Madhumathi Bharath Tamil Novels

“ஓ! அதுவா….ஊரில் இருந்து கயலின் அண்ணன் கார்த்தி வந்து இருந்தார் விக்கிரமா.வந்தவர் என்னைப் பார்த்து நலம் விசாரிச்சுட்டுப் போனார்”கொஞ்சம் கூடப் பதட்டம் இல்லாமல் இயல்பான குரலில் சொன்னாள் அரசி.

“அவன் எதுக்குடி உன்னை வந்து நலம் விசாரிச்சுட்டுப் போறான்”ஆத்திரம் இன்னும் குறைந்தபாடில்லை ஆதித்யனுக்கு.

“ஒரே ஊரில் ஒண்ணா வளர்ந்த பொண்ணு.கல்யாணம் முடிஞ்சு சொந்த ஊருக்கு வரும் பொழுது ஊரில் எல்லாரும் தான் வந்து விசாரிச்சுட்டுப் போவாங்க”உண்மை நிலையை எடுத்துக் கூறினாள் அரசி.ஆதித்யனிடம் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தான் அவனுக்குக் கோபமூட்டுவது போலப் பேசுவது என்பது அவளுக்கும்,அவள் ஏற்று இருக்கும் செயலுக்கும் உகந்தது அல்ல.முடிந்த அளவு தணிவாகவே பேசி காரியம் சாதிப்பது தான் புத்திசாலித்தனம் என்பது அவளது எண்ணம்.

“அதெல்லாம் சரி தான்.அவன் எப்படிக் கரெக்டா நீ வந்து இறங்கின உடனே உன் பின்னாலேயே வால் பிடிச்சுக்கிட்டு வந்த மாதிரி வந்து இறங்கினான்.”

“கார்த்திக்கு இப்போ லீவ் போல…அவர் எதேச்சையா தான் வந்து இருக்கார்”

“நீ இங்கே இருப்பது அவனுக்கு எப்படித் தெரியும்? நீ சொன்னியா?”

“நான் எப்படி அவர்கிட்டே சொல்லி இருக்க முடியும்.அவர்கிட்டே தொடர்பு கொள்ள எனக்கு எனக்கு எந்த வழியும் இல்லையே?”சொல்வது பொய் என்றாலும் அதையே அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் பொழிலரசி.அவளுக்கு வேறு வழி இல்லை.இப்பொழுது அவள் குரலில் கொஞ்சம் தடுமாற்றம் வந்தாலும் ஆதித்யன் அதைக் கண்டு பிடித்து விடுவான்.

“அது தான் அன்னைக்கு ஊரில் அவன் கார்டை வாங்கி வச்சு இருந்தியே”கிடுக்குப் பிடி போட்டான் ஆதித்யன்.

“அதைத்தான் அப்பவே என்கிட்டே இருந்து வாங்கி வச்சுட்டீங்களே…அந்த கார்ட் இப்போ எங்கே இருக்குனு கூட எனக்குத் தெரியாது”குரலில் லேசான சலிப்பை முயன்று வருவித்தபடி பேசினாள்.

“என்னடி சலிச்சுக்கிற”இன்னமும் கோபம் தணியாமல் கேள்வி கேட்டான் ஆதித்யன்.

“ம்ச்…வேற என்ன செய்யச் சொல்றீங்க? போன் பண்ணி ஆசையா ஏதாவது பேசுவீங்கனு எதிர்பார்த்தா…நீங்க என்னடான்னா சம்பந்தமே இல்லாதவங்களைப் பத்தி எல்லாம் விசாரணை பண்ணிக்கிட்டு இருக்கீங்க”

அவளின் இந்தப் பதில் நிச்சயம் ஆதித்யனின் மனதை குளிர்விக்கும் என்பது அரசிக்கு தெரியும்.அவளின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.கார்த்தியை சம்பந்தமே இல்லாதவன் என்று அரசி கூறியதும் அவனுக்குள் எரிந்து கொண்டு இருந்த கோபத்தீ மெல்ல அணையத் தொடங்கியது.அதற்குப் பதிலாக மனைவியவளின் வார்த்தைகளால் அவனிடம் மோகத்தீ பற்றிக் கொண்டது.

“ஹே… என்னை உன் மனசு தேடுதா அரசி…”

“பின்னே தேடாதாக்கும்”உண்மையைத் தான் சொன்னாள் அரசி.

“நான் வேணும்னா இப்பவே கிளம்பி வரட்டுமா?” என்ற கேள்வியைக் கேட்டு அவளைப் பதற வைத்தான் ஆதித்யன்.

“அய்யயோ வேணாம்…”கொஞ்சம் சத்தமாகவே பதறி விட்டாள் அரசி.

“ஏன்டி இவ்வளவு டென்ஷன் ஆகுற…நான் உன் புருஷன் தானே…ஓ…அவன் இருக்கும் நேரத்தில் உன்னை நான் பார்க்க வரக்கூடாதுன்னு சொல்ல வர்றியா?” வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறப் போவதின் அறிகுறி தெரிய ஆரம்பிக்க உள்ளுக்குள் அலறியவள் ஆதித்யன் இங்கே வருவதை எப்படியும் தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் குரலை குழைத்து பேச ஆரம்பித்தாள்.

“இது ஆடி மாசம் விக்கிரமா…புதுசா கல்யாணம் ஆனவங்களை ஒண்ணா இருக்க விட மாட்டாங்க…அதான் உங்களை இங்கே வர வேண்டாம்னு சொன்னேன்”அவன் நம்பும்படியான பதிலை சொன்னாள்.

“ஏன்டி கட்டுன பொண்டாட்டியை பார்க்க வர்றது கூடக் குத்தமா?”

“நீ வந்தா…வெறுமனே பார்த்துட்டு மட்டும் போயிடுவியா”லேசான குரலில் அவள் முணுமுணுக்க ,காதை தீட்டி வைத்துக் கொண்டு காத்து இருந்தவனுக்கு அந்த வார்த்தைகள் தெளிவாகப் புரிந்தது.

“ஏய்….”அவன் குரலின் மாற்றம் அவளுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த தவறவில்லை.

“இங்கே கோவில் திருவிழாக்கு எல்லா ஏற்பாடும் ஆரம்பம் ஆச்சு…இதோ நாளைக்குக் கோவிலில் காப்பு கட்டியாச்சுன்னா உள்ளூர் ஆட்கள் வெளியே போகவும் முடியாது.வெளியூர் ஆட்கள் உள்ளே வரவும் கூடாது.அது மட்டும் இல்லாம இந்த மாதிரி நேரத்தில் ரொம்பவும் சுத்த பத்தமா இருக்கணும்.அப்புறம் தெய்வக் குத்தமாகிடும்”

“இப்போ நான் அங்கே கிளம்பி வந்தா உங்க ஊர் சாமிக்குக் கோபம் வந்து கண்ணைக் குத்திடுமா”

“சாமி கண்ணைக் குத்திடுமா இல்லையானு எனக்குத் தெரியாது.ஆனா நான் கண்ணை நோண்டிடுவேன்”

“இதெல்லாம் ரொம்ப அநியாயம்டி…அதுவும் கூட எனக்கு வசதி தான்”உற்சாகம் கொப்பளித்தது அவன் குரலில்.

“கண்ணை நோண்டுறதுல என்ன வசதி…நீ வில்லங்கமா யோசிக்கிற மாதிரி இருக்கே…”

“சே! சே! நான் நல்ல பிள்ளை பொழில்…ஏற்கனவே உன்கிட்டே சொல்லி இருக்கேன்ல.எங்க சமையல்கார தாத்தா சொல்லுற மாதிரி கண்ணளவு எடுத்தாச்சு…இந்த கையளவு தான் இன்னும் எடுக்கலை… கண்ணு தெரியலைனா,அது எனக்கு வசதியா போய்டும்” என்று சொல்லிவிட்டு குறும்பாக அடக்க மாட்டாமல் சிரித்து விடப் பொழிலரசியின் முகம் சிவந்து போயிற்று.

“உங்களை….”வெட்கத்தை மறைக்கப் பொய்க் கோபம் கொண்டாள் பொழிலரசி

“ம்…என்னை”அவன் ஏக்கத்தையும்,எதிர்பார்ப்பையும் கலந்த குரலில் பேச அவளின் பொய்க் கோபம் அவளிடம் இருந்து ஓடிச் சென்று விட்டது.

“இப்படி எல்லாம் பேசினா எப்படி?”சிணுங்கலாகக் கேட்டாள் பொழிலரசி.

“வெறும் பேச்சு தானே…அதற்கும் தடை போட்டா எப்படி?” அவளைப் போலவே அவனும் பேச,பொழிலரசி தவித்துப் போனாள்.

“ப்ளீஸ்! விக்கிரமா”

“என்னடி செய்யட்டும்…ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு.உடனே கிளம்பி வந்திடறேன்…”அவன் அதிலேயே குறியாக நிற்க பாவையவளை கணவனின் ஏக்கம் தாக்கினாலும் இப்பொழுது அவளுக்கு இருக்கும் கடமை அவளைத் தடுக்க மனதை முயன்று கட்டுக்குள் கொண்டு வர போராடினாள்.

“இப்படி எல்லாம் பேசாதே விக்கிரமா…பிரிஞ்சு இருக்கிறது உனக்கு மட்டும் தான் கஷ்டமா…எனக்கு இல்லையா? நீ இப்படி எல்லாம் பேசும் பொழுது எனக்கு உடனே கிளம்பி வந்துடணும் தோணுது”

“வந்துடுடி…உன்னை யார் தடுக்கப் போறாங்க…அப்படியே யாராவது தடுத்தால் என்கிட்டே சொல்லு…நான் வந்து உன்னைக் கூட்டிக் கொண்டு வர்றேன்”எதிர்ப்பார்ப்போடு ஆர்வமாகக் கேட்டவனின் குரலில் இருந்த காதல் எப்பொழுதும் போல அந்தக் கனமும் அவளைத் தாக்க ‘அவனிடம் போய் விடு’ என்று பரபரத்த மனதை அடக்கினாள்.

“டாக்டர் சொன்னதை மறந்துட்டீங்க போல”

“ஆமா இல்லை…அதை மறந்துட்டேனே…சரி சரி நீ அங்கேயே இருந்துட்டு வா.அப்போ தான் உனக்கு நல்லது.”

“ஏங்க”

“என்னங்க…”அவளைப் போலவே பேசி அவளைக் கேலி செய்தான்.

“நான் ஒண்ணு கேட்டா கோபப் பட மாட்டீங்களே”

“அது நீ கேட்கிற விஷயத்தைப் பொறுத்து இருக்கு…”அமர்த்தலாகப் பேசினான் ஆதித்யன்

“வந்து…உங்க தம்பி கிட்டே பேசினீங்களா?எதுக்காகக் குண்டு வச்சார்னு விசாரிச்சீங்களா?”

“அந்தப் பயல் இன்னும் சிக்கலை பொழில்… எங்கேயோ ஓடி ஒளிஞ்சுக்கிட்டு இருக்கான்.சொந்த தம்பியா போய்ட்டான்.இல்லேன்னா இந்த மாதிரி செஞ்சவனுக்கு இந்நேரம் நரகத்தைக் காட்டி இருப்பேன்.”

“அந்த மேனகாவுக்கு ஏன் என்னைப் பிடிக்கலை?”

“அவளுக்கு இந்த உலகத்தில் அவளைத் தவிர வேற யாரையும் பிடிக்காது.அதையும் தாண்டி அவளுக்குப் பிடிச்ச ஒரு விஷயம் பணம் மட்டும் தான்”

“ஓ…அவளைப் பத்தி என்கிட்டே ஏதாவது சொல்லனும்னு நினைக்கறீங்களா?”லேசாகத் தூண்டில் போட்டுப் பார்த்தாள் அரசி.

“சொல்ற அளவுக்கு ஒண்ணும் இல்லை”

“நிஜமா?”

“…”

“நான் சொல்வதை முழுமனசோடு கேட்பதும் உனக்குக் கஷ்டம், கேட்ட பிறகு அதை நம்புவதும் கஷ்டம்.அதனால் அந்தப் பேச்சு வேண்டாம் பொழில்.”என்று இறுக்கமான குரலில் முடித்து விட அதற்குப் பிறகு அதைப் பற்றிப் பேச பொழிலரசிக்கு மனமில்லை.

“சரி இப்போ நீ பேசிக்கிட்டு இருக்கிற போன் உனக்குத்தான்.நீயே வச்சுக்கோ…இங்கே ஊரில் இருக்கும் பொழுதே வாங்கிக் கொடுத்து இருக்கணும்.அப்போ அந்த எண்ணமே எனக்கு வரலை.இப்போ உனக்குத் தேவைப்படும் வைச்சுக்கோ”

“எதுக்கு இப்போ புதுசா இந்தப் போன் வாங்குனீங்க…அதான் வள்ளிகிட்டே போன் இருக்கு இல்ல”

“ஏன்டி ஒவ்வொரு முறை உன்கிட்டே பேசும் பொழுதும் நான் வள்ளிக்கு போன் பண்ணிக்கிட்டு இருக்க முடியுமா?எனக்கு நினைச்ச நேரம் நேரடியா உன்கிட்டே பேசணும். உன் புருஷனுக்கு இருக்கிற வசதிக்கு இதெல்லாம் ஒண்ணும் பெரிசு இல்லை.அதனால் பேசாம அடக்கி வாசி…”

“சும்மா மிரட்டிக்கிட்டே இருக்காதீங்க”

“வேற என்ன செய்யட்டும்? கொஞ்சட்டுமா?”

“நான் வேணாம்னா சொன்னேன்…”

“அடப்பாவி…இப்போ பக்கத்தில் இல்லைன்னு ரொம்பச் சவடால் பேசு.கிட்டே வந்தா மயக்கம் போட்டு விழுந்து வை…”நூறாவது முறையாகச் சலித்துக் கொண்டவனைப் பார்த்து கலகலவென்று சிரித்தவள் சற்று நேரம் மௌனமாகி பின் மெல்ல வாய் திறந்து அன்று நடந்ததை மெல்ல அவனுக்குச் சொன்னாள்.அப்படி அவள் சொல்வதினால் பின்னால் ஏற்படப் போகும் விளைவுகள் மட்டும் முன்னரே அறிந்து வைத்து இருந்தால் அவள் வாயே திறந்து இருக்க மாட்டாள்.

“ஏய் … பொழில் அப்போ உனக்கு அன்னைக்கு நான் அப்படி நடந்துகிட்டதால மயக்கம் வரலையா?”ஆனந்த கூச்சலிட்டான் ஆதித்யன்.

“இல்லைங்க…இதுக்கு முன்னாடி ஹாஸ்பிடல்ல இருந்தப்போ சம்பந்தம் இல்லாம சில காட்சிகள் நினைவுக்கு வந்த மாதிரி ,அப்பவும் வந்துச்சு அவ்வளவு தான்.”

“என்ன காட்சி அரசி”அவன் குரலில் இருந்த பதட்டத்தை அவளால் உணர முடிந்தது.

“அது வந்து…வந்து”

“சீக்கிரம் சொல்லுடி…”

“வந்து…”

“அடியேய்…இன்னும் எவ்வளவு நேரம் தான் வந்துகிட்டே இருப்ப…மனுஷனோட பொறுமையைச் சோதிக்காம சீக்கிரம் சொல்லு”

“நீங்க உடம்பெல்லாம் நனைஞ்சு போய் இருக்கீங்க.உங்க முகத்தில் இருந்து சொட்டுச் சொட்டா தண்ணீர் வழியுது.அப்படியே என் பக்கத்தில் வந்து என்னை …எனக்கு முத்தம் கொடுக்கிற மாதிரி”

“ம் அப்புறம்?” மேற்கொண்டு பேச அவளை ஊக்கினான்.

“வேற ஒண்ணும் வரலை.அதை பத்தி யோசிச்சப்பத் தான் தலைவலிக்க ஆரம்பிச்சுடுச்சு”

“ஓ…சரி சரி…நான் கூட ரொம்பப் பயந்து போயிட்டேன் பொழில்.என்னோட முரட்டுத் தனத்தால தான் உனக்கு அப்படி ஆகிடுச்சுன்னு…”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை.”

“சே! இப்படின்னு தெரிஞ்சு இருந்தா உன்னை ஊருக்கு அனுப்பி இருக்கவே மாட்டேன்டி.ஏற்கனவே நம்ம ரொம்ப லேட்…இதுல இப்படி ஒரு தடங்கல் வேற வரணுமா?”

“அப்படி எல்லாம் யோசிக்காதீங்க…இன்னும் ஒரு மாசம் தானே…”

“என்னடி அவ்வளவு ஈஸியா சொல்லிட்ட…ஒரு மாசம்…முப்பது நாள்.நான் வேணும்னா இப்பவே கிளம்பி உன்னை இங்கே கூட்டிட்டு வந்துடட்டுமா” என்று மீண்டும் அதே பல்லவியைப் பாட பொழிலரசி ஆதித்யனின் நிலை கண்டு உண்மையில் உள்ளுக்குள் உருகித் தான் போனாள்.ஆனாலும் வெளியே காட்டினால் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் அது ஆபத்து என்று எண்ணியவள் அவனைத் தடுப்பது போலப் பேசினாள்.

“விக்கிரமா…முதலில் ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ…நீ இப்போ உடனே கிளம்பி இங்கே வர முடியாது.அங்கே ஊரில் இருக்கும் அவசர வேலை எல்லாம் முடிச்சுட்டு நாளைக்குத் தான் இங்கே வர முடியும்.நாளைக்கு ஊரில் அம்மனுக்குக் காப்பு கட்டிட்டா அதுக்கு அப்புறம் என்ன நடந்தாலும் சரி…உன்னால ஊரை விட்டு ஒரு மாசத்துக்கு வெளியே போக முடியாது.அது உன்னோட தொழிலை பாதிக்கும்.உன்னை விட்டா வேற யார் பிசினெஸ்சை பொறுப்பா பார்த்துப்பாங்க…அதனால நல்ல பிள்ளையா இன்னும் ஒரு மாசம் ஊர்லயே இருப்பியாம்.நான் சீக்கிரம் வந்துடுவேனாம்”குழந்தைக்கு எடுத்து சொல்வது போலச் சொன்னாள் பொழிலரசி.மேலும் சற்று நேரம் பேசிவிட்டு மனமே இல்லாமல் போனை வைத்தனர் இருவரும்.

மாலை நேரம் நெருங்கிக் கொண்டு இருக்க,வள்ளி அரசிக்கு சிற்றுண்டி கொண்டு வந்து கொடுக்க அதை உண்டவள் வீட்டின் முன் பகுதியில் இருந்த திண்ணையில் சேர் போட்டு அமர்ந்து இருந்தாள்.

அப்பொழுது தயங்கி தயங்கி அவள் அருகே வந்த கயலை நிமிர்ந்து பார்த்த அரசி , ‘என்ன’ என்று பார்வையாலேயே வினவினாள்.

“அண்ணா இந்தப் போனை உன்கிட்டே கொடுக்கச் சொன்னார்”

“ம் கொடு”அதை வாங்கிச் சைலண்டில் போட்டு உடைகளுக்குள் மறைவாக வைத்துக் கொண்டாள் அரசி. கயல் இன்னும் அங்கிருந்து நகராமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதை பார்த்தவள் லேசான எரிச்சலுடன் பேசினாள்.

“இன்னும் என்ன வேடிக்கை வேண்டி கிடக்கு…வேறு ஏதாவது சொல்லணுமா? வந்த வேலை முடிஞ்சா கிளம்ப வேண்டியது தானே?”

“என்னைச் சுத்தமா வெறுத்துட்டியா அரசி”கண்களில் கண்ணீர் ததும்பக் கேட்டாள் கயல்.

கண்களை ஒரு நிமிடம் இறுக மூடிய அரசியின் கண் முன்னே சிறு வயது நினைவுகள் குறும்படமென ஓட,பாசத்துடன் தன்னை அரவணைத்துக் கொண்ட தோழியின் முகம் அதில் ஒவ்வொரு காட்சியிலும் வந்து போக அவளையும் மீறி அவள் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடியது.கண்ணீரை அழுந்த துடைத்தவள் ஏதோ நினைவு வந்தவளாக வேகமாகக் கயலின் புறம் திரும்பி பேசினாள்.

“என் வீட்டுக்காரரை நீ இதற்கு முன் பார்த்து இருக்கியா? நம்ம ஊர்ல…”

“இல்லை”

“இந்த ஊருக்கு அவர் எங்க கல்யாணத்துக்கு முன்னாடி வந்து இருக்காரா?”

“இல்லை…அவரை நான் இதுக்கு முன்னாடி உன்னோட வந்தாரே அப்போ தான் முதன்முதலா பார்த்தேன்”

“ஓ…சரி …அன்னைக்கு இரண்டு பேரும் என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க…நீ ரொம்பப் பயந்து போய் இருந்த?”

“அது…அது வந்து எதுக்கு அரசிக்கிட்டே மன்னிப்பு கேட்டனு கேட்டார்…நான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தப்ப தான் நீ வந்து காப்பாத்தின”

“சரி நீ போ”

“என்னை மன்னிக்கவே மாட்டியா அரசி”கண்கள் கலங்க கண்ணீரோடு கேட்ட கயலை தேற்றும் எண்ணமில்லாதவளைப் போலப் பேசினாள் அரசி.

“நீ செஞ்சது சாதாரணமான விஷயம் இல்லை கயல்…உன்னை மன்னிக்கிற அளவுக்கு எனக்கு இன்னும் மனப்பக்குவம் வரலை.இந்த பேச்சு இப்ப வேணாம்.நீ கிளம்பு”என்று உத்தரவாகச் சொன்னவள் கயல் கொடுத்து இருந்த போனை பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தாள்.அடுத்த சில நிமிடங்களில் அந்த எண்ணிற்கு அழைப்பு வர யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு எடுத்து பேசினாள்.

“சொல்லு கார்த்தி”

“…”

“இல்லை கார்த்தி…நாம முதல்ல பேசின மாதிரி இரண்டு பேரும் சேர்ந்து போய் விசாரிக்கிறது இப்ப இருக்கிற சூழ்நிலையில் சரியா வராது.என்னைக் கண்காணிக்க அவர் ஆட்களை வேலைக்கு ஏற்பாடு பண்ணி இருக்கார்.இங்கே நான் தும்மினா கூட அவருக்குத் தெரிஞ்சுடும்.அதனால நீ மட்டும் கிளம்பிப் போய் விசாரி.அப்பபோ போனில் எனக்குத் தகவல் சொல்லு.அடுத்து எங்கே போகணும் என்ன செய்யனும்னு நான் உனக்குச் சொல்றேன்.அதை அப்படியே செய். அது போதும்”

“…”

“வேண்டாம்.என்ன நடந்தாலும் சரி நீ நேரில் வந்து என்னைப் பார்க்க வேண்டாம்.போனில் மட்டும் பேசு.சரிதானா? சரி வள்ளி வர்றா… நான் அப்புறம் பேசறேன்” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவள் வள்ளியை பார்த்து நட்பாகப் புன்னகைத்தாள்.

“என்ன சின்னம்மா…அய்யா கூடப் போன்லயே குடும்பம் நடத்தறீங்களா?”என்று கேலி பேசினாள்.

அவள் சொன்னதை மறுக்கவும் இல்லாமல்,ஒத்துக் கொள்ளவும் செய்யாமல் ‘ஈ’என்று இளித்து வைத்தாள் அரசி.

“இன்னும் ஒரு மாசத்துக்குப் போன் கம்பனிக்காரனுக்கு நல்ல லாபம் தான் போங்க”கிண்டல் செய்து விட்டு இரவு டிபனை செய்வதற்காகத் தனியாகக் கிச்சனுக்குள் நுழைந்தவளின் போனிற்கு நேரடியாக அழைப்பு விடுத்தான் ஆதித்யன்.அரசியின் கெட்ட நேரமோ என்னவோ வள்ளி குரலில் கேலி வழிய ஆதித்யனின் போனை எடுத்துப் பேசினாள்.

“என்ன அய்யா…இப்போ தானே அம்மாகிட்டே பேசி முடிச்சீங்க…மறுபடி அம்மாகிட்டே பேசணுமா?அஞ்சு நிமிஷம் கூட அம்மாகிட்டே பேசாம இருக்க முடியலையா உங்களால?”

‘நான் அரசிக்கு பேசி எப்படியும் ஒரு அரைமணி நேரம் இருக்குமே…என்ன சொல்றா இந்த வள்ளி.ஒருவேளை அப்போ பேசினதைத் இப்போ சொல்றா போல’என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான். வள்ளி இன்னும் லைனில் இருப்பதை உணர்ந்து அரசியைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி பணித்தவன் அடுத்த வேலைகளைப் பார்க்கப் போய் விட்டான்.

அடுத்த இரண்டு நாட்கள் பொழுதை அவன் நெட்டித் தள்ள வேண்டி இருந்தது.அரசி இல்லாமல் வீடு வெறிச்சோடிப் போனது போல இருக்க,வீட்டுக்கே செல்லப் பிடிக்காமல் இரவு முழுவதும் அலுவலகத்திலேயே இருந்தான்.வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள முயற்சித்தான்.ஆனால் எதற்குமே பலன் இல்லை.அவள் மட்டுமே மருந்து என்பது அவனுக்கு நன்றாகப் புரிந்து போனது.ஆனால் இப்பொழுது எப்படி அவளைப் போய்ப் பார்ப்பது? அது தான் முடியாதே.

“ப்ளடி ஆடி மாசம்” என்று கத்தியவன் சுவற்றில் கையை ஓங்கி குத்திக் கொண்டான்.

அவனின் நிலை இப்படி இருக்க,அடுத்த நாள் பொழுது விடிந்தது முதல் அரசி ஒவ்வொரு வேலையாகத் திட்டமிட்டுச் செய்ய ஆரம்பித்தாள்.முதலில் அரசியின் தந்தையின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் காபி ஒன்று வாங்கி வர ஏற்பாடு செய்தாள்.கேட்ட உடன் கிடைத்து விடுமா என்ன? காசு கொடுத்து,அவள் போன் மூலமாகப் பேசி அதன் பின்னரே கிடைத்தது.

அரசிக்கு தனக்கு இன்னும் முப்பது நாள் காலக்கெடு இருப்பதால் எந்த வேலையும் பதட்டப்படாமல் நிதானமாகச் செய்து கொண்டு இருந்தாள்.வள்ளியின் முன் எதையும் காட்டிக் கொள்ளாமல் கார்த்தியின் அழைப்பு வரும் பொழுதெல்லாம் அமைதியாகவே இருந்தாள். அவளுடைய போன் வைப்ரேட் ஆகும் சமயங்களில் வள்ளிக்கு ஏதேனும் வேலை கொடுத்து அனுப்பி விட்டு அவளுக்குத் தெரியாமலேயே எல்லாவற்றையும் பேசி வந்தாள்.வீட்டை விட்டு அரசி எங்கேயும் வெளியே போகாததால் ஆதித்யனும் அரசியைப் பற்றிய எந்தக் கவலையும் இன்றித் தன்னுடைய வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு இருந்தான்.

இரண்டு நாட்களாகப் போனிலேயே அரசியும் ,ஆதித்யனும் பேசிக் கொண்டு இருக்க அரசியை ஆதித்யனின் ஏக்கம் நிறைந்த குரல் வெகுவாகப் பாதித்து இருந்தது.வந்து இருக்கும் காரியம் மட்டும் முடிந்து விட்டால் அடுத்த நிமிடம் அவனுடைய அணைப்பில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உழன்று கொண்டு இருந்தவளின் கவனத்தைக் கலைத்தது காரின் ஹாரன் ஒலியும்.அதை தொடர்ந்து கேட்ட அழுத்தமான காலடி ஓசையும்.

அது யாருடையது என்று அவளுக்குத் தெரியாதா என்ன? முகம் எங்கும் விசிகசிக்க ஆனந்த பரிதவிப்பில் ஓடிப் போய்ப் பார்த்தவளை கொஞ்சமும் ஏமாற்றாமல் அங்கே நின்றவன் அவளுடைய அருமைக் கணவன் விக்ரமாதித்யனே தான்.

ஆனா அவள் எதிர்பார்த்ததற்கு மாறாகக் காதல் சொட்டும் விழிகளோடு அல்ல…கனல் கக்கும் விழிகளோடு….

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here