Mannavan Paingili 3

0
2940

இளவரசனைத் தேடி வந்தவருக்கு அதிக சிரமம் வைக்காமல் அவர்களது பண்ணையிலேயே ஒரு ஓரமாக இருந்த கயிற்றுக்கட்டிலில் படுத்து வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான். யாரோ நடந்து வரும் அரவம் கேட்டு திரும்பியவன் நிச்சயம் அந்த நேரத்தில் சுமதியை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவனது முக பாவனையிலேயே தெரிந்தது. வேகமாக படுத்திருந்த கட்டிலை விட்டு எழுந்து நின்றான்.

அவனுக்கு சற்று முன் வரை அந்தப் பெண்ணிடம் கோபமாக பேசிவிட்டு வந்து விட்டோமே என்ற உறுத்தல் இருக்கத்தான் செய்தது. அதை எண்ணி அவன் வருந்திக் கொண்டிருந்த நேரத்தில் தான் சுமதி வந்தது. அவரது முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் குற்ற உணர்வுடன் தலையை குனிந்து கொண்டான்.

“உங்க கிட்டே கொஞ்சம் பேசலாம்னு வந்தேன் தம்பி பேசலாமா?” என்று சுமதி அனுமதி வேண்ட, மறுப்பின்றி அவன் தலை தானாகவே ஆடியது.

“நாங்க இங்கே வந்தது உங்களுக்கு தொந்தரவு தான்னு எங்களுக்குத் தெரியும். இருந்தும் எனக்கு வேற வழி தெரியலை. என்னோட கணவர் இறந்து போன பிறகு வயசுப் பெண்ணை வச்சுக்கிட்டு தனியா அந்த ஊரில் நிம்மதியா இருக்க முடியும்னு எனக்கு தோணலை. அந்த ஊரில் ஒரு முரடன் வேற எப்பப்பாரு என்னோட பொண்ணுகிட்டே வம்பு செஞ்சுகிட்டே இருப்பான். அவங்க அப்பா இருந்தவரை அடக்கி வாசிச்சவன், அவர் போன பிறகு அவனோட ஆட்டம் எங்களால தாங்க முடியலை.” என்றவர் அடுத்ததாக அந்த ராசுவைப் பற்றி அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டு அவனது ஆத்திரம் பன்மடங்காக பெருகியது.

“வயசு பொண்ணை நல்ல படியா ஒருத்தனுக்கு கட்டிக் கொடுக்கிறவரை அவளை பத்திரமா பார்த்துக்கணுமே… அது தான் அண்ணன் கூப்பிட்டதும் உடனே கிளம்பி வந்துட்டேன். மத்தபடி பணம் காசுக்கு ஆசைப்பட்டு எல்லாம் வரலை…” என்று அவர் குரல் கம்மத் தொடங்க இளவரசன் பதறிப் போனான்.

“அ..அப்படி எல்லாம் இல்லை”

“இல்லை தம்பி… நான் பேசி முடிச்சிடறேன்… அவ எங்களுக்கு ஒரே பொண்ணு…நாங்க அவளை அதட்டிக் கூட ஒரு வார்த்தை பேசினது இல்லை. உங்களுக்கு கோபம் வந்தா… திட்டணும்னு தோணினா என்னைத் திட்டுங்க… அவளைத் எதுவும் சொல்லாதீங்க.. என்னால தாங்கிக்க முடியாது.” என்று அவர் கண்களில் கண்ணீரோடு சொல்லி முடிக்க வேகமாக அவரின் அருகில் வந்து அவர் கைகளைப் பற்றிக் கொண்டான் இளவரசன்.

“மன்னிச்சுக்கோங்க அத்தை… ஏதோ கோபம்… மத்தபடி உங்க பொண்ணு மேலயோ, உங்க மேலயோ எனக்கு எந்த வருத்தமும் இல்லை… இனி இப்படி நடக்காது” என்று அவன் உத்திரவாதம் கொடுக்க சுமதியோ அவனுடைய பேச்சின் முன் பாதியை மட்டும் பிடித்துக்கொண்டு தொடர்ந்து பேசினார்.

“என்ன கோபம் தம்பி? கண்டிப்பா எங்க மேல தான் உங்க கோபம் இல்லையா?”

“அச்சச்சோ.. இல்லை அத்தை… அப்பா மேல தான்…” என்று சொல்லத் தொடங்கியவன் தன்னுடைய சிறுபிள்ளை தனமான கோபத்தை எப்படி அவரிடம் சொல்வது என்று எண்ணி மௌனமாக இருந்து விட சுமதி சோகையாக சிரித்தார்.

“உன் அப்பா மேல உனக்கு வந்த கோபத்திற்கும் காரணம் நாங்க தானே?”

“…”

“உனக்கு தொந்தரவாக இருந்தால் சொல்லிடு தம்பி… நாங்க நாளைக்கே வேற ஊரைப் பார்த்து கிளம்பிடறோம். பணம் பிரச்சினை இல்லை. என்னோட கணவர் அதெல்லாம் வேண்டிய மட்டும் விட்டுட்டு போய் இருக்கார். இங்கே நாங்க வந்ததே பாதுகாப்புக்காக தான்.”

“அ..அதெல்லாம் வேண்டாம் அத்தை.. நீங்க இனி இங்கேயே இருங்க… எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை” என்று வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லி வைத்தான். இன்முகத்துடன் பேசும் அவரின் முகத்தை வாட வைக்கப் பிடிக்காமல் அவ்வாறு பொய்யுரைத்தான்.

உண்மையில் அவனுக்கு அவர்கள் அங்கே தங்குவது பிடிக்கவில்லை தான். ஆயினும் என்ன செய்வது அப்பா செய்த ஏற்பாடு. மறுத்து பேசினால் அப்பாவின் மனதும் புண்படக் கூடுமே என்று எண்ணியவனாக அவ்வாறு கூற அவனது மனதின் மூலையில் அப்போதைக்கு அந்தக் கோபம் ஒதுக்கி வைக்கப்பட்டது. பின்னாளில் அது வெடித்துக் கிளம்பும் என்று தெரிந்து இருந்தால் அவன் அப்பொழுதே அதைப் பற்றிக் கூறி இருப்பான். ஆனால் விதியின் விளையாட்டுத் தான் பல விசித்திரங்கள் நிறைந்தது ஆயிற்றே.

இனி எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையுடன் சுமதியும், இனி இவர்கள் இருவரையும் தன்னுடைய வீட்டில் கொஞ்ச நாட்கள் சகித்துத் தான் ஆக வேண்டும் அதன் பிறகு ஏதாவது ஒரு வழி செய்யலாம் என்ற வெறுப்புடன் இளவரசனும் தங்களது வீட்டை நோக்கி பயணித்தனர்.

Facebook Comments Box
Previous PostMannavan Paingili 2
Next PostMannavan Paingili 4
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here