Mannavan painkili 6

0
2789

அத்தியாயம் 6

பண்ணைக்கு வந்த குமரேசன் வழக்கத்தை விட அதிக உற்சாகத்துடன் காணப்பட்டார். அதை எல்லாம் கண்டும் காணாதவன் போல இளவரசன் அவன் போக்கில் வேலைகளை செய்ய குமரேசனோ தானாகவே வலிய வந்து மகனிடம் பேச்சுக் கொடுத்தார்.

“இன்னைக்கு டிபன் ரொம்ப அருமையா இருந்துச்சு இல்ல”

“ம்ம்ம்…என்னத்த… என்ன தான் இருந்தாலும் நம்ம கேப்பங்க்களிக்கு ஈடாகுமா?” என்று வேண்டுமென்றே முகம் சுளித்தான்.

“அடேய்! படவா… சும்மா புழுகாதே… எட்டுத் தட்டு இட்லியை முழுங்கிட்டு நல்லா இல்லைனா சொல்ற?” என்றார் சிரிப்புனூடே

“ஏதோ ஒருநாள் சாப்பிட்டதால அந்த சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும்னு அர்த்தம் கிடையாது. எனக்கு அது பிடிச்சு போச்சுன்னும் அர்த்தம் கிடையாது” என்று விறைப்பாகவே சொன்ன மகனை ஒரு நொடி உற்று நோக்கியவர் மீண்டும் பேசத் தொடங்கினார்.

“இளா.. நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க.. உங்க அப்பனுக்கு இளமை திரும்புதுன்னா… எனக்கும் அறுபது வயசை நெருங்கிட்டு …இன்னமும் உனக்கு சமைச்சு போட்டுக்கிட்டு இருக்க முடியுமா? இப்போ தான் உன்னோட அத்தையும், நாயகியும் வந்துட்டாங்க இல்ல.. இனி மூணு வேளையும் நமக்கு வாய்க்கு ருசியா சாப்பாடு கிடைக்குமே”

“அப்பா..உங்களுக்கு வாய்க்கு ருசியா வேணும்னா சொல்லுங்க… நிதமும் நானே சமைக்கிறேன்… சாப்பாட்டுக்காக எல்லாம் பொம்பளைங்களை ஒரே வீட்டில் வச்சுக்க முடியாதுப்பா… வேணும்னா இப்படி செய்யலாம். நம்ம வீட்டுக்கு கிழக்கால இருக்கிற மாணிக்கம் தாத்தா வீடு சும்மா தான் இருக்கு. அங்கே அத்தையும், அவங்க பொண்ணு தங்கிக்கட்டும்… மூணு வேளையும் அவங்களே சமைச்சு எடுத்துக்கிட்டு வரட்டும் நாம சாப்பிடலாம்… பணம், காசு கூட கொடுக்கலாம். ஆனா ஒரே வீட்டில் இருக்கிறது மட்டும் வேணாம்” என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்ற மகனை யோசனையோடு பார்த்தார்.

‘இவனை எப்படி வழிக்கு கொண்டு வர்றது?’

பண்ணையில் எல்லா வேலைகளையும் அன்று தனித்தே செய்தான் இளவரசன். தந்தை உதவி செய்வதற்காக அருகில் வரும் பொழுது நாசுக்காக அந்த இடத்தில் இருந்து நழுவி விடுவான். அவனுக்குத் தெரியும். அவர் காலையில் முயற்சி செய்ததைப் போலவே மீண்டும் பேச முயற்சி செய்வார் என்று… அதற்கு இடம் தராமல் அவன் விலகி செல்ல குமரேசனும் மகனை அணுக முடியாமல் தவித்தார்.

வழக்கமாக மதிய நேரத்தில் இருவரும் வீட்டில் இருந்து காலையில் எடுத்து வந்த கேப்பங்களியை இருவருமாக மோர் கலந்து மதியத்துக்கு சாப்பிட்டுக் கொள்வது வழக்கம். அன்று இருவருமே வீட்டில் இருந்து எதையுமே எடுத்துக் கொண்டு வரவில்லை.

‘மறுபடி சாப்பிட வீட்டுக்குத் தான் போகணுமோ’ என்ற யோசனையுடன் இளவரசன் இருக்கும் பொழுதே மூச்சு வாங்க கையில் டிபன் கேரியருடன் ஒடி வந்தாள் நாயகி.

“மாமா… உங்களுக்கும்…ம..மச்சானுக்கும் சாப்பாடு கொடுத்து விட்டு இருக்காங்க அம்மா.. வாங்க சாப்பிடலாம்… தாமதமா வந்துட்டேனா?”

“அதெல்லாம் இல்லை தாயி.. சரியான நேரத்துக்குத் தான் வந்து இருக்க”என்று பேசியபடிய மர நிழலில் அமர சென்று விட வேறு வழியின்றி பின்னாலேயே போனான் இளவரசன்.

ஓடி வந்ததில் அவளுக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. தண்ணீர் கூடக் குடிக்காமல் தங்களுக்கு பரிமாறத் தொடங்கியவளைக் கண்டும், கனிவும் ஆத்திரமும் ஒன்றாகவே தோன்றியது இளவரசனுக்கு.

‘வேணும்னே இப்படி எல்லாம் நடந்துக்கிட்டு அப்பா கிட்டே நல்ல பேர் வாங்குறதுக்காக நடிக்கிறாளோ’ என்று எண்ணிய அதே கணம் அவளுக்காக அவன் மனம் வாடியது.

‘இவ்வளவு வேகமாக வராட்டி என்னவாம்?’ இரு வேறு திசைகளில் அவன் மனம் பயணிப்பதை அவன் உணரவே இல்லை. அவனுக்கு அவள் மீதோ, அவளது அன்னையின் மீதோ எந்த விதமான தனிப்பட்ட வெறுப்போ, விருப்பமோ இல்லையே. அதனால் அவர்கள் மீது கோபம் இருந்தாலும் அதையும் தாண்டி அவனது இயல்பான நல்ல குணம் அவ்வபொழுது தலை தூக்கத் தான் செய்தது.

பாங்குடன் தரையில் அமர்ந்து அவள் உணவு பரிமாறிய விதம் அவனை வெகுவாக ஈர்த்தது. ஆனால் அதை அவன் உணரத்தான் இல்லை.

கையில் கொண்டு வந்திருந்த தட்டை எடுத்து வைத்து இருவருக்கும் சூடாக பரிமாறினாள். அவர்கள் எதையும் கேட்க வேண்டிய தேவையின்றி எல்லாவற்றையும் அவளே பார்த்து பார்த்து பரிமாறினாள். பிறந்ததில் இருந்து ஒரு நாள் கூட இப்படி வயிறார சாப்பிட்டது இல்லை என்பதை மனதார உணர்ந்தான் இளவரசன். ஆனாலும் முகத்தை கடுகடுவென்றே வைத்துக் கொண்டு ஒன்றுமே சொல்லாமல் எழுந்தவன் மீண்டும் வேலையைப் பார்க்க சென்று விட குமரேசன் அவளிடம் ஆதரவாக பேசினார்.

“சாப்பாடு ரொம்ப அருமையா இருந்துச்சு தாயி.. நேரமா வீட்டுக்குப் போய் நீயும் ,அம்மாவும் சாப்பிடுங்க.. நாங்க வேலையை முடிச்சுட்டு சாயந்திரம் வீட்டுக்கு வந்திடுவோம்…” என்று சொல்லி விட்டு அவர் கை கழுவ சென்று விட பாத்திரங்களை மீண்டும் கூடைக்குள் அடுக்கிக் கொண்டு இருக்கும் பொழுது துண்டு எடுத்து அதில் முகம் துடைப்பவன் போல பாவனை காட்டியபடியே அவளிடம் பேசினான் இளவரசன்.

“வரும் பொழுது ஒடி வந்த மாதிரி வந்து தொலைக்காதே.. கை,கால் உடைஞ்சா அதுவும் எங்க தலையில் தான் விழும்… ஒழுங்கா நடந்து வீடு போய் சேர்” என்றவன் நிற்காமல் சென்று விட அவளுக்குத் தான் ஒன்றுமே புரியவில்லை.

‘இப்ப அவர் திட்டினாரா? இல்லை பத்திரமா வீட்டுக்குப் போன்னு அக்கறையா சொன்னாரா?’ என்று குழம்பியபடியே வீட்டுக்கு சென்று விட்டாள்.

வேலைகளை முடித்துக் கொண்டு அப்பாவும், பிள்ளையும்  இருவரும் ஒன்றாகவே வீடு திரும்பினாலும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. குமரேசன் லேசாக பேச்சை ஆரம்பித்தாலும் வெற்றிகரமாக அதை திசை திருப்பி விட்டுக் கொண்டே இருந்தான் இளவரசன். அவரும் சில தடவை முயற்சி செய்து பார்த்து விட்டு அதன் பின்னர் அமைதியாகி விட்டார். தூரத்தில் வரும் பொழுதே வீட்டை கவனித்த இளவரசன் சட்டென்று நடையில் வேகத்தை கூட்டி அரக்கப்பரக்க வீட்டின் முன் வந்து நின்றான்.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here