Kadhale Nee Kaanala Tamil Novels 2

2
2491
Madhumathi Bharath Tamil Novels

அத்தியாயம் 2
உறக்கம் கலைந்து மெல்ல படுக்கையில் புரண்டாள் பொழிலரசி.எப்பொழுதும் தரையில் படுத்தே பழக்கப்பட்ட அரசிக்கு இப்பொழுது இலவம்பஞ்சு மெத்தையின் சுகம் வித்தியாசமாக இருக்கச் சட்டென அரைகுறை தூக்கத்தில் இருந்து எழுந்தாள்.
எழுந்து அமர்ந்தவளுக்குக் கொஞ்ச நேரம் தன் கண் முன்னே தான் காணும் காட்சிகள் பிரமையோ என்று எண்ணி கண்ணை நன்றாகக் கசக்கி விட்டு மறுபடியும் சுற்றும் முற்றும் பார்த்தாள்.


‘கல்யாண மண்டபத்தில் தானே இருந்தோம்…இது யாருடைய இடம்’ என்ற கேள்வியோடு கண்களை அறையினுள் சுழல விட்டவளின் கேள்விக்குப் பதிலாக அந்த அறையின் நடுநாயகமாக இருந்த கணவனின் ஆளுயர புகைப்படம் சொல்லாமல் சொல்லியது அவளது கேள்விக்கான பதிலை.


ஊரில் அவளுடைய பாட்டியின் மொத்த கிராமத்தையும் இந்த ஒரு அறையில் அடக்கி விடலாம் போல, அத்தனை பிரமாண்டமாக இருந்தது.தங்கமும் சிவப்பும் கலந்த நிறத்தில் அறை இருக்க, அங்கே இருந்த பொருட்கள் அத்தனையும் பணத்தின் பெருமையைப் பறை சாற்றுவதாகவே இருந்தது.


வரிசையாக அவள் யோசிக்க அவளுக்கு நடந்த திருமணமும் அவளுடைய அருமை கணவனின் கையால் கடைசியாக மாத்திரை உண்டதும் அவளுடைய நினைவுக்கு வர அதன்பிறகு தான் தனக்குத் தூக்கம் வந்தது என்பதும் அவளுக்கு நன்றாக நினைவிற்கு வந்தது.
‘இது அவனுடைய வேலை தான் என்று தெளிவாகத் தெரிகிறது.ஆனால் ஏன்? ஒருவேளை தூங்கினால் தலைவலி குறையக்கூடும் என்று எண்ணி இதைச் செய்து இருப்பானோ?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.


‘ஆனால் நான் எனக்குத் தலைவலி இருக்குன்னு அவர்கிட்டே சொல்லவே இல்லையே …அப்புறம் எப்படி ?’ என்று தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாக யோசிக்கத் தொடங்கினாள். மறுபடியும் அவளுக்குத் தலைவலி வந்து விடும் போல இருக்கவே மெல்ல கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தவள் மெல்ல தன்னைச் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.


அறையைச் சுற்றி இருந்த பொருட்கள் அனைத்தும் நிச்சயம் அழகு தான்.அதை மறுப்பதற்கு இல்லை.ஆனால் கோவில் கற்பகிரகத்தில் இருக்கும் அம்மனின் அழகை ரசித்துப் பழகியவளுக்கு இந்த ஆடம்பரங்கள் ஏனோ மனதில் ஓட்ட மறுத்தது.


அறையின் சுவர் முழுக்க ஓவியங்கள்.மாடர்ன் ஓவியங்கள் போலும்.அவளுக்கு அதில் இருக்கும் கருத்துக்கள் புரியவில்லை.நான்கு ஐந்து வண்ண நிறங்களில் ஆங்காங்கே கோடு கோடாக இழுக்கப்பட்டு இருந்தது.அவள் பாட்டி போட்ட இருபத்து எட்டு புள்ளி சிக்குக் கோலத்தை ரசித்த அவளால் இந்த ஓவியத்தை ரசிக்க முடியாமல் போனது.யார் செய்த தவறோ?


இந்த ஆடம்பரமும் வசதியும் அவளுக்கு ஒருபுறம் பயத்தைக் கொடுத்தாலும் ஒருபுறம் மனதை ஏதோ ஒரு பெயர் அறியா உணர்வு தாக்கியது.இந்த இடம் எனக்கு ஏற்றது அல்ல.என்று சொல்லாமல் சொல்வது போல இருந்தது.அறைக்குள்ளேயே இருந்தால் மூச்சு முட்டி விடும் அபாயம் இருப்பது போல அவளுக்குத் தோன்ற மெல்ல எழுந்து அறையை விட்டு வெளியேறினாள்.


தூக்க மருந்தின் தாக்கம் இன்னும் குறையாததாலோ என்னவோ அவளால் சரியாக நடக்க முடியவில்லை.இரண்டு முறை கீழே விழப் போனவள் சுதாரித்து அங்கிருந்த தூண்களில் ஒன்றை பிடித்துக் கொண்டு சமாளித்து நின்று விட்டாள்.மெல்ல நடந்து அங்கே இருந்த வாஷ்பேஷினில் முகத்தை நன்றாக நீரில் அடித்துக் கழுவிக் கொண்டாள்.


இப்பொழுது கொஞ்சம் பார்வை தெளிவாக இருக்க மெல்ல நிதானமாக நடந்து அறையை விட்டு வெளியே வந்தாள்.சற்றுத் தொலைவில் கீழே இறங்கும் படி தெரியவே அதை நோக்கி சென்றவள் கீழே இருந்து கேட்ட வார்த்தையில் அப்படியே சிலை போல நின்று விட்டாள்.


“ஆதி உனக்கு என்னடா தலையெழுத்து இப்படிப்பட்ட ஒரு பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கணும்னு? வேண்டாம் எனக்குக் கொஞ்சமும் இவளை பிடிக்கலை.இந்த வீட்டிற்குச் சரியான மருமகள் இவள் இல்லை.இவளை அனுப்பி விடு”கோபம் கொப்பளித்தது அந்தக் குரலில்.


பொழிலரசி மெல்ல எட்டி கீழே பார்த்தாள்.அறுபது வயதில் ஒரு பெண்மணி அவளுடைய கணவனோடு காரசாரமாக விவாதித்துக் கொண்டு இருந்தார்.நல்ல அழகான முகம்.கணவர் இல்லை என்பதன் அறிகுறியாக நெற்றியில் திருநீறு மட்டும் அணிந்து இருந்தார்.


கழுத்தில் விலை உயர்ந்த வைர ஆபரணங்கள் மின்னிக் கொண்டிருக்க, பட்டு சால்வை ஒன்று அவருடைய தோள்களை அலங்கரித்துக் கொண்டு இருந்தது.பார்ப்பதற்குப் பழைய சினிமா நடிகை லட்சுமியை போலவே இருந்தார்.


அந்த அம்மாவையே வெகுநேரம் உற்றுப் பார்த்து அளவிட்டுக் கொண்டு இருந்த பொழிலரசி கணவனின் குரலில் சுய உணர்வை அடைந்து அவர்கள் பேச்சை மேலும் கவனிக்கலானாள்.


“அம்மா இதே வார்த்தையைத் தான் எங்க கல்யாணத்துக்கு முன்னாடியும் நீங்க சொன்னீங்க!அப்பவே இதுக்கான பதிலை உங்களுக்குக் கொடுத்துட்டேன்.இனி இதில் பேசறதுக்கு ஒண்ணும் இல்லை”இருக்கையில் இருந்து கோபமாக எழுந்து விட்டான் ஆதித்யன்.


“டேய்! உனக்கு எப்படிப்பட்ட இடத்தில் இருந்து எல்லாம் சம்பந்தம் வந்தது தெரியுமா?அதை எல்லாம் விட்டுட்டு இப்படி ஒரு பைத்தியத்தை…. ஹ்ம்ம் வேண்டாம் ஆதி.இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை.இவளுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் கொடுத்து இவளை அனுப்பிடலாம்”


வார்த்தையை அவர் முழுதாகச் சொல்லி முடிக்கவில்லை அதற்குள் ஒற்றைக் கையை அசைத்து அவரின் பேச்சை நிறுத்தினான்.துடிக்கும் அவனது புஜங்களும்,இறுக மூடிய அவனது விரல்களும் அவனுடைய கோபத்தைப் பறைசாற்ற அவனின் தாயார் ஒரு நிமிடம் வாயடைத்துப் போனது என்னவோ நிஜம்.


இதுநாள் வரை பாசத்தை மட்டுமே காட்டி வந்த மகன் முதன்முறையாகக் கோபத்தைக் காட்டுகிறான்.ஆரம்பத்தில் இருந்தே இந்தத் திருமணத்தில் தன்னுடைய விருப்பமின்மையைத் தெரிவித்தும் கூடக் கொஞ்சமும் அதைக் கண்டுகொள்ளாத மகனின் இந்த நடவடிக்கை அவருடைய மகன் ,அவர் மேல் வைத்து இருக்கும் பாசத்தின் அளவை குறைத்துக் கொண்டது போல அவருக்குத் தோணலாயிற்று.’திருமணம் ஆவதற்கு முன்பு இருந்தே இவள் என்னையும் என் மகனையும் பிரித்து விட்டாள்.என்ன சாகசம் செய்தாளோ!’ என்று உள்ளுக்குள் வசைபாடிக் கொண்டு இருந்தார் பத்மாவதி.


“நான் உன்னோட அம்மாடா.உனக்கு எப்படிப்பட்ட பொண்ணு மனைவியா வரணும்.எனக்கும் ஆசை இருக்கும் இல்லையா? இந்தக் குடும்பத்திற்கு எப்படிப்பட்ட ஒருத்தி மருமகளா வரணும்னு தேர்ந்தெடுக்கக் கூட எனக்கு உரிமை இல்லையா?”இப்பொழுது அவர் குரலில் கோபத்திற்குப் பதிலாக அழுகையே இருந்தது.அதை அரசியால் உணர முடிந்தது.


தாயின் கோபத்தை விட இந்த வேதனை மிகுந்த குரல் மகனை தாக்க “அந்த அளவிற்கு நீங்க புண்ணியம் செய்யலை அம்மா” என்று வேதனையோடு சொன்னவன் அதற்கு மேலும் அங்கே நிற்கப் பிடிக்காமல் வேகமாக மாடி ஏறி வந்தான்.


அங்கே மாடிப்படி அருகில் நின்று கொண்டு இருந்த அரசியைக் கண்டதும் இவ்வளவு நேரம் தானும் தனது அம்மாவும் பேசியதை ஒட்டுக்கேட்டுக் கொண்டு நிற்கிறாள் என்று நினைத்து அவனுக்குள் கோபம் துளிர் விட்டது.தன் தாயின் பேச்சுகளால் காயம் அடைந்து இருந்த மனதை இவளை திட்டுவதன் மூலம் ஆற்றிக் கொள்ள நினைத்தானோ என்னவோ அவளிடம் எரிச்சலாகப் பேசினான்.


“அடுத்தவங்க பேசுறதை ஒட்டுக் கேட்கும் நல்ல பழக்கத்தை எல்லாம் உன் வீட்டோடு நிறுத்திக் கொள்.”


‘என்ன மாதிரியான குற்றசாட்டு இது?’விக்கித்துப் போய் அப்படியே நின்று நின்று விட்டாள் பொழிலரசி.


ஆதித்யனின் குரலில் இருந்த வேதனை அவனுடைய தாயாரையும் தாக்க மகனை சமாதானப் படுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவனுடைய பின்னேயே வந்தவர், பொழிலரசி அங்கே நிற்பதையும் மகன் அவளைத் திட்டுவதையும் பார்த்தவரின் உதடுகள் ஏளனமாக வளைந்தது..


“ஒரு கொலைகாரனின் மகள் கிட்டே இருந்து வேறு என்ன நல்ல குணத்தை எதிர்பார்த்து விட முடியும் ஆதி?”


‘யார் கொலைகாரன்?என்னுடைய அப்பாவா?’ அதிர்ச்சியோடு கேள்வியாக எதிரில் நின்ற இருவரையும் பார்த்தாள்.


“இ…இவங்க என்ன சொல்றாங்க?அதெல்லாம் உண்மையா?”திக்கித் திணறி கேட்டாள் பொழிலரசி.


அவளுக்குப் பதில் சொல்ல அவன் வாய் திறக்கும் அதே நேரம் அவனுடைய மொபைல் ஒலிக்கவே யார் என்று பார்த்தவன்,அதில் மிளிர்ந்த எண்களைக் கண்டதும் கொஞ்சம் பதட்டமாகி அங்கேயே நின்று பேசத் தொடங்கினான்.


“ஹலோ விக்ரமாதித்யன் ஸ்பீக்கிங்”


“…”


“சரி உடனே வருகிறோம்” என்று கூறிவிட்டு நிமிர்ந்து பொழிலரசியைப் பார்த்தான்.அவனது பார்வையைச் சந்தித்த மாத்திரத்தில் அவளின் மனதில் கலவரம் மூண்டது. ‘நிச்சயம் தனக்கு வருத்தத்தைத் தரக்கூடிய ஒரு விஷயத்தைத் தான் இப்பொழுது சொல்லப் போகிறான்’ என்று அவளது உள்மனம் அடித்துச் சொன்னது.
அவளுடைய பார்வையில் இருந்த பயத்தை அவன் உணர்ந்து கொண்டாலும் இந்த விஷயத்தை அவனால் மறைக்க முடியாதே.சொல்லித் தானே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன் அவளிடம் பேசலானான்.


“உன் அப்பாவோட போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சுடுச்சாம்.பாடியை வந்து வாங்கிக் கொள்ளச் சொன்னாங்க”


உடலில் உள்ள அத்தனை செல்களும் மரத்துப் போனது போல அப்படியே ஆடாது அசையாது நின்று விட்டாள் பொழிலரசி.

தாய்மொழியை மறந்த குழந்தை போல அவன் பேசும் வார்த்தைகளின் பொருள் அவளுடைய மூளையை எட்ட அவளுக்குச் சற்று நேரம் அவகாசம் தேவைப்பட்டது.


புரிந்த பிறகோ வேர் அறுந்த மரம் போலக் கீழே மயங்கி விழுந்தாள்.மயங்கியவள் கீழே விழும் முன் கணவனின் கரங்கள் அவளை ஆதரவாகத் தாங்கி இருந்தது.


‘இன்னும் எத்தனை துயரத்தை தான் இந்தப் பெண்ணுக்கு கொடுப்பாய் இறைவா… விட்டுவிடு.இனியேனும் அவள் வாழ்வில் நிம்மதியாக இருக்கட்டும்’


தன்னுடைய கணவன் தனக்காக இறைவனிடம் மனம் உருகி வேண்டிக் கொண்டு இருக்கிறான் என்பதை அறியாமல் பேதையவள் மயங்கிக் கிடக்கக் கனத்த இதயத்தோடு அவளைக் கைகளில் ஏந்திக்கொண்டு அவனுடைய அறையில் சென்று படுக்க வைத்தான் விக்ரமாதித்யன்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
3
+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here