Mannavan Painkili 17

0
2595

அத்தியாயம் 17

மருத்துவமனை வாசலில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தாள் நாயகி. உறவினர்கள் அவளை ஆறுதல் கூறி தேற்ற முயற்சித்தாலும் அதற்கு கொஞ்சமும் பலன் இல்லை. பதட்டத்துடன் வந்த இளவரசனை கண்டதும் வேகமாக ஓடிப் போய் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினாள் நாயகி.

“எனக்கு பயமா இருக்கு மச்சான்… என்னை விட்டுட்டு எங்கேயும் போகாதீங்க” என்று அழுது புலம்பியவளை ஒரு கையால் அணைத்தபடியே மருத்துவமனைக்குள் சென்றான்.

“ஏன்டா இளவரசா…இப்படியா கொஞ்சமும் பொறுப்பில்லாம  உங்க அப்பனை தனியா பண்ணையம் பார்க்க விட்டுட்டு கிளம்பி போவ.. உங்க அப்பனை நேத்து சாயங்காலம் பாம்பு கடிச்சுடுச்சு. அந்த மாரிமுத்து பயலை எங்கேயோ வெளியே அனுப்பி இருந்தார். நல்லவேளை… நம்ம நாயகி தான் அவருக்கு பலகாரம் கொடுக்கப் போனப்போ பார்த்து இருக்கு… அவ மட்டும் இல்லைன்னு வை.. இந்நேரம் உங்க அப்பன் போய் சேர்ந்து இருப்பான்…. போ…முதலில் டாக்டரைப் பார்த்துப் பேசு” என்று உறவினர்கள் அவனை சுற்றி சூழ்ந்து கொண்டனர்.

நாயகியை தன்னுடைய அணைப்பில் இருந்து விலக்காமலே மருத்துவமனைக்குள் அழைத்து போனான். அவனுக்கும் அதிர்ச்சி தான் என்பது அவனது இறுகிய உடல் மொழியிலேயே அவளுக்குப் புரிந்தாலும் அப்பொழுதைக்கு அவனை தேற்ற அவள்  முயலவில்லை.

ஒரு அறையில் குமரேசன் அனுமதிக்கப்பட்டு இருக்க, அவருக்கு பக்கத்து அறையில் சுமதி அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

“மாமாவை பாம்பு கடிச்ச விஷயம் கேள்வி பட்டதும் அம்மா மயங்கி விழுந்துட்டாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு மச்சான்… யாருக்கும் எதுவும் ஆகாது இல்ல” என்று குழந்தை போல முகம் நிறைய தவிப்பை சுமந்தபடி நின்றவளைக் கண்டு அவனுக்கு இரக்கம் தான் வந்தது.

‘இப்படி பயப்படுகிறாளே…ரொம்பவும் தவித்துப் போய் விட்டாள் போல’ என்று எண்ணியவன் அவனது கைகளால் அவளது தோளை அழுத்தி அவளுக்கு தைரியம் கொடுக்க முனைந்தான். இளவரசனின் மனசாட்சி அவனைப் போட்டு வாட்டி வதைத்தது.

‘நீ உடன் இருந்து இருந்தால் இப்படிப்பட்ட ஆபத்து எல்லாம் வந்து இருக்குமா…. உன்னுடைய கோபத்தினால் மட்டும் தான் இப்படி இருவரும் இந்த நிலையில் இருக்கிறார்கள்’ என்று நினைத்தவன் அவளை வெளியே அமர வைத்து விட்டு டாக்டரை பார்த்து விட்டு வந்தான்.

இருவருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று சொன்னாலும் அவர்கள் கண் விழித்து பார்க்கும் வரையில் இளவரசனுக்கும், நாயகிக்கும் நிம்மதியே இல்லை. நாயகியாவது அழுது தீர்த்து விட்டாள்.இளவரசனோ இறுகிப் போய் அமர்ந்து விட்டான்.

முதலில் கண் விழித்த குமரேசனைப் பார்த்ததும் தான் ஆண்பிள்ளை என்பதையும் மறந்து கண்ணீர் விட்டு கதறி அழத் தொடங்கினான் இளவரசன்.

“மன்னிச்சுடுங்கப்பா… என்னாலத் தானே.. இவ்வளவும்..” மகனின் கைகளை வாஞ்சையுடன் பற்றியவர் மெல்ல அவனை தட்டிக் கொடுத்தார்.

“கண்டதையும் நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காதே மன்னவா… எனக்கு ஒண்ணும் இல்லை… ஆமா சுமதி எங்கே?”

“அ..அத்தை…” என்று அவன் தடுமாற…அவனை முந்திக்கொண்டு நாயகி பேசினாள்.

“அவங்க ஓய்வா இருக்காங்க மாமா…”

“ஓ..சரி சரி..அவளை தொந்தரவு செய்ய வேண்டாம்… நீங்க இரண்டு பேரும் ரொம்பவே அசந்து போய் தெரியறீங்க…வீட்டுக்கு போய் குளிச்சுட்டு சாப்பிட்டு வாங்க”என்று அவர் அனுப்பி வைக்க, அங்கிருந்து வெளியே வந்து அடுத்து சுமதியை காண சென்றார்கள்.

மயக்கம் தெளிந்து அப்பொழுது தான் கண் விழித்து இருந்தார் சுமதி. இளவரசனைப் பார்த்ததும் அவர் முகத்தில் அப்படியொரு ஆனந்தம்.

“வந்துட்டீங்களா மாப்பிள்ளை…அண்ணன் எப்படி இருக்கார்?”

“அப்பா நல்லா இருக்கார் அத்தை…”

“நீங்க ஊருப்பக்கம் வரணும்னா நாங்க படுக்கையில் இருக்கணும்  போலவே” என்றார் கொஞ்சம் வருத்தத்துடன்.

“அச்சச்சோ..அதெல்லாம் இல்லை அத்தை… நான் வேலையை ரிசைன் பண்ணிட்டேன். இனி இங்கேயே தான் இருக்கப் போறேன். உங்க எல்லார் கிட்டயும் நேரில் வந்து சொல்லிக்கலாம்ன்னு இருந்தேன். அதுக்குள்ளே இப்படி ஆகிடுச்சு”என்று அவன் சொன்ன பதிலில் அவர் முகம் பூரித்துப் போனது. நாயகி மட்டும் கொஞ்சமும் நம்பிக்கையின்றி அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“நானும் நாயகியும் வீட்டுக்கு போய்ட்டு வந்திடறோம் அத்தை… உங்களுக்கு துணையா நம்ம எதிர்வீட்டு சுப்பு அக்கா இருப்பாங்க” என்று சொன்னவன் அங்கிருந்து நாயகியுடன் வெளியேற… வழியெங்கும் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.

வீட்டிற்குள் நுழைந்ததும் அவனுக்கு குளிப்பதற்கு சுடுதண்ணீர் வைத்து கொடுத்து குளிக்க அனுப்பியவள் அவன் குளித்து வருவதற்குள் மின்னலென அவனுக்கு உணவை தயாரித்து முடித்து இருந்தாள்.

 ‘அதுக்குள்ளே செஞ்சு முடிச்சுட்டாளா’ ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு…

மனதுக்குள் அவளது செய்கைகளை எண்ணிப் பார்த்துக் கொண்டே உடை மாற்றினான் இளவரசன். ‘வெகுதூரம் பயணம் செய்த உடல் அலுப்பு தீருவதற்கு சுடுதண்ணீர் வைத்துக் கொடுக்கிறாள். பசியோடு இருப்பேன் என்று நொடிப் பொழுதில் உணவு தயாரித்து இருக்கிறாள். அவளும் தானே சாப்பிட்டு இருக்க மாட்டாள்’ என்று எண்ணியவன் அவளையும் உண்ண அழைத்தான்.

“வா…தையலு…சேர்ந்து சாப்பிடலாம். நீயும் சாப்பிட்டு இருக்க மாட்ட” என்று அவன் அழைக்க அவளது உடலில் மெல்லிய அதிர்வு… கண்களில் இருந்து வெளியேறத் துடித்த கண்ணீரை அடக்கும் வழி தெரியாது போராடிக் கொண்டு இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

“இப்ப எதுக்கு அழற… அதுதான் இரண்டு பேரும் கண் முழிச்சுட்டாங்களே…” என்று அவன் அதட்ட அவளோ தலையை இடமும் வலமுமாக ஒன்றுமில்லை என்று அசைத்து விட்டு அவனுக்கு பரிமாறிக் கொண்டே தானும் சாப்பிட்டு முடித்தாள்.

அவளுக்கு அவன் பரிமாற, அவனுக்கு அவள் பரிமாற அமைதியாக சாப்பிட்டு முடித்தனர் இருவரும்.

‘அவளை தான் ரொம்பவே வாட்டி இருக்கிறோம் அதனால் தான் இயல்பாக தான் செய்யும் விஷயங்கள் கூட அவளுக்கு கண்ணீரை வரவைக்கின்றன’ என்பது அவனுக்கு புரிந்தது.

குமரேசனுக்கும், சுமதிக்கும் வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு சென்றனர். சுமதிக்கு உணவு ஊட்டுவதற்காக நாயகி சென்று விட இளவரசன் தந்தைக்கு உணவு ஊட்டினான்.

“என் மேல இன்னமும் கோவமாத் தான் இருக்கியா மன்னவா?”

“ம்ச்..அதெல்லாம் இல்லப்பா…நீங்க சாப்பிடுங்க…”

“சாப்பாடு அப்புறம் சாப்பிட்டுக்கலாம்டா… என்னோட மனசுல இருக்கிற விஷயத்தை உன்கிட்டே கொட்டிட்டா எனக்கு கொஞ்சம் பாரம் குறையும்.”

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்..இப்ப….”

“இல்லை மன்னவா..எனக்கு பயமா இருக்கு…எமலோகம் வரைக்கும் போய் மீண்டு வந்து இருக்கேன்.எனக்கு ஏதாவது ஆகிட்டா அப்புறம் உனக்கு எதுவுமே தெரியாமலே போய்டும்.”என்று  கூறி அவனை கலங்கடித்து விட்டு தொடர்ந்து பேசினார்.

“சுமதி என்னோட கூடப் பிறந்த தங்கச்சி இல்லை மன்னவா… இதுவரை என்னையும், உன்னையும் தேடி நம்ம வீட்டுக்கு சொந்தம்னு யாருமே வந்தது இல்லை. ஏன் தெரியுமா? நானும் உன்னோட அம்மாவும் காதலிச்சு கல்யாணம் செஞ்சுகிட்டோம். எங்களுக்கு அந்த நேரத்தில் ரொம்ப உதவியா இருந்து எங்க கல்யாணத்தை நடத்தி வச்சது சுமதியும், அவ புருசனும் தான்.

கோவிலில் தாலி கட்டி உங்க அம்மாவை கூட்டிக்கிட்டு நான் இந்த ஊருக்கு வந்த பிறகு ஒரே ஒரு முறை மட்டும் தான் சுமதி கிட்டே இருந்து எனக்கு லெட்டர் வந்துச்சு. உங்க அம்மா வழி சொந்தங்களும் சரி,என்னோட சொந்தங்களும் சரி அவங்க மேல ரொம்பவும் கோபமா இருக்கிறதால சொந்த ஊரை விட்டு வேற ஊருக்கு போகப் போறதா எழுதி இருந்துச்சு. அதுக்கு அப்புறம் சுமதி கிட்டே இருந்து எந்த லெட்டரும் எனக்கு வரலை.

பல வருஷம் கழிச்சு சுமதி புருசன் இறந்தது கூட எனக்குத் தெரியாது. ஒருநாள் எதேச்சையா வெளியூரில் தான் சுமதியை மறுபடியும் எதேச்சையா சந்திச்சேன்.

கணேசன் இறந்தது என்னவோ லாரி மோதி தான். ஆனா என்னால அதை இயற்கையான ஒரு நிகழ்வா பார்க்க முடியலை.அதற்குக் காரணம் அது என்னுடைய சொந்தக்காரங்களோட வண்டி… இத்தனை நாள் வஞ்சம் வச்சு அவனை அவங்க கொன்னு இருப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை தான். இருந்தாலும் ஆழ்மனசில் ஒரு உறுத்தல். என்னோட நண்பன் சாவுக்கு நானே காரணம் ஆகிட்டேன்னு.

அந்த நேரத்தில் தான் எனக்கு ராசுவைப் பத்தியும்,அவனால ஏற்படுற தொல்லைகளைப் பத்தியும் சொல்லி சுமதி ரொம்ப கலங்கிப் போச்சு. வயசுப் பொண்ணை நல்ல படியா கல்யாணம் செஞ்சு கொடுக்கணுமே அப்படிங்கிற பயம் சுமதி முகத்தில் ரொம்பவே இருந்தது.

அப்போ தான் நான் அவளுக்கு வாக்குக் கொடுத்தேன். உன்னோட பொண்ணை என் மருமகள் ஆக்கிக்கிறேன்னு. என்னோட மனசில் இருந்த உறுத்தல் மறையத் தான் அப்படி சொன்னேன். இல்லைன்னு மறுக்க மாட்டேன். என்னோட பையன் நான் சொன்னா கேட்பான்னு ஒரு நம்பிக்கையில தான் அப்படி செஞ்சேன். மத்தபடி உன்னோட வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கக் கூடாதுங்கிற எண்ணமெல்லாம் இல்லை”

தந்தை கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டவன் தந்தையின் மனநிலையை தெளிவாக உணர்ந்து கொண்டான். இப்பொழுது அவர் இருக்கும் சூழ்நிலையில் மன அமைதி முக்கியம் என்பதை உணர்ந்தவனாய் பேசத் தொடங்கினான்.

“அப்பா…நீங்க இதை எல்லாம் யோசிச்சு உடம்பை கெடுத்துக்காதீங்க…நல்லா ஓய்வு எடுங்க…வீட்டுக்கு வந்ததும் பொறுமையா பேசிக்கலாம்”

“இல்லை மன்னவா…உனக்கு என் மேல இருக்கிற கோபம் நியாயமானது தான்.அதை நான் தப்பு சொல்லலை.அதுக்காக நாயகியை தண்டிக்காதே…கல்யாணம் முடிஞ்ச ஒரே ஒரு நாள் மட்டும் கூட இருந்த..அதுக்கு அப்புறம் வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டு போனவன் தான்.அதுக்கு அப்புறம் இப்போ தானே வந்து இருக்க…மறுபடியும் உனக்கு வேலைக்கு போகணும்னு தோணினா அவளையும் கூட அழைச்சுக்கிட்டு போ…”

“அப்பா நீங்க இவ்ளோ தூரம் கஷ்டபடுற அளவுக்கு எதுவுமே இல்லை.நான் வேலையை ரிசைன் பண்ணிட்டேன்.இனி இங்கேயே தான் இருக்கப் போறேன்.போதுமா?”

“நிஜமாவா மன்னவா?”அவர் கண்கள் ஆச்சரியத்தில் மின்னியது. “ஆமாப்பா”வீட்டில் உள்ள அனைவரையும் தன்னுடைய கோபத்தால் வருத்தி விட்டோம் என்பது இளவரசனுக்கு தெளிவாக புரிந்தது.தான் செய்த தவறுகளை தானே சரி செய்ய வேண்டும் என்று விரும்பினான்.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here