Kadhale Nee Kaanala Tamil Novels 3

0
2554
Madhumathi Bharath Tamil Novels
எழுந்தது முதல் அழுது கொண்டே இருந்தாள் பொழிலரசி.அவளை சமாதானம் செய்ய வீட்டு வேலையாட்கள் எடுத்த அத்தனை முயற்சியும் தோல்வியைத் தான் தழுவியது.அவளிடம் பேச முயற்சித்த வேலையாட்களை வெளியே துரத்திவிட்டு கதவை கூடத் திறக்க மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டு ஜன்னலின் ஓரம் சென்று அமர்ந்தவள் வெளியே வானத்தை வெறித்துப் பார்த்தபடி அழுது கொண்டு இருந்தாள்.

இறந்து போன தந்தையின் முகம் அதில் தெரிகிறதா? என்று ஏக்கத்தோடு அதில் பார்வையைப் பதித்தவள் மீண்டும் வாய் விட்டு கதறி அழலானாள்.
“அப்பா… ஏன் என்னை விட்டுட்டு போனீங்க… எனக்குன்னு இப்ப யாருமே இல்லையே!உங்களுக்கும் என்னைப் பிடிக்காம போயிடுச்சா?ஏற்கனவே நான் பிறந்த உடனே அம்மா என்னை விட்டு போய்ட்டாங்க.இப்போ…இப்போ நீங்களுமா?

நான் என்ன பாவம் செய்தேன்?இப்படி யாருமே இல்லாத அனாதையாக இருக்க?போகும் போது என்னையும் கூட்டிக் கொண்டு போய் இருக்கலாமே அப்பா.இப்படி என்னை இங்கே எதுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தீங்க…எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கலை.இங்கே யாரையுமே பிடிக்கலை.நானும் உங்க கூடவே வந்திடறேன்.” என்று அவள் போக்கில் புலம்பிக்கொண்டே இருந்தவள் அப்பொழுது தான் ஜன்னல் பக்கம் கவனித்தாள்.

அந்த ஜன்னல் கண்ணாடிகள் மட்டுமே இருந்தது.அதை திறந்து விட்டால் கீழே குதிப்பது சுலபம் என்று சட்டென ஒரு முட்டாள்தனமான எண்ணம் தோன்ற எதைப் பற்றியும் சிந்திக்காமல் உரத்த குரலில் கத்திக் கொண்டே ஜன்னலை நோக்கி ஓடினாள்.

“நானும் உங்ககிட்டயே வந்திடறேன் அப்பா”என்று ஓடியவள் பலம் கொண்ட மட்டும் வேகமாக ஜன்னலை திறந்து அதில் இருந்து இறங்கி குதிக்கத் தயாரானாள்.இரண்டு கால்களையும் ஜன்னலுக்கு வெளிப்புறம் நீட்டி ஜன்னலில் உட்கார்ந்தவாறே, கீழே குதிக்க ஆயத்தமானாள்.

சாகப்போகும் முன் கடைசி நொடி அவளது மனக்கண்ணில் சிறுவயதில் இருந்து நடந்த அத்தனை மகிழ்ச்சியான நாட்களும் அவள் கண் முன்னே வந்து போனது.

பள்ளியில் நடந்த போட்டிகளில் கை நிறையக் கப்புகளை வாங்கிக் கொண்டு தன்னுடைய பாட்டியிடம் ஆவலாகக் காட்டியதும்,தன்னுடைய தந்தை தன்னைப் பார்க்க வரும் ஞாயிற்றுக்கிழமைக்காக வாரம் முழுவதும் காத்திருந்ததும்,அப்பா வந்ததும் தந்தையுடன் சேர்ந்து தோப்புகளில் ஆடியதும்,தனக்காகத் தன்னுடைய தந்தை பறித்துக் கொடுத்த மாம்பழத்தின் ருசியும்,மழை நேரத்தில் பாட்டியுடன் இருவரும் வீட்டு முற்றத்தில் மழையில் விளையாடிக் கொண்டே சூடாக வாழைப்பூ வடை செய்து சாப்பிட்டதும், ஒவ்வொன்றாக அவள் நினைவில் வந்து போனது.
ஒரு கட்டத்திற்கு மேல் அவளுக்குத் தலை சுற்றி மயக்கம் வருவது போல இருக்கச் சாய்ந்து கொள்ளத் தோதாக அருகில் இருந்த சுவற்றை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

தான் இருப்பது மூன்றாவது மாடியின் ஜன்னல் ஓரம்.கீழே விழுந்தால் மண்டை உடைவது உறுதி,தான் இங்கே வந்தது கீழே விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வதற்காகவே என்பது எதுவும் அப்பொழுது அவளின் நினைவுக்கு வரவே இல்லை.அப்படியே ஜன்னலில் அமர்ந்து கொண்டு தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் வலி கொஞ்சம் மட்டுப்படவும் கீழே குதிக்கும் எண்ணத்தோடு எழுந்து நின்றவளை அப்படியே அலேக்காகத் தூக்கி அறையின் உள்ளே நிற்க வைத்தான் அவளுடைய கணவன் விக்ரமாதித்யன்.
கீழே விழப் போகிறோம் என்ற எண்ணத்தோடு நின்று கொண்டு இருந்தவள் கடைசி நொடியில் தான் தூக்கப் படுவதை உணர்ந்தாலும் முதலில் அவளுக்கு அதிர்ச்சிக்கு பதிலாகக் கேள்வி தான் வந்தது.

‘பூட்டிய அறைக்குள் இவன் எப்படி நுழைந்தான்?” அதே கேள்வியைக் கண்களால் கேட்டவாறு அவனை உற்றுப் பார்த்தாள்.

அவன் கைகளில் இருந்த டுப்ளிகேட் சாவியை எடுத்து அவள் கண் முன்னே ஒரு ஆட்டு ஆட்டி விட்டு மீண்டும் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டவன் இரண்டு கைகளையும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டு அவளையே கேள்வியாகப் பார்த்தான்.

அவள் ஒன்றுமே பேசாமல் தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.ஆதித்யனுக்கு உண்மையில் இந்தச் சூழ்நிலையில் கோபம் தான் வந்து இருக்க வேண்டும்.தன்னுடைய மனைவி,தன்னுடன் வாழ்வதற்கு முன்னரே வாழ்வை முடித்துக் கொள்ள நினைக்கிறாள் என்பது ஒரு கணவனாக அவனுக்கு வருத்தமே என்றாலும்,ஒரு தொழிலதிபனாக அவனுக்கு அது பெரும் அவமானம் இல்லையா?இப்படி ஒரு விஷயம் நடந்தால் வெளியே அவனை யார் மதிப்பார்கள்.

ஆனால் அவனுக்குக் கோபம் வருவதற்குப் பதிலாக அவள் மேல் பரிதாபம் தான் வந்தது. அவசர திருமணம்,புகுந்த வீட்டினரின் வெறுப்பு,தந்தை இறப்பு…எத்தனை தான் சமாளிப்பாள்’ என்ற நினைவுகளுடன் கனிவாக அவளைப் பார்த்தான்.தான் வேறு கோபமாகப் பேசி அவளை வருத்தி விடக்கூடாது.அப்படி அவள் வருந்தி இடக்காக எதையும் செய்து விட்டால் காரியமே கெட்டுவிடக் கூடிய அபாயம் வேறு இருப்பதாக அவனுடைய மூளை எச்சரிக்கை விடுத்தது.

கண்ணசைவில் வேலையாட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினான்.அவளின் அருகே சென்றவன் அருகில் இருந்த சோபாவை காட்டி அதில் அமருமாறு சைகை செய்தான்.பொழிலரசி அவனிடம் கோபத்தை எதிர்பார்த்து இருந்ததால் ஒன்றும் பேசாமல் அப்படியே போய் அங்கிருந்த சோபாவில் தொப்பென அமர்ந்தாள்.அவளுக்கும் அவள் செய்யவிருந்த காரியத்தின் வீரியம் புரியாமலா இருக்கும்!

சற்று நேரம் எதிரில் இருந்த சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தவள், கணவனிடம் இருந்து எந்த விதமான பேச்சும் இல்லாததை உணர்ந்து மெல்ல அவன்புறம் திரும்பினாள்.அவனும் அவளைத் தான் உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனுடைய துளைக்கும் பார்வையில் கடுமை இல்லை ஆனால் கூர்மை இருந்தது.இந்த பார்வைக்கு என்ன பதிலை சொல்வது என்று சில நிமிடங்கள் தடுமாறியவள் மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள்.புடவையின் நுனியை விரல்களில் சுற்றிக் கோர்ப்பதும்,பிரிப்பதுமாக இருந்தவளை ஓரக்கண்ணால் அளவிட்டவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினான்.

“இதோ பார் உனக்கும் எனக்கும் இப்பொழுது தான் வாழ்க்கையே துவங்கி இருக்கு.அதற்குள் இந்த முடிவு எதற்காக?”சாதாரணமான குரலில் கேட்டான்.

“…”

“உன்னைத் தான் கேட்கிறேன்.பதில் சொல்”குரலில் கொஞ்சம் அழுத்தம் கூடி இருந்தது.

“…”

“நான் கேட்டால் பதில் சொல்ல வேண்டும்.இப்படி வாயை இறுக மூடிக் கொண்டு இருக்காதே…எனக்கு அது பிடிக்காது.”அவன் குரலில் கடுமை இன்னும் கொஞ்சம் ஏறி இருக்கவே வாயை திறந்து பேச ஆரம்பித்தாள் பொழிலரசி.

“எனக்கு அப்பா கிட்ட போகணும்”உதடு துடிக்க,கண்கள் கலங்க குழந்தை போல முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு சொன்னவள் அதற்கு மேல் தாங்க முடியாமல் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

மெல்ல எழுந்து அவளருகில் நின்றவன்,அவளது தோளை லேசாக ஒருமுறை அழுத்தினான்.அவள் நிமிர்ந்தும் பார்க்காமல் “அப்பா” என்று அழுது புலம்பியபடியே இருந்தாள்.

அவளது தலையை எடுத்து தன்னுடைய வயிற்றில் பதித்துக் கொண்டவன் ஆதரவாக அவளது தலையை வருட ஆரம்பித்தான்.அவள் அழுது முடிக்கும்வரை பொறுமையாக இருந்தான்.அந்த அறையின் எல்லாத் திசையிலும் அவளின் அழுகை ஒலி மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்தது.
அழுது அழுது ஓய்ந்தவள், தான் அவன் மேல் சாய்ந்திருப்பதை உணர்ந்து மெல்ல அவனிடம் இருந்து விலக முயற்சித்தாள்.அவனும் அவளைத் தடுக்கவில்லை.மீண்டும் அவளுக்கு எதிரில் சென்று அமர்ந்தவன் அவளிடம் இதமாகப் பேசினான்.

“உன் நிலைமை புரியுது.அதுக்காக இப்படி அழுது உடம்பை கெடுத்துக் கொள்ளாதே.நீ அழுது கொண்டே இருப்பதால் உன்னுடைய அப்பா திரும்பி வரப் போவது இல்லை.முடிந்த அளவிற்கு இதில் இருந்து மீண்டு வர முயற்சி செய்”

“எனக்கு அப்பா முகத்தைக் கடைசியா ஒருமுறை பார்க்கணும்.என்னை கூட்டிட்டு போறீங்களா”அழுகையின் ஊடே அவள் குரல் நலிந்து ஒலித்தது.
அவனிடம் இருந்து எந்த விதமான பதிலும் இல்லாமல் போகவே நிமிர்ந்து கணவனைப் பார்த்தாள்.

‘கணவனின் புரியாத பார்வை தன்னிடம் சொல்ல வருவது என்ன?’ என்று குழம்பித் தவித்தாள்.தொண்டையைச் செருமிக் கொண்டு பிறகு மெல்லிய குரலில் அவன் சொன்ன விஷயத்தில் அவள் தலையில் இடி விழுந்தது.
“உன் அப்பா நம்மோட கல்யாண தினத்தப்போ இறந்தார்.இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?”

“…”

“நம்ம கல்யாணம் முடிஞ்சு இன்றோட மூன்று நாள் ஆச்சு”

“அ…அப்..அப்படினா? என் அப்பா?”

“எல்லாம் முடிந்து விட்டது…நான் தான் எல்லாத்தையும் செஞ்…”
அவன் சொல்லி முடித்து இருக்கவில்லை.அதற்குள் அவன் அருகில் வேகமாக வந்தவள் , அவனது நெஞ்சில் மாறி மாறிப் பலங்கொண்ட மட்டும் குத்த ஆரம்பித்தாள்.

“பாவி…பாவி… ஏன் இப்படிச் செஞ்ச?என் அப்பா முகத்தைக் கடைசியா ஒருமுறை கூடப் பார்க்க விடாம செஞ்சுட்டியே.உனக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்?”வாய் ஓயாமல் புலம்பிக்கொண்டே அழுகையுடனே கணவனைக் கை ஓயும் மட்டும் அடித்துக் கொண்டு இருந்தாள்.

அவள் அடிகள் அனைத்தையும் அமைதியாக வாங்கிக் கொண்டான் ஆதித்யன்.அடித்து ஓய்ந்தவள் அப்படியே கால்கள் தளர அவனது காலடியிலேயே அமர்ந்து கொண்டாள்.சற்று நேரம் பொறுத்துப் பார்த்தவன் அவளிடம் எந்த அசைவும் இல்லாததால் கைகளில் அவளை ஏந்திக் கொண்டு கட்டிலில் அவளைப் படுக்க வைத்தான்.

அவளது மறுப்புகள் கூட மிகப் பலவீனமாகவே வெளிவந்தது.படுக்கையில் அவளைப் படுக்க வைத்து அவளின் முகத்தை மறைத்து இருந்த முடிகளைக் காதோரம் ஒதுக்கி விட்டவன் ,எழுந்து நின்று போனை எடுத்து யாரிடமோ பேச ஆரம்பித்தான்.

சில நிமிடங்களில் அறைக்கதவு தட்டப்பட அவளை அமைதியாக அப்படியே படுத்து இருக்கும்படி சொல்லி விட்டு எழுந்து போய்த் தானே கதவை திறந்தான்.

அறைவாசலில் வீட்டு வேலையாட்கள் கையில் சில பொருட்களைத் தூக்கிக்கொண்டு நிற்பதை பார்த்ததும் அவர்களுக்கு வழி விட்டு நின்றவன் பொருட்களை உள்ளே வைக்குமாறு பணித்தான்.அவர்கள் அகன்றதும் கதவை தாளிட்டு விட்டு அவளின் அருகில் வந்தான்.

“உங்க அப்பா உன்கிட்ட சில பொருட்களைக் கொடுக்கச் சொல்லி என்கிட்டே தந்து இருந்தார்.அதை பார்க்கிறாயா?”

அழுது கொண்டே இருந்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு மெல்ல எழுந்து அமர்ந்தாள்.அதில் அவருடைய தந்தை அவளுக்கு எழுதிய ஒரு கடிதமும் சில பொருட்களும் இருந்தது.

“அன்புள்ள அரசிக்கு,
நான் உயிரோடு இருக்கும் வரை நீ இந்தக் கடிதத்தைப் படிக்க அவசியம் இருக்காது.நான் இறந்த பிறகு தான் இந்தக் கடிதம் உன்னுடைய பார்வைக்கு வரும்.
ஊரில் இருந்த சொத்துக்களை எல்லாம் எனக்குப் பிறகு உன்னுடைய பிள்ளைகளைச் சேரும் என்று உயில் எழுதி வைத்து விட்டேன்.என்னுடைய பேரக் குழந்தைகளுக்காக நான் ஆசையாக வாங்கிய சின்னப் பரிசுகள் இதோடு இருக்கும்.
வாங்கிப் பத்திரமாக வைத்துக் கொண்டு உன்னுடைய குழந்தைகளுக்குப் போட்டு அழகு பார்.அவையெல்லாம் ஏதோ தோன்ற எப்பொழுதோ வாங்கி வைத்தவை.தேவைப்பட்டால் உரிய நேரத்தில் இதை விட அதிகம் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து இருந்து விட்டேன்.இனி தான் அதற்கு வாய்ப்பே இல்லையே!
நம்ம குடும்பத்துக்கு நீ ஒருத்தி தான் ராசாத்தி வாரிசு.உங்க அம்மா வாழ முடியாம போன வாழ்க்கையை அவளுடைய பங்கிற்கும் சேர்த்து நீ வாழ்ந்து காட்டணும்.இது தான் என்னுடைய ஆசை இதைச் செய்வாயா?

என்ற கேள்வியுடன் அந்தக் கடிதம் முடிந்து இருந்தது.கடிதத்தில் தந்தையே வந்து நேரில் பேசுவதைப் போல உணர்ந்தாளோ என்னவோ சற்று நேரம் கடிதத்தை முகத்தில் வைத்து அதில் கண்ணீரை வடித்தாள்.

அந்தக் கடிதத்தின் கூடவே சில நகைகளும் இருந்தது.அவற்றில் பெரிய நகைகள் எல்லாம் அவளுடைய தாயினுடையது.அதை தவிர இன்னும் சில நகைகளும் இருந்தன.

வெள்ளியில் அரை ஞாண் கயிறு,தங்கத்தில் குட்டி வளையல்,மோதிரம்,வைரம் பதித்த குட்டி செயின் ஒன்றும் இருந்தது.இதை எல்லாம் தன்னுடைய தந்தை ஆசையாக வாங்கி வைத்தது என்பது அவளது கண்ணீரை இன்னும் அதிகப்படுத்தியது.

“உங்க அப்பாவோட ஆசை இது தான் .இதை உன்னிடம் சொல்ல சொன்னார்.இனியும் இந்த மாதிரி முட்டாள்தனமான முயற்சிகள் எதுவும் செய்ய மாட்டாய் தானே?”அவன் குரலில் எதிர்பார்ப்பும்,கேள்வியும் கலந்தே இருந்தது.

“கண்டிப்பா செய்வேன்…என் அப்பாகிட்டே இருந்தா தான் எனக்குச் சந்தோஷம் நிம்மதி எல்லாம்.எனக்கு இங்கே எதுவும் பிடிக்கலை….யாரையும் பிடிக்கலை”. ‘உன்னையும் சேர்த்து தான்’ என்று அவளது பார்வை சொல்லாமல் சொல்லியது.

“உங்க அப்பன் சரியான ஃபிராடா இருப்பான் போல”
அவனுடைய வார்த்தையில் மிதமிஞ்சிய ஆத்திரம் வரப்பெற்றவள் எழுந்து அவனது சட்டை காலரை பற்றினாள்.

“என் அப்பாவை பத்தி இன்னொரு வார்த்தை தப்பா பேசினா…நான் உங்களைக் கொல்லவும் தயங்க மாட்டேன்.அவரை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?”கோபத்தில் மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க பேசினாள் பொழிலரசி.

ஒற்றைக் கை அசைவில் அவளது கரத்தை தள்ளி விட்டவன், “உன்னை என் தலையில் கட்டியது அவர் தான்.இப்போ நீ என்னடான்னா தற்கொலை செஞ்சே தீருவேன்னு அடம் பிடிக்கிற.இப்போ இதனால எனக்குத் தான் நஷ்டம்.சமூகத்தில் என்னோட மதிப்பு,மரியாதை எல்லாமே போகும் தெரியுமா? இதுக்கு எல்லாம் காரணம் யாரு உங்க அப்பன் தானே?”அவன் குரலில் அப்பட்டமான குற்றசாட்டு இருந்தது.

“உன்னால் உன்னோட அப்பாவுக்குச் செத்த பிறகும் கூட நிம்மதி கிடையாது.உனக்கும் அதில் தான் ப்ரியம் என்றான பிறகு எனக்கு மட்டும் என்ன நஷ்டம்.போ..போய் உன் இஷ்டம் போலத் தற்கொலை செய்து கொள்…உங்க அப்பா தானே வாக்கு கொடுத்தார்.அதை நீ காப்பாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை தான்.அதை உன்னிடம் எதிர்பார்ப்பதும் என்னுடைய முட்டாள்த்தனம் இல்லையா?

உங்க அப்பன் என் வாழ்க்கையில் மண் அள்ளி போட்டுட்டான்.நீ தற்கொலை செஞ்சு அதை உண்மையாக்கு போ”அவளை தள்ளி விடாத குறையாகச் சொன்னான்.

பொழிலரசி அப்படியே திக்பிரமை பிடித்தவள் போல நின்றாள்.நான் தற்கொலை செய்து கொண்டால் அத்தோடு பிரச்சினை முடிந்து விடுமா என்ன?என் அப்பாவுக்குத் தானே அவப்பெயர்…என் அப்பாவின் கடைசி ஆசையை நான் நிறைவேற்ற வேண்டாமா?என்றெல்லாம் கேள்விகள் அவள் மனதில் தோன்ற சில நிமிடங்கள் யோசித்தவள் தீர்க்கமான குரலில் அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

“எங்க அப்பாவால் இதுவரை யாருடைய வாழ்க்கையிலும் எந்த விதமான கெடுதலும் நடந்தது இல்லை.இனியும் நடக்கப் போவதும் இல்லை.இனி நான் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் போதுமா?”

“அதை நான் நம்ப மாட்டேன்…நீ ஒருவேளை பேச்சு மாறினால்…”அப்பொழுதும் அசராமல் நின்று அவளை எதிர்க்கேள்வி கேட்டான்.

“இது நான் கொடுத்த வாக்கு இல்லை.என் அப்பா உங்களுக்குக் கொடுத்த வாக்கு.அவருடைய மகளாக அதைக் காப்பாற்றுவது என்னுடைய கடமை.”

“ஒருவேளை நீ இதை மறந்தால்….”

“நிச்சயம் மறக்க மாட்டேன்…என்னால் என்னுடைய அப்பாவுக்கு எந்தவிதமான கெட்ட பெயரும் வராது.”ஆணித்தரமாகச் சொன்னாள்.
அசட்டையாகத் தோளை குலுக்கியவன் வேலையாட்கள் கொண்டு வந்த பொருட்களில் இருந்து ஒரு பார்சலை கையில் எடுத்து பிரிக்க ஆரம்பித்தான். அதில் இருந்த அவளுடைய தந்தையின் போட்டோவை எடுத்து அறையில் மாட்டியவன் அவளைத் திரும்பிப் பார்த்து பேச ஆரம்பித்தான்.

“தற்கொலை எண்ணம் வந்தா இந்தப் போட்டோவை பார்த்துக் கொள்…” என்று சொன்னவன் நினைத்ததைச் சாதித்து விட்ட திருப்தியோடு முகத்தில் லேசான புன்னைகையோடு அறையை விட்டு வெளியேறினான்.

அவன் சென்ற பிறகும் தந்தை எழுதிய கடிதத்தையும் அவர் வாங்கி வைத்து இருந்த பொருட்களையும் பார்த்தவள் ஏதோ தோன்ற மீண்டும் தந்தையின் கடிதத்தை எடுத்து உற்று பார்க்கலானாள்.

‘இது அப்பாவின் கையெழுத்து போல இல்லையே’ என்ற குழப்பம் அவளை மேலும் சிந்திக்க விடாமல் செய்தது.
Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here