Kadhale Nee Kaanala Tamil Novels 23

0
2421
Madhumathi Bharath Tamil Novels

“என்னங்க…எழுந்து உட்காரணும் போல இருக்கு.கொஞ்சம் உதவி செய்றீங்களா”ஆதித்யனின் புறம் கைகளை நீட்டினாள் பொழிலரசி.

சட்டென்று அவளருகில் வந்த ஆதித்யன் அவளைத் தூக்கி அமர வைத்து தலையணையைச் சரி செய்து அவள் உட்காருவதற்கு ஏதுவாக வைத்தான்.

“ஏதாவது சாப்பிடறியா பொழில்”

“தாகமா இருக்கு.குடிக்க ஏதாவது கொண்டு வர சொல்லுங்க…”

அறைக்கு வெளியில் இருந்த வள்ளியை அழைத்துப் பழங்கள் வாங்கி வர சொன்னான் ஆதித்யன்.வள்ளி வாங்கி வந்த பழங்களைக் கத்தியின் மூலம் சிறு துண்டுகளாகப் போட்டுக் கப்பில் வைத்து அரசியிடம் நீட்டினான் ஆதித்யன்.பழங்களுக்கு இடையில் தயாராக இருந்த இளநீரையும் ஒரு பார்வை பார்த்தாள்.

ஏதோ யோசனையில் இருந்த அரசியைத் தோளில் தட்டி கலைத்த ஆதித்யன் அவளிடம் பழக் கிண்ணத்தை ஸ்பூனுடன் வைத்து நீட்டினான்.

“வள்ளி நீ வெளியே இரு…”என்று உத்தரவிட்டு வள்ளியை வெளியே அனுப்பி விட்டு ஆதித்யனை நேராகப் பார்த்து பேசினாள் பொழிலரசி.

“உங்களுக்கு என்னை ஏற்கனவே தெரியுமா?”துளைக்கும் பார்வையுடன் அவனைப் பார்த்தாள் பொழிலரசி.

“இன்னும் இரண்டு நாள் நீ இங்கேயே தங்கி இருக்கணும்னு டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க பொழில்.அப்புறம் நம்ம வீட்டுக்கு போயிடலாம்.அதுவரை நல்லா தூங்கி ஓய்வெடு”மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு வார்த்தையையும் கோர்த்து தெளிவாகப் பதில் சொன்னான் ஆதித்யன்.

“என் கேள்விக்கு இன்னும் பதில் வரலை.”

“இரண்டு நாளா எந்த வேலையும் பார்க்கலை அரசி.நிறைய வேலை இருக்கு.உன்னுடைய துணைக்கு வள்ளி இருப்பா.நான் போயிட்டுச் சாயந்திரம் சீக்கிரம் வந்துடட்டுமா?முடிஞ்சா டாக்டர் கிட்ட பேசி உன்னை நாளைக்கே வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறேன்”

“அந்த வீட்டிற்கு என்னால வர முடியாது”             

“பொழில் ஏதோ இந்த ஒருமுறை கவனக்குறைவால் இப்படி ஒரு தவறு நடந்துருச்சு.இனி இப்படி நடக்காது.வீட்டில் பாதுகாப்புக்கு இன்னும் ஏற்பாடு செய்றேன்.அதையே நினைச்சுப் பயப்படக்கூடாது சரிதானா…விக்ரமாதித்யனோட மனைவிக்குப் பயம் அப்படிங்கிறது இருக்கக்கூடாது”

“அந்த வீட்டிற்கு வந்தா என்னை அவன் தொந்தரவு செய்வான்.நான் வரலை”

“உன்னைத் தொந்தரவு செய்றானா?யார் அவன்? விஜியை சொல்றியா?அந்த அளவுக்குத் தைரியம் இனி அவனுக்கு வராது.அதை நான் பார்த்துக் கொள்கிறேன்”உறுதி போலப் பேசினான் ஆதித்யன்.

“அவர் இல்லை…”

“பின்னே…வேறு யார்?”கண்கள் நொடியில் கோவைப்பழமானது ஆதித்யனுக்கு.

“வேறு யார்…என்னை கல்யாணம் செஞ்சுகிட்ட கடன்காரன் தான்”சலிப்போடு சொன்னாள் பொழிலரசி.

ஒரு நிமிடம் முழித்தவன் சட்டென்று வாய் விட்டுக் கலகலவெனச் சிரிக்க ஆரம்பித்தான்.

“ஹா ஹா…நான் உனக்குக் கடன்காரனா?சுத்தி வளைச்சு என்னைப் பத்தி என்கிட்டயே கம்ப்ளைன்ட் பண்ணுறியா…கெட்டிக்காரிதான் நீ”

“எவ்வளவு கெட்டிக்காரியா இருந்து என்ன பிரயோஜனம்.உங்க வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வாங்க முடியலையே”சலித்துக் கொண்டாள் பொழிலரசி.

சட்டென்று மௌனமானான் ஆதித்யன்.பொழிலரசியும் அவனது முகப் பாவங்களைக் கூர்மையாக அளவிட்டாளே தவிர வேறு ஒன்றும் உடனடியாகப் பேசவில்லை.ஆதித்யனை அவனது செய்கைகளை வெளிப்பார்வைக்குத் தெரியாமல் கவனமாக மறைப்பதில் கவனம் செலுத்த, ஆதித்யனால் மறைக்கப் பட்ட அவனின் தடுமாற்றம் அனைத்தையும் பொழிலரசி உணர்ந்து கொண்டாள்.

“எனக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்குத் தெரியுது.அதை எப்படிக் கொடுக்கணும்னு உங்களுக்குத் தெரியுது.ஆனா என்னை மட்டும் உங்களுக்குத் தெரியாது இல்லையா?”

“…..”

‘சரியான கல்லுளி மங்கன்.வாயை திறக்கிறானா பார்.இவனை என்ன செய்றது’ என்று மனதுக்குள் அவள் தாளித்துக் கொண்டு இருக்க ஆதித்யனோ அரசிக்கு உள்ளுக்குள் மலர்களால் அர்ச்சனை செய்து கொண்டு இருந்தான்.அவனின் மனக்கண்ணில் சற்று முன் நடந்த காட்சிகள் அனைத்தும் ஒரு படம் போல அப்படியே ஓடியது.

விஜயேந்திரன் கேட்டதும் அதற்குப் பொழிலரசி என்ன பதில் சொல்லப் போகிறாளோ என்று பதட்டத்துடன் அறை வாசலில் நின்று விட்டான் விக்ரமாதித்யன்.

அவன் அளவிற்குப் பதட்டம் அரசியிடம் இல்லை.நிமிர்ந்து நிதானமாக விஜயேந்திரனை பார்த்தாள்.

“நீங்க யார்?”அழுத்தமான கேள்வி அவளிடம் இருந்து வந்தது.குரலில் இருந்த சோர்வையும் மீறி அதை ஆதித்யனால் உணர முடிந்தது.

“நான்…நான் விஜயேந்திரன்.என்னை அடையாளம் தெரியவில்லையா?”லேசான குழப்பம் விஜயேந்திரனுக்கு.தலையில் அடிபட்டதால் அவனை மறந்து விட்டாளோ என்ற எண்ணம் வந்தது அவனுக்கு.

“அதெல்லாம் நன்றாகத் தெரிகிறது.அவருக்கு நீங்க என்ன உறவு”

“ஆதித்யனின் தம்பி நான்…”

“இனி ஒருமுறை அப்படிச் சொல்லாதீர்கள்.அதற்கு உண்டான தகுதி உங்களுக்கு இல்லை.அவருடைய தம்பியாக இருந்து கொண்டு இப்படி அவரைப் பத்தி என்கிட்டே தப்பும் தவறுமா பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு.இனி ஒருமுறை இப்படி என் புருஷனைப் பத்தி பேசினா நான் பொறுத்துக்கிட்டு இருக்க மாட்டேன்.அவருக்கு மரியாதை கொடுக்காதவங்க யாரா இருந்தாலும் அவங்களைத் தூக்கிப் போட்டுட்டுப் போய்க் கிட்டே இருப்பேன்.ஜாக்கிரதை” என்று ஒற்றை விரல் உயர்த்தி எச்சரித்தவள் அப்பொழுது தான் வாசலில் நின்ற ஆதித்யனை பார்த்தாள்.

முகம் மலர அவனை நோக்கி தன் கைகளை நீட்டி எழ முயற்சிக்க விக்ரமாதித்யன் என்னும் சிலைக்கு உயிர் வந்தது.கண்கள் முழுக்கக் காதலை நிரப்பிக் கொண்டு பொழிலரசியை நோக்கி விரைந்த விக்ரமாதித்யனை வெறுப்புடன் ஒரு பார்வை பார்த்து விட்டு ஒன்றுமே பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டான் விஜயேந்திரன்.நடந்ததை எல்லாம் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து தனக்குள்ளேயே மூழ்கி இருந்த ஆதித்யனை கலைத்தது அரசியின் குரல்.

“எனக்கு எதுவும் தெளிவா நினைவுக்கு வர மாட்டேங்குது.ஏதேதோ நியாபகம் வருது.ஆனா ஒண்ணுக்கொண்ணு தொடர்பு இல்லாம… அதுக்கு மேல அதைப் பத்தி யோசிக்கவும் முடியலை..”

“என்னென்ன நியாபகம் வருது பொழில்…”தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஆதித்யனின் குரலில்.

“உங்க முகம்…என்னுடைய கழுத்தை தாண்டி தளும்பும் தண்ணீர்,அப்புறம்…கய….வேற ஒண்ணும் இல்லை.எதுவும் தெளிவா நினைவுக்கு வரலை. ரொம்ப யோசிச்சா தலைவலிக்கிற மாதிரி இருக்கு”

“வேண்டாம் பொழில்…இப்போ எதையும் யோசிக்காதே…உனக்கு அடிக்கடி தலைவலி வரக்கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்கார்”

“எப்போ சொன்னார்?”

“நம்ம கல்யாணத்தின் போது…”

“அதை ஏன் அப்பவே சொல்லலை…”

“நான் கிளம்பட்டுமா? நேரம் ஆச்சு”

“எனக்காக எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்வீங்க…ஆனா என்னோட கடந்த காலத்தைப் பத்தி மட்டும் ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டீங்க அப்படித்தானே…”

“பொழில் உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்…கேட்கட்டுமா?”

“கேளுங்களேன்…உங்களை மாதிரி உண்மையை மறைச்சு நான் பேச மாட்டேன்.” குத்தலாகவே பேசினாள் பொழிலரசி.

“தீடீர்னு என்மேல் உனக்கு எப்படி நம்பிக்கை வந்துச்சு.விஜி கிட்ட அவ்வளவு நம்பிக்கையோட பேசின…” அவனுடைய இரு கண்களும் அவள் முகமெங்கும் அலைபாய்ந்து இறுதியில் அவள் கண்களில் நிலைத்தது.

“எனக்குச் சரியா சொல்லத் தெரியலை…ஆனா என் மனசு சொல்லுது.இப்ப மயக்கம் தெளியும் போது ஏதேதோ காட்சிகள் தெளிவில்லாமல் எனக்கு வந்து போச்சு.அந்த காட்சிகளில் எல்லாம் எனக்குத் தெரிஞ்சது உங்க கண்ணில் இருந்தது அன்பு மட்டும் தான்.இதுக்கு முன்னாடி உங்க மேல இருந்த சந்தேகம் இப்ப நிச்சயமா இல்லை.ஆனா எதையோ என்கிட்டே இருந்து மறைக்கறீங்கனு மட்டும் நல்லா தெரியுது.அது என்னன்னு நீங்களாவே சொல்லிட்டா எனக்கு ரொம்பச் சந்தோசமா இருக்கும்.”

“அது தேவை இல்லை பொழில்…உனக்கு நான்…எனக்கு நீ…இது தான் நம்முடைய உலகம்…மற்றதை மறந்து விடு”

“அப்போ என் அப்பாவோட மரணத்திற்கு என்ன பதில்…அவர் என்ன தப்பு செய்தார்…”

“நாம வேறு பேசலாம் பொழில்…”

“முடியாது…எனக்கு உண்மை தெரிந்தே ஆக வேண்டும்” வெடித்துச் சிதற தயாராக இருக்கும் எரிமலையின் ஆக்ரோசத்தையும்,எஃகின் உறுதியும் ஒன்றுபட்டு ஒலித்தது அவள் குரலில்.

“என் மீது நம்பிக்கை இருந்தால் இனி இதைப் பற்றி என்னிடம் பேசாதே பொழில்.” என்று இறுக்கமான குரலில் கூறியவன் அங்கிருந்து வெளியேறி விட்டான்.அதற்குப்பிறகு இரண்டு நாட்கள் வள்ளியின் துணையுடன் ஹாஸ்பிடலில் இருந்தவளை வந்து பார்க்க கூட விக்ரமாதித்யனுக்கு நேரம் இல்லாமல் போனது.பொழிலரசி கணவன் தன்னைக் காரணம் இன்றி ஒதுக்க மாட்டார் என்பது புரிந்தாலும் அவனைக் காணாமல் ஏங்கித் தான் போய் இருந்தாள்.

முன்பு கூடக் கணவனைக் காணாமல் அவள் ஏங்கி இருக்கிறாள் தான்.ஆனால் இப்பொழுது அதையும் தாண்டி அவள் ஆழ்மனதில் ஒலித்த குரல் அவனின் அருகாமையை வேண்ட அதைச் சமாளிக்க முடியாமல் திணறினாள் என்று தான் சொல்ல வேண்டும்.அவளுடைய ஆழ்மனது ஏதோ ஒரு வகையில் விக்ரமாதித்யனை அருகாமையை எதிர்பார்த்ததை உணர்ந்து கொண்டவளுக்கு நிச்சயம் அவன் கெட்டவனாக இருக்க முடியாது என்று தோன்றியது.

அதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்குத் தான் அவள் விக்ரமாதித்யனை கேள்விகள் கேட்டாள்.ஆனால் அவனோ பதில் சொல்லாமல் நழுவி கொண்டு ஓடி விட்டான்.இதை கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் மேலும் அவளுள் வலுபெற ஆரம்பித்தது.அவளுக்குத் தெரிய வேண்டிய பதில்கள் நிறைய இருந்தன.

‘தந்தை யாரைக் கொன்றார்?எதற்காகக் கொன்றார்?அவருக்கும் ஆதித்யனுக்கும் எப்படிப் பழக்கம்?எதற்காக என்னைத் திருமணம் செய்து கொண்டார்?அன்று பேச்சு வாக்கில் வாக்குக் கொடுத்ததாகச் சொன்னாரே…அது யாருக்கு,தந்தை எழுதியதைப் போலவே இருக்கும் அந்தப் போலிக் கடிதத்தை எழுதியது யார்?இது அத்தனைக்கும் மேலாகத் தந்தையைக் கொன்றது யார்? என்ன காரணத்திற்காகக் கொன்றார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி யாரோ ஒருவரை காப்பாற்ற இவர் ஏன் இவ்வளவு முயற்சி எடுக்கிறார்?இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் முழுமையாகப் பதில் தெரிந்து கொள்ள வேண்டும்.அதன்பிறகு தந்தையின் மரணத்திற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் பழி வாங்கியே தீர வேண்டும்.அப்பொழுது தான் அவருடைய ஆத்மா சாந்தி அடையும்’ என்ற முடிவுக்கு அவள் வந்து இருந்தாள்.

ஹாஸ்பிடலில் இருந்த இரண்டு நாட்களும் அவளுக்குக் கொஞ்சமும் தனிமை ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டாள் வள்ளி.அவள் பேசியது முழுக்க முழுக்க விக்ரமாதித்யனைப் பற்றித் தான்.சிறுவயதில் அவன் செய்த குறும்புகள்,வளர்ந்த பிறகு அவன் மற்றவர்களுக்குச் செய்து வரும் உதவிகள்,அவனுடைய நல்ல குணம்,தாய்,தந்தையை இழந்த தன்னுடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டது…என்று முழுக்க முழுக்க அவனைப் பற்றியே பேசினாள் வள்ளி.பொழிலரசிக்கும் அவளுடைய கணவனின் சிறுவயது குறும்புகளைக் கேட்க கேட்க திகட்டவில்லை.ஒவ்வொன்றாகக் கேட்டு ரசித்துக் கொண்டு இருந்தாள்.

ஹாஸ்பிடலை விட்டு டிஸ்சார்ஜ் செய்யும் அன்று தான் விக்ரமாதித்யனின் தரிசனம் அரசிக்கு கிடைத்தது.இரண்டு நாட்களாக ஷேவ் செய்யாத தாடியுடனும்,சோர்ந்து களைத்துப் போன முகத்துடனும் இருந்தவனைக் கண்டு கொஞ்சம் பதறித் தான் போனாள் பொழிலரசி.

ஆதித்யன் வந்தவுடன் வள்ளி நாசுக்காக அறையை விட்டு வெளியேறி இருக்க,பொழிலரசி கட்டிலை விட்டு இறங்க முயற்சிக்க ஓடி வந்து அவளைத் தாங்கிக் கொண்டான் ஆதித்யன்.

“என்ன பொழில்…எதுக்கு இவ்வளவு அவசரம்?”

பொழிலரசி பதிலுக்கு எதுவும் பேசாமல் அவனுடைய கன்னங்களை வருடினாள்.அவளுடைய செய்கையில் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போய் நின்று விட்டான் ஆதித்யன்.திருமணம் ஆன இத்தனை நாட்களில் பொழிலரசி ஒருநாள் கூடத் தானாகவே வந்து அவனைத் தொட்டது இல்லை.

விக்ரமாதித்யன் அவளைத் தீண்டும் போது கூட வெட்கத்துடன் நகர்ந்து விட முயற்சிப்பாளே தவிர இப்படி அவளாகவே வழிய வந்து அவனைத் தீண்டியது கிடையாது.எந்த அளவிற்கு மனைவி தன்னைத் தேடி இருக்கிறாள் என்பது புரிய வர வார்த்தைகளுக்கு இடமின்றி லேசாக அவனின் தோளில் அவளது தலையைச் சாய்த்து வருடிக் கொடுத்தான் ஆதித்யன்.

“வீட்டுக்குப் போகலாமா பொழில்”கரகரத்து ஒலித்தது அவன் குரல்.

“ம்” மெல்லிய முணுமுணுப்பு மட்டுமே அவளிடம் இருந்து.

அவளிடம் இருந்து விலக முயற்சித்தவனை விலக அனுமதிக்காமல் அவனின் சட்டை காலரை கையில் இறுக பற்றிக் கொண்டாள் பொழிலரசி.

‘என்ன’ என்பது அவளின் முகம் பார்த்தான் ஆதித்யன்.

“ஏன் இரண்டு நாளா என்னை வந்து பார்க்கவில்லை”உதடு சுருக்கி மூக்கு விடைத்துக் கேள்வி கேட்டது அங்கே ஒரு வளர்ந்த குழந்தை.

“கொஞ்சம் வேலை இருந்தது பொழில்.அதுவும் இல்லாம இன்னைக்குச் சர்வேஷ்க்கு பிறந்த நாள் .வீட்டில் பார்ட்டி ஏற்பாடு எல்லாம் செய்ய வேண்டி இருந்தது.போன முறையை விட இந்த முறை பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்னும் கொஞ்சம் பலப்படுத்தி இருக்கேன்.அதோட விட்டுப்போன வேலைகள் எல்லாம் சேர்த்து பார்க்க வேண்டியதா போச்சு.அதான்” என்று சொல்லி விட்டு நகர முற்பட்டவனை மீண்டும் காலரை பிடித்து இழுத்து தன் முகத்துக்கு அருகிலேயே இழுத்தாள் பொழிலரசி.

“மறுபடியும் பார்ட்டியா?” லேசாக முகம் சுளித்தாள் பொழிலரசி.

“இதையெல்லாம் செஞ்சு தான் ஆகணும் பொழில்.இல்லேன்னா குழந்தை ஏங்கிப் போய்டுவான் இல்லையா?” செல்லமாக அவளது முன்னுச்சி முடியை கலைத்தபடி பேசினான்.மெதுவாக அவளை எழுப்பி நிற்க வைத்து விட்டு நகர முனைந்தவனை மீண்டும் விலக விடாமல் தன்னருகே இழுத்துக் கொண்டாள்.

“இன்னும் என்னடா” வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்று மென்மையாக ஒவ்வொரு வார்த்தையையும் உச்சரித்தான்.

“எ…எனக்கு உங்களை விக்கிரமான்னு பேர் சொல்லி கூப்பிடணும் போலத் தோணுது.கூப்பிடட்டுமா…மத்தவங்க முன்னாடி இல்லை.தனியா இருக்கும் பொழுது மட்டும்.ப்ளீஸ்”பொழிலரசியின் கண்களில் இறைஞ்சுதலையும் தாண்டி ஒருவித அலைப்புறுதல் இருந்ததைப் பார்த்தவனின் உள்ளம் அப்படியே உருகித் தான் போனது.

“கூப்பிடு பொழில்” என்று சொன்னவனின் கண்களில் தோன்றிய நெகிழ்ச்சி எதனால் என்பது அவளுக்குப் புரியவில்லை.சற்று நேரம் இருவரும் ஒருவரின் அருகாமையை மற்றவர் அனுபவித்தபடி இருக்க முதலில் தன்னை மீட்டுக் கொண்டது விக்ரமாதித்யன் தான்.

“கிளம்பலாம் பொழில்” என்று கூறியவன் வள்ளியை அழைத்துப் பொழிலரசியை அழைத்துக் கொண்டு கார் பார்க்கிங் வரை வீல் சேரில் அழைத்துப் போகுமாறு பணித்தான்.இடையில் நர்ஸ் வந்து தலையில் கட்டி இருந்த பெரிய கட்டுகளை எடுத்து விட்டுக் காயத்தைச் சுத்தம் செய்து சின்னப் பிளாஸ்திரி மட்டும் போட்டு விட்டார்.அதற்குள் ஆதித்யன் பில்களைக் கட்டி விட்டு வர மூவரும் சேர்ந்தே பார்க்கிங் ஏரியாவிற்குச் சென்று காரில் ஏறினார்கள்.

வள்ளி டிரைவருக்கு அருகில் முன் சீட்டில் அமர்ந்து கொள்ள ஆதித்யனும்,அரசியும் பின் சீட்டில் அமர்ந்து கொண்டனர்.மற்றவர்கள் இருப்பதைப் பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலை படாமல் காரில் ஏறியதும் அரசியைத் தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டான் ஆதித்யன்.அரசியும் அவனை விட்டு விலகி அமர முயற்சிக்கவில்லை.

ஆதித்யனின் வீடு அன்று போல இன்றும் விழாக் கோலம் பூண்டு இருந்தது.ஆனால் முற்றிலும் வேறு விதமாக…முன்னை காட்டிலும் அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கத் தோட்டம் முழுவதும் ஆங்காங்கே குழந்தைகளைக் கவரும் வண்ணம் நிறைய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.ஒருபுறம் மேஜிக் ஷோ,மறுபுறம் விளையாட்டுப் பொம்மைகள் குவித்து வைக்கப் பட்டு இருக்க,இன்னொரு புறம் ஐஸ்கிரீம் முதல் குலாப் ஜாமுன் வரை குழந்தைகளுக்குப் பிடித்த ஐட்டங்கள் வைக்கப் பட்டு இருக்க அந்த இடமே குழந்தைகளின் சேட்டைகளால் அல்லோகலப்பட்டுக் கொண்டு இருந்தது.

குழந்தைகளின் வால்தனங்களை எல்லாம் பார்த்தவளின் முகத்தில் லேசான புன்னகை அரும்ப அன்று போல இன்றும் மனைவியின் கையைப் பற்றிப் பின்பக்கமாக அழைத்துக் கொண்டு அறையை நோக்கி சென்றான்.அறைக்குள் நுழைவதற்குப் புதிதாகப் பாஸ்வோர்ட் எல்லாம் பதியும் முறையைக் கொண்டு வந்து இருந்தான்.அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை அரசிக்கு தெளிவாக உரைத்து விட்டு யாரிடமும் பாஸ்வோர்டை சொல்லக் கூடாது என்று பலமுறை அழுத்திச் சொன்ன பிறகே அறைக்குள் அழைத்து வந்தான்.

உள்ளே வந்ததும் , “கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக்கோ பொழில்.நான் எல்லாம் சரியா இருக்கானு மறுபடி ஒருமுறை செக் பண்ணிட்டு வந்து உன்னைக் கூட்டிட்டு போறேன்.சரியா”என்று சொல்லிவிட்டு எழுந்தவனை நகர அனுமதிக்க விடவில்லை அவனின் மனையாள்.

“சீக்கிரம் வந்திடணும் விக்கிரமா…என்னை தனியா விட்டுட்டு போகக்கூடாது”என்றாள் உத்தரவாக.

மனைவியின் செய்கையில் நெகிழ்ந்தவன் அவளின் நெற்றியில் ஒற்றை முத்தத்தை அவளுக்குப் பரிசளித்தான். “சீக்கிரம் வந்துடறேன் பொழில்”என்று கூறி இரண்டு எட்டு நகர்ந்து போனவன் மீண்டும் திரும்பி வந்து முகமெங்கும் முத்தங்களால் அவளை அர்ச்சித்து விட்டே கிளம்பினான்.

மீண்டும் அறைக்குள் ஆதித்யன் வந்த பொழுது பொழிலரசியின் கரங்களில் அவர்களுடைய திருமணப் புகைப்படம் முளைத்து இருந்தது.மனைவியின் கரங்கள் அன்று போல இன்றும் கணவனின் முகத்தை ஆசையோடு வருடிக் கொண்டு இருந்தது.அவளின் செய்கைகளால் ஆதித்யன் திணறித் தான் போனான்.அவள் விலகி இருக்கும் போதே அவனால் அவளை ஒதுக்கி வைக்க முடியாது.இப்பொழுது மனதளவில் அவள் காட்டும் நெருக்கத்தை அவனின் மனம் விரும்பினாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தான்.உண்மையை அவளிடம் சொல்லவும் முடியாமல் சொல்லாமல் அவளிடம் மறைக்கவும் முடியாமல் தனக்குள்ளேயே புழுங்கித் தவித்தான்.

“பொழில் இன்னும் கிளம்பலையா?”இயல்பாகக் கேட்டபடியே அவளின் அருகில் வந்து அமர்ந்தான்.

“நீங்க இன்னும் எனக்குப் புடவை எடுத்து வைக்கவே இல்லையே…”கழுத்தை கட்டிக் கொண்டு சலுகையாகக் கேட்டாள் பொழிலரசி.

“இதோ ஒரு நிமிஷம்” என்றவன் அவள் கைகளை மெல்ல விலக்கி விட்டு எழுந்து பீரோவில் இருந்து ஆகாய நீல வண்ணத்தில் ஒரு ஷிப்பான் புடவையையும் அதற்குத் தோதாக அணிகலன்களையும் எடுத்து வைத்தவன் அறையில் இருந்து அவசரமாக வெளியேறி விட்டான்.அவனால் அவளருகில் தன்னைக் கட்டுபடுத்திக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.

கணவன் அறையை விட்டு வெளியேறியதும் ஒரு மந்தகாசப் புன்னகை ஒன்று அவளின் இதழில் தோன்றி மறைய அவசரமாக எழுந்து சென்று கதவை தாளிட்டவள் அறையின் உள்ளே ஒவ்வொரு இடமாகத் தேடினாள்.எங்கேயும் அவள் தேடிய பொருள் கிடைத்தபாடில்லை.சட்டென்று ஏதோ நினைவு வந்தவள் போல நெற்றியை தட்டிக் கொண்டவள் விபத்து நடந்த அன்று ஆதித்யன் உடுத்தி இருந்த சட்டையை அழுக்குத் துணிகளுக்கு இடையில் தேடி எடுத்தாள்.

அவளின் நல்ல நேரமோ என்னவோ ஆதித்யனும் இருந்த டென்ஷனில் இந்த அழுக்குத் துணிகளைச் சலவைக்கு அனுப்ப மறந்து விட்டான்.அவசர அவசரமாக அந்தச் சட்டையின் பாக்கெட்டில் கை விட்டு துளாவியவளுக்கு அவள் தேடிய பொருள் கிடைத்து விட்டது.கவனமாக அதை எடுத்து கட்டிலின் அடிபகுதியில் ஒளித்து வைத்தாள் பொழிலரசி.மீண்டும் ஒருமுறை ஆதித்யனிடம் கையும் களவுமாகக் கார்த்திக்கின் விசிட்டிங் கார்டுடன் மாட்டுவதை அவள் விரும்பவில்லை.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 5]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here