Kadhale Nee Kaanala Tamil Novels 8

2
2043
Madhumathi Bharath Tamil Novels

கணவன் சொன்னதின் அர்த்தம் புரியாமல் இருக்க அவள் என்ன சின்னப் பிள்ளையா? ஆனால் இது எப்படி நடந்தது என்பது தான் அவளுக்குக் கொஞ்சமும் புரியவில்லை.யோசித்தால் தலைவலி வந்து விடுமோ என்ற பயத்தினாலேயே இப்பொழுதெல்லாம் அவள் யோசிப்பதே இல்லை.
மதியம் வேலைக்காரர்களின் பேச்சை கேட்ட பிறகு கீழே இறங்கி தோட்டத்தில் நடக்கவும் அவளுக்கு விருப்பம் இல்லை. மீண்டும் பழையபடி அப்படியே அறைக்குள் முடங்கிக் கொண்டாள் பொழிலரசி.மாலை ஆறு மணி அளவில் பொழிலரசிக்கு லேசாகப் பசிக்கத் தொடங்கியது.
அதற்குக் காரணம் மதிய உணவை அவள் சரியாக உண்ணாததே.அவள் ஒன்றாக எல்லாருடனும் சேர்ந்து உண்ணும் போது எல்லாம் அவளுடைய மாமியார் பத்மாவதி சரியாக உண்ணுவதே இல்லை.பாதி சாப்பாட்டில் எழுந்து போய் விடுகிறார்.தன்னால் தான் அவர் சரியாகச் சாப்பிடுவதில்லை என்று உணர்ந்து இருந்ததால் முடிந்தவரை வேகமாக அரை வயிறு உண்டு விட்டு எழுந்து விடுவாள்.
அப்படி அவள் வேகமாக உண்ணுவதைக் கண்ட பத்மாவதி குத்தலாக “உங்க வீட்டில் நீ நல்ல சாப்பாடே சாப்பிட்டது இல்லையா? இப்படிப் பறக்கா வெட்டி மாதிரி சாப்பிடற…நீ எவ்வளவு சாப்பிட்டாலும் இங்கே சாப்பாடு தீராது.எல்லாருக்கும் இருக்கும்.அதனால் உனக்கு இல்லாமல் போயிடுமோ அப்படின்னு பயப்படாம கொஞ்சம் பொறுமையாவே சாப்பிடு”என்று சொல்ல அதற்கு மேலும் சாப்பிட பிடிக்காமல் எழுந்து வந்து விட்டாள்.கணவன் தனக்காக மாமியாரிடம் எதையோ பேசுவது காதில் விழுந்தாலும் அதைக் கேட்கும் மனநிலையில் இல்லாததால் அங்கிருந்து வந்து விட்டாள் பொழிலரசி.
மீண்டும் இப்பொழுது பசிக்கத் தொடங்கவே கீழே கிச்சனுக்குப் போய் எதையாவது உண்ணலாம் என்ற எண்ணத்தோடு மாடியை விட்டு கீழே இறங்கினாள்.ஏற்கனவே ஒரு முறை ஆதித்யன் அவளுக்குச் சொல்லி இருந்தான் உனக்கு எதுவும் சாப்பிட தேவை என்றால் இன்டர்காமில் அழைத்துச் சொன்னால் போதும் அவர்களே குடிப்பதற்க்கோ,கொறிப்பதற்க்கோ செய்து எடுத்துக் கொண்டு வருவார்கள் என்று.ஆனால் அவளுக்குத் தான் அது பிடிக்கவில்லை.அவளுக்குத் தானே தன் கையால் சமைத்து சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது.
ஆனால் அப்படி எதுவும் செய்தால் அது என்னுடைய மனைவிக்கு ஏற்ற செயலாக இருக்காது என்று கூறி ஆதித்யன் அதைத் திட்டவட்டமாக மறுத்து விட்டான். “உனக்குக் கீழே ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள்.அவர்களை வேலை வாங்கிப் பழகு…நீ இறங்கி எந்த வேலையும் செய்யக் கூடாது” என்று தெளிவாக அவளிடம் சொல்லி இருந்தான்.
அவனது பேச்சை மீற அவளுக்கு மனம் வரவில்லை.அதே நேரம் இருந்த இடத்திலேயே உணவை வரவழைத்து உண்ணவும் பிடிக்காமல் கீழே இறங்கிப் போய் எதையாவது சாப்பிட்டு விட்டு வரலாம் என்ற எண்ணத்தோடு கீழே டைனிங் டேபிளுக்குச் சென்றாள்.
அங்கே சென்று இவள் அமர்ந்து வெகுநேரமாகியும் சுற்றி இருந்த அத்தனை வேலையாட்களில் ஒருவர் கூட அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு பரிமாறவில்லை.சற்று நேரம் அமைதியாகவே இருந்தவள் பசி பொறுக்க மாட்டாமல் தன்னைக் கடந்து சென்ற வள்ளியை நிறுத்தினாள்.
“வள்ளி…பசிக்குது சாப்பிட ஏதாவது எடுத்துக்கிட்டு வர்றியா?” கெஞ்சலாகக் கேட்டாள்.
“இப்படிக் கண்ட நேரத்தில் வந்து சாப்பிட கேட்டா எங்கே போறது?இவளோ பெரிய வீட்டில் ஒவ்வொரு ஆளுக்கும் தனித்தனியா எல்லாம் செஞ்சு கொடுத்திட்டு இருக்க முடியாது.”
“பசிக்குது வள்ளி” தலையைக் கீழே தொங்கப்போட்டுக் கொண்டு பேசினாள்.ஒரு விதத்தில் அவமானமாக உணர்ந்தாள் பொழிலரசி.
“உங்க வீட்டில் இருந்தப்போ எல்லாம் நேரா நேரத்துக்கு இப்படி வகை வகையா சாப்பிட்டுக்கிட்டு தான் இருந்தியா?கொஞ்ச நேரம் காத்துக்கிட்டு இருந்தா ஒண்ணும் கெட்டுப் போய்டாது.கொஞ்ச நேரம் இரு…ங்க”அசட்டையாகவே சொன்னாள் வள்ளி.
பொழிலரசி இயல்பிலேயே தைரியம் நிறைந்த பெண் தான்.ஆனால் இப்பொழுது தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் குழம்பிக் கொண்டு இருந்தவள் தன்னுடைய இயல்பையும் தொலைத்து விட்டு இருந்தாள்.
“வேணும்னா கொஞ்ச நேரம் இரு…ங்க.வேலை எல்லாம் முடிச்சுட்டு மதியம் செய்ததில் ஏதாவது மிச்சம் இருக்கு.அதை சூடு பண்ணி எடுத்திட்டு வரேன்.அது வரை சும்மா ‘நைநை’ நச்சரிக்காம இரு..ங்க” என்று அலட்சியத்தோடு சொல்லி விட்டு அங்கிருந்து அகன்று விட்டாள் வள்ளி.
வள்ளியின் அலட்சியத்தை விடவும்,தனக்கு மரியாதையை யோசித்து யோசித்து அவள் கொடுத்த விதம் மனதை மிகவும் பாதிக்க அதற்கு மேல் அங்கே இருக்கப் பிடிக்காமல் எழுந்து அறைக்குள் சென்று விட்டாள் பொழிலரசி.
பசியில் வேறு ஏற்கனவே முகம் வாடி இருக்க,அந்த நேரத்திலும் ரோஷத்தோடு அங்கிருந்து கிளம்பியவளை இரு கண்கள் அளவிட்டுக் கொண்டு இருந்தது தூரத்தில் இருந்து.
சில நொடிகள் கடந்து அறையின் கதவை திறந்து கொண்டு சக்கர நாற்காலியின் உதவியோடு உள்ளே நுழைந்தாள் திலகவதி.சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு வந்த வேலைக்காரியை வெளியே அனுப்பிவிட்டு அரசியின் முகபாவத்தை அளந்தாள் திலகவதி.சோர்வாக இருந்த அரசியின் முகத்தைக் கண்டும் காணாதது போலப் பார்த்தவள் அவளுக்கு எதிராகச் சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு வந்து கர்வத்தோடு ஒரு பார்வை பார்த்தாள்.
திலகவதி அறைக்குள் வந்ததுமே மரியாதை காரணமாக எழுந்து நின்று விட்டாள் பொழிலரசி.திலகவதியின் பார்வை அறையைச் சுற்றி வட்டமடித்தது.எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற சிந்தனையில் அவள் இருக்கிறாள் என்பது பொழிலரசிக்கு புரிந்தது.பின்பு ஒரு முடிவுக்கு வந்தவள் போலத் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள் திலகவதி.
“யார் நீ? உனக்கு என்ன தகுதி இருக்கு இத்தனை பெரிய அரண்மனையில் இருக்க, இந்த அளவு ஆடம்பரமான வாழ்க்கையைக் கனவிலாவது எதிர்பார்த்து இருப்பாயா?”
ஏற்கனவே திலகவதியை பற்றி அறிந்து இருந்ததால் ஒன்றும் பேசாமல் மௌனமாக நின்றாள் பொழிலரசி.
“இப்படி ஒண்ணுமே பேசாம கல்லுளி மங்கி மாதிரி இருந்தா என்ன அர்த்தம்?இந்த இடத்தில் இருப்பதற்குத் துளியும் தகுதி இல்லாத நீ இங்கே இருக்க வேண்டாம்.வெளியே போ” அவள் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே கூறினாள்.
அதுவரை மனதுக்குள் தானாகவே பேசிக் கொண்டு இருந்தாள் பொழிலரசி. ‘அவரோட அக்கா…நல்லவங்க.அவங்க எது பேசினாலும் எதிர்த்து பேசக் கூடாது’என்று மனதுக்குள் ஜெபம் போலச் சொல்லிக் கொண்டே வந்தவள் அவளது கடைசி வார்த்தையில் ஜெபத்தை நிறுத்தி விட்டு திலகவதியின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தாள்.
“நான் ஏன் வெளியே போகணும்…இது என் வீடு.எனக்கு தாலி கட்டியவர் வந்து என்னை வெளியேற சொன்னால் கூட இங்கிருந்து வெளியே போக மாட்டேன்” தெளிவாகச் சொன்னாள்.
“என்னையே எதிர்த்து பேசறியா? மரியாதையா வெளியே போ” முகத்தை இரும்பென வைத்துக் கொண்டு சொன்னார் திலகவதி.
“நான் போக மாட்டேன்…நீங்க வெளியே போகணும்னு விரும்பினா அதை நான் தடுக்க மாட்டேன்.ஏன்னா இது என் வீடு…உங்க வீடு இல்லை”அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் பொழிலரசி.
“உன் வீடா? எது உன் வீடு? கிராமத்தில் ஒரு ஓட்டை குடிசை இருக்கே…அது தான் உன் வீடு…இதில்லை.இவ்வளவு பெரிய மாளிகையில் இருக்கும் தகுதியும் உனக்கு இல்லை.”திலகவதியும் கொஞ்சமும் பின் வாங்கவில்லை.
“என்ன தகுதி எனக்கு இல்லை?”
“இந்த வீட்டின் மருமகள் என்று சொல்லிக் கொள்ளும் தகுதி உனக்கு இல்லை”
“ஏனோ”
“இந்த வீட்டுப் பெண்கள் எல்லாரும் முதுகெலும்பு உள்ளவங்க…உன்னை போல மண்புழு இல்லை”
“யாருக்கு முதுகெலும்பு இல்லை…”
“உனக்குத்தான்…அப்படி இருந்து இருந்தால் இப்படி வீட்டு வேலைக்காரியிடம் எல்லாம் பேச்சு வாங்கிக் கொண்டு அப்படியே நிற்பாயா?உன்னோட மரியாதை என்னனு உனக்கே தெரிஞ்சு இருக்கு.அதனால் தான் மத்தவங்க உன்னைக் குறைச்சு பேசும் போதெல்லாம் ஒண்ணுமே பேசாம அப்படியே நிற்கிற.
ஒரு வேலைக்காரியை கூட எதிர்த்து பேச துணிவில்லாத நீ எப்படி இந்தக் குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாக இருக்க முடியும்? கிராமத்தில் இருக்கே உன்னுடைய ஓட்டைக் குடிசை அதில் இருக்கத் தான் நீ எல்லாம் லாயக்கு.மரியாதையா திரும்பி அங்கேயே போய்டு”
அதிர்ந்து விழித்தாள் பொழிலரசி. ‘இவர்கள் சொன்னது உண்மை தானே?அப்படி எதில் நான் குறைந்து போய் விட்டேன்.இது என்னுடைய வீடு…இங்கே வீட்டு வேலைக்காரி என்னை மதிக்காமல் இருப்பதா? அதைத் தெரிந்தும் நான் ஏன் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டும்? அப்படிப் பொறுத்துக் கொள்ள அவள் என் மாமியாரா என்ன?’என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள் முடிவோடு திலகவதியை பார்த்துத் தீர்க்கமாகப் பேச ஆரம்பித்தாள்.
“இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காது”என்று உறுதியுடன் கூறியவள் அறையை விட்டு வெளியேறி கதவை சாத்த போனாள்.வெளியேறும் முன் ஒரு நிமிடம் தயங்கி நின்றவள் பின் திலகவதியை நேருக்கு நேராகப் பார்த்து , “தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு திலகவதியை கடந்து சென்றாள்.
“எதுக்கு…உன்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னதுக்கா?”குரலில் இருந்த இயல்பு முகத்தில் இல்லை திலகவதிக்கு.
“ஏன் உங்களுக்குக் காரணம் தெரியாதா என்ன?” கேள்வியை அவள்புறமே திருப்பி விட்டு மலர்ந்த முகத்துடன் அறையை விட்டு வெளியேறி நேராக டைனிங் ஹாலுக்குப் போனாள் பொழிலரசி.
லிப்டில் இருந்த கண்ணாடியில் தன்னுடைய உடையையும் முகத்தையும் லேசாகத் திருத்திக் கொண்டு நிமிர்ந்த நடையோடு போனவள் டைனிங் டேபிளில் போய்க் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டாள். அப்படி அமரும் போது மனதுக்குள் தன்னுடைய கணவனின் உருவத்தை மனதுக்குள் கொண்டு வந்தாள்.
கணவனின் நிமிர்வையும், ஆளுமையையும் தன்னுள் உருவேற்றிக் கொண்டாள். அவள் மறுமுறை கீழே வருவதை முன்பே கவனித்து விட்ட வள்ளி பழைய அலட்சிய பாவத்துடன் கிட்சனில் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தாள்.
“வள்ளி” என்று அரசி அழைத்தது அவ்வளவு பெரிய மாளிகையின் ஒவ்வொரு சுவற்றிலும் பட்டு எதிரொலித்தது.
வள்ளி உள்ளிட்ட அத்தனை பேருக்கும் அவளது குரலில் தூக்கி வாரிப் போட்டது.அரசியின் குரல் கேட்டு மாடியில் பேசிக் கொண்டு இருந்த ஆதித்யனும் பத்மாவதியும் பேச்சை நிறுத்தி விட்டு கீழே எட்டிப் பார்த்தனர்.
மேலே இருந்து ஆதித்யன் கவனிப்பதாலோ அல்லது அரசியின் குரலுக்குப் பணிந்தோ அந்த இடத்திற்கு வந்து விட்டு இருந்தாள் வள்ளி.
“வள்ளி இன்னையில் இருந்து உன்னுடைய வேலை மாறுது.எனக்கு இந்த வீட்டில் எப்போ என்ன தேவைப்படுதோ அதை எல்லாம் செய்ய வேண்டியது உன் பொறுப்பு. ஒருவேளை உனக்கு இந்தப் புது வேலை பிடிக்கலைனா நீ இன்னைக்கே வீட்டை விட்டுப் போகலாம். உன்னுடைய கணக்கை முடிச்சு அனுப்பிட சொல்லி என் புருஷன் கிட்ட சொல்லிடறேன்.உனக்கு எப்படி வசதி?” பார்வையை அவள் புறம் கூடத் திருப்பாமல் அலட்சிய பாவனையுடன் பேசினாள்.
ஓரக் கண்ணால் வள்ளியின் மன நிலையைக் கணிக்க முயன்று கொண்டு இருந்தாள் அரசி.
வள்ளியின் முகம் கறுத்துப் போய் விட்டது.கடைசியில் இவளுக்கு… ஒரு பைத்தியத்திற்கு நான் வேலை செய்வதா? பேசாமல் வேலையை விட்டு போய்ட்டா என்ன? என்று சிந்தித்தவள் உடனே திடுக்கிட்டாள்.
‘இந்த வேலையை விட்டு வெளியே போய்ட்டா… அதுக்கு அப்புறம் என் நிலைமை என்ன? இந்த அளவுக்குச் சம்பளம் வேற எங்கே கிடைக்கும்’ என்று தன் போக்கில் சிந்தித்துக் கொண்டே போனவள் இயல்புக்கு திரும்பினாள் ஆதித்யனின் குரலில்.
“வள்ளிக்கு இதில் என்ன ஆட்சேபனை இருக்கப் போகிறது பொழில்? என்னை ரொம்பவும் மதிப்பவள்… அப்படி இருக்கும் போது என்னுடைய மனைவிக்கு வேலை செய்வதை அவள் ரொம்பப் பெரிய புண்ணியமாகத் தான் நினைப்பாள். சரி தானே வள்ளி|”
இல்லையென்றா சொல்ல முடியும் வள்ளியால். சிரிப்பது போல முகத்தை வைத்துக் கொள்ள ரொம்பவும் கஷ்டப்பட்டாள் வள்ளி.அதை மற்றவர்கள் உணர்ந்தார்களோ இல்லையோ அரசி நன்றாக உணர்ந்தாள்.
“வள்ளி உன் கையால எதையாவது செஞ்சு எடுத்துட்டு வாயேன்.சாப்பிட்டு உனக்குக் கொடுக்கிற சம்பளம் சரி தானான்னு சொல்றேன்.வள்ளி அவசரத்தில் மதியம் மிச்சமான எதையும் சூடு பண்ணி எடுத்திட்டு வந்துடாதே…புதுசா செஞ்சு எடுத்துட்டு வா…புரிந்ததா?” கேலி போலச் சொன்னாலும் அவள் எதற்காக அப்படிப் பேசுகிறாள் என்பது வள்ளிக்கு புரியாதா என்ன.
முகம் கறுக்கத் தோற்றுப்போன பாவனையுடன் நகர்ந்து கிட்சனுக்குள் புகுந்த வள்ளியை பார்த்துக் கொண்டு இருந்த அரசி திருப்தியான முகப் பாவனையுடன் மெல்ல திரும்பி அருகில் இருந்த கணவனைப் பார்த்தாள். குறுகுறுவென்று தன்னையே பார்க்கும் கணவனின் விழி கேட்ட கேள்வி புரியாது தலையைக் குனிந்து கொண்டு பேசத் தொடங்கினாள்.
“ஏதாவது… தப்பா… அதிகப் பிரசங்கித் தனமா செஞ்சுட்டேனா”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. இப்போ தான் தெளிவா பேசற”
“அப்புறம் ஏன் இப்படிக் குறுகுறுன்னு பார்க்கறீங்க”பார்வையை எங்கோ பதித்துக் கேட்டாள் பொழிலரசி.
“ஏற்கெனவே இன்னும் நம்ம ரிஷப்ஷனுக்கு நடுவில் இவ்வ்வ்ளோ நாள் இருக்கு.அதுவரை எப்படி உன்னைப் பக்கத்தில் வச்சுக்கிட்டு சும்மா இருக்கிறதுன்னு நான் யோசனையில் இருக்கிறேன். நீ என்னடான்னா இப்படி அதிரடியா எல்லாத்தையும் செய்றியா…அதான் மலைச்சுப் போய்ப் பார்த்துக்கிட்டு இருக்கேன்.ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது பொழில்… பேசியே அவளை மிரட்டுட்டியே” என்று கூறியவன் கண்களாலேயே அவளுக்கு ஒரு சபாஷ் போட உச்சி குளிர்ந்து போயிற்று அரசிக்கு.
உட்கார்ந்து இருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் லேசாகப் பின்னுக்குத் தள்ளி அமர்ந்தவள் முகத்தைக் கொஞ்சம் மிதப்பாக வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“பின்னே என்னை யாருன்னு நினைச்சீங்க ?”
“இங்கே வேண்டாம்… ரிஷப்ஷன் முடியட்டும் சொல்றேன்” என்றவனின் குரலில் இருந்த விஷமமும் பார்வையில் இருந்த சேதியும் பாவையவளுக்குப் புரியாதா என்ன!…
இவர்கள் இருவரின் மகிழ்ச்சியையும் இருவர் வெறுப்போடு பார்த்துக் கொண்டு இருந்தனர்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here