Kadhale Nee Kaanala Tamil Novels 30

0
2022
Madhumathi Bharath Tamil Novels

“இதில் நீ எங்கே வந்தாய் கார்த்தி?”அவனுடைய வார்த்தையின் பொருளை உணர்ந்து கொண்டு அவ்வாறு கேட்டாள் பொழிலரசி.

“பின்னே நான் இல்லாமலா? நான் இல்லாமல் இந்தக் கதை சாத்தியமே இல்லை அரசி.உன்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் நான் சொல்கிறேன்.அதற்கு முன் கயலின் கழுத்தில் இருந்து கையை எடு.என்னை மாதிரியே தீடீர்னு யார் வேணும்னா இங்கே வரலாம்.அவங்க கண்ணுல இந்தக் காட்சி பட்டா, தேவை இல்லாத கேள்விகளுக்கு நாம மூணு பேரும் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.” புன்னகை மாறாமல் இயல்பான முகத்துடன் பேசினான் கார்த்தி.அவன் சொல்வதில் இருக்கும் உண்மை அவளுக்கும் புரியவே கயலின் கழுத்தில் இருந்து கையை எடுத்து விட்டாள்.

“ரொம்பத் தூரம் பஸ்ல வந்தது அலுப்பா இருக்கு அரசி…இப்படி உட்கார்ந்து பேசுவோமா? கயல் நீ போய் அம்மாகிட்டே சொல்லி எனக்குக் குடிக்க ஏதாவது கொண்டுக்கிட்டு வர்றியா?”கண்களால் தங்கையை அங்கிருந்து அப்புறப்படுத்தினான்.

வேகமாக அங்கிருந்து நகர முயன்ற கயலின் கைகளைப் பிடித்துத் தடுத்து நிறுத்தியவள் அழுத்தமான குரலில் பேசலானாள். “சீக்கிரம் வரணும்.அங்கேயே தங்கிடக் கூடாது”பரிதாபமாகக் கார்த்தியை ஒரு பார்வை பார்த்த கயல் மெதுவாகத் தலை அசைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

“இப்போ சொல்லு கார்த்தி…இந்த விஷயத்தில் உன் பங்கு என்ன? ஒருவேளை என்னைக் கொல்ல முயற்சி செய்ததில் உனக்கும் பங்கு இருக்கா?”கைகளை இறுக கட்டியவாறு அவனுக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டாள்.

“இந்த விஷயம் எதுவும் உனக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை அரசி…இது முழுக்க முழுக்கக் கயலுக்கும்,எனக்கும் மட்டும் தான் தெரியும்.அதனால நான் சொல்றதை எல்லாம் பொறுமையா எந்தக் கேள்வியும் கேட்காம கவனி” என்று சொல்லிவிட்டு அரசியின் முகத்தைப் பார்த்தான்.அதில் எந்தச் சலனமும் இல்லை.அதையே சம்மதமாக எடுத்துக் கொண்டு பேசத் தொடங்கினான் கார்த்தி.

எப்பொழுதும் போலக் காலேஜ் முடிந்து ஊர் திரும்பிக் கொண்டு இருந்த கார்த்தியின் மனம் இறக்கை விரித்துப் பறந்து கொண்டு இருந்தது தன்னுடைய மனதுக்கு இனியவளைக் காணப் போவதை நினைத்து.

‘இந்த முறை எப்படியும் அரசியிடம் தனியா பேசி அவகிட்டே என் காதலைப் பத்தி சொல்லி அவ வாயால சம்மதம் சொல்ல வச்சிடணும்’ என்று எண்ணிக் கொண்டவனை அவனின் மனசாட்சி கேலி பேசியது.

‘இதையே தான் நீ போன தடவையும் சொன்ன?’

‘இந்தத் தடவை எப்படியும் அவளையும் என்னைக் காதலிக்க வைக்காம ஊர் திரும்பப் போவதில்லை நான்’ என்று சற்று திடமாகவே உள்ளூர சொல்லிக் கொண்டவன் பஸ்சை விட்டு இறங்கி வீடு நோக்கி சென்றான்.

போகும் வழியில் சட்டென்று அவனுக்கு ஒரு எண்ணம்… ‘வீட்டுக்கு சென்றால் அவளிடம் உடனே தனித்துப் பேச முடியாது.பேசாமல் அவளது பள்ளிக்கே சென்று விட்டால் என்ன?’ என்று ஒரு எண்ணம் தோன்ற அடுத்த நிமிடம் அவன் கால்கள் அரசி படிக்கும் பள்ளி இருக்கும் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தது.

‘இதோ நெருங்கி விட்டோம்…இன்னும் சில நொடிகளில் பாவாடை தாவணியில் என் பச்சைக்கிளி பறந்து வருவாள்.எப்படியாவது கயலை தனியே கழட்டி விட்டு விட வேண்டும்.அப்பொழுது தான் அவளும் வாய் திறந்து என் மீதுள்ள காதலை ஒத்துக் கொள்ளுவாள்’ என்று எண்ணியவன் வேக நடை போட்டு பள்ளியை நெருங்கினான்.

அவன் பள்ளியை நெருங்கும் முன்னரே ஏற்கனவே பள்ளி முடிந்து மாணவிகள் வெளியேறிக் கொண்டு இருக்க,அவன் கண்கள் ஆவலுடன் அரசியைத் தேடியது.கயல் மட்டும் தனித்து வருவதைப் பார்த்த கார்த்தியின் உள்ளம் ஒரு நொடி நத்தையாகச் சுருண்டது.

‘ஒருவேளை இன்று பள்ளிக்கு வரவில்லையோ’ என்று எண்ணியவன் கயலிடம் சென்று அவளுக்காக வந்தவனைப் போலப் பேச்சுக் கொடுத்தான்.

“கயல்”

“அண்ணா…எப்ப வந்த ஊர்ல இருந்து…”

“இப்ப தான்…பஸ்சை விட்டு இறங்கி நேரா உன்னைப் பார்க்கத் தான் வந்தேன்.ஆமா என்ன நீ மட்டும் தனியா வர்ற? அரசி எங்கே காணோம்?”கண்கள் அப்பொழுதும் அரசிக்காக அலை பாய்ந்த வண்ணம் இருந்தது.

“ஹ… யார் கிட்டே கதை விடற…நீ என்னைப் பார்க்க வரலைன்னு எனக்கு நல்லா தெரியும்.என்னை என்ன சின்னப் பிள்ளைன்னு நினைச்சியா…எனக்கு எல்லா விஷயமும் தெரியும்”

“எ…என்ன விஷயம்?”தடுமாற்றத்தை மறைக்கப் போராடினான் கார்த்தி. ‘தங்கையிடம் போய்க் காதலைப் பற்றி எப்படி இயல்பாகப் பேச முடியும்?வீட்டுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான்.அவனுடைய அப்பா அவன் தோளை உரித்துத் தொங்கப் போட்டு விட மாட்டாரா?’

“நீ அரசியைத் தானே பார்க்க வந்து இருக்க…”

“அரசியையா…சே! சே! அவளை எதுக்கு நான் பார்க்க வரப் போறேன்.நான் உன்னைத் தான் பார்க்க வந்தேன்.”பயத்தில் கார்த்தியின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

“சும்மா நடிக்காதே.எனக்கு எல்லாம் தெரியும்.போன முறை நீ ஊருக்கு வந்தப்போவே அம்மாவும் ,அப்பாவும் நான் தூங்கிட்டதா நினைச்சு உங்க இரண்டு பேரோட கல்யாண விஷயம் பேசினாங்க.அப்போ கூட உனக்கு இதுல நிச்சயம் சம்பந்தம் இருக்காதுன்னு நினைச்சேன்.நீ தான் சரியான சாமியார் ஆச்சே…ஆனா இப்போ நீ இப்படி அரக்கப்பறக்க ஓடி வந்து ஸ்கூல் வாசலில் நிற்கும் லட்சணத்தைப் பார்த்தா அப்படி இல்லை போலவே…” வேண்டுமென்றே தமையனை சீண்டினாள் கயல்.

“அது…அது வந்து உன்னைப் பார்க்க…”

“அண்ணே! எனக்குச் சின்னப் பிள்ளையா இருக்கும் பொழுதே நம்ம குலதெய்வம் பேச்சி அம்மன் முன்னாடி மொட்டை அடிச்சி,காது குத்தி,கம்மலும் போட்டாச்சு.அதனால் புதுசா கதை சொல்றதை நிறுத்திட்டு ஒழுங்கா உண்மையைச் சொல்லு…”

கயலின் கிடுக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டு தவித்தான் கார்த்தி.

“இப்போ உண்மையைச் சொல்றியா? இல்லை அப்பாகிட்டே உன்னைக் கோர்த்து விடவா?”

“ஏய்! கயலு…அப்படி எல்லாம் செஞ்சிடாதே…ப்ளீஸ்!”

“அப்போ உண்மையைச் சொல்லு…”

“அது…வந்து நான் அரசியைத் தான் பார்க்க வந்தேன்”

“ஓ…அதான் மேடம் மதியத்தில இருந்து டென்ஷனா இருந்தாங்களா?”

“ஹே…இதெல்லாம் அவளுக்கு எதுவும் தெரியாது…” என்று சொன்னவன் கயலின் சந்தேகமான பார்வையில் கடகடவென்று பஸ்ஸில் வந்து இறங்கியது முதல் தனக்குத் தோன்றியதையும்,நேராகப் பள்ளிக்கு அவளைக் காண வந்ததையும் சொன்னவன் அவளைத் தனியே பார்த்து பேசி தன்னுடைய காதலை தெரிவித்துப் பதிலுக்கு அவளது காதலையும் அவள் வாயால் அறிந்து கொள்ள முடியாத சோகத்தோடு முடித்தான்.

“ஓ…என்னன்னு தெரியலை அண்ணா…இன்னைக்கு அவ சீக்கிரமே கிளம்பி போய்ட்டா…என்கிட்டே கூட ஒரு வார்த்தை சொல்லலை…”

“ஒருவேளை உடம்பு சரி இல்லையா?” பரபரத்தான் கார்த்தி.

“அப்படி எல்லாம் எதுவும் இருக்காது…அவளோட பாட்டி இன்னைக்கு அவளோட அப்பா வருவார்னு ஏதாவது புதுசா சமைக்கிறதா சொல்லி இருப்பாங்க…அதான் என்னைப் பத்திக் கூட மறந்துட்டு ஓடிட்டா” என்று கேலி பேசி சிரித்த கயல் அப்பொழுது தான் கவனித்தாள் சிரிப்பில்லாத தமையனின் முகத்தை.

“என்ன அண்ணா..ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரி ஆகிடுச்சு?”

“ம்ச்!…அப்பா, அம்மா கல்யாண விஷயம் பேசுறதுக்கு முன்னாடி அவ கிட்டே தனியா பேசி அவளுக்கும் என்னைப் பிடிக்குமான்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்.ஆனா…”

“அதனால என்ன வீட்டுக்குப் போனதும் அவகிட்ட பேசிட்டா போச்சு…”

“இனி எங்கே பேசுறது? அவங்க வீட்டில் அவங்க பாட்டி அவளை என்கூடத் தனியா பேச விட்டுடுவாங்களா? அதுவும் இல்லாம அவங்க அப்பாவும் இந்நேரம் அவங்க வீட்டுக்கு வந்து இருப்பார்.முழுசா இரண்டு நாள் அவளுக்கு நாம யாருமே கண்ணுக்கு தெரிய மாட்டோம்.அவங்க அப்பாவையே சுத்தி சுத்தி வருவா…லீவ் முடிஞ்சதும் அவரும் ஊருக்கு கிளம்பிடுவார்.நானும் காலேஜ் கிளம்பிடுவேன்.அவகிட்டே தனியா பேசவே முடியாது.”

“அதனால என்ன கார்த்தி…இந்த முறை எப்படியும் அப்பாவும்,அம்மாவும் உங்க கல்யாண விஷயத்தைப் பேசிடுவாங்க…அதுக்கு அப்புறம் அவகிட்டே பேசி தெரிஞ்சுக்கிட்டா போச்சு”

“ஒருவேளை அவங்க அப்பா வந்து பேசினதால அவ கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லி இருந்தா?”

“அதனால என்ன வந்தது? நமக்குத் தேவை அவ கல்யாணத்துக்குச் சம்மதிக்கணும் அவ்வளவு தானே?”கயலுக்கு உண்மையில் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது கொஞ்சமும் புரியவில்லை.

‘இதை எப்படித் தங்கையிடம் சொல்வது’ என்று குழம்பி சற்று நேரம் அமைதியாகவே இருந்த கார்த்தி வேறு வழி இல்லாமல் அவளிடம் தன்னுடைய எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டான்.

“அது…வந்து கயல்…எனக்கு அப்பா ,அம்மா பேசுறதுக்கு முன்னாடி கயல்கிட்டே தனியா பேசி அவளுக்கு இதில் சம்மதம் தானான்னு தெரிஞ்சுக்கணும்.எங்க கல்யாணம் அவளோட அப்பா சொன்னதால மட்டும் நடக்கிற விஷயமா இருக்கக்கூடாது.அவளுக்கும் என்னைப் பிடிச்சு இருக்கணும்.ஹ்ம்ம்…இனி தான் அதற்கு வழி இல்லாமல் போச்சே…”மனதை மறையாமல் சொல்லி விட்டு தளர்ந்த நடையோடு செல்லும் அண்ணனின் சோகத்தைத் தாங்க முடியாமல் சட்டென்று அந்த முடிவுக்கு வந்தாள் கயல்.

“அண்ணா…நில்லு.என்கிட்டே ஒரு ஐடியா இருக்கு…இதை செஞ்சா எப்படியும் இன்னும் ஒரு மாசத்துக்கு அரசி கிட்டே யாரும் கல்யாணம் விஷயம் பேச மாட்டாங்க…அந்த டைம் உனக்குப் போதுமா?அதுக்குள்ளே அவ கிட்டே பேசிடுவியா”

“ம்ம்ம்…நிச்சயமா…ஆனா என்ன பண்ணப் போற?”

“அதெல்லாம் சஸ்பென்ஸ்…நீ என் கூட வா…நாங்க எவ்வளவு சினிமா பார்த்து இருக்கோம்” என்று கெத்தாகச் சொல்லிவிட்டுப் பாவாடை தாவணியில் இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்.

“ஏய் கயல்…நீ சொல்றதை பார்த்தா எனக்குச் சந்தேகமா இருக்கு…ஏதாவது ஏடாகூடமா செஞ்சு வச்சிடாதே…இது என் வாழ்க்கை”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்….இப்போ வா இரண்டு பேரும் அரசி வீட்டுக்கு போவோம்…”

“வீட்டுக்கா…அய்யயோ நான் வரலை…இந்நேரம் அவங்க அப்பா வந்தாலும் வந்து இருப்பார்.”

“வருங்கால மாமனார் தானே…வந்து ஒரு ஹலோ சொல்லிட்டு போ”

“ஊஹும்…நான் மாட்டேன்…”

“ஹே…உன்னை ஒரு காரணமாத் தான் வர சொல்றேன்…நீ வந்தா உன் ஆளை பார்க்கலாம்.அப்படியே உன்னோட லவ்வை நீ அவகிட்டே சொல்லலாம்”

“நிஜமாவா?”கார்த்தியின் கண்கள் எதிர்பார்ப்பில் பளபளத்தது.

“நிஜமாத் தான்…இப்போ என் கூட வா” என்று கார்த்தியை அழைத்துக் கொண்டு விறுவிறுவென்று நடந்தவள் அரசியின் வீடு வரும் பொழுதே அரசி கொல்லைப் புறத்தில் தனித்து நிற்பதை பார்த்தாள்.கயல் இருந்த பரபரப்பில் வீட்டின் முன்புறம் இருந்த கூட்டத்தைக் கவனிக்கத் தவறினாள்.

அரசியின் பாட்டியின் திட்டுகளுக்குப் பயந்தும்,அவரிடம் மாட்டினால் கேள்வி கேட்டே அவரை ஒரு வழி செய்து விடுவார் என்று எண்ணியதாலும் முன் வாசல் வழியாகச் செல்லாமல் கொல்லைப்புறத்திற்குச் செல்லும் சிறு வேலிக்கு அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி அந்தப் பக்கம் குதித்தாள்.இது அடிக்கடி நடக்கும் செயல் தான்.

எப்பொழுதேனும் வடிவம்மாளுக்குத் தெரியாமல் அரசியிடம் தனியே பேச விரும்பினால் கயல் இப்படி வேலி தாண்டி உள்ளே குதிப்பது அவ்வபொழுது நடக்கும் விஷயம் தான்.அரசியிடம் பேசி விடலாம் என்று எண்ணித் திரும்பிய கயல், அங்கிருந்த துணி துவைக்கும் கல்லைத் தாண்டி அரசி நகர்ந்து செல்வதைப் பார்த்தவள் அவசர அவசரமாகக் கார்த்தியிடம் பேசினாள்.

“அண்ணா…நான் எப்படியாவது அரசிகிட்டே பேச்சு கொடுத்து அவளை அந்தக் கிணத்துக்குப் பக்கத்தில கூட்டிட்டு போயிடறேன்.”

“எது அந்த மறுகோடியில் இருக்கே…அந்த கிணத்துக்கா? அவளுக்குத் தான் கிணறுன்னா பயமாச்சே?”

“அதே தான்… அந்தக் கிணத்துக்குப் பக்கத்தில் போனதும் கால் தடுக்கி விழற மாதிரி நான் ஏற்பாடு செய்றேன்.நீ உடனே வந்து கிணத்துல குதிச்சு அவளைக் காப்பாத்திடு”

“அய்யயோ கயல்…இந்த விளையாட்டு வேணாம்…அரசிக்கு நீச்சல் தெரியாது.அதுவும் அவளுக்கு ஏற்கனவே சின்ன வயசில் இது மாதிரி ஒருமுறை நடந்து அவ ரொம்பப் பயந்து போய்க் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஜுரத்தில் இருந்தா…உனக்கு மறந்து போச்சா?”

“எல்லாம் எனக்கு நியாபகம் இருக்கு…இதோ பார் கார்த்தி…இப்போ அரசி கிணத்தில் விழுந்தவுடன் நீ அவளை வந்து காப்பாத்தினா அவளுக்கு உன் மேல தன்னைக் காப்பாத்தின ஹீரோ அப்படிங்கிற எண்ணம் வந்திடும்.அதுவும் இல்லாம நீ சொல்ற மாதிரி அவளுக்குக் காய்ச்சல் எதுவும் வந்தாலும் அதுவும் கூட நல்லது தான்.எப்படியும் கொஞ்ச நாளைக்கு இந்தக் கல்யாண பேச்சை நம்ம வீட்டு ஆட்கள் யாரும் பேச மாட்டாங்க.நீயும் அடுத்த முறை வரும் பொழுது ஒருநாள் முன்னமே லீவ் போட்டு வந்து அரசிகிட்டே பேசிடு.

தன்னைக் காப்பாத்தின ஹீரோ அப்படிங்கிறதால அவளும் உன் காதலுக்குச் சம்மதம் சொல்லிடுவா.சரியா? அப்புறம் நீயும் என்னைப் போலச் சுவர் ஏறிக் குதிச்சு வராம முன் வாசல் வழியா வா… அப்போ தான் நீ கிணத்தில் இருந்து காப்பாத்தின பிறகு பாட்டி கேட்கிற கேள்விக்கு எல்லாம் சரியா பதில் சொல்லி சமாளிக்க முடியும்.

ஏன்னா…என்ன தான் பாட்டிக்கு பேத்தி கிணத்தில் விழுந்தது அதிர்ச்சியா இருந்தாலும்.அந்த நேரத்தில் கூட நீ எப்படி வீட்டுக்குள்ளே வந்தன்னு கரெக்டா கேள்வி கேட்டு வைக்கும்.அதனால நீ முன் வாசல் வழியாவே வா… அரசிக்கு ஜுரம் விட்டதுக்கு அப்புறம் கேட்டா கூட அவளே கால் தடுக்கி விழுந்த மாதிரி சொல்லிட வேண்டியது தான். அப்புறம் ரொம்ப லேட் பண்ணாம சீக்கிரம் உள்ளே வந்து அரசியைக் காப்பாத்திடு.நான் போறேன்.”என்று படபடவென்று சொல்லி முடித்தவள் வேகமாக அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

கார்த்தி எவ்வளவோ தடுக்க முயன்றும் அவனால் முடியாமல் போக ,கத்தி கயலை கூப்பிட்டால் பாட்டியின் காதில் விழுந்து விடுமோ என்று எண்ணி பயந்தவன் வேகமாக முன் வாசல் வழியாக வந்து கயலின் செய்கையைத் தடுத்து நிறுத்தி விடலாம் என்ற எண்ணத்தோடு வீட்டின் முன் வாசலுக்கு விரைந்தான்.

அங்கே வந்த பிறகு தான் வீட்டின் உண்மை நிலவரம் புரிய வர அவன் வருந்தி நின்றது சில நிமிடங்களே.ஏனெனில் இப்பொழுது அவனுக்கு இறந்த பாட்டியை நினைத்து வருந்துவதை விட அரசியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்க , நொடியும் தாமதிக்காது வேகமாக எல்லாரையும் தள்ளிக் கொண்டு பின் வாசலை நோக்கி ஓடினான்.

இவன் வந்து தடுப்பதற்குள் எல்லாம் முடிந்து இருக்க,கார்த்தி வேகமாகக் கொல்லைப்புறத்திற்கு ஓடி வருவதைப் பார்த்த ஊர் மக்கள் என்னவோ ஏதோவென்று அவர்களும் பின் தொடர்ந்து வர கார்த்தியை பின் தொடர்ந்து வந்த கிராமத்து மக்களை எதிர்பாராத கயல் பயந்து போய் அருகில் இருந்த மரத்தின் பின் ஒளிந்து கொண்டாள்.எனவே ஊர் மக்கள் யாருக்கும் இதில் கயல் சம்பந்தப்பட்டு இருக்கும் விஷயம் தெரியாமலே போனது.

“அதுக்கு அப்புறம் உன்னை ஹாஸ்பிடல் சேர்த்த பிறகு தான் உனக்குத் தலையில் அடிபட்டதில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்ட விஷயம் எங்க எல்லாருக்கும் தெரிய வந்துச்சு.இது தான் நடந்தது அரசி…கயல் செஞ்சது தப்பு தான்.நான் இல்லைன்னு சொல்லலை.எனக்காக ஏதோ செய்யணும் இப்படி முன்னே பின்னே யோசிக்காம செஞ்சு வச்சுட்டா…அதுக்காக அவ ரொம்பவே வருத்தப்பட்டா…நீ குணமாகணும்ன்னு நம்ம ஊர் அம்மனுக்குத் தீச்சட்டி எல்லாம் எடுத்தா…”

“இதுனால எல்லாம் சரியாகிடுமா கார்த்தி…என் வாழ்க்கையில் முழுசா மூணு வருஷம் நான் பைத்தியக்காரியா இருந்து இருக்கேன்.யாரால இதோ இவளால் தான்”காபி எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்த கயலை குரோதத்துடன் பார்த்தாள் அரசி.

“அவ இப்படி ஆகும்னு நினைக்கலை அரசி…சினிமாவில் வர்ற மாதிரி வாழ்க்கையிலும் எல்லாம் ஒரே திசையில் நடக்கும்னு நினைச்சுப் பண்ணிட்டா.விவரம் தெரியாத வயசில ஆர்வக்கோளாறு காரணமா செஞ்ச ஒரு விஷயம்.நிச்சயம் அது தப்பு தான்.அதை நான் மறுக்கலை.ஆனா அவளுக்குத் தண்டனை மட்டும் எதுவும் கொடுத்திடாதே.

இந்த மூணு வருஷமும் உனக்குப் பக்கத்தில் இருந்து எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்தா…உன்னோட இந்த நிலைமைக்குத் தான் தான் காரணம்ங்கிற குற்ற உணர்ச்சியில் ரொம்பவே தவிச்சுக்கிட்டு இருந்தா….இப்பவும் அவளுக்கு அந்தக் குற்றவுணர்ச்சி போகலை.தயவு செஞ்சு அவளை மன்னிச்சுடு அரசி”தங்கைக்காகக் கார்த்தி மன்னிப்பை வேண்ட,கண்களால் மன்னிப்பை யாசித்தபடி நின்ற தோழியைப் பார்த்த அரசி ஒருசில நிமிடங்கள் கண்களை இறுக மூடி தன்னைக் கட்டுபடுத்திக் கொள்ளப் போராடினாள்.

“இதுக்காகத் தான் என்னைப் பார்த்த அன்னைக்கு என்கிட்டே மன்னிப்பு கேட்டியா நீ?” கயலை நோக்கி கேட்க அவள் தலை ஆம் என்பது போல அசைந்தது.

“என்னால இவளை மன்னிக்க முடியுமான்னு தெரியலை கார்த்தி.முடிஞ்சா முயற்சி செய்றேன்”

“அதுவே போதும் அரசி”

“கார்த்தி…நான் வேற ஒருத்தரை கல்யாணம் செஞ்சுகிட்டது பிடிக்காமத் தான் சுசீலா அத்தை என்கிட்டே சரியா பேச மாட்டேங்கிறாங்களா?”

“பிடிக்காமன்னு சொல்ல முடியாது…கொஞ்சம் வருத்தம் அவ்வளவு தான் அரசி.அவங்க உன்னைத் தன்னோட மருமகளாவே நினைச்சுக்கிட்டு இருந்தாங்க.ஆனா திடீர்னு உனக்கு வேற இடத்தில் கல்யாணம் ஆனதில் அவங்களுக்கு வருத்தம்.அவ்வளவு தான் அரசி”

“வருத்தம் அவங்களுக்கு மட்டும் தானா கார்த்தி…உனக்கு இல்லையா?”

“எனக்கு வருத்தம் இல்லைன்னு நிச்சயம் பொய் சொல்ல மாட்டேன் அரசி.”

“ஒண்ணை மட்டும் நல்லா நியாபகம் வச்சுக்கோ கார்த்தி.நான் இப்போ பொழிலரசி விக்ரமாதித்யன்.அவரோட மனைவி.என்னைப்பற்றித் தேவை இல்லாத நினைவுகள் உன் மனதில் ஏதாவது இருந்தா அதை அழிச்சிடு”கம்பீரத்தோடு சொன்னவளை வியப்புடன் பார்த்தான் கார்த்தி.

“முயற்சி செய்றேன் அரசி.ஆனா எங்களால உன்னோட வாழ்க்கைக்கு இனி எந்தத் தொந்தரவும் இருக்காது.அப்புறம் அரசி…இந்த விஷயம் எதுவும் அம்மா,அப்பாவுக்குத் தெரியாது.ப்ளீஸ்! நீயும் சொல்லிடாதே.அவங்களால தாங்க முடியாது”

“சரி கார்த்தி…”என்று சொல்லி விட்டு ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள்.

“இன்னைக்கு நீ ஓய்வெடு கார்த்தி…நாளையில் இருந்து நம்ம வேலையை ஆரம்பிக்கலாம்.அப்புறம் நீ இங்கே அடிக்கடி வர வேணாம்.எதுவா இருந்தாலும் கயல்கிட்டே சொல்லி விடு”

“ஏன் அரசி”

“என் கணவர் என்னுடைய பாதுகாப்புக்காக ஆட்களை ஏற்பாடு பண்ணி இருக்கார்.அவங்க கண்காணிப்பில் தான் நான் இருக்கிறேன்.நீ அடிக்கடி வந்து போனால் தேவை இல்லாத சந்தேகம் வரும்.அதனால தான்.”

“இந்த அளவு நீ கண்காணிக்கப்படும் நேரத்தில் இதெல்லாம் அவசியமா அரசி”

“நிச்சயம் அவசியம் தான்.நீங்க இரண்டு பேரும் இப்போ கிளம்புங்க.நான் கொஞ்சம் தனியா இருக்கணும்.”

மறுபேச்சின்றி இருவரும் வெளியேறி விடச் சற்று நேரம் சேரில் அமர்ந்து தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் பொழிலரசி.சில நிமிடங்கள் கழித்து வாசலில் யாரோ அழைக்கும் குரல் கேட்டு வெளியே சென்று யார் என்று எட்டிப் பார்த்தாள்.வாட்ட சாட்டமாக இரண்டு தடியன்கள் நின்று கொண்டு இருந்தனர்.அவர்கள் கையில் இருந்த போனை அவளிடம் நீட்டினர்.

“ஆதி சார் லைன்ல இருக்கார் மேடம்.உங்ககிட்ட பேசணும்னு சொன்னார்”என்று சொல்லி போனை கொடுத்தவர்கள் அடுத்த நிமிடம் மாயமாக மறைந்து விட்டு இருந்தனர்.

“விக்கிரமா”காதலை குரலில் தேக்கி அழைத்தவள் அவனின் கேள்வியில் ஆடிப் போனாள்.

“இப்போ உன்னை வந்து ஒருத்தன் பார்த்துட்டு போனானே அவன் யார்?” வார்த்தைகளில் விவரிக்க முடியாத உஷ்ணம் அவன் குரலில்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here