Kadhale Nee Kaanala Tamil Novels 24

0
2090
Madhumathi Bharath Tamil Novels

ஆகாய மின்னலெனத் தயாராகிக் காத்திருந்தாள் பொழிலரசி.கண்ணாடி முன் நின்று தன்னைச் சரிபார்த்துக் கொண்டாள்.அளவுக்கு அதிகமாக எந்த ஒப்பனையும் செய்து கொள்ளாமலே அவள் முகம் பொலிவாக இருந்தது.இயல்பாக வெட்கத்தில் சிவந்த கன்னங்களும்,மலர்ந்த மலர் போலச் சிரிக்கும் அவளது சிரிப்பு உதடுகளுக்கு மட்டும் இல்லாது கண்களுக்கும் தனி அழகை கொடுக்கப் பேரழகியாகத் தெரிந்தாள் பொழிலரசி. கண்ணாடியில் தன்னைச் சரி பார்த்துக் கொண்டே கண்களுக்கு மை தீட்டிக் கொண்டு இருந்தவள் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த கணவனைக் கண்களால் அழைத்தாள்.

‘அவள் அருகில் செல்லாதே’ என்று மூளை ஒருபுறம் எச்சரித்தாலும் அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு மனைவியிடம் போய் நின்றது விக்ரமாதித்யனின் கால்கள்.கணவன் அருகில் வந்ததும் குங்கும சிமிழை கைகளில் எடுத்தவள் அவன் புறம் நீட்டினாள்.

“வச்சு விடுங்க…” அவள் குரலில் இருந்த ஏதோ ஒன்றுக்கு கட்டுப்பட்டவனாய் அவன் கைகள் குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றி வகிட்டில் அழுத்தமாக வைத்தது.அது முடித்ததும் சரம் சரமாகத் தொடுக்கப்பட்ட மல்லிகையும் அவன் கைகளுக்கு மாற ஏதோ மாய லோகத்தில் இருப்பதைப் போல உணர்ந்தவனின் கைகள் இருபுறமும் வழியுமாறு பூவை தட்டுத்தடுமாறி சூடி விட்டான்.அவன் கைகளில் தடுமாற்றத்துடன் செயல்படுவதை அரசியால் உணர முடிந்தது.தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு கணவனின் புறம் திரும்பியவள் கணவனின் தோளில் தானாகவே சாய்ந்து கொண்டாள்.

ஆதித்யனின் உடலில் ஒருவித விறைப்புத் தன்மை தோன்றியது.தன்னை கட்டுக்குள் வைத்துக் கொள்ளப் போராடுகிறான் என்பது இறுக மூடிய அவன் விரல்களில் இருந்து அவளுக்குத் தெரிந்தது.மெல்ல அவனுடைய கையோடு கைகளைக் கோர்த்துக் கொண்டவள் அவன் விரல்களை ஒவ்வொன்றாகப் பிடித்து லேசாக நீவி விட்டாள்.அவன் உடலில் இலகுத்தன்மை மீள்வதை உணர்ந்தவள் அவனை விட்டு விலகாமல் அப்படியே நின்றாள் பொழிலரசி.

“கீழே போகலாமா பொழில்” அவசரம் காட்டிப் பேசினான் ஆதித்யன்.

“என்ன அவசரம் விக்கிரமா”குழைந்தது அவள் குரல்

“எல்லாரும் காத்துக்கிட்டு இருப்பாங்களே”

“இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சுப் போகலாம் விக்கிரமா” என்று சொன்னவள் அவனுடன் இன்னும் நெருக்கத்தை அதிகரித்தாள்.

“பொழில்…என்ன ஆச்சு உனக்கு”அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல் அவளைக் கொஞ்சம் தள்ளி நிறுத்தியவன் அவள் கண்ணோடு கண் கலந்து கேட்டு விட்டான்.

“எனக்கு ஒண்ணும் ஆகலையே” வெள்ளையாய் சிரித்தாள்.‘என்னவென்று சொல்லி இவளுக்குப் புரிய வைப்பது’ என்று தடுமாறித் தான் போனான் ஆதித்யன்.

“முன்னே எல்லாம் என்கிட்டே வரவே மாட்டியே…அதான்”வீணாக அவளைச் சந்தேகப்படுகிறோமோ என்ற குற்ற உணர்வு அவன் குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“அதுக்கும் சேர்த்து இப்ப உங்களைக் கவனிக்கறேன்னு வச்சுக்கோங்க”இழைந்து கொண்டே பதில் சொன்னாள் பொழிலரசி.

“மறுபடியும் என்னை ஏமாற்ற பார்க்கிறாயா பொழில்”லேசான வலி அவன் குரலில்.

அவன் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் அவள் கைகள் உயர்ந்து அவன் கழுத்தில் மாலையாகியது.அவளின் முகத்தில் இருந்த புருவ சுளிப்பு அவளுக்கு இந்தக் கேள்வி பிடித்தமில்லை என்பதை அறிவித்தாலும் தெரிந்து கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் விக்ரமாதித்யன்.

“நான் என்ன செஞ்சா என்னை நம்புவ விக்கிரமா? நான் வேணும்னா…” என்று எதையோ சொல்ல விழைந்தவள் பாதியில் அதை நிறுத்திக் கொண்டு தன்னுடைய குதி கால்களை உயர்த்தி அவன் கண்ணோடு கண் கலக்க விட்டவாறே பரிதவிப்புடன் அவன் இதழ்களை நெருங்கினாள்.

அவள் என்ன செய்யப் போகிறாள் என்பதை உணர பெரிதாய் எந்த அறிவும் தேவை இல்லை தானே.அவளுடைய ஒவ்வொரு அசைவிற்கான காரணத்தையும் அவனைத் தவிர வேறு யார் இந்த அளவிற்குப் புரிந்து கொள்ள முடியும்.தானாகவே அவளை விலக்கியவன் அவளை நிமிர்ந்தும் பாராமல் பேசினான்.

“இதுக்கு அவசியம் இல்லை பொழில்.நாம கீழே போகலாம்.எல்லாரும் காத்துக்கிட்டு இருப்பாங்க”ஆதித்யனின் மரத்தப் பார்வையில் இருந்து அவன் என்ன நினைக்கிறான் என்பதை அரசியால் கணிக்க முடியவில்லை.

“ம்” என்றவள் மெல்ல அவனை விட்டு விலக, பெருமூச்சுடன் அவளோடு இணைந்து நடந்தான் ஆதித்யன்.

ஹாலில் அனைவரும் குழுமி இருக்கக் கேக் வெட்டுவதற்குத் தயாராக நின்று கொண்டு இருந்த சர்வேஷ் விக்ரமாதித்யனையும் பொழிலரசியையும் கண்டதும் முகம் மலர்ந்தான்.

“உங்களுக்காகத் தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் மாமா…கேக் வெட்டலாமா”ஆர்வத்துடன் கேட்ட மருமகனின் தலையைச் செல்லமாகக் கலைத்து விட்டு குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் இருக்கின்றார்களா என்று ஒருமுறை பார்த்துக் கொண்டான்.திலகவதி வீல் சேரில் அமர்ந்து இருக்க,அவரின் இருபுறமும் பத்மாவதியும் விஷ்வேஷும் நின்று கொண்டு இருந்தனர்.

“மாமா எங்கே அக்கா” என்றான் ஆதித்யன் திலகவதியின் புறம் திரும்பி.

“அவர் இன்னும் ஊரில் இருந்து கிளம்பவே இல்லை ஆதி.இன்றைக்கு அவருக்கு வெளியூர் பயணங்கள் செய்தால் நிறையப் பொருள் நஷ்டம் ஆகும்னு ஜோசியர் சொல்லிட்டாராம்.அதனால இரண்டு நாள் கழிச்சு வர்றேன்னு சொல்லி இருக்காங்க” உள்ளே போய் விட்ட குரலில் பதில் அளித்த திலகவதியை தேற்றும் வழி தெரியாமல் சர்வேஷின் புறம் திரும்பினான் ஆதித்யன்.

எல்லாரும் இது எப்பொழுதும் நடப்பது தான் என்ற பாவனையில் இருந்து விட,அரசிக்கு தான் ஒருமாதிரியாக இருந்தது.பெற்ற பிள்ளை பிறந்த நாளுக்குக் கூட வராமல் இதென்ன இவர் இப்படி நடந்து கொள்கிறார் என்ற எண்ணம் தோன்றி உள்ளுக்குள் உறுத்தியது அவளுக்கு.

“நீ கேக் வெட்டுச் சர்வேஷ்” என்று சொன்ன ஆதித்யன் பொழிலரசியை அழைத்துக் கொண்டு சர்வேஷின் அருகில் போய் நிற்க எல்லாரும் பிறந்த நாள் வாழ்த்து பாட சர்வேஷ் கேக்கை வெட்டி முடித்தான்.

“எனக்காக வெயிட் பண்ணாம அதுக்குள்ள கேக்கை வெட்டியாச்சா?” சிணுங்கலாகக் கேட்டபடி உள்ளே நுழைந்தாள் மேனகா.

“வா வா மீனு…எங்கே நீ வராமல் போய் விடுவாயோன்னு ரொம்பப் பயந்துட்டேன்”

ஆர்ப்பாட்டமாக அவளை வரவேற்று சர்வேஷின் அருகில் நிற்க வைத்தான் விஜயேந்திரன்.நளினமாக நடந்து வந்து கேக்கில் ஒரு துண்டை எடுத்தவள் சர்வேஷிற்கு ஒரு வாய் ஊட்டி விட்ட பின் அடுத்தத் துண்டை எடுத்து விஜயேந்திரனுக்கும் ஊட்டி விட்டு மீண்டும் ஒரு துண்டை எடுத்து ஆதித்யனுக்கு ஊட்ட முயல்கையில் முகம் சுளித்தவாறே சற்று பின்னுக்கு நகர்ந்தவன் அரசியை அவளுக்கு அருகில் நிறுத்தி அவளுக்கு ஊட்டி விடுமாறு சைகையில் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்து நின்று கொண்டான்.

“என்ன அத்தான் நான் எவ்வளவு ஆசையாகக் கேக் ஊட்டுகிறேன் சாப்பிடக் கூடாதா?”கிளி கொஞ்சியது அவள் குரலில்.

“அதெல்லாம் இதோ அருகில் நிற்கிறானே உன்னுடைய வருங்காலக் கணவன் அவனுக்கு ஊட்டி விடு.இன்று முழுவதும் வாயை திறந்து காட்டிக் கொண்டே இருப்பான்.எனக்கு வேலை இருக்கிறது” என்று முகத்தில் அடித்தாற் போலப் பேசியவன் பொழிலரசியின் கைகளை இறுக பற்றிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

தனியே சென்றதும் வள்ளியிடம் சொல்லி சர்வேஷிற்காக வாங்கி வைத்து இருந்த வைர டாலர் பதித்த தங்க சங்கிலியை எடுத்து அரசியின் கைகளில் கொடுத்து அவனுக்குப் போட்டு விடுமாறு சொல்லி மீண்டும் அங்கே அழைத்து வந்தான் ஆதித்யன்.

சர்வேஷின் கழுத்தில் அதைப் போட்டு விடும் எண்ணத்தோடு நெருங்கிய அரசியின் கைகளைக் கொஞ்சம் கூட இங்கீதமே இல்லாமல் பற்றித் தடுத்தாள் மேனகா.

“வாவ் அழகாக இருக்கிறதே டிசைன்…டாலர் வைரமா அரசி…நீங்க வாங்கியதா? என்ன விலை இருக்கும்? எவ்வளவு கேரட்? எங்கே வாங்கினீங்க?”கேள்விகளை அடுக்கினாள் மேனகா.

“இந்தத் தகவலை எல்லாம் அவங்க கிட்டே ஏன் கேட்கிறாய் மீனு டார்லிங்…அவங்களுக்கு இதைப் பற்றி எல்லாம் என்ன தெரியும்?அண்ணன் வாங்கி இருப்பார்.அதை இவங்க வாங்கிப் பந்தாவாகச் சபையில் போட்டு விடறாங்க.அவ்வளவு தான்”கேலியான புன்னகையோடு தோள் குலுக்கினான் விஜயேந்திரன்.

முகம் கன்ற தலையை ஒரு நொடி கீழே தொங்க விட்டாள் அரசி.அவளுக்கு அருகிலேயே நின்று கொண்டு இருந்த கணவனின் கை கொடுத்த அழுத்தத்தில் திடம் வாய்க்கப் பெற்றவள் நிமிர்வோடு அவர்கள் இருவரையும் பார்த்துப் பேசினாள்.

“எவ்வளவு பணம் என்று கணக்கு பார்த்துச் செலவு செய்யும் இடத்தில் நான் இல்லை மேனகா…இது என் கணவரின் அக்கா பிள்ளைகளுக்கு வாங்குவது.இதில் போய்க் கணக்கு பார்க்க வேண்டிய சூழலில் நான் இல்லை.அப்படி ஒரு நிலையில் என் கணவர் என்னை நிறுத்தவும் இல்லை.அதுவும் இல்லாமல் திருமணம் ஆன பின் நான் வேறு அவர் வேறு என்ற எண்ணம் எங்கள் இருவருக்கும் சரி எங்களின் மீது அன்பு உள்ளவர்களுக்கும் எழுவதற்கு வாய்ப்பே இல்லையே” என்று நறுக்கு தெறித்தார் போலப் பேசியவள் கணவனின் கையோடு கை கோர்த்துக்கொண்டு நிற்க,அவளின் பேச்சை ஆதரிப்பது போல அவளைத் தோளோடு சேர்த்து லேசாக அணைத்துக் கொண்டான் ஆதித்யன்.

ஒரு நிமிடம் முகம் கன்றிய மேனகா மறுநிமிடமே இயல்புக்கு திரும்பி விட்டாள். “சரி சரி எல்லாரும் வாங்க…அங்கே நிறைய விளையாட்டுகள் ஏற்பாடு செய்து இருக்காங்க.அதை எஞ்சாய் பண்ணலாம்” என்று கூறியவள் விஜயேந்திரனின் கைகளை இறுகப் பற்றியவாறே அங்கிருந்தவர்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

தன்னைச் சமனப்படுத்திக் கொள்ளச் சில நிமிடங்கள் கால அவகாசம் எடுத்துக் கொண்ட மனைவியைப் பார்த்த விக்ரமாதித்யன் அவளை மெச்சுதலாகப் பார்த்தாவாறே பேசினான்.

“அவளை நீ பேசியது கம்மி பொழில்…இதுக்கெல்லாம் அவள் அசர மாட்டாள்.இன்னும் எப்படி எல்லாம் பேசுவாள் என்பதைப் பார்” என்று கூறிய கணவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் பொழிலரசி.

“நான் அப்படிப் பேசியதில் உங்களுக்கு என் மீது கோபம் இல்லையா?என்ன தான் இருந்தாலும் அவங்க நம்ம வீட்டு விருந்தாளி…இன்னும் நம்ம வீட்டு மருமகள் ஆகப் போறவங்க…”தயங்கி தயங்கி பேசினாள் பொழிலரசி

“த்சு!…அவளிடம் நீ எதிர்த்து நின்று சண்டை போட்டால் அதைப் பார்த்து ரசிக்கும் முதல் ஆள் நானாகத் தான் இருப்பேன்.”அவன் குரலில் இருந்த வெறுப்பை அவளால் உணர முடிந்தது.

“ஏன் உங்களுக்கு அவங்க மேல் இவ்வளவு வெறுப்பு?”அவன் முகத்தையே துளைக்கும் பார்வையால் அளவிட்டாள் பொழிலரசி.

“உனக்குத் தான் கண் இருக்கே…நீயே பார்த்து தெரிந்து கொள்ளேன்.”அசட்டையாகத் தோள் குலுக்கினான் ஆதித்யன். ‘நான் சொன்னால் மட்டும் நம்பி விடப் போகிறாயா’ என்ற பாவம் அதில் நிரம்பி இருக்க மேற்கொண்டு எதையும் கேட்கவில்லை பொழிலரசி.

இருவருமாகச் சேர்ந்து குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருக்கும் இடத்திற்குச் செல்ல அங்கே குழந்தைகள் அனைவரும் மேஜிக் ஷோ பார்த்து ஆர்ப்பரித்துக் கொண்டு இருக்க,பெரியவர்கள் கை கட்டி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த பெரியவர்களை ஒன்று திரட்டிய திலகவதி அவர்களை மியுசிக்கல் சேர் விளையாடும் படி அழைக்கப் பெரியவர்கள் அனைவரும் மகிழ்வுடன் அதில் பங்கேற்றனர்.

திலகவதி வீல் சேரில் அமர்ந்தவாறே கையில் இருந்த மொபைல் மூலமாகப் பாடலை ஒலிக்கச் செய்ய, சுற்றிலும் சேர்கள் வட்ட வடிவில் அடுக்கி வைக்கப் பட்டு எல்லாரும் குழந்தையென மாறி போட்டியில் பங்கு கொண்டனர்.வர மறுத்த பொழிலரசியைக் கூட விக்ரமாதித்யன் ஒற்றைக் கண் அசைவில் வரவழைத்து விட்டான்.எப்படி விளையாட வேண்டும் என்று தெளிவாக அவளுக்கு எடுத்து சொன்னவன், சர்வேஷின் கெஞ்சலுக்காகத் தானும் இறங்கி விளையாடத் தொடங்கினான்.

விக்ரமாதித்யன் மனைவியோடு விளையாட வரவும் கூட்டத்தினர் அனைவரும் ஆர்ப்பரிக்கச் சுற்றிலும் விசில் சத்தமும்,ஹோ என்ற இளசுகளின் இரைச்சலும் கேட்க புன்னகையோடு அவனும் தயாரானான்.மியுசிக் போட்டவுடன் ஒரு சிலர் தாளத்திற்கு ஏற்றபடி ஆடிக் கொண்டும்,சிலர் கைகளை உற்சாகமாகத் தட்டிக் கொண்டும்,ஒரு சிலர் மென்நடையோடு நடந்து மகிழ்ச்சியுடன் போட்டியில் பங்கு கொண்டனர்.

மியுசிக் போட்டவுடன் எல்லாரும் சேரை சுற்றி வந்து கொண்டே இருக்க,ஓவ்வொரு முறை திலகவதி பாட்டை நிறுத்தும் போதும் ஒருவர் குறையக் கடைசியாக மூவர் மட்டுமே மீதம் இருந்தனர்.விளையாடிக் கொண்டு இருந்தது மேனகா,பொழிலரசி மற்றும் விக்ரமாதித்யன் மட்டுமே.

அந்த ஆட்டத்தின் இறுதியில் மேனகாவின் இடத்தை அரசி கைப்பற்ற ஆத்திரத்துடன் அரசியை உறுத்துப் பார்த்தவள் யாரும் கவனிக்கும் முன் சட்டெனத் தன் முகபாவனையை மாற்றிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விஜயேந்திரனின் தோளில் போய்த் தொற்றிக் கொண்டாள்.

கடைசி ஆட்டம் ஆதித்யனுக்கும்,அரசிக்கும் இடையே நடந்து கொண்டு இருந்தது.திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைக் காண்பது போலப் பொடிசுகள் உட்பட எல்லாரும் அங்கே கூடி விட்டனர்.இளைஞர் பட்டாளமோ எதிலுமோ தோல்வி அடையாத விக்ரமாதித்யன் மனைவிக்கு விட்டுக் கொடுத்து விடுவாரோ என்ற பதட்டத்தில் விரல் நகங்களைக் கடித்துத் துப்பிக் கொண்டு இருக்க,பொழிலரசியோ ஜெயிப்பதில் ஆர்வம் இல்லாதவள் போலக் காணப்பட இருவரில் வெல்லப்போவது யார் ? என்ற கேள்வி அனைவருக்கும் தோன்ற பத்மாவதி முதல் வீட்டு வேலையாள் வள்ளி உட்பட அனைவரும் ஆர்வத்துடனும்,டென்ஷனும் பார்த்துக் கொண்டு இருக்கக் கடைசி ரவுண்டு ஆட்டம் ஆரம்பம் ஆனது.

மற்ற ஆட்டத்தைப் போல இல்லாது கடைசி ஆட்டம் என்பதால் மியுசிக் வெகுநேரம் நீடிக்க,கணவன் மனைவி இருவரில் விட்டுக் கொடுக்கப் போவது யார்? வெல்லப்போவது யார்? என்ற பரபரப்பில் சுற்றி இருந்தோர் அமர்ந்து இருக்க அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் ஆதித்யனும் அரசியும் ஒருவரை பார்வையால் விழுங்கியபடி அங்கிருந்த ஒற்றைச் சேரை சுற்றிக் கொண்டு இருந்தனர்.

சட்டென்று மியுசிக் நின்று விட ஆதித்யனும் ,அரசியும் இடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்று விட்டனர்.அவள் அமரட்டும் என்று அவனும்,அவன் அமரட்டும் என்று அவளும் நிற்க ஓரிரு நிமிடங்கள் பொறுத்து பார்த்த இளைஞர் பட்டாளம் இவர்களின் அன்னியோன்யத்தைக் கண்டு ஓவென்று கூச்சலிட வெட்கம் மேலிட அங்கிருந்த ஓட முயன்றாள் பொழிலரசி.

அப்படி அவள் ஓட நினைத்தால் விட்டு விடுவானா அவள் கணவன்…எல்லாரும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அவளின் கைகளைப் பற்றி ஒரு சுழற்று சுற்றி தன்னருகே இழுத்தவன் அவளை மடியில் அமர்த்திக் கொண்டு தானும் சேர்ந்து சேரில் அமர்ந்து கொண்டான்.அந்த காட்சியைக் கண்ட இளசுகள் ஒரு நிமிடம் அமைதியாகி மறுநிமிடமே இதற்கு முன் இல்லாத அளவிற்குக் கத்தி தங்களின் மகிழ்ச்சியையும் பிரமிப்பையும் வெளிப்படுத்த பொழிலரசியால் நிமிர்ந்து யார் முகத்தையும் பார்க்கவே முடியாமல் வெட்கத்துடன் கணவனின் தோளிலேயே கொடியெனச் சாய்ந்து கொண்டாள்.

இருவரில் யார் தோற்கப் போகிறார்கள் என்று சுற்றி இருந்த அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்க,நாங்கள் இருவருமே ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலால் எப்பொழுதும் வென்று விடுவோம் என்பதைச் சொல்லாமல் சொல்லிய விக்ரமாதித்யனின் செயலில் அரசி கூட அசந்து தான் போனாள்.

இளசுகள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து இவர்களைப் போதும் போதும் என்னும் அளவிற்கு வம்பிழுக்க,சலிக்காது அவர்களின் கேலி,கிண்டல்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டே இருந்தான் விக்ரமாதித்யன்.வந்து இருந்த அத்தனை பேரின் கண்களும் அவர்கள் இருவரின் மீதே இருக்க , விஜயேந்திரனுடன் அமர்ந்து இருந்த மேனகாவின் முகம் அப்பட்டமான எரிச்சலைக் காட்டிக் கொண்டு இருந்தது.அவளின் முகமாற்றத்தை கவனித்த விஜயேந்திரன் கூட அவளைச் சமாதானம் செய்ய முயற்சித்தான்.

“நான் இங்கே இருக்கும் போது அங்கே என்ன பார்வை மீனு டார்லிங்”

“இவளுக்கு எல்லாம் என்ன தகுதி இருக்கிறது என்று இப்படி நான் கலந்து கொள்ளும் இந்தப் பார்ட்டியில் கலந்து கொள்கிறாள் இவள்?அதுவும் அத்தானுக்குப் பக்கத்தில் வேறு அமர்ந்து கொண்டு இருக்கிறாள்.இவர்கள் இருவருக்கும் துளி கூட ஜோடிப் பொருத்தமே இல்லையே விஜி…அத்தானின் ஸ்டைல் எங்கே? இவளின் பட்டிக்காடு தோற்றம் எங்கே?அத்தான் தான் பாவப்பட்டு இவளை இந்த விருந்திற்குக் கூட்டி வந்து இருக்கிறார் என்றால்,இவளும் கொஞ்சம் கூடத் தன்னைப் பற்றியும்,தன்னுடைய நிலையைப் பற்றியும் சிந்தனையே இல்லாமல் இருக்கிறாளே?இவளை போன்ற பைத்தியத்திற்கு யார் இதை எல்லாம் சொல்லி புரிய வைப்பது?”

இவளின் இத்தனை பேச்சுகளையும் அவளுக்குப் பின்புறம் இருந்த டேபிளில் வந்து அமர்ந்த ஆதித்யனும் அரசியும் கேட்டுவிட,அந்த நிமிடம் ஆதித்யனின் முகத்தில் இருந்த கோபத்தை மட்டும் அவர்களில் இருவரில் யாரேனும் ஒருவர் பார்த்து இருந்தால் ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் அந்த இடத்தை விட்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடி இருப்பார்கள்.பின்னால் வந்து அமர்ந்த இவர்களைக் கவனிக்காமல் தன் போக்கில் அவர்கள் இருவரும் இதே ரீதியில் பேசிக் கொண்டே போகப் பொறுக்க முடியாமல் ஆதித்யன் வெகுண்டு எழுந்து விட்டான்.

“யாருக்கு தகுதி இல்லைன்னு சொன்ன நீ?”கொழுந்துவிட்டு எரியும் சூரியனை நினைவு படுத்துவதாய் அவன் முகம் கோபத்தில் சிவக்க,சட்டென்று அவனை எதிர்பார்க்காத மேனகாவும் விஜயேந்திரனும் பயத்தில் சேரில் அப்படியே உறைந்து போய் இருந்தனர்.மேனகாவிற்கு ஆதித்யனின் ரௌத்ரத்தை பார்த்த பிறகு சுத்தமாகப் பேச்சே வரவில்லை.அவளின் நிலையைக் கண்டதும் மேனகாவிற்காகப் பரிந்து கொண்டு வந்து பேசினான் விஜயேந்திரன்.

“ஏன் அண்ணா மீனு எதுவும் தப்பா பேசலியே…உங்களை உயர்த்தித் தானே பேசினாள்…அவள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது.என்னதான் நீங்க ஆயிரம் சப்பைக்கட்டு கட்டினாலும் உங்களுக்கு அருகில் நிற்கக்கூடத் தகுதி இல்லாதவங்க இவங்க.அது உண்மை தானே”

“ஏய்…வாயை அடக்கிப் பேசு” என்று உறுமலாகச் சொன்ன ஆதித்யன் விஜயேந்திரனை அடித்து நொறுக்கும் எண்ணத்துடன் அவனை நெருங்க,அடுத்து என்ன விபரீதம் நடக்கப் போகிறதோ என்று திலகவதியும்,பத்மாவதியும் உள்ளுக்குள் நடுங்க எரிமலையாய் சீறிக் கொண்டு இருந்த விக்ரமாதித்யனை ஒற்றைக் கண்ணசைவில் தடுத்து நிறுத்தினாள் பொழிலரசி.அவளின் கண்ணசைவில் கொதித்துக் கொண்டு இருந்த எரிமலை ஒன்று நொடியில் பனிமலையாக மாறிய அதிசயத்தைச் சுற்றி இருந்த அனைவரும் ஆவென்று வாய் பிளந்து பார்த்துக் கொண்டு நின்றனர்.

கணவனின் அருகில் வந்து நின்றவள் அவனுடைய கையோடு கை கோர்த்துக் கொண்டு கொஞ்சமும் அலட்டல் இல்லாமல் கம்பீரத்தோடு மேனகாவையும்,விஜயேந்திரனையும் பார்த்து பேசலானாள்.

“நிச்சயம் நீங்க சொன்ன மாதிரி என் கணவரோடு கம்பீரத்திற்கு இங்கே இருக்கிற யாரும் இணை கிடையாது தான்.இவருக்கு அருகில் நிற்கக்கூட எனக்குத் தகுதி இல்லைன்னு சொன்னீங்களே.அதை மட்டும் என்னால் ஒத்துக் கொள்ளவே முடியலை.உண்மையைச் சொல்லப் போனால் இங்கே இருக்கும் மற்ற யாரையும் விட இவருக்கு அருகில் நிற்கும் தகுதி எனக்கு மட்டும் தான்…என் ஒருத்திக்கு மட்டும் தான் இருக்கு”அழுத்தமாகச் சொன்னாள் பொழிலரசி.

“அப்படி என்ன பெரிய தகுதி?”இகழ்ச்சியாக மேனகாவின் உதடுகள் வளைய,அருகில் நின்று கொண்டு இருந்த விஜயேந்திரன் கேலிப் புன்னகை ஒன்றை உதிர்த்தான்.

விக்ரமாதித்யன் உள்ளுக்குள் எரிமலையாகக் கொதித்துக் கொண்டு இருந்தாலும் பொழிலரசியின் பதில் என்னவாக இருக்கக்கூடும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக முடிந்த அளவு முயன்று முகத்தில் அமைதியை கொண்டு வரப் போராடிக் கொண்டு இருந்தான்.

“நான் இவரின் மனைவி” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.ஆதித்யன் அவளுக்குக் கட்டிய தாலியை கைகளால் பற்றியாவாறே ஆதித்யனை நோக்கி கண்களால் ஒரு காதல் அம்பை எய்த, அந்த நிமிடம் வரை எரிமலையெனக் கொதித்துக் கொண்டு இருந்தவன் சரேலென்று பார்வையைத் திருப்பித் தன்னுடைய மனையாளை ஒரு பார்வை பார்த்தான்.இருவர் கண்களும் சுற்றி இருந்த யாரைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் ஒருவரை ஒருவர் பார்வையால் விழுங்கிக் கொண்டு இருந்தனர்.

ஆதித்யன் ‘இது நிஜமா?’ என்று கண்களால் அவளைப் பார்த்துக் கேள்வி எழுப்ப,அரசியின் முகத்தில் சட்டென மலர்ந்த நாணப் பூக்கள் அவனின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க விக்ரமாதித்யனின் முகத்தில் ஆயிரமாயிரம் சூரியன்களின் உதயம்.சுற்றி இருந்த அத்தனை பேரைப் பற்றியும் கவலைப் படாமல் சட்டென அவளைக் கைகளில் ஏந்தியவன் அவளின் நெற்றியில் ஒரு ஆழமான முத்தத்தைப் பரிசளித்தான்.

சுற்றி இருப்போர் நினைவில் ஆதித்யனிடம் இருந்து அரசி விலக முற்பட அவளைத் தடுத்து நிறுத்தி அவளிடம் பேச முயல்கையில் அவனின் போன் ஒலி எழுப்பித் தன்னைக் கவனிக்குமாறு சொல்ல விருப்பமே இல்லாமல் அதை எடுத்துப் பார்த்தவனின் முகம் நொடியில் தீவிரமாகி இருந்தது.

பொழிலரசியை அங்கே தனித்து விடாமல் அவளின் கைப்பற்றித் தனியே இழுத்துக் கொண்டு சென்றவன் யாரும் அருகில் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்ட பின்பே பேசத் தொடங்கினான்.

“சொல்லுங்க சார்…யார் குண்டு வச்சதுன்னு கண்டுபிடிச்சாச்சா?”

“….”

“தேங்க்ஸ்” என்ற ஒற்றை வார்த்தையில் போனை அணைத்துப் பாக்கெட்டில் போட்டவனின் பார்வை உயர்ந்து மனைவியின் மதி முகத்தில் நிலைத்தது.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here