Mannavan Paingili 2

0
3299

அத்தியாயம் 2

அடுத்த நாள் காலை பொழுது விடிந்ததுமே முதல் வேலையாக கிளம்பி போய் விட்டார் குமரேசன். அவரின் அருகிலேயே முழித்துக் கொண்டே படுத்து இருந்த இளவரசன் அவர் கிளம்பி செல்லும் அரவத்தை உணர்ந்த பின்னும் படுக்கையை விட்டு அசைந்தானில்லை. மகனுக்குத் தான் செய்யும் செயல் துளி கூட பிடித்தமில்லை என்பதை தெளிவாக உணர்ந்து இருந்தாலும் அதைக் குறித்து அவரும் பெரிதாக அலட்டிக்  கொள்ளவில்லை.

அந்தக் குடும்பத்தைப் பற்றி எப்பொழுது பேச்சு ஆரம்பித்ததோ அப்பொழுதில் இருந்து இப்படித் தான் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சண்டைக்கும், சச்சரவுக்கும் பொழுது சரியாக இருந்தது. இளவரசனின் வருத்தம் என்னவெனில் இதுநாள் வரை ஒரு சின்ன விஷயத்திற்காகக் கூட மகனின் விருப்பத்திற்கு மறுபேச்சு பேசாத அவன் தந்தை, இப்பொழுது இவன் இவ்வளவு பிடிவாதம் பிடித்தும் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளவே இல்லை என்பது அவனது ஆத்திரத்தை கிளப்பி விட்டு இருந்தது என்பது தான் நிஜம்.

தந்தை கிளம்பியதும் தனக்கு மட்டுமாக காபி போட்டவன், தந்தையின்றி தான் மட்டுமாக குடிக்க மனமின்றி வெறுப்புடன் கீழே ஊற்றினான். வெகுநாட்களுக்குப் பிறகு இறந்து போன தாயின் புகைப்படத்திற்கு முன் நின்று அவரது முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்களின் சின்னஞ்சிறு கூட்டுக்குள் புதிதாக இரண்டு நபர்களை சேர்த்துக் கொள்ள அவன் மனம் மறுத்தது.. அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிட சொல்லியும் அவன் சொல்லவில்லை. அதே ஊரிலேயே அவரது தங்கை குடும்பத்திற்கு ஒரு நல்ல வீடு பார்த்துக் கொடுக்கவும் அவர்களின் வருமானத்திற்கும், வயத்துப்பாட்டிற்கும் இங்கே இருந்து பொருட்கள் செல்வதையும், பணம் செல்வதையும்  கூட அவன் பெரிதாக தடுக்கவில்லை.

ஏதேதோ எண்ணியபடி பண்ணைக்கு சென்றவன் வரிசையாக காய்த்து தொங்கிய பழ வகைகளைப் பார்த்ததும் நெஞ்சில் ஒருவித பூரிப்பு வந்து போனது. அந்த சுற்று வட்டாரத்தில் யாரிடமும் அவர்கள் பண்ணையில் விளையும் பழங்களின் சுவை கிடையாது. எல்லாமே அவனது தந்தையின் உழைப்பில் விளைந்தது.

இளவரசனும் விவசாயத்தில் பட்டப்படிப்பு வரை படித்து இருக்கிறான். மேற்கொண்டு படிக்க விரும்பாமல் பண்ணைக்கு வந்து தந்தைக்கு உதவியாக இருந்தான். மென்மேலும் படித்து நாட்களைக் கடத்துவதை விட படிப்பை நிறுத்தி விட்டு தந்தைக்கு உதவியாக இருப்பதையே விரும்பினான் இளவரசன்.

குமரேசன் மகனை எண்ணி நெகிழ்ந்து இருக்கும் தருணங்களில் அவனது தலையை தன் மடி மீது வைத்துக் கொண்டு பழங்கதைகளை ஆசையாக பேசுவார். அப்பொழுது ஒருமுறை அவர் சொன்னதுண்டு. அவருக்கு இளவரசன் வயிற்றில் இருக்கும் பொழுதே அவனுக்கு மன்னவன் என்று பெயர் வைக்கத் தான் ஆசையாம்.

‘என்னுடைய பையன் உலகத்தையே ஆளப் பிறந்தவன் அவனுக்கு நான் மன்னவன்னு தான் பேர் வைப்பேன்” என்று சொல்வாராம். ஆனால் அவரது மனைவி அரசி அதை மறுத்து விட்டாராம்.

“எனக்கு நீங்க மன்னவன்….நமக்கு பிறக்கப் போற பையன் இளவரசன்” அப்படின்னு சொல்லிகிட்டே இருப்பாங்களாம். பிரசவ சமயத்தில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் அவர் இறந்த போன பிறகு மனைவியின் ஆசைப்படி மகனுக்கு இளவரசன் என்று பெயர் வைத்தாலும் அவ்வபொழுது நெகிழ்ச்சியான தருணங்களில் மட்டும் ‘மன்னவா’ என்று தான் அழைப்பார் குமரேசன். அது போன்ற தருணங்கள் வெகு அரிது.

அது போன்ற கடந்த கால நினைவுகளை அசை போட்டபடி பண்ணையில் நுழைந்தவன் பழங்களை கொண்டு செல்வதற்காக வண்டி வந்திருப்பதை கண்டதும் நினைவுகளை புறம் தள்ளி விட்டு வேகமாக சென்று வேலைகளை கவனிக்கத் தொடங்கினான். அன்று பகல் முழுவதும் அவன் மட்டுமே தனித்து எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருக்க குமரேசன் இன்னும் வந்து சேரவில்லை.

முதன்முறையாக தந்தை இல்லாமல் தான் மட்டுமாக வேலை பார்த்ததாலோ என்னவோ உடலோடு சேர்ந்து மனமும் சோர்ந்து போய் வீட்டுக்குத் திரும்பியவனை வீட்டுக்கு உள்ளே இருந்து வந்த கலவையான சிரிப்பொலிகள் எரிச்சலையே கொடுத்தது.

‘நான் அங்கே தனியா எல்லா வேலையையும் பார்த்துட்டு வர்றேன். இங்கே சிரிப்பும் கூத்துமா இருக்காங்களா?’ என்று எண்ணியவன் உள்ளே வந்ததும் வேண்டுமென்றே வாசலில் இருந்த கதவை வேகமாக அறைந்து சாத்தினான். அதில் வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த சிரிப்பொலிகள் நின்று போனதில் அவனுக்கு மகிழ்ச்சியும், குற்ற உணர்வும் ஒருங்கே தோன்றியது.

‘சே!… அப்பா எப்பொழுதாவது தான் இப்படி மனம் விட்டு சிரிப்பார்..அதை கெடுத்துட்டேனே’ என்று எண்ணியவன் முற்றத்தில் அமர்ந்து இருந்த யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் வேகமாக தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டான்.

அறைக்குள் சென்றவன் உடை மாற்றிக் கொண்டு இருக்கும் பொழுதே பட்டென்று கதவு திறக்கப்பட , வேகமாக மறுபக்கம் திரும்பி பாதி அணிந்து இருந்த சட்டையின் பொத்தான்களை போட ஆரம்பித்தான். அதன் பிறகு ஆத்திரத்தோடு திரும்பியவனின் பார்வையில் முதலில் பட்டது அழகிய வெண்டைப்பிஞ்சு விரல்கள் தான்.

கையில் இருந்த தட்டில் வாழைக்காய் பஜ்ஜியும், அதற்குத் தோதாக தேங்காய் சட்டினியும், கூடவே சூடான காபியும் வைக்கப்பட்டு இருக்க அவனோ அதை கையில் வாங்கிக் கொள்ளும் எண்ணமின்றி தன் முன்னே பாவாடை தாவணியில் நின்று கொண்டு இருந்த அந்த பதினெட்டு வயது பருவ மங்கையை கண்களால் எடைப் போட்டுக் கொண்டிருந்தான்.

வட்ட வடிவ முகம், அதில் சுடர் விடும் தீபங்களைப் போல அழகிய இரு விழிகள், பஞ்சு போன்ற கன்னங்கள், இயற்கையாகவே சிவந்த அதரங்கள் என்று அவனின் பார்வை அவளை அலசிக் கொண்டு இருந்தது. பார்க்க, பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு. அப்படி ஒரு அழகான முகம். தேவதையை மிஞ்சும் எழிலுடன் இருந்தவளைப் பார்த்த நொடியிலேயே அவன் மனதில் மெல்லியதாக சாரல் வீசியது.

‘யாரிந்த தேவதை’என்று அவன் வியக்கும் பொழுதே அவன் மனசாட்சி அவனை கேலி செய்ய நொடிப்பொழுதில் முகத்தை மாற்றிக் கொண்டான்.

அவன் தட்டை வாங்காமல் அப்படியே நின்று கொண்டு இருக்க, விழி உயர்த்தி பார்த்தவளின் பார்வையில் அவனது கோபம் நிறைந்த முகத்திற்கான காரணம் புரியாமல் தடுமாறினாள். எரிமலையின் சீற்றத்தை கண்களில் தாங்கி இருந்தவனைக் கண்டதும் அவளது மேனி பயத்தில் நடுங்கியது. இருப்பினும் சமாளித்துக் கொண்டு பேசினாள்.

“இந்தாங்க மச்சான்…. சாப்பிடுங்க” குழந்தை போன்ற முகத்துடன் இனிமையாக பேசியவளைக் கண்டு அவனுக்கு எங்கிருந்து தான் அத்தனைக் கோபம் வந்ததோ தெரியாது. அவள் கையில் இருந்த தட்டை விசிறி அடித்தான்.

“யாரு… யாருக்கு மச்சான்?…முறை எல்லாம் வச்சு பேசின…. நடக்கிறதே வேற… என் வீட்டிலேயே என்னை உபசரிக்க நீ யாரு? இந்த வேலை எல்லாம் என்கிட்டே வச்சுக்காதே…. ஒரு வயசுப் பையன் இருக்கிற ரூம்குள்ள இப்படித்தான் வேகமாக வருவியா? கதவை தட்டிட்டு உள்ளே வர மாட்ட… இன்னொரு முறை என்னோட பார்வையில் படக்கூடாது சொல்லிட்டேன்” என்று இவன் காட்டுத்தனமாக கத்தத் தொடங்கிய போதே அங்கே வந்து விட்டார்கள் குமரேசனும், அவரது தங்கை சுமதியும்.

அவர்கள் இருவரும் உள்ளே வந்ததும் வேகமாக அவன் வெளியே சென்று விட இருவரும் அவளிடம் விசாரிப்பது அவனுக்குக் கேட்டது. செருப்பு மாட்டுவதற்கு வாசலில் இவன் நின்ற பொழுது அவள் சொன்ன பதிலும் அவன் காதுகளில் வந்து விழுந்தது.

“ஒண்ணுமில்லை மாமா… நான் தான் வந்த வேகத்தில் கால் தடுக்கி விழுந்துட்டேன். விழும்பொழுது தான் தட்டு கையில் இருந்து நழுவி இப்படி சுவரெல்லாம் பாழாகிடுச்சு… அது தான் மச்சானுக்கு கோபம் வந்துட்டு போல… எனக்கு பலகாரம் கொண்டு வரவா இவ்வளவு வேகமாக வந்தன்னு வஞ்சுக்கிட்டு இருந்தாரா… அந்த நேரத்தில் தான் நீங்க வந்தீங்க” என்று அவள் சொல்லி முடிக்க இவனோ அயர்ந்து போனான்.

‘எப்படி எல்லாம் மாற்றிப் பேசுகிறாள் பார். மாய்மாலக் கள்ளி… சரியான ஏமாற்றுக்காரியா இருப்பா போலவே… இவளை சும்மா விடக்கூடாது’ என்று பல்லைக் கடித்தவன் கோபத்துடன் மீண்டும் வெளியே சென்று விட குமரேசனுக்குத் தான் மிகவும் தர்மசங்கடமாக போனது.

என்ன தான் தங்கை மகள் சமாளித்துப் பேசினாலும் அறையின் உள்ளே அவன் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் வீட்டின் முற்றம் வரை கேட்டதே… தன்னுடைய காதில் விழுந்தவை தன்னுடைய தங்கையின் காதில் விழாமல் போய் இருக்குமா என்ன?’ என்று எண்ணியவர் லேசான குன்றலுடன் தங்கையை நோக்கினார்.

“தப்பா எடுத்துக்காதே சுமதி… கொஞ்சம் செல்லமா வளர்த்துட்டேன்… அதான்” என்று அவர் இழுக்க அவர் வருந்துவது பொறுக்காமல் சுமதி அவருக்கு உதவ முன் வந்தார்.

“அட என்ன அண்ணா? இதுக்கு போய் இப்படி வருத்தப்பட்டுக்கிட்டு அவனைப் பத்தி நீங்க சொல்லித் தான் எனக்குத் தெரியணுமா என்ன? உங்க வளர்ப்பு எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாதா?… பிள்ளை வேலை களைப்பில் ஏதாவது பேசி இருப்பான். அதை எல்லாம் நினைத்து நீங்கள் வருந்த வேண்டாம்” என்று சொல்லி சமாதானம் செய்ய அந்த நேரத்தில் சமாளித்தாலும் உண்மையில் குமரேசனுக்கு மகனின் செய்கையை எண்ணி வருத்தமே மேலோங்கியது.

“அம்மாடி நாயகி… நீ போய் தம்பி அறையை சுத்தம் செஞ்சுடு. சுவரெல்லாம் சட்டினியும் காபியும் தெறிச்சு இருக்கும் இல்லையா” என்று மகளை வேலை ஏவி அந்தப் பக்கம் அனுப்பிய சுமதி கோவிலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு இளவரசனைத் தேடிப் போனார்.

Facebook Comments Box
Previous PostMannavan Paingili 1
Next PostMannavan Paingili 3
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here