Mannavan Paingili 4

0
2822

அத்தியாயம் 4

எப்பொழுதும் போல அதிகாலையில் கண் விழித்த இளவரசன் வழக்கம் போல வீட்டு வாசலை தண்ணீர் தெளித்து பெருக்குவதற்காக வாளியில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு வாசலுக்கு சென்றான். அந்த வீட்டைப் பொறுத்தவரை பெண்கள் வேலை என்று எதுவுமே கிடையாது. எல்லா வேலையையுமே குமரேசனும், இளவரசனும் பகிர்ந்து செய்வது தான் வழக்கம்.

முதல் நாள் தந்தையை வருத்தியதால் அவரின் மனதை குளிர்விக்க எண்ணியவன் அவருக்கு முன்பாக எழுந்து வாசலுக்கு கோலம் போட விரைய, அங்கே அவனுக்கு முன்பாகவே எழுந்து ஒரு அழகிய கோலத்தை போட்டு முடித்திருந்தாள் நாயகி.

அவள் கோலம் போட்டு முடித்து விட்டு நிமிரவும், கையில் வாளியுடன் இளவரசன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. தூக்கக் கலக்கத்துடன் பரட்டைத் தலையைக் கூட சீவாமல், ஒரு கையில் வாளியுடனும், மறுகையில் துடைப்பத்துடன் அவன் நின்று கொண்டு இருந்த கோலம் கண்டு தன்னையும் அறியாமல் சிரித்து விட்டாள் நாயகி.

“என்ன மச்சான்… இதெல்லாம் எதுக்கு நீங்க செய்றீங்க? இனி இங்கே இருக்கிற வரை இதெல்லாம் நானும் ஆத்தாவும் பார்த்துக்கிடுவோம்… நீங்க போய் உறங்குங்க” என்று அவள் வெகுளியாக சொல்ல முதல் நாள் சுமதி அவனுக்கு எடுத்து சொல்லிய பாடங்கள் அனைத்தும் அந்த நிமிடம் காற்றோடு காற்றாக கலந்து போய்விட்டது.

‘என்னுடைய வீட்டில் இருந்து கொண்டு என்னையே கேலி செய்து சிரிக்கிறாளே’ என்று எண்ணி வெகுண்டவன் அவள் அழகாக போட்டிருந்த கோலத்தின் மீது தன்னுடைய கையில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை ஊற்றி விட்டு, வாளியை ஓங்கி தரையில் அடித்து விட்டு நிற்காமல் விடுவிடுவென தன்னுடைய அறைக்குள் வந்து விட்டான்.

அறைக்குள் வந்து சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகே அவனுக்கு தான் செய்த செயல் என்னவென்று புரிந்தது.

‘சே! எவ்வளவு அழகாக கோலம் போட்டு இருந்தாள்… நானும் அப்பாவும் இது வரை வாசலில் கோலம் என்ற பெயரில் எதையாவது கிறுக்கி வைத்து விட்டு வருவோம். இன்று அப்படி இல்லாமல் எத்தனை அழகாக போட்டு இருந்தாள்… நன்றாக யோசித்துப் பார்க்கையில் மயில் கோலம் வரைந்து அதில் வண்ணப் பொடிகளை அவள் தூவிக் கொண்டிருந்ததும், அவளது கன்னத்தில் சிகப்பும், பச்சையுமாக வண்ணப் பொடிகள் அவளுக்கே தெரியாமல் பட்டிருந்ததும் இப்பொழுது அவனது நினைவில் வந்து போனது.

அது அத்தனையையும் தாண்டி விடியற்காலை நேரத்தில் தூங்கி எழுந்த முகத்துடன் இருந்தாலும் பளிச்சென்று குத்து விளக்கைப் போன்ற அழகுடன் நின்ற தருணத்தை  அவனையும் அறியாமல் அவன் மனப்பெட்டகத்தில் சேமித்து வைத்துக் கொண்டான்.

‘நேத்து அவங்க அவ்வளவு தூரம் சொல்லியும் மறுபடி இப்படி நடந்துக்கிறேனே.. நல்லவேளை யாரும் பார்க்கல… இனி அந்த திமிர்ப் பிடித்தவளிடம் பேசவே கூடாது… பேச்சு என்ன அவளின் பார்வையில் கூடப் படக்கூடாது’ என்று அவசர உறுதிமொழி ஒன்றை எடுத்தவன் வேகமாக குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.

குளித்து முடித்ததும் காலை உணவை செய்வதற்காக சமையல் கட்டிற்குள் நுழைய அங்கே அவனுக்கு முன்பாக சுமதியும், அவளும் இருந்தனர். அவர்கள் வீட்டு சமையல்கட்டில் இருந்து அப்படி ஒரு மணம் வந்ததாக அவனது நினைவிலேயே இல்லை. எப்பொழுதும் காலையில், மதியத்திற்கும்  கேப்பங்களியும் இரவில் ரசம் சாதம் செய்து பருப்பு துவையலோ அல்லது சுட்ட அப்பளத்தையோ வைத்துக் கொண்டு இரவு உணவை முடித்து விடுவார்கள்.

இன்று என்னவென்றால் சமையல் கட்டில் இருந்து வரும் மணம் நாக்கின் நரம்புகளை சுண்டி இழுக்கத் தொடங்கியது.

அதே நேரம் மனதின் ஒருபுறம் வீம்பும் வந்தது. ‘அந்த திமிர்ப்பிடித்தவள் சமைத்ததையா சாப்பிடுவது? அதுவும் இல்லாமல் நானும் அப்பாவும் எப்பவும் காலையில் கேப்பங்களி தானே சாப்பிடுவோம்… இது என்ன புதுப் பழக்கம்? என்னோட வீட்டில் இருந்தா என்னோட இஷ்டத்துக்கு தானே இருக்கணும்…. இவங்க இஷ்டத்துக்கு என்னோட வீட்டு பழக்க வழக்கங்களை மாத்த நான் ஒரு போதும் அனுமதிக்கவே மாட்டேன்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் வேகமாக அவர்களின் முன்னால் போய் நின்றான்.

“என்ன நடக்குது இங்கே?”

“வாங்க தம்பி… காலையில் சாப்பிட வெண் பொங்கலும், இட்லியும் செஞ்சு இருக்கேன். சூடா சாப்பிடுங்க… நான் போய் அண்ணனைக் கூட்டிட்டு வர்றேன்” என்று சொல்லியபடியே வெளியே சென்றவர், மகளுக்கு கண்ணைக் காட்ட அவள் தயங்கி தயங்கி தனக்கு பரிமாற முன்வருவது தெரிந்தது.

அவள் தனக்கு உணவு பரிமாறத் தயங்கியதால் அவனுக்கு கோபம் வந்ததா அல்லது தன்னுடைய வீட்டில் அவர்கள் இஷ்டத்திற்கு எல்லாவற்றையும் மாற்றுகிறார்கள் என்பதால் அவனுக்கு கோபம் வந்ததோ… அது அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

“என்னோட வீட்டில் இந்தப் பழக்கம் எல்லாம் கிடையாது” என்றான் மொட்டையாக.

அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் அவள் அவனுக்கு உணவை எடுத்து வைப்பதில் கண்ணாக இருக்க, அதில் அவனுக்கு கோபம் இன்னும் அதிகரித்தது.

‘திமிர்.. திமிர் உடம்பெல்லாம் திமிர்… நிமிர்ந்து கூட பார்க்க மாட்டாளா என்னை ’என்று பல்லைக் கடித்தவன் தொடர்ந்து பேசினான்.

“இது என்னோட வீடு… இங்கே எல்லாமும் என்னோட இஷ்டப்படி தான் நடக்கும்… நடக்கணும்… உங்க இஷ்டத்துக்கு நீங்க சமைச்சதை எல்லாம் நான் சாப்பிட முடியாது. எனக்கு தினமும் காலையில் கேப்பங்களி சாப்பிட்டுத் தான் பழக்கம்… அப்பாவுக்கும் அதுதான் பிடிக்கும்” என்று அவன் பேசிக் கொண்டே போக தந்தையின் குரல் கேட்டு அவசரமாக பேச்சை நிறுத்திக் கொண்டான்.

“அட.. அட.. என்னோட வீட்டில் இப்படி ஒரு வாசனையா? வீட்டையே தூக்குது போ… சுமதி உன்கிட்டே சொல்றதுக்கு என்ன? அரசி போனதுக்கு அப்புறம் எனக்கு வாய்க்கு ருசியா எதையும் சாப்பிடவே பிடிக்கலை. ஆனா இவன் வளர வளர பிள்ளை ஏங்கிட கூடாதேன்னு அக்கம்பக்கம் கேட்டு எத்தனையோ முறை சமைக்க முயற்சி செஞ்சு இருக்கேன். ஆனா எதுவுமே சரியா வந்தது இல்லை. சமைக்கும் பொழுது ஏதாவது ஒரு நிமிஷம் கண்டிப்பா அரசி நினைப்பு வரும்… அவ்வளவு தான். அன்னைக்கு தீஞ்சி போன சாப்பாடு தான்.

அதுக்கு அப்புறம் தான் இது சரியா வராதுன்னு தினமும் கேப்பங்களி மட்டும் செஞ்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். ஞாயிற்றுக்கிழமை மட்டும் நம்ம கம்மாய்ல மீன் பிடிச்சு இவனுக்கு எப்படியோ குழம்பும் வறுவலும் செஞ்சு கொடுத்திடுவேன். இவனும் என்னோட சிரமத்தை புரிஞ்சுக்கிட்டு வகை வகையாய் செஞ்சு கொடுக்க சொல்லி கேட்டது இல்லை.

மத்தவங்க வீட்டில் தினமும் போய் சாப்பாட்டில் சந்தேகம் கேட்க எனக்கு ரொம்பவே தயக்கமா இருக்கும். அதனால எனக்குத் தெரிஞ்ச நாலு சமையலை வச்சே இத்தனை வருசத்தை ஓட்டிட்டேன்… இவனும் வாயே திறக்காம சாப்பிட்டுட்டு போய்டுவான்” என்று சொல்லி அவர் சிரிக்க மற்றவர்களும் அவனுடன் இணைந்து நகைத்தார்கள் இளவரசனைத் தவிர…

இளவரசனுக்கு அவர் வேடிக்கையாக சொன்ன சம்பவங்களுக்கு பின்னால் மறைந்து இருக்கும் தந்தையின் வலி மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. இப்பொழுது வந்து அண்ணா என்று உருகும் சுமதி அத்தை முன்பே ஏன் வரவில்லை?

பச்சிளம் குழந்தையான தன்னை வைத்துக் கொண்டு மற்றவர்களிடம் உதவி கேட்கக் கூடத் தயங்கி ஒற்றை மனிதராய் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் தன்னுடைய தந்தை என்ற எண்ணமே அவனது ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. அவனின் கோபத்தை எல்லாம் நியாயப்படி பார்த்தால் சுமதியின் மீது தான் காட்டி இருக்க வேண்டும். ஆனால் அவனுக்கோ நாயகியின் மீதுதான் கோபம் வந்தது. அது ஏன் என்ற காரணம் தான் அவனுக்கு அப்பொழுது புரியவில்லை.

அவர்களின் சமையலை தானும் சாப்பிடக்கூடாது ,தந்தையையும் சாப்பிட விடக்கூடாது என்று நினைத்தவன் தந்தைக்கு பரிமாற முன்வந்த சுமதியைத் தடுத்தான்.

“அவருக்கு அதெல்லாம் வைக்காதீங்க… அப்பாவுக்கு எப்பவுமே கேப்பங்களி தான் பிடிக்கும். இந்த சாப்பாடெல்லாம் பிடிக்காது.” என்று வெறுப்பாக சொல்ல அவனை முந்திக்கொண்டு பேசினார் குமரேசன்.

“இளா.. அப்படி எல்லாம் இல்லை தம்பி… எனக்கு வகை வகையாய் சமைக்கத் தெரியாது. அதனால தினமும் களி செஞ்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம். இப்ப தான் சுமதி வந்துடுச்சே… இனி வகை வகையாய் சாப்பிட்டு… செத்துப் போன என்னோட நாக்குக்கு உயிர் கொடுக்க வேண்டியது தான் என்று சொன்னவர் வேகமாக இலைக்கு முன்னே அமர்ந்து விட அதற்கு மேலும் அவரைத் தடுக்க மனம் வரவில்லை இளவரசனுக்கு.

அடுப்பில் இருந்து எடுத்த சூட்டோடு சுட சுட இலையில் பரிமாறிய இட்லியும், சொந்தமாக வளர்த்து வரும் பசு மாட்டில் இருந்து காய்ச்சி எடுத்த நெய்யினால் செய்த பொங்கலும், சின்ன வெங்காயத்தைப் போட்டு பக்குவமாக வைத்த சாம்பாரும், புதினா சட்னியும், தேங்காயை சில்லு சில்லாக மிதக்க விட்டபடி இருந்த பொட்டுகடலை சட்னியும் அவனை ‘வா’ என்று அழைக்க அதை ஒதுக்க முடியாமல், முதல் வாய் சாப்பாட்டை எடுத்து வாயில் வைத்தது மட்டும் தான் அவனது நினைவில் இருந்தது.

அதன் பிறகு நிறுத்தாமல் பகாசுரனைப் போல ஏகப்பட்ட இட்லிகளையும், வெண் பொங்கலையும் உண்டு வயிற்றை நிரப்பிய பின் தான் அவசரமாக நிமிர்ந்து தனக்கு எதிரில் நின்றவர்ளைப் பார்த்தான்.

Facebook Comments Box
Previous PostMannavan Paingili 3
Next PostVanavil Sirpame – Book
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here