Kadhale Nee Kaanala Tamil Novels 32

0
2363
Madhumathi Bharath Tamil Novels

“வாங்க…வாங்க…என்ன சொல்லாமல் கொள்ளாமல் இப்படித் திடீர்ன்னு வந்து இருக்கீங்க”பொழிலரசி அவனின் கோபத்தைப் பொருட்படுத்தாமல் அவனை வரவேற்றுக் கொண்டு இருந்தாள்.

“வள்ளி உங்க அய்யா வந்து இருக்காங்க பார்…அவருக்குக் காபி கொண்டு வா.சீக்கிரம்”என்று பரபரத்தாள். சமையல் அறையை விட்டு வெளியே வந்த வள்ளியின் முகமும் அந்த நேரத்தில் ஆதித்யனை அங்கு எதிர்பார்க்காததால் ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளானது.

“உட்காருங்க அய்யா…இரண்டே நிமிஷத்தில் காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்.”

“வேண்டாம் வள்ளி…நீ இப்போ கிளம்பி அந்த நர்ஸ் கூடப் போய்த் தங்கிக்கோ…மறுபடி நான் சொன்ன பிறகு நீ இங்கே வந்தால் போதும்” என்று சொல்லி அவளை அனுப்பியவன் கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டு விட்டு அழுத்தமான காலடிகளுடனும்,ஊடுருவும் பார்வையுடனும் அரசியை நெருங்கினான்.

அவனின் பார்வை அரசிக்கு உணர்த்திய சேதியில் அரசியின் வயிற்றில் அமிலம் சுரந்தது.‘என்ன மாதிரியான பார்வை இது…’ பெண்ணவளின் தளிர்மேனி நடுங்கியது. வேட்கையும்,தாபமும் ஒன்றாகக் கலந்து இருக்க அவளை நெருங்கிக் கொண்டு இருந்தவனின் நிதானமான நடையில் அவளுக்குள் இருந்த தைரியம் எல்லாம் பறந்தோடி விட்டது.

“விக்கிரமா”மெல்லிய குரலில் மறுத்துப் பேசத் துவங்கியவளின் பேச்சு அப்படியே அந்தரத்தில் நின்று போனது.தாவி அவளை அணைத்துக் கொண்டவன் அவளின் பேச்சுச் சுதந்திரத்தைத் தான் முதலில் பறித்து இருந்தான்.இதழும்,இதழும் கவி பாட அங்கே சில நிமிடங்களுக்கு மௌனத்தின் ஆட்சி மட்டுமே.

“ஏன்டி இப்படிச் செஞ்ச” தாபத்துடன் அவன் குரல் காதோரம் கிசுகிசுத்தது.

“என்ன செய்தேன்?”அவனிடம் இருந்து விடுபடப் போராடியபடியே பேசினாள் பொழிலரசி.அவளுடைய விலகல் அவனுக்கு எரிச்சலைத் தர அதற்கும் அவள் மேல் தான் கோபத்தைக் காட்டினான்.ஆனால் காட்டிய விதம் தான் வேறாக இருந்தது.அவளின் எலும்புகள் நொறுங்கி விடும் அளவிற்கு அவளை இறுக அணைத்தவன் அன்றைய தினத்தை விட இன்று அதிக வேகத்தைக் காட்டினான்.

சற்று நேரம் அவனை விலக்க முயற்சி செய்த அரசிக்கு ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் போக அது அவனுக்கு வசதியாகப் போனது.தாகத்திற்கு நீர் அருந்தும் குழந்தையைப்போல் சொட்டு கூட மிச்சம் இல்லாமல் அவளைப் பருகி விடத் துடித்தான்.அணைக்கும் பொழுது கார்த்திக் கொடுத்த மொபைல் போன் உறுத்தினாலும் அப்பொழுது அதைக் கண்டு கொள்ளும் மனநிலையில் அவன் இல்லை.

“விக்கிரமா…இது ஆடி மாசம்….”பலகீனமான குரலில் அவனுக்கு நினைவூட்டினாள்.

“இருந்துட்டு போகட்டும்”

“அம்மனுக்குக் காப்பு கட்டியாச்சு…”

“பரவாயில்லை”

“இதெல்லாம் தப்பு”

“எனக்கு இது தான் சரி”

“உங்களை…” என்று பெரும்பாடுபட்டு அவனை விலக்கியவள் கோபமாக அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

“என்ன கிண்டலா பண்ணுறீங்க…ஆமா இப்போ உங்களை யார் இங்கே கிளம்பி வர சொன்னது”

“உனக்கு எல்லாம் கொஞ்சம் கூட இரக்கமே இல்லையாடி …ராட்சசி…”

“எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.முதல்ல கதவை திறங்க…யாராவது பார்த்தா தப்பா போய்டும்.”

“நான் உன் புருஷன்டி.என் கூடத் தனியா இருந்தா யார் என்ன சொல்லுவாங்க…ஓ…அந்த கார்த்தி இன்னும் இந்த ஊரில் தான் இருக்கான் இல்லையா?”அவன் குரலில் இருந்த எரிச்சல் அவனின் மனநிலையைச் சொல்லாமல் சொல்ல இதை இத்தோடு விடுவது நல்லதற்கு இல்லை என்ற முடிவுக்கு வந்தவள் நல்ல விதமாகவே அவனிடம் எடுத்து சொல்லி புரிய வைக்க முயன்றாள்.

“போச்சுடா…இதிலே கார்த்தி எங்கே வந்தார்?அவர் பாட்டுக்கு தேமேன்னு இருக்கார்.அவரை எதுக்கு இதிலே இழுக்கறீங்க?”

“ஏன் அவனைச் சொன்னால் உனக்குப் பொறுக்க முடியவில்லையா?”

“ஆமா…பொறுக்கத் தான் முடியலை.நீங்க இப்படிப் பேசுறதை பார்க்கும் பொழுது.சந்தேகப்படறீங்களா என்னை?” உதடு துடிக்கக் கோபத்துடன் கண்கள் கலங்க நின்றவளின் கோலம் அவனை ஏதோ செய்யச் சட்டென்று அவளை நெருங்கி தோளில் சாய்த்துக் கொண்டான் விக்ரமாதித்யன்.

“சே! சே! அப்படி எல்லாம் இல்லைடி”

“அப்புறம் எதுக்கு எப்பப்பாரு அவரைப் பத்தி பேசறீங்க? நீங்களும் நானும் மட்டும் தனியா இருக்கிற நேரத்தில் எல்லாம் எப்பொழுதும் அவர் பேச்சை எடுப்பது நீங்க தான்.நான் இல்லை”அழுத்தமான குரலில் அவனைக் குற்றம் சாட்டினாள் பொழிலரசி.அது உண்மை என்பதால் சற்று நேரம் மௌனமாக இருந்த ஆதித்யன் தொண்டையைச் செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“அது என்னவோ தெரியலை பொழில்.அவன் என்னை உன்கிட்டே இருந்து பிரிச்சு கூட்டிட்டு போய்டுவானோன்னு எனக்குப் பயமா இருக்கு”

“அப்படினா என்ன அர்த்தம்…என் மேல இன்னும் உங்களுக்கு நம்பிக்கை வரலைன்னு தானே அர்த்தம்”காயம் பட்ட குழந்தையாகக் கண்களில் கண்ணீரோடு கேட்டாள் அரசி.

“அப்படி எல்லாம் இல்லை பொழில்” அவன் குரல் உள்ளே போய் விட்டது.

“அதெல்லாம் இருக்கட்டும்.இப்போ எதுக்கு நீங்க இங்கே கிளம்பி வந்தீங்க?என்னை ஆள் வச்சு வேவு பார்க்கிறது பத்தாதா?நீங்களே நேரில் வந்து பார்த்து உறுதி செஞ்சுக்க இங்கே வந்தீங்களா?”

“ஏய்! என்னடி விட்டா ரொம்பப் பேசுற…அடிச்சு பல்லை எல்லாம் கழட்டிடுவேன்.உன்னை நான் இங்கே பார்க்க வந்தது வேற காரணத்திற்காக”

“என்ன காரணமோ சொல்லுங்களேன் நானும் தெரிஞ்சுக்கறேன்” எள்ளலாக வெளிவந்தது அவள் குரல்.

அவளின் குரலில் இருந்த பேதத்தால் சீண்டப்பட்டவன் அவளை இழுத்துக் கொண்டு அருகில் இருந்த சேரில் அமர வைத்து அதற்கு அருகிலேயே தானும் அமர்ந்து கொண்டு கையில் இருந்த மொபைலை எடுத்து அதில் பதிவாகி இருந்த காட்சிகளை ஓட விட்டான்.அங்கே ஒரு அறையில் விஜயேந்திரனும்,மேனகாவும் கைகள் கட்டப்பட்ட நிலையில் அமர வைக்கப்பட்டு இருந்தனர்.அந்தக் காட்சியைக் கண்டதும் அரசியிடம் அதுவரை இருந்து வந்த எரிச்சல் காணாமல் போய் இருந்தது.நிமிர்ந்து அமர்ந்து கண்களில் தீவிரத்துடன் வீடியோவை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தாள்.

“இதில் மேனகா எங்கே வந்தாள்?அவளை ஏன் கட்டிப் போட்டு வச்சு இருக்கீங்க?”

“கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொண்டு அவர்கள் சொல்வதை மட்டும் கவனி”என்று கடுப்பாகச் சொன்னவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள வேறு வழியின்றி அரசியும் மொபைல் ஸ்க்ரீனை வெறிக்கத் தொடங்கினாள்.

“சொல்லு விஜி எதுக்காக அன்னைக்கு என்னோட கார்ல பாம் வச்ச?”

“பாமா? நான் எதுவும் வைக்கலையே”அழுத்தமாகச் சொன்னான் விஜயேந்திரன்.

“நீ வைக்கலேன்னா அந்தப் பாமில் உன்னோட கைரேகை எப்படி வந்தது?”

“எனக்குத் தெரியாது”

“உனக்குத் தெரியாமல் உன்னுடைய கை ரேகை எப்படி அதில் வந்து இருக்க முடியும்?”

“அதுதான் எனக்குத் தெரியாதுன்னு சொல்லிட்டேன் இல்லை…மறுபடி மறுபடி அதையே கேட்டா என்ன அர்த்தம்…எனக்குத் தெரியாதுன்னா தெரியாது தான்.” வாயைத் திறக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருந்தான் விஜயேந்திரன்.

“சரி அப்போ நீ எதுவும் சொல்ல வேண்டாம்.நாங்க எங்க விசாரணையை இவகிட்டே ஆரம்பிச்சுக்கிறோம்”என்று பேசியபடியே அடியாட்களுக்குக் கண்ணைக் காட்ட மேனகாவை நெருங்கினான் ஒருவன்.

“விஜி”பயத்தில் கத்தி கூச்சல் போட்டாள் மேனகா.

“அண்ணா இதெல்லாம் கொஞ்சம் கூடச் சரியில்லை.எதுவா இருந்தாலும் என்கிட்டே கேளு.அவளை எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்து இருக்கீங்க.முதல்ல அவளை இங்கே இருந்து அனுப்புங்க”

“எதுக்கு அவ மலேசியா தப்பிச்சுப் போகப் போறாளே அதுக்கா?”

“சும்மா உளறாதீங்க…அவ என்னை விட்டு எங்கேயும் போக மாட்டா?”

“அப்படியா? அப்படின்னா இந்த டிக்கெட் யாரோடது.நாளைக்கு ராத்திரி இந்த நாட்டை விட்டு இவ கிளம்பப் போறா.அது உனக்குத் தெரியுமா? இல்லை இவளோட அப்பா ஏற்கனவே இங்கே இந்தியாவில் இருக்கும் எல்லாச் சொத்துக்களையும் விற்க ஏற்பாடு பண்ணிட்டார் அது தெரியுமா உனக்கு?”

“சுத்த பொய் நான் நம்ப மாட்டேன்”உரக்கக் கத்தினான் விஜயேந்திரன்

“சரி நீ நம்ப வேண்டாம்…இப்போ சொல்லு எதுக்குப் பாம் வச்சே?”

“எனக்குத் தெரியாது.நான் வைக்கலை” மீண்டும் அதே பல்லவியைப் பாட இது வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்த ஆதித்யன் அடியாளை நோக்கி ஒரு பார்வையைச் செலுத்த அவன் மேனகாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

“அம்மா…என்று கதறினாள் மேனகா…விஜி உன் கண்ணு முன்னாடியே என்னை அடிக்கறாங்களே.வேண்டாம்னு சொல்லு…என்னை காப்பாத்து விஜி.ப்ளீஸ்!”

“அண்ணா…ப்ளீஸ் அவளை அடிக்காதே…நான் உண்மையைச் சொல்லிடறேன்.நான் தான் உன் காரில் பாம் வச்சேன்.”

“எதுக்காக வச்சே?”

“அண்ணிகிட்டே வீட்டை விட்டு வெளியே போகவோ சொல்லி எத்தனையோ தடவை சொன்னோம்.ஆனா அவங்க கேட்கலை.அதான் இது மாதிரி சின்னதா ஒரு செட்டப் செஞ்சோம்.அவங்க பயந்து போய் உன்னை விட்டு போய்டுவாங்கன்னு நினைச்சோம்”

“எதுக்காக அவளை வீட்டை விட்டு கிளம்ப வைக்கணும்னு நினைச்ச?”

“அங்கேயே இருந்தா நீ அவங்களைக் கொன்னுடுவ…அதனால தான்”

“டேய்! அவ என் பொண்டாட்டி.. அவளை எதுக்காக நான் கொல்லப் போறேன்?”

“இல்லை நீ அவங்களைக் கொன்னுட்டு அதுக்கு அப்புறம் நல்ல வசதியான வீட்டுப் பொண்ணா பார்த்து மறுகல்யாணம் பண்ணிக்குவ.எனக்கு உன்னைப் பத்தி தெரியாதுன்னு நினைச்சியா”

“முட்டாள்…முழு முட்டாள்…யார்டா இப்படி எல்லாம் சொல்லி உன் மனசை குழப்பி வச்சது”பற்களை நறநறத்தான் ஆதித்யன்.

“யார் சொன்னா என்ன? அதெல்லாம் உண்மை தானே?”

“சரி நீ சொன்னது எல்லாம் உண்மையாகவே இருக்கட்டும்.அந்த பாமை நீ யார்கிட்டே இருந்து வாங்கின? அதை எப்படி,எப்போ என் காரில் வச்சே”

“அது…அது”

“என்னடா மென்னு முழுங்கிற…பதிலை சொல்லு”

“…”

“உனக்குத் தெரியாது.ஏன்னா நீ வச்சு இருந்தா தானே உனக்குத் தெரியும்.வச்சது இவளாச்சே”

“அண்ணா நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல.அவளுக்கு இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு…மறுபடி ஏன் அவளை இதுக்குள்ளே இழுக்கிற…நான் தான் ஆள் வச்சு இதெல்லாம் செஞ்சேன்.அவன் எப்படிச் செஞ்சான்? யார்கிட்டே இருந்து வாங்கினான்ன்னு எல்லாம் நான் தெரிஞ்சு வச்சுக்கலை.”

“ஸோ…நீ உண்மையைச் சொல்ல மாட்டே” என்று சொல்லியபடியே அவனது அடியாளை ஒரு பார்வை பார்க்க அவன் கையில் ஏதோ ஒரு ஆயுதத்துடன் மேனகாவை நெருங்கினான்.உருண்டையாகக் கையில் பிடிப்பதற்கு வசதியாகச் சிறிய அளவில் இருந்த அந்த ஆயுதத்தில் ஒரு சிறிய பட்டனை அழுத்தியதும் உள்ளிருந்து முட்கள் போன்று நீட்டிக் கொண்டு வெளிவந்தது.

“ஏன் மேனகா…இதை வச்சு உன் மூஞ்சியில் கோடு போட்டா எப்படி இருக்கும்”நிதானமான குரலில் கேட்ட ஆதித்யனின் முகம் இப்பொழுது மேனகாவிற்குக் குளிரை பரப்பியது.

“நீ ஒண்ணும் பயப்படாதே மீனு…நீ எப்படி இருந்தாலும் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்குவேன்”

பயத்தில் இருண்டு போய்க் கிடந்த மேனகாவின் முகத்தை நெருங்கிய அடியாள் மீண்டும் ஏதோ ஒரு பட்டனை அழுத்த இப்பொழுது அந்த முட்கள் அனைத்தும் வேகமாகச் சுழல ஆரம்பித்தது.இதை ஒரு நொடி முகத்தின் அருகில் கொண்டு சென்றால் கூடப் போதும்.முகத்தில் சதை என்பதே இருக்காது என்பதை உணர்ந்தவளின் அச்சம் உச்சத்தைத் தொட்டது.அதை இயக்கியபடியே அடியாள் நெருங்கி வரவும் அச்சத்தில் தன்னை மறந்து கூவத் தொடங்கினாள்.

“ஆதி…ப்ளீஸ் ஸ்டாப் திஸ்….நான் உண்மையைச் சொல்லிடறேன்”

“மீனு…நீ எதுவும் சொல்ல வேணாம்”அவளை முந்திக்கொண்டு பேசிய விஜயேந்திரனை வெறுப்பாகப் பார்த்தவள் ஆத்திரத்துடன் பேசத் தொடங்கினாள்.

“டேய் லூசு நீ வாயை மூடிக்கிட்டு இரு.அவன் கையில் இருக்கிறதை கவனிச்சியா இல்லையா?அவன் ஏதாவது செஞ்சு வச்சா அப்புறம் என் அழகு என்ன ஆகும்”

“நீ எப்படி இருந்தாலும் உன்னை நான் கை விட மாட்டேன் மீனு”

“என்னது நீ என்னைக் கை விட மாட்டியா? போடா பைத்தியம்…எனக்கும் மலேசியால இருக்கிற மிகப்பெரிய தொழிலதிபருக்கும் அடுத்த வாரம் கல்யாணம்.அது தெரியாம இன்னும் காதல் கல்யாணம்ன்னு உளறிக்கிட்டு இருக்கியே…உன்னை மாதிரி ஒரு பைத்தியத்தை எல்லாம் என்னால கல்யாணம் செஞ்சுக்க முடியாது”

“மீனு…நீ என்ன சொல்ற…”அதிர்ச்சியில் கண்கள் நிலைக் குத்தி போய் விட்டது விஜயேந்திரனுக்கு.

“ம்…நொன்னை சொல்றாங்க…பைத்தியம்…சரியான பைத்தியம்.உன்னை எல்லாம் யார் கல்யாணம் பண்ணிக்குவா…யார் எது சொன்னாலும் தலையாட்டி மாடு மாதிரி தலையாட்டிக்கிட்டு பின்னாடியே வால் பிடிச்சுக்கிட்டுச் சுத்துற…உன்னைப் போய் நான் கல்யாணம் செய்து கொள்வதா? நெவர்”

“அப்போ இத்தனை நாள் என்னோட பழகினது?”கண்கள் வேதனையில் கலங்கக் கேட்டான்.

“எல்லாம் இதோ இவனால தான்…”அவள் கைகள் ஆதித்யனை கை காட்டியது.

“இவன் பின்னாடியே அஞ்சு வருசமா சுத்தி எப்படி எல்லாமோ கேட்டுப் பார்த்தேன்.என்னை கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு மறுத்துட்டான்.காரணம் கேட்டப்போ வேற ஒரு பொண்ணை விரும்புறதா சொன்னான்.அப்படி கல்யாணம் ஆகி வரும் பொழுது அவனையும் அவன் ஆசைப் பொண்டாட்டியையும் பிரிக்கிறதுக்கு அவன் குடும்பத்துக்குள்ளே ஒரு ஆளா இருந்தா மட்டும் தான் முடியும்னு நினைச்சு தான் உன்னைப் பிடிச்சேன்.மத்தபடி உன்னைப் போல ஒருத்தனை எல்லாம் நான் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன்.”

“அப்போ அண்ணனைப் பத்தி நீ என்கிட்டே சொன்னது எல்லாம்”

“பொய் தான் போதுமா?”

“உங்க கதை எல்லாம் அப்புறம் பேசலாம்.எனக்கு முதலில் பதில் சொல்லு.என்னோட காரில் எதுக்குப் பாம் வச்சே…”

“உங்க காரில் நான் ஒண்ணும் பாம் வைக்கலை.அது என்னோட கார்ல எனக்கு நானே வைச்சுகிட்ட பாம்”

“உனக்கு நீயே வச்சுகிட்டதா?”

“ஆமா…அப்பப்போ இது மாதிரி எனக்கு நானே பாம் வச்சு தான் இந்த லூசை ஏமாத்தி இருக்கேன்.அது மாதிரி அன்னைக்கும் செட் பண்ணி உன் பொண்டாட்டியை நம்ப வைக்கிறதுக்காக ஏற்பாடு செஞ்சு இருந்தேன்.ஆனா பாமை என்னோட வண்டியில் வச்சு உங்க வீட்டுக்குள்ளே வர முடியாது.செக்கிங்ல மாட்டிப்பேன்.அதனால உன் டிரைவர் காருக்கு பெட்ரோல் போட வெளியே எடுத்துட்டுப் போனப்போ அதுல பாமை டைமர் (timer) செட் பண்ணாம ஆ பண்ணி வைச்சுட்டு வந்தேன்.

அப்புறமா எப்பவும் போல உங்க வீட்டுக்கு வந்து பங்ஷன் முடியிற நேரத்தில் வெடிக்கிற மாதிரி செட் பண்ணி என்னோட காரில் வச்சிடலாம்னு தான் போனேன்.டைம் செட் பண்ணி முடிச்சு எடுத்துட்டு திரும்பும் போது உன் அருமைத் தொம்பி பின்னாலேயே வந்து நின்னு தொலைச்சுட்டான்.கைல என்ன வச்சு இருக்கன்னு வாங்கி அதைப் பார்க்க வேற முயற்சி செஞ்சான்.நான் தான் அதை உடனே வாங்கி அப்படியே உன் கார் டிக்கியில் வச்சிட்டு இவனைக் கொஞ்சி,மயக்கி டைவர்ட் பண்ணி அங்கே இருந்து கூட்டிட்டு வந்துட்டேன்.இவன் கிட்டே இருந்து தப்பிச்சு அந்தப் பாமை எடுத்து என்னோட காரில் வைக்க எனக்கு அதுக்குப்பிறகு நேரமே கிடைக்கலை.அதுக்குள்ளே பாம் வெடிச்சு தொலைச்சிடுச்சு”

“ஆனா அதுல உன்னோட கைரேகை எதுவும் இல்லையே… அது எப்படி?”

“அது நான் டிசைனர் நீ கிளவ்ஸ்(designer knee glouse) போட்டு இருந்தேன்.எப்பவும் வண்டி ஓட்டிட்டு வரும் பொழுது அதைப் போட்டு இருப்பேன்.அதனால யாருக்கும் என் மேல சந்தேகம் வரலை”

“ஒருவேளை அந்தப் பாம் வெடிச்சு இருந்தா…உன் உயிரும் சேர்ந்து தானே போகும்.பயம் இல்லையா உனக்கு?”

“அந்தப் பாம் அந்த அளவுக்குப் பவர் கிடையாது.சும்மா உன்னோட லூசு பொண்டாட்டியை பயமுறுத்தி வீட்டை விட்டு அனுப்புறதுக்காக டம்மியா செஞ்சது.ஆனா அந்த லூசு தானா வழிய வந்து அதுல மாட்டிக்கிச்சு”

“சிசிடிவி கேமராவை என்ன செஞ்ச?”

“நான் ஒண்ணும் செய்யலை…அதை எல்லாம் உன் தம்பி…இதோ பக்கத்தில் உட்கார்ந்து இருக்கே இந்தத் தலையாட்டி பொம்மை இவன் தான் செஞ்சான்”

“ஆமா அண்ணா…அந்த கார் வெடிக்கிறதுக்கு முன்னாடி நீங்களும் நானும் தான் கடைசியா அந்தக் கார் பக்கத்தில் வந்து நின்னு பேசிக்கிட்டு இருந்தோம்.இது மட்டும் உங்க அண்ணனுக்குத் தெரிய வந்தா,நான் தான் அந்தப் பாமை வச்சேன்னு என் மேலே பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்ப கூட உங்க அண்ணன் தயங்க மாட்டார்னு சொல்லி அழுதா…அதனால நான் தான் அதை எல்லாம் அழிச்சேன்.குற்றஉணர்வுடன் தலையைத் தொங்கப் போட்டபடியே பேசினான் விஜயேந்திரன்.

“இப்போ நீ பாட்டுக்கு கிளம்பி மலேசியா போறியே? என் தம்பியோட நிலைமை என்ன ஆகும்னு கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியா?”

“அவன் எப்படிப் போனால் எனக்கென்ன? நீ மட்டும் என்னைப் பத்தி கவலைப்பட்டியா என்ன? உன்னோட கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடி வருசக்கணக்கா உன் பின்னாடியே சுத்தி சுத்தி வந்தேனே…என்னை கொஞ்சமும் கண்டுக்காம நீ ஒரு பைத்தியத்தைக் கல்யாணம் செஞ்சுக்கலை”வன்மத்துடன் கூறியவளை அருவருப்பான பார்வை பார்த்தவன் அப்படியே விஜயேந்திரன் புறம் திரும்பினான்.

“இதை எல்லாம் உன்கிட்டே முன்னாடியே நான் சொல்லி இருந்தா நிச்சயம் நீ நம்பி இருக்க மாட்ட விஜி.அதனால தான் நான் சொல்லலை.முடிஞ்ச அளவுக்கு உங்க இரண்டு பேரையும் பழக விடாம நான் தடுத்ததுக்கு இது தான் காரணம்.இப்பவும் உனக்கு இவ தான் வேணும்னா சொல்லு.அடுத்த முகூர்த்தத்தில் உங்க இரண்டு பேர் கல்யாணத்தையும்…” என்று சொல்லிக் கொண்டே போனவன் விஜியின் முகத்தில் தெரிந்த அடிபட்ட வேதனையின் சாயலில் அப்படியே பேச்சை நிறுத்தினான்.

“வேண்டாம் அண்ணா…நான் காதலித்தது இவளை இல்லை.அமைதியும்,அடக்கமும்,அன்பும் நிறைந்த ஒரு பெண்ணை.என்னை நினைத்தால் எனக்கே கேவலமா இருக்கு.இப்படி ஒருத்தி என்னை நடிச்சு ஏமாத்தி இருக்கா.அதுகூடத் தெரியாம உங்ககிட்டே வந்து சண்டை போட்டு இருக்கேனே.சே! என்ன மனுஷன் நான்…”என்று தன்னையே நொந்து கொண்டவன் சில நிமிடங்கள் ஆழ்ந்த பெருமூச்சு விட்டுத் தன்னைச் சமாளித்துக் கொண்டு மீண்டும் பேசத் தொடங்கினான்.

“வேண்டாம் அண்ணா…இவளை அனுப்பிடுங்க…எனக்கு இவ வேணாம்”என்று சொன்னவன் லேசாக நிமிர்ந்து ஒரு முறை ஆதித்யனின் முகம் பார்த்து விட்டு மறுபடி தலையைக் குனிந்து கொண்டே பேசினான்.

“முடிஞ்சா நான் செஞ்ச தப்பை எல்லாம் மன்னிச்சுடுங்க அண்ணா…இனி உங்க பேச்சை மீறி எதையும் செய்ய மாட்டேன்”என்று சொன்னவன் கழிவிரக்கத்தில் அடக்க மாட்டாமல் அழத் தொடங்கினான்.அத்தோடு அந்த வீடியோவும் நிறைவு பெற்று இருக்க ஆதித்யன் திரும்பி அரசியைப் பார்த்தான்.

அவள் முகத்தில் இருந்த உணர்ச்சிகளை வைத்து அவள் என்ன நினைக்கிறாள் என்பதை அறிய முயன்றான்.ஆனால் அவளுடைய முகமோ இறுகிப் போய் இருந்தது.

“பொழில்…என்ன ஆச்சுடா…”லேசாகத் தோள் தொட்டு உலுக்கினான்.

“நாம யாரை ரொம்ப நம்புறோமோ அவங்க தான் கடைசியில் நம்மை ஏமாத்திடறாங்க” என்று சொன்னவள் கயல் செய்த செயலைப் பற்றி ஒன்று விடாமல் சொன்னாள். “அவளால தான் என் வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சினை.அவளோட சிறுபிள்ளைத்தனமான செயலால மூணு வருஷம் என் வாழ்க்கையில் வீணாப் போச்சு.என்னால மேற்கொண்டு படிக்க முடியலை.

எங்க அப்பாவோட கடைசி நிமிடங்களில் அவரோட இருக்க முடியலை.இன்னும் சொல்லப் போனால் அவர் எப்படிச் செத்தார்ன்னு கூட எனக்குத் தெரியலை.இது எல்லாத்தையும் விட எல்லாரும் சொல்றாங்க.அவர் ஏதோ கொலை பண்ணிட்டார்ன்னு சொல்றாங்க.அதைப் பத்தியும் எனக்கு எதுவும் தெரியலை.இப்போ வந்து என்னை மன்னிச்சுடுன்னு சொன்னா, என்னால எப்படி அவளை மன்னிக்க முடியும்”

“இந்த விஷயத்தை ஏன் அப்படிப் பார்க்கிற பொழில்…ஒருவேளை இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கலைனா உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்தே இருக்காதே…நீ எனக்குக் கிடைச்ச பொக்கிஷம் பொழில்.அந்த வகையில் பார்த்தா கயல் எனக்கு நல்லது தான் செஞ்சு இருக்கா”

“ஹுக்கும்…நீங்க தான் மெச்சிக்கணும் அவளை…உங்களைக் கட்டிக்கிட்டு நான் படுற அவஸ்தை எனக்குத் தான் தெரியும்”

“அடிப்பாவி…என்னை மாதிரி அழகா,அம்சமா ஒருத்தன் தனக்குப் புருஷனா வர மாட்டானான்னு எல்லாரும் ஏங்குறாங்க.நீ என்னடான்னா இப்படி ஒரே வார்த்தையில் என்னை அசிங்கப்படுத்திட்டியே.ஸோ சேடு (so sad) ஆதி…உன் நிலைமை இப்படியா ஆகணும்”

“உங்க பெருமையை நீங்க தான் பீத்திக்கணும்.கல்யாணம் ஆனதில் இருந்து எப்பப் பாரு ஒரே குழப்பம் தான்.ஆரம்பத்தில் எதுக்கு இந்த அவசரக் கல்யாணம்னு ஒரு குழப்பம்,அப்புறம் நீங்க நல்லவரா கெட்டவரான்னு ஒரு குழப்பம் (படிக்கிற எங்களுக்கும் அதே குழப்பம் தான் அப்படின்னு நீங்க சொல்றது எனக்குக் கேட்குது.)அப்புறம் வரிசையா ஒவ்வொரு குழப்பமா வந்துகிட்டே தான் இருக்கு.இன்னும் சில கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் கண்டிப்பா தெரியும்.ஆனா நீங்க சொல்ல மாட்டீங்க”

“…”

“இதைப் பத்தி பேசினா மட்டும் உங்க வாய் இறுக பசை போட்டு ஒட்டினா மாதிரி ஆகிடுமே…ஆமா எதுக்கு வரும் பொழுது அவ்ளோ கோபமா வந்தீங்க?”

“ஹி ஹி…அது ஒண்ணும் இல்லைடி…விஜி பிரச்சினை முடிஞ்சதும் என் மனசு உன்னைத் தான் தேடுச்சு…ஆனா நீ பக்கத்தில் இல்லையா?நானும் அன்னைக்கு நீ மயங்கினதுக்கு நான் தான் காரணம்னு நினைச்சுக்கிட்டு உன்னை இங்கே ஊருக்கு அனுப்பி வச்சி தொலைச்சிட்டேன்.நேத்துப் போனில் சொன்னதை முன்னாடியே ஊரிலேயே சொல்லி இருந்தால் உன்னை இங்கே போகவே விட்டு இருக்க மாட்டேன்ல.ஏற்கனவே நிறைய நாள் வீணாக்கிட்டோம்.இப்போ இன்னும் ஒரு மாசம் எப்படிடி உன்னைப் பிரிஞ்சு இருப்பேன் நான்.நீ சொல்லாம விட்டதால தானே அப்படினு உன்மேல கொஞ்சம் கோபம் வந்துச்சா…அதான் அதே கோபத்தோட கிளம்பி வந்தேன்”

“நீங்க கோபத்தோட கிளம்பி வந்த இலட்சணத்தைத் தான் பார்த்தேனே” கசங்கி இருந்த புடவையைச் சரி செய்தவாறே பேசியவளை காதலாய் பார்த்தான் ஆதித்யன்.

“பொழில்…வாடி ஊருக்கு போகலாம்…”ஏக்கத்துடன் அழைத்தான் ஆதித்யன்.

“அ…அது எப்படி இன்னும் இருபத்து எட்டு நாள் முடிஞ்சு தான் அனுப்புவாங்க.நீங்க முதல்ல கிளம்புங்க”

“ஐ…ஐ…என்னை மட்டும் எப்படி அனுப்புவாங்க…நேத்திக்கு போன் பேசும் பொழுதே நீ என்ன சொன்ன ஊருக்குள்ளே வந்துட்டா திருவிழா முடியாம ஊரை விட்டு யாரும் வெளியே போகக்கூடாதுன்னு சொன்ன இல்லை…அதனால அய்யா ஏற்கனவே பிளான் பண்ணி ஒரு மாசம் இங்கே இருக்கிற மாதிரி தான் வந்து இருக்கேன்.ஸோ இன்னும் ஒரு மாசம் நானும் உன் கூடத் தான் இருக்கப் போறேன்” என்று அலுங்காமல் குண்டைத் தூக்கி போட்டான் ஆதித்யன்.

“அய்யயோ…அதெப்படி உங்களை இங்கே தங்க விடுவாங்க…அதெல்லாம் சரிப்பட்டு வராது.யாரும் பார்க்கிறதுக்கு முன்னாடி நீங்க உடனே கிளம்புங்க”

“என்னடி இப்படி விரட்டுற”என்று சலித்துக் கொண்டவன் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு தொடர்ந்து பேசினான். “ஏற்கனவே உன்னோட மாமாகிட்டே இங்கே வரப் போறதையும் தங்கப் போறதையும் சொல்லி பர்மிஷன் வாங்கிட்டு தான் வந்து இருக்கேன்.அய்யாவை யாரும் அசைச்சுக்க முடியாது”என்று பெருமையாகக் காலரை தூக்கி விட்டுக் கொண்டான் ஆதித்யன்.

ஆதித்யன் பேசப் பேச அரசிக்குள் கலவரம் மூண்டது. ‘இது என்னடா வம்பா போச்சு…இவனைப் பக்கத்தில் வச்சுக்கிட்டா சமாளிக்கிறது கஷ்டமாச்சே…’என்று சில நிமிடங்கள் யோசித்தவள் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டாள்.அதன்பிறகு வந்து இருவரையும் பார்த்து விட்டு போன பரசுராமன் ஆடி மாதம் என்பதால் ஆதித்யன் தங்குவதற்கு வேறு ஒரு வீடு ஒன்றை ஏற்பாடு செய்து அதன் சாவியை ஆதித்யனிடம் கொடுத்து கையோடு அவனை அழைத்துக் கொண்டு கிளம்பி விட,முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு ஏக்கத்துடன் மனைவியைப் பார்த்தபடியே அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

அதன்பிறகு வந்த நாட்களில் ஆதித்யன் அருகிலேயே இருந்ததால் அரசி இன்னும் அதிகக் கவனத்துடன் செயல்பட்டாள்.ஆதித்யன் அருகில் நெருங்க முயற்சிக்கும் சமயங்களில் ஆடி மாதம்,கோவில் திருவிழா போன்ற காரணங்களைக் காட்டி முடிந்தவரை அவனை நெருங்க விடாமல் தவிர்த்து வந்தாள்.அப்பொழுது தான் விதி மீண்டும் தன்னுடைய வேலையைக் காட்டியது.

கார்த்தி ஒவ்வொரு இடமாகச் சென்று தகவல்களைத் திரட்டத் தொடங்கியது ஆதித்யனின் காதுகளுக்கு வந்து சேர்ந்தது.ஆதித்யனுக்குத் தெரிந்து கார்த்திக்கு அந்தத் தகவல்களைத் திரட்ட வேண்டிய அவசியம் கிடையாது.அப்படி அவன் செய்கிறான் என்றால் அது நிச்சயம் அரசி சொல்லித் தான் அவன் செய்து கொண்டு இருக்க வேண்டும் என்று முழுமையாக நம்பினான் ஆதித்யன்.அவனுக்குத் தெரிந்து அரசியும் கார்த்தியும் வீட்டில் கூட ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசிக் கொள்வதில்லை.வேறு எந்த முறையில் இருவரும் தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள் என்று யோசித்தவனுக்குச் சட்டென மூளையில் பொறித் தட்டியது.

சில நாட்கள் முன் வள்ளி தன்னிடம் அரசி இவ்வளவு நேரமாகப் போன் பேசியதை பற்றிச் சொன்னதும் அரசிக்கு அவன் வாங்கிக் கொடுத்து இருந்த மொபைல் எண்ணின் இன்கமிங்,அவுட்கோயிங் போன் கால்ஸ் தொடர்பான தகவல்களை வரவழைத்தவன் அதில் தன்னுடைய எண்ணைத் தவிர வேறு எண் இல்லாதது கண்டு குழம்பினான்.

மேலும் தீவிரமாக அமர்ந்து யோசிக்கும் பொழுது தான் அன்று அவளை அணைத்த பொழுது அவளிடம் மறைத்து வைத்து இருந்த ஏதோ ஒன்று உறுத்தியது நினைவுக்கு வர ஒருவேளை அரசி தனக்குத் தெரியாமல் வேறு ஏதேனும் போன் வைத்து இருக்கிறாளோ என்ற சிந்தனையில் ஆழ்ந்தவன் பதட்டத்துடன் தன்னுடைய வீட்டு வேலையாட்களைப் போனில் அழைத்துப் பேசினான்.

துவைக்கும் பொழுது எடுத்து வைத்த கார்த்தியின் கார்ட் அங்கேயே பத்திரமாக இருப்பதாகத் தகவல் வர வேறு எப்படி என்று யோசித்தவன் (பொழில் தான் அன்று போன் பேசிவிட்டு மீண்டும் அதே சட்டைப்பையில் அதை வைத்து விட்டாளே).ஏதோ எண்ணம் தோன்ற சட்டென்று அவனுடைய பி.ஏவை அழைத்தவன் அந்த வீட்டின் லேண்ட்லைன் போனில் இருந்து போன வாரத்தில் மட்டும் எந்த எந்த நம்பருக்கு அழைக்கப்பட்டு இருந்தது என்ற லிஸ்டை கேட்க, அடுத்தச் சில நிமிடங்களில் அது அவனின் மொபைலுக்கு மின்னஞ்சலாக வந்து சேர்ந்தது.

அதில் கார்த்தியின் எண்ணை கண்டதும் ஆத்திரத்தில் அவன் கண்கள் உக்கிரமானது. ‘எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கிறாள் என்னை? இவளை இப்படியே விடக்கூடாது’ என்ற ஆத்திரத்தோடு தான் தங்கி இருந்த இடத்தை விட்டு கிளம்பி நேராக அரசியின் வீட்டுக்குள் நுழைந்தவனால் வீட்டின் உள்ளே செல்ல முடியவில்லை.வீடு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது.

“அரசி…கதவைத் திற”கர்ஜனையாக ஒலித்தது அவன் குரல்.

“முடியாது” முதல் அறையில் இருந்த ஜன்னலை மட்டும் திறந்து வைத்துக் கொண்டவள் நிமிர்வாகப் பதில் சொன்னாள்.

“ஏய்!ஒழுங்கா கதவை திறடி…இல்லை உடைச்சுக்கிட்டு உள்ளே வந்திடுவேன்”

“ஓ!…விஷயம் தெரிஞ்சுடுச்சா?”நிதானமாகக் கேட்டாள் அரசி

“ஆமா…நான் இவ்வளவு தூரம் சொல்லியும் கொஞ்சமும் அடங்காமல் மறுபடி உன்னோட சிபிஐ வேலையை எனக்கே தெரியாம பண்ணி இருக்கேன்னா என்ன அர்த்தம்?”

“எங்க அப்பாவோட மரணத்திற்கு என்ன காரணம்னு கண்டுபிடிக்காம ஓய மாட்டேன்னு அர்த்தம்”

“வேண்டாம் பொழில்…அது உனக்குத் தெரியவேண்டாம்.அது நம்ம வாழ்க்கைக்குத் தேவையும் இல்ல…அதை மறந்துட்டு வா…நாம நம்மோட வாழ்க்கையை வாழலாம்”

“முடியாது…எனக்கு தெரிஞ்சே ஆகணும்”

“ஏய் என்னடி விட்டா ரொம்பப் பண்ணுற…இந்த கதவை உடைச்சுக்கிட்டு உள்ளே வர எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? ஒழுங்கா வந்து கதவைத் திற”

“கதவை நீங்க உடைக்க முயற்சி செஞ்சாலோ…என்னை நெருங்க முயற்சி செஞ்சாலோ அதுக்கு அப்புறம் என்னை நீங்க உயிரோட பார்க்க முடியாது சொல்லிட்டேன்.”என்று சொன்னவள் அதுவரை மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து தன்னுடைய கழுத்தில் வைத்துக் கொண்டாள்.

“பொழில்…என்ன காரியம் பண்ணுற…கத்தியை கீழே போடு…எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்”அதுவரை இருந்த ஆத்திரம் காணாமல் போய்ப் பதட்டம் சூழ்ந்து கொண்டது அவனை.

“மாட்டவே மாட்டேன்…என்னுடைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரியும்வரை நான் இந்தக் கதவை திறக்க மாட்டேன்.மீறி என்னை நெருங்க முயற்சி செஞ்சா நான் என் கழுத்தை அறுத்துக்குவேன்”கொஞ்சமும் தளராமல் ஒரு முடிவுடன் பேசியவளைக் கண்டு மலைத்துப் போய் நின்றான் ஆதித்யன்.

“வேண்டாம் பொழில்…நீ தாங்க மாட்ட…சொன்னா கேளு…”

“இப்போ சொல்றீங்களா இல்லை என்னுடைய கை நரம்பை அறுத்துக்கவா”கத்தியை கைகளுக்கு அருகில் கொண்டு செல்லவும் ஆதித்யன் அலறி விட்டான்.

“வேண்டாம் பொழில்…எதுவும் செஞ்சிடாதே நான் சொல்லிடறேன்”

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 5]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here