Kadhale Nee Kaanala Tamil Novels 7

0
2037
Madhumathi Bharath Tamil Novels

கணவன் என்ன தான் இதமாக நடந்து கொண்டாலும் கணவன் எதையோ தன்னிடம் இருந்து மறைப்பதாகத் தனக்கு மீண்டும் மீண்டும் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை பொழிலரசியால்.அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கவும் மனமின்றி மதிய வெயிலில் மூன்று மணி அளவில் தோட்டத்தில் உலாவ சென்றாள்.கிராமத்தில் காடு,மேடு எல்லாம் அலைந்து திரிந்து பழக்கம் இருந்ததால் இந்தக் கொளுத்தும் வெயில் அவளைச் சற்றும் பாதிக்கவில்லை என்பது தான் நிஜம்.


அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடப்பதற்குப் பதில் இப்படிக் கொஞ்சம் செடி கொடிகளை ரசித்தவாறு வேடிக்கை பார்க்கலாம் என்று எண்ணி கீழே வந்தவள் தோட்டத்தில் காலாற நடக்க ஆரம்பித்தாள்.


சற்றுத் தொலைவில் வீட்டின் கிச்சன் ஜன்னலோரப் பகுதியில் இருந்து வீட்டு வேலையாட்கள் பேசுவதை முதலில் கண்டு கொள்ளாமல் நடந்தவள் தன்னுடைய பெயர் அதில் அடிபடவும் நின்று கவனிக்கலானாள்.


“பைத்தியம்ன்னு மத்தவங்க சொல்றது சரியாத்தான் இருக்கு.யாராவது இப்படி மதியம் மூணு மணி வெயில்ல தோட்டத்தில் நடப்பாங்களா? எங்கே இருந்து தான் நம்ம அய்யா இதைக் கூட்டிக்கொண்டு வந்தாரோ? எங்கேயோ ஒரு குடிசையில் வாழ்ந்த பனாதை இவளுக்கு வந்த யோகத்தைப் பார்த்தாயா?…” பேச்சு இப்படியே நீண்டு கொண்டே போனது.


“பனாதையா? யார் அவளா? கொதித்துக் கொண்டு வந்தது அவளுக்கு.பேசுவது வீட்டு வேலைக்காரி வள்ளி என்று தெரிந்தாலும் அவளைத் தடுத்த நிறுத்த அவளுக்குத் தோன்றவில்லை.


ஆரம்பத்தில் அவர்களின் பேச்சை கேட்க கேட்க கோபம் தலைக்கேற கொதித்துக் கொண்டு இருந்தவள் அவர்கள் சொல்வதும் பொய்யில்லையே என்ற எண்ணம் தோன்ற சுய கழிவிரக்கத்தில் சோர்ந்து போனாள்.இவர்களை என்ன செய்து விட முடியும்?
எனக்கும் தான் மூன்று வருடங்களாக நடந்தது எதுவும் நினைவில் இல்லையே?ஒருவேளை இவர்கள் சொல்லுவது போலச் சட்டையைக் கிழித்துக் கொண்டு இருந்தேனோ என்னவோ?என்று தனக்குள்ளேயே வருந்திக் கொண்டவள் மீண்டும் தன்னுடைய அறையில் போய் முடங்கிக் கொண்டாள்.


மாலை ஐந்து மணி அளவில் அவளுடைய அறையில் இருந்த இன்டர்காம் ஒலிக்க எடுத்து பேசினாள்.


“ஹலோ”

“ஒரு பத்து நிமிஷத்தில் கிளம்பி ரெடியாகி கீழே ஹாலுக்கு வா”கணவனின் குரல் எப்பொழுதும் போல இதமாகவே ஒலித்தது.


“எங்கேயாவது வெளியில் போகனுமா?”


“அக்காவும்,தம்பியும் வந்தாச்சு.அவங்களை உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கணும் இல்லையா?”


“ஓ…வேற யாரெல்லாம் இருக்காங்க”


“வேற யார் இருந்தா என்னம்மா…நான் தான் பக்கத்திலேயே இருக்கப் போகிறேனே…சீக்கிரம் கிளம்பி வா”என்று கனிவாகசொல்லி விட்டுப் போனை வைத்து விட்டான்.


‘கீழே என்ன நடக்கப் போகுதோ?அவங்க எப்படிப் பேசுவாங்களோ?மனமே இல்லாமல் தயாராகிக் கீழே சென்றாள் பொழிலரசி.
ஹாலில் நீண்ட சோபாவில் ஒருபுறம் பத்மாவதி அமர்ந்து இருக்க மறுபுறம் இளைஞன் ஒருவன் ஆதித்யனை போலவே ஜாடையில் இருந்ததால் அவன் தான் தம்பி என்பது சொல்லாமலே புரிந்து போயிற்று. தாயாரோடு ஒட்டி உறவாடிக் கொண்டு இருந்தான்.

அவர்கள் இருவருக்கும் கொஞ்சம் இடைவெளி விட்டு கணவன் அமர்ந்து இருக்க எதிரில் ஒரு பெண் , ஆதித்யனை விட வயதில் கொஞ்சம் மூத்தவள் போலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்தாள்.


‘இவர்களுக்கு என்ன ஆயிற்று? ஏன் சக்கர நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார்கள்?பிறவியில் இருந்தே இப்படித்தானா? அல்லது இடையில் ஏதேனும் உடல்நலக் கோளாறா?’என்று தன் போக்கில் சிந்தித்துக் கொண்டு இருந்தவள் மெல்ல அவர்களின் அருகில் போய் நின்றாள்.


தங்களுக்குள் இயல்பாகப் பேசிக் கொண்டு இருந்தவர்களைத் தொந்தரவு செய்ய மனமின்றிப் பொழிலரசி ஒதுங்கியே நிற்க சில நிமிடங்கள் கழித்தே அவளைக் கவனித்தான் ஆதித்யன்.


“நீ எப்போ வந்தாய்?எதற்காக ஒதுங்கி இருக்கிறாய்?இப்படி வந்து உட்கார வேண்டியது தானே?”


“அந்தத் தகுதி அவளுக்கு இல்லை என்பது அவளுக்குத் தெரிந்து விட்டதோ என்னவோ”குத்தலாகப் பேசத் தொடங்கினார் பத்மாவதி.
“அம்மா”கண்டிப்புடன் பேசத் தொடங்கிய ஆதித்யனின் குரல் அடங்கியது தமக்கையின் குரலால்.


“அம்மாவை எதுக்குச் சத்தம் போடுற ஆதி…அவங்க சொல்றதில் என்ன தப்பு இருக்கு”


“அக்கா நீயுமா? ப்ளீஸ் இப்போ இந்தப் பேச்சு வேண்டாம்”என்று அழுத்தமாகப் பேசி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவன் கண்களால் மனைவியை அதட்டி அருகே அமர சொன்னான்.
கணவனின் அக்காவும் , தம்பியும் சேர்த்துத் தன்னை ஆராயும் பார்வையுடன் நோக்கவும் சற்று தர்ம சங்கடமாக நெளிந்தவள்,தயங்கி தயங்கி கணவனின் அருகில் அமர்ந்து கொண்டாள். மற்ற யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அப்படியே தலை குனிந்த வண்ணம் இருந்தாள்.


“பொழில் இவங்க என்னுடைய அக்கா திலகவதி,இங்கே மதுரையில் தான் இவங்களைக் கல்யாணம் செய்து கொடுத்து இருக்கோம்.இரண்டு குழந்தைங்க…இவன் என்னுடைய தம்பி விஜயேந்திரன்….” என்று பேசிக் கொண்டே மேலும் தொடர முயன்றவனை இடை மறித்தது ஆதித்யனின் அக்காவின் குரல்.


“அது மட்டுமா…என் கல்யாணத்துக்கு நீங்க ஐநூறு பவுன் நகை போட்டீங்க,அது இல்லாம வைர நகை,வீடு, வாசல் தோட்டம்,பண்ணை,பேக்டரி…இன்னும்”


“அக்கா இதை எல்லாம் இப்போ யார் கேட்டா…”


“ஏன் கேட்டா தான் சொல்லணுமா?… நானா சொன்னா என்ன ஆகிடும்? உன் பொண்டாட்டியின் பூப்போல இருக்கிற மனசு வாடி வதங்கிப் போயிடுமோ”


“அக்கா எதுக்கு இப்போ அவளை இழுக்கிற…என்னைப் பத்தி மட்டும் பேசு”


“ஏன் அவளை ஒரு வார்த்தை சொன்னா உனக்குப் பொறுக்கலையா? இல்லை எனக்கு உரிமை இல்லையா?”


“அக்கா வேணாம்…உனக்கு இப்போ தான் ஆபரேஷன் முடிஞ்சு இருக்கு.தேவை இல்லாம டென்ஷன் ஆகாதே…”


“ரொம்பத் தான் அக்கறை உனக்கு…அப்படி உண்மையாகவே உனக்கு அக்கறை இருந்து இருந்தால் , நான் இல்லாத பொழுது உன்னுடைய கல்யாணத்தைச் செய்து இருப்பாயா?”கண்கள் கலங்க கேட்ட அக்காவை கண்டதும் ஒரு நொடி தயங்கியவன் பின் பேசலானான்.


“நான் என்ன செய்யட்டும் அக்கா…அந்த நேரத்தில் நீ இங்கே இல்லையே…உன்னுடைய ஆபரேஷனுக்காக வெளிநாட்டில் தானே இருந்தாய்?”


“நான் வரும்வரை பொறுத்திருக்க முடியாதா உன்னால்…அப்படி என்ன அவசரம்”மனத்தாங்கலுடன் வெளிவந்தது திலகவதியின் குரல்.


“அக்கா ப்ளீஸ் தயவு செஞ்சு இப்படி எல்லாம் பேசாதே…அப்படி காத்துக்கொண்டு இருக்க அவகாசம் இல்லை அக்கா.”


“அந்த அளவிற்கு இவள் உன்னை மயக்கி விட்டாளா?”


“அக்கா”கோபமாக இரைந்தவன் அரசியின் கைகளைப் பற்றிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.


என்னதான் கணவன் தனக்காகத் தான் பேசினான் என்பது புரிந்தாலும் அவர்கள் கேட்பதில் ஒன்றும் தவறில்லையே என்று அவளுக்குத் தோன்றியது.சொந்த தம்பியின் திருமணம் அதை நேரில் பார்க்க முடியவில்லையே என்ற ஆத்திரத்தில் அவர்கள் பேசுவதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.மனதில் தோன்றிய எண்ணத்தைக் கணவனிடம் மறைக்காமல் சொல்லவும் செய்தாள்.


அவள் பேசப் பேச கணவனின் கண்களில் தோன்றிய புதுவித பளபளப்பிற்க்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையோடேயே பேசி முடித்தாள்.பேசி முடித்ததும் கணவனின் முகத்தையே ஆராய்ச்சியோடு பார்க்க அந்த நொடி ஆதித்யனும் அவளைப் பார்த்து விட லேசாக அவளைப் பார்த்து கண்ணடித்து விட்டு ‘என்ன’ என்று லேசாக ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.


அவனின் செய்கையில் விதிர்த்துப் போனவள் அவசரமாகப் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.மெல்ல அவளது கைகளை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டவன் நெகிழ்ச்சியாகப் பேசத் தொடங்கினான்.


“தேங்க்ஸ்” என்றவன் அவள் புரியாமல் முழிக்கவும் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தான். “பிரச்சினையை உன்னோட இடத்தில் இருந்து மட்டும் பார்க்காமல் எல்லாரோட இடத்தில் இருந்தும் பார்க்கறியே அதுக்கு…நான் ஒண்ணும் இப்போ என் அக்கா மேல கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பி வரல.


என் அக்காவோட கோபம் நியாயம் தான்.அது எனக்கும் புரியுது.ஆனா இப்போ கோபத்தில் வார்த்தைகளைச் சிதற விட்டுட்டு அப்புறம் அதுக்காக அவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க.ஏற்கனவே உடம்பு சரி இல்லாதவங்க வேற…அவங்க இதயம் கொஞ்சம் வீக்கா இருக்கு.அதுக்காக ட்ரீட்மெண்ட் எடுத்துக்கத் தான் அவங்க வெளிநாடு போனதே…


இந்தச் சூழ்நிலையில் அவங்க இப்படிக் கத்தி டென்ஷனும் ஆகுறதும் கூட ஒரு வகையில் அவங்களுக்கு ஆபத்து அதான்.எனக்கு அவங்களைப் பத்தி தெரியும்.கோபம் குறைஞ்சதும் அவங்களே வந்து பேசுவாங்க.ஸோ நீ எதைப் பத்தியும் கவலைபடாமல் இரு.”அவளுக்குத் தைரியமூட்டினான்.


பேசிக் கொண்டே பொழிலரசியின் அறைக்குள் வந்து விட அவளிடம் எதையோ சொல்லப் போனவன் போன் ஒலிக்கவும் முகமெல்லாம் சிரிப்பாக அதை எடுத்து ஸ்பீக்கரில் போட்டு விட்டு , ‘நீயும் கேள்’ என்பது போலச் சைகை செய்து விட்டு பேசத் தொடங்கினான்.


“ஹலோ சொல்லு என்ன விஷயம்?”


“ஏன்டா உனக்கு அவ்வளவு திமிரா? அக்காக்காரி பேசிக்கிட்டே இருக்கேன்.நீ பாட்டுக்கு எழுந்திரிச்சு வர…”


“நீ தான் நான் என்ன சொல்ல வரேன்னு கூடக் கேட்க மாட்டேங்கறியே…அப்புறம் என்ன பேச சொல்ற?” குரலில் இருந்த கோபம் ஆதித்யனின் முகத்தில் இல்லை.


“ஏன்டா கூடப் பிறந்த அக்கா கோபமா பேசினா சமாதானம் செய்யணும் அதை விட்டுட்டு இப்படியா எழுந்து வருவ…”


“அப்படித்தான் வருவேன்..இப்ப என்ன செய்யனும்னு சொல்ற? என் கண்ணு முன்னாடி என் பொண்டாட்டியை நீ திட்டி பேசிக் கொண்டே இருந்தா நானும் என்ன தான் செய்யட்டும் சொல்லு.”பேசிக் கொண்டே அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தவண்ணம் பொழிலரசியின் தோள்களைச் சுற்றி கைகளைப் போட்டுக் கொண்டான்.


பொழிலரசி அவன் கைகளை நகர்த்த எடுத்த முயற்சிகள் அனைத்தையும் சுலபமாக முறியடித்தவன் திரும்பி அவளை ஊடுருவும் பார்வை ஒன்று பார்த்து வைத்தான்.கூச்சத்தால் நெளிந்து கொண்டு இருந்தவள் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று விட்டாள்.


இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொள்ளத் திலகவதியின் குரலில் இருவரும் தன்னிலை அடைந்தனர்.


“எனக்குக் கோபம் வந்தா அப்படித்தான் பேசுவேன்”


“எனக்குக் கோபம் வந்தா நானும் அப்படித்தான் எழுந்து வந்துடுவேன்”


“கடைசியா என்ன தான் சொல்ற…”


“ஆரம்பத்தில் இருந்து இதைத் தான் சொல்றேன்.எப்பவும் என் பொண்டாட்டியை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்”என்று கூறியபடி மனைவியை இறுக்கிக் கொண்டான்.அவள் உடல் ஒரு நிமிடம் அதிர்ந்து தூக்கி போடுவதை உணர்ந்தாலும் கைகளை விளக்கிக் கொள்ள அவன் முனையவில்லை.


“கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் கூட ஆகலை அதுக்குள்ளே இப்படிப் பொண்டாட்டியை தாங்குற…பார்த்துடா அவளுக்கு ரொம்ப இடம் கொடுக்காதே.அப்புறம் உன் பாடு கஷ்டம் ஆகிடும்”திலகவதியின் குரலில் லேசாகக் கிண்டல் இருந்தது.


“என் பொண்டாட்டிக்கு எவ்வளவு இடம் கொடுக்கணும், எங்கே இடம் கொடுக்கணும்னு எனக்குத் தெரியும்.நீ உன் வேலையைப் பார்”என்று லேசான சிரிப்போடு சொன்னவன் பேசிக் கொண்டே அலேக்காக மனைவியைத் தூக்கி தனது மடியில் அமர்த்திக் கொண்டான்.


கணவனின் குணம் தெரிந்து இருந்ததால் அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்து இருந்தாள் பொழிலரசி.ஆனால் கூச்சத்தால் அவள் நெளியும்படி எந்தக் காரியத்தையும் கணவன் செய்து விடவில்லை.குழந்தையை மடியில் ஏந்தி இருக்கும் தாயை போலத் தான் இருந்தது அவன் செயல்.


“ஹ்ம்ம்…பார்த்தா நல்ல பொண்ணா தான் தெரியுது…நான் இவ்வளவு கோபமா பேசியும் ஒரு வார்த்தை எதிர்த்தும் பேசலை…முறைச்சுக் கூடப் பார்க்கலை.அது பாட்டுக்குச் சாதுவா தான் நின்னுச்சு.நான் பரவாயில்லை ஆதி.ஆனா அம்மா முந்தைய தலைமுறை அவங்க ஏத்துக்கக் கொஞ்ச நாள் ஆகும்.அது வரை பொறுத்துக்கோ.


உன் கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி வைச்சிடு…அம்மா கோபம் குறையும் வரை காத்திரு.அதே மாதிரி உன் பொண்டாட்டிக்கும் இன்னும் நம்ம வீட்டு பழக்க வழக்கம் எல்லாம் ஒண்ணும் தெரியலை போல.அதை எல்லாம் சொல்லிக் கொடு.இன்னைக்கு நான் அவ்ளோ பேசினேன்.நிமிர்ந்து நின்னு என்னை எதிர்த்து பேசி இருக்கணுமா… இல்லையா?


அவ பாட்டுக்கு நீங்க எவ்ளோ வேணா திட்டுங்க நான் வாங்கிக்கறேன்.அப்படின்னு குனிந்த தலை நிமிராம அப்படியே உட்கார்ந்தே இருக்கா…அவ ஆளே அப்படித்தானா? இல்லை எதிர்த்து பேசக் கூடாதுன்னு சொல்லி நீ மிரட்டி வச்சு இருக்கியா?”


“அக்கா நீ வேற…அவ பேச ஆரம்பிச்சா ஜூல (zoo) இருக்கிற சிங்கம் , புலி எல்லாம் பயந்து காட்டுக்குள்ளேயே மறுபடி ஓடிடும்…அந்த அளவுக்குப் பேசுவா…இன்னைக்கு என்னமோ அவ முதல் நாள்னு பாவம் பார்த்து உன்னை விட்டுட்டான்னு நினைக்கிறேன்.”கணவனின் குரலில் இருந்த கேலியை கண்டு கொண்டவள் முகத்தைக் கோபம் போலத் திருப்பிக் கொண்டு கீழே இறங்க முற்பட்டாள்.


ஆதித்யனும் அவளைத் தடுக்காமல் கீழே இறக்கி விடச் சற்று தள்ளி இருந்த ஒற்றைச் சோபாவில் போய்க் கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்து கொண்டாள்.


மேலும் சற்று நேரம் இப்படியே பேச்சை வளர்த்தார்கள் இருவரும்.பேசி விட்டுப் போனை வைக்கும் பொழுது “ தேங்க்ஸ் அக்கா” நெகிழ்ச்சியாகச் சொன்னான் ஆதித்யன்.


“சரி தான்டா பெரிய மனுஷா…அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் நான் இப்படி இறங்கி வந்த விஷயம் எல்லாம் உன் பொண்டாட்டிக்கு தெரிய வேண்டாம்.இன்னும் கொஞ்ச நாள் இப்படியே போகட்டும்.அப்ப தான் நான் நாத்தனார் கெத்தை அவ கிட்ட காமிக்க முடியும்.புரிஞ்சுதா”


“நானா வாயை திறந்து எதுவுமே சொல்ல மாட்டேன் அக்கா” என்றான் நமட்டுச் சிரிப்புடன் போனை வைத்து விட்டு மனைவியின் புறம் திரும்பினான்.


“ஹே…நான் சொன்னேன்ல அக்காவை பத்தி…பார்த்தியா…அவங்க அப்படித்தான்.மறுபடி உன்னைப் பார்க்கும் போது இந்த மாதிரி எதுவும் பேசினா கூட நீ தப்பா எடுத்துக்காதே…அவங்க ரொம்ப நல்லவங்க.சரியா?”


லேசான தலை அசைப்பு மட்டுமே அவளிடம் இருந்து.


“குட்…உன்னோட டிரஸ் தைக்கச் சொல்லி கொடுத்தாச்சு.நாளைக்கு நைட் வந்துடும்.”பேசிக் கொண்டே போனவன் அவளது குழம்பிய முகப் பாவனையில் பேச்சை நிறுத்தி விட்டு, ‘என்ன’ என்று கண்ணாலேயே விசாரித்தான்.


“இ…இல்லை…அது தான் அளவே எடுக்கலையே…அப்புறம் எப்படி?”பாதியிலேயே கேள்வியாக நிறுத்தினாள்.


“பொழில் நீ ஒரு விஷயம் கேள்விப்பட்டு இருக்கியா? எங்க வீட்டு சமையல்காரத் தாத்தா எப்பவுமே ஒரு விஷயம் சொல்வார்…”


“…”


“சமைக்கும் போது எதையும் அளந்து அளந்து போடக்கூடாது.கண் அளவு, கை அளவு தான் முக்கியம்னு…அதே மாதிரி நானும் உன் அளவை அளந்து கொடுத்துட்டேன்” என்று விஷம சிரிப்போடு சொன்னவன் அதிர்ந்து நின்ற அவளின் தோற்றத்தை உள்ளுக்குள் ரசித்தபடி உல்லாச நடையோடு அங்கிருந்து கிளம்பினான்.


‘கண் அளவு…கை அளவா… அப்படினா…என்ன சொல்றார் இவர்’ கன்னங்கள் சூடேற அப்படியே அமர்ந்து விட்டாள் பொழிலரசி.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here