Mannavan Painkili 11 & 12

2
2867

அத்தியாயம் 11

அங்கே மருத்துவ மனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் சுமதி…வாசலில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்து இருந்த குமரேசன் இவர்களைப் பார்த்ததும் விருட்டென்று எழுந்து நாயகியின் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டார்.

“என்ன நாயகி முகமெல்லாம் வெளுத்துப் போய் இருக்கு…அம்மாவுக்கு ஒண்ணுமில்லை…லேசான மயக்கம் தான்”என்று சொன்னவரின் பேச்சுக்கள் எதுவும் அவளது காதில் விழுந்ததாகவே தெரியவில்லை வெறித்த பார்வையுடன் நின்று கொண்டிருந்தாள்.

அவளை அங்கே இருந்த சேரில் அமர வைத்து விட்டு இளவரசனை மட்டும் தனியாக அழைத்துக் கொண்டு வந்தார் குமரேசன்.

“இளா…இந்த டாக்டருங்க என்னென்னவோ சொல்றாங்கடா…சுமதிக்கு இதயத்தில் ஏதோ அடைப்பு இருக்குதாம்…உடனடியா ஆபரேஷன் செஞ்சே ஆகணுமாம்.இல்லேன்னா உயிருக்கே ஆபத்தாகி விடும்னு சொல்லி இருக்காங்க”

“உடனே செஞ்சிட சொல்லுங்கப்பா…பணம் எவ்வளவு செலவானாலும் சமாளிச்சுக்கலாம்.”

“நானும் அதையே தான்டா டாக்டர் கிட்டே சொன்னேன்.ஏதோ டெஸ்ட் எல்லாம் எடுத்து இருக்காங்க.ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் வந்து சொல்றேன்னு சொல்லி இருக்கார்.உங்க அத்தை வேற இன்னும் கண்ணு முழிக்கல…அது வேற பயமா இருக்குடா.பாரு..அந்த புள்ள முகமே சரியில்லை.ஏற்கனவே அப்பனை இழந்துடுச்சு.அவங்க அம்மாவை நாம எப்படியும் மீட்டுக் கொடுத்திடணும் தம்பி”என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு.

“அப்பா…நீங்க என்னப்பா…அதெல்லாம் அத்தை ஜம்முன்னு எழுந்து உட்கார்ந்துடுவாங்க பாருங்க…”அவரை தேற்றிய படி மெல்ல திரும்பி நாயகியை பார்த்தான்.

வெறித்த பார்வையை கொஞ்சம் கூட மாற்றாமல் அப்படியே இருந்தாள் அவள்.அவனுக்கே அவளை பார்க்கையில் கொஞ்சம் பாவமாக இருந்தது.

‘கொஞ்ச நேரம் முன்னாடி எப்படி வாயடித்தாள்…இப்போ இப்படி இருக்காளே’ என்று அவளுக்காக வருந்தினான்.

“சார்..பேஷன்ட் முழிச்சுட்டாங்க…நீங்க போய் பார்க்கலாம்.ரொம்ப நேரம் இருந்து அவங்களை தொந்திரவு செய்யாதீங்க”என்று நர்ஸ் சொல்ல வேகமாக மூவரும் உள்ளே சென்றார்கள்.

கட்டிலில் களைத்துப் போன தோற்றத்துடன் சுமதி படுத்து இருந்தார்.அவர்களைப் பார்த்ததும் முகத்தில் பொருத்தி இருந்த ஆக்சிஜன் மாஸ்கை கழட்ட முயல மூவருமே பதறிப் போய் அதை தடுத்தனர்.

அவளின் இருபுறமும் இளவரசனும்,நாயகியும் நின்று கொண்டு அவரது தோளை ஆதரவாக பிடித்துக் கொண்டார்கள்.

“என்னடா பயந்துட்டியா…அப்பாவை மாதிரி அம்மாவும் உன்னை விட்டு போய்டுவேன்னு நினைச்சுட்டியா?”என்று லேசாக திணறிய குரலில் பேச நாயகி தன்னை மறந்து தாயைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

சார்…டாக்டர் உங்களை வர சொன்னாங்க”என்று நர்ஸ் சொல்ல இளவரசனும், குமரேசனும் கிளம்பி அவரை பார்க்க சென்றனர்.அவர் சொன்ன தகவல் தான் அவர்களுக்கு கொஞ்சம் கவலையை அளித்தது.

“இதோ பாருங்க சார்…அவங்களுக்கு ஹார்ட் அட்டாக்…இப்போ ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டாங்க.ஆனாலும் அவங்க நிலைமை இன்னும் மாறலை.அவங்க இதயத்தில் மூணு இடத்தில் ஓட்டை இருக்கு.அதை சரி பண்ண உடனடியா ஆபரேஷன் செஞ்சே ஆகணும்..”

“அதுக்கென்ன டாக்டர் செஞ்சிடுங்க…பணத்தை பத்தி ஒண்ணும் யோசிக்க வேண்டாம்” என்றான் இளவரசன் அவசரமாக.

“ம்ம்ம்…அதையே தான் இவரும் சொன்னார்.ஆனா பிரச்சினை இப்போ அது கிடையாது.இந்த ஆபரேசனை தாங்கக் கூடிய சக்தி அவங்க உடம்புக்கு இல்லை.வயசானவங்க இல்லையா? ஸோ…ஆபரேஷன் செஞ்சாலும் அவங்க பொழைக்க ஐம்பது சதவீதம் தான் வாய்ப்பு இருக்கு”

“டாக்டர்… வேற ஏதாவது பெரிய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் பார்த்தா அவங்களை காப்பாத்திட முடியும் இல்லையா”

“சார் எங்கே போனாலும் உங்களுக்கு இதே பதில் தான் வரும்…அதனால நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க…உங்களுக்கு சம்மதம்னா இங்கேயே ஆபரேஷன் செஞ்சிடலாம்.ஆனா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஏற்பாடு செய்ங்க… அது தான் அவங்களுக்கு நல்லது”என்று சொல்லிவிட ஆண்கள் இருவரும் அதிர்ந்து போயினர்.

எதற்கும் இருக்கட்டும் என்று சுமதியின் மருத்துவ அறிக்கையை இளவரசன் தனக்குத் தெரிந்த வேறு சில மருத்துவர்களிடம் காட்டிக் கேட்க,அவர்களும் அதே கருத்தைக் கூற வேறுவழியின்றி ஆபரேசன் செய்ய வேண்டியதைப் பற்றி மெல்ல சுமதியிடமும்,நாயகியிடமும் தெரிவித்தனர்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட சுமதி,இறுதியில் ஆபரேஷன் செய்வதற்கு மட்டும் ஒத்துக் கொள்ளவே இல்லை.

“முடியாது அண்ணா..எத்தனை நாள் இருக்கிறேனோ பரவாயில்லை இருந்துவிட்டு போகிறேன்.ஆபரேஷன் எல்லாம் செய்து கொள்ள முடியாது”என்று மறுத்து விட எல்லாருமே அவரை எப்படி சம்மதிக்க வைப்பது என்று புரியாமல் முழித்தனர்.

“என்ன அத்தை ஆபரேஷனை நினைச்சு பயப்படுறீங்களா?”என்று இளவரசன் நேரடியாக கேட்க ஒரு நிமிடம் அமைதி காத்தவர் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினார்.

“ஆமா தம்பி…பயமாத் தான் இருக்கு…ஒத்தைப் பெண்ணை வச்சு இருக்கேன்…அவளுக்கு ஒரு நல்லதை செஞ்சு பார்க்காம போயிட்டேன்னா அப்புறம் என்னோட கட்டை வேகாது தம்பி” என்று சொல்ல நாயகி வாய் பொத்தி அங்கேயே அழ ஆரம்பித்தாள்.

“தம்பி கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க…என்னோட பொண்ணை நீங்க கல்யாணம் செஞ்சுக்கறீங்களா? இதுக்கு சம்மதம்னா சொல்லுங்க நான் உடனே ஆபரேஷன் செஞ்சுக்குறேன்”

“அது..அது எப்படி நான்…”

“ஏன் தம்பி தயங்கறீங்க? என்னோட பொண்ணுக்கு எங்க வசதிக்கு நகையும்,சீரும் செஞ்சிடுவேன்.அது தவிர ஊரில் இருக்கிற நிலம்,வீடு எல்லாமே அவளுக்குத் தான்”

“ஐயோ…அத்தை பணத்தைப் பத்தி நான் யோசிக்கலை…ஆனா…இந்த கல்யாணம் சரியா வராது அத்தை”என்றான் எங்கோ பார்வையை பதித்தபடி..

நாயகியின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.அவளுக்குத் தான் நன்றாகத் தெரியுமே…இளவரசனுக்குத் தன்னைப் பிடிக்காது என்று…

“ஏன் தம்பி…ஒரு காரணம் சொல்லுங்க…இந்த ஊருக்கு வருவதாக நான் முடிவெடுத்ததற்கு முக்கிய காரணம் அண்ணன், அவளை உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு நாயகியை தன்னோட மருமகளாக ஆக்கிறேன்னு சொல்லவும் தான் வயசுப் பொண்ணைக் கூட்டிக்கிட்டு உங்க வீட்டுக்கு வந்தேன்.அவளோட படிப்பு முடிஞ்சதும் உங்க கல்யாணத்தை வச்சுக்கலாம்னு நினைச்சோம்.ஆனால் கடவுள் திட்டம் வேற மாதிரி இருக்கு போல”என்று சிரமத்தின் ஊடே பேசி முடித்தார் சுமதி.

இந்த தகவல் அவனுக்குப் புதிது. ‘அப்பா இதைப் பற்றி என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே’

“அதெல்லாம் சரி வராது அத்தை…உங்க பொண்ணுக்கு வேற நல்ல பையனா பார்த்து…”

“டேய்…வாயை மூடிக்கிட்டு சும்மா இருடா…சுமதி சொன்ன மாதிரி இந்த வீட்டுக்கு அவங்களை அழைச்சுக்கிட்டு வரும்பொழுதே அவ தான் என்னோட மருமகன்னு வாக்கு கொடுத்து தான் இங்கே கூட்டிட்டு வந்தேன்.நீ தான் அவளை கல்யாணம் செஞ்சுக்கிற”என்று சொன்னவர் இளவரசனை இழுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தார்.

“ஏன்டா இளவரசா…கொஞ்சமாவது அறிவோட தான் பேசறியா? உடம்பு முடியாம இருக்கிறவங்க கிட்டே இப்படித் தான் மூஞ்சியில அடிக்கிற மாதிரி பேசுவியா?”

“அதுக்காக அவங்க பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க முடியுமா?”

“ஏன் முடியாது? இது நாங்க இரண்டு பேரும் ஏற்கனவே எடுத்த முடிவு தான்…”

“யாரைக் கேட்டு எடுத்தீங்க?”

“என்னடா ரொம்ப பேசுற…நல்லா கேட்டுக்கோ இளவரசா …இப்போ நீ உள்ளே வந்து கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ற…இல்லைன்னா கொடுத்த வாக்கை காப்பாத்த முடியலையேன்னு நான் நாண்டுக்கிட்டு செத்துடுவேன்”என்று ஆத்திரத்துடன் சொன்னார்.

“அப்பா..என்ன பேச்சு பேசறீங்க?”

“பின்னே என்னடா கொடுத்த வாக்கை காப்பாத்த முடியலேன்னா நான் எதுக்கு அப்புறம் உயிரோட இருக்கணும்?”என்று அமைதி இழந்து கத்தியவரை வெறுமையாக பார்த்தவன் இயந்திரம் போல நடந்து அறையின் உள்ளே வந்து பேசினான்.

“எனக்கு சம்மதம் அத்தை”என்றவனின் பார்வை நாயகியை மட்டும் ஒருவித மரத்த தன்மையுடன் தழுவியது.

அத்தியாயம் 12

அடுத்து வந்த பதினைந்தே நாளில் அவசர அவசரமாக முஹூர்த்தம் குறிக்கப்பட்டு அவர்களின் குல தெய்வக் கோவிலில் திருமணத்தை நடத்துவது என்றும் முடிவு செய்து ஊரில் உள்ள பெரியவர்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்கு மாற்றிய பிறகே சுமதி ஆபரேஷனுக்கு சம்மதித்தார்.

ஆபரேஷனின் பொழுது மற்றவர்களை கொஞ்சம் பயமுறுத்தி விட்டே மீண்டு வந்தார் சுமதி.அவர் அப்பொழுது தான் தேறி வந்து இருந்ததால் அவரை சக்கர நாற்காலியில் அமர வைத்துப் பார்த்துக் கொண்டனர்.கல்யாண வேலை எல்லாவற்றையும் ஏதோ ஒரு வித இயந்திரத் தன்மையுடன் செய்து கொண்டிருந்தான் இளவரசன்.

அவனுக்கு கொஞ்சமும் குறையாமல் அதே நிலையில் தான் நாயகியும் இருந்தாள்.ஆனால் அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. தன்னுடைய முகம் வாடி இருப்பதைப் பார்த்தால் தாயின் மனம் வருந்துமே என்று முயன்று முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டாள்.

ஆபரேஷன் நல்ல படியாக முடிந்து விட்டாலும் இனி சுமதியை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தைப் போலத்தான் கையாள வேண்டும் என்று டாக்டர் சொல்லி இருந்தது அவளுக்கு நன்றாகவே நியாபகம் இருந்தது.

யாருக்கும் தெரியாமல் கிணற்றடியில் வேண்டுமட்டும் அழுது கரைந்தாள் நாயகி.அப்படி அவள் அழுதது அவ்வபொழுது இளவரசன் தன்னுடைய அறையில் இருந்து பார்த்தாலும் அவளிடம் சென்று பேச முயற்சி செய்யவில்லை.தனக்குள்ளாகவே ஒருவிதமாக இறுகிப் போன  நிலையில் இருந்தான் அவன்.

மந்திரங்கள் முழங்க ஒரு சுபயோக சுப தினத்தில் நாயகியின் கழுத்தில் தாலியை கட்டி தன்னுடைய மனைவியாக்கிக் கொண்டான் இளவரசன்.தாலியை அவள் கழுத்தில் அணிவிக்கும் பொழுது ஒரே ஒரு நொடி மட்டும் இருவர் பார்வையும் ஒன்றாக சந்தித்துக் கொண்டது.இருவரும் அடுத்தவரின் மனநிலையை அவர்களின் கண் வழியே அறிந்து கொள்ளத் துடித்தனர்.இளவரசனின் முகம் இறுக்கமாக இருந்தது,நாயகியின் முகம் கலவரமாக இருந்தது.

அன்று ஹாஸ்பிடலில் திருமணத்திற்கு சம்மதம் சொன்ன பிறகு இன்று தான் இருவரும் நேருக்கு நேராக பார்த்துக் கொள்கின்றனர்.கல்யாணத்துக்கு முன்னாடி இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்க வேண்டாம் என்று ஊரில் யாரோ சொல்ல,அதன் பிறகு இரவு நேரங்களில் மட்டும் அவன் பண்ணையிலேயே தங்கிக் கொண்டான்.

வீதந்தையிடம் பேச வேண்டிய அவசியம் இருந்தாலுமே கூட அங்கே போவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தான் இளவரசன்.அவனது கோபம் புரிந்தாலும் குமரேசன் பெரிதாக அதை கண்டு கொள்ளவில்லை.கல்யாணம் முடிந்த பின் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணி தன்னைத்தானே தேற்றிக் கொண்டார்.

நாயகியை அவரது மருமகளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற முடிவு அவர் ஏற்கனவே எடுத்தது தான்.ஆரம்பத்திலேயே இளவரசனிடம் அதை சொல்லி இருந்தால் இன்னுமும் பெரிதாக பிரச்சினை செய்வான் என்று எண்ணியே வெறுமனே அவர்களை அழைத்து வருவதாக சொல்லி இருந்தார்.

அதனால் இளவரசனது இந்த கோபம் அவர் எதிர்பார்த்த ஒன்று தான் என்பதால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.நேரா நேரத்திற்கு சாப்பாட்டை அவரே கொண்டு போய் கொடுத்து விட்டு வருவார்.அதை வாங்கி சாப்பிட்டாலும் இயல்பாக தந்தையிடம் பேச மறுத்து விட்டான் இளவரசன்.

திருமணம் முடிந்த பிறகு அவனது கோபம் தீர்ந்து விடும் என்று அவர் எண்ணி இருக்க,அவனுக்கு உள்ளேயே கனன்று கொண்டு இருந்த ஆத்திரத்தை அவர் உணராமலே போனார்.ஒருவேளை அவர் கொஞ்சம் தன்மையாக எடுத்து சொல்லி நிலைமையை புரிய வைத்து இருந்தால் பின்நாளில் ஏற்படப் போகும் விபரீதங்களை தடுத்து இருக்கலாம்.

பெரிதாக எந்த ஆடம்பரமும் இன்றி எளிமையான முறையில் அவர்களது திருமணம் நடந்து முடிந்தது.மணமக்கள் இருவருக்கும் வீட்டிற்கு அழைத்து வந்து பாலும்,பழமும் கொடுத்தனர்.சுமதியின் உடல்நிலையைக் கருதி சொந்தங்கள் அனைவரும் இருந்த வேலைகளை ஆளுக்கு ஒன்றாக பகிர்ந்து கொள்ள சீக்கிரத்தில் எல்லா வேலைகளும் முடிந்து விட்டது.நாயகி தாயின் அறையிலேயே சென்று ஓய்வெடுக்க சென்று விட தன்னுடைய அறைக்குள் நுழைந்த இளவரசன் முதன் முறையாக மலைத்துப் போய் அமர்ந்து விட்டான்.அடுத்து என்ன செய்வது என்றே புரியாமல்…

சில நிமிடங்கள் கட்டிலில் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தவன் சட்டென்று போனை எடுத்து தன்னுடைய நண்பனுக்கு சுகுமாரிடம் பேசி அவனது உதவியைக் கோரினான். சுகுமாருக்கு இவனுக்கு நடந்த அவசர திருமணத்தைப் பற்றி எதுவும் தெரியாததால் அவனும் உதவ ஒத்துக் கொண்டதால் அவனது வேலை எளிதானது.

பிரச்சினைக்கு தீர்வு கிடைத்த பின் அவன் மனம் லேசானது.முன்பை விட இப்பொழுது அவன் மனம் அதீத ஆவலுடன் இருந்தது தனிமையில் நாயகியை சந்திக்கும் தருணத்திற்காக…ஆசையினால் இல்லை…தனிமையில் அவளை கடித்து குதறும் தருணத்திற்காக காத்திருக்கத் தொடங்கினான்.

இயல்பிலேயே அழகியான நாயகியை உறவுப் பெண்களின் கேலியால் முகத்தை சிவக்க வைத்துக் கொண்டு இருந்தனர்.கிராமப்புற பெண்களுக்கு கேலி பேசத் சொல்லித் தர வேண்டுமா என்ன? அவளின் காதுகள் கூசி சிவக்கும் அளவிற்கு பேசித் தள்ளினார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.நாயகியும் அவர்களின்  பேச்சினால் காலையில் இருந்து அவளுக்கு ஏற்பட்டு இருந்த இறுக்கமான மனநிலையை விட்டு வெளியே வரத் தொடங்கினாள்.

சந்தன நிற பட்டுப்புடவை அவளது உடலை தழுவி இருக்க, தோளின் இருபுறங்களிலும் வழிந்தோடிய மல்லிகை அவளுக்கு அதிக அழகை கொடுக்க,கழுத்தில் மின்னிய பொன் மஞ்சள் தாலி அவளை ஒரு அப்சரஸாகவே காட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.

என்ன தான் பிடிக்காத திருமணமாக இருந்தாலும்,அந்த நேரத்தில் பெண்ணுக்கு இயல்பாக தோன்றக்கூடிய அச்சமும் நாணமும் போட்டியிட அழகுப் பதுமையாக,கையில் பால் சொம்புடன் குனிந்த தலை நிமிராமல் அறைக்குள் நுழைந்தாள் நாயகி.

ஒரே வீட்டிற்குள் இருந்ததால் எத்தனையோ முறை அந்த அறைக்குள் சென்று இருக்கிறாள்.அப்பொழுதெல்லாம் தோன்றாத ஏதோ ஒரு இனம் புரியா பரபரப்பு அவளைத் தொற்றிக் கொள்ள அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் கால்கள் பின்னிக் கொண்டது அவளுக்கு.

அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டபின் மெல்ல பார்வையை உயர்த்தி பார்த்த அவள் கண்களில் விழுந்தது பட்டு வேஷ்டி சட்டையில் இருந்த கணவனின் கம்பீரமான உருவமே.அவளுக்கு எதிரில் சில அடிகள் இடைவெளி விட்டு கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு அவளையே துளைக்கும் விழிகளுடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.அதுநாள் வரை அவனை முறைத்துக் கொண்டு  இருந்தவளால் அன்று ஏனோ அவனை நிமிர்ந்து பார்க்க கூச்சமாக இருந்தது.

சில பல நிமிடங்கள் அமைதியிலேயே கழிய அவளுக்கு என்ன செய்வது என்று புரியாமல் அங்கேயே நின்று கொண்டு இருக்க, அவன் தன்னுடைய வேலையைத் தொடங்கினான்.

Facebook Comments Box

2 COMMENTS

  1. Nice story madhu.yerkanave nayagiyai verupethittu irukkiran.innum Enna seiya pogirano.next update Padilla avalaga irukkirathu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here