Kadhale Nee Kaanala Tamil Novels 5

2
2162
Madhumathi Bharath Tamil Novels

விக்ரமாதித்யன் அறையை விட்டு சென்று வெகு நேரம் ஆகி விட்டது பொழிலரசி அந்த இடத்திலேயே சிலை போல அமர்ந்து விட்டாள். ஏற்கனவே குழப்பத்தில் இருக்கும் அவளை ஆதித்யனின் பேச்சு அப்படியே உறைய வைத்து விட்டது என்றால் அது மிகையில்லை.


‘இவன் என்ன இப்படி எல்லாம் பேசுகிறான்.இன்னும் இந்தத் திருமணத்தையே என்னால் முழுமனதாக ஏற்றுக் கொள்ள முடியாமல் நான் போராடிக் கொண்டு இருக்கிறேன்.அப்படி இருக்கையில் இவன் அடுத்தக் கட்டத்திற்குப் போய் விட்டானே’ என்று அவள் பாட்டிற்குத் தனக்குத்தானே பேசிக் கொண்டே இருக்க எங்கிருந்தோ வந்து தொபுக்கடீர் என்று அவள் முன்னே வந்து குதித்தது அவளது மனசாட்சி.


“தாலி கட்டின புருஷனை இப்படியா மரியாதை இல்லாமல் பேசுவது?”


“வேணும்னா புருஷர்ர்ர்ர்ன்னு கூப்பிடவா?ஆளைப் பாரு நானே டென்ஷன்ல இருக்கேன்.இப்போ உன்னை யாரு இங்கே கூப்பிட்டா…ஒழுங்கா ஓடிடு.இல்லை கடிச்சு துப்பிடுவேன்”அவளுக்கே உரிய துடுக்குத்தனம் அவளை அறியாமல் வெகுநாட்களுக்குப் பிறகு தலை தூக்கியது.


“அய்யயோ…உதவி செய்யலாமே அப்படின்னு வந்தேன்.அது ஒரு குத்தமா?”


“யாரு நீ உதவி செய்ய வந்த?… அப்புறம் எதுக்கு அட்வைஸ் பண்ற?”


“வெறுமனே உதவி செஞ்சா மட்டும் போதுமா?அப்படியே உனக்குக் கொஞ்சம் நல்ல பழக்க வழக்கம் சொல்லிக் கொடுக்கலாம்னு பார்த்தேன்”


“நீ ஒண்ணும் சொல்ல வேணாம்.எனக்கே எல்லாம் தெரியும்.எனக்கு என்ன பயம்? யார் மீது பயம்? அதெல்லாம் எதுவுமே இல்லை.நானே தனி ஆளாக நின்று எல்லாவற்றையும் சமாளிப்பேன்.நீ முதலில் கிளம்பு”என்று தன் மனசாட்சியை விரட்டியவளுக்கு நன்றாகவே தெரியும்.அந்த வார்த்தைகள் அனைத்தும் தன்னைத் தானே தேற்றிக் கொள்வதற்காகச் சொன்னவை என்று.


எந்த நேரத்தில் அப்படிச் சொன்னாளோ…இனி யாருடைய உதவியும் இல்லாமல் நான் சமாளிப்பேன் என்று.அடுத்த சில மணி நேரத்திற்குள்ளாகக் கணவனின் அறை வாசலில் போய் நின்றாள்.


அறை வாசலிலேயே வெகுநேரம் நின்று உள்ளே செல்லலாமா வேண்டாமா என்ற பட்டிமன்றமே நடத்திக் கொண்டு இருந்தாள் பொழிலரசி. அவ்வபோது அறையைக் கடந்து செல்லும் வேலையாட்கள் வேறு அவளைக் குறுகுறுப்பாகப் பார்த்து வைக்க அதற்கு மேலும் தாமதிக்காமல் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இரண்டு முறை கதவை மெலிதாகத் தட்டினாள்.


“யெஸ் கமின் “ கணவனின் கம்பீரமான குரலில் உள்ளிருந்து பதில் வந்தது.


மெதுவாகக் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.ஏற்கனவே அவள் இருந்த அறை தான் என்றாலும் இப்பொழுது நுழையும் போது கூட அந்த அறை அவள் மனதில் ஒரு பிரமாண்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது.


அங்கே அறையின் வலது ஓரமாகப் போடப்பட்டு இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டு இருந்தான் ஆதித்யன்.யார் வந்து இருப்பது என்று நிமிர்ந்து பார்த்தவன் இவளை நிச்சயம் எதிர்பார்த்து இருந்து இருக்கவில்லை என்று அவனது வியப்பான பார்வை சொல்லாமல் சொல்லியது.


நொடிகளில் வியப்பை பின்னுக்குத் தள்ளி விட்டு அவளைப் பார்த்து வசீகரமாய்ப் புன்னகை பூத்தான்.


“உள்ளே வா…நம்முடைய அறைக்குள் வருவதற்கு உனக்கு என்ன தயக்கம்?இங்கே கதவை தட்டாமல் வருவதற்கு உனக்கு முழு உரிமையும் இருக்கிறது.”


‘நம்முடைய அறையா?’ பேந்த பேந்த விழித்தாள் பொழிலரசி.


“என்னம்மா …என்ன தயக்கம்?கல்யாணம் ஆகி ஒரு வாரம் ஆகிடுச்சு.இன்னும் புருஷன் முகம் பார்த்து பேசத் தயங்கும் பெண் இந்தக் காலத்தில் நீ ஒருத்தியாகத் தான் இருக்க முடியும்”கொஞ்சம் கிண்டல் கலந்த தொனி அதில்.


‘இப்படியே கிண்டல் செய்தால் எப்படித்தான் வந்த விஷயத்தைச் சொல்லுவதாம்?தனக்குள் சலித்துக் கொண்டாள். இப்போ திரும்பியும் போக முடியாது.வந்த விஷயத்தைச் சொல்லித் தான் ஆகணும்’என்ற முடிவுடன் பேசத் தொடங்கினாள்.


“சில பேர் வந்து இருக்காங்க…”


“யார்?…ஓ நான் சொன்ன மாதிரி டிரஸ் டிசைனர்ஸா?”


‘ஆம் ‘ என்பதாய் மெல்லிய தலை அசைப்பு மட்டும் இவளிடம் இருந்து.


“நான் தான் ஏற்கனவே சொல்லி இருந்தேனே அவங்க வருவாங்கன்னு…போம்மா…போய் உனக்குப் பிடித்த மாதிரி செலக்ட் பண்ணிக்கோ…”குழந்தையிடம் கொஞ்சும் குரலில் அவன்.


“அவங்க கொடுத்த டிரஸ் எனக்குப் பிடிக்கலை.கட்டாயம் இதைத் தான் உடுத்திக்கணுமா?”தேவையில்லை என்று மறுத்துவிடு என்ற எதிர்பார்க்கும் குரலில் அவள்.


“ஏன்? உனக்குக் கலர் பிடிக்கலையா? இல்ல மாடல் பிடிக்கலையா?”


“வ…வந்து…அந்த டிரஸ் முழுசா இல்லை…பாதி தான் இருக்கு.எ..என..எனக்கு பிடிக்கலை”திக்கித்திணறி ஒருவாறாகச் சொல்லிவிட்டாள்.


“என்னது?”என்று அதிர்ந்த பாவனையில் கேட்டவன் ஒரு நிமிடம் யோசனையானான். ‘திருமண வரவேற்பிற்கு என்று தெளிவாகச் சொன்னேனே…ஒருவேளை மறதியில் மாடர்ன் டிரஸ் எதையும் கொண்டு வந்து விட்டார்களோ’என்ற யோசித்தவன் சட்டென அவள் கையில் இருந்த கேட்டலாக்கை (catalogue) வாங்கினான்.


அதில் இருந்த உடைகளை ஒவ்வொரு படங்களாகப் பார்வையிட்டுக்கொண்டே வந்தான்.குறை எதுவும் இருப்பது போல அவனுக்குத் தோன்றவில்லை.


“எல்லாமே நல்லாதானே இருக்கு”கேள்வியாய் அவள் முகம் பார்த்தான்.


“என்ன நல்லா இருக்கு?கண்றாவி… ஒண்ணு கூட முழுசா இல்லை.இப்படியே அரையும் குறையுமா போட்டுக்கிட்டு வந்து நான் எப்படி மேடையில் நிற்க”ஆத்திரமாகப் பேசத் தொடங்கியவள் உதடு பிதுங்க அழுகையில் முடித்தாள்.


அப்பொழுது தான் அதைக் கவனித்தவன் உடைகளை மேலும் உற்றுப் பார்த்தான். நார்த் இந்தியன் உடைகளைப் போல லெகெங்கா (lehenga) வகை உடைகள் அதில் இருந்தன.தரையைத் தொடும் பாவாடையும்,கொஞ்சம் ஏறிய மேல் சட்டையும் ,தாவணியும் தான்.ஆனால் அதை அந்தப் பெண்கள் அணிந்து இருந்த விதம் கவர்ச்சிகரமாக இருக்கவே பயந்து விட்டாள் போலும் என்று எண்ணிக் கொண்டவன் அவளைப் பார்த்து ஆதரவாகப் புன்னகைத்தான்.


“நீ பாவாடை தாவணி போட்டு இருக்கிறாய் இல்லையா?”


“ஓ..”அவள் தலை அளவுக்கு அதிகமாகவே ஆடியது.


“இதுவும் அது மாதிரி டிரஸ் தான்.அதை போடுவாய்…இதை போட மாட்டாயா?”


“அ…அது…இவங்க ஒரு மாதிரி…”அதற்கு மேலே எப்படிச் சொல்வது என்று புரியாமல் தயங்கினாள் பொழிலரசி.


அவளின் தயக்கத்திற்கான காரணத்தை ஊகித்தவன் தானே பேச ஆரம்பித்தான். “இதோ பாரும்மா…இதெல்லாம் சும்மா விளம்பரத்துக்காகச் செய்யுறது…இப்படி எல்லாம் பார்க்க கொஞ்சம் கவர்ச்சியாக இருந்தால் தானே அவர்களுக்கும் விற்பனை நடக்கும்.மேலும் டிசைன் நன்றாகத் தெரியவேண்டும் என்பதற்காக அவர்கள் இப்படி எல்லாம் போஸ் கொடுக்கிறார்கள்.அதற்காக உன்னையும் அப்படித்தான் நிற்க வைப்போம் என்று நினைத்துக் கொண்டாயா”


லேசாக அசடு வழிந்து விட்டு , ‘ஆம்’ என்பது போல் அசைத்தாள்.
அவளது அறியாமையை எண்ணி சிரிப்பு வந்த போதும் அதை அடக்கிக் கொண்டான்.அவள் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காக.


“என் மனைவியின் அழகை அப்படி ஊர் பார்க்க விட்டு விடுவேனா நான்?”கண்களில் குறுஞ்சிரிப்போடு அவன் கேட்க பேச்சிழந்து நின்றாள் பாவையவள்.


‘என்ன மாதிரியான உணர்விது…ஆண்டவா’அவளது தளிர் மனம் போராடியது.அவளுடைய கண்களை உற்று நோக்கியவன் என்ன நினைத்தானோ மெல்ல எழுந்து அவளை நோக்கி வர ஆரம்பித்தான்.
உள்ளம் படபடக்கத் தன்னை நெருங்கும் கணவனையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் பொழிலரசி.


“முதன்முறையா நீங்களே என்னைத் தேடி வந்து இருக்கீங்க…உங்களை வரவேற்க வேண்டாமா? வாங்க மேடம் வந்து இப்படி உட்காருங்க…”எழுந்து அவள் அருகில் வந்தவன் பவ்யமாகத் தலையைத் தாழ்த்தி இடைவரை குனிந்து வணங்கினான்.


அவனின் செய்கையில் முதலில் வியந்தாலும் உடனே முகத்தில் ஒரு குறுஞ்சிரிப்பு மின்னலிட்டு மறைய கணவனை வம்பிழுக்கத் தயாரானாள் பொழிலரசி.


“உங்களைத் தேடி இவ்வளவு தூரம் வந்து இருக்கிறேன்.குடிக்கக் காபித்தண்ணி எதுவும் கொடுக்க மாட்டீங்களா?”இயல்பாகக் கணவனிடம் பேச முயன்றாள் பொழிலரசி.


“ஆஹா…அந்த குறை வேறா?அது எதற்கு?” என்று சொன்னவன் இன்டர்காமில் அழைத்து எதையோ கொண்டு வர சொல்ல சில நிமிடங்களில் அறைக்கதவு தட்டப்பட்டது.எழுந்து கதவை திறக்கப் போன மனையாளை பார்வையாலேயே தடுத்து நிறுத்தினான்.


”யெஸ் …கமின்”சற்று முன்பு அவன் குரலில் இருந்த கிண்டல் தொனி மறைந்து கம்பீரம் வந்து விட்டு இருந்தது.


கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த வேலையாள் கையில் எதையோ ஏந்திக் கொண்டு நிற்க அதை அங்கிருந்த டேபிளில் வைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.


“உனக்குத்தான் எடுத்துக்கோ”


“என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தவளின் கண்கள் ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் விரிந்தது. ஒரு தட்டில் தர்பூசணிப் பழமும்,கூடவே இளநீரும் வைக்கப் பட்டு இருந்தது.கொண்டு வந்து இருந்த பழமும்,அதை வைத்து இருந்த விதமும் மனதில் உறுத்த தொடங்க கணவனைக் கேள்வியாக ஏறிட்டவள் தனது சந்தேகத்தை வாய் விட்டே கேட்டு விட்டாள்.


“எனக்கு இது பிடிக்கும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?”


“சும்மா ஒரு கெஸ் தான்”அசட்டையாகத் தோள்களைக் குலுக்கினான்.


“கொஞ்சம் நம்பற மாதிரி இருந்தாலும் இன்னும் ஒரு விஷயம் உதைக்குது.எனக்குப் பழத்தை ஜூஸ் போட்டு குடிக்க எப்பவுமே பிடிக்காது.அதே போல ஸ்ட்ரா பயன்படுத்தவும் மாட்டேன்…என்று சொன்னவள் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.


“இங்கே எனக்குப் பிடித்த தர்பூசணி பழம் வெட்டப்படாமல் இருக்கிறது.அதே போல இளநீர் ஸ்ட்ரா இல்லாம இருக்கு.இது இரண்டும் எதேச்சையா நடந்த மாதிரி இல்லையே…உங்களுக்கு என்னைப் பற்றி முன்னரே எதுவும் தெரியுமா?”அதை சொல்லி முடிக்கும் போது அவன் முகத்தில் ஒரு சில நொடிகள் தோன்றிய பதட்டத்தை மனதுக்குள் குறித்துக் கொண்டாள்.


“இதைக் கொண்டு வந்தது நான் இல்லை…வீட்டு வேலைக்காரன்.அவன் ஸ்ட்ரா கொண்டு வராமல் விட்டு விட்டான் போல…அதற்கு இப்படி ஒரு பேச்சா?”சமாளிக்க முயல்கிறானோ என்ற சந்தேகம் அவளுக்குத் தோன்றாமல் இல்லை.ஆனால் இதற்கு மேலும் எப்படிக் கேட்டு அவனிடம் இருந்து விஷயத்தை வாங்குவது என்று அவளுக்குப் புரியவில்லை.


“சரி இதில் இருக்கும் டிரஸ்ல இப்போ சாம்பிளுக்கு எதையாவது கொண்டு வர சொல்லி இருந்தேன்.அவங்க கொண்டு வந்து இருக்காங்களா?”


‘பேச்சை மாற்றுவதிலேயே குறியாக இருக்கிறானே’ என்று நினைத்தாலும், அவள் தலை தானாக ஆடி அவனுடைய கேள்விக்குப் பதிலை தந்தது.


“உனக்குத் தான் இந்த மாதிரி விஷயங்கள் ஒன்றும் தெரியவில்லை போல் இருக்கிறதே…அதனால் என்ன பரவாயில்லை…ரிசப்ஷனுக்கு வேண்டிய உடையை நானே உனக்குச் செலக்ட் பண்ணி கொடுத்திடறேன்.அதுக்கு முன்னாடி அவர்கள் கொண்டு வந்து இருக்கும் டிரெஸ்ஸை ஒருமுறை எனக்குப் போட்டு காமி”என்று கூறியவன் சட்டென எழுந்து அவளுடைய கைகளைப் பற்றியபடி அறையை விட்டு வெளியே வந்து லிப்டில் ஏறினான்.


“உ…உங்களுக்கு எதுக்குப் போட்டு காமிக்கணும்?அதுவும் இல்லாம இன்னும் நம்ம உடையையே தேர்ந்தெடுக்கல.அதுக்குள்ள இதுக்கு என்ன அவசியம்”மூடிய லிப்ட் கதவுகளைப் பார்த்தபடியே பேசினாள்.


“உனக்கு உதவுவதற்காகத் தான்.அது மட்டும் இல்லாமல் நீ சொல்லி அவர்கள் ஏதாவது தவறான அளவில் தைத்து விட்டாலும் கஷ்டம்.நமக்கு அதிக நாட்கள் வேறு இல்லை.
அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே அவர்களின் உடைகளை நான் ஒருமுறை பார்த்து விட்டு உனக்கு ஏற்றதாகச் சில உடைகளை இங்கே கொண்டு வர சொல்லி இருக்கிறேன்.அதில் உனக்கு எதைப் பிடிக்கிறதோ அதை நீ போட்டு எனக்குக் காண்பித்தால் அதில் உனக்கு வெகுவாக எது பொருந்துகிறது என்று சொல்லி விடுவேன்.உனக்கும் குழப்பம் மிச்சம்”
கூறிய காரணங்கள் சரியாக இருந்தாலும் பொழிலரசியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


‘இவன் முன்னே அந்த டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு எப்படி நிற்பதாம்?தாவணி மாதிரி தான் இந்த உடையும் என்று அவன் சமாதானம் கூறினாலும்,அந்த தாவணி அப்படியே கண்ணாடியை போல அல்லவா இருக்கிறது’ தயக்கம் கொண்டது அவள் மனது.ஆயினும் மறுத்து பேச காரணமோ வழியோ இல்லாததால் அப்படியே அவன் பின்னாலேயே சென்றாள் பொழிலரசி.


மூன்றாவது மாடியில் அவள் தங்கி இருக்கும் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டவன் ஏற்கனவே அங்கே நின்று கொண்டு இருந்த டிசைனர்களைப் பார்த்து வரவேற்பாகப் புன்னகைத்தான்.அவர்கள் கையோடு கொண்டு வந்து இருந்த உடைகளிலிருந்து மூன்றை மட்டும் தனியே எடுத்து வைத்தான்.


அந்த மூன்று உடைகளையும் அவள் மேல் வைத்துப் பார்த்து எந்த உடை அவளுக்கு நன்றாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.அப்படி அவன் ஒவ்வொரு உடையாக எடுத்து அவள் மேல் வைத்துப் பார்க்கும் பொழுதெல்லாம் பொழிலரசியைப் புதுவிதமான விசித்திர உணர்வு ஒன்று தாக்கியது.அவன் அருகில் நெருங்கிய போது உள்ளுக்குள் தோன்றிய படபடப்பு அவன் விலகிய பிறகே தீர்ந்தது.


கணவன் அருகில் வந்து அவளைத் தேவை இல்லாமல் தொடவில்லை தான் இருந்தாலும் ஏற்கனவே மணவாழ்க்கையைத் தொடங்குவது குறித்து அவன் பேசியதில் இருந்து அவனின் அருகாமை அவளுக்குள் சில மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்தது.
ஒருவழியாக அந்த மூன்று உடைகளில் இருந்து ஒரு உடையை அவளுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லி தேர்ந்தெடுத்தான்.அடர் பச்சையில் ஆங்காங்கே தங்க நிறத்தில் வேலைப்பாடு அமைந்து இருக்க,அழகான எம்ப்ராய்டரி டிசைனுடன் பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது.


அந்த உடையில் மேலும் சில மாற்றங்களைச் செய்யச் சொல்லி கையில் உடையை வாங்கிக் கொண்டு பொழிலரசியின் அருகில் வந்தான். “இதைப் போட்டுக் கொண்டு வா”அவள் கைகளில் திணித்து உடை மாற்றுவதற்கென்று இருக்கும் உள்ளறைக்குள் அவளைத் தள்ளினான்.


அவன் தள்ளி விட்டதால் அறைக்குள் சென்று விட்டாளே தவிர அந்த இடத்தை விட்டு இம்மியும் நகரவில்லை.அவள் முகத்தில் இருந்தே அவள் இந்த உடையை இப்பொழுது மாற்றிக் காண்பிக்க மாட்டாள் என்ற எண்ணம் ஆதித்யனுக்கு வந்தது.


‘இது என்ன வீண் பிடிவாதம்’ என்பது போல அவளை முறைத்தவன் சட்டென அந்தக் காரியத்தைச் செய்தான்.


வெளியே இருக்கும் டிசைனர்களின் பார்வையைக் கவராத வண்ணம் அவள் இருந்த அறைக்குள் நுழைந்தவன் அறையைத் தாளிட்டு விட்டு அவள் கைகளில் இருந்த ரிஷப்ஷன் உடைகளைக் கைப்பற்றி இருந்தான்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

2 COMMENTS

  1. i want to read kathalea kanala episodes. but google server wasn’t work . can you help me to read this novel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here