Kadhale Nee Kaanala Tamil Novels 28

1
2285
Madhumathi Bharath Tamil Novels

கார் பயணம் முழுவதும் அரசியும் ,வள்ளியும் ஒருவருக்கு ஒருவர் சலசலத்தபடி வந்து கொண்டே இருந்தனர்.ஆதித்யனின் சிறு வயது குறும்புகளைச் சொல்லி வள்ளி அரசியை வாரிக் கொண்டு இருக்க,பதிலுக்கு அரசியின் சிறு வயது குறும்புகளை எல்லாம் சொல்லி பயணத்தையே அழகாக மாற்றி விட்டு இருந்தார் பரசுராமன்.அரசியின் கடந்த கால நிகழ்வுகளைக் கேட்டறிந்த வள்ளிக்கு அரசியின் மீது பரிதாபம் தான் ஏற்பட்டது.அதுவும் தாய் இல்லாமல் அவள் வளர்ந்த விதம்,தந்தை மரணப் படுக்கையில் இருக்கும் பொழுது விருப்பமே இல்லாமல் நடந்த அவளது திருமணம் என்று கேட்ட பிறகு அவளின் மனதை சோக மேகம் சூழ்ந்தது.அரசியும் தன்னைப் போலவே தாய்,தந்தை இல்லாதவள் என்ற எண்ணம் தோன்றியதாலோ என்னவோ அவளுக்கு அரசியின் மீது கூடுதலான அக்கறை ஏற்பட்டுப் போனது.

வழியில் ஆங்காங்கே இறங்கி டீ, காபி என்று குடித்த பொழுதும் நன்றாக அரட்டை அடித்துக் கொண்டு இருந்த வள்ளியின் முகம் சட்டெனத் தீவிர பாவத்திற்கு மாறியது.

“என்ன ஆச்சு வள்ளி?ஏன் ஒரு மாதிரி ஆயிட்டே?”

“இல்லை சின்னம்மா…ஒரு மணி நேரம் முன்னாடி நாம வண்டியை டீ குடிக்க நிறுத்தின பொழுது கூட அங்கே கொஞ்ச தூரத்தில் ஒரு வண்டி நிற்குதே.அதைப் பார்த்தேன்.இப்பவும் அதே வண்டி…நம்மளை யாரும் பின் தொடர்ந்து வர்றாங்களோன்னு சந்தேகமா இருக்கு.அதான்”லேசான திகில் அவள் குரலில்.

“எந்த வண்டி வள்ளி?”அரசியின் குரலில் அச்சம் அப்பட்டமாய்த் தெரிந்தது.

“உடனே பார்க்காதீங்க…அங்கே கொஞ்சம் தள்ளி நிற்கிறது பாருங்க…வெள்ளை கலர் கார்.வண்டி நம்பர் கூட 7623…அதுதான்”

அரசியும் எதேச்சையாய் பார்ப்பதைப் போலப் பார்த்தாள்.சற்றுத் தொலைவில் இருந்ததால் உள்ளே இருக்கும் ஆட்களின் முகம் தெரியவில்லை.உள்ளுக்குள் பயந்தாலும் வெளியே தைரியமாகக் காட்டிக் கொள்ள முனைந்தாள்.

“சும்மா நீயா எதையாவது கற்பனை செஞ்சுக்காதே வள்ளி…அவங்களும் நம்மைப் போலவே டீ குடிக்க நிறுத்தி இருக்கலாம் இல்லையா?”

“டீ குடிக்க நிறுத்தினா,இறங்கி டீ குடிக்கணும் இல்லை.அவங்க காரில் இருந்து யாரும் இறங்கவே இல்லையே”தன்னுடைய சந்தேகத்தைச் சொன்னாள் வள்ளி.

அப்பொழுது தான் அரசியும் அதைக் கவனிக்க,ஒருவேளை மறுபடியும் விஜயேந்திரன் தன்னுடைய உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வேலையில் இறங்கி விட்டானோ என்றே எண்ணியவள் பயந்து தான் போனாள்.ஆனால் அதற்காக எடுத்த காரியத்தை முடிக்காமல் ஊருக்கு போக முடியாது என்பதை உணர்ந்தவள் தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டு வள்ளிக்கும் தைரியம் அளித்தாள்.

“அதெல்லாம் ஒண்ணும் பயப்பட வேண்டாம் வள்ளி…ஊருக்குப் பக்கத்தில் வந்தாச்சு…இனி வரிசையா ஊருங்க தான்.நமக்கு எதுனா ஆச்சுன்னா இவங்க தப்பிச்சு போக முடியாது”

“அது எப்படிம்மா அப்படிச் சொல்றீங்க?”வள்ளியின் கண்களில் பயம் இன்னும் முழுதாக அகலவில்லை.

“இது என்ன சிட்டியா? பக்கத்துக்கு வீட்டில் நடக்கிறது கூடத் தெரியாம இருக்கிறதுக்கு….சின்ன பிரச்சினைனா கூட ஊரே ஒண்ணு சேர்ந்து மொத்திடும்.அதனால பயப்படமா வா”அசால்ட்டாகப் பேசியவளை கண்டு வள்ளியின் முகம் ஓரளவிற்குத் தெளிந்தது.

“எதுக்கும் அய்யாக்கிட்டே ஒரு வார்த்தை சொல்லிடறேன் சின்னம்மா”பேசியபடியே அவளின் போனை எடுத்தவளின் செயலில் அதிர்ந்து போனாள் அரசி.

“அச்சோ…என்ன காரியம் பண்ற வள்ளி…இதெல்லாம் சின்ன விஷயம்.இதைப் போய் அவருக்குச் சொல்லி அவரை டென்ஷன் செய்யாதே”எங்கே இவள் போன் செய்து சொல்லப் போக,ஆதித்யன் திரும்பி வருமாறு சொல்லி விடுவானோ என்று பயந்தாள் அரசி.

“நல்லா இருக்கே…இதை சொல்லாம விட்டு உங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தா நாளைக்கு யார் அய்யாக்கிட்டே திட்டு வாங்குறது?இதுக்குத்தான் உன்னைத் துணைக்கு அனுப்பினேனான்னு கேட்டு அய்யா என்னை ஒரு வழி ஆக்கிடுவார்.நான் சொல்லத் தான் போறேன்”தன் கடமையில் இருந்து மீற மாட்டேன் என்று கடமை,கண்ணியம் கட்டுப்பாடு ரேஞ்சுக்கு பேசியவளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் விழித்தாள் அரசி.

“என்ன வள்ளி நீயும் என்னைப் புரிஞ்சுக்காம பேசினா எப்படி?எங்க ஊரைப் பார்க்கணும்னு ஆசையா போய்ட்டு இருக்கேன்.நீ மட்டும் இப்போ போன் செஞ்சு சொன்னா,உங்க அய்யா திரும்பி வர சொல்லிடுவார்.ப்ளீஸ்! ப்ளீஸ்! எனக்காக அவர் கிட்டே சொல்லாம இரு”வள்ளியிடம் இந்த விஷயத்தில் அதிகாரமாகப் பேசி பணிய வைக்க முடியாது என்பதை உணர்ந்து தான் கெஞ்சலில் ஈடுபட்டாள் அரசி.

“அதெல்லாம் சரி தான்.ஆனா…”

“வேணும்னா ஊருக்கு போனதுக்குப் பிறகு இதைபத்தி அவர்கிட்டே சொல்லிடு…இப்போ வேணாம்”இப்போதைக்குத் தள்ளிப் போட எண்ணி அப்படிச் சொல்லி வைத்தாள் அரசி.அரைகுறை மனசோடு வள்ளியும் சம்மதித்து விட,அரசிக்கு அப்பொழுது தான் போன உயிர் மீண்டது.உள்ளுக்குள் அந்தக் கார்காரர்களைப் பற்றிய எண்ணம் ஒருபுறம் பயத்தைக் கொடுத்தாலும்,அதை விட இப்பொழுது தன்னுடைய ஊருக்குள் அவள் போயாக வேண்டிய கட்டாயம் மற்ற காரணங்களைப் பின்னுக்குத் தள்ளியது. ‘என்ன நடந்தாலும் சரி…ஊருக்குப் போய்த் தான் தீருவேன்’ என்று சூளுரைத்துக் கொண்டாள் பொழிலரசி.

உள்ளுக்குள் இருந்த பயத்தைக் காட்டிலும்,சொந்த ஊருக்கு போயே ஆக வேண்டும் என்ற வேகம் அவளை உந்த கார் டிரைவரிடம் கொஞ்சம் வேகமாகக் காரை ஒட்டும்படி பணித்து விட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்கள்.அடிக்கடி காரில் இருந்தபடியே அந்தக் கார் அவர்களைப் பின் தொடர்ந்து வருகிறதா என்று பார்த்துக் கொண்டே வந்தவளுக்கு வள்ளி சொன்னது உண்மை தான் என்பது புரிந்தும் போயிற்று.

‘அப்படி என்ன பிடிவாதம் உனக்கு…பேசாமல் விக்ரமாதித்யனிடம் திரும்பி விடு’ என்று எச்சரித்த உள்மனதை எரிச்சலுடன் ஒதுக்கினாள் பொழிலரசி.

‘ஆமா…அதுக்குதான் இப்படி எல்லா ஏற்பாடும் செஞ்சு இங்கே கிளம்பி வந்து இருக்கேன் பார்.என்னுடைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரியும் வரை நான் ஓய மாட்டேன்.தலையின் உள் பகுதியில் சில நேரங்களில் தோன்றி மறையும் காட்சிகள் கொடுக்கும் வேதனையும்,அதிர்ச்சியும் இனியும் என்னால் தாங்க முடியாது.

என்னுடைய கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமல் நான் என்னுடைய ஊரை விட்டு திரும்பி வரப் போவதில்லை’ என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டவள் ஊர் நெருங்கும் வரை முகத்தில் எந்தச் சலனத்தையும் காட்டிக் கொள்ள வில்லை.கொஞ்சம் வேகமாக ஓட்டி வந்த காரணத்தினாலோ என்னவோ மதியமே ஊருக்கு வந்து விட்டார்கள் அனைவரும்.அவர்களைப் பின் தொடர்ந்து வந்த கார் உட்பட…

அவளின் வருகைக்காகவே காத்திருந்த சுசீலாவை பார்த்துச் சந்தோசமாகச் சிரித்தவள்,அவர்களுக்கு அடுத்து நின்ற கயலைப் பார்த்து பட்டும் படாமலும் சிரித்து வைத்தாள்.இவளின் முக மாற்றங்களைக் கவனிக்காமல் சுசீலா எப்பொழுதும் போல லேசாகப் புன்னகைக்க முயன்றார்,கயலோ ஆர்ப்பாட்டமாகத் துள்ளி குதித்தபடி தோழியை வரவேற்றாள்.

இவர்கள் வரும் தகவல் ஏற்கனவே தெரிந்து வைத்து இருந்ததால் சுசீலா எல்லாருக்கும் சுவையான மதிய உணவை தயாரித்து வைத்து இருந்தார்.அரசியின் விருப்ப உணவுகளான கம்மாய்க்கரை மீன் வறுவலும்,குரும்பாட்டுக் குழம்பும்,முதலில் பரிமாறப் பட வெகுநாட்களுக்குப் பிறகு திருப்தியாக உண்டாள் அரசி.என்னதான் ஆதித்யனின் வீட்டில் விதவிதமான உணவு வகைகள் இருந்தாலும்,அது எதுவுமே காரமாக இருக்காது.பிறந்தது முதல் காரமாகவே சாப்பிட்டு வளர்ந்த அரசிக்கு இன்று பழையபடி சொந்த ஊர் உணவை ருசிக்கும் பொழுது வயிறோடு சேர்ந்து மனதும் நிறைந்தது.

இதற்குமுன் ஆதித்யனோடு இங்கே அவள் வந்து இருந்த பொழுது புதுமணத் தம்பதிகளுக்கு ஆக்கிப் போடும் விருந்து என்பதால் அவர்களுடைய ஊர் வழக்கப்படி சைவம் தான் செய்து போட்டனர்.அதுவும் இல்லாமல் அன்று ஆதித்யனுக்காகவோ என்னவோ சாப்பாட்டில் அளவான காரம் மட்டும் இருந்தது.இன்று அதில் இருந்த காரத்தில் உச்சிமுடி நட்டமாக நிற்பதையும் பொருட்படுத்தாமல் ரசித்துச் சாப்பிட்டு முடித்தாள் அரசி.வள்ளியும்,நர்ஸும் இரண்டு வாய்க்கு ஒருமுறை தண்ணீர் குடித்து ஏதோ பேருக்குக் கொஞ்சம் கொறித்தவர்கள் அதற்கு மேலும் காரம் தாங்காமல் தயிர் சாதம் வாங்கி உண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

உண்டு முடித்ததும் நர்சுக்கு தங்குவதற்கென்று அந்த ஊரிலேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்து இருந்த வீட்டிற்கு அவர் சென்று விட,அரசியும் வள்ளியும் தூங்கி விட்டனர்.அரசிக்கு உண்மையில் தூக்கம் வரவில்லை தான்.ஆனால் வலுகட்டாயமாக அவள் தூங்க முயற்சி செய்தாள்.எப்படியும் கார்த்தி வந்த பிறகு அவளுக்கு ஓய்வு கிடைப்பது என்பது அரிது.

அதுவும் இல்லாமல் எவ்வளவு நேரம் தான் கயலிடம் பேசுவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்க முடியும்.கயலிடம் அவள் தனித்துப் பேச விரும்பினாள்.அவளின் மனதை அரித்துக் கொண்டு இருக்கும் கேள்விகளுக்குக் கயலிடம் மட்டுமே சரியான பதில் கிடைக்கும் என்று அவளுக்குத் தெரியும்.அதை மற்றவர் முன் கேட்க விரும்பாமல் தான் முடிந்தவரையில் அவர்களுக்கான தனிமையான நேரத்திற்காக அவள் காத்திருக்கத் தொடங்கினாள்.

இப்பொழுது காலையில் வந்து இருந்த ஊர் மக்களில் பெரும்பான்மையானோர் வீடு நோக்கி சென்று இருக்க,மீதம் இருந்த ஒரு சிலரும் அவள் தூங்கி விட்டதாக நம்பி தங்களது வீட்டை நோக்கி கிளம்பிக் கொண்டு இருந்தனர்.இனி மீதம் இருப்பது சுசீலாவும்,பரசுராமனும் மட்டும் தான்.என்ன தான் பெற்றவர்களே ஆனாலும் அவர்கள் முன்னிலையில் கூட அவளிடம் பேச பொழிலரசி தயாராக இல்லை.எனவே இருவர் மட்டும் தனித்து இருக்கும் சந்தர்ப்பத்திற்காகக் கயலின் மேல் இருந்த ஆத்திரத்தை கட்டுபடுத்திக் கொண்டு காத்திருக்கத் தொடங்கினாள் பொழிலரசி.

தூக்கம் வராவிட்டாலும் தூங்குவது போல நடிப்பது மிகுந்த சிரமமாய் இருக்க,புரண்டு புரண்டு படுத்தவள் போன் ஒலிக்கும் சத்தம் கேட்டு பட்டென்று எழுந்து அமர்ந்தாள். ‘யாரோட போன் இது? என்கிட்ட தான் எந்தப் போனும் இல்லையே?’ என்று எண்ணியவள் கண்களாலேயே அறையைச் சுற்றி நோட்டம் விடப் போன் வள்ளியின் பையில் இருந்து ஒலிப்பது தெரிந்து அதை எடுக்க முயற்சிக்கும் முன் அருகில் தரையில் படுத்து உறங்கிக் கொண்டு இருந்த வள்ளியே எடுத்துப் போனை பேசினாள்.

“அய்யா தான் சின்னம்மா”முகம் எல்லாம் பல்லாகப் பேச ஆரம்பித்தாள்.

“ம் நல்ல படியா வந்துட்டோம் அய்யா…”

“…”

“அது…வந்து அய்யா…” என்று இழுத்தவள் ஓரக்கண்ணால் அரசியைப் பார்த்தவாறே வழியில் தங்களைப் பின் தொடர்ந்து ஒரு கார் வந்த விவகாரத்தைப் பொழிலரசி சொல்ல வேண்டாம் என்று எவ்வளவோ சைகை செய்தும் சொல்லி விட்டாள்.

‘உன் எஜமான விசுவாசத்தில் ஒரு லாரி பெட்ரோலை ஊத்திக் கொளுத்த’ உள்ளுக்குள் வள்ளியை நன்றாகத் திட்டிக் கொண்டு இருந்தாள் பொழிலரசி.

முகம் எங்கும் மகிழ்ச்சியில் பூரிக்கப் போனை அரசியிடம் கொடுத்து விட்டு நாகரீகமாக அறையை விட்டு வெளியே சென்று விட்டாள் வள்ளி.

‘போனில் எப்படிக் காய்ச்சி எடுக்கப் போகிறானோ? ஒருவேளை உடனே கிளம்பி உடனே வர சொல்லுவானோ?’ என்ற பதட்டத்துடன் போனை வாங்கிப் பேசினாள் பொழிலரசி.

“ஹலோ”

“ஹலோ”கம்பீரமாக ஒலித்த கணவனின் குரல் அவளின் நெஞ்சை அள்ளிச் சென்றது.

“ஊருக்குப் போனதும் ஒரு போன் பண்ணி எனக்குத் தகவல் சொல்லனும்னு கூட உனக்குத் தோணலியா?அதுக்குள்ளே என்னை மறந்தாச்சா?”அவன் குரலில் இருந்தது குற்றசாட்டா? வருத்தமா? அவளுக்குப் புரியவில்லை.

“அதெல்லாம் இல்லை…ரொம்ப நாள் கழிச்சு அத்தை கையால் கார சாரமா எங்க ஊர் கம்மா மீனை ஒரு பிடி பிடிச்சேன்.அதான் தூக்கம் வந்துடுச்சு.”

“சாப்பாட்டு ராமி…இங்கே இருக்கும் போது என்னவோ சாப்பிடவே தெரியாத மாதிரி சாப்பிடுவ…ஊருக்குப் போனதும் வெளுத்துக் கட்டற போல…”அவன் குரலில் லேசான கேலி.

“அய்யே…அந்த சாப்பாட்டை ரசிச்சுச் சாப்பிட்டாலும்” நொடித்துக் கொண்டாள்.

“அடிப்பாவி…நம்ம வீட்டு சாப்பாட்டுக்கு என்ன குறை?”

“அது நல்லாத் தான் இருக்கும்.ஆனா நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவ…மிளகாயை அப்படியே ஒரு கை அள்ளி அம்மியில் அரைச்சுக் குழம்பு வச்சு சாப்பிடறவ.அங்கே நம்ம வீட்டில் சாப்பாட்டில் காரம்னு பேருக்குக் கூட இருக்காது.அதெல்லாம் என் நாக்குக்கு உணக்கையா இல்லை அதான்”

“ஓஹோ…” என்றவன் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் பேச்சை தொடர்ந்தான். “யாரோ பின் தொடர்ந்து வந்ததா வள்ளி சொன்னாளே”

“ஆ…ஆமா…ஆனா நாங்க பத்திரமா தான் இருக்கோம்.ஊருக்குள்ள எங்களுக்கு எந்த ஆபத்தும் வராது…”படபடவென்று பேசினாள் அரசி.

“எதுக்கு இவ்வளவு வேகம்…அங்கே இருக்க வேண்டாம்னு நான் சொல்லிடுவேன்ன்னு நினைக்கறியா?அப்படி நான் நினைச்சு இருந்தா உன்னைப் போகவே அனுமதிச்சு இருக்க மாட்டேன்.முதல்ல ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோ.கார்ல வந்தவங்க நான் அனுப்பின ஆட்கள்…”

“என்னது….”

“ஏன்டி…எட்டு ஊருக்கு கேட்கிற மாதிரி கத்தி வைக்கிற?பின்னே உன்னைத் தனியா அங்கே அனுப்பி வச்சிட்டு வேடிக்கைப் பார்ப்பேன்னு நினைச்சியா?”

“என்னைச் சந்தேகப்படறீங்களா?”அவள் குரலில் லேசான கண்ணீர் சாயல்.

“த்ச்! இதென்ன பேச்சு பொழில்…டாக்டர் உன்னைக் கொஞ்ச நாள் இந்தச் சூழ்நிலையில் இருக்க வேண்டாம்னு சொன்னார்டி.அதான் உங்க மாமா வந்து கேட்டதும் அவர் வீட்டுக்கு உன்னை அனுப்பி வச்சேன்.நீயும் அவரைப் பார்த்ததும் சந்தோசமா குதிச்சியா? அதான்”தன்னுடைய செயலுக்கு விளக்கம் கொடுத்தான் ஆதித்யன்.

“அப்புறம் எதுக்குப் பின்னாலேயே ஆட்களை அனுப்பி வச்சீங்களாம்”ஆற்றாமை இன்னும் மிச்சம் இருந்தது அவன் குரலில்.

“வேற என்னடி செய்யச் சொல்ற?நான் சாதாரணப் பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு இருந்தேன்னா பரவாயில்லை.பெரிய சிபிஐ வேலை பார்க்கிறவளை இல்ல கல்யாணம் செஞ்சு தொலைச்சு இருக்கேன்.நீ பாட்டுக்கு அங்கே போனதும் புலன் விசாரணை செய்றேன்னு கிளம்பிட்டா என்ன ஆகுறது…அதான்”

‘ஓஹோ…எங்கே நான் அப்பாவின் மரணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு விடுவேனோ அப்படின்னு அங்கே இருந்துக்கிட்டே என்னை வாட்ச் பண்ண ஆள் நியமிச்சு இருக்கியா நீ…’ என்று எண்ணியபடியே பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டே அவனிடம் பேசினாள்.

“இந்தக் கருமத்துக்கு நீங்களும் கூடவே வந்து இருக்கலாம்”

“ஹ்ம்ம்..எனக்கும் ஆசை தான் பொழில்…”அவன் குரல் கரகரப்பாக ஆரம்பித்துக் கிசுகிசுப்பாக மாறி இருந்தது.

உடலெங்கும் மெல்லிய நடுக்கம் தோன்றி மறைய, “அப்புறம் ஏன் வரலையாம்?”சலுகையாகச் சிணுங்கியபடி கேட்டாள் அரசி.

“வந்தா….”

“ம் …வந்தா?”

“என்னால சும்மா இருக்க முடியாதே…”பல மைல்களுக்கு அப்பால் இருந்தும் கணவனின் குரலில் இருந்த வேட்கை பெண்ணவளை நாணம் கொள்ளச் செய்ய.

“வேற என்ன செய்வீங்களாம்?”வேண்டுமென்றே அவனைச் சீண்டினாள்.

“சரி பண்ணிடுவேன்… இதுவரைக்கும் நான் செய்யாம விட்டு வச்சு இருக்கும் தப்பை செஞ்சு கணக்கை சரி பண்ணிடுவேன்”அவன் குரலில் இருந்த தாபத்தின் அளவே சொல்லியது அவன் எதைப் பற்றிப் பேசுகிறான் என்று.

“…” இதழ் கடித்துத் தன்னுடைய உணர்வுகளை அடக்கப் போராடி அமைதி காத்தாள் பொழிலரசி.

“பொழில்….”மோகச் சிதறலாய் அவன் குரல்.

“…”

“சொல்லுடி…என்னுடைய தப்பை சரி பண்ணட்டுமா?”போனில் அழுத்தமாக ஒலித்த குரலோடு சேர்த்து அவன் மூச்சுக்காற்று நேரில் அவளின் காதோரம் வீசுவது போல அவளின் காதோரம் மெல்லிய குறுகுறுப்பு.உடலெங்கும் இன்பலகரியில் மூழ்கிப் போனது பெண்ணவளுக்கு.

“…”

“ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லுடி…இப்பவே பறந்து வந்துடுவேன்…”

“…”

“என்னடி வர வேண்டாமா”ஏக்கத்தோடு ஒலித்தது அவன் குரல்.

“நான் ஒண்ணும் அப்படிச் சொல்லலியே.முடிஞ்சா வாங்களேன்”அவளின் குரலே சொல்லாமல் சொல்லியது அவளின் நெகிழ்வை.

“ஏய்!…வேண்டாம்டி என்னைச் சீண்டாதே…அப்புறம் உனக்குத்தான் கஷ்டம்”

“சும்மா மிரட்டாதீங்க…என்ன செஞ்சுடுவீங்களாம்”அவனை வம்பிழுக்க அவளுக்குப் பிடித்தது.

“சொல்லட்டுமா?”வேட்கையுடன் அவன் குரல்.

“சொல்லுங்களேன் பார்ப்போம்”

“காதலோடு காமம் கொள்ள ஆசை,

உன்னுயிரோடு என் உயிர் உறைய ஆசை,

வேட்கையோடு உன்னைத் துகிலுரிய ஆசை,

என்னுள் உன் வாசனை நிரப்பிக் கொள்ள ஆசை,

தடுக்க,தடுக்க உன்னை எடுக்க ஆசை,

இன்னும்…”

“சீ…போதும் நிறுத்துங்க…”அவளின் வெட்கம் அவனுடைய ஆண்மையைச் சிலிர்க்க வைக்க அடங்க மறுத்து திமிறியது அவன் தாபம்.

“வெறுமனே வாய் வார்த்தையா சொன்னதுக்கே இப்படிப் பேசினா எப்படி? அப்போ நேர்ல வந்தா”

“நீங்க ஒண்ணும் வர வேண்டாம் போங்க” பொய்யாய் சிணுங்கினாள்.

“நிஜமா வர வேண்டாமா?”கிறக்கமாய் அவன் குரல்.

“ஆடி மாசம் முடிஞ்சதும் அங்கே வந்துடுவேன்.ஒரு மாசம் தானே…”மயக்கத்துடன் அவள் பதில் சொன்னாள்.

“ஆமா இங்கே இருந்தால் மட்டும்…போடி” சலித்துக் கொண்டான் ஆதித்யன்.

“என்ன இவ்வளவு சலிப்பு…”

“பின்னே வேற என்ன செய்யச் சொல்ற?உன்னை எல்லாம் கட்டிக்கிட்டு மனுஷன் என்னத்த செய்யுவான்? ஆசையா கிட்ட வந்தா ஒண்ணு கத்தி எடுத்து குத்தி வைக்கிற? இல்லேன்னா மயக்கம் போட்டு விழுந்து வைக்கிற…போடி”லேசான கோபம் எட்டிப் பார்த்தது அவன் குரலில்.

“…”

அவளின் மௌனம் அவனை வருத்த,வேண்டுமென்றே பழைய நிகழ்வுகளைப் பற்றிப் பேசி அவளை வருத்தி விட்டோமோ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவன் அவளை வம்பிழுக்க எண்ணினான்.

“அடியே…அப்படியே பேச்சை மாத்தாதே…இப்பவே எனக்கு உன்னைப் பார்க்கணும் போல இருக்கு…அங்கே வரட்டுமா?”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்…இந்த மாசம் முழுக்க நீங்க அங்கேயே இருங்க…அப்புறம் பார்க்கலாம்”

“உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையாடி ராட்சஸி…கல்யாணம் ஆன புதுப் புருஷன்…இன்னும் ஒரு தடவை கூடப் பர்ஸ்ட் நைட் நடக்கலை.அவனைப் பிரிஞ்சு ஒரு மாசம் இருக்கச் சொல்றியே?”குழந்தை தனமான அவனின் பேச்சில் சிரிப்பு வந்தாலும் விறைப்பாகவே பதில் சொன்னாள் பொழிலரசி.

“இன்னும் ஒரு மாசத்துக்குத் தனியாவே கிடங்க…அப்பதான் என் அருமை புரியும் உங்களுக்கு” என்று சொன்னவள் அறைக்குள் கயல் நுழைவதை பார்த்ததும் அப்புறம் பேசுவதாகச் சொல்லி போனை அணைத்து விட்டு அவள் புறம் திரும்பினாள்.

“அதுக்குள்ளே தூங்கி எழுந்துட்டியாடி…காபித்தண்ணி கொண்டு வரட்டுமா?”

சுற்றிலும் ஆட்கள் யாரும் இருக்கிறார்களா என்று கண்களால் நோட்டம் விட்டவள் ஊடுருவும் பார்வையுடன் கயலை நெருங்கினாள்.

அரசியின் பார்வையில் முதலில் தடுமாறினாலும் மெல்ல சமாளித்துக் கொண்டு அவளிடம் பேசினாள் கயல்.

“என்னடி அப்படிப் பார்க்கிற… புதுசா பார்க்கிற மாதிரி”  

“…”

நான் ஒண்ணும் உன் புருஷன் இல்லைடி அரசி…ஏன் இப்படிப் பார்க்கிறவ?”

பார்வையைக் கொஞ்சமும் மாற்றாமல் கயலின் அருகே வந்தவள் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள்.அரசியிடம் இருந்து இப்படி ஒரு செயலை எதிர்பார்க்காத கயல் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அதிர்ந்து போய் நிற்க,மேலும் அவளை நெருங்கி நின்றவள் அவளின் கழுத்தை பிடித்து நெறித்தாள்.

“எதுக்காகடி என்னைக் கொலை செய்யப் பார்த்த?”அரசியின் கை கயலின் கழுத்தில் மேலும் அழுத்தமாகப் படிந்து அவளின் குரல்வளையை நெறித்தது.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 5]

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here