Mannavan Paingili 16

0
2440

அத்தியாயம் 16

இரவு உணவை முடித்ததும் மீண்டும் அவளிடம் பேச வேண்டும் என்று தோன்ற படுக்கையில் படுத்துக் கொண்டே அவனது தந்தையின் எண்ணுக்கு அழைத்தான்.

“சொல்லு இளா…”

“அவகிட்டே கொடுங்க…கொஞ்சம் பேசணும்”

“அப்பா மேல இன்னும் கோபமா தான் இருக்கியா?”

“என்னோட கோபம் அனாவசியமானது உங்களால சொல்ல முடியுமா?”

“மன்னவா”என்றார் குரல் தழுதழுக்க…

“வேணாம் அப்பா…அவ கிட்டே போனை கொடுங்க” கலங்கிய கண்களை கட்டுப்படுத்திக் கொண்டு நாயகியின் குரலுக்காக காத்திருக்கத் தொடங்கினான்.

“ஹலோ”

“ஏன்டி…அறிவு இருக்கா உனக்கு….”

“இந்த சந்தேகத்தை தீர்த்துக்கத் தான் இந்த நேரத்தில் போன் செஞ்சீங்களா?”

“கொழுப்பு தான்டி உனக்கு…ஊருக்கு கிளம்பும் பொழுது எல்லாத்தையும் நீ தானே எடுத்து வச்சே…ஷேவிங் செட்டை ஏன் எடுத்து வைக்கலை? மறந்து போய் தொலைச்சுட்டியா?”

“மறக்கலையே…வேணும்னு தான் எடுத்து வைக்கலை…”

“என்னடி கொழுப்பா?”

“இல்லை ஆசை…”

“என்னடி…பக்கத்தில் இல்லைங்கிற தைரியமா வாய் ஓவரா பேசுற…என்ன நினைச்சு இப்படி எல்லாம் செய்ற?”

“ஊருக்குப் போன புருஷனுக்கு பொண்டாட்டி நியாபகம் வரணும்னா இப்படி எதையாவது எடுத்து வைக்க மறந்தா , திட்டுறதுக்காகவாவது பொண்டாட்டியை நினைச்சு பார்ப்பாங்களாம்.அதான் நானும்…”என்று சொல்லி விட்டு அவள் அமைதியாகி விட ,மறுமுனையில் இளவரசன் பேச்சிழந்தான்.

“இப்போ நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சு தான் பேசறியா?”

“ஏன் தெரியாம…நான் என்ன சின்னப் பிள்ளையா? எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.இப்போ நான் பெரிய மனுஷி தான் தெரியுமா?”

“என்னடி…பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு…பக்கத்தில் இல்லைங்கிற தைரியமா…இந்தப் பேச்சை எல்லாம் நீ நேரில் பேசி இருந்தாலே நான் மயங்க மாட்டேன்.போனில் பேசினா மயங்கிடுவேனா?” என்றவனின் கேள்வியில் மறுமுனை மௌனமாக எங்கே வேறு எதையாவது பேசி அவளை வருத்தி விடுவோமோ என்ற எண்ணத்தில் போனை வைத்து விட்டான் இளவரசன்.

மறுநாள் காலையில் நண்பனுடன் கிளம்பி அவன் வேலை பார்க்கும் உர மருந்து தொழிற்சாலையில் சேர்ந்து கொண்டான்.தினமும் வேலைக்கு போவதும்,இரவில் ஊருக்கு போன் செய்து பேசுவதையும் வாடிக்கையாக வைத்துக் கொண்டான்.சுமதியின் செயலுக்கு பின்னால் இருந்த காரணத்தை உணர்ந்து அவரை மன்னிக்க முடிந்தவனால் தன்னுடைய தந்தை குமரேசன் செய்ததை மறக்க முடியவில்லை.

பெற்ற பிள்ளையையே மிரட்டி அவர் திருமணம் செய்து வைத்ததை எந்த காரணத்தை முன்னிட்டும் அவன் மன்னிப்பதாக இல்லை.அதே நேரம் நாயகி உடன் சேர்ந்து வாழ்வை தொடங்கவும் அவனால் முடியவில்லை.ஏதோ ஒரு தயக்கம் அவனுக்குள் இருந்தது.

பிரிந்து இருப்பது தான் உறவுகளுக்கு பலம் என்பதாலேயே குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க முடிவு செய்தான்.அவனது மனம் சமாதானமாக வேண்டும்.அதற்கு இந்த பிரிவு அவசியம் என்றே அவன் நம்பினான்.

வேலை ஓரளவுக்கு பழகி விட்டது.ஆனால் எதுவுமே ரசிக்கவில்லை அவனுக்கு.காலையில் எழுந்ததும் தந்தையோடு சிரித்து பேசியபடியே வீட்டு வேலைகள் செய்ததும்,அவரோடு ஒன்றாக உணவு உண்டதும் என்று சிறுவயது முதல் தான் கொண்டாடிய மகிழ்ச்சியான தருணங்கள் கண் முன்னே வந்து போனது அவனுக்கு.

அவனது நண்பன் சுகுமார் ஒரு நாள் கூட தன்னுடைய துணிகளை துவைக்க மாட்டான்.எப்பொழுதும் வாரக் கடைசியில் ஊருக்கு போகும் பொழுது அழுக்குத் துணிகளை ஒன்றாக மூட்டை கட்டி ஊருக்கு எடுத்து சென்று துவைத்து வருவான்.இதெல்லாம் அவனுக்கு புதிதாக இருந்தது.

“ஏன்டா…இந்த துணியை எல்லாம் இங்கேயே துவைச்சா ஆகாதா…ஊருக்கு சுமந்துக்கிட்டு போய் அங்கே போய் துவைச்சு திரும்ப பஸ்ஸில் எடுத்துக்கிட்டு வரணுமா?”

“டேய்…நான் எதுக்குடா துவைக்கறேன்.அந்த வேலை எல்லாம் ஊரில் அம்மா பார்த்துக்குவாங்க…”

“டேய்…எருமை..இதெல்லாம் நீயே செஞ்சுக்க மாட்டியா?அவங்களுக்கு தொந்தரவு கொடுக்கிற?”

“டேய் இளவரசா உனக்கு இதெல்லாம் புரியாது.இதெல்லாம் அவங்களே செஞ்சா அவங்க மனசுக்கு ஒரு திருப்தி கிடைக்கும்”என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட அவன் மனது தன்னுடைய வீட்டில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்த நாயகியைப் பற்றி எண்ணிப் பார்த்தது.

‘அவளும் அப்படித் தான் செய்து இருப்பாளோ’

சுகுமார் கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் தன்னுடைய வீட்டுப் பெண்களால்  இயல்பாக நடக்கும் விஷயங்களை ஒவ்வொரு நாளும் கதை போல அவன் சொல்ல, அதை கேட்டுக் கேட்டு இளவரசனின் மனதில் இருந்த தவறான எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடைப் பெறத் தொடங்கியது.

தந்தையின் மீது இருந்த கோபத்தால் வேண்டுமென்றே தன்னுடைய பிடிவாதத்தை தளர விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு இருந்தான்.வார விடுமுறையில் ஊருக்கு செல்ல மனம் பரபரத்தது.ஆனால் போகக் கூடாது என்று முடிவு செய்து விட்டான்.

நாயகியின் பால் அவன் மனம் சாயத் தொடங்கியதை அவன் மனம் உணர்ந்து கொண்டது.இருப்பினும் அவளிடம் அவ்வளவு தூரம் கடுமையாக நடந்து கொண்ட பிறகு சட்டென்று சமாதானக் கொடியை பறக்க விட அவனது தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

அன்றைய இரவு தந்தைக்கு போன் செய்து ஆபிசில் லீவு தர மறுத்து விட்டதாக கூறி அன்றைய வாரம் அங்கே செல்லாமல் தவிர்த்து விட்டான்.அடுத்த நாளில் இருந்து வீட்டுக்கு அழைத்து பேசும் போன் அழைப்புகளும் குறைந்து போனது.அவனாகவே அழைப்பதும் இல்லை.அவர்கள் அழைத்தாலும் முக்கிய வேலையில் இருப்பதாக சொல்லி உடனே அழைப்பை துண்டிக்கவும் செய்தான்.

ஒரு மாதம் இதே நிலை தொடர்ந்தது.முதல் மாத சம்பளப் பணத்தை கையில் வாங்கிக் கொண்டவன்,ஊருக்கு செல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்துடனே பொழுதை கழித்தான்.ஆனால் விடியற்காலையில் அவனுக்கு வந்த போன் அழைப்பை எடுத்து பேசியவன் அடித்து பிடித்துக் கொண்டு அடுத்த பஸ்ஸை பிடித்து ஊருக்கு போய் சேர்ந்தான்.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here