Kadhale Nee Kaanala Tamil Novels 6

0
2187
Madhumathi Bharath Tamil Novels

“எ… என்ன செய்றீங்க?”
“உனக்கு உதவி”அழுத்தமாகப் பதில் சொன்னான்.
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.நீங்க முதல்ல வெளியே போங்க…” மூடி இருந்த கதவுகளைப் பார்த்து பயந்த வண்ணம் பதில் சொன்னாள் பொழிலரசி.வெளியே இருக்கும் ஆட்களுக்கு இவன் இப்படி உள்ளே வந்து நிற்பது தெரிந்தால் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் ஒரு பக்கமும்,தனியே இவனுடன் இப்படி மாட்டிக் கொண்டோமோ என்ற பயம் ஒருபுறமுமாகச் சிக்கித் தவித்தாள்.
“ரொம்பத் தைரியம் தான் உனக்கு.இது என் வீடு.நீ என் மனைவி.நான் எதுக்கு வெளியே போகணும்?” நியாயம் கேட்டான் ஆதித்யன்.
“ப்ளீஸ்…வெளியே போங்க”வேறு வழியின்றிக் கெஞ்சத் தொடங்கினாள்.
“நான் வெளியே போய்ட்டா பிறகு யார் வந்து இந்த டிரெஸ்ஸ உனக்குப் போட்டு விடுவது?”
“என்னதுதுது…நீங்களா? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க?”குரலில் லேசாக அழுகை எட்டிப் பார்த்தது.
“நீ தான் இதைப் போட்டு காட்ட மாட்டேன்னு சொல்றியே…இன்னும் இரண்டு நாளில் ரிஷப்ஷன் இருக்கும் போது நீ இப்படி வீண் பிடிவாதம் பிடித்தால் நானும் என்ன தான் செய்யட்டும்? நீயே சொல்லு…”கேள்வியை அவள் புறமே திருப்பினான்.
சற்று நேரம் திருத்திருத்தவள் வேறு வழி இன்றித் தயக்கத்துடன் ஆதித்யனின் கையில் இருந்த உடையை வாங்கிக் கொண்டாள்.
“நீங்க போங்க…நான் போட்டுக்கிட்டு வரேன்.”தலையைக் கீழே குனிந்தபடி பதில் வந்தது.
“தட்ஸ் குட்”என்று அவள் கன்னத்தில் ஒரு தட்டு தட்டி விட்டு வெளியேறப் போனவனைத் தடுத்து நிறுத்தியது பொழிலரசியின் குரல்.
“ஒரு நிமிஷம்…வந்து… அங்கே இருக்கும் மற்ற ஆம்பிளைகளை எல்லாம் கொஞ்சம் வெளியே இருக்கச் சொல்றீங்களா?அவங்க முன்னாடி இப்படி வந்து நிற்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு”இப்பொழுதும் தலையை நிமிர்த்தாமல் தான் பேசினாள்.
அவளையே ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவனின் முகத்தில் கனிவு வந்தது. “கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் உனக்குக் கூச்சமாக இருக்கலாம்.ஆனா இதை எல்லாம் நீ பழகிக் கொள்ளத் தான் வேண்டும்.இங்கே வந்து இருக்கும் ஒரு சிலரை வெளியே அனுப்பி வைத்து விடலாம்.ஆனால் ரிஷப்ஷனுக்கு ஆயிரக்கணக்கில் வருவார்களே அவர்களை என்ன செய்வது?”
‘இதை எப்படி யோசிக்காமல் போனேன்’ தனக்குத் தானே மானசீகமாகக் கொட்டு வைத்துக் கொண்டாள்.
“உன் நிலைமை புரியுது.ஆனா இனி இப்படி ஒதுங்கியே இருக்க முடியாது.ஏன்னா நீ இப்போ தொழிலதிபர் விக்ரமாதித்யனோட மனைவி.நீ நிறைய வெளி இடங்களுக்குப் போக வேண்டி இருக்கும்.நாலு பேரை பார்க்க வேண்டி இருக்கும்.இடத்திற்கேற்ற மாதிரி சில உடைகளை நீ அணிந்து தான் ஆக வேண்டும்.உனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கூட…
அதே நேரம் அதில் உனக்கு ஏதாவது கஷ்டம் இருந்தா அதை நீ என்னிடம் சொல்லலாம்.அதை சரி செய்வது ஒரு கணவனா என்னோட பொறுப்பு.மற்றபடி…நீ ஒரேடியாக விலகிப் போய்த் தனியே இருப்பதை நான் ஒருக்காலும் அனுமதிக்கவே மாட்டேன்.புரிந்ததா?”அழுத்தமாகவே கூறினாலும் குரலில் இருந்த கனிவு கொஞ்சமும் மாறவில்லை.
புரிந்தும்,புரியாமலும் தலை ஆட்டினாலும் பொழிலரசிக்கு உள்ளூர கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது. ‘பேசி பேசியே இவருடைய எண்ணப்படி என்னை ஆட்டுவிக்க எண்ணமிடுகிறாரோ’ என்று நினைத்தாலும் இப்பொழுது அந்த எண்ணத்தை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு அவன் அறையை விட்டு வெளியேறுவதற்காகக் காத்திருந்தாள்.
“அவர்களை வெளியே காத்திருக்கச் சொல்கிறேன்.அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் சீக்கிரம் வெளியே வந்து விடு” என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினான். அப்படி அவன் வெளியேறிய மறுகணம் கதவை அவசரமாகப் பூட்டி விட்டு, கதவில் சாய்ந்து தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகே உடையை மாற்றத் தொடங்கினாள்.
கணவனிடம் இருந்து இப்படிப்பட்ட செய்கையை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது தான் நிஜம்.எப்பொழுதும் அவளிடம் பேசும் போது அவனுடைய பேச்சில் கூட ஒரு கனிவு மட்டுமே இருக்கும்.இன்றைய அவனின் அதிரடி கண்டு அவள் கொஞ்சம் ஆடித் தான் போனாள்.
தாவணி போலத் தான் இந்த உடையும் என்று ஏற்கனவே கணவன் சொல்லி இருந்ததால்,கட்டி இருந்த புடவையைக் கலைந்து விட்டு அந்த உடையை அணிந்து கொண்டாள்.உடையை அணிந்து முடிந்த பிறகும் கூட அப்படியே வெளியே வர அவளால் முடியவில்லை. அதற்குக் காரணம் அந்தத் தாவணி கண்ணாடி போல இருந்தது தான்.அவளின் கூச்சம் அந்தக் கோலத்தில் வெளியே வர விடாமல் அவளைத் தடுத்தது.
எப்படியும் வெளியே நின்ற ஆண்கள் எல்லாரும் இந்நேரம் அங்கிருந்து கிளம்பி இருப்பார்களே என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு நகர முற்பட்டவளின் மனம் அப்பொழுதும் லேசாக முரண்டவே, சுற்றிலும் பார்வையைச் செலுத்தியவள் அங்கே இருந்த ஒரு டவலை எடுத்து மேலே போர்த்திக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
அதிகமான நுண்ணிய வேலைப்பாடுகளின் காரணமாகவோ என்னவோ அவள் அணிந்து இருந்த பாவாடை அளவுக்கு அதிகமான கனத்தோடு இருக்கவே அதைக் கொஞ்சம் தூக்கி கொண்டே நடந்தாள்.பொழிலரசி ஆரோக்கியமான பெண் தான் என்றாலும் சில நாட்களாகச் சரியாக உண்ணாததால் இதைத் தூக்கி கொண்டு நடப்பது அவளுக்குக் கஷ்டமாகவே இருந்தது.
ஒரு வழியாக அறையை விட்டு வெளியேறி ஹாலுக்கு வந்தவள் கண்கள் வெளியே தெறித்து விழுந்து விடுவது போல முழிக்க ஆரம்பித்தாள்.
ஹாலின் நடுவே இருந்த சோபாவில் உலகில் உள்ள அத்தனை விஷமத்தையும் கண்களில் தேக்கியவாறு கண்களில் குறுஞ்சிரிப்போடு கால் மேல் கால் போட்டுத் தோரணையாக அமர்ந்து இருந்தான் ஆதித்யன்.அவன் மட்டுமாக!…
‘மற்றவர்கள் எங்கே போனார்கள்?’ பதட்டத்தோடு பார்வையைச் சுற்றி ஓட விட்டாள் பொழிலரசி.
“நீ தானே அவர்களை வெளியே அனுப்பி வைக்கச் சொன்னாய்?”அவளின் பார்வையை உணர்ந்து கேட்காமலே அவளுக்குப் பதில் அளித்தான்.
“நா…நான் கூட வந்து இருந்த ஆண்களைத் தான் வெளியேற சொன்னேன்.”பயத்தில் அவளுக்கு உதடு உலர்ந்தது.
“ஆண் என்ன ? பெண் என்ன? நான் உன்னிடம் ஏற்கனவே சொன்னது உன் நினைவில் இல்லையா?” பார்வையை இவளிடமிருந்து துளியும் நகர்த்தாமல் பேசினான்.
“என் மனைவியின் அழகை ஊரார் பார்ப்பதை நான் விரும்பவில்லை.அதனால் அவர்களை வெளியே அனுப்பி விட்டேன்.சரி சரி…சும்மா பேசிக் கொண்டு இருக்காதே…கிட்டே வா. அளவு எடுக்கணும்”கண்களில் குறுஞ்சிரிப்போடு கேலியாகச் சொன்னான்.
அரசியோ கண்களில் மிரட்சியுடன் இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.
“நீ என்ன முன்னே வர சொன்னா பின்னாடி போற?..சரி இரு நானே வரேன்”என்றவன் கைகளில் டேப்போடு அவளை நோக்கி வரத் தொடங்கினான்.
அவளின் கைகள் தன்னையும் அறியாமல் தன்னைச் சுற்றி போர்த்தி இருந்த டவலை இறுக பற்றிக் கொண்டது.
பொழிலரசியின் கண்களில் படர்ந்த மிரட்சியை ரசித்தவாறே ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான் ஆதித்யன்.
ஆதித்யனுக்கும் அரசிக்கும் இடையில் இருந்த தூரம் வெகுவாகக் குறையப் பெண்ணவளை பதட்டம் தொற்றிக் கொண்டது.
‘இதற்கு மேல் தாங்காது’ ஓடி விடலாம் என்ற எண்ணத்தை அவள் செயல்படுத்த முனையும் முன் அவளது அழகான ரிஷப்ஷன் உடை அவளது எண்ணத்தைத் தவிடு பொடி ஆக்கியது.
தரையைத் தொட்ட அந்த லெஹெங்க்ஹா அவளையும் அறியாமல் அருகில் இருந்த சோபாவின் அடியில் மாட்டிக் கொள்ள அடுத்த அடி எடுத்து வைக்க முயன்றவள் திகைத்து விழித்தாள்.
அடுத்த அடி அவள் எடுத்து வைத்தாள் என்றால் ஒன்று உடை கிழியும் அல்லது அவிழ்ந்து விடும்.குனிந்து அதை எடுக்கலாம் என்றால் மேலே உள்ள டவலை போர்த்திக் கொண்டு அவன் முன்னே குனியவும் அவளால் முடியாது. ‘இப்போது என்ன செய்வது’ என்ற பயத்தோடு தன்னை நெருங்கி வரும் கணவனின் முகத்தையே பார்க்க ஆரம்பித்தாள்.
ஆதித்யன் அவனது ஊடுருவும் பார்வையை மாற்றவும் இல்லை.அவளை நோக்கி முன்னேறுவதையும் நிறுத்தவில்லை.
கணவன் தன்னை நெருங்க நெருங்க மேற்கொண்டு எதையும் செய்ய வழியின்றிப் போனதால் அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்கும் துணிவு இன்றித் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
கணவனின் அருகாமையில் அவளுக்குப் படபடப்பாக இருந்தது. கணவன் தனக்கு மிக அருகில் நெருங்கி வந்து விட்டான் என்று தெரிந்தாலும் நிமிர்ந்து அவனைப் பார்க்கும் எண்ணம் அவளுக்கு இல்லை.
நிமிடங்கள் கடந்த பிறகும் கூடக் கணவனிடம் இருந்து எந்த விதமான சத்தமும் இல்லாதததால் நிமிர்ந்து அவனைப் பார்க்க , அவனோ இரண்டு கைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு கண்களில் குறுஞ்சிரிப்போடு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
‘என்னவாம்?இப்போ எதுக்கு இப்படிச் சிரிக்கிறார்?’ லேசாகக் கோபம் முளை விட நிமிர்ந்து கணவனைப் பார்த்து முறைக்கத் தொடங்கினாள்.
சும்மாவே அவளைச் சீண்டுபவன் அவள் முறைத்துப் பார்த்தால் சும்மா இருப்பானா…மீண்டும் அவளை நெருங்க ஆரம்பிக்கப் படக்கெனத் தலையை மீண்டும் குனிந்து கொண்டாள் பொழிலரசி.
“பொழில்”அவன் குரலில் இருந்தது என்ன? இனம் கண்டறிய முடியவில்லை அவளால்.
“நிமிர்ந்து என்னைப் பார்”
‘முடியவில்லையே’மனதுக்குள் அரற்றினாள் பெண்ணவள்.
“நீ நிமிர்ந்து பார்க்கலைனா நான் கிட்ட வர வேண்டி இருக்கும் பொழில்”அந்த குரலில் இருந்த அழுத்தம் அவன் அதை நிச்சயம் செய்வான் என்று தோன்ற மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள் பொழிலரசி.
கண்கள் கலங்க பயத்தோடு தன்னை நிமிர்ந்து பார்த்த மனையாளை பார்த்ததும் சில நிமிடங்கள் ஆடாமல் அசையாமல் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான் ஆதித்யன். சில கணங்கள் கண்களை இறுக மூடி தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன் வருவித்துக் கொண்ட இயல்புடன் பேசத் தொடங்கினான்.
“பொழில் நான் உன்னுடைய கணவன்.அதை முதலில் உன்னுடைய மனதில் பதிய வைத்துக் கொள்.யாரோ ஒரு புது மனிதனை போல என்னிடம் நடந்து கொள்ளாதே. அது…அது எனக்குக் கஷ்டமா இருக்கு.கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி என்னை இங்கே பார்த்தப்போ உன் கண்ணில் ஒரு மிரட்சி,பரிதவிப்பு எல்லாம் இருந்தது.
அதெல்லாம் எனக்குப் பிடிச்சும் இருந்தது.அதை நான் ரசிக்கவே செய்தேன்.ஆனா இப்போ உன் கண்ணில் இருக்கிற இந்தப் பயம்…நான் ஒண்ணும் பொறுக்கி இல்லை பொழில்.உன்னுடைய கணவன்.அதை மறந்து விடாதே…
ஒரு பெண்ணுக்கு தன்னுடைய கணவன் நெருங்கி வரும் பொழுது வெட்கம் வரலாம்.ஆனா பயம் எதுக்கு வருது? ஒ…ஒருவேளை நீ வேற யாரையாவது விரும்பினாயா?இது கொஞ்சம் தாமதமான கேள்வி தான்.இருந்தாலும்…”தன் போக்கில் பேசிக் கொண்டே போனவனை இடையிட்டு நிறுத்தியது பொழிலரசியின் வேதனைக் குரல்.
“உங்களைக் காயப்படுத்திப் பார்க்கிறதுக்காக நான் எதுவும் செய்யலை.நீங்க சொல்ற மாதிரி எல்லாம் எனக்கு எந்தக் காதலும் இல்லை.எனக்கு நினைவு இருக்கிறது எல்லாம் கடைசியா என்னோட பாட்டி இறந்தது மட்டும் தான்.அதற்கு அப்புறம் இடைப்பட்ட இந்த மூணு வருஷத்தில் என்ன நடந்ததுன்னு எனக்கு நியாபகம் இல்லை.”சுவற்றை வெறித்துக் கொண்டே துயரமான குரலில் பதில் சொன்னாள்.
“காலியான மனம் தானே பொழில்…அதில் என்னை ஏற்பதில் என்ன தயக்கம் உனக்கு?” முன்பு இருந்த பதட்டம் காணாமல் போய் இலகுவான குரலிலேயே கேட்டான் ஆதித்யன்.
“ம்ச்…எனக்குத் தெரியலை.என்னை சுற்றி நடக்கிற எதுவும் எனக்குப் புரியலை.எனக்குள்ள ஆயிரம் குழப்பம் இருக்கு.அது எல்லாம் தீராமல் என்னால இயல்பா இருக்க முடியலை” மறைக்காமல் மனதை சொன்னாள் பொழிலரசி.
“ஊப்…இவ்வளவு தானே…நான் கூட என்னைப் பிடிக்கவில்லையோ அப்படின்னு நினைச்சேன்”
“அதுவும் தான் பிரச்சினைன்னு சொன்னா என்ன செய்றதா உத்தேசம்?”நிமிர்வாகவே பேசினாள்.
“அதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு”என்றவன் அவளது கண்களைக் கூர்ந்து பார்த்த படி பேசினான்.
‘என்ன?’ பார்வையாலேயே அவளும் கேட்க…
“என்னைக் காதலித்து விடேன்” சிரித்துக் கொண்டே சொன்னாலும் அவனின் பார்வை அவளை ஊடுருவியது.
“என்னால முடியலை”
“எது பொழில்? என்னைக் காதலிப்பதா?”
“…”
சட்டென்று மறுத்துப் பேசாவிட்டாலும் கூடப் பொழிலரசியின் மௌனம் அவளது மனதை உரைக்கச் சற்று நேரம் தன்னைச் சமாளித்துக் கொண்டவன் இயல்பான குரலில் பேச ஆரம்பித்தான்.
“எனக்குக் கூட இந்த அவசர கல்யாணத்தில் துளியும் விருப்பம் இல்லை பொழில்” என்று கூறி அவளை அதிர வைத்தவன் தொடர்ந்து பேசலானான். “ஆனா அதுக்காக அப்படியே இருந்து விட முடியுமா?எனக்கு நீ, உனக்கு நான் அப்படின்னு ஊரறிய ஏற்றுக் கல்யாணம் செய்து கொண்ட பின் இப்படி இருக்கக்கூடாது. நாம் செய்து கொண்ட திருமணத்தில் வெற்றி பெறுவதற்காகக் கொஞ்சம் இறங்கி வந்து தான் ஆக வேண்டும்.”
“ஊருக்காக வாழலாம்ன்னு சொல்றீங்களா?”
“இல்லை நமக்காக நாம் வாழலாம்ன்னு சொல்றேன்”
“நமக்காக வாழணும்னா முதலில் என் மனதில் உள்ள குழப்பங்களுக்குத் தீர்வு வேண்டும் இல்லையா?”அவன் வார்த்தையாலேயே அவனை மடக்க நினைத்தாள்.
“நிச்சயமாக…சொல்லு தீர்த்து வச்சிடலாம்” இலகுவாகவே அவனும் பேசினான்.
“நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னே சொன்ன மாதிரி உங்களுக்கும் இந்தக் கல்யாணத்தில் பிடித்தம் இல்லை…அப்புறம் எதற்காக இந்தத் திருமணம்? ஏன் நடந்தது?”மனதில் இத்தனை நாட்களாக அரித்துக் கொண்டு இருந்த கேள்வியைக் கேட்டு விட்டாள்.
“நான் வாக்குக் கொடுத்தேன் பொழில்”அவன் பார்வை எங்கோ தொலைவில் வெறித்துக் கொண்டு இருந்தது.
“யாருக்கு? என்னோட அப்பாவிற்கா? அவரை உங்களுக்கு எப்படித் தெரியும்?அவருக்கும் உங்களுக்கும் எப்படிப் பழக்கம்…”
“ஹே… போதும் நிறுத்து…என்ன இப்படி வரிசையா கேட்டுக்கிட்டே போற?நான் எங்கேயும் போய்விட மாட்டேன்.உன்னோட கேள்விக்கு எல்லாம் பொறுமையா ஒருநாள் பதில் சொல்றேன்.இப்போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு.என்னோட அக்காவும்.தம்பியும் வெளிநாட்டில் இருந்து திரும்பி வராங்க.அவங்களைக் கூட்டிட்டு வரணும்.ஸோ… நான் கிளம்பறேன்.அதுக்குள்ள நீ மற்ற வேலை எல்லாம் முடிச்சு வைச்சிடு.உன்னோட டிரஸ் அளவு விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்.”என்று சொன்னவன் அவளின் பதிலை எதிர்பாராமல் அவசரமாக அங்கிருந்து வெளியேறி விட்டான்.
‘இவ்வளவு நேரம் குழந்தைக்குச் சொல்வது போல ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாகச் சொல்லியவருக்கு அதற்குள் என்ன அவசரம் வந்தது? இவர் எதையாவது என்னிடம் இருந்து மறைக்கிறாரா?’ என்ற குழப்பத்துடன், விரைந்து செல்லும் கணவனின் முதுகையே வெறித்துக் கொண்டு இருந்தாள் பொழிலரசி.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here