Kadhale Nee Kaanala Tamil Novels 33

0
2384
Madhumathi Bharath Tamil Novels

“பொழில் நான் உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்.தயவு செஞ்சு கத்தியை கீழே போடு.நீயே போய்க் கூட விசாரி.நான் உன்னைத் தடுக்க மாட்டேன்”இரு கைகளையும் மனைவியை நோக்கி கூப்பியபடி கெஞ்சினான் ஆதித்யன்.

“ஹ…எப்படி சொல்வாங்க…எல்லா ஆதாரத்தையும் ஒண்ணு விடாம அழிச்சு வச்சு இருக்கீங்களே.மிரட்டியும்,பணம் கொடுத்ததும் எல்லாச் சாட்சிகளையும் ஒண்ணுமில்லாம செஞ்சு வச்சு இருக்கீங்களே…எங்கே போனாலும் யாரும் வாயை திறந்து எதுவும் சொல்ல மாட்டேங்குறாங்க… போலிஸ் உட்பட.சரி ஏதாவது பத்திரிக்கை மூலமா தெரிஞ்சுக்கலாம்ன்னு பார்த்தா,என் அப்பாவோட விஷயம் துணுக்குச் செய்தியா கூட எந்தப் பத்திரிக்கைலயும் வரலை.

இது எல்லா விஷயமும் தெரிஞ்ச ஒரே ஆள் நீங்க மட்டும் தான்.மத்தவங்ககிட்டே கெஞ்சிக் கூத்தாடி கேட்டாலும் கூட உங்களுக்குப் பயந்து யாரும் வாயை திறக்க மாட்டேங்குறாங்க.எனக்கும் இதை விட்டா வேற வழி தெரியலை விக்கிரமா.உன்னை வாய் திறந்து பேச வைக்கணும்னா என்னோட உயிரை பணயம் வைக்கிறதை தவிர வேற வழி எதுவும் எனக்குத் தெரியலை”அவள் குரல் சோர்ந்து போய் ஒலித்தது.

“முடிஞ்சு போனதைப் பத்தி பேசி நம்ம வாழ்க்கையை ஏன் வீணாக்கணும் பொழில்.ப்ளீஸ்டா நான் சொல்றதை கேளு”

“என்னால முடியலை விக்கிரமா.தலைக்குள்ளே ஆயிரம் எண்ணங்கள் குழப்பிக்கிட்டு இருக்கும் பொழுது மன உறுத்தல் இல்லாம உன்னோட குடும்பம் நடத்த என்னால முடியாது.தயவுசெஞ்சு சொல்லு”

“வேணாம் பொழில்”கதறினான் ஆதித்யன்.

“இப்போ நீ சொல்லப் போறியா இல்லையா?” என்று ஆங்காரமாகக் கேட்டவள் கைகளில் லேசாகக் கீறிக் கொண்டாள்.

“ஐயோ பொழில் வேணாம்டி.வலிக்கும்.நான் சொல்றேன்.எல்லாத்தையும் சொல்றேன்.நீ கத்தியை கீழே போட்டு கதவை திற முதல்ல…”கண்ணீரோடு அவளிடம் மன்றாடினான் விக்ரமாதித்யன்.

“கதவை எல்லாம் திறக்க முடியாது அப்படியே சொல்லுங்க”நிர்தாட்சண்யமின்றி மறுத்தாள் பொழிலரசி.

“ப்ளீஸ் பொழில்…இப்படி வெளியில் வச்சு பேசுற விஷயமா அது…கதவை திற”

“கதவை திறக்கிறேன் ஆனா என் கையில் இருக்கிற கத்தியை தட்டி விடலாம்னு புத்திசாலித்தனமா எதுவும் யோசிக்க மாட்டீங்கன்னு நம்பறேன்.அப்படியே ஏதாவது செஞ்சு என் கையில் உள்ள கத்தியை பறிச்சு இப்போ வேணும்னா நீங்க என் உயிரை காப்பாத்தலாம்.ஆனா இருபத்து நான்கு மணி நேரமும் உங்களால என்னைப் பாதுகாத்துக் கிட்டே இருக்க முடியாது.” என்று கைகளில் கத்தியை இறுகப் பற்றியவாறே கதவை திறந்து விட்டவள் விக்ரமாதித்யனின் கைகளுக்கு எட்டாத தொலைவில் நின்று கொண்டாள்.

அவள் முகத்தில் இருந்த இறுக்கம் இப்பொழுது அவள் யார் பேச்சையும் கேட்கும் மனநிலையில் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிய வைக்க ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன் கதவை தாளிட்டு விட்டு அவளுக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்தான்.ஆதித்யனின் முகம் முழுக்கத் துயரம் பரவிக் கிடந்தது.இரக்கமான அவனது பார்வையில் குழம்பியவள் கையில் இருந்த கத்தியை இறுகப் பற்றியவாறே கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தாள்.

“உங்களுக்கு என்னைக் கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியுமா?”

“…”

“இப்போ சொல்லப் போறீங்களா? இல்லை…”என்று பேசியபடியே கைகளில் இருந்த கத்தியை உயர்த்திக் கழுத்தின் அருகில் கொண்டு சென்றாள்.

“தெரியும்…”

“எப்படித் தெரியும்? ம் சொல்லுங்க” அவள் கழுத்தில் இருந்த கத்தியை அழுத்திக் கொண்டே கேட்டாள் பொழிலரசி.

“உங்க அப்பா எங்கே வேலைப் பார்த்தார்ன்னு உனக்குத் தெரியுமா?”

“ம்…அரசாங்கத்தோட பெண்கள் காப்பகத்தில் முக்கியமான பொறுப்பில் இருந்தார். பாட்டிக்கு எப்பவும் அப்பா அரசாங்க உத்தியோகம் பார்க்கிறதில் ரொம்பவும் பெருமை உண்டு.அதுக்காகத் தனக்குப் பிடித்தம் இல்லாமலே பார்த்துக் கொண்டு இருந்தது தான் அந்த வேலை.ஆனா கல்யாணம் ஆன பிறகு அந்த வேலையை விட அம்மா சம்மதிக்கலை.ஆதரவு இல்லாத எத்தனையோ பெண்கள் உங்களுக்குக் கீழே இருப்பாங்க.அவங்களைப் பொறுப்பா பார்த்துக்கிற கடமை உங்களுக்கு இருக்குன்னு ஆண்டவனே நம்பி உங்க கையில் கொடுத்த பொறுப்பு அது.அதை ஒதுக்க வேண்டாம்னு அம்மா இறக்கிறதுக்கு முன்னாடி சொன்னாங்களாம்.அதனால அவருக்குப் பிடித்தம் இல்லாம போனாலும் அம்மாக்காக அதே வேலையில் இருந்தார்.”

“அந்தக் காப்பகத்திற்கு நான் வரும் பொழுது உன்னைப் பார்த்து இருக்கேன்”

“நான் எப்போ அங்கே வந்தேன்?நான் இங்கே இதே ஊரில் தானே இருந்தேன்”

“மாதா மாதம் உங்க அப்பாவோட காப்பகத்தில் மெடிக்கல் கேம்ப் நடக்கும்.அது என்னுடைய கம்பெனியின் மூலம் தான் நடக்கும்.உங்க அப்பா உன்னையும் அந்தக் கேம்ப் நடக்கும் பொழுதெல்லாம் தவறாம கூட்டிட்டு வருவார்.அப்போ உன்னைப் பார்த்து இருக்கேன்”

“அப்பாவுக்கும்,உங்களுக்கும் இடையில் ஏதாவது சண்டையா?”

“அப்படி எல்லாம் எதுவுமே இல்லை.உண்மையைச் சொல்லப் போனா உங்க அப்பாவுக்கும் எனக்கும் நல்ல பழக்கம் இருந்துச்சு.நான் எங்க அப்பாவோட தொழில் எல்லாத்தையும் எடுத்து நடத்த ஆரம்பிச்சப்பவே அவர் ஏற்கனவே செஞ்சுக்கிட்டு இருந்த இது மாதிரி நல்ல காரியங்களையும் சேர்த்து நானே பார்த்துக்க ஆரம்பிச்சேன்.”

“ஓ…அப்படித்தான் என்னைப் பத்தின எல்லா விஷயங்களும் உங்களுக்குத் தெரிய வந்துச்சா…”

“ஆமா…அப்போ உனக்குச் சுயநினைவு இல்லைனாலும் உன்னோட பழக்க வழக்கம் எதுவுமே மாறலை.பழமா கொடுத்தா மட்டும் தான் சாப்பிடுவ…ஜூஸ் எதுவும் சாப்பிட மாட்ட.”

“அப்புறம்?”

“அப்புறம்னா? வேற எதைப் பத்தி கேட்கிற?”

“நடந்த எல்லாத்தையும் ஒண்ணு விடாம சொல்லுங்க…”

ஆதித்யனின் பார்வை எங்கோ தொலைவானை வெறிக்க,கடந்த காலத்தில் மூழ்கத் தொடங்கினான் ஆதித்யன்.

அன்றைய காலைப் பொழுது விக்ரமாதித்யனின் வீடு எப்பொழுதும் உண்டான காலை நேர பரபரப்பிற்குத் தகுந்தபடி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது.

“அம்மா எனக்கு டிபன் வேண்டாம்.நான் வெளியில சாப்பிட்டுக்கறேன்” முழுக்கை சட்டையின் கைப்பகுதியில் பட்டன்களைப் போட்டவாறே மாடியில் இருந்து தனக்கே உண்டான கம்பீர நடையுடன் கீழே இறங்கி வந்து கொண்டு இருந்தான் ஆதித்யன்

“நீ இப்படித்தான் சொல்லுவ…ஆனா சாப்பிட மாட்ட…சாப்பிட்டு போ ஆதி”பத்மாவதி கண்டிப்பான குரலில் சொல்லிவிட மறுத்து பேச மனமின்றிக் காலை உணவை அவசர கதியில் உண்டான்.பேருக்கு இரண்டு இட்லிகளை முழுங்கி விட்டு எழுந்து ஓட முயன்றவனை அதட்டி சரியாக உண்ண வைத்தார் பத்மாவதி.

“உன் வயசுக்கு மீறின ஓட்டம் ஓடுற ஆதி…கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கலாமே…”தாய்மைக்கே உரித்தான பரிவுடன் பேசினார் பத்மாவதி.

“என்ன பண்றது அம்மா.நமக்காக இல்லைனாலும் நம்மகிட்டே இருக்கிற தொழிலாளர்களுக்காக உழைச்சு தானே ஆகணும்.”

“இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை ஆதி…இன்னைக்குக் கூட ஓய்வு இல்லாம இப்படி ஓடணுமா?”

“இன்னைக்கு மெடிக்கல் கேம்ப் இருக்கும்மா…”

“அதுக்கு நீ போகணும்னு அவசியம் இல்லையே ஆதி.நீ என்ன டாக்டரா?நீ வீட்டுலயே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமே”

‘என்னது போகாமல் இருப்பதா? நான் காத்துக்கிட்டு இருப்பது இந்த நாளுக்காகத் தானே…’ என்று எண்ணியவன் சாமர்த்தியமாக அது வெளியில் தெரியாமல் மறைத்துக் கொண்டான்.

“இல்லை மாம்.நேரில் போய்ப் பார்த்தா எனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.ஒருவேளை யாருக்காவது பெரிய அளவில் மருத்துவ உதவி தேவைப்பட்டா அதை உடனே செஞ்சும் கொடுத்திட முடியும் இல்லையா?” என்று அவர் நம்பக்கூடிய ஒரு காரணத்தையும் சொன்னவன் அங்கிருந்து கிளம்பி நேராக அந்தப் பெண்கள் காப்பகத்திற்கு நுழைந்தான்.

காரை விட்டு இறங்கிய நொடி அவன் கண்கள் வேகமாக அவளைத் தேடியது.அலைபாய்ந்த அவனின் விழிகள் ஒரு இடத்தில் அப்படியே நின்று விட அவன் கால்கள் வேகமாக அந்த மகிழம்பூ மரத்தை நோக்கி நகர்ந்தது.

இரட்டை சடையில் பாவாடை சட்டை போட்டு அமர்ந்து இருந்தவளின் கண்கள் மட்டும் ஒளியிழந்து எங்கோ தொலைதூரத்தை வெறித்து நோக்கியபடி இருக்க ஆதித்யன் அவளுக்கு எதிரில் போய் அமர்ந்து கொண்டான்.

“பொழில்”

திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தவளின் முகத்தில் மெல்லிய சிரிப்பு மட்டுமே…அவனைப் பார்த்ததும் கைகளில் இருந்த பிஸ்கட்டில் ஒன்றை அவனிடம் நீட்டினாள்.மறுக்காமல் வாங்கிக் கொண்டவன் அவளிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தான்.

“டிபன் சாப்பிட்டியா?”

மெல்லியதோர் தலையாட்டல் மட்டுமே அவனுக்குப் பதிலாய்.

“அப்பா எங்கே?”

சுற்றிலும் அலை பாய்ந்த அவளது விழிகள் ஓரிடத்தில் நின்ற பிறகு அவனுக்கும் அந்தத் திசையை நோக்கி ஒற்றை ஆள்காட்டி விரலை காட்டி விட்டு முகத்தை அவனுக்குக் காட்டாமல் திரும்பி அமர்ந்து கொண்டாள்.பொதுவாகப் பொழிலரசி அப்படித் திரும்பி அமர்ந்தாள் என்றால் அவள் கோபமாக இருக்கிறாள் என்பது பொருள்.எனவே மெல்லிய குரலில் அவளை அழைத்துப் பேசத் தொடங்கினான்.

“பொழில் மேடம்க்கு என் மேல என்ன கோபம்? வந்ததில் இருந்து ஒண்ணுமே பேச மாட்டேங்குறாங்க”என்றான் கேள்வியாய்

“நான் உன் மேல கோபமா இருக்கேன் விக்கிரமா…என்கிட்டே பேசாதே போ” அவனை ஒரு முறைப்பு முறைத்து விட்டு மறுபடியும் அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டாள் பொழிலரசி.அவளின் குழந்தைத்தனமான செயலில் ஆதித்யனின் முகம் மென்மையானது.

“என்னடா…இப்படி முகத்தைத் திருப்பிக்கிட்டா எனக்கு என்ன தெரியும்?ஏதாவது சொல்லேன்.ப்ளீஸ்” காதுக்கு அருகில் கைகளைக் கொண்டு வந்தவன் தோப்புக்கரணம் போடுவது போலச் செய்ய இன்னமும் முகத்தைச் சுளித்தவாறே இருந்தவள் மெல்லிய குரலில் பேசினாள்.

“போன முறை உன்னைப் பார்த்தப்பவே சொன்னேன்ல எங்க வீட்டு ஆட்டுக்குட்டி வெயில் தாங்க முடியாம கத்திகிட்டே இருக்கு.ஒரு ப்ரிட்ஜ் வாங்கிக் கொடு.அதுக்குள்ள வச்சு நான் அந்த ஆட்டுக்குட்டியை வளர்த்துக்கிறேன்ன்னு சொன்னேன்ல.நீயும் சரி சரின்னு மண்டையை ஆட்டுன இல்ல…இப்போ ஏன் ப்ரிட்ஜ் வாங்கிட்டு வரலை”

“ஓ மேடம்க்கு அதுதான் கோபமா?நான் ஏற்கனவே ப்ரிட்ஜ் வாங்கி வச்சிட்டேன்டா.ஆனா அப்புறம் தான் சொன்னாங்க.எப்பவுமே அதுக்குள்ளேயே இருந்தா உன் ஆட்டுக்குட்டிக்கு சளி பிடிச்சு,சீக்கிரமே ஜுரம் வந்துடுமாம்.ஜுரம் வந்தா உன்னோட ஆட்டுக்குட்டிக்கு ஊசி எல்லாம் போடணும்.அதுக்கு வலிக்கும்.பாவம்ல.அதனால் தான் அதைக் கொண்டு வரலை.”அவள் நம்பும்படியான காரணத்தை அவன் பொய்யாய் கதை புனைந்து கூற அதையும் உண்மையென்று நம்பினாள் பேதையவள்.

“அப்படியா…சரி சரி…எனக்கு இந்த விஷயம் தெரியாம போச்சு பாரேன்…இதுக்குத் தான் விக்கிரமா நீ வேணும்கிறது”

எப்பொழுதும் போல இப்பொழுதும் அவளின் குழந்தை தன்மையில் அவன் மனம் அவள் பால் ஈர்த்து செல்லப்பட்டது.கன்னியவள் தனக்கே தெரியாமல் அவனைப் பித்தாக்கி கொண்டு இருந்தாள்.

“சரி டாக்டரை பார்த்தாச்சா?”

“என்ன நீ வந்ததில் இருந்து மத்தவங்களைப் பத்தியே விசாரிக்கிற…என்னைப் பத்தி எதுவும் கேட்க மாட்டியா? நான் தானே உன் பிரண்டு”உரிமையாய் அவனின் அருகில் வந்து அவனின் சட்டைக் காலரை கொத்தாய் இரு கைகளாலும் பற்றிக் கொண்டாள்.அவனுக்கு வெகு அருகில் இருந்த அவளின் மதிமுகம் அவனுள் ஆயிரம் எண்ணங்களைத் தூண்ட,ரசனையுடன் அவன் பார்வை அவளது முகத்தில் சுற்றி வந்தது.

“வாங்க சார்…எப்போ வந்தீங்க?”சகஜமாகப் பேசியபடியே இருவரையும் நெருங்கிய அரசியின் தந்தை மகேந்திரனை பார்த்ததும் சங்கோஜப்பட்டு அவளது பிடியில் இருந்து விலக முயற்சித்தான் விக்ரமாதித்யன்.அரசியோ பிடியை மேலும் இறுக்க , தவிப்புடன் அவளது தந்தையைப் பார்த்தவன் அவரது முகத்தில் சிரிப்பை பார்த்ததும் தான் இயல்புக்கு வந்தான்.

“என்ன சார் வந்ததும் உங்ககிட்டே வம்பு வளர்க்க ஆரம்பிச்சுட்டாளா?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை”அவரிடம் பேச்சுக் கொடுத்தவாறே மெல்ல அரசியின் கரங்களைச் சட்டை காலரில் இருந்து பிரித்து எடுத்தான் ஆதித்யன்.

“டேய்! விக்கிரமா அவன் கூடப் பேசாதே”மகேந்திரனை சுட்டிக் காட்டி பேசினாள் பொழிலரசி.

“என்ன பொழில் இது அப்பாவை இப்படி எல்லாம் மரியாதை இல்லாம பேசலாமா? தப்பு பேபி…இனி அப்படிப் பேசக் கூடாது சரியா?”

“முடியாது போடா…நான் எது கேட்டாலும் அவனும் வாங்கித் தர மாட்டேங்கிறான்.நீயும் வாங்கித் தர மாட்டேங்கிற.இரண்டு பேரும் என்கூடப் பேசாதீங்க போங்கடா” வாயை இறுக மூடிக் கொண்டு மீண்டும் கோபத்துடன் திரும்பி அமர்ந்தவளைக் கண்டு வாய் விட்டுச் சிரித்தான் ஆதித்யன்.

“போச்சு…உங்களுக்குச் சப்போர்ட் பண்ணிப் பேசப் போய் எனக்கு இருந்த மரியாதையும் போச்சு” என்று சொல்லிவிட்டு திரும்பி மகேந்திரனை பார்த்தவன் அவரின் நெகிழ்ச்சியான பார்வையில் சிரிப்பை நிறுத்தி விட்டு அவரிடம் பேச ஆரம்பித்தான்.

“என்ன ஆச்சு சார்”

“எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை தம்பி…எவ்வளவு பெரிய ஆள் நீங்க…உங்களைப் போய் என் மகள் எப்படி எல்லாம் மரியாதை இல்லாம பேசறா…கொஞ்சமும் அலட்டிக்காம எப்படி உங்களால சாதாரணமா இருக்க முடியுது?”

“உங்க பொண்ணு எதையும் தெரிஞ்சு செய்யலையே?அப்புறம் எதுக்கு இந்தக் கவலை?”

“அது இல்லை தம்பி…ஊரில் யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேங்கிறா.அங்கே போனதும் எப்பவும் விட்டத்தை வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருப்பா…அவளோட சிநேகிதி கயல்கிட்டே கூட ஒரு வார்த்தை பேச மாட்டேங்கிறா.அப்படி இருக்கிறவ உங்ககிட்டே மட்டும் எப்படி இந்த அளவுக்குப் பேசுறான்னு தான் எனக்குப் புரியலை”

“எனக்கு என்னவோ உங்க பொண்ணுக்கு அந்த ஊரில் இருக்கப் பிடிக்கலைன்னு தோணுது.அங்கே அவங்க மனசு வருத்தப்படும் படியா என்னவோ நடந்து இருக்கு.அதான் அங்கே யார்கிட்டயும் அவங்க பேசுறது இல்லை.மத்தபடி இங்கே மெடிக்கல் கேம்ப் வரும் பொழுது இங்கே எல்லார்கிட்டயும் ஓரளவுக்குப் பேசத் தானே செய்றாங்க”

“அது தான் தம்பி எனக்கும் புரியலை.”குழப்பமாய் அவனை ஏறிட்டார் மகேந்திரன்.

“பேசாம அவங்களை இங்கேயே உங்க கூடவே தங்க வச்சு பார்த்துக்கோங்க.எனக்கு என்னமோ அந்த இடத்தை விட்டு வெளியே வந்தா இவங்களுக்குச் சீக்கிரம் குணமாகிடும்னு தோணுது”மனதில் பட்டதை அப்படியே சொன்னான் ஆதித்யன்.

“ஆமா தம்பி இந்த முறை டாக்டர் செக்கப் பண்ணினப்போ கூட நல்ல விதமாத் தான் சொன்னார்.அவளோட மனசுக்கு இதமான சூழ்நிலையில் இருந்தா சீக்கிரமே குணமாகிட வாய்ப்பு இருக்குனு சொன்னார்.ஆனா மேற்கொண்டு இன்னும் ஏதேதோ சொன்னாரே ஆபரேஷன் அது இதுன்னு…அது தான் எனக்குக் கொஞ்சம் பயமாயிருக்கு”அவர் குரலில் மெல்லிய வருத்தம் இழையோடியது.

“இன்னும் என்ன சார் நீங்க இப்படி எல்லாம் பயப்படுறீங்க…எல்லாம் சரியாகி பொழிலரசி சீக்கிரமே குணமாகிடுவா பாருங்க”

“இவ குணமாகிடுவா அப்படிங்கிறது எனக்கும் சந்தோசம் தான் தம்பி.ஆனா அது எப்போ அப்படிங்கிறத யாராலயும் உறுதியா சொல்ல முடியலையே.அப்படியே அவ குணமானாலும் அதுக்கு அப்புறம் இவளோட வாழ்க்கை எப்படி இருக்கும்னு நினைச்சா தான் எனக்குப் பயமா இருக்கு…”

“ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க? உங்க பொண்ணோட நல்ல மனசுக்கு நிச்சயம் அவங்க பேருக்கு ஏற்ற மாதிரி அரச வாழ்க்கை அவங்களுக்குக் கிடைக்கும்.தைரியமா இருங்க” மறைமுகமாகத் தன் மனதை வெளிப்படுத்த முயன்றான் ஆதித்யன்.

“இல்லை தம்பி உங்களுக்கு எதார்த்தம் புரியலை.அவளுக்குப் புத்தி தெளிஞ்சா கூட இத்தனை நாள் அவ மனநிலை சரியில்லாம இருந்தது கண்டிப்பா அவளோட எதிர்காலத்தைப் பாதிக்கும்.சின்னப் பிள்ளையில் இருந்து அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணு தம்பி.கல்யாணம் முடிஞ்சு போற வீட்டில் அவளுக்கு எல்லாரோட அன்பும் ஆதரவும் கண்டிப்பா இருக்கணும்.

அதை விட்டுட்டு யாராவது அவளைப் பைத்தியம்னு சொல்லிக் காமிச்சா அப்புறம் எப்படித் தம்பி அவளால நிம்மதியா இருக்க முடியும்.தெரியாத இடத்தில் அவளை அனுப்பிட்டு வேதனைப்படுறதை விட அவளை நல்லா புரிஞ்சுக்கிட்ட இடத்தில் கட்டிக் கொடுத்தா அவ சந்தோசமா இருப்பானு எனக்குத் தோணுது தம்பி”

“அதை விட அவளை நேசிக்கிற ஒருத்தனுக்குக் கல்யாணம் செஞ்சு கொடுத்தா அவனை இன்னும் நல்லா பார்த்துக்குவான் இல்லையா?”படபடவென்று பேசினான் ஆதித்யன்.எங்கே அவசரப்பட்டுப் பொழிலரசியை வேறு யாருக்கும் திருமணம் செய்து கொடுத்து விடுவாரோ என்ற பயம் அவன் கண்களில் மின்னி மறைய நாட்களைக் கடத்தாமல் சீக்கிரம் அவரிடம் சொல்லி விட வேண்டும் என்று முடிவு செய்தான் ஆதித்யன்.

“ம் பார்க்கலாம் தம்பி…அடுத்த மாசம் இவ பாட்டியோட மூணாவது வருஷ நினைவு நாள் வருது.இவங்க பாட்டியோட ஆத்மா நிச்சயம் இவளைத் தான் சுத்திக்கிட்டு இருக்கும்.கடவுள் தான் கண்ணைத் திறக்கலை.அவங்களாவது ஏதாவது வழி சொல்றாங்களான்னு பார்க்கலாம்”என்று சோர்ந்த குரலில் சொன்னவர் எதிரில் வந்து நின்ற ஆசிரமப் பணிப்பெண்ணைக் கேள்வியாகப் பார்த்தார்.

“சார் உங்களை டாக்டர் பார்க்கணும்னு வர சொன்னார்…”என்று ஆதித்யாவை நோக்கி கூறி விட்டு செல்ல ஆதித்யன் வேகமாக எழுந்து செல்ல முயலுகையில் அவனின் சட்டை பின்னோக்கி இழுக்கப்பட்டது அரசியால்.

“என்னடா” என்றான் மென்மையாக

“நானும் வர்றேன்.என்னை தனியா விட்டுட்டு போகாதே விக்கிரமா…”ஒற்றைப் பக்கமாய்த் தலையைச் சாய்த்துக் குருவி போல அவள் கேட்ட விதம் மனதை வருட ‘வா’ என்று ஒற்றைக் கையை அவள் புறம் நீட்டினான் ஆதித்யன்.மெல்ல ஆதித்யனோடு கரம் கோர்த்து ஏதேதோ கதை பேசியபடியே அவனுடன் இணையாக நடந்த மகளைக் கண்டதும் ஏதேதோ கற்பனைகளில் அவர் மனம் மூழ்கித் தவித்தது.

யாரின் கெட்ட நேரமோ என்னவோ ஆதித்யனிடம் இருந்து ஏதோ கையெழுத்து வாங்குவதற்காக அங்கே வந்து இருந்த ஜெகன்நாதன் காரை விட்டு இறங்காமல் காரில் இருந்தபடியே அருகில் நின்று கொண்டு இருந்த மகேந்திரனை அழைத்துப் பேசினார்.

இதற்கு முன்னரே இந்த மூன்று வருடங்களில் சில தடவை ஏற்கனவே ஜெகன் நாதனை ஆதித்யனுடன் பார்த்து பழகி இருந்ததால் அவரும் சிநேகிதமாகப் புன்னகைக்க முயன்றபடியே அவரை நோக்கி வந்தார்.

காரை விட்டு கீழே இறங்காத ஜெகன் நாதன் ஒரு பைலை மட்டும் அவரிடம் நீட்டி இதில் ஆதியின் கையெழுத்தை வாங்கி வருமாறு உத்தரவிட்டவர் காரில் ஜம்பமாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.அங்கிருந்த ஒரு பணியாளின் மூலம் பைலை ஆதித்யனிடம் அனுப்பிக் கையெழுத்து வாங்கி வர சொன்னவர் முக வாட்டத்துடன் அமர்ந்து இருக்க,அது பொறுக்குமா ஜெகன் நாதனுக்கு?

“நல்ல வேலையா கிளம்பி வெளியே போறேன்…இப்படி மூஞ்சியைச் சோகமா வச்சுக்கிட்டு இருந்தா எப்படி என்னோட காரியம் விருத்தி ஆகும்? சை!” எரிச்சலை மறைக்காமல் காட்டினார்.

அவரின் எரிச்சல் மனதை பாதித்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவரைச் சமாதானம் செய்து வைக்க எண்ணினார் மகேந்திரன்.பிறகு வேறு என்ன செய்வார்…அவருக்கும் ஆதித்யனுக்கும் இடையில் உள்ள உறவுமுறை அவர் அறிந்ததாயிற்றே.

“மன்னிக்கணும் சார்…என் பொண்ணைப் பத்தின கவலை தான்…அவளுக்கு ஆண்டவன் ஒரு நல்ல வழி காட்ட மாட்டானா?அப்படிங்கிற எண்ணம் தான்.”என்று சொன்னவரின் கண்கள் கலங்க ஆரம்பிக்க ஜெகன் நாதன் என்ன நினைத்தாரோ தன்னுடைய சட்டைப்பையில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து அவரிடம் நீட்டினார்.

“இவரைப் போய்ப் பாருங்க…உங்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.உங்க பொண்ணு வாழ்க்கையும் நல்ல படியா மாறும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தவர்,பணிப்பெண் கையெழுத்தை வாங்கிக் கொண்டு வந்த விட அத்துடன் பேச்சு முடிந்தது என்று லேசாகத் தலையை அசைத்து விட்டு கிளம்பி விட்டார்.ஜெகன் நாதனுக்கு மகேந்திரனுடைய மகளுக்கு ஏதோ உடல்நலக் கோளாறு என்ற அளவில் மட்டுமே தெரியும்.மற்றபடி அவர் பொழிலரசியை நேரில் பார்த்ததும் கிடையாது.அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதும் கிடையாது.

அவர் கொடுத்த கார்டை வாங்கிப் பத்திரப்படுத்தியவர் அதில் இருந்த எண்ணுக்கு அழைத்துப் பேசி விபரம் சொல்ல,அடுத்த நாள் பொழிலரசியின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு அதில் குறிப்பிட்டு இருக்கும் முகவரிக்கு வருமாறு சொல்லவே அழைப்பை துண்டித்து விட்டு தன்னுடைய வேலைகளில் மூழ்கினார்.

அன்று முழுவதும் ஆதித்யன் பொழிலரசியின் அருகிலேயே இருந்தான்.கிளம்பும் முன் மறக்காமல் டாக்டரிடம் அரசியின் உடல்நிலை குறித்து அவரிடம் பேசிவிட்டே கிளம்பினான்.அங்கிருந்து கிளம்பும் பொழுது முரண்டு பிடித்த அரசியைச் சமாளித்து விட்டு கிளம்புவதற்குள் அவனுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது.

எப்பொழுதும் இங்கே வரும் பொழுது டிரைவர் இல்லாமல் அவன் மட்டுமே தனித்துக் காரை ஒட்டி வருவது தான் ஆதித்யனின் வழக்கம்.இப்பொழுதும் அது போலவே தனித்து வந்தவன் ஆள் அரவமில்லா சாலையில் காரை நிறுத்தி விட்டு அப்படியே கார் ஸ்டீயரிங்கில் தலையைக் கவிழ்ந்து கொண்டான்.

அன்று காலையில் டாக்டரிடம் பேசிய பொழுது அவர் பேசிய வார்த்தைகள் அவனுக்குக் கொஞ்சம் தெம்பை கொடுத்து இருந்தது.இனியும் நாட்களைக் கடத்த ஆதித்யனுக்கு மனம் இல்லை.அதே நேரம் அரசியின் மனம் தெளிவாகாமல் அவளைத் தன்னவளாக மாற்றிக் கொள்ளவும் அவன் விரும்பவில்லை.எப்பொழுது மகேந்திரனின் பர்ஸில் இருந்த பொழிலரசியின் புகைப்படத்தைப் பார்த்தானோ அப்பொழுதில் இருந்து இத்தனை வருடங்களாக அவனை இந்தக் காதல் போட்டு பாடாய் படுத்திக் கொண்டு இருக்கிறது.

அதிலும் இந்த மூன்று வருடங்கள் அவளின் அருகில் இருக்கும் இந்த நாளுக்காகவே தான் பிறந்தது போன்ற உணர்வு ஆட்டிப் படைக்க அடுத்த முறை மகேந்திரனைப் பார்க்கும் பொழுது இதைப் பற்றிப் பேசி அவரின் சம்மதத்தை வாங்கி விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.கிளம்பும் முன் ஏக்கத்துடன் தன்னையே பார்த்துக் கொண்டு இருந்த அரசியின் குழந்தை முகம் அவன் கண்ணில் வந்து இம்சிக்க ‘அடுத்து வரும் நாட்களை எப்படிக் கடக்கப் போகிறேனோ’ என்ற எண்ணத்துடன் காரை வீட்டுக்குச் செலுத்தினான்.

வீட்டுக்குப் போனதும் அடுக்கடுக்காய் வேலைகள் சூழ்ந்து கொள்ள அதன்பிறகு அரசியைப் பற்றி நினைக்கக் கூட நேரமில்லாமல் போயிற்று அவனுக்கு.இரவு தூங்கும் முன் அவனுக்கு அழைத்த ஜெகன் நாதன் அன்று ஆதித்யனிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு நல்ல நேரத்தில் போய்க் கொடுத்து விட்டதால் வேலை வெற்றிகரமாகவே முடிந்ததாக வழக்கம் போல ரம்பம் போட்டவரை கடமையே என்று உம் கொட்டி கேட்டுக் கொண்டு இருந்தவன் இடையில் அவர் மகேந்திரனைப் பற்றிப் பேசவும் காதுகளைத் தீட்டிக் கொண்டு என்னவென்று கேட்க ஆரம்பித்தான்.

“கிளம்பும் போது நம்ம ஜோசியர் கார்டை அவருக்கு ஒண்ணு கொடுத்துட்டு வந்து இருக்கேன்.அவர் சொல்படி கேட்டு அப்படியே அவரை நடக்கச் சொல்லு…அப்புறம் பாரு அவருக்கு எப்படி அதிர்ஷ்டம் கொட்டப் போகுதுன்னு” என்று மேலும் ஏதேதோ சலசலக்க ஆதித்யனுக்கு எரிச்சல் தான் வந்தது.

‘அந்தாளே சரியான பிராடு…அந்தாள் கிட்டே இருந்து உங்களை எப்படி மீட்கிறதுன்னு தெரியாம நான் முழிச்சுக்கிட்டு இருக்கேன்.இதுல அவரை வேற கோர்த்து விடப் போறீங்களா? அந்தாள் கிட்டே போனா கைல இருக்கிற கடைசி ஒத்த ரூபாவைக் கூடப் புடுங்கிட்டுத் தானே அனுப்புவான்’என்று எண்ணியவன் நாளை காலை எழுந்ததும் முதல் வேலையாக மறக்காமல் மகேந்திரனுக்குப் போன் செய்து பேசி இது குறித்து அவரை எச்சரிக்க வேண்டும் என்று நினைத்தான்.

ஆனால் அதன் பிறகு அவனுடைய வேலைகளில் மூழ்கிப் போனான்.ஒருவேளை உடனடியாக மகேந்திரனிடம் அந்த ஜோசியரைப் பற்றிப் பேசி அவர்கள் சந்திப்பதை தடுத்து இருந்தால் பின்னாளில் ஏற்படப் போகும் எல்லாப் பிரச்சினைகளையும் தவிர்த்து இருக்கலாம்.ஆனால் விதி அவனின் வாழ்க்கையிலும்,அரசியின் வாழ்க்கையிலும் ஒரு கோர சம்பவத்தை நடத்த துணிந்து தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்து விட்டது.

அடுத்த வாரம் மீண்டும் பொழிலரசியைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் அவனுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆகி இருந்த மருத்துவர் ஒருவரின் வாயிலாக ஜெர்மனியை சேர்ந்த புகழ் பெற்ற மூளை நரம்பியல் டாக்டர் பிரான்சிஸ் இந்தியா வரும் தகவலை அறிந்து கொண்டவன் அரசிக்காக அவரை வரவழைத்து இருந்தான்.

ஏற்கனவே மெயிலில் அரசியின் மருத்துவக் அறிக்கைகளை அவருக்கு அனுப்பி வைத்து விட்டதால் அவற்றை முதலில் ஆராய்ந்து பார்த்தார்.அதன்பிறகு உள்ளூரில் அரசிக்கு மருத்துவம் பார்த்த டாக்டரிடமும் அவர் பேசி தன்னுடைய சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள ஏற்பாடு செய்தான் விக்ரமாதித்யன்.

அதற்கடுத்து எல்லா ஏற்பாடுகளும் மளமளவென நடக்க அடுத்த முறை விக்ரமாதித்யன் அரசியைச் சந்திக்கும் பொழுது அவன் வந்து சேரும் முன்னரே அவளுக்கு அனஸ்தீசியா கொடுக்கப்பட்டு இருந்தது.அரை மயக்க நிலையிலும் ஆதித்யன் வந்ததை உணர்ந்து கொண்ட அரசி “விக்கிரமா” என்று குரல் கொடுத்து அவனை நோக்கி கையை நீட்டினாள்.

“என்னை என்ன செய்யப் போறாங்க விக்கிரமா? டாக்டர் தாத்தா ஊசி எல்லாம் போட்டாரு.எனக்கு ஒரே மயக்கமா வருது”

“ஒண்ணும் இல்லை பொழில்…உனக்குத் தூக்கம் வர்றதுக்காக மருந்து கொடுத்து இருக்காங்க…வேற ஒண்ணும் இல்லை.நீ தூங்குடா”

“சொல்ற பேச்சு கேட்கலைனா டாக்டர் தாத்தா ஊசி போடுவாங்கன்னு நீதானே சொன்ன…நான் இனி சொல்ற பேச்சு எல்லாம் கேட்டு சமத்தா இருக்கேன்.என்னை கூட்டிட்டு போய்டு விக்கிரமா…எனக்கு பயமா இருக்கு.ப்ளீஸ்!”அரைகுறை மயக்கத்தில் தன்னுடைய கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கெஞ்சும் தன்னவளின் நிலைமை கவலை அளித்தாலும் வேறு வழியின்றி அவளைத் தேற்றி அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தான்.

கொஞ்சம் சிக்கலான ஆபரேஷன் என்பதால் ஆபரேஷன் முடிய எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகி விடும் என்று ஏற்கனவே சொல்லி இருந்ததால் ஆஸ்பத்திரி வராண்டாவில் காத்திருக்கத் தொடங்கினான்.அப்பொழுது தான் கவனித்தான் அருகில் மகேந்திரன் இல்லாததை.சற்று நேரம் கழித்துச் சோர்ந்து போய்க் களையிழந்த முகத்துடன் வந்தவரை பார்த்தவன் அதிர்ந்து தான் போனான்.கண்களில் இரண்டிலும் கருவளையத்துடன் அளவுக்கு அதிகமான வருத்தத்தையும் தேக்கி இருந்தது அவர் முகம்.

“என்ன சார்…இப்படி இருக்கீங்க?கொஞ்சம் ரிஸ்க்கான ஆபரேஷன் தான்.ஆனா பொழிலரசிக்கு நினைவு திரும்ப எழுபது சதவீதம் வாய்ப்பு இருக்குனு டாக்டர் உறுதியா சொல்லி இருக்கார்.நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க”என்றான்.ஒருவேளை மகளின் ஆபரேஷனையே நினைத்துச் சரியாகத் தூங்காமல் இப்படி இருக்கிறாரோ என்று ஆறுதல் கூறி அவரைத் தேற்ற முனைந்தான்.

அவரோ ஆதித்யனின் பேச்சுக்களைக் காதில் வாங்கிக் கொண்டாலும் ஒரு வார்த்தை பேசவில்லை.கண்கள் கலங்கி எந்நேரம் வேண்டுமானாலும் கண்ணீர் விழத் தயாராக இருந்தது.அவரின் முகத்தோடு சேர்ந்து அகமும் கலங்கி இருப்பது ஆதித்யனுக்குப் புரிந்தாலும் ஆபரேஷன் குறித்துப் பயந்து போய் இருக்கிறார் என்றே நினைத்தான்.

அவருக்கு ஆறுதல் சொல்லும் வகையில் கைகளைத் தட்டிக்கொடுத்து ஆறுதலாகப் புன்னகைத்தான்.அடுத்த சில மணி நேரங்கள் மௌனத்திலேயே கழிய ஆபரேஷன் முடிந்து வெளிவந்த டாக்டர் பிரான்சிஸ் முகம் எங்கும் மகிழ்ச்சியில் பூரிக்க ஆதித்யனிடம் கைக் குலுக்கினார்.

“ஆபரேஷன் சக்சஸ் ஆதித்யா…இனி கொஞ்ச நாளைக்கு அவங்க மூளைக்குக் கண்டிப்பாக ஓய்வு அவசியம்.அனாவசிய அலட்டல் எதுவும் இல்லாம அவங்களை நல்லா ரெஸ்ட் எடுக்க விடுங்க…தலையில் லேசர் ட்ரீட்மெண்ட் தான் பண்ணி இருக்கோம்.ஸோ காயம் எதுவும் இருக்காது.இருந்தாலும் கொஞ்ச நாள் அவங்க முழு ஓய்வில் இருக்கட்டும்.

அப்புறம் முக்கியமான விஷயம் அவங்களுக்குச் செஞ்சு இருக்கிற ஆபரேஷன் கொஞ்சம் சிக்கலானது.அவங்க மூளை இப்ப ரொம்பக் குழப்பத்தில் இருக்கும்.இப்போ அவங்க தெளிவில்லாத மனநிலையில் தான் இருப்பாங்க.அதனால அவங்க நார்மல் ஆகிற வரை அவங்களைத் தனியா விடாதீங்க.முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்குத் துணைக்கு யாராவது இருங்க.

இந்த மாதிரி நேரத்தில் சில பேர் கொஞ்சம் ஆக்ரோஷமா நடந்துப்பாங்க.சில மாதங்கள் பொறுத்து மெல்ல மெல்ல பழைய விஷயங்களை அவங்களுக்குப் பேசி புரிய வைக்க ஆரம்பிச்சா,நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.அவங்களுக்கு நினைவு திரும்பறது ரொம்ப இயற்கையா நடக்கணும்.

அதை விட்டு அவங்க மூளையைப் போட்டு கசக்கி,கட்டாயப்படுத்தி எதையும் நியாபகத்திற்குக் கொண்டு வர முயற்சிக்கக் கூடாது.அதுவரை எந்தக் காரணம் கொண்டு அவங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்”என்று ஆங்கிலத்தில் சொன்னவர் இருவரிடமும் விடைபெற்று அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் மகேந்திரனின் கைகளைப் பிடித்துக் குலுக்கிய ஆதித்யன் எதிர்கொண்டது அவரின் வெறுமை நிறைந்த பார்வையே…ஆதித்யனின் மனதில் மூளையில் எதுவோ சரியில்லை என்று குரல் சொன்னது.ஆனால் இப்பொழுது அதைப் பற்றிக் கேட்டாலும் அவர் நிச்சயம் வாயைத் திறந்து எதுவும் சொல்ல மாட்டார் என்று தோன்றவே மௌனமாகவே இருந்து விட்டான்.

அரசி கண் விழிக்க மேலும் நான்கு மணி நேரம் ஆகும் என்று டாக்டர்கள் சொல்லவே அதுவரை தன்னுடைய அலுவலகத்திற்குச் சென்று பார்க்க வேண்டிய வேலைகளை முடித்து விட்டு திரும்பி விடலாம் என்ற எண்ணத்துடன் மகேந்திரனிடம் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.

வழியெங்கும் ஆதித்யனுக்கு இதே யோசனையாகத் தான் இருந்தது.ஆபரேஷன் தான் வெற்றி அடைந்து விட்டதே அப்புறமும் கூட அவர் ஏன் அப்படி இருந்தார்.எதுவோ சரியில்லை.இரவு மீண்டும் அவரைச் சந்திக்கும் பொழுது இது குறித்து அவரிடம் பேசி விட வேண்டும் என்று முடிவெடுத்தவன் அதற்குப்பிறகு தன்னுடைய வேலைகளில் மூழ்கி விட்டான்.

வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பியவன் குளித்து விட்டு மீண்டும் மருத்துவமனைக்குக் கிளம்புவதாக முடிவு செய்து விட்டு குளியல் அறைக்கு நுழைய முயன்றவனை அவன் மொபைல் ஒலி தடுத்து நிறுத்தியது.அழைப்பு மருத்துவமனையில் இருந்து வந்து இருக்கவே அவசரமாக எடுத்துப் பேசினான்.

“சார்…அரசிக்கு நினைவு திரும்பியதில் இருந்து ரொம்ப வயலண்டா நடந்துக்கறாங்க..யார் பேச்சையும் கேட்க மாட்டேங்குறாங்க.கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வாங்க”

“அவளுக்குப் பழைய நினைவு எதுவும் திரும்பிடுச்சா?” ஆவலுடன் கேட்டான் ஆதித்யன்.

“இல்லை சார்…அவங்க ஏதோ வெறி பிடிச்சா மாதிரி நடந்துக்கிறாங்க.கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்.அவங்க அப்பா நம்பர் எவ்வளவோ முயற்சி பண்ணினோம்.ஆனா லைன் கிடைக்க மாட்டேங்குது.எங்கே இருக்கார்னு தெரியலை”

“இதோ வர்றேன்” என்று சொன்னவன் சாப்பிட கூட இல்லாமல் மீண்டும் வேகமாக மருத்துவமனைக்கு ஓடினான்.போகும் வழியெல்லாம் அவன் மனம் முழுக்க ஆழ்ந்த சிந்தனையில் இருந்தது.

’அரசியைத் தனித்து விட வேண்டாம் என்று டாக்டர் அத்தனை முறை தெளிவாகச் சொல்லியும் அரசியின் அப்பா எங்கே போனார்? காலையில் ஆபரேஷன் நடக்கும் போது கூட லேட்டா தான் வந்தார்…என்ன ஆச்சு அவருக்கு? உடம்பு எதுவும் சரியில்லையா?” என்ற யோசனையுடன் மருத்துவமனைக்கு விரைந்தவன் காரைப் பார்க் செய்து விட்டு கீழே இறங்கும் முன் கண்ட காட்சியில் அவனுக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

மருத்துவமனையின் மொட்டை மாடியில் இருந்து பொழிலரசி நின்று கத்தி கூச்சல் போட்டுக் கொண்டு இருந்தாள்.அவளை சமாதானம் செய்தபடியே நெருங்க முயற்சித்தவர்களைக் கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தாக்கினாள்.அவளிடம் நெருங்கவே முடியாமல் மருத்துவமனை ஊழியர்கள் திணறிக் கொண்டு இருக்க லிப்ட் இருப்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் வேகமாக இரண்டு இரண்டு படிகளாக ஏறி மொட்டை மாடியை அடைந்தான்.

அவன் மேலே ஏறி வருவதற்குள் அரசி அங்கிருந்த வாட்டர் டேங்கின் மீது ஏறி கத்தி கூப்பாடு போட்டுக் கொண்டு இருந்தாள்.ஆதித்யன் அவளை நெருங்கிப் பேசத் தொடங்கும் முன் கால் தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த அரசி நீச்சல் தெரியாமல் உயிர் காற்றுக்குப் போராடியபடியே தண்ணீரில் தத்தளித்தாள்.

நொடியும் தாமதிக்காமல் மருத்துவமனை ஊழியர்களை விட வேகமாக வாட்டர் டேன்க் மேல் ஏறி அடுத்த நிமிடம் தண்ணீருக்குள் குதித்து விட்டான் ஆதித்யன். தண்ணீருக்குள் மூழ்கத் தொடங்கியவளின் அருகில் வேகமாக நீந்திச் சென்று அவளின் தலைமுடியை பற்றி இழுத்துக் கொண்டு மேலேறி வந்தவன் அவளை அப்படியே தோளில் போட்டுக் கொண்டு வாட்டர் டேங்கின் வெளியே இருந்த மேடை போன்ற இடத்தில் கிடத்தினான்.

அவள் நிறையத் தண்ணீரை குடித்ததை உணர்ந்து முதலில் அவளது வயிற்றை அமுக்கி தண்ணீரை வெளியே எடுக்க முயன்றான்.தண்ணீரை வெளியே எடுத்த பிறகும் கூட அரசிக்கு மயக்கம் முழுதாகத் தெளியவில்லை.ஒரு நொடி நிதானித்தவன் அவளின் வாய் வழியாகத் தன்னுடைய மூச்சை கொடுத்து அவளுக்கு உயிர் கொடுக்க முயன்று அதில் வெற்றியும் கண்டான்.

அதன்பிறகு மருத்துவமனை ஊழியர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ள ஈர உடையைக் கூட மாற்றாமல் அப்படியே தளர்ந்து போய் அமர்ந்து விட்டான் ஆதித்யன்.அன்று நாள் முழுக்க ஏற்பட்ட அளவுக்கு அதிகமான வேலையின் காரணமாக அப்படியே மருத்துவமனை வளாகத்தில் இருந்த சேரிலேயே தூங்கி விட நடு இரவில் அவனுக்கு அடுத்தக் கட்ட அதிர்ச்சியைக் கொடுத்தது விதி.

உன்னுடைய போராட்டங்கள் இன்னும் முடியவில்லை இனி தான் ஆரம்பம் என்று சொல்லாமல் சொல்வது போல ஒலித்தது அவனது மொபைல்.கண்கள் தூக்கத்திற்குக் கெஞ்ச,விடாது ஒலித்த போனை மனமே இன்றி எடுத்தான் விக்ரமாதித்யன்.

ஆனால் வந்த போன் அழைப்பு அவனது மொத்த தூக்கத்தையும் பறித்துக் கொண்டு விட்டது.மகேந்திரன் தற்கொலை முயற்சி செய்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருப்பதாகத் தகவல் வரவும் நேரத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் அவரைச் சேர்த்து இருக்கும் மருத்துவ மனைக்குப் புயல் போலக் காரை ஓட்டிச் சென்றான்.

காரை ஒழுங்காகப் பார் கூடச் செய்யாமல் விழுந்தடித்துக் கொண்டு அவரைப் பார்க்க ஓடினான் விக்ரமாதித்யன்.ஐசியூ அறையின் முன்னே ஒரு சில காவலர்கள் அவனுக்கு முன்பே அங்கே வந்து காத்திருந்தனர். ‘போலீஸ்க்கு இங்கே என்ன வேலை?ஒருவேளை தற்கொலை முயற்சி என்பதால் வந்து இருப்பார்களோ’ என்று ஒரு விநாடி தயங்கியவன் அடுத்த விநாடி தன்னுடைய சிந்தனை எல்லாம் ஒதுக்கி தள்ளி விட்டு அந்த அறையினுள் புகுந்து விட்டான்.அவனை அங்கே யாருமே தடுக்கவில்லை.அவன் வருவான் என்று அவர்களும் எதிர்பார்த்தார்களோ என்னவோ?

அறையின் உள்ளே உடலில் ஆங்காங்கே சில வயர்கள் இணைக்கப்பட்டு இருக்க,செயற்கை முறையில் சுவாசம் வந்து கொண்டு இருந்தது.நர்ஸ் ஆதித்யன் வந்து இருப்பதை அவர் காதருகில் குனிந்து சொல்லவும் மிகச் சிரமப்பட்டுத் தன்னுடைய கண்களைப் பிரித்து ஆதித்யனைப் பார்த்தார்.

இமைகளை மிகவும் சிரமப்பட்டுப் பிரித்தவர் ஆதித்யனை அடையாளம் கண்டு கொண்டதன் அறிகுறியாக அவரது விழியில் சட்டெனக் கொஞ்சம் பிரகாசம் கூடியது.ஆதித்யனுக்கு ஏனோ அணையப் போகும் விளக்கு சுடர்விட்டு எரிவதை போலத் தோன்ற இன்னும் அவரை நெருங்கி அமர்ந்து கொண்டான்.

அந்தப் பார்வையில் இருந்தது என்ன? அவனுக்குப் புரியவில்லை.எதையோ யாசிப்பது போல இருந்த அவரின் பார்வையின் பொருளை உணர முடியாமல் மெல்ல தயங்கியபடியே பேச்சை ஆரம்பித்தான்.

“ஏன் இப்படிச் செஞ்சீங்க?”அவனையும் அறியாமல் துக்கம் அவன் தொண்டையைக் கவ்வியது.இவரிடம் அடுத்த முறை சந்திக்கும் பொழுது பொழிலரசியைத் திருமணம் செய்து கொள்வது குறித்துப் பேச வேண்டும் என்று நினைத்து இருந்தோமே என்ற எண்ணம் வேறு அவனை வாட்டி வதைத்தது.

‘இருக்கும் ஒற்றை மகளைக் கூடத் தனித்து விட்டுச் செல்லும் அளவுக்கு அப்படி என்ன அவசரம்?அதுவும் மனநிலை சரியில்லாமல் குழந்தை போல இருக்கும் என்னுடைய பொழிலை பற்றி இவர் கொஞ்சமும் கவலையே படவில்லையே…’உள்ளத்து பொருமலை எல்லாம் கண்களில் தேக்கியபடி நின்று கொண்டு இருந்தான் விக்ரமாதித்யன்.

“ஏன் சார் ஏன் இப்படிச் செஞ்சீங்க?அப்படி என்ன கஷ்டம்?அதுதான் உங்க பொண்ணோட ஆபரேஷன் கூட முடிஞ்சு போச்சே…இன்னும் கொஞ்ச நாளில் எல்லாமே சரியாகிடும்.அதுக்கு அப்புறம் என்னென்னவோ கற்பனை எல்லாம் செஞ்சு வச்சு இருந்தேனே…என்னை விடுங்க சார்…பொழிலை பத்தி கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்தீங்களா சார்”என்ன முயன்றும் அவனுடைய கோபம் குறையாமல் இருக்கத் தன்னுடைய ஆதங்கத்தை அவரிடம் கொட்டி விட்டான் ஆதித்யன்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 5]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here