Kadhale Nee Kaanala Tamil Novels 22

0
2190
Madhumathi Bharath Tamil Novels

முகம் இறுக கட்டிலில் அமர்ந்து இருந்த பொழிலரசியைப் பார்த்தபடியே அமர்ந்து இருந்தான் விக்ரமாதித்யன்.தலையைச் சுற்றிலும் சற்று பெரிய அளவிலான கட்டு போடப்பட்டு இருந்தது.முகத்தில் மட்டும் இல்லாது உடலில் ஆங்காங்கு காயங்களுக்குக் கட்டும் ,பிளாஸ்திரியும் போடப்பட்டு இருந்தது.இரண்டு நாட்களாகி விட்டது.இரண்டு நாட்களாக மயக்கத்தில் தான் இருக்கிறாள் பொழிலரசி.கீழே விழுந்த வேகத்தில் பின்னந்தலையில் அடி பட்டதினால் ரத்தம் அதிகம் போய் இருந்தது.

ஏற்கனவே அவளுக்கு அந்த இடத்தில் அடிப்பட்டு இருப்பதற்க்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதை அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் கூறியதும் அவனது முக இறுக்கம் இன்னும் அதிகமானது. உடலும் ,முகம் இறுகிப் போய் இருந்தாலும் அவன் கண்களில் காணப்பட்ட ரௌத்ரத்தை கண்டு அவனைச் சுற்றி உள்ளோர் அனைவரும் நடுங்கிப் போய் இருந்தனர். பெற்ற தாயான பத்மாவதி கூட அந்த நேரத்தில் அவனை நெருங்கவே அஞ்சிக் கொண்டு இருந்தார்.

ரத்த காயங்களுடன் பொழிலரசியைக் கண்டவனின் இதயம் ஒரு நிமிடம் தன்னுடைய இயக்கத்தை நிறுத்தி இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.அதன் பிறகு தன்னவளின் உயிரைக் காக்கும் எண்ணம் மட்டுமே அவனுடைய சிந்தையில் இருக்க வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டு காருக்கு ஓடினான்.டிரைவரை விட்டு காரை எடுக்கச் சொன்னவன் பின் சீட்டில் அமர்ந்து பொழிலரசியைத் தன் மடியினில் கிடத்திக் கொண்டான்.

கையில் வேறு எந்தத் துணியும் இல்லாததால் அவளுடைய புடவை முந்தானையைக் கிழித்து அவள் தலையில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறாதவாறு கட்டு போட்டு விட்டான்.டிரைவர் விரைந்து வந்து காரை எடுக்க,முன்னணி ஹாஸ்பிடலுக்கு நொடியில் சென்று சேர்ந்தது அந்தக் கார்.ஆதித்யன் ஏற்கனவே வரும் வழியில் அந்த ஹாஸ்பிடலின் தலைமை மருத்துவருக்கு விபத்துக் குறித்துத் தெரிவித்து இருந்தபடியால் அவர்கள் வந்த போதே எல்லாம் தயார் நிலையில் இருந்தது.

காரை விட்டு பொழிலரசியை இறக்கி நேராக ஐசியூவிற்கு அழைத்துச் சென்றனர்.ட்ரீட்மெண்ட் ஒருபுறம் நடந்து கொண்டு இருக்க,முழுதாக இரண்டு நாள் கடந்து விட்ட பிறகும் கூடப் பொழிலரசியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை.அதிகமான ரத்தம் சேதாரம் ஒரு காரணம் என்றாலும்கூட அதை விட முக்கியக் காரணம் அவளுடைய பின்னந்தலையில் ஏற்பட்ட காயத்தால் அவள் கோமா நிலைக்குச் சென்று விடவும் வாய்ப்பு இருக்கிறது என்ற தகவல் அவனது கவலையை மேலும் அதிகரிக்க அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூட மறந்தவனாக அப்படியே அமர்ந்து இருந்தான் ஆதித்யன்.

கைகள் மனைவியின் கரங்களைப் பற்றியபடி இருக்க,கண்களோ அவளின் மதிமுகத்தை விட்டு ஒரு நொடியும் அகலாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.முழுதாக நாற்பத்து எட்டு மணி நேரம் கடந்த பிறகு இனி பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று டாக்டர்கள் தெளிவாகச் சொன்ன பிறகே அவனால் நிம்மதியாக மூச்சை இழுத்து விட முடிந்தது.உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தாலும் அவனை இன்னும் கொஞ்சம் சோதித்த பிறகே கண்களைத் திறந்தாள் அவனுடைய ஆருயிர் மனைவி பொழிலரசி.

தலையில் அடிபட்டதால் எங்கே அவளுக்குப் பழையபடி நினைவுகள் மறந்து போய்விடுமோ என்று அஞ்சியபடியே அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதித்யன்.அவன் முகத்தில் இருந்த பதட்டத்தைக் கண்ட பத்மாவதிக்கு கூட அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.எப்பொழுதும் கம்பீரமாகவே பார்த்துப் பழக்கப்பட்ட மகன் இப்பொழுது இப்படிச் சோர்ந்து போய் இருப்பதைக் காணப் பிடிக்காமல் வேதனையுடன் மருத்துவமனையில் இருந்து கொஞ்ச நேரத்தில் கிளம்பியும் விட்டார்.

சிரமப்பட்டுக் கண்களைத் திறந்த மனைவியின் முகத்தை ஆவலும்,பதட்டமும் போட்டி போட விழியகற்றாமல் பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதித்யன்.மெல்ல கண்களைத் திறந்த பொழிலரசி பார்வையைச் சுற்றிலும் படர விட ஒவ்வொரு இடமாகப் பார்வையை நகர்த்திக் கொண்டே வந்தவள் விக்ரமாதித்யனைக் கண்டதும் அவன் முகத்திலேயே பார்வையை நிலை நிறுத்தினாள்.மூச்சு விடவும் மறந்தவனைப் போல மனைவியையே பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதித்யன்.

“விக்கிரமா” என்ற மெல்லிய குரலில் கணவனை அழைத்தவளின் இதழோரம் மெல்லிய சிரிப்பு ஓடி மறைந்தது.ஆதித்யனை நோக்கி கைகள் நீட்ட அவள் முயற்சிக்க அந்த நிலையிலேயே மீண்டும் மயங்கிப் போனாள் பொழிலரசி.

நீட்டிய அவள் கைகளைப் பற்றிக் கூடக் கொள்ளாமல் உறைந்து போய் இருந்தான் ஆதித்யன்.கண்களில் இருந்து ஒற்றைக் கோடாகக் கண்ணீர் இறங்கிக் கொண்டு இருந்தது.எதற்காக இந்தக் கண்ணீர்? ஆனந்தக்கண்ணீரா? இல்லை துக்கத்தினால் விளைந்ததா?யாருக்குத் தெரியும்…அவன் ஒருவனுக்கு மட்டும் தான் தெரியும்.அதற்கான காரணத்தை அவன் சொல்வானா? நிச்சயம் மாட்டான்.மற்றவர்கள் பார்க்கும் முன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவன் டாக்டரை அழைத்து அவளைப் பரிசோதிக்கச் சொன்னான்.

“வலி தெரியாம இருக்கத் தூக்க மருந்து கொடுத்து இருக்கோம்.இன்னும் ஒருநாள் அவங்க நல்லா தூங்கட்டும்.அதுக்குப்பிறகு நார்மலாகிடுவாங்க.பயப்பட வேண்டாம்” என்று சொன்ன பிறகே நிம்மதியாக மூச்சை விட்டான்.உடனே அங்கிருந்து கிளம்பாமல் தனக்கு நன்கு அறிமுகமான போலீஸ் நண்பரின் உதவியோடு பொழிலரசியின் பாதுகாப்பிற்காக அவளின் அறை வாயிலில் இரண்டு ஆண் காவலர்களையும்,அறையின் உள்ளே இரண்டு பெண் காவலர்களையும் தங்க வைக்க ஏற்பாடு செய்தவன் புயலென மாறி ஆக்ரோஷத்துடன் வீட்டை வந்து சேர்ந்தான்.

வீட்டு வாசலில் காரை அரை வட்டமடித்து நிறுத்தியவன் எதிர்கொண்ட யாரையும் கண்டுகொள்ளாமல் நேராக வீட்டின் செக்யுரிட்டி அறைக்குச் சென்றான்.ஆதித்யன் வந்து நின்ற வேகத்திலேயே அவனது ரௌத்ரம் புரிய செக்யுரிட்டி காவலர்கள் அனைவரும் நடுங்கிக் கொண்டு இருந்தார்கள்.

“சா…சார் நா … நாங்க எப்பவும் போல ரொம்பக் க…கவனமா தான் சார் இருந்தோம்.இது எப்படி நடந்ததுன்னு தெரியலை.அன்னைக்குப் பார்ட்டி நடந்தப்போ கூட எல்லாரையும் மெட்டல் டிடெக்டர் வச்சு செக் பண்ணித் தான் அனுப்பினோம்.அப்புறமும் இது எப்படி நடந்து இருக்கும்னு எங்களுக்குப் புரியலை சார்” பயத்துடன் திக்கித்திணறி சொல்ல வேண்டியதை எல்லாம் கோர்வையாகச் சொல்லி முடித்தார்.

”இப்படி அசம்பாவிதம் நடந்த பிறகு விளக்கம் சொல்றதுக்காகவா உங்களை வேலைக்கு வச்சு இருக்கேன்.இதை எல்லாம் பார்த்துக் கொள்வது தானே உங்க வேலை.அதை விட்டு வேற என்ன கிழிச்சிக்கிட்டு இருந்தீங்க…”ஆதித்யன் எப்பொழுதும் இது போலக் கடுமையான வார்த்தைகளைப் பேசுபவன் இல்லை என்பதால் அங்கிருந்த அனைவரும் நடுங்கிக் கொண்டு இருந்தார்கள்.ஆதித்யனுக்கு என்ன தான் கோபம் மித மிஞ்சிப் போய் வந்தாலும் அவன் அதைப் பார்வையில் மட்டும் தான் வெளிப்படுத்துவான்.இந்த அளவிற்கு ஆத்திரம் அடைந்த வேங்கையென இதுவரை யாரும் அவனைப் பார்த்தது இல்லை.

யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அங்கிருந்த டேபிளை ஓங்கி ஒரு உதை விட்டான்.அங்கிருந்த பொருட்களை எல்லாம் ஆத்திரம் தீரும்வரை வரை உடைத்து நொறுக்கியவன் ஒரு கையசைவில் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினான்.விட்டால் போதுமென அனைவரும் ஓட்டமெடுக்கச் சோர்ந்து போய் அப்படியே தரையில் அமர்ந்து விட்டான் ஆதித்யன்.

சற்று நேரம் கழித்து அந்த அறைக்குள் நுழைந்த திலகவதி தமையனின் கோலம் கண்டு அதிர்ந்து தான் போனார்.அறை முழுவதும் பொருட்கள் உடைந்து சிதறி இருக்கச் சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு ஆதித்யனின் அருகில் வந்து வாஞ்சையுடன் தலையைத் தடவி கொடுத்தார்.கண்கள் ஆத்திரத்தில் சிவக்க நிமிர்ந்து அவரைப் பார்த்தவன் அவர் கண்களில் வழிந்த கனிவில் ஒரு கணம் கண்ணை இறுக மூடி தன்னை இயல்புக்குக் கொண்டு வர போராடினான்.

“கண் விழிச்சுட்டாளா ஆதி”              

“ம்”

“அடுத்து என்ன செய்றதா இருக்க…இதை செய்தது யாரா இருக்கும்னு உனக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா?யாரா இருந்தாலும் சும்மா விடாதே…எவ்வளவு தைரியம் இருந்தா நம்ம வீட்டுப் பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கி இருப்பாங்க” பேசிக் கொண்டே அவன் கைகளில் ஜூஸ் டம்ளரை திணித்தார்.

“எதிரியை எழுந்திரிக்க விடாம அடிக்கணும்னா அதுக்கு நீ தெம்பா இருக்கணும்.இதை குடி.அப்புறம் அது யாருன்னு கண்டுபிடி” என்று சொன்னவர் அறையை விட்டு வெளியேறி விட்டார்.

திலகவதி சொல்லும் வார்த்தையில் உள்ள அர்த்தத்தை உணர்ந்து கொண்டவன் கடகடவென ஜூஸ் டம்ளரை குடித்து விட்டு வீட்டின் செக்யூரிட்டி கேமராவில் பார்ட்டி நடந்த அன்று பதிவான தகவல்களைச் சரிப்பார்க்கத் தொடங்கினான்.அதில் வித்தியாசமாக எதுவுமே தெரியவில்லை.ஆனால் பொழிலரசிக்கு விபத்து நேர்வதற்கு முன் குறிப்பிட்ட சில நிமிடங்கள் வீட்டில் உள்ள எந்தக் கேமராவும் வேலை செய்யவில்லை.

ஒரு அரை மணி நேரம் எல்லாக் கேமராக்களும் சொல்லி வைத்தாற்போல வேலை நிறுத்தம் செய்து பின் மீண்டும் தன்னுடைய பணியைச் செவ்வனே செய்து வைத்தது.சரியாகப் பொழிலரசி அந்த இடத்திற்கு வருவதும் அந்த இடத்திற்குக் கொஞ்சம் அருகில் வரும் பொழுது அங்கிருந்த காரில் இருந்து ஏதோ வெடிக்கிறது.

திடீரென்று நடந்த இந்தச் சம்பவத்தில் அதிர்ச்சியான பொழிலரசி கால் தடுமாறி பின்னோக்கி சாய அங்கே அலங்காரத்திற்காக வைக்கப்பட்டு இருந்த பெரிய அளவிலான சிமெண்ட் பூச்சாடியின் கூரான முனைப்பகுதியில் அவளுடைய தலை மோதுவதும் ,பயத்தில் அலறியபடியே பொழிலரசி மூர்ச்சையாவதும் அதில் பதிவாகி இருந்தது.

வேண்டுமென்றே யாரோ இப்படிச் செய்து இருக்கிறார்கள் என்பது ஆதித்யனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.ஆனால் யார் செய்தது என்று அவனுக்குத் தெரிந்தாக வேண்டுமே…கண்டிப்பாக அவனுடைய வீட்டு ஆட்களின் துணை இல்லாமல் இது சாத்தியமே இல்லை என்பது அவனுக்குத் தெரியும்.அங்கிருந்து கிளம்பியவன் நேராக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றான்.

தான் வரும் வரை அந்த இடத்திற்கு வேறு யாரும் சென்று எந்தப் பொருளையும் தொடக் கூடாது என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்ததால் அந்த இடம் அப்படியே இருந்தது.வெடித்தது என்ன என்று அவனுக்குத் தெரியவில்லை.ஆனால் பொருள் இருந்தது காரில்.அதாவது எந்தக் காரில் அரசியும்,ஆதித்யனும் ஊரில் இருந்து திரும்பி வந்தார்களோ அந்தக் காரில்.முன்னிலும் அதிகமாகக் குழம்பிப் போனான் ஆதித்யன்.

‘இந்த வேலையைச் செய்தது யார்? ஒருவேளை அரசியைக் கொல்லும் எண்ணத்தோடு அவளுடைய ஊரில் இருந்து கிளம்பும் போது அந்தக் காரில் பொருத்தப்பட்டதா?அப்படியெனில் இங்கே இருக்கும் சிசிடிவி கேமராவில் சரியாக விபத்து நடப்பதற்கு அரைமணி நேரம் எல்லாப் பதிவுகளையும் அழித்தது யார்? ஊரில் இருந்து அவர்கள் செய்த சதி வேலைக்கு என்னுடைய வீட்டில் இருந்து யாரேனும் ஆதரவு கொடுக்கிறார்களா?யார் அந்தத் துரோகி?’ என்று சிந்தித்தான்.அப்பொழுது அவன் கண் முன்னே எல்லாருடைய முகமும் வந்து போனது.அதில் குறிப்பிட்டு யாரை சந்தேகப்படுவது என்று புரியாமல் ஆதித்யன் குழம்பித் தான் போனான்.

அதற்காக இதை அப்படியே விட்டு விட முடியுமா என்ன?கமிஷனரை அழைத்து நடந்த நிகழ்வை விபத்து என்று பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டவன் அத்தோடு நிறுத்தாமல் அவர்கள் துறையில் தடயவியல் துறையில் சிறந்த வல்லுனர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டான்.அவர்கள் வந்து பரிசோதித்தும் அவனுக்கு அதில் தெரிய வேண்டிய கேள்விகளை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டவன் இன்னும் கூடுதல் குழப்பத்திற்கு ஆளானான்.

வெடித்தது சிறிய அளவிலான வெடிகுண்டு என்பதைத் தடயவியல் துறையினர் உறுதி செய்தனர்.அத்தோடு நில்லாமல் அவர்கள் கூறிய கூடுதல் தகவல் தான் அவனைக் குழப்பியது.உயிரை பறிக்கும் அளவிற்கு சக்தி அந்த வெடிகுண்டுக்குக் கிடையாது என்றனர்.அவர்களின் நோக்கம் உயிரை பறிப்பதாக இருக்கும் பட்சத்தில் இன்னும் கூடுதலான அளவில் தான் வெடி மருந்து பயன்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்ற தகவலையும் அளித்தனர்.

அப்படியானால் அவர்களின் நோக்கம் என்ன? அரசியைப் பயமுறுத்துவதா? இல்லை என்னை அரசியிடம் இருந்து பிரிப்பதா?என்ற சிந்தனையிலேயே மூழ்கி இருந்தான்.அவனுடைய அறையின் வாயிலில் தயங்கியபடி நின்ற வள்ளியை பார்த்தவன் ‘என்ன’ என்று பார்வையால் கேட்டான்.

“சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன் அய்யா”

“கொண்டு வா” என்று உணர்ச்சிகள் அற்ற குரலில் சொன்னவன் உணவை உண்டாக வேண்டுமே என்ற கட்டாயத்திற்காக உண்ணுகிறான் என்பதை வள்ளியால் புரிந்து கொள்ள முடிந்தது.சாப்பிட்டு முடித்ததும் வள்ளியின் புறம் திரும்பியவன் தன்னுடைய சந்தேகத்தை அவளிடம் கேட்டான்.

“வள்ளி அரசி இங்கே இருந்த நேரம் எல்லாம் அதிகமா அவ கூட இருந்தது நீ தான்.அப்படி இருக்கும் பொழுது அந்த நேரத்தில் வித்தியாசமா ஏதாவது நடந்து இருக்கா? அதாவது அவளுக்கு ஆபத்து ஏற்படுற மாதிரி…”

“நான் கூட இருந்தவரை அந்த மாதிரி எதுவும் நடக்கலை அய்யா” சற்று நேரம் யோசித்துப் பதில் சொன்னாள் வள்ளி.ஏனோ அந்த நேரத்தில் தானே அரசியின் மீது வன்மத்துடன் இருந்தது அவளின் மனதில் வந்து போனாலும் மனைவிக்காகத் துடித்துக் கொண்டு இருக்கும் ஆதித்யனிடம் அதைச் சொல்ல மனம் வரவில்லை வள்ளிக்கு.

சற்று நேரம் ஏதோ யோசனையில் இருந்த ஆதித்யன் பின் தீர்க்கமான குரலில் வள்ளியுடன் பேச ஆரம்பித்தான்.

“அதுக்குக் காரணம் நீ அவ கூடவே இருந்ததினால கூட இருக்கலாம் வள்ளி.இப்போ நான் சொல்றதை கவனமா கேட்டுக்கோ வள்ளி.இனி அரசியின் நிழல் மாதிரி நீ இருக்கணும்.அவ எப்போ எங்கே போனாலும் சரி உன் துணை இல்லாமல் அவள் தனித்து இருக்கக்கூடாது.இந்த உதவியை நீ எனக்காகச் செய்ய முடியுமா?”

“என்ன அய்யா உதவி அப்படின்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க…நீங்க ஒரு வார்த்தை சொன்னா அதை மீறுவேனா நான்…”தன்னை புரிய வைத்து விடும் வேகத்தில் பேசினாள் வள்ளி.

“இப்போ நீ சொன்ன இந்த வார்த்தையை எப்பவும் எந்தக் காலத்திலும்,எந்த சூழ்நிலையிலும் மறக்கக்கூடாது வள்ளி…நானே இல்லாமல் போனாலும் சரி அரசி கூடவே தான் நீ இருக்கணும்.புரிஞ்சுதா?”அழுத்தமான அவனின் குரலில் பதறிப் போனாள் வள்ளி.

“அய்யா…என்ன இப்படிப் பொல்லாத வார்த்தை எல்லாம் பேசறீங்க…உங்களுக்கு என்ன மகராசன் சாமி நீங்க. நூறு வயசு வரைக்கும் தீர்க்காயுசா இருப்பீங்க…”

“அரசி வேறு நான் வேறு இல்லை வள்ளி…அவள் உன்னைத் திட்டினால் கூடப் பொறுத்துக் கொண்டு எனக்காக இதை நீ செய்ய வேண்டும்.செய்வாயா?”

“நிச்சயம் அய்யா…இனி எந்தச் சூழ்நிலையிலும்,எந்த காரணத்திற்காகவும் நான் சின்ன அம்மாவை விட்டு பிரிய மாட்டேன்.அவங்களுக்கு எந்த ஆபத்தும் வர விட மாட்டேன்.” என்ற வார்த்தைகள் ஒவ்வொன்றையும் அழுத்தி சொன்னவள் ,’ என்னாலும் கூட’ என்ற வார்த்தையை மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.ஆதித்யன் இந்த அளவிற்கு அவளிடம் அரசிக்காகக் கேட்கிறார் என்றால் மனைவியை வெறுப்பவரால் நிச்சயம் இப்படிப் பேசி இருக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டவளின் மனதில் இருந்த கசடுகள் அனைத்தும் அந்த நிமிடமே துணி கொண்டு துடைத்ததைப் போலத் தெளிவாக மாறி இருந்தது.

வீட்டில் அரசியின் பாதுகாப்பை பற்றி இனி கவலைப் பட வேண்டாம் என்று ஆதித்யன் நிம்மதி பெருமூச்சு விட்டது கடவுளுக்குப் பொறுக்கவில்லை போலும்.அவனது போன் ஒலித்தது.அரசியை அட்மிட் செய்து இருக்கும் மருத்துவனையின் எண் என்பதால் தாமதிக்காமல் போனை எடுத்துப் பேசினான்.

என்ன தான் போலிசை காவலுக்கு வைத்து இருந்தாலும் எதற்கும் இருக்கட்டும் என்று வார்ட் பாய் ஒருவனுக்குச் சில பல ஆயிரங்களைக் கொடுத்து அரசியின் அறையைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தான்.அவனிடம் இருந்து தான் இப்பொழுது அழைப்பு வந்து இருந்தது.

“சார் உங்க சம்சாரத்தைப் பார்க்க யாரோ ஒரு ஆள் வந்து இருக்காருங்க…”

“யார்?”

“எனக்குத் தெரியலைங்க…பார்க்க ஏதோ பெரிய வீட்டு பிள்ளை மாதிரி இருக்காருங்க..”

விஜயேந்திரனின் முகம் மனதுக்குள் மின்னி மறைய அதற்குப் பிறகு நொடியும் தாமதிக்காமல் அங்கிருந்து சூறாவளியாகக் கிளம்பி ஹாஸ்பிடலை வந்து சேர்ந்தான்.அரசியின் அறைக்குள் வேகமாக நுழைந்தவனின் காதுகளில் சரியாக இந்த வார்த்தை வந்து விழுந்தது.

“கடைசியில் நான் சொன்ன மாதிரியே எங்க அண்ணன் உங்களைத் தீர்த்துக் கட்டும் வேலையை ஆரம்பிச்சுட்டான் பார்த்தீங்களா?”

இதயம் தொண்டையில் வந்து துடிக்க அரசி என்ன பதில் சொல்லப் போகிறாள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அப்படியே நின்று விட்டான் ஆதித்யன்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 5]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here