Kadhale Nee Kaanala Tamil Novels 29

0
1863
Madhumathi Bharath Tamil Novels

சிறு வயது முதல் ஒன்றாகக் கூடவே வளர்ந்தவள் கயல்.அவளை தோழி என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கி விட முடியாது.அவளுடைய மனதை நன்கு அறிந்தவள் என்றே சொல்ல வேண்டும்.தாய் இல்லாத அரசி, சில நேரங்களில் சுசீலாவின் மடியில் தஞ்சம் அடையும் பொழுது எல்லாம் கொஞ்சம் கூடப் பொறாமை இல்லாமல் தாயின் மடியை தோழிக்கு விட்டுக் கொடுத்து நகர்ந்து விடுவாள்.அப்படிப்பட்டவள் செய்த காரியத்தைத் தான் அவளால் தாங்க முடியவில்லை.

அவளுடைய சந்தோசத்திலும்,துக்கத்திலும் தோள் கொடுத்தவள் கயல் தான்.அடுத்தவர்கள் தோப்பில் திருட்டு மாங்காய் அடித்து வீட்டில் மாட்டிக் கொண்டு முழிக்கும் போதெல்லாம் சில சமயங்களில் அரசியின் வீட்டில் அவளை மாட்டி விட மனமில்லாமல் அந்தப் பழியைத் தான் சுமந்து அவளைப் பாட்டியின் அடியில் இருந்து காப்பாற்றி இருக்கிறாள்.அப்படிப்பட்டவள் ஏன் அந்தக் காரியத்தைச் செய்தாள்?

இன்னுமும் மனம் ஆற மறுத்தது பொழிலரசிக்கு.தன்னுடைய பிடியை கயலின் கழுத்தில் மேலும் இறுக்கினாள்.தோழியின் முகம் பயத்தில் வெளுப்பது கண்டு உள்ளூர இளகத் தொடங்கிய மனதை அடக்கினாள்.

“சொல்லுடி…ஏன் அப்படிச் செஞ்ச?”

“…”

“உன்னால தானேடி மூணு வருசமா நான் பைத்தியகாரியா சுத்திக்கிட்டு இருந்தேன்.நான் உனக்கு என்னடி கெடுதல் செய்தேன்…ஒழுங்கா உண்மையைச் சொல்லிடு.இல்லை கழுத்தை நெறிச்சு கொன்னுடுவேன்”அரசியின் பிடி மேலும் இறுக அச்சத்தில் விரிந்த கயலின் கண்களைக் கண்டு சிறிதும் இளகாமல் நின்றவளைக் கண்டு அவளின் பயம் அதிகரிக்க ‘சொல்கிறேன்.கையை எடு’ என்று சைகை செய்தவளைக் கண்டு வெறுப்போடு கைகளை விலக்கிக் கொண்டாள் பொழிலரசி.

“அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு உனக்கு நியாபகம் இருக்கா அரசி?”

‘நியாபகம் இல்லாமலா? அரசியின் மனது துயரத்தோடு மூன்று ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தது.வழக்கம் போல அன்றைய தினம் வெள்ளிகிழமையன்று மாலை தந்தை வந்து விடுவார் என்ற எண்ணத்தில் குதியாட்டம் போட்டவள் பாட்டியிடம் வம்பளத்துக் கொண்டு இருந்தாள்.

காலையில் எழுந்ததில் இருந்தே அவரைச் சீண்டிக் கொண்டே இருந்தாள்.எண்பது வயதானாலும் இன்னும் முப்பது வயது பெண்ணைப் போல எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாகப் பார்க்கும் அவளுடைய பாட்டியை எப்பொழுதுமே சீண்டிக் கொண்டே இருப்பதில் அரசிக்கு அளவற்ற சந்தோசமே…அன்றும் அந்த வேலையைச் செவ்வனே செய்து கொண்டு இருந்தாள்.

“அம்மாடி அரசி கொஞ்சம் வந்து இந்த அடுப்பை பாத்துக்கடி…நான் போய்க் கொல்லையில் இருந்து உனக்கு மதிய சாப்பாட்டுக்கு இரண்டு முருங்கைக்காய் பறிச்சுட்டு வர்றேன்”

“ஏய்! கிழவி…உனக்கு எம்புட்டுத் தைரியம் இருந்தா என்னைப் பார்த்து அடுப்படி வேலை எல்லாம் செய்யச் சொல்லுவ?”

“ஏன்டி…நீ பெரிய மகாராணியா?இந்த வேலை எல்லாம் செய்ய மாட்டியா?”கிழவி என்று சொன்னதில் கோபத்தோடு இடுப்பில் கை வைத்துக் கொண்டு கேள்வி கேட்டார் வடிவம்மாள்.

“மகாராணியா அந்தப் பட்டம் எல்லாம் யாருக்கு வேணும்? நான் இந்த வருஷம் படிப்பை முடிச்சதும் அப்பாவோட சேர்ந்து வெளியூருக்குப் போய்க் காலேஜ் சேர்ந்து பெரிய படிப்பு எல்லாம் படிச்சு கலெக்டர் ஆகப் போறேனாக்கும்.இந்த மாதிரி என்னை அடுப்புக்கரியில் உட்கார்ந்து வேலை எல்லாம் செய்யச் சொல்லாதே சொல்லிட்டேன்”கறாராகச் சொன்னாள் பொழிலரசி.

“கலெக்டர் ஆனா மூணு வேளை கொட்டிக்க மாட்டியா? ஒழுங்கா வந்து அடுப்பை பார்த்துக்கோ இல்லேன்னா மத்தியானத்துக்குப் பழைய சோறும்,பச்சை மிளகாயும் தான்.”அவளை விட அதிகக் கறாராகப் பேசி தான் அவளின் பாட்டி என்பதை நிருபித்தார் வடிவம்மாள்.

‘ஐயோ கிழவி செஞ்சாலும் செஞ்சிடுமே’ என்று உள்ளுக்குள் ஒரு நொடி பதறியவள் முகத்தைக் கெத்தாக வைத்துக் கொண்டு பேசினாள்.

“சரி சரி…என்னமோ இந்தக் கலெக்டரோட பொன் பாதம் உன் வீட்டு அடுப்படியில் படணும்னு நீ ஆசைப்படற…அதுவும் இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துக்கிட்டு இருக்கிற கிழவி வேற..மறுக்க முடியலை.போ…போய்ட்டு வா…சீக்கிரம் வந்திடணும் சரியா?”

“எது? இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துக்கிட்டு இருக்கிற கிழவியா? எடு அந்த விளக்கமாத்தை?யாரைப் பார்த்துடி கிழவின்னு சொல்ற?காலையில கோழி கூவுறதுக்கு முன்னாடியே எழுந்திரிச்சு வீட்டை பெருக்கி சுத்தம் பண்ணி,மாட்டு கொட்டகையைச் சுத்தம் பண்ணி,வாசம் தெளிச்சுக் கோலம் போட்டு,பாலைக் கறந்து வச்சு,உனக்கு காபி போட்டு தயாரா வச்சு…அது பத்தாம மகாராணி குளிக்கச் சுடுதண்ணி வச்சு,உன்னை எழுப்பி,கையில கொண்டு வந்து காபியை கொடுத்து,இன்னும் ஏழு கழுத்தை வயசாகிற உன்னைக் குளிப்பாட்டி,நீ தலை துவட்டி முடிக்கிறதுக்குள்ள உனக்குக் காலையில சாப்பிட பலகாரம் செஞ்சு முடிச்சு,இப்போ அரக்கபரக்க உனக்கு மதிய சாப்பாடும் செஞ்சுக்கிட்டு இருக்க நான் கிழவியா?”மூச்சு வாங்க பேசியபடி எதிரில் கண்களை உருட்டிக் கொண்டு நின்ற பாட்டியை கண்டதும் ஒரு நிமிடம் வாய் பிளந்தவள் அடுத்த நிமிடம் ஓடிப் போய் அவரின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

“எப்பா…எவ்ளோ பேசுற கிழவி நீ..ஹ்ம்ம் சும்மாவா? அது தான் காலையில் கறந்து வச்ச பாலுல எட்டு ஆழாக்கு காபி போட்டுக் குடிச்சியே…தெம்பு இருக்காதே பின்னே?”

“என்னது எட்டு ஆழாக்கா? அடியே ஒழுங்கா ஓடிரு.கைல சிக்கின இப்படிப் பேசுற நாக்கை அருவாமனையில நறுக்கி போட்டுடுவேன்”

“என்னது நரிக்கு போடுவியா? ஏன் உங்க ஊர்ல நரி மட்டும் தான் இருக்கா? இந்த ஓநாய்,சிங்கம்,புலி,டைனோசர் எல்லாம் இல்லையா?”விடாது கேலி பேசி பாட்டியை வம்புக்கு இழுத்தாள் பொழிலரசி.

“ஐயோ ராமா…காலங்காத்தால இந்தப் பைத்தியக்காரிச்சி என் உயிரை வாங்குறாளே.அடியே இந்த முறை உங்க அப்பன் வரட்டும்.அவனோடவே உன்னைக் கூட்டிட்டுப் போகச் சொல்றேனா இல்லையா பாரு? இனியும் உன்னோட மல்லுக்கட்ட என்னால முடியாதுடி ஆத்தா”

“எனக்குச் சரியா பதில் சொல்ல உனக்குத் துப்பில்லைன்னு ஒத்துக்கோ.அதை விட்டுட்டு எனக்குப் பைத்தியக்காரி பட்டம் கட்டுற வேலை எல்லாம் வச்சுக்காதே சொல்லிட்டேன்”

“அடியே…சில்லுவண்டு ஒழுங்கா இப்போ அடுப்பை பார்த்துக்கப் போறியா? இல்லை நீ பேசின பேச்சுக்கு உனக்கு மதியம் பழைய சோறு கூடக் கட்டித் தர மாட்டேன்” என்று தன்னுடைய முகத்தில் கொலைவெறி தாண்டவமாட சொன்ன வடிவம்மாளை கண்ட அரசிக்கு புரிந்து போனது இப்பொழுது பாட்டியிடம் அடங்கி நடக்கவில்லை என்றால் நிச்சயம் பாட்டி சொன்னதைச் செய்து விடுவார் என்று.எனவே கொஞ்ச நேரம் அடக்கி வாசித்தாக வேண்டிய முடிவுக்கு வந்தவள் நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக் கொண்டு பாட்டி சொன்னதைச் செய்தாள்.

கொல்லைக்குப் போய் முருங்கை பறித்த பிறகு அதை வைத்து சாம்பார் செய்தவர்,தொட்டுக் கொள்ளப் பருப்பு துவையல் செய்து சமையலை முடித்து விட்டு அரசிக்கு தலை பின்னி விட ஆரம்பித்தார்.மறுபடியும் அவரிடம் போராட்டத்தை ஆரம்பித்தாள் அரசி.

“பாட்டி…ஒத்த சடை பின்னு”

“எல்லாம் எனக்குத் தெரியும்…எப்பவும் போல ரெட்டை சடை தான் பின்னுவேன்.கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு உட்காரு”

“நான் என்ன இன்னும் சின்னப் பிள்ளையா கிழவி…ரெட்டை சடை பின்னி விடற?”

“அடியே …மறுபடி மறுபடி என்னைப் பேச வைக்காதே சொல்லிட்டேன்.ரெட்டை சடை போட்டாத் தான் முடி இன்னும் நீளமா வளரும் தாயி”

“எனக்கு நீலமாவும் வளர வேண்டாம்.பச்சையாவும் வளர வேண்டாம்.ஒழுங்கா மரியாதையா எனக்கு ஒத்தை சடை பின்னி விடு.உன்னால பள்ளிகூடத்துல எல்லாப் பிள்ளைகளும் கிண்டல் பண்றாங்க கிழவி”

“அவளுங்க கிடக்கறாளுங்க பொறாமை பிடிச்ச கழுதைங்க…நீ அவங்க பேச்சை எல்லாம் காதில வாங்கிக்காத கண்ணு” என்று பேசியபடியே பேத்தியின் நீண்ட தலைமுடியை இரண்டாகப் பிரித்து அழகாக ரெட்டை சடை போட்டு விட்டுத் தான் நிமிர்ந்தார் வடிவம்மாள்.

“இரு கிழவி உன்னைச் சாயந்திரம் வந்து பேசிக்கிறேன்.”வாய்க்குள் முணுமுணுத்தாள்.

“என்னடி மிரட்டுற”

“இரு இரு…எங்க அப்பா இன்னைக்கு வருவார்.அவர்கிட்டே உன்னைப் பத்தி சொல்லி மாட்டி விடறேனா இல்லையா பார்…”

“உங்க அப்பன் என் முந்தானையில் மூக்கு சிந்திக்கிட்டு திரிஞ்ச பய..அவனுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் போடி”என்று கெத்தாகச் சொன்னவர் முந்தானையை எடுத்து ஒரு உதறு உதறி காட்டி விட்டு அசால்ட்டாகப் பேசினார்.

“அப்படி மட்டும் நடக்கட்டும் அதுக்கு அப்புறம் உன் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன் கிழவி…”

“மூஞ்சியில முழிக்கலைன்னா முதுகுப் பக்கம் முழிச்சுக்கோ” என்று நக்கல் பேசிய பாட்டியை கோபத்துடன் முறைத்து விட்டுப் புத்தகப் பையை மாட்டிக் கொண்டு காலை உணவை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

“சாப்பாடு சாப்பிட்டு போ அரசி…”

“என்னை என்ன ரோஷம் இல்லாதவன்னு நினைச்சியா?உன் கையால சாப்பிடறதுக்கு?”

“அப்புறம் எதுக்குடி அதை டிபன் பாக்ஸ்யில் வச்சு எடுத்துட்டு போற…”

“நான் கயல் வீட்டுக்குப் போய் அவங்க அம்மா கையால இதே சாப்பாடை பரிமாறச் சொல்லி சாப்பிட்டுக்குவேன்”என்று ரோஷமாகச் சொல்லிவிட்டு இரட்டை சடையில் ஒன்றை பாட்டியின் கண் முன்னே விசிறி அடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

“அடி கிறுக்கி மவளே…இவளை எப்படித்தான் சமாளிக்கப் போறேனோ தெரியலையே ஆண்டவா” என்று செல்லமாகப் பேத்தியை சலித்துக் கொண்டவர் கண்களில் பேத்தியின் அழகு உருவத்தை நிறைத்துக் கொண்டார்.பாவம் இருவருக்குமே தெரியாது.ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்ட அந்த நிமிடங்கள் தான் இருவரும் கடைசியாகப் பேசிய பேச்சு என்று.

அங்கிருந்து புறப்பட்டு நேராகக் கயலின் வீட்டிற்குச் சென்ற அரசியை எப்பொழுதும் போலப் பாசத்துடன் வரவேற்ற சுசீலா.கயலையும்,அரசியையும் அமர வைத்து காலை உணவை இருவருக்கும் பரிமாறத் தொடங்கினார்.பொழிலரசி வீட்டில் இருந்து எடுத்து வந்த டிபன் பாக்ஸை எடுத்து வைக்க,தோழிகள் இருவரும் எப்பொழுதும் போல வடிவம்மாளின் கைப்பக்குவதிற்காக உனக்கு எனக்கு என அடித்துப் பிடித்து அதைச் சாப்பிட்டு காலி செய்தனர்.

பேச்சோடு பேச்சாகக் கார்த்திக்கு வெளியூரில் வேலை கிடைத்து இருக்கும் தகவலை சுசீலா சொல்ல,அரசியின் மகிழ்ச்சி இன்னும் ஜாஸ்தி ஆனது.

“கார்த்திக்கு வேலை கிடைச்சுட்டா…இனி எனக்கு நிறையத் தீனி வாங்கிட்டு வருவான்ல….(அரசி எப்பொழுதும் கார்த்தியை அவன்,இவன் என்று தான் பேசுவாள்.இருவருக்கும் இடையில் நான்கு வருட வயது வித்தியாசம் இருந்தாலும்,சிறுவயது முதல் ஒன்றாகவே பழகி வந்ததால் அவள் அப்படித்தான் அவனை அழைப்பாள்.அவள் அப்படிப் பேசுவதை யாரும் அந்த வீட்டில் அதுவரை தடுத்தது இல்லை)

சுசீலாவின் முகம் ஒருநொடி லேசாகச் சுருங்கி பின் இயல்பு நிலைக்கு வந்தது. “என்ன அரசி இன்னும் சின்னப் பிள்ளையா நீ?கார்த்தி வேலைக்குப் போகிற அளவுக்குப் பெரிய ஆள் ஆகிட்டான்.இன்னும் அவனை இப்படி மரியாதை இல்லாமல் நீ, வா,போன்னு மரியாதை இல்லாமல் பேசறியே? இது தப்பு இல்லையா? நாளைக்கே உங்களுக்குக் கல்யாணம்….அதாவது கார்த்திக்குக் கல்யாணம் ஆன பின்னே இது மாதிரி நீ அவனை மரியாதை இல்லாமல் பேசினா அது நல்லா இருக்குமா சொல்லு…” என்று சொல்லி விட்டு அவள் முகத்தைக் கூர்ந்து பார்க்க அரசியின் முகம் பொலிவிழந்து காணப்பட்டது.

அரசிக்கு சிறுவயது முதல் ஒன்றாக வளர்ந்து அவனை அப்படியே அழைத்து அதுவே பழகியும் போய் விட்டது. இனி கார்த்தியை அப்படி அழைக்க வேண்டாம் என்று சொல்கிறார்களே என்ற வருத்தத்தில் முகம் சுணங்க,சுசீலாவோ அதை வேறு விதமாக எடுத்துக் கொண்டு முகம் மலர்ந்தார்.கார்த்தி வேறு பெண்ணை மணந்து கொள்வது அரசிக்கு பிடிக்கவில்லை என்று எண்ணிக் கொண்டார்.அவருக்கு எப்பொழுதும் அரசியைத் தன்னுடைய மருமகளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டு.

அழகும்,சுட்டித்தனமும்,தன்னுடைய மகளுடன் எப்பொழுதும் ஒத்துப்போகும் குணமும்,கூடப் பிறந்த பிறப்பு என்று யாரும் இல்லாமல் தந்தையின் சொத்துக்கு எல்லாம் ஒரே வாரிசாக அரசி இருந்தது கூடுதல் காரணங்கள்.அதனாலேயே அவளுக்கு அந்த வீட்டில் சில பல கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டது.இப்பொழுது அரசியின் மனதில் இருப்பதை அறிந்து கொள்ளும் பொருட்டே வேண்டுமென்றே அவ்வாறு சொன்னார்.அதில் அரசியின் முகம் அவர் எதிர்பார்த்த மாறுதலை கொடுக்க உள்ளுக்குள் மகிழ்ந்து தான் போனார்.

“சரி அத்தை …இனி அப்படிக் கூப்பிடலை”முகம் வாட சொல்லியவள் புத்தகப்பையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு கயலுடன் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

இருவரும் அங்கிருந்து நகர்ந்ததும் காலை உணவு உண்பதற்காக அங்கே வந்த பரசுராமனை விடாது நச்சரிக்கத் தொடங்கினார் சுசீலா.

“என்னங்க…நீங்க சொன்ன மாதிரி நம்ம கார்த்திக்கு இப்ப படிப்பு முடிக்கப் போறான்.காலேஜ் மூலமா வேலையும் கிடைச்சுடுச்சு…இன்னைக்குச் சாயந்திரம் அரசியோட அப்பா வருவார் இல்லையா?அவர்கிட்டே இந்தக் கல்யாண விஷயமா பேசலாம் இல்லையா?”

“உனக்கு எத்தனை தடவை தான் சொல்றது சுசீலா…வீட்டில் கயலை வச்சுக்கிட்டு எப்படி மூத்தவன் கல்யாணத்தை நடத்துறது?அதுவும் இல்லாம கார்த்திக்கும் இப்ப தானே இருபத்து மூணு வயசு ஆகுது…இன்னும் ஒரு மூணு வருஷம் போன பிறகு பார்க்கலாம்.முதல்ல கயலோட கல்யாணம்.அதுக்கு அப்புறம் தான் அவனுக்கு”தீர்மானமாகச் சொன்னார்.

“அதெல்லாம் சரிதான்…ஆனா அதுக்குள்ளே அண்ணன் எதுவும் அவசரபட்டு வெளியூரில் இருந்து எதுவும் மாப்பிள்ளையைப் பார்த்து எந்த ஏற்பாடும் செய்து வைத்து விடக் கூடாதேன்னு எனக்கு மனசு கிடைத்து அடிச்சுக்குதுங்க…வேணும்னா இப்படிச் செய்யலாம்…இந்த முறை அண்ணன் வரும் பொழுது நாலு பெரியவங்களை வச்சு வெத்தலை,பாக்கு மட்டும் மாத்திக்கலாம்.அப்புறம் பொறுமையா கயல் கல்யாணம் முடிஞ்ச பிறகு அவங்க இரண்டு பேர் கல்யாணத்தை நடத்தலாம்.”

“உனக்கு அரசியை வேற யாராவது கொத்திக்கிட்டு போய்டுவாங்கன்னு பயம் அதானே”கேலியாகக் கேட்டார் பரசுராமன்.

“பின்னே இருக்காதா? கிளியாட்டம் பொண்ணு இருக்கா…அவளே நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா…இந்த வீட்டில் நிச்சயம் நாத்தனார் சண்டை எல்லாம் நடக்காது.என் பொண்ணு எப்போ இங்கே வந்தாலும் அவளுக்குத் தாய் வீட்டு சீரு,எந்த தங்கு,தடையும் இல்லாம கரெக்டா கிடைக்கும்.அதான்”

“சரி சரி பார்க்கலாம்” என்று சொல்லி விட்டுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு பரசுராமன் எழுந்து கொள்ள,சுசீலாவின் முகம் மகிழ்ச்சியில் தத்தளித்தது.இது போதும் கணவர் நிச்சயம் இந்தத் திருமணத்தை நடத்தி விடுவார் என்ற எண்ணம் அவரின் மகிழ்ச்சியை அதிகரிக்க அந்த விஷயத்தை ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டு இருக்கும் மகனிடம் உடனே பகிர்ந்து கொள்ள மனம் பரபரக்க எப்படியும் இன்று மாலை மகன் இரண்டு நாள் விடுமுறைக்காக இங்கே வரும் பொழுது நேரிலேயே விஷயத்தைச் சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அன்றைய மாலைப் பொழுதிற்காக ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கினார்.ஆனால்…அன்றைய மாலைப் பொழுது அவர்கள் எல்லோர் வாழ்வையும் மாற்றப் போவது அறியாமல்…

பள்ளியில் மதிய உணவு இடைவேளை முடிந்த பின்பு அரசியின் மனம் ஏனோ நிலை கொள்ளாமல் தவித்தது.ஏதோ பெரும் அசம்பாவிதம் நடக்கப் போவதாக அவளது உள்மனம் அவளை எச்சரிப்பது போன்ற ஒரு பிரமை…ஒரு அளவிற்கு மேல் தாங்க முடியாமல் எப்போதடா பள்ளி முடிந்து வீட்டிற்குக் கிளம்புவோம் என்று மணியைப் பார்த்துக் கொண்டே இருந்தவள்,பள்ளி முடிந்ததும் கயலிடம் கூடச் சொல்லாமல் நேராக வீடு நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றாள்.

பாதித் தூரத்திலேயே அவளை எதிர்கொண்டார் பரசுராமன்.அவர் முகத்தில் எதையோ சொல்லி விட வேண்டும் என்ற தவிப்பு இருந்ததைப் பார்த்தவளின் இதயம் பந்தயக் குதிரையைப் போல ஓடத் தொடங்கியது.

“வண்டியில் ஏறிக்கோ அரசி” தன்னுடைய மோட்டர் சைக்கிளில் அவளை அமர வைத்தவர் ஒன்றும் பேசாமல் வண்டியை அவளின் வீடு நோக்கி செலுத்தினார்.

“என்ன விஷயம் மாமா?”ஏதோ ஒரு வெடிகுண்டை எதிர்ப்பார்த்துப் பயத்தில் உடல் முழுவதும் வேர்த்துப் போய் அமர்ந்து இருந்தவள் மெல்லிய குரலில் பின் சீட்டில் இருந்து கேட்டாள்.

பரசுராமன் எந்த ஒரு வார்த்தையும் சொல்லாமல் மௌனமாகவே அவளை அழைத்து வந்தார்.அவரின் மௌனம் அவளுக்கு மேலும் திகிலைக் கூட்ட…எவ்வளவோ கேட்டும் அவர் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை.அவளின் மௌனம் அவளின் இதய ஒலியை மத்தளம் போல அதிகரிக்கச் செய்யப் பயத்துடன் பயணித்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் தன்னுடைய வீட்டு வாசலில் கூடி இருந்த கும்பலை.

‘ஏன் இந்தக் கும்பல்? யாருக்கு என்ன ஆச்சு?’ ஆயிரம் கேள்விகளுடன் வீட்டு வாசலுக்கு விரைந்தவளை சுற்றி நின்று கொண்டு ஒப்பாரி வைத்தனர் ஊர்க்கார பாட்டிமார்கள்.இறுகக் கட்டிக் கொண்டு அவளைச் சுற்றி காட்டுக் கத்தலாய் ஒலித்த எந்த ஒலியும் அவள் செவியைத் தீண்டவில்லை.அவர்களிடம் இருந்து தன்னைப் பிரித்து எடுத்தவள் வேகமாக வீட்டின் உள்ளே செல்ல அங்கே நடுக்கூடத்தில் அவளுடைய அருமைக் கிழவி படுக்க வைக்கப் பட்டு இருந்தாள் பிணமாக.

அரசிக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘எப்படி இப்படி நடந்தது?காலையில் நன்றாகத் தானே பேசினாள்…எப்பவும் போல நான் சீண்டிய பொழுதுதெல்லாம் கொஞ்சமும் எனக்குச் சளைக்காமல் பதிலுக்குப் பதில் சொன்ன பாட்டி இப்பொழுது அசைவற்றுக் கிடக்கிறாள்…ஏன்?’

“சாயந்திரம் பேத்திக்கு வாழைக்காய் பஜ்ஜி செஞ்சு கொடுக்க,கொல்லைப்புறத்திற்குக் காய் பறிக்கப் போச்சுதாம் கிழவி… ஈர மண்ணு வழுக்கி,சரியா நெற்றிப் பொட்டில் அடிபட்டு அங்கேயே உசிரை வுட்டுடுச்சு கிழவி…ஹ்ம்ம்…பேத்தி பேத்தின்னு எப்பவும் அரசி மேலே உயிரையே வச்சு இருக்கும்.கடைசியில் இப்படிப் பேத்திக்காகவே உயிரை விட்டுடுச்சே கிழவி” கூட்டத்தில் யாரோ ஒருவர் அங்கலாய்த்தார்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்தாலும் அரசியின் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை.

‘பிறந்த உடனே ஆத்தாளை முழுங்கின…இப்ப உன்னை உசிருக்கு உசிரா வளர்த்து ஆளாக்கின உன் பாட்டியையும் முழுங்கிட்டுக் கொஞ்சம் கூட அழாம கல்லு மாதிரி நிற்கிறா பாருங்க…பொண்ணா இவ…பீடை…தரித்ரியம்…”யாரோ தூற்றிக் கொண்டே போகப் பரசுராமனின் குரல் இடையிட்டு அவர்களைக் கண்டித்தது.இது அனைத்தும் காதில் விழுந்தாலும் மூளையில் பதிவாகவில்லை.அவளின் அதிர்ந்த நிலை கண்டு பயந்து போன பரசுராமன் அவளுக்கு ஆதரவாகப் பேசினார்.

“புள்ளை பயந்து போய் நிக்குது…அவளை உள்ளே கூட்டிக்கிட்டு போய் யாராச்சும் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடுங்க”என்று உத்தரவிட யாரோ அவளை அழைத்துப் போய் அடுத்தக் கட்டில் இருந்த சமையல் அறைக்கு அழைத்துப் போய்க் குடிக்க நீர் கொடுத்தார்கள்.அதை அவள் கையில் வாங்கவும் இல்லை.குடிக்கவும் இல்லை.சிறிது நேரம் சொல்லிப் பார்த்து விட்டு அவர்களும் நகர்ந்து விடக் கால் தானாகக் கொல்லைப்புறத்திற்குப் போய் நின்றது.வாழை மரத்திற்கு அருகே துணி துவைப்பதற்குத் தோதாகப் போடப்பட்டு இருந்த கல் முழுவதும் உறைந்து போன ரத்தத்தால் நிரம்பி இருக்க,அவளின் மனம் உடனே அங்கிருந்து நகர்ந்து செல் என்று உத்தரவிடச் செல்லும் திசையும் அறியாமல்,போக்கும் அறியாமல் கொல்லைப் புறத்தின் மறுகோடியில் இருந்த கிணற்றுக்கு அருகில் வந்து நின்றதும் அவளுடைய நடை தானாகவே நின்றது.

கிணறு… சிறு வயது முதலே பொழிலரசியை மிரட்டி வந்த அதே கிணறு…சிறுவயதில் ஒருமுறை உள்ளே தவறி விழுந்து கடுமையான ஜுரத்தில் விழுந்த பிறகு அவள் எட்டிக் கூடப் பார்த்திராத அவள் வீட்டுக் கிணறு…அந்த பயத்தினாலேயே இன்றுவரை ஆழமான எந்த இடத்திலும் குளிக்கப் பயப்படும் அளவிற்கு அவளை மிரட்டி வைத்திருக்கும் அதே கிணறு.

இப்பொழுது அவள் மனதில் கிணறைப் பற்றி எந்தப் பயமும் இல்லை.மாறாக உணர்வுகள் மரத்த நிலையில் கிணறையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளை பின்னிருந்து ஒரு கரம் தள்ளி விட்டது கிணற்றுக்குள்.தான் கிணற்றுக்குள் தள்ளி விடப் பட்டு இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளவே அரசிக்கு சில பல நிமிடங்கள் தேவைப்பட்டது.அதிக ஆழம் நிறைந்த கிணற்றில் போதிய நீச்சல் அனுபவம் இல்லாத அரசி உயிரைக் காத்துக் கொள்ளப் போராடினாள்.தலை கிணற்றின் சுற்றுச் சுவரில் எதன் மீதோ போய் ‘டங்கென’ மோதியது.

நிச்சயம் பெரிய காயம் தான்.ரத்தம் வருவதை அவளுக்கு அருகில் இருந்த நீரின் நிறம் சிவப்பாக மாறியதை வைத்து தெரிந்து கொண்டவள் உயிர் காற்றுக்காகப் போராடியவாறு மறுபடி ஒருமுறை மேலே வர முயற்சித்தாள்.முன்னைக் காட்டிலும் அதிகப் பலத்துடன் வெளியே வரப் போராடியவளின் தலை மீண்டும் எதிலோ பலமாக மோத மெல்ல மெல்ல தன்னுடைய சுயநினைவை இழக்கும் பொழுது அரைகுறை மயக்கத்தில் நிமிர்ந்து கிணற்றின் மேல் பகுதியைப் பார்த்தாள்.

அங்கே நின்று அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றவள் அவளின் அருமைத் தோழி கயலே தான்.தொடர்ச்சியாக வந்த அதிர்ச்சிகளின் விளைவோ அல்லது தலையில் ஏற்பட்ட காயத்தின் காராணமாக மெல்ல மயங்கி நினைவுகளை இழக்கத் தொடங்கினாள் பொழிலரசி.

“இப்ப சொல்லப் போறியா இல்லையா? எனக்குக் கிணத்துல நீச்சல் அடிக்கத் தெரியாதுன்னு நல்லா தெரிஞ்சும் என்னை ஏன்டி கிணற்றில் தள்ளி விட்டுச் சாகடிக்கப் பார்த்த?”உக்கிரம் கொஞ்சமும் குறையாமல் கேள்வி கேட்டாள் அரசி.

“அந்தக் கேள்விக்குப் பதிலை நான் சொல்றேன் அரசி”குரல் வாசல்புறம் இருந்து வர குரலை வைத்தே அது யாரென்று அடையாளம் கண்டுகொண்டவள் கயலை பிடித்து இருந்த பிடியை கொஞ்சமும் தளர்த்தாமல் பார்வையை மட்டும் வாசல் பக்கம் திருப்பினாள்.

“கார்த்தி”அவள் வாய் மெல்ல முணுமுணுத்தது.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 5]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here