Kadhale Nee Kaanala Tamil Novels 4

0
2266
Madhumathi Bharath Tamil Novels

நிமிடங்கள் நாட்களாக மாறி இன்றுடன் பொழிலரசி அந்த வீட்டிற்கு வந்து ஒரு வாரம் கடந்து இருந்தது.தப்பித் தவறி எப்போதேனும் அப்படியே வெளியே வந்தாலும் ஆதித்யனின் தாயார் பத்மாவதியின் கண்ணில் இவள் பட்டுவிட்டால் போதும் அவரது கோபம் இவளை குத்திக் கிழித்து விடும்.


அவர்களுக்குப் பயந்து அவள் பெரும்பாலும் அறையை விட்டு வெளியே வருவதே இல்லை.அன்றைய நாளுக்குப் பிறகு அவளுடைய கணவனும் அவளுடைய கண்களில் அவ்வளவாகப் படுவதில்லை.முதல் நாள் மட்டுமே கணவனின் அறையில் இருந்தவள் அன்று மயங்கிய பிறகு தனியே மூன்றாவது மாடியில் உள்ள விருந்தினர் அறையில் தான் தங்க வைக்கப்பட்டு இருந்தாள்.கணவனே ஆனாலும் தானாக வலிய போய் ஆதித்யனின் அறைக்கதவை தட்டுவதற்கு அவளின் மனது உடன்படவில்லை. யாரிடமும் பேசப் பிடிக்காமல் அறைக்குள்ளேயே முடங்க ஆரம்பித்தாள் பொழிலரசி.


வெளியே போனால் தானே பிரச்சினை.அப்பாவை நினைத்துக் கொண்டே இந்த அறைக்குள்ளேயே இருந்து விட்டால் என்று எண்ணியவள் அதையே பின்பற்றவும் தொடங்கினாள்.அன்றும் அப்படித்தான் அறைக்குள்ளேயே முடங்கித் தன்னுடைய குழந்தை பருவ நிகழ்வுகளை அசைப் போட்டுக் கொண்டு இருந்தாள் பொழிலரசி. மெல்லிய கதவு தட்டலுக்குப் பின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் அவளுடைய கணவன்.


“அறையை விட்டு வெளியே வருவதே இல்லை போல…” கேள்வி போலக் கேட்டாலும் கணவனின் பார்வை தன்னுடைய முகத்தில் ஆராய்ச்சியாகப் படிவதை உணர்ந்து கொண்டாள் பொழிலரசி.
அவனுடைய கேள்வி காதில் விழுந்தாலும் ஒன்றும் பதில் பேசாமல் அமைதியாகவே இருந்தாள் பொழிலரசி.பின்னே அவனிடம், ‘உன்னுடைய அம்மா என்னைத் திட்டுவதால் தான் நான் அறையை விட்டு வெளியே வருவதே இல்லை என்று சொல்லி விட முடியுமா?’ மௌனமாகச் சுவற்றை வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.


சற்று நேரம் அறையில் நிலவிய அமைதியை கலைத்து விட்டு பேசத் தொடங்கினான் ஆதித்யன்.


“உன்னால் எப்பொழுதும் இந்த அறைக்குள்ளேயே ஒளிந்து கொண்டு இருக்க முடியாது.இதை விட்டு நீ வெளியே வந்து தான் ஆக வேண்டும்.மற்றவர்களை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.” நிதர்சனத்தை அவளுக்குப் புரிய வைக்க முயன்றான் ஆதித்யன்.
‘அப்படியானால் இவனுக்கு நான் அறையை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கான காரணம் தெரிந்து இருக்கிறது’ என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டவள் வாயை திறந்து ஒன்றும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.


“சாப்பிட்டியா?”


“…”


“கீழே வா சாப்பிடலாம்”


“…”


பொழிலரசி அப்பொழுதும் அசைவே இல்லாமல் அமர்ந்திருக்கவும் சட்டென எழுந்தவன் தன்னுடைய சட்டையை முழங்கை வரை ஏற்றி விட்டுக் கொண்டே அவளை நெருங்க, ‘ இவன் என்ன இப்படி வருகிறான்? விட்டா என்னை அலேக்காகத் தூக்கிடுவான் போலயே’ என்று நினைத்தவள், அவன் அவளை நெருங்கும் முன் சட்டென எழுந்து நின்றாள்.


“உங்க அம்மா சாப்பிட்டு முடிக்கட்டும்.அதுக்குப் பிறகு நான் சாப்பிடுகிறேன்”


“எல்லாரும் ஒன்றாகச் சாப்பிடுவது தான் நம் வீட்டு வழக்கம்” என்றவன் உச்சரித்த ‘நம் வீட்டு வழக்கம்’ என்ற சொல் அளவுக்கு அதிகமான அழுத்தத்தையும் உள்ளடக்கி இருந்தது. ‘நீயும் பழகித் தான் ஆக வேண்டும் என்ற மறைமுகக் கட்டளையும் அதில் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.


‘நான் இந்த வீட்டை சேர்ந்தவள் தானா?’அவள் துயரமான ஒரு பார்வையோடு கணவனை எதிர்கொள்ள , அந்தப் பார்வையில் என்ன கண்டானோ மெல்ல அவளருகில் நெருங்கி அவள் தலையைத் தன்னுடைய தோளில் சாய்த்து இதமாகக் கோதி கொடுத்தபடியே பேச ஆரம்பித்தான்.


“என் மனைவிக்கு என் வீட்டில் இல்லாத உரிமையா?மற்றவர்களை விடு.முதலில் நீ இதை உன் வீடாக நினைத்து பழகு.நீ உறுதியாக இருந்தால் உன்னை யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.”


கணவன் சொல்வதிலும் உண்மை இருக்கிறதோ என்று அவள் சிந்திக்கத் தொடங்கினாள். அப்படி அவள் யோசித்த சில நிமிடங்களைத் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டவன் அவளைக் கைபிடித்துக் கீழே அழைத்துச் சென்றான்.


அவர்களுக்கு முன்னரே அங்கே டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்த பத்மாவதி அவர்கள் இருவரும் ஒன்றாக வருவதைப் பார்த்ததும் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாகச் சிவப்பு ஏறி அவரது கோபத்தைப் பறைசாற்றியது.


பொழிலரசி அவரது கோபத்தைக் கண்டு மேற்கொண்டு முன்னேறாமல் நடையை நிறுத்தி விட்டாள்.அவள் நின்றால் மட்டும் போதுமா? அவளுடைய கணவன் அவளைக் கண்களால் அதட்டி இறுக்கமாகக் கைகளைப் பற்றி ஒரு சேரில் அவளை அமர வைத்து விட்டு அவளுக்கு அருகில் இருந்த சேரில் அவன் அமர்ந்து கொண்டு உண்ணத் தயாரானான்.


பத்மாவதியின் கோபத்தைப் பார்த்து வள்ளி சாப்பாடு பரிமாறவா? வேண்டாமா? என்ற குழப்பத்துடன் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள்.ஆதித்யன் மெல்ல பார்வையை உயர்த்தி வள்ளியை ஒற்றைப் பார்வை பார்த்து வைக்க,.அவ்வளவு தான் கால்கள் பதற வேகமாக வந்து இருவருக்கும் பரிமாற ஆரம்பித்தாள்.


சற்று நேரம் அவர்களை முறைத்துக் கொண்டே உணவை உண்ட பத்மாவதி ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்.


அதை எல்லாம் ஆதித்யன் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை.பார்த்து பார்த்து மனைவிக்குப் பரிமாறிக் கொண்டு இருந்தான். ‘என்ன மனிதன் இவன்? பெற்ற தாய் உணவை உண்ணாமல் கோபமாக எழுந்து போய் விட்டார்.அவரை சமாதானம் செய்யாமல் இப்படி எனக்குப் பரிமாறிக் கொண்டு இருக்கிறானே!’குழப்பத்துடன் கணவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


அவளது பார்வையை உணர்ந்தவன் மெல்ல அவளைத் திரும்பி பார்த்து மென்குரலில் பேச ஆரம்பித்தான்.


“இது இப்படியே தொடர்வது நல்லது இல்லமா.அம்மாவின் கோபம் நியாயமானது தான்.அது குறைந்தவுடன் அவர்கள் நம்மைப் புரிந்து கொள்வார்கள்.நீ இதைப் பற்றி எல்லாம் யோசித்துக் கொண்டு இருக்காதே” என்று குழந்தைக்குச் சொல்வது போல அவளுக்குச் சொன்னான்.


கணவன் சொல்வதும் சரிதான் என்று அரசிக்கும் தோன்றத் தொடங்கியது.அரசிக்கு கணவன் சொல்வது,செய்வது எல்லாம் சரியாகவே இருப்பது போலத் தோன்றியது. ஏற்கனவே தன்னால் ஆதித்யனின் நிம்மதியான வாழ்வு பறிபோய் விட்டதோ என்ற குற்ற உணர்வு வேறு அவளை ஆட்டி வைத்தது.


சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் அறைக்குள் முடங்க முயன்றவளை தடுத்து நிறுத்தி அவனுடைய தாயாரின் அறைக்கு அழைத்துச் சென்றான்.அறைக்குள் நுழைய மறுத்த அவளின் மறுப்புகள் எப்பொழுதும் போல அவனிடம் எடுபடவில்லை..


அறைக்குள் நுழைந்த இருவரையும் கேள்வியாகப் பார்த்த தாயின் கண்களில் கோபத்தின் சாயல் இன்னும் மிச்சமிருப்பதை உணர்ந்தவன் தணிந்த குரலிலேயே பேச ஆரம்பித்தான்.


“அம்மா இன்னும் இரண்டு நாளில் என்னுடைய கல்யாண ரிசப்ஷனை வைத்துக் கொள்ளலாம்னு நினைக்கிறேன்”அறிவிப்பு போலச் சொன்னான்.


“இங்கே எல்லாம் என்னைக் கேட்டு என்னுடைய அனுமதியின் பேரில் நடக்கிறதா?” கேள்வி மகனிடம் கேட்டாலும் பார்வை என்னவோ அரசியின் புறம் தான் இருந்தது.


“அம்மா பெரியவங்க நீங்களே இப்படிப் பேசினா எப்படி?”கெஞ்சல் குரலில் கேட்டான் ஆதித்யன்.


“இங்கே என்ன அப்படி எல்லாம் முறைப்படி நடந்து விட்டது? இதோ யார் என்றே தெரியாதவள்…ஐஞ்சு காசுக்கு வக்கில்லாதவள், இவள் எல்லாம் என் முன்னே வந்து எனக்கு மருமகளாக நின்று கொண்டு இருக்கிறாள்…இது என்னுடைய அனுமதியின் பேரிலா நடந்தது?”


“அம்மா இதைப் பற்றி நாம் நிறைய விவாதித்து விட்டோம் என்று நினைக்கிறேன்.இந்த பேச்சை இத்தோடு விடுங்கள்.இப்பொழுது இவள் என்னுடைய மனைவி இவளை மரியாதை குறைவாக யார் பேசினாலும் அதை நான் அனுமதிக்க மாட்டேன்.”என்று சொன்னவன் கைகளை எடுத்து மனைவியின் தோளில் போட்டு தன்னோடு சேர்த்துக் கொண்டான்.


சில நொடி கண்களை இறுக மூடி இருந்த தாயாரின் தோற்றம் கண்டு உள்ளுக்குள் கலங்கினாலும் அவரைச் சமாதானப் படுத்த அவன் முனையவில்லை.


”அம்மா எல்லாருக்கும் நானே தகவல் சொல்லிக்கறேன்”


“உன் கூடப் பிறந்த அக்காவுக்கும், தம்பிக்கும் இன்னும் நீ இதைச் சொல்லலை.முதலில் அவர்களுக்காவது சொல்வாயா? இல்லை விட்டு விடுவாயா?.”


“அதெப்படி அம்மா சொல்லாமல் விடுவேன்.நிச்சயம் சொல்லிடறேன்.அவங்க இரண்டு பேரும் இன்னைக்கு நைட் அமெரிக்காவில் இருந்து திரும்பி வராங்க.வந்ததும் சொல்லிடறேன்”


“அந்த அளவிற்காவது பாசம் இருக்கிறதே!சந்தோசம்” என்று குத்தலாகப் பேச ஆதித்யன் அடிபட்ட பார்வை பார்த்தான்.மேற்கொண்டு என்ன சொல்லி இருப்பாரோ…மகனின் பார்வையில் மனம் தாங்காமல் பேச்சை அத்தோடு நிறுத்தி விட்டு இருவரையும் அங்கிருந்து கிளம்புமாறு சைகை செய்தார்.


லிப்டில் ஏறி மூன்றாவது மாடியில் அரசி தங்கி இருக்கும் அறைக்குள் அவளைக் கொண்டு வந்து விட்டவன் அப்படியே திரும்பி செல்லாமல் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து அவளையும் அமர சொன்னான்.
ஆதித்யன் பேசும் முன் அவனை முந்திக் கொண்டு அரசியே பேச்சை எடுத்தாள்.


“இந்த ரிஷப்ஷன் எல்லாம் இப்போ அவசியமா?”


“அவசியம் மட்டும் இல்லை.அத்தியாவசியமும் கூட…நம்முடைய கல்யாணம் அவசரமாக நடந்தது இல்லையா?நெருங்கிய சொந்தகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்துத் திருமணத்தை முடித்தாயிற்று.அவர்களைத் தவிர இன்னும் நிறையப் பேர் இருக்காங்களே.அவங்களுக்காக இதைச் செய்து தான் ஆகணும்”மறுப்பதற்கு வழி இன்றி முடித்து விட்டான்.


“எனக்குப் பயமா இருக்கு”


“எதுக்குப் பயம்? நாம இரண்டு பேரும் மேடைல நிற்க போறோம் மத்தவங்க பரிசை கொடுத்துவிட்டுப் போகப் போறாங்க…அதுவும் இல்லாம…” என்று சொன்னவன் சிறிது இடைவெளி விட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.


‘என்ன சொல்ல போகிறான்?’ என்று எதிர்பார்ப்போடு அவள் அவனைப் பார்க்க அவனோ பார்வையில் எந்த மாற்றத்தையும் காட்டாது மெல்ல அவளை நெருங்கி அமர்ந்தான்.


அவனது நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவது அவளுக்குப் புரிய உள்ளம் படபடத்தாலும், அவனை நிமிர்ந்து பார்க்க தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்ல அவனை நிமிர்ந்து நோக்கினாள்.


“நமக்குக் கல்யாணம் ஆகி ஒருவாரம் ஆகிடுச்சு.இன்னமும் நீ ஒரு அறையிலும்,நான் ஒரு அறையிலும் தான் தங்கிட்டு இருக்கோம். உனக்கும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும் அப்படின்னு தான் இந்த ஒரு வாரம் உன்னை எந்த விதமான தொந்தரவும் செய்யலை.”


“…”


“நாமும் நம்முடைய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் இல்லையா?”


இதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தவள், ‘ இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்கலாமா?’ என்ற எண்ணத்தோடு நிமிர்ந்து அவனைப் பார்க்க அவனோ விழிகளில் மறுப்பைப் பிரதிபலித்த வண்ணம் அவளின் அருகில் வந்து மென்மையாக அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்.


“சில காயங்களுக்குக் காலம் தான் மருந்து.அதைப்பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தால் அதில் இருந்து வெளியே வரவே முடியாது.”


“என் அப்பாவை மறக்க என்னால் முடியாது”


“உன் அப்பாவை மறக்க சொல்லி நான் சொல்லலியே! என்னை நினைக்கச் சொல்லி தான் சொன்னேன்.” கேலி போலச் சிரித்துக்கொண்டே சொன்னாலும் அவளின் முகத்தை ஆராய்ச்சியாக உற்றுப் பார்த்தவாறே இதைச் சொல்ல பொழிலரசி தான் கொஞ்சம் திடுக்கிட்டு போனாள்.


‘இவன் இப்படிப் பேசி வைத்தால் நான் எப்படிப் பதில் பேசுவதாம்’ உள்ளுக்குள் தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டாள்.


“இன்னும் கொஞ்ச நேரத்தில் சில பேர் வருவாங்க.ரிசப்ஷனுக்கு நீ உடுத்திக்கப் போற டிரஸ் அப்புறம் நகை எல்லாம் உனக்குப் பிடிச்ச மாதிரி செலக்ட் பண்ணிக்கோ.பணத்தைப் பற்றிக் கவலை வேண்டாம்.பார்லர்ல இருந்து கூட ஆட்களை வர சொல்லி இருக்கேன்.உனக்கு எந்த விதமான ஹேர்ஸ்டைல் மேக்கப் சூட் ஆகும்ன்னு பார்த்து அதை முடிவு பண்ணிக்கோ”


“எ…எனக்கு இதைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாதே…”விட்டால் அழுது விடுபவள் போல முகத்தை வைத்துக் கொண்டாள் அவள்.பொழிலரசிக்கு ஏற்கனவே அவளுடைய கணவன் வாழ்க்கையைத் தொடங்குவது குறித்து மறைமுகமாகச் சொன்னதில் இருந்தே உள்ளூர கொஞ்சம் உதறல் எடுத்து இருந்தது.


இப்பொழுது அவன் பாட்டிற்கு நகை,உடை,அலங்காரம் என்று ஏதேதோ பேசவும் அவள் கொஞ்சம் அரண்டு தான் போனாள்.அவளுக்கு அதைப் பற்றி எல்லாம் என்ன தெரியும்?அவளுக்கு உடை என்றால் பாவாடை,தாவணி,புடவை இது மட்டும் தான்.அதுவும் எளிமையான உடைகளைத் தான் அவள் தேர்ந்தெடுப்பாள்.


இந்த வீட்டிற்கும் எளிமைக்கும் தான் எந்த விதமான சம்பந்தமும் இல்லை போல இருக்கிறதே…ஏற்கனவே வீட்டு வேலையாட்களின் பார்வை அவ்வபோது இவள் மீது கேலியாகப் பைத்தியமே என்பது போலப் பதியும்.இப்பொழுது இது போன்ற நிகழ்விற்கு அவள் எளிமையாக எதையேனும் தேர்ந்தெடுக்கப் போய் மற்றவர்களின் நகைப்பிற்கு ஆளாகி விட வேண்டி இருக்குமே என்ற எண்ணம் தான் அவளை இன்னும் மிரட்டியது என்று கூடச் சொல்லலாம்.


அதை எல்லாம் விடத் தந்தையின் வேண்டுகோளுக்காகச் செய்து கொண்ட திருமணம் இது.அவரே இல்லாத பொழுது இந்த ஆடம்பர திருமண வரவேற்பை அவளது மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.ஆதித்யனின் பேச்சால் ஓரளவிற்கு அவள் மீண்டு இருந்தாலும் பெற்று வளர்த்த தந்தையை அவ்வளவு சீக்கிரம் அவளால் மறந்து விட முடியுமா என்ன?


இது அத்தனைக்கும் மேலாக அவள் மனதில் விடையறியா கேள்விகள் ஆயிரம் இருந்தன. ‘தந்தைக்கும்,ஆதித்யனுக்கும் எப்படிப் பழக்கம்?தந்தை கொலைகாரன் ஆனது எப்படி?எனக்குத்தான் ஆதித்யனை மணந்தாக வேண்டிய நிர்பந்தம்…அவருக்கு என்ன?அப்பா சொன்னதால் நான் அவரைத் திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டேன்.அவருக்கு என்னைத் திருமணம் செய்தே ஆக வேண்டிய நிர்பந்தம் என்ன இருக்கக்கூடும்?


இது அத்தனைக்கும் மேலாக அந்தக் கடிதம்…அது தான் அவளை வெகுவாக உறுத்தியது.அந்த கடிதத்தில் இருக்கும் கையெழுத்துச் சாதாரணமாகப் பார்த்தால் அவளுடைய தந்தையின் கையெழுத்துப் போலத்தான் இருக்கும்.ஆனா அது அவளுடைய கையெழுத்து இல்லை என்று அவளால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.அப்படி என்றால் தந்தையின் கையெழுத்தை போலவே போலியாக ஒரு கடிதத்தை எழுதியது யார்?இதை பற்றி ஏதேனும் இவனுக்குத் தெரிந்து இருக்கக் கூடுமா?’


இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில் தெரியாமல் குழப்பமான மனநிலையில் அவள் இருக்க,இந்த சூழ்நிலையில் தன்னால் ரிசப்ஷனில் தெளிவாக நடந்து கொள்ள முடியுமா என்ற சந்தேகமும் அவளுக்கு எழுந்தது.ஏனெனில் வேலையாட்கள் முதல் வீட்டில் உள்ள அத்தனை பேரும் தன்னைப் பைத்தியம் என்று சொல்லி சொல்லி அதுவே அவளது நினைவில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.


அவளே உறுதியாக நம்பவும் தொடங்கினாள்.பைத்தியக்காரியான நான் விழா நேரத்தில் எதையேனும் செய்து விட்டால்,அது மேலும் அசிங்கமல்லவா’என்றெல்லாம் அவள் தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டு இருக்க ஆதித்யனின் குரலில் சுய உணர்வை அடைந்தாள்.
“எதைப் பற்றியும் ,யாரைப் பற்றியும் நினைத்து நீ குழம்பிக் கொண்டு இருக்காதே.மறுபடியும் இதே விஷயத்தைப் பற்றிப் பேசி நாம் நேரத்தை வீணாக்க வேண்டாம்.அது மட்டும் இல்லாமல்…” என்று சொன்னவன் பேச்சை பாதியில் நிறுத்தி அவளது முகத்தை உற்றுப் பார்த்தவாறே ஆழ்ந்த குரலில் பேசினான்.


“எனக்கு டெஸ்ட் டுயுபில் குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் எல்லாம் இல்லை”என்று தெளிவாகச் சொன்னவன் அதிர்ந்து நின்ற அவளது முகத்தைக் கவனிக்காதவன் போல அறையை விட்டு வெளியேறினான்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here