Kadhale Nee Kaanala Tamil Novels 25

0
1964
Madhumathi Bharath Tamil Novels

“தடயவியல் துறையில் இருந்து வந்தவங்களுக்கு ஏதோ ஒரு ஆதாரம் கிடைச்சு இருக்காம் பொழில்.அது பத்தி பேசுறதுக்கு என்னை வர சொல்றாங்க.நான் போய்ட்டு வர்றேன்”மனைவியின் முகத்தைப் பார்த்தாவாறே சொன்னான் ஆதித்யன்.

“அவங்களை இங்கே வர சொல்லலாமே விக்கிரமா?”கணவனைப் பிரியப் பிடிக்காமல் ஏக்கத்துடன் வெளிவந்தது வார்த்தைகள்.

“இல்லை பொழில்.அது சரிப்பட்டு வராது.இங்கே இத்தனை பேர் சொந்தக்காரங்க கூடி இருக்காங்க.திடீர்னு போலீஸ் வந்தா இப்போ எல்லாரும் இருக்கிற மனநிலை கெட்டுப்போக வாய்ப்புகள் அதிகம்.அதனால நானே நேர்ல போய் என்னன்னு பார்த்துட்டு சீக்கிரமே வந்துடறேன்”முதலில் தீவிரமாகப் பேசத் தொடங்கியவனின் குரல் முடியும் போது கிசுகிசுப்பு தொனிக்கு மாறி இருந்தது.மிகத் தீவிரமாகப் பேசுவது போல அவளின் கன்னத்தோடு கன்னம் இழைந்து கொண்டே பேசினான் அந்தத் திருடன்.

“வெளியே கிளம்பணும்னு சொன்னீங்க” பலவீனமான குரலில் நினைவூட்டினாள் பொழிலரசி.

“ம்” என்று மனமே இல்லாமல் அவளை விலக்கியவன் தொலைவில் நின்று கொண்டு இருந்த வள்ளியை அழைத்துப் பொழிலரசியைப் பத்திரமாக அறைக்கு அழைத்துச் செல்லும்படி பணித்து விட்டு தனக்கே உண்டான வேக நடையுடன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

வள்ளி இப்பொழுது எல்லாம் பொழிலரசியிடம் முன் போலப் பகைமை பாராட்டுவது இல்லை.ஆதித்யன் சொன்ன பிறகு கண்ணும் கருத்துமாக அவளைப் பார்த்துக் கொண்டாள்.பொழிலரசிக்கும் அந்த வீட்டில் பெரும்பாலான நேரங்களில் இருக்கும் ஒரே துணை வள்ளி என்று ஆன பின் அவளிடம் இணக்கமாகவே நடந்து கொண்டாள்.பொழுது போகாத நேரங்களில் வள்ளி தானாகவே முன் வந்து பொழிலரசியைக் கூட்டு சேர்த்துக் கொண்டு அறைக்குள்ளேயே விளையாடவும் செய்தாள்.

தன்னைத் தனிமையில் இருந்து மீட்கத் தான் இதையெல்லாம் வள்ளி செய்கிறாள் என்பது பொழிலரசிக்குப் புரியாமல் இல்லை.வள்ளியும் தன்னால் ஆன மட்டும் பொழிலரசியைச் சிரிக்க வைத்தாள்.வள்ளியை பற்றி மேலும் எண்ணமிட்டவாறே தன்னுடைய அறைக்குள் செல்வதற்காக லிப்டின் அருகில் சென்றவளை தடுத்து நிறுத்தியது பத்மாவதியின் குரல்.

“அரசி…”

பொழிலரசி தயங்கி நின்றவள் என்ன என்று பார்வையை உயர்த்திப் பார்த்தாளே தவிர அவரிடம் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.ஏனோ திருமணம் ஆகி வந்த நாளில் அவர் பேசிய பேச்சுக்கள் இன்னும் அவளின் உள்மனதை குத்திக் கிழித்துக் கொண்டு இருப்பதைப் போல உணர்ந்தாள்.அவரின் மனம் மாறியது அவளுக்குத் தெரியாதே.எப்பொழுதும் போலத் தன்னைக் காயப்படுத்தும் விதமாக எதையோ பேசப் போகிறார் என்று நினைத்தவள் அவர் பேசப் போகும் வார்த்தைகளை எப்படி எதிர்கொள்வது என்ற எண்ணத்துடனே நின்று கொண்டு இருந்தாள் பொழிலரசி.

“சாப்பிடாமலே கிளம்பிட்டியே அரசி”ஆதுரமாக ஒலித்த குரல் அவரது குரல் தானா என்று வியப்புடன் நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.

அவர் கண்களில் குற்ற உணர்ச்சியும்,தாண்டி ஏதோ ஒன்று இருந்ததை அவளால் உணர முடிந்தது.கண்களில் யாசிப்பை வேண்டியபடி அவர் நிற்க அதற்குக் காரணம் தான் அவளுக்குப் புரியவில்லை.

“சாப்பிட்டு போகலாமே….”எதையாவது பேச வேண்டுமே என்ற எண்ணத்துடன் பேசிய அவரை விசித்திரமாகப் பார்த்தாள் பொழிலரசி.எப்பொழுதும் சாப்பாட்டு மேஜையில் சாப்பிடும் பொழுது குத்தி குத்தி காட்டி தன்னைச் சரியாகச் சாப்பிட விடாமல் செய்யும் ஆள் இன்று இவ்வளவு அக்கறையாக விசாரிக்கிறாரே என்று எண்ணியதால் ஏற்பட்ட வியப்பு தான் அது.

“நான் அவரோடு சேர்ந்து சாப்பிட்டுக்கிறேன்”அவர் தன்னுடைய பதிலுக்காகக் காத்திருப்பது புரிந்து தயக்கத்தை விடுத்து அவர் முகம் பார்த்து பேசிய அரசி அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு நிற்க,அவரின் நிலையை உணர்ந்து கொண்டாரோ என்னவோ அவரே அவளை வள்ளியுடன் அறைக்குச் சென்று ஓய்வெடுக்குமாறு சொல்லி அனுப்பி வைத்தார்.அவரை விட்டு நகர்ந்ததும் ஹாஸ்பிடலில் ஓய்வாக இருந்த சமயத்தில் அவள் பத்மாவதியை பற்றி அவ்வபோது எண்ணிப் பார்த்த விஷயங்கள் அவள் கண் முன்னே வந்து போனது.

‘நல்ல பணக்கார குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண்மணி தன்னுடைய மகனுக்கு அதே போலச் செல்வநிலை உள்ள குடும்பத்தில் இருந்து தானே பெண் எடுக்க நினைத்து இருப்பார்.திடீரென்று தான் மருமகளாக வரவும்,அதை அவரால் ஏற்றுக் கொண்டு இருந்து இருக்க முடியாது.அதனால் தான் தன்னிடம் கோபமாகப் பேசி இருக்கிறார்’ என்று அவளுடைய மனமும் சேர்ந்தே அவருக்காக வாதாடியதில் அவரின் மேல் கொஞ்ச நஞ்சம் இருந்த கோபம் கூடச் சொல்லாமல் ஓடி விட்டது.

அதே போலத் திலகவதி அந்த வீட்டிற்குள் தான் நுழைந்ததில் இருந்தே, என்னதான் வெளியில் கெத்தாக நடந்து கொண்டாலும்,அவரின் செய்கைகள் ஒவ்வொன்றிற்கும் பின் உள்ள காரணத்தை ஏற்கனவே ஆதித்யன் வாயிலாக அறிந்து கொண்டதால் அவரின் மீது மரியாதை உண்டு அவளுக்கு.

ஆதித்யனின் வீட்டில் மிச்சம் இருப்பது ஜெகன்நாதன் ,விஜயேந்திரன் மற்றும் மேனகா மட்டுமே…இவர்களில் யாரையும் அவளால் இப்பொழுது வரை புரிந்து கொள்ள முடியவில்லை.உண்மையைச் சொல்லப் போனால் அவர்களைப் புரிந்து கொள்ள அவள் முயற்சிக்கவில்லை என்பது தான் நிஜம்.அவளுக்குத்தான் விக்ரமாதித்யன் உடன் சண்டையிடவும்,அவனை ஏமாற்றி இங்கிருந்து தப்ப முயற்சி செய்யவுமே நேரம் சரியாக இருந்ததே…இதில் எங்கே மற்றவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வது.

இன்றைய பார்ட்டியில் நடந்த நன்மை என்னவெனில் மேனகாவை அன்று அறையில் வந்து சந்தித்த பொழுது தனிமையில் அவள் காட்டிய உடல்மொழிக்கும்,இன்று விஜயேந்திரன் அருகில் அவள் காட்டிய உடல்மொழிக்கும் அதிக வித்தியாசத்தை அவளால் உணர முடிந்தது.அது அத்தனையையும் தாண்டி அவள் வேண்டுமென்றே ஆதித்யனை நெருங்க முயல்வது போல ஒரு தோற்றம் அவளுக்கு ஏற்பட்டது.

இதற்குத்தான் ஆதித்யன் அவளைப் பற்றி எதுவுமே சொல்லாமல் நீயே பார்த்து தெரிந்து கொள் என்று சொன்னானோ என்ற எண்ணமும் தோன்றவே கணவன் மேல் காதல் பெருக்கெடுத்தது அவளுக்கு.அடுத்த வீட்டுப் பெண்ணைப் பற்றி வாய் வார்த்தையாகக் கூடத் தவறாகச் சொல்லத் தயங்கும் கணவனின் குணம் கண்டு மகிழ்ந்து தான் போனாள்.அதே சிந்தனையுடன் அறையை நோக்கி நடந்த அரசியுடன் மெல்ல பேச்சுக் கொடுத்தாள் வள்ளி.

“பெரியம்மா ரொம்ப நல்லவங்க…யார் மனசும் வருத்தப்படும் படி ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டாங்க.வேலைக்காரங்க எங்க கிட்டே கூட அதட்டி உருட்டி எல்லாம் வேலை வாங்க மாட்டாங்க.அவங்களுக்கு உங்கமேலே எதுவும் கோபம் எல்லாம் கிடையாது.அய்யா மேலே உள்ள வருத்தத்தை உங்ககிட்டே காமிச்சாங்க… மத்தபடி அவங்க ரொம்ப நல்லவங்க தான் சின்னம்மா”பணிவாகச் சொல்லிக் கொண்டே போனவள் அரசி தவறாக எடுத்துக் கொள்வாளோ என்று பயந்து பேச்சை அத்தோடு நிறுத்திக் கொண்டாள்.

“என் மாமியார்க்காக என்கிட்டயே வக்காலத்து வாங்கறியா?”கண்ணில் கேலிச் சிரிப்புடன் கேட்டாள் பொழிலரசி.

“அப்படி எல்லாம் இல்லை சின்னம்மா…இவ்வளவு நாள் அவங்க கூடவே இருந்த எனக்கு அவங்களைப் பத்தி நல்லா தெரியும்.உங்களுக்குத் தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லையே…அதான் சொன்னேன்”

“அவங்களைப் பத்தி எல்லாம் நானே தெரிந்து கொண்டேன் வள்ளி.உன்னைப் பற்றித் தான் எனக்கு இன்னும் சரியா தெரியலை.ஆரம்பத்தில் என்னைப் பார்த்தாலே முறைச்சுக்கிட்டே இருப்ப…அப்புறம் எப்படி என் மேலே இருக்கிற கோபம் போச்சு உனக்கு?”ஆர்வத்தை விழிகளில் தேக்கி வைத்தபடி கேட்டாள் பொழிலரசி.

ஒரு சில நிமிடங்களுக்கு மௌனத்தை மட்டுமே பதிலாகக் கொடுத்த வள்ளி ஒரு முடிவுக்கு வந்தவளாகத் தன் மனதில் இத்தனை நாளாக அரசியின் மீது இருந்த அத்தனை கோபத்தையும் ஒரு வார்த்தை விடாமல் அப்படியே ஒப்பித்து விட்டாள்.

அரசியே அதிர்ந்து போகும் அளவிற்கு இருந்தது.தன் மீது இத்தனை கோபத்துடன் இருந்து இந்தப் பெண் சமீப நாட்களில் அவளின் எல்லா ஏவல்களையும் முகம் சுளிக்காமல் செய்து வந்தாளே அதற்கு என்ன காரணம் என்று தோன்றவும் அதையும் மறைக்காமல் அப்படியே கேட்கவும் செய்தாள்.

“உனக்குக் கொஞ்சம் வாய்ப்பு கிடைத்து இருந்தா என்னைக் கொல்லவும் தயங்கி இருக்க மாட்ட அப்படி இருக்கையில் எப்படி இப்படி மாறினாய் வள்ளி?” தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் அவள் குரலில் வெளிப்படையாகத் தெரிந்தது.

“எங்க அய்யா தான் சொன்னார் சின்னம்மா…இனி எந்நேரமும் உங்களுடைய நிழலாக நான் இருந்து உங்களுக்கு எந்த வித ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு என்று என்னிடம் கேட்டார்.அவர் கண்ணசைவால் ஒரு வேலையைச் சொன்னாலே அதைத் தலையே போற காரியம் என்றாலும் அதைச் செய்து முடிப்பவள் நான்.அவர் வாயைத் திறந்து கேட்ட பிறகும்கூட அதை நான் எப்படிச் செய்யாமல் இருப்பேன் சின்னம்மா”நன்றி உணர்ச்சியில் அவள் குரல் லேசாக நடுங்கியது.

“இப்போ என்கிட்டே உன் மனசில் இருந்ததை எல்லாம் சொல்லிட்டியே…நான் இதை எல்லாம் சொல்லி உன்னை வேலையில் இருந்து அனுப்பி விட்டால் என்ன செய்வாய் வள்ளி”கூர்பார்வையுடன் கேட்டாள் அரசி.

“வேலைக்கு வராதேனு நீங்க ஒரு வார்த்தை சொன்னால் நான் வேலைக்கு வர மாட்டேன் சின்னம்மா…ஆனா உங்களை விட்டு பிரிந்து ஒரு அடி எடுத்து வைக்க மாட்டேன்.ஒரு நாளைக்கு ஒருவேளை சோறு போட்டாலும் போதும் அதைத் தின்றுவிட்டு அப்படியே இங்கே ஒரு மூலையில் இருந்து அய்யா சொன்னது போனது உங்களுக்குப் பாதுகாப்பாக உங்களையே சுற்றி வருவேனே அன்றி உங்களை விட்டு தனியே ஒரு அடி நகர மாட்டேன்”

அரசிக்கு உண்மையில் ஒரு நிமிடம் உடல் எல்லாம் சிலிர்த்துப் போனது. ‘என்ன மாதிரியான பெண்ணிவள்’ என்று. “உன்னை இந்த வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னால்?” கேள்வியாக அவள் முகம் பார்த்தாள்.

“உங்களைப் பாதுகாக்கும் வேலையை எனக்குக் கொடுத்தது எங்க அய்யா…அவர் சொல்லாமல் உங்களை விட்டு ஒரு இன்ச் நகர மாட்டேன்”

“அப்ப முதலாளியம்மா என் வார்த்தைக்குக் கொஞ்சமும் மதிப்பு கொடுக்க மாட்டாயா?”பொய்யான கோப முகமுடியை போட்டுக் கொண்டாள் அரசி.

“அப்படி எல்லாம் இல்லை சின்னம்மா…”பதட்டத்துடன் ஒலித்தது அவள் குரல்.

“பின்னே?”

“இது அய்யா சொன்ன வேலை…நீங்களே இப்படி ஏதாவது கோபப்பட்டு என்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னாலும் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாதுன்னு அய்யா சொல்லி இருக்கார்.அதனால…”

“அதனால?”

“நீங்களே சொன்னாலும் இந்த ஒரு விஷயத்தில் உங்க பேச்சை நான் கேட்க மாட்டேன்.கேட்கவே மாட்டேன்”பிடிவாதத்துடன் தலையை ஆட்டி மறுத்த வள்ளியை கூர்பார்வையுடன் நெருங்கிய அரசி சட்டென்று அவளைத் தோளோடு சேர்த்துக் கட்டிக் கொண்டாள்.

இதை எதிர்பார்க்காத வள்ளி அதிர்ச்சியில் ஒரு நிமிடம் உறைந்தவள் பின் கூச்சத்துடன் நெளிந்து அவளிடம் இருந்து தள்ளி நிற்க முனைந்தாள்.

“சின்னம்மா என்ன காரியம் செய்றீங்க? நான் வள்ளி…வீட்டு வேலைக்காரி…அய்யா இல்லை”

“வாயாடி…உன்னை “என்று லேசாகத் தலையைக் குட்டிய அரசி தன்னுடைய ஒற்றைக் கையை வள்ளியின் புறம் நீட்டினாள்.

“பிரண்ட்ஸ்?”

வள்ளி குதூகலத்துடன் தலையை ஆட்ட அவளுடைய கைகளை நெகிழ்ச்சியுடன் பற்றிக் கொண்டு வீட்டின் உள்ளே சென்றாள் அரசி.பாதி வழியில் மற்ற வேலையாட்களின் பார்வை தன் மீது பொறாமையுடன் படிவதை உணர்ந்த வள்ளிக்கும் உள்ளூர ஒருவித பெருமிதம் தோன்றியது.தூரத்தில் எங்கோ திலகவதியின் அதட்டல் குரல் கேட்கவும் திடுக்கிட்டு விரல்களை விலக்கிக் கொள்ள முனைந்தவளை கேள்வியாகப் பார்த்தாள் அரசி.

“திலகாம்மா குரல் கேட்குது சின்னம்மா…அவங்களுக்கு இதெல்லாம் பிடிக்காது அதான்”கைகளை உருவிக் கொள்வதிலேயே முனைப்பாக இருந்தாள் அவள்.

“அப்படியா ? அதையும் பார்த்து விடலாம் வா” என்று சொன்னவள் வீம்புக்கு என்றே வள்ளியின் கைகளை விடாது திலகவதியின் முன்பு வள்ளியுடன் கைகளைப் பிணைத்தவாறு போய் நின்றாள்.

வேலையாட்களை வேலை ஏவி கொண்டு இருந்த திலகவதி அங்கே கைகளைக் கோர்த்துக் கொண்டு இருந்த வள்ளியையும்,அரசியும் லேசான முகச்சுளிப்போடு பார்த்தார்.அவரின் பார்வையின் பொருளுணர்ந்து வள்ளி கைகளை விலக்கிக் கொள்ள முனைய அரசி விடாது கையைப் பற்றியபடியே வேண்டுமென்றே வள்ளியிடம் வம்பளத்துக் கொண்டு இருந்தாள்.

வீல் சேரை உருட்டியபடி அங்கே வந்த திலகவதி இருவர் கைகளையும் உற்றுப் பார்த்தபடி பேச ஆரம்பித்தார்.

“இன்னும் இந்த வீட்டு பழக்க வழக்கத்தை எல்லாம் கற்றுக் கொள்ளவில்லையா நீ?”

“ஏன்…அதெல்லாம் நான் கத்துகிட்டேனே?”உருவி கொள்ள முயன்ற வள்ளியின் கைகளை விடாமல் பற்றியபடி நிமிர்வாகவே பேசினாள் அரசி.

“பார்த்தால் அப்படித் தெரியலையே” திலகவதியின் பார்வை இப்பொழுதும் இருவரின் கைகளின் மேலேயே இருந்தது.

“அதெல்லாம் தெரிஞ்சு என்ன பிரயோஜனம்? இவ்வளவு பெரிய வீட்டில் என்கூடப் பேசிப் பழக யார் இருக்கா? ஏன் நீங்களே தான் இந்தக் கொள்ளைப் பேச்சு பேசறீங்களே…ஒருநாளாவது தம்பி பொண்டாட்டி என்ற எண்ணத்தோடு பாசமா என்கிட்டே பேசி இருக்கீங்களா? தனியாவே உட்கார்ந்து இருக்க நான் என்ன ஜெயில் கைதியா? நான் இந்த வீட்டு மருமகள்.எனக்கு பேச்சுத் துணைக்கு ஆள் தேவைப்பட்டது.அதான் இவளை சேர்த்துகிட்டேன்”அசராமல் பதில் சொன்னாள் அரசி.

“பேச்சு துணைக்கு வேணும்னா அவளைச் சேர்த்துக்கோ ஆனா தள்ளி நிறுத்தி பேசிப் பழகு”

“அதெல்லாம் முடியாது…இப்பதான் நானும் அவளும் பிரண்டு ஆனோம்…வேணும்னா நீங்க பேச்சுத் துணைக்கு வாங்களேன்.அவளை கழட்டி விட்டுடறேன்”கேலி போலக் கேட்டாலும் அதிலிருந்த தீவிரத்தை திலகவதியால் உணர முடிந்தது.அரசியை அழுத்தமான பார்வை ஒன்றை பார்த்தவர் வள்ளியை அங்கிருந்து நகருமாறு கண்களால் சைகை செய்ய வள்ளி தான் நகர முடியாமல் தவித்தாள்.அவள் எங்கே நகருவது?அரசி தான் இன்னும் அவள் கையை விட்ட பாடு இல்லையே…

“அவள் என்னை விட்டு நகர மாட்டாள்”தீர்மானமாக ஒலித்தது அரசியின் குரல்.

“நான் உன்னிடம் பேசணும் அரசி”இந்த ஒற்றை வார்த்தையில் வள்ளியின் கைகளை விடுவித்த அரசி வள்ளியின் புறம் திரும்பி, “ரொம்பத் தூரம் போயிடாதே…அப்புறம் உன்னைத் தேட முடியாது.இந்த அரண்மனை முழுக்க உன்னைத் தேடி அலைய எனக்குத் தெம்பு இல்லை புரிந்ததா?” என்று விளையாட்டு போல ஆள்காட்டி விரலை நீட்டி வள்ளியை எச்சரித்து விட்டே அனுப்பினாள்.

சிரித்துக்கொண்டே தலையாட்டியபடியே வள்ளி அங்கிருந்து நகர்ந்து சற்றுத் தொலைவில் நின்று கொள்ளத் திலகவதி தெளிவான குரலில் பேச ஆரம்பித்தார்.

“அவள் இந்த வீட்டு வேலைக்காரி அரசி…இப்படித்தான் மற்ற வேலையாட்கள் முன்னிலையில் நடந்து கொள்வதா?”

“அவளை என்னுடைய பாதுகாப்பிற்காக உங்கள் தம்பி என்னுடனே இருக்கச் சொல்லி இருக்கிறார்.வேண்டுமானால் அவரிடம் போய்ச் சொல்லுங்கள்”

“உன்னுடைய பாதுகாப்பிற்காக என்றால் அதில் தவறில்லை.இருந்தாலும் அவளைக் கொஞ்சம் தள்ளி நிறுத்தியே பழகு.அதுதான் நம்முடைய கௌரவத்திற்கு அழகு”

“அவ்வளவு கெளரவம் பார்க்கிற நீங்கள் என்னோடு ஒரு தோழி போலப் பேசிப் பழகத் தயாராய் இல்லாத பொழுது,தனிமையில் கிடந்து வாட வேண்டும் என்று எனக்கு என்ன அவசியம்”

“நான் உனக்கு நாத்தனார் என்பதை மறந்து விடாதே அரசி” லேசான கோபம் எட்டிப் பார்த்ததோ அவர் குரலில்.

சட்டென்று அரசி திலகவதியை சுற்றி சுற்றி வந்து எதையோ தேடினாள்.அவரின் தலையைக் கூடக் கைகளால் துளாவிப் பார்த்தாள்.

“ஏய்!என்ன செய்கிறாய் அரசி?”

“இல்லை நாத்தனார்ன்னு சொன்னீங்களே?அதுதான் உங்களுக்குத் தனியா கொம்பு எதுவும் முளைச்சு இருக்கான்னு பார்த்தேன்.”சிரியாமல் அவள் சொல்ல,இதழ்க்கடையில் தோன்றிய சிரிப்பை அடக்கப் போராடினார் திலகவதி.

“ரொம்பப் பேசுற அரசி…நீ செய்வதெல்லாம் நம்ம தகுதிக்கு ஏற்ற மாதிரி இல்லை…”மீண்டும் பழைய பல்லவியே அவர் பாட அலுத்துப் போன முகபாவனையுடன் அவரை நெருங்கிய அரசி வீல் சேரின் அருகில் நின்று அவரின் தோளோடு தோள் சேர்த்து நின்று கொண்டாள்.

“இதோ பாருங்க நாத்தனாரே… நான் ஊருக்குள்ள சிட்டுக்குருவி மாதிரி சுத்திக்கிட்டு இருந்தவ…என்னை இப்படி ஒரு வீட்டுக்குள் தனியா இருக்கச் சொன்னால் என்னால் எப்படி இருக்க முடியும்?இவ்வளவு பெரிய அரண்மனையில் என்னுடைய பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லையே.அது என் தவறா?ஏன் இவ்வளவு தூரம் இறங்கி எனக்கு அட்வைஸ் செய்யுற நீங்க இப்பக்கூட என்கிட்டே பேசிப் பழகத் தயாராய் இல்லாத பொழுது ஏன் இந்த வீண் பேச்சு”தன்னுடைய நிலையில் இருந்து கொஞ்சமும் இறங்கி வரத் தயாரில்லை என்பதை உணர்த்தினாள் அரசி.

“இப்ப என்ன தான்டி செய்யணும்ன்னு எதிர்பார்க்கிற”பற்களை நறநறவென்று கடித்துத் துப்பியவாறே கேட்டார் திலகவதி.

“நீங்க என்னோடு சரிக்குச் சமமா பேசணும்.இல்லேன்னா நான் இப்படித் தான் எல்லார் முன்னாடியும் நடந்துப்பேன்”

“எப்படியோ போய்த் தொலை” என்று சலிப்பாகச் சொன்னவரின் தோளை பாய்ந்து சென்று கட்டிக் கொண்டாள் அரசி.

“அடியே என்ன காரியம் பண்ற?முதல்ல தள்ளி நில்லுடி…”எரிச்சலோடு அவள் கைகளை விலக்கி விட முயன்றவாறே பேசினார் திலகவதி.

“தேங்க்ஸ் அண்ணி.ரொம்ப அலட்டிக்காதீங்க” என்றவள் அவளின் கன்னத்தில் ஒற்றை முத்தத்தைப் பதித்து விட்டே நகர்ந்தாள்.

“திமிரு பிடிச்ச கழுதை”என்று தெளிவாக முணுமுணுத்தபடியே கன்னங்களை அழுந்த துடைத்துக் கொண்ட திலகவதியை பார்த்துப் பழிப்பு காட்டிக் கொண்டே வள்ளியின் அருகில் சென்றவள் முன்னைப் போலவே அவளுடன் இணைந்து நடந்து திலகவதியின் அருகில் வந்து நின்று பேசலானாள்.

“உங்ககிட்டே சொன்ன மாதிரி மத்த வேலையாட்கள் முன்னிலையில் இனி அப்படி நடக்க மாட்டேன்.தனியா இருக்கும் போது இவளை விட்டு விலகவும் மாட்டேன்.ஏன்னா இவ என்னுடைய பிரண்டு” என்று சொன்னவள் திலகவதியின் பார்வையைக் கண்டும் காணாதவள் போல அங்கிருந்து நகர்ந்து நேரே தன்னுடைய அறைக்குச் சென்று விட்டாள்.

அறைக்குள் வந்ததும் தான் ஏதோ நினைவு வந்தவள் போலத் தலையில் குட்டிக் கொண்டவள் வள்ளியிடம் திரும்பி பேசினாள்.

“எனக்கு ஏதாவது குடிக்கணும் போல இருக்கு வள்ளி.கீழே போய்க் காபி போட்டு எடுத்துட்டு வர்றியா? கீழேயே உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன்.அண்ணி வந்து பேசவும் மறந்துட்டேன்.ப்ளீஸ்பா” என்று சொல்லவும், அதற்கு மேல் நிற்காமல் மானெனத் துள்ளிக் குதித்து ஓடினாள் வள்ளி.

அவள் அறையை விட்டு வெளியேறியதை உறுதிபடுத்திக் கொண்ட அரசி வேகமாக அறையை லாக் செய்து விட்டு கார்த்திக்கின் கார்டை தேடி எடுத்து அதில் இருந்த எண்ணுக்கு அழைத்தாள்.ரகசியக் குரலில் சொல்ல வேண்டியதையும் அவன் செய்ய வேண்டியதையும் மடமடவென்று சொல்லி முடித்தவள் வள்ளி கதவை தட்டும் சத்தம் கேட்டதும் போனை வைத்து விட்டு நல்ல பிள்ளை போல முகத்தை வைத்துக் கொண்டு வேகமாகப் போய்க் கதவை திறந்தாள்.

“காபி கொண்டு வந்தாச்சா? தேங்க்ஸ் வள்ளி”

“நான் மட்டும் வரலை சின்னம்மா…அய்யாவும் தான்” என்று சொன்னவள் தனக்குப் பின்னால் ஏதோ யோசனையுடன் நின்று கொண்டு இருந்த விக்ரமாதித்யனை கண்களால் காட்டினாள்.

“உள்ளே வாங்க என்ன யோசனை ? “ என்று கூறியபடியே கணவனின் கையைப் பிடித்து உள்ளே இழுத்து அங்கிருந்த சோபாவில் அமர வைத்து விட்டு வள்ளியின் கையில் இருந்த காபியை வாங்கி ஆதித்யனின் கைகளில் திணித்தாள்.

அலைந்து திரிந்து சோர்ந்து போய் வந்து இருந்தவனுக்கு அந்த நேரம் அது மிகவும் தேவையாய் இருக்க,மறுபேச்சுப் பேசாமல் காபியை குடித்து முடித்தான்.அவர்கள் பேச ஆரம்பிக்கும் பொழுதே அங்கிருந்து நகர்ந்து அரசிக்கு வேறு காபி எடுத்து வர வள்ளி கீழே சென்று விடக் கணவனின் அருகில் சோபாவில் அமர்ந்து கொண்டாள் அரசி.

“என்னங்க? என்ன ஆச்சு? போன இடத்தில் என்ன சொன்னாங்க?” இதமாகத் தோள்களை வருடியவாறே கேட்டாள்.

“குண்டு வெடித்த பொழுது அதில் இருந்த சில பாகங்கள் தரையில் சிதறி இருந்ததை எல்லாம் சேகரிச்சு அவங்க ஆய்வு நடத்தி இருக்காங்க…அப்போ அதில் அவங்களுக்கு ஒரு கை ரேகை கிடைச்சு இருக்கு.ஆனா அது யாரோடதுன்னு இப்போ எப்படிக் கண்டுபிடிக்கிறது? அன்னைக்கு விழாவுக்கு வந்த எல்லாரையும் தனித்தனியா கூப்பிட்டு அவங்க ரேகை எல்லாம் எடுக்கறதுங்கிறது அவங்களை அவமானப் படுத்துற மாதிரி ஆகிடும்.அதான் என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன்.இதுக்கு முதலே நம்ம வீட்டு ஆட்களே ஒத்துக்க மாட்டாங்க…”குழப்பம் இருந்தது அவன் குரலில்.

“என்கிட்டே ஒரு ஐடியா இருக்கு சொல்லட்டுமா?”தயங்கி தயங்கி கேட்டாள்.

“சொல்லுடா”உள்ளங்கையில் மனைவியின் வெண்பஞ்சு விரல்களைப் பதித்துக் கொண்டான்.

“வள்ளியை விட்டு இப்போ எல்லாருக்கும் ஜூஸ் கொடுக்கச் சொல்வோம்…அதில் உங்களுக்கு யார் மேல் எல்லாம் சந்தேகம் இருக்கோ அவங்க குடிச்ச கிளாசை மட்டும் பத்திரமாகத் தனியே எடுத்து விரல் ரேகை ஒத்துப் போகுதான்னு தனியா வச்சு சோதிச்சு பார்த்திடலாம்.”

“வாவ்…சுப்பர் ஐடியாடா பொழில்…எனக்கு இது தோணவே இல்லை பார்த்தியா?”

“அதுக்கு எல்லாம் கிட்னி வேணும் வாத்தியாரே”

“உன்னை…”என்று ஆவலும் குறும்பும் போட்டி போட அவளை நெருங்கும் சமயம் சரியாக அறைக்கதவு தட்டப்பட அவசர முத்தமொன்றை மனைவிக்குக் கொடுத்து விட்டு எழுந்து சென்று கதவை திறந்து வள்ளியை உள்ளே அழைத்து அவள் அடுத்துச் செய்ய வேண்டிய வேலையை விளக்கி சொன்னான்.வள்ளியும் குதூகலமாகத் தலையை ஆட்டி விட,அடுத்தடுத்துச் செய்ய வேண்டிய வேலைகளை மளமளவெனச் செய்து முடித்தான் ஆதித்யன்.

தடயவியல் அதிகாரி ஒருவரை மப்டியில் வேண்டிய உபகரணங்களுடன் வீட்டுக்கே வரவழைத்தான்.குடும்ப உறுப்பினர்கள் உட்பட அவன் சந்தேகிக்கும் ஒவ்வொருவரின் கைரேகையும் வள்ளியின் மூலம் கைப்பற்றி ஆய்வுகளை மேற்கொண்டனர்.விக்ரமாதித்யன் திடமாக நம்பினான்,குடும்ப உறுப்பினர்களில் யாரோ ஒருவரின் ஆதரவு இல்லாமல் வீட்டுக்குள் வெடிகுண்டை கொண்டு வந்து இருக்க முடியாது.

அப்படி இந்த வீட்டில் யாரும் இல்லையென்று ஆகிவிட்டால் இந்த வேலையைச் செய்தது பொழிலரசி ஊரில் யாரோ என்று முடிவுக்குத் தான் அவன் வர வேண்டி இருந்தது.எனவே அவன் சந்தேகப்பட்ட ஒருவரையும் விடாது எல்லாரின் கைரேகையின் மாதிரிகளையும் கைப்பற்றியவன் அந்த அதிகாரியின் மூலம் வீட்டிலேயே பரிசோதித்தான்.

ஆனால் கிடைத்த விடை தான் அவன் நெஞ்சில் யாரோ கூரிய கத்தியை சொருகியது போல வலியைக் கொடுத்தது.காரணம் அதில் இருந்த கைரேகை ஒத்துப் போனது விஜயேந்திரன் உடன்.இந்த அளவிற்குத் தம்பி இறங்கிப் போவான் என்பதை நம்ப முடியாமல் அப்படியே சோபாவில் சரிந்து விட்டான் விக்ரமாதித்யன்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 5]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here