Kadhale Nee Kaanala Tamil Novels 9

1
2185
Madhumathi Bharath Tamil Novels

மறுநாள் பொழுது அழகாக விடிந்தது பொழிலரசிக்கு.காலையில் எழுந்ததும் முதல் வேலையாக இன்டர்காமை அழுத்தி வள்ளியை காபி கொண்டு வர சொன்னாள்.வள்ளியின் முகத்தில் இன்னும் பணிவு வரவில்லை என்றாலும் பழைய அலட்சியம் மறைந்து விட்டு இருந்தது. பொழிலரசிக்கு ஏனோ வள்ளியை அப்படியே விட்டு விடும் எண்ணம் இல்லை.
ஏனெனில் அந்த வீட்டில் உள்ள மற்றவர்களை விட வள்ளியை ஒரு விதத்தில் அரசிக்குப் பிடித்துத் தான் இருந்தது.ஆரம்பத்தில் இருந்து அவளது விருப்பமின்மையை எந்தவித ஒளிவுமறைவு இன்றி மறையாமல் வெளிபடுத்துபவள் வள்ளி என்ற எண்ணமே அதற்குக் காரணம்.அந்த வீட்டில் உள்ள மற்றவர்களைப் போல உணர்வுகளை மறைத்து அவள் எதையும் செய்யவில்லை என்பதாலேயே அரசிக்கு வள்ளியை பிடித்தும் போனது.
எனவே ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி வள்ளியிடம் பேசிக் கொண்டே இருந்தாள்.ஒவ்வொரு சின்னச் சின்ன வேலைகளுக்கும் அவளுக்கு வள்ளியின் துணை தேவையாய் இருந்தது.
“வள்ளி குளிக்கணும்…ஹீட்டர் போட்டு வை… வள்ளி தலைக்குச் சாம்பிராணி போட்டு விடு…என்னோட புடவையை அயர்ன் பண்ணிக் கொண்டு வா” இப்படி ஒவ்வொரு வேலையாக அவளை ஏவி கொண்டே இருந்தாள்.அதற்குக் காரணம் வள்ளி இன்னும் தன்னுடைய தவறை உணராததே…மற்றபடி வள்ளியை தண்டிக்கும்படி கடினமான எந்தக் காரியத்தையும் பொழிலரசி செய்து விட வில்லை.
வள்ளியை கொஞ்சம் சீண்டிக் கொண்டே இருந்தாள் என்பது தான் பொருத்தமாக இருக்கும். ‘என்னையா உதாசீனமாகப் பேசினாய்? இப்போது பார் எனக்கே உன்னை வேலை செய்ய வைத்து விட்டேன்’ என்று பார்வையாலேயே அவளுக்குச் சொல்லுவாள்.பொழிலரசியின் இந்த மாற்றத்தை வள்ளியால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
‘என்ன தான் சிங்கத்தின் தோலைப் போர்த்திக் கொண்டாலும் ஆடு சிங்கமாகி விட முடியுமா?என்னுடைய முதலாளி எங்கே? எங்கோ குடிசையில் வாழ்ந்த இவள் எங்கே’ என்ற எண்ணம் வள்ளியின் நெஞ்சில் வன்மத்தீயை பற்ற வைத்தது எனலாம்.நேரம் பார்த்து அவளைக் கவிழ்க்க திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தாள் வள்ளி.
வள்ளியை பொறுத்தவரை அவள் செய்ததில் எந்த விதமான தவறும் இல்லை.அவளை பொருத்தமட்டும் அவளது முதலாளி அவளுக்கு தெய்வத்திற்குச் சமம்.அப்படிப்பட்டவனின் வாழ்க்கைத்துணை அவனுக்குப் பொருத்தமானவளாக இல்லாதது போனதில் அவளுக்கு மிகுந்த மன வருத்தம். பொழிலரசி பார்க்க அழகாகத் தான் இருக்கிறாள் என்றாலும் அது மட்டும் போதுமா?
பொழிலரசியை வெறுக்க அவளுக்கு நிறையக் காரணங்கள் இருந்தன.முதலில் அவள் ஒரு பைத்தியம் என்பது..அப்படி ஒரு பைத்தியத்தைத் தன்னுடைய முதலாளி காரணமே இல்லாமல் மணந்து இருக்க மாட்டார்.நிச்சயம் அவரை மிரட்டித் தான் இந்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்து இருப்பார்கள் என்று நம்பினாள்.
மற்றபடி திருமணத்திற்கு முன்பாகவும்,பின்பாகவும் அவ்வளவு முக இறுக்கத்துடன் விக்ரமாதித்யன் ஏன் இருக்க வேண்டும்?ஏதோ ஒரு விதத்தில் இவள் அவருக்குத் தொல்லையாக இருக்க வேண்டும் என்று அவள் மனதில் ஒரு தவறான எண்ணம் வளர்ந்து கொண்டே இருந்தது.ஆதித்யனின் மீது அவளுக்கு இருந்த அளவு கடந்த பக்தி அவளை இப்படி எல்லாம் சிந்திக்க வைத்தது.அந்த வீட்டில் வேலை செய்த அவளுடைய தாயும், தந்தையும் இறந்த பின் வள்ளியின் முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டான்.
வள்ளிக்குச் சரியாகப் படிப்பு வராத காரணத்தினால் அவளும் கடந்த இரண்டு வருடங்களாகப் படிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு வீட்டு வேலைகளைக் கவனித்து வந்தாள்.இத்தனை நாள் வரை அந்த வீட்டில் கம்பீரமாக வலம் வந்து கொண்டு இருந்த தன்னுடைய முதலாளி ஆதித்யனின் மகிழ்ச்சியைக் கெடுக்கவென்று வந்த ராட்சசியாகவே பொழிலரசி வள்ளியின் கண்களுக்குத் தெரிந்தாள்.
அப்படிப்பட்டவளை தன்னுடைய முதலாளியின் வாழ்க்கையை விட்டு ஒரேடியாகத் துரத்துவது எப்படி என்பதை நேற்று முதல் தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்தாள்.
‘ஆனால் சில சமயங்களில் ஆதித்யன் சார் கூட இந்தப் பொண்ணுகிட்டே சிரிச்சு சிரிச்சு தானே பேசறார்.ஒருவேளை நம்முடைய தலை எழுத்து இதுதான்.இதை மாற்ற முடியாது என்று நினைத்துக் கொண்டு இவள் செய்த தவறை எல்லாம் மன்னித்து இவளோடு வாழ முயற்சிக்கிறாரோ’ என்றெல்லாம் தனக்குள்ளேயே ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டாள்.
அப்படி அவள் தனக்குள் கேட்டுக்கொண்ட கேள்விகளுக்கு எல்லாம் அவளுடைய மூளை கொடுத்த பதில் ஒன்று தான்.அது அவளுடைய அருமை முதலாளிக்கு தொல்லை கொடுக்க வந்தவள் தான் பொழிலரசி.அவருடைய நிம்மதியையும் சந்தோசத்தையும் மீட்டு எடுக்க வேண்டுமானால் அவளை இந்த வீட்டை விட்டு துரத்த வேண்டும்.அதுவும் அவளாகவே வெளியேறும்படி செய்ய வேண்டும்.என்ற எண்ணத்தை உறுதி போல எடுத்துக் கொண்டவள் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு பொழிலரசி சொன்ன வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.
“வள்ளி தாகமா இருக்கு.எனக்கு இளநீர் குடிக்கணும் போல இருக்கு.கொண்டு வா…அப்படியே இளநீரா கொண்டு வரணும்.டம்ளர்ல ஊத்தி ஸ்ட்ரா போட்டு எல்லாம் எடுத்துட்டு வரக் கூடாது.புரியுதா”என்ற கட்டளையோடு அவளை அங்கிருந்து அனுப்பி வைத்த பொழிலரசி ஜன்னல் வழி தோட்டத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
அப்படி அவள் பார்க்கும் பொழுது அவளின் பார்வை வட்டத்தில் சிக்கிய காட்சியின் அர்த்தம் புரியாது உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தாள்.தோட்டத்தில் அவளுடைய கணவனும், அவனுடைய தம்பி விஜயேந்திரனும் காரசாரமாக எதையோ விவாதித்துக் கொண்டு இருந்தனர்.ஒரு கட்டத்தில் ஆதித்யன் கோபமாக எழுந்து விஜயேந்திரனிடம் எச்சரிக்கை செய்வது போல ஒற்றை விரலை ஆட்டிப் பேசுவதும் அதன் பிறகு அங்கே நிற்கப் பிடிக்காமல் தம்பி கிளம்புவதைக் கண்டதும் உட்கார்ந்து இருந்த சேரை கோபத்தோடு உதைத்து தள்ளுவதும் அவளுடைய பார்வையில் பட்டது.
இந்தச் சண்டை எதற்காக என்பது அவளுக்குப் புரியவில்லை.அவள் இருப்பது மூன்றாவது மாடி என்பதால் அவர்கள் பேசுவது எதுவும் அவள் காதில் விழவில்லை. ‘என்ன சண்டையாக இருக்கும்? ஒருவேளை நம்மால் தான் எதுவும் பிரச்சினையோ’ என்று யோசித்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்தவள் கதவு தட்டும் ஒலியில் சுய உணர்வை அடைந்தாள்.
வள்ளி தான் வந்து இருப்பாள் என்று எண்ணி உள்ளே வர உத்தரவிட்டாள் பொழிலரசி.ஆனால் கதவை திறந்து கொண்டு வந்தவன் விஜயேந்திரன்.அவனைப் பார்த்ததும் முதலில் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.இருப்பினும் மரியாதைக்காக எழுந்து நின்று அவனைப் பார்த்து லேசாகப் புன்னகைக்க முயற்சித்தாள்.
என்ன பேசுவது என்று புரியாமல் முழிக்க ஆரம்பித்தாள் பொழிலரசி. ‘வாங்க’ என்று வரவேற்பாகக் கூறினால் கோபித்துக் கொள்வானோ என்று வேறு தோன்றியது. திலகவதியை பற்றிக் கூட அவளுக்கு ஓரளவிற்குத் தெரிந்து இருந்தது.ஆனால் விஜயேந்திரனை பற்றி அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லையே.அதனால் எப்படிப் பேச்சை துவக்குவது என்று புரியாமல் முழித்துக் கொண்டு நின்றாள்.அவளை மேலும் சங்கடப்படுத்தாமல் அவனே பேசினான்.
“டைம் வேஸ்ட் பண்ணாம உடனே இந்த வீட்டை விட்டு வெளியே போங்க”
‘என்னடா இது ஆளாளுக்கு இந்த வீட்டை என்னை வெளியே அனுப்புவதிலேயே குறியா இருக்காங்களே’ என்று நொந்து கொண்டவள் அந்த நேரத்திலும் கணவனை மனதில் கொண்டு வந்தாள். ‘அவர் மட்டும் தான் இந்த வார்த்தையை இன்னும் சொல்லவில்லை.அவர் நிச்சயம் இப்படி ஒர் வார்த்தையை என்னைப் பார்த்து சொல்லவே மாட்டார் ‘ என்று உள்ளுக்குள் கணவனைக் கொஞ்சிக் கொண்டு இருந்தவள் திடுக்கிட்டு சுய உணர்விற்கு வந்தாள் விஜயேந்திரனின் கோபக்குரலில்.
“நான் சொல்வதைக் கேளுங்க…இந்த வீட்டில் இருக்காதீங்க…எவ்வளவு சீக்கிரம் முடியுமோ…அவ்வளவு சீக்கிரம் இங்கே இருந்து வெளியே போய்டுங்க…யாருக்கும் தெரியாம.முக்கியமா என்னோட அண்ணனுக்கு” என்று சொல்லி அவள் தலையில் கல்லை தூக்கிப் போட்டான்.
“நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு ஒண்ணுமே புரியலை.”அவன் சொல்வதின் அர்த்தம் புரியாமல் குழம்பிப் போனாள் பொழிலரசி.இதற்கு முன் பேசியவர்கள் எல்லாரும் ‘தன்னைப் பிடிக்காததினால் வெளியேற சொன்னார்கள்.இவன் என்னடானா புருஷனுக்குத் தெரியாம வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறான்…என்ன நினைச்சு இப்படி எல்லாம் பேசுறான்… எனக்கு ஒண்ணுமே புரியலையே’
“என்னை எதுவும் கேட்காதீங்க…நான் உங்க நல்லதுக்குத் தான் சொல்றேன்.எனக்கு என்னோட அண்ணனை பத்தி நல்லா தெரியும்.அவர் காரணம் இல்லாம எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டார்.உங்களை அவர் கல்யாணம் செஞ்சுகிட்டதுக்குப் பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்கு.அது முடிஞ்ச பிறகு…” சொல்லாமல் தயங்கி பேச்சை நிறுத்தினான்.
“பிறகு…”
“உங்க உயிர் இருக்காது”அவளை பார்க்காமல் சுவற்றை வெறித்துக் கொண்டே வறண்ட குரலில் சொன்னான் விஜயேந்திரன்.
இடி விழுந்தது போல அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று விட்டாள் பொழிலரசி. ‘இது உண்மையா? நிச்சயம் இல்லை…எப்பொழுதும் கனிவாக அவளிடம் பேசும் அவளுடைய கணவனால் அவள் உயிருக்கு ஆபத்தா? கண்டிப்பாக இல்லை.வே…வேண்டுமென்றே என்னை இந்த வீட்டை விட்டு வெளியேற்றுவதற்காக இப்படி எல்லாம் இவன் பேசுகிறான்.நம்பக்கூடாது.இதில் நிச்சயம் உண்மை இல்லை’ என்று தனக்குள்ளேயே போராடிக் கொண்டு இருந்தவளை கண்டும் காணாமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டான் விஜயேந்திரன்.
அதன்பிறகு சில மணி நேரங்கள் தனக்குள்ளேயே மூழ்கி இருந்தவள் வள்ளி வந்ததையோ அவள் தன்னை வெறித்துப் பார்த்ததையோ உணரவேயில்லை.
மாலை வந்து கணவன் கதவை தட்டும் வரை சிந்தனையிலேயே மூழ்கிப் போனாள் பொழிலரசி.
“பொழில்” உற்சாமாகக் கூவியபடியே ஆர்ப்பாட்டமாக அறைக்குள் நுழைந்தான் ஆதித்யன்.
“என்ன மேடம் காலையில் இருந்து ரொம்பப் பிஸியா? உன்னைப் பார்க்கவே முடியலை…”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை.என்ன விஷயம்…ரொம்பச் சந்தோசமா இருக்கிற மாதிரி இருக்கு.”மனதுக்குள் விஜயேந்திரனின் பேச்சு குழப்பினாலும் இப்போது அதைச் சொல்லி கணவனின் மனதை வருத்தப் படுத்தக் கூடாது என்று எண்ணி அதைப் பற்றிப் பேசாமல் தவிர்த்து விட்டு வேறு பேச்சு பேசினாள் பொழிலரசி.
“சந்தோசமா…புது பொண்டாட்டி கிட்ட இருந்து யாருக்கும் தெரியாமல் ஒரு திருட்டு முத்தம் வாங்கிட்டு போகலாம்னு வந்து இருக்கேன்.”குரலில் விஷமம் வழிந்தோட சொன்னான்.
“எ…என்னது?” பேந்த பேந்த முழித்து இரண்டடி பின்னால் நகர்ந்தாள் பொழிலரசி.
“ஒண்ணும் இல்லை பொழில்…கொஞ்ச நேரம் முன்னே போனில் என்னோட பிரண்டு ஒருத்தன் கூடப் பேசிட்டு இருந்தேன்.அப்போ அவன் அவனோட கல்யாண கதையைப் பத்தி சொல்லிட்டு இருந்தான்.அவனோட கல்யாணம் முடிஞ்சதும் வீட்டில் யாருக்கோ உடம்பு சரி இல்லாம போனதினால அவங்களைக் கொஞ்சம் பிரிச்சு வச்சிட்டாங்க.நம்மளை மாதிரியே…” உயிரை ஊடுருவியது அவன் பார்வை.
“அதுக்கு அப்புறம் ஆடி மாசம்னு சொல்லி இரண்டு பேரையும் ஒரு மாசம் பிரிச்சு வச்சிட்டாங்களாம்.இந்த பய ரொம்ப நொந்து போய்ட்டானாம்.அப்புறம் யாருக்கும் தெரியாம பொண்டாட்டிக்கு திருட்டுத்தனமா ஒரே ஒரு முத்தம் கொடுத்தானாம்.அப்படி யாருக்கும் தெரியாம முத்தம் கொடுத்தா ரொம்பக் கிக்கா இருக்கும்னு சொன்னான்.அதான் நானும் ட்ரை பண்ணி பார்க்கலாம்னு வந்தேன்.கமான்.கிவ் மீ எக் கிஸ்”
“வி…விளையாடாதீங்க…யாராவது வந்துடுவாங்க”
“என் பொண்டாட்டி ரூமுக்குள் நான் இருக்கும் போது உள்ளே வரும் தைரியம் இந்த உலகத்தில் எவனுக்கும் கிடையாது.கமான் பேபி” பொழிலரசியை நோக்கி அடுத்த அடி எடுத்து வைத்தான்.
“சொ…சொன்னா கேளுங்க…இதெல்லாம் தப்பு…அத்தைக்குத் தெரிஞ்சா கோபப் படுவாங்க”முடிந்தவரை அவனைத் தடுக்க முயற்சித்தாள் பொழிலரசி.
“நீ மறுக்க மறுக்கத் தான் எனக்கு வாங்கியே தீரணும்னு பிடிவாதம் ஜாஸ்தி ஆகுது பொழில்”கூர்வாளை கண்களில் சொருகியது போல அவனது பார்வை அவளுள் இறங்கியது.
ஆதித்யனுக்கும் , அரசிக்கும் இடையிலான இடைவெளிகள் குறைந்து கொண்டே போனது. அரசியால் அவனது தேவையை மறுக்க முடியவில்லை.கண்களில் குறும்போடு அவன் இருந்து இருந்தால் விளையாட்டுக்க்குப் பேசுகிறான் என்று சமாதானம் ஆகி இருப்பாள்.ஆனால் அவன் கண்களில் இருந்த தீவிரம் அவன் நிச்சயம் பின் வாங்க மாட்டான் என்பதை உணர்த்த அப்படியே நின்று விட்டாள் பொழிலரசி.
ஒருவரை மற்றவர் உணரும் தூரத்தில் இருவரும் நின்று கொண்டு இருந்தனர்.கணவனின் மோகப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்து கொண்டாள் பொழிலரசி.
ஒற்றைக் கையால் மனைவியை இழுக்க,வெண் பஞ்சு மூட்டையைப் போலக் கணவனின் கரங்களுக்குள் புகுந்து கொண்டாள் பொழிலரசி.ஒற்றை விரலால் மனைவியின் நாடியை பிடித்து அவளது முகத்தை நிமிர்த்தினான்.மூடி இருந்த மனைவியின் இமைகளும்,அதற்குள் சுழன்ற அவளின் கருவிழிகளும் அவனைப் பித்துக் கொள்ளச் செய்ய மனைவியின் பெயரை அவள் காதோரம் கிசுகிசுப்பான குரலில் அழைத்தான்.
“பொழில்… கண்ணைத் திற”
கணவனின் குரலில் தன் பெயர் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை ரசித்துக் கொண்டு இருந்தாள் பொழிலரசி.அந்த நேரத்தில் அவளது மனதில் இருந்த அத்தனை பிரச்சினைகளும் பின்னுக்குப் போனது.கணவனும்,அவளும் மட்டும் தனித்துச் சஞ்சரிக்கும் உலகம் மட்டுமே அவள் கண்ணுக்குத் தெரிந்தது.
அவன் குரலில் எப்போதும் கனிவு இருக்கும்…ஒரு தாய் தன்னுடைய குழந்தையிடம் காட்டும் அதே கனிவு.ஆனால் இன்றோ அவன் குரலில் இருந்த தாபம் அவளைக் கண் திறக்க அனுமதிக்கவில்லை.
“பொழில் எனக்கு உன் கண்ணைப் பார்க்கணும் போல இருக்கு.இப்படி கண்ணை மூடிக்காதே…ப்ளீஸ் கண்ணைத் திற” தாபச் சீறலாய் அவன் குரல் அவளது காதருகில்.
அப்படியும் கண்ணைத் திறக்காமல் இருந்தாள் பொழில்.அவளால் அவனது பார்வையை இப்பொழுது எதிர்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.
“பொழில்…நீ கண்ணைத் திறக்கலைன்னா நான் மொத்தமா உன்னை எடுத்துக்க வேண்டி இருக்கும்”அவன் குரலில் இருந்த எஃகின் உறுதியில் அவளையும் அறியாமல் மெல்ல கண்ணைத் திறந்தாள் பொழிலரசி.
வெற்றிப் பார்வையும்,உல்லாச நகையும் போட்டி போட அவளது கண்களை விட்டு பார்வையைக் கணமும் அகற்றாது , மெல்ல அவளது கன்னங்களைப் பற்றியவன் அவளது அதரங்களை நோக்கி குனிந்தான்.
பொழிலரசியை மாய உலகுக்குள் நுழைந்தாள்.அவளின் கண்களுக்கு ஆண்மையும் , வனப்பும் போட்டி போட தாபத்துடன் தன்னை நெருங்கும் கணவனின் கண்களையே ஒரு சில நொடிகள் பார்த்தவள் அவன் தன் இதழ்களை நெருங்கிய அந்த நிமிடம் தன்னையும் அறியாமல் கண்களை மூட, ஆதித்யன் நொடியும் தாமதிக்காமல் அவளது இதழ்களைச் சிறை செய்தான்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here