூழ தற்காலிகமாக அவனைப் பற்றிய எண்ணங்களை ஒதுக்கி வைத்து விட்டு காரை விட்டு கீழே இறங்கினாள்.

அறிந்தவர்,தெரிந்தவர்,பக்கத்துக்கு வீட்டு குடும்பம்,எதிர் வீட்டுக் குடும்பம் என்று எல்லாரும் அவளுக்காகக் காத்திருந்து அவளை வரவேற்க நெஞ்சம் நெகிழ்ந்து தான் போனது அவளுக்கு…

“சரி சரி… எல்லாரும் கிளம்புங்க காலையில பேசிக்கலாம்.பொண்ணும் மாப்பிள்ளையும் அசந்து போய் இருப்பாங்க.அவங்க கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்.” என்று கூறி இருவரையும் அவர்களின் பாச மழையில் இருந்து காப்பாற்றி வீட்டுக்குள் அழைத்துப் போனார் பரசுராமன்.

அவளுடைய வீடு திறந்தே இருந்தது.தினமும் முறையாகப் பராமரிக்கப் படுவதின் அடையாளமாக வீட்டின் முன் பகுதி சுத்தமாகவும்,அங்கிருந்த பூச்செடிகள் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருந்தது.வீட்டைப் பார்த்ததும் தந்தையைப் பற்றிய உணர்வுகள் மேலோங்க கூடவே வந்த கணவனை மறந்தவளாய் வீட்டுக்குள் போக முயற்சிக்க வாசலிலேயே அவளைத் தடுத்து நிறுத்தியது அவளுக்கு நன்கு பரிச்சயமான பெண் குரல் ஒன்று.

“அப்படியே மாப்பிள்ளையோடு சேர்ந்து நில் அரசி” உத்தரவாக வந்த குரலை கேட்டு மகிழ்ச்சியுடன் திரும்பக் கையில் ஆரத்தியுடன் அவளை எதிர்கொண்டார் பரசுராமனின் மனைவி சுசீலா.அவரின் பேச்சு காதிலேயே விழாதது போலப் பாவித்து உள்ளே நகர முயன்றவளின் கைகளை இறுக பற்றித் தன்னோடு சேர்த்து நிற்க வைத்துக் கொண்டான் விக்ரமாதித்யன்.

பற்களை இறுக கடித்து ஆரத்தி எடுத்து முடிக்கும் வரை பொறுமை காத்தவள் ஆரத்தி பொட்டு வைத்த மறுநிமிடம் “அத்தை” என்று ஆரவாரமாக அவரைக் கட்டிக் கொண்டாள்.

“ஆரம்பிச்சுட்டியா உன் கொஞ்சலை … போதும் உள்ளே போ” என்று அவளது கைகளை நாசுக்காக விலக்கித் தள்ளியவர் ஆரத்தியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தார்.முகத்தைப் பாவமாக வைத்தபடி பரசுராமனின் புறம் திரும்பி பேசினாள் பொழிலரசி.

“அத்தை என் மேல் கோபமா இருக்காங்களா மாமா?ஏன் சரியா பேச மாட்டேங்குறாங்க?”

“அ… அதெல்லாம் ஒண்ணும் இல்லைடா…அப்படி கோபமாக இருக்கிறவள் தான் இப்படி நடுராத்திரி வரை உனக்காக விழித்துக் கொண்டு இருக்கிறாளா? அவளுக்கும் வயதாகிறது இல்லையா? இப்படி இரவு நேரத்தில் விழித்து இருப்பது உடம்பு முடியாமல் போயிருக்கும் வேறு ஒண்ணும் இல்லை” என்று அவளது மனம் கோணாமல் பேசியவர் கண் அசைத்து இருவரையும் வீட்டுக்குள் செல்லும்படி பணித்தார்.

“ஆமா இல்லை…நான் ஒரு மடச்சி” என் தலையில் தானே குட்டிக் கொண்டவள் ஆவலுடன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள்.

வீட்டிற்குள் நுழைந்ததும் அவளையும் அறியாமல் ஒரு சிலிர்ப்பு தோன்றியது. ‘இங்கே தான் பாட்டி எனக்குச் சாப்பாடு ஊட்டி விடுவார்.இங்கே தான் அப்பாவும் நானும் ஒன்றாக அமர்ந்து பழைய பாடல்கள் கேட்போம்,இங்கே தான் பாட்டி என்னை விளையாட்டாக அடிக்க வரும் நேரத்தில் எல்லாம் குறுக்கே புகுந்து என்னைக் காப்பாற்றுவார்’ஏதேதோ பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவளின் நினைவுச் சங்கிலி அறுந்து விழுந்தது சுசிலாவின் குரலால்.

“ஏதாவது சாப்பிடறீங்களா?”

“எனக்கு எதுவும் வேணாம் சுசீலா…எனக்கு மாப்பிள்ளை வீட்டில் சாப்பிட்டதே இன்னும் செமிக்காம இருக்கு.அதுக்குள்ள மறுபடியும் சாப்பாடா? எனக்கு வேண்டாம்” என்றவர் அப்படியே திரும்பி, “அரசி நீயும் மாப்பிள்ளையும், கொஞ்சமா சாப்பிடறீங்களா?”என்றார்.

“எனக்குப் பசி இல்லை மாமா…அதுவும் இப்படி நேரங்கெட்ட நேரத்தில் எனக்கு எதுவும் வேணாம்’ என்று சொல்லிவிட்டு பார்வையைக் கணவனின் புறம் திருப்பினாள்.

“எனக்கும் பசியில்லை அம்மா…காரில் வந்ததே அசதியா இருக்கு…தூங்கினா நல்லா இருக்கும்”என்று நல்லபிள்ளை போல முகத்தை வைத்துக் கொண்டான்.

‘அது தானே எனக்குப் பசி எடுத்தால் தானே உனக்கும் பசி எடுக்கும்.அப்போ தான் நான் எங்கே போனாலும் அங்கேயும் பின் தொடர்ந்து வர உனக்கு வசதியா இருக்கும்.இதெல்லாம் இந்த அப்பாவி ஜீவன்களுக்குப் புரியுமா என்ன? நீ அம்மான்னு சொன்னதும் ஏதோ மனசாரப் பாசமா சொல்றனு நம்பிக்கிட்டு இருக்காங்க…ஒருநாள் இல்லை ஒருநாள் உன்னோட குட்டு உடையத் தான் போகுது.அப்ப இருக்குடா உனக்குக் கச்சேரி”என்று மனதுக்குள் கருவிக் கொண்டாள்.

சட்டென ஏதோ நினைவு வந்தவள் போலப் பரசுராமனின் புறம் திரும்பி ஆர்வமாகக் கேட்டாள்.”கயலும்,கார்த்திக்கும் எங்கே மாமா?”

ஒரு நிமிடம் மெளனமாக இருந்தவர் தன்னைச் சரி செய்து கொண்டு பேசத் தொடங்கினார்.

“கார்த்திக் வெளியூரில் வேலை பார்க்கிறான் அரசி…கயல் இங்கே தான் இருக்கா?”

“ஓ…கயல் தூங்கிட்டாளா மாமா?”ஆர்வம் பொங்கியது அவள் குரலில்.

“இன்னும் இல்லை…” பக்கத்துக்கு அறையில் இருந்து ஒரு பெண்ணின் குரல் ஒலிக்க விருட்டென எழுந்து அறைக்குள் போனாள் பொழிலரசி.அந்த அறையில் இவளின் வயதை ஒத்த பெண் ஒருத்தி சுவரோடு சுவராக ஒன்றிக் கொண்டு கீழே தரையில் பார்வையைத் தரையில் பதித்த படி உட்கார்ந்து கொண்டு இருந்தாள்.

“ஏன்டி எருமை மாடே…நான் எவ்வளவு வருஷம் கழிச்சு உங்களை எல்லாம் பார்க்க வந்து இருக்கேன்.வெளியே வந்து என்னைப் பார்க்க மாட்டியா? அது என்னடி பெரிய இவளாட்டம் இங்கே வந்து இப்படி உட்கார்ந்து இருக்க? அவ்வளவு பெரிய ஆளா நீ?”இடுப்பில் கை வைத்து மூச்சு வாங்க கேள்வி கேட்ட பொழிலரசியைக் கணவனின் கண்கள் ஆச்சரியத்துடன் உள்வாங்கியது.

“அது…அது வந்து …அரசி…”

“ஏய் என்னடி என்னமோ நேத்து தான் பிறந்த பச்சைப்புள்ளை பேசத் தெரியாம பேசற மாதிரி திக்கித் திணறி பேசற?”

“சாரி அரசி…தெரியாமப் பண்ணிட்டேன்” பார்வையைத் தரையில் பதித்துக் கெஞ்சுதலாகச் சொன்னவளின் அருகே சென்று வாஞ்சையுடன் அவள் கைகளைப் பற்றிக் கொண்டாள் பொழிலரசி.

“ஹே…இதுக்கெல்லாம் எதுக்குடி சாரி கேட்கிற? அதுதான் நானே உன்னைத் தேடி வந்துட்டேன் இல்ல?”

“சாரிடி…”என்று இப்பொழுதும் நிலம் பார்த்தே பேசிய அந்தப் பெண்ணைத் துளைக்கும் பார்வையுடன் பார்வையிட ஆரம்பித்தான் விக்ரமாதித்யன்.

‘இந்தப் பொண்ணு பேச்சு நார்மலா இல்லையே…இந்த பொண்ணு கேட்கும் மன்னிப்பு இப்போ நடந்த சம்பவத்திற்காகக் கேட்பது போல இல்லையே? ஏதோ விஷயம் இருக்கு’ என்று எண்ணியவன் அவளின் உடல் மொழியின் (body Language) மூலம் எதையாவது தெரிந்து கொள்ள முடியுமா என்று அவளை ஊன்றிப் பார்த்தான். எதேச்சையாகத் திரும்பிய பொழிலரசியின் பார்வையில் அது பட உஷ்ணமாகக் கணவனை முறைத்தாள்.

சுற்றி இருந்தோர் யாரும் அறியாத வண்ணம் அவனின் விலாவில் ஒரு குத்து குத்தினாள்.அதிர்ந்து திரும்பிய ஆதித்யனை, ‘அங்கே என்ன பார்வை வேண்டிக்கிடக்கு’ என்று கண்ணாலேயே கேட்க ஆதித்யனின் முகத்தில் மத்தாப்புச் சிதறல்கள்.

‘ஒன்றுமில்லையே’ என்று ஆர்ப்பாட்டம் இல்லாத தோள் குலுக்களோடு நகர்ந்தாலும் அவன் பார்வை கயல்விழியை மீண்டும் ஒருமுறை கூர்மையாக அளவிட்டது.அவள் கண்களில் எதையோ சொல்லி விடத் துடிக்கும் பாவம். ‘ எதற்கும் இவள் மேல் ஒரு கண் வைத்துக் கொள்வது நல்லது’ என்று எண்ணிக் கொண்டவன் பரசுராமனிடம் பேசியபடியே அறையை விட்டு வெளியே வந்தான்.

“அம்மாடி அரசி…நீயும் மாப்பிள்ளையும் உன்னுடைய அறையிலேயே தங்கிக்கோங்க.வேறு ஏதாவது வேணுமா மாப்பிள்ளை?” என்று பொழிலரசியிடம் ஆரம்பித்து ஆதித்யனிடம் கேள்வியை முடித்து இருந்தார் பரசுராமன்.

“வேற ஒண்ணும் வேண்டாம் சித்தப்பா…நாங்க போய்த் தூங்குறோம்”

“சரி…அப்படின்னா நாங்க காலையில் வர்றோம்.நீங்க போய்த் தூங்குங்க”

“சரி சித்தப்பா…”என்றவன் கை மறைவில் நாசுக்காகக் கொட்டாவி விட்டான்.

“அரசி தம்பிக்குத் தூக்கம் வருது போல உன்னோட அறைக்குக் கூட்டிக் கொண்டு போ தாயி”என்று சொல்லவும் மறுத்து பேச வழி இல்லாமல் அவனுடன் தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டாள் பொழிலரசி.இருவரும் உள்ளே போனதை உறுதிபடுத்திக் கொண்டு கதவை வெளிப்புறமாகச் சாத்தி விட்டு பரசுராமன் குடும்பம் வெளியேறி விட்டது.

அறைக்குள் போனதும் பழைய நினைவுகள் ஒவ்வொன்றாய் வரிசை கட்டி நிற்க,அவள் கண்களில் மெல்லிய நீர் படலம்.கதவை சாத்தும் சத்தம் கேட்டு திரும்பியவள் ஆதித்யனின் செய்கையில் விதிர்த்துப் போனாள்.

கண்களில் விஷம சிரிப்புடன் சட்டையின் ஒவ்வொரு பட்டனாகக் கழட்டிக் கொண்டே அவளை நோக்கி வந்து கொண்டு இருந்தான் விக்ரமாதித்யன்.

“என்ன” உள்ளுக்குள் பரவிய அனலை வெளிக்காட்டாது நிமிர்ந்து நின்றாள் பொழிலரசி.

“கசகசன்னு இருக்கு இல்ல…ஏஸி இல்லையா?”என்று கேட்டவாறே அவளுக்கு அருகில் இருந்த அந்தக் கட்டிலில் அமர்ந்தான்.அவனுக்கு அருகில் நிற்கப் பிடிக்காமல் வேகமாக நகர்ந்து ஜன்னலை திறந்து விடச் சிலுசிலுவெனக் காற்று அறையை நிரப்பியது.

“எங்க வீட்டு ஏஸி இது தான்.பிடிக்கலேன்னா உடனே கிளம்பி உங்க அரண்மனைக்குப் போய்த் தூங்கிக்கோங்க” சுவற்றைப் பார்த்துப் பதில் சொன்னாள்.அலுப்பாக இருந்ததாலோ உறங்கப் போவதாலோ சட்டையைக் கழட்டி விட்டு உறங்க தயாராக நின்று கொண்டு இருந்தவனைக் கண் கொண்டு பார்க்கத் தான் அவளால் முடியவில்லை.

“ஹா ஹா…அந்த கதை எல்லாம் இங்கே நடக்காது பொழில்….எப்படி உன்னைக் கூட்டிக்கொண்டு வந்தேனோ அதே மாதிரி மறுபடியும் திரும்பி ஊருக்கு போகணும்.அதுவரை நீ என் கண்காணிப்பில் தான் இருப்பாய்…”இலகுவாக இருந்தாலும் அவன் குரலில் இருந்த தெளிவு அவளை எச்சரிக்கை செய்தது.

“அது தான் தெரியுமே…அதுக்குத்தானே கூடவே இப்படி ஒட்டிக்கிட்டு வந்து இருக்கீங்க”நொடித்தாள் பொழிலரசி.

“என்னது ஓட்டிக்கிட்டு வந்தேனா…இல்லையே நல்லபிள்ளையாகத் தள்ளித் தானே உட்கார்ந்து இருந்தேன்…இப்ப கூடத் தள்ளித்தான் நிற்கிறேன் பொழில்…”தாபத்தில் உருகும் வெண்ணையென அவன் குரல்.

“…”

“ஏன் பொழில்…ஊரில் உள்ள எல்லாரும் மறுவீட்டு விருந்துக்கு மாமனார் வீட்டுக்கு வந்து இரவு நேரத்தில் இப்படி நம்மைப் போலப் பேசியா பொழுதை கழிப்பார்கள்?”ஒன்றும் அறியாப் பிள்ளையைப் போன்ற அவன் முகத்தில் உதட்டோரம் மின்னிய குறுஞ்சிரிப்பு மற்றும் இல்லையென்றால் அவனின் கேள்வியை நிஜம் என்றே நம்பி இருப்பாள் பொழிலரசி.

“மத்தவங்க மனுஷனை கல்யாணம் செஞ்சு இருக்காங்க…நான் அப்படியா உயிரை எடுக்கும் ராட்சசனை இல்லை கல்யாணம் செய்து இருக்கேன்.உங்களுக்கு அது பொருந்தாது” என்று கூறியவள் அவளுடைய ஒற்றைக் கட்டிலில் அவனோடு உறங்கப் பிடிக்காது கொல்லைப் புற கதவை திறந்து கொண்டு அங்கே இருந்த மரத்தடியில் சென்று படுத்துக் கொண்டாள்.

பாயை கீழே விரித்துப் படுத்தவளுக்கு உறக்கம் வரும் என்ற நம்பிக்கை மட்டும் சிறிதும் இல்லை.சற்று நேரத்தில் அவள் காதுகளில் விழுந்த அழுத்தமான காலடியோசை வருவது யார் என்பதை அவளுக்கு உணர்த்தினாலும் திரும்பிப் பார்க்காமல் அப்படியே படுத்து இருந்தாள்.

“உள்ளே படுப்பதை விட இங்கே இன்னும் சில்லுன்னு இருக்கு பொழில்”அவளுக்கு எதிரில் போர்வையை விரித்துக் கீழே படுக்கத் தயாரானான்.

“உன் தொல்லை இல்லாம இருக்கணும்னு தானே இப்படித் தனியா வந்து தூங்குறேன்.இங்கேயும் வந்து ஏன் என் உயிரை வாங்குற?”இங்கேயும் தன்னைப் பின் தொடர்ந்து வந்த ஆதித்யனின் செயலில் ‘தன்னைத் தனியே விடக் கூடாது என்று இப்படிக் கூடவே சுத்துக்கிறானே’என்பதை உணர்ந்து கொண்டதற்கான எரிச்சல் இருந்தது.

“நான் தான் ராட்சசன் ஆச்சே…உயிரை வாங்காமல் வேறு என்ன செய்வேன்?”என்று சலனமின்றிக் கூறினாலும் அவன் குரலில் இருந்த ஒட்டாத தன்மை அவளைப் பாதித்தது என்னவோ உண்மை.

ஒரு நொடி அவள் கண் முன்னே அவனுடைய படுக்கை அறை வந்து போனது. ‘அதில் பத்தில் ஒரு பங்கு கூட இந்த வீடு கிடையாது.இவன் கட்டாந்தரையில் படுக்க விரும்ப மாட்டான் என்று தானே நான் கிளம்பி வெளியே வந்தேன்.இவன் என்னவென்றால் அங்கே படுக்காமல் இப்படித் தரையில் வந்து படுத்து தன்னையே வருத்திக் கொள்கிறானே’ என்று அவளுடைய மனம் அவனுக்காக வருந்தினாலும் அடுத்த நொடியே இறுகியும் போனது.

‘கொலை செஞ்சுக்கிட்டு அதில இருந்து தப்பிக்க நினைக்கும் குற்றவாளி இவன்…இது மட்டுமா செய்வான்…இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்வான்’ என்று கோபமாக எண்ணியவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள். நாளை எப்படி இவனிடம் இருந்து தப்புவது என்று எண்ணியபடியே விடியலுக்காகக் காத்திருந்தாள் பொழிலரசி.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here