Kadhale Nee Kaanala Tamil Novels 26

0
2015
Madhumathi Bharath Tamil Novels

ஒரு கையால் தலையைத் தாங்கியபடி அமர்ந்து இருந்த கணவனின் ஓய்ந்து போன தோற்றம் உள்ளுக்குள் பரிதாபத்தைத் தோற்றுவித்தது பொழிலரசிக்கு. ‘சற்று நேரம் முன்பு வரை இருவரும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம்.ஆனால் இப்பொழுது தடயவியல் ஆய்வாளர் சொன்னதைக் கேட்ட அந்த நொடி ஒடுங்கிப் போய்ச் சோபாவில் தொப்பென அமர்ந்தவர் இன்னும் அதே நிலையில் தான் அமர்ந்து இருக்கிறார்’ என்பதை எண்ணி துயர் அடைந்தாள் அரசி. வந்து இருந்த தடயவியல் அதிகாரியை இதைப் பற்றிப் பிறகு பேசலாம் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்து விட்டு வள்ளியையும் அங்கிருந்து அனுப்பி வைத்தாள்.

சோபாவில் அவனுக்கு அருகில் சம்மணமிட்டு அமர்ந்தவள் மெல்ல அவனது தலையை எடுத்து தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டாள்.ஆதரவாக அவனுடைய தலையைக் கோதியபடி இருந்தது அவள் கரங்கள்.தாய்மை உணர்வோடு மடி தாங்கிய தன்னவளின் செய்கையில் அவன் சேயானான்.

ஆண் பிள்ளை கண்ணீர் விடக்கூடாது என்பதைத் தனக்குத் தானே மீண்டும் மீண்டும் உருப் போட்டுக் கொண்டான்.அவனுடைய கண்ணீர் அவனுடைய அருமை மனையாள் பொழிலரசிக்காகச் சிந்தலாம்.ஆனால் அவளைக் கொல்ல முயன்றவன் அவனுடைய தம்பியே ஆனாலும் அவனுக்காக ஒற்றைத் துளிக் கண்ணீர் கூடத் தான் சிந்த கூட என்று உறுதி கொண்டான்.

நேரம் ஆக ஆக அவனின் உறுதி குறைந்து கொண்டே வருவதை அவனால் உணர முடிந்தது.பெற்ற தந்தை இறந்த பிறகு ,தம்பிக்கு அவனல்லவா தந்தை ஸ்தானத்தில் இருந்து எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தான்.அவனின் பாசம் கொண்ட மனம் பித்துப் பிடித்ததைப் போல ஆனது.ஒரு பக்கம் அவனது ஆருயிர் மனைவி, மறுபக்கம் பிள்ளை போலப் பாசத்தைக் கொட்டி வளர்த்த தம்பி…இந்த இருவரில் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் தவித்துப் போனான்.

சமீப காலமாகத் தம்பியின் போக்கு சரியில்லை என்பது அவன் அறிந்த ஒன்று தான். ஆனால் ‘சொந்த அண்ணியும்,அண்ணனும் வந்த காரில் குண்டு வைக்கும் தைரியம் அவனுக்கு எப்படி இருந்தது? அரசி மேல் கூட வெறுப்பு ஏற்பட்டு இருக்கலாம்.அவள் ஏழை வீட்டுப் பெண் என்பதால்…ஆனால் கூடப் பிறந்த அண்ணன் என்னையே பயமுறுத்தும் அளவுக்கு ஏன் இப்படி ஒரு வேலையைச் செய்தான்?’

ஏற்கனவே தடயவியல் அதிகாரிகள் சொன்னதைப் போல அந்த வெடிகுண்டு மற்றவர் உயிரை வாங்கும் அளவிற்கு சக்தியற்ற ஒன்று என்பதும் அவன் நினைவில் வந்து போனது. ‘அப்படி என்றால் அவனின் நோக்கம் தான் என்ன? அரசியை மிரட்டி என்னை விட்டு பிரித்து அனுப்புவதா?’அவனையும் அறியாமல் அவன் கைகள் உயர்ந்து அரசியை இறுக பற்றிக் கொண்டு அவள் மடியில் இன்னும் ஆழமாகப் புதைந்து கொண்டான்.

‘முதலில் இந்தக் குண்டை அவன் எப்பொழுது காரில் வைத்தான் என்று தெரிய வேண்டும்.அரசியும் நானும் ஊரில் இருந்து கிளம்பும் பொழுது எங்களுக்கே தெரியாமல் காரில் வைத்தானா? இல்லை மறுபடியும் நாங்கள் இருவரும் அதே காரைப் பயன்படுத்தி வெளியே எங்கேனும் செல்லக்கூடும் என்று நினைத்து வீட்டிற்கு வந்த பிறகு இதைச் செய்தானா?

எப்படி இருந்தால் என்ன…இந்த வீட்டில் அவனுடைய காரை நிச்சயம் யாரும் சோதனை செய்து இருக்க மாட்டார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை…அந்த தைரியம் தான் அவனுக்கு.இதை இப்படியே விட்டு வைத்தால் இத்தோடு அவன் நிறுத்திக் கொள்வானா? என்றால் அதுவும் சந்தேகமே!இந்த முயற்சி பலிக்கவில்லை என்று வேறு ஏதேனும் வேலையில் அவன் இறங்கி விட்டால்…’ எல்லாவாற்றையும் யோசித்து யோசித்து அவனுக்குத் தலை வலி வந்தது தான் மிச்சம்.

இரவு உணவை மறுத்து விட்டு தூங்கப் போனவனைச் சமாதானம் செய்து வள்ளியின் மூலம் உணவை அறைக்கே கொண்டு வர சொல்லி அவன் மறுக்க மறுக்க உணவை ஊட்டி விட்டாள் பொழிலரசி.தம்பியை பற்றிய கவலை ஒருபுறம் இருந்தாலும்,மனைவியின் இந்த மாற்றங்கள் விக்ரமாதித்யனுக்குச் சஞ்சலத்தை மட்டுமே கொடுத்தது.

“விஜயேந்திரன் இப்படிச் செஞ்சதால எ…என்னை விட்டுப் போயிடுவியா பொழில்?”கலக்கத்துடன் கேட்டான் விக்ரமாதித்யன்.

‘என்ன பேச்சு இது?’ என்று கண்களால் அவனை அதட்டியவளுக்குக் கணவனின் தெளிவற்ற மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.தம்பியிடம் இருந்து இப்படி ஒரு காரியத்தை அவன் எதிர்பார்த்து இருக்காததால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக இப்படிக் கலங்கிப் போய் இருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டாள்.

எப்பொழுதும் நிமிர்வாகவே பார்த்துப் பழக்கப்பட்ட கணவனின் இன்றைய நிலை அவளையுமே வருந்த செய்ய அவனை ஆறுதல் செய்வது ஒன்று மட்டுமே அப்பொழுது அவளுக்குத் தோன்ற கணவனின் அருகில் அமர்ந்தவள் மெல்ல அவனை அணைத்துக் கொண்டாள்.

விக்ரமாதித்யனும் அந்த நேரத்தில் அப்படி ஒரு அணைப்பு தேவையாய் இருக்க,அந்த அணைப்பு அதைத் தாண்டி அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னேறவில்லை.மனைவியை அணைத்தவாறே எழுந்தவன் கட்டிலில் அவளை அணைத்தவாறே சற்று நேரம் படுத்து இருந்தான்.தூக்கம் இல்லாமல் புரண்டவன் அரசியை விடுவித்து மறுபுறம் திரும்பி படுத்தான்.ஏனோ தனித்து இருப்பது போல ஒரு பிரமை ஏற்பட மீண்டும் அரசியின் புறம் திரும்பி அவளைக் கட்டிக் கொண்டான்.

அப்பொழுதும் உறக்கம் வந்த பாடில்லை.மெல்ல எழுந்தவன் அறையின் உள்ளே இருந்த அவனுடைய அலுவலக அறைக்குச் சென்றான்.கணவனின் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டே இருந்த பொழிலரசி,ஒன்றும் பேசாமல் அவன் பின்னாலேயே சென்று ‘என்ன தான் செய்யப் போகிறான்’ என்று வேடிக்கை பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள்.

அங்கு இருந்த மினி பிரிட்ஜை திறந்தவன் அதில் இருந்து மதுபான பாட்டிலை கைகளில் எடுக்கவும் வேகமாக அவனின் அருகில் சென்று அதைப் பிடுங்க முயற்சித்தாள்.

“இல்லை பொழில்…எனக்கு இப்போ போதை வேணும்…இல்லைன்னா என்னால நிம்மதியா தூங்க முடியாது.”என்று அழுத்தமாகச் சொன்னவன் அவளின் கைகளைத் தட்டி விட்டு பாட்டிலை திறக்க முயன்றான்.

“வேண்டாம் விக்கிரமா” அரசி அவன் கைகளைப் பற்றி அவனைத் தடுக்க முயல,ஆத்திரத்துடன் அவளைத் தள்ளி விட்டான் ஆதித்யன்.

“என்னைத் தடுக்காதே…இப்போ நான் என்னை மறந்து தூங்கணும்.அப்படி இல்லேன்னா நானே ஆத்திரத்தில் என் தம்பியை ஏதாவது செஞ்சுடுவேன்…என்னை தனியா விட்டுட்டு நீ போய்த் தூங்கு போ”

“உனக்குத் தேவை போதை தானே…அதுக்கு இந்தக் குடி அவசியம் இல்லை விக்கிரமா…என்னுடைய புருஷனின் பலமும்,பலவீனமும் நான் ஒருத்தியா மட்டும் தான் இருக்கணும்.இந்த பாட்டில் இல்லை.”என்று அழுத்தமாகச் சொன்னவள் அவன் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.

‘என்ன சொல்றா இவ’ என்று புரியாமலேயே அவளின் பின்னாலேயே சென்றவனைக் கட்டிலில் அமர வைத்து விட்டு தானும் அருகில் அமர்ந்து கொண்டு நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றினாள்.

“இந்த வார்த்தைகளை இனியொருமுறை நான் சொல்ல மாட்டேன்.அதனால நல்லா கேட்டுக்கோ.என்னுடைய புருஷனின் போதை நானாக மட்டும் தான் இருக்கணும்.என்னைத் தவிர வேறு எதுவும் உங்களுடைய பலவீனமாகவோ அல்லது உங்களின் ஆறுதலுக்குத் தேவைப்படுவதையோ நான் ரசிக்க முடியாது.இப்படி இந்த மாதிரி நம்ம வாழ்க்கை தொடங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை தான்.ஆனாலும் உங்களுக்காக …” என்று சொன்னவள் அறையில் ஒளிர்ந்து கொண்டு இருந்த விளக்கை அணைத்து விட்டு நைட் லேம்பை ஆன் செய்து விட்டு அவனின் அருகில் வந்து அமர்ந்தாள்.

முதலில் அவள் பேசத் தொடங்கும் போது குழம்பிய நிலையில் இருந்த விக்ரமாதித்யனுக்குக் கொஞ்சமும் புரியவில்லை. ‘ என்ன பேசுகிறாள் இவள்?’ என்று புரியாமல் தான் இவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான் விக்ரமாதித்யன்.

விளக்கை அணைத்த பிறகு இருளில் ஓவியம் போலத் தெரிந்த மனைவியின் வரிவடிவம் கண்டதும் அவனின் மன சஞ்சலங்கள் ஓரடி பின்னுக்கு நகர்ந்தது.மெல்ல அவன் அமர்ந்து இருந்த கட்டிலில் அவனுக்கு அருகில் நெருங்கி அமர்ந்தவள் அவனின் மேல் பூ மாலையாகச் சாய்ந்து கொண்டாள்.

அவனின் முகத்தை நடுங்கும் தன்னுடைய கைகளில் ஏந்திக் கொண்டாள்.அறையில் வெளிச்சம் இல்லாவிட்டாலும் அவளுடைய உடலில் ஓடும் நடுக்கத்தை அவன் அறிய மாட்டானா என்ன? அவளாகவே ஆதித்யனின் கரங்களை எடுத்து தன்னுடைய இடையில் படர விட்டவள் மெல்ல அவன் முகம் நோக்கி குனிந்து அவனின் நெற்றியில் தன்னுடைய முதல் முத்தத்தைப் பதித்தாள்.

ஆதித்யனின் உடலில் மின்னதிர்வு.அவனுக்கு இப்பொழுது தான் அவள் சற்று முன் பேசிய பேச்சிற்கான அர்த்தம் புரிந்தது. ‘என்ன செய்கிறோம் என்பதைத் தெரிந்து தான் செய்கிறாளா இவள்?’ என்று அவன் இருட்டில் அவள் முகத்தைக் காண முயல அதை உணர்ந்தவள் போல அவள் தன்னுடைய முகத்தை அவனுக்குக் காட்டவே இல்லை.

ஓரளவிற்கு மேல் அவனும் அதற்கு முயற்சி செய்யாமல் மனைவியின் கைகளில் தன்னை ஒப்புக் கொடுத்து விட்டுக் கண்களை இறுக மூடிக் கொண்டான்.ஏனோ கண்களைத் திறந்து அவளைப் பார்க்க அவனுக்குப் பயமாக இருந்தது.அவள் மனதில் தன் மேல் உள்ள வெறுப்பு அவன் அறிந்ததே.அப்படி இருக்கும் பொழுது இப்படித் தானாக அவள் நெருங்குகையில் அவளுடைய முகப் பாவத்தில் அந்த வெறுப்பை அவள் காட்டிவிட்டால்?

என்ன தான் கணவனின் மனதை திசை திருப்ப வேண்டும் என்ற முடிவுடன் இப்படி ஒரு காரியத்தில் இறங்கி விட்டாலும்,பொழிலரசியால் அதை மேற்கொண்டு செய்ய முடியவில்லை.கணவனே ஆனாலும்,இன்னும் முறையாகத் திருமண வாழ்வை தொடங்கி இராத பட்சத்தில் தானாகவே வலிய சென்று இப்படி ஒரு காரியத்தைச் செய்வதற்கு உள்ளுர அவள் மிகவும் வருந்தினாள்.

அதற்காக அவள் கணவனை வெறுக்கிறாள் என்று அர்த்தம் இல்லை.எந்த பெண்ணிற்கும் இது போன்ற விஷயங்களில் கணவன் தானாகத் தன்னை நெருங்குவதைத் தான் விரும்புவாள்.அப்படி இல்லாமல் பெண்மைக்கே உரிய தன்னுடைய கூச்சத்தை விட்டு அவனை நெருங்க அவளால் முடியவில்லை.அதே சமயம் எங்கே அவனை விட்டால்,மறுபடியும் குடிக்கப் போய் விடுவானோ என்ற பயம் அவளை ஆட்க்கொள்ள தயங்கி தயங்கி அவனிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கத்தைக் கூட்டினாள்.

நெற்றியில் தொடங்கிய அவளது முத்தம்,அவனின் கன்னம்,கழுத்து என்று ஒவ்வொரு இடமாகப் பயணிக்க,கைகளை இறுக மூடி தன்னைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளப் போராடிக் கொண்டு இருந்த ஆதித்யனுக்கு,அவள் அடுத்து தன்னுடைய இதழை நெருங்கப் போவதை உணர்ந்து தன்னையும் மீறி கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான்.

அவள் கண்களைத் திறக்காமல் மெல்ல உதடு துடிக்க ஆதித்யனை நெருங்கும் கோலம் அவனின் மனதில் ஜால வித்தை புரிய அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல் அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.அவன் என்ன மரக்கட்டையா என்ன? உயிரும் உணர்வும் உள்ள மனிதன்.கட்டிய புது மனைவி,ஆசையோடு தன்னை நெருங்கும் பொழுது எவ்வளவு நேரம் தான் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

தனக்கு அருகில் மனைவி இருந்த கோலம் அவன் நெஞ்சில் தீ மூட்ட நொடியும் தாமதிக்காமல் செயலில் இறங்கினான். அவளின் செய்கைகள் இப்பொழுது அவனுடையது ஆகிப் போனது.அது நேரம் வரை அவன் அமைதியாக இருந்த வரை அவளுக்கு இருந்த தைரியம் அவனின் வேகத்தில் பொழிலரசியை விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனது.

காற்றாகத் தன்னைத் தீண்டுவான் என்று அவள் எதிர்பார்த்து இருக்க,அவன் சூறாவளியாக மாறி அவளைச் சுழன்று அடித்துக் கொண்டு இருந்தான்.மழைச்சாரலாக மெல்லத் தன்னை நனைத்துப் போவான் என்று அவள் எதிர்பார்த்து இருக்க,அவன் கரை உடைத்து காற்றாற்று வெள்ளமாய் மாறி அவளைத் திணறடித்தான்.

அவனின் வேகமான ஆக்கிரமிப்பில் அச்சம் கொண்டவள் அவனை விலக்கித் தள்ள முனைய , அதை எல்லாம் உணரும் நிலையில் அவன் இல்லை.மென்மையாகத் துவங்கிய இதழ் தீண்டல்,வன்மையையும் கடந்த ஒரு நிலைக்குச் சென்று கொண்டு இருந்தது.அவனாக அவளை விடுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை உணர்த்தும் வகையில் நேரம் ஆக ஆக அவனின் பிடியும்,நெருக்கமும் கூடியதே தவிரக் குறையவில்லை.எங்கே அவளைப் பிரிந்தால் தம்பியின் நினைவுகள் ஆக்கிரமித்து விடுமோ என்று அஞ்சியவன் போல மேலும் மேலும் அவளுடன் நெருக்கத்தைக் கூட்டிக் கொண்டே போனான்.

ஆதித்யனிடம் இருந்து இவ்வளவு தீவிரத்தை எதிர்பார்க்காத அரசி மிரண்டு போய்க் கண்களைத் திறந்து மெல்ல அவனைப் பார்த்தாள்.அவனோ அவள் பார்வையை உணரும் நிலையில் இல்லை.அவன் மிகத் தீவிரமாகப் பஞ்சு மிட்டாயை ரசித்துச் சாப்பிடும் குழந்தையைப் போலத் தன்னுடைய வேலையில் மும்மரமாக ஈடுபட்டு இருந்தான்.நொடிகளைக் கடந்து நிமிடங்களைக் கடந்தும் அவனுடைய இதழ் வேட்கை தீரும் வகையை அறியாமல் ஒற்றை முத்தத்தின் வழியில் அவளை உயிர் வரை தீண்டிக் கொண்டு இருந்தான்.

சட்டென்று அரசியின் மூளையில் மின்னல் போல ஒரு காட்சி மின்னி மறைந்தது.ஆதித்யன் ஈரத் தலையில் இருந்து சொட்டு சொட்டாக நீர் வழிய அவளின் இதழ்களை நெருங்கும் காட்சி.ஒரே நொடி தான்.அடுத்த நொடி அவளின் தலையில் ‘சுளீர்’ என்று வலி ஏற்படத் தன்னையும் அறியாமல் அவள் கைகள் இரண்டும் அவளது தலையைத் தாங்கிக் கொண்டது.

ஆதித்யன் இன்னும் அவளின் இதழ் முத்தத்தில் இருந்தே மீளாமல் இருக்க,அவளின் நிலையை அவன் உணரவில்லை.அவன் தொடர்ந்து யுத்தத்தை நடத்திக் கொண்டு இருக்க,சற்று நேரம் முன்பு வரை பொழிலரசியின் மேனியில் இருந்த மெல்லிய நடுக்கம் இப்பொழுது காணாமல் போய் விட்டதை அறிந்தவன் எதேச்சையாகத் தான் விழியைத் திறந்து அவளைப் பார்த்தான்.பார்த்த மாத்திரத்தில் ஏதோ சரியில்லை என்று தோன்ற சட்டென்று அவளை விலக்கியவன் எழுந்து சென்று அறையின் விளக்கை போட்டான்.

இரு கைகளாலும் தலையைத் தாங்கியபடி அவள் அமர்ந்து இருந்த கோலம் அவளின் நிலையைப் பறைசாற்ற தன்னுடைய மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டவன் வேகமாக அவளின் அருகில் போய் நின்று அவளின் தோள் தொட்டு உலுக்கினான்.

ஆதித்யனையோ அவனது தொடுகையையோ கொஞ்சமும் உணரும் நிலையில் இல்லை பொழிலரசி.தாங்க முடியாத தலைவலியில் தவித்தவள் வேதனையில் முகம் சுளித்தவாறே கட்டிலில் அப்படியே மயங்கி சரிந்தாள்.

இது ஒரு புறம் இருக்க,அங்கே ஊரில் இருந்த கயலுடன் கார்த்திக் போனில் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டு இருந்தான்.அவளை ஒரு மூச்சு திட்டித் தீர்த்தான். அடுத்துப் பரசுராமனை அழைத்துப் பொழிலரசி தனக்குப் பேசியதையும் அவள் செய்யச் சொன்ன காரியங்களையும் உடனே செய்து முடிக்குமாறு சொன்னவன் போனை வைத்து விட்டு ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டான்.

‘கடவுளே எல்லாம் சரியாக நடந்து முடிய வேண்டும்’ என்ற வேண்டுதலை கடவுளிடம் வைத்தவன் ஊருக்கு கிளம்புவதற்காக எல்லாப் பொருட்களையும் எடுத்து அடுக்கி வைக்க ஆரம்பித்தான்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 5]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here