mannavan painkili 15

0
2515

அத்தியாயம் 15

அன்றைய பொழுது வீடு ஒரு வித அமைதியுடனே கழிந்தது.மதியம் சாப்பிட்ட பிறகு எல்லாரும் அவரவர் அறையில் உறங்க சென்று விட சுமதி மட்டும் தூங்காமல் இளவரசனைத் தேடி வீட்டின் பின்பக்கம் வந்தார்.

அங்கே கிணற்றடியில் துணி துவைக்கும் கல்லின் மீது அமர்ந்து இருந்த இளவரசனுக்குள் ஏகப்பட்ட கேள்விகள்,குழப்பங்கள்…தான் இப்பொழுது எடுத்து இருக்கும் முடிவு சரிதானா? இப்படி வெளியூருக்கு கிளம்பி போவதால் எதுவும் மாறிவிடப் போவது இல்லையே…தற்காலிகமாக இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.அவ்வளவு தான் என்ற எண்ணமே அவனை அலை கழித்துக்கொண்டு இருந்தது.

“மாப்பிள்ளை…”சுமதியின் தளர்ந்த குரலைக் கேட்டதும் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தான் இளவரசன்.

“என்ன அத்தை…நீங்க எதுக்கு இவ்வளவு தூரம் வந்தீங்க…உங்க பொண்ணுகிட்டே சொல்லி அனுப்பி இருக்கலாமே…”என்று அவன் பதற , வேதனையுடன் சிரித்தார் சுமதி.

“நேத்து நடந்த கல்யாணத்தை இன்னும் நீங்க முழுமனசோட ஏத்துக்கலை அப்படிங்கிற உண்மையை நான் கேட்கிறதுக்கு முன்னாடியே சொல்லிட்டீங்க மாப்பிள்ளை ..சந்தோசம்” என்று அவர் சொல்ல இளவரசன் விழித்தான்.

“நேத்து காலை வரை தான் அவ எனக்கு பொண்ணு…எப்போ நீங்க அவளை கல்யாணம் செஞ்சுகிட்டீங்களோ அந்த நிமிஷத்தில் இருந்து அவ உங்க மனைவி.அதை மறந்துட்டு உங்க வாயாலேயே என்னோட பொண்ணுன்னு சொல்லிட்டீங்க பார்த்தீங்களா?”

“அ..அது வந்து அத்தை..நேத்து வரை அப்படி சொல்லித் தானே பழக்கம்..அதே பழக்கம் இப்பவும் வந்துடுச்சு…வேற ஒண்ணும் இல்லை”என்று அவரை சமாதானம் செய்ய முயன்றான் இளவரசன்.

“உங்க வாழ்க்கையை நான் கெடுத்துட்டதா நினைக்கறீங்களா மாப்பிள்ளை”

“அச்சோ…என்ன அத்தை பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க?”என்று அவன் பதற சோகையாக சிரித்தார் சுமதி.

“இல்லை மாப்பிள்ளை..நானும் உங்களை பார்த்துகிட்டே தானே இருக்கேன்…கல்யாணம்னு முடிவு செஞ்சதில் இருந்தே உங்க முகத்தில் துளி அளவு கூட சிரிப்பு இல்லை.கல்யாணத்துக்கு பின்னாடி எல்லாம் சரியாகிடும்ன்னு நானும் அண்ணனும் நினைச்சோம்.நீங்க என்னடான்னா இப்படி தனியா கிளம்பி வெளியூர் போறேன்னு சொல்றீங்க…தப்பு பண்ணிட்டேன்னோன்னு மனசு உறுத்துது மாப்பிள்ளை…ரொம்ப சுயநலமாவே இருந்துட்டேன் இல்ல”

“அத்தை…ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதீங்க…”

“இல்லை மாப்பிள்ளை…நான் இந்த கல்யாணத்துக்கு அவசரப்பட்டதுக்கு ரெண்டு காரணம்.ஒண்ணு என்னோட உடல்நிலை…இன்னொன்னு அந்த ராசு…அவனால எப்ப வேணா என் பொண்ணுக்கு எந்த ஆபத்து வேணும்னா வரலாம்…அதனால தான் நான் உங்க கல்யாணத்துக்கு அவசரப்பட்டேன்.

ஏன்னா என்னோட பொண்ணா அவ இருக்கிறதை விட,உங்க மனைவியா ஆகிட்டா அவளோட வாழ்க்கை நிம்மதியா இருக்கும்.அப்படிங்கிற சுயநலம் தான் என்னை இப்படி ஒரு முடிவெடுக்க வச்சது…

கடைசியில் அவசரப்பட்டு உங்க வாழ்க்கையையும்,என் பொண்ணோட வாழ்க்கையையும் சேர்த்து வச்சு கெடுத்துட்டேன் போல”என்று அவர் வருத்தத்துடன் பேசிக் கொண்டே போக அவசரமாக அவரை தடுத்து பேசினான் இளவரசன்.

“அப்படி எல்லாம் இல்லை அத்தை…என்னால தான் அவ வாழ்க்கை வீணாகிடும்ன்னு நினைக்கிறேன்..அதுக்காக மட்டும் தான் இந்த இடைவெளி மத்தபடி வேற எந்த காரணமும் இல்லை.நீங்க தேவை இல்லாம எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காதீங்க”என்று அவரை தேற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.

அன்றைய இரவும் இளவரசனுக்கும்,நாயகிக்கும் சாதாரணமான இரவாக கழிய இருவர் மனதிலும் தன்னுடைய இணையைப் பற்றிய நினைவுகள் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது.

இரவு அவனுக்கு பால் கொடுத்த பொழுது கூட தயக்கத்துடன் அவனிடம் பேசிப் பார்த்தாள் நாயகி.

“இரண்டு நாள் கழிச்சு தானே வேலையில் சேரணும்..அதுக்கு ஏன் நாளைக்கே போறீங்க…இன்னும் ஒருநாள் இங்கே இருந்துட்டு அப்புறம் போகலாமே…”

“என்னடி கல்யாணம் ஆனா நான் செய்யுற எல்லாத்துக்கும் மேடம் கிட்டே சம்மதம் வாங்கிட்டு தான் செய்யணுமா? எனக்கு எப்போ போகணும்னு தோணுதோ அப்போ கிளம்பி போவேன்.அதை எல்லாம் நீ எதுக்கு கேட்கிற”என்று ஆத்திரமாக வசை மாரி பொழிய வாயை இறுக மூடிக் கொண்டாள் நாயகி.

மறுநாள் பொழுது விடிந்ததும் குமரேசன் தன்னால் முடிந்த மட்டும் இளவரசனிடம் மீண்டும் வாதாடிப் பார்த்தார்.ஆனால் அதன் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.இளவரசன் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருந்தான்.சுமதியும்,குமரேசனும் கண்ணீருடன் அவர்களை வழி அனுப்பி வைக்க, நாயகியோ சிரித்த முகத்துடன் அவனை அனுப்பி வைத்தாள்.

ரயிலேறி சென்னை வந்து சேர்ந்த பிறகும் கூட இளவரசனின் நினைவில் நாயகியின் சிரித்த முகம் மட்டுமே வந்து போனது.ஏதோ உறுத்திக் கொண்டே இருப்பது போல தோன்றவே ஊருக்கு பத்திரமாக வந்து சேர்ந்ததை அவர்களிடம் சொல்லிவிட எண்ணி தந்தையின் எண்ணுக்கு அழைத்தான்.

“அப்பா…நான் சென்னைக்கு பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்…எல்லார்கிட்டயும் சொல்லிடுங்க”என்று சொல்லி விட்டு போனை வைக்கப் போனவனை தடுத்து நிறுத்தியது குமரேசனின் அவசரக் குரல்.

“இளா..ஒரு வார்த்தை நாயகி கிட்டவும் பேசிடுடா…நீ ஊருக்கு போனதில் இருந்து பிள்ளை முகமே சரியில்லை”

‘ஆமா..கிளம்பி வர்ற வரைக்கும் ஈன்னு சந்தோசமாத் தானே இருந்தா..அவளுக்கு என்னவாம்’ என்று எண்ணியபடியே போனை அவளிடம் கொடுக்க சொன்னான்.

“ஹலோ”

“ஹ..ஹலோ…எப்படி இருக்கீங்க?”என்று குரல் கரகரக்க பேசிய அவளின் குரலே சொல்லாமல் சொன்னது அவள் அழுதிருப்பதை…

‘அவள் அழுதாளா ஏன்? சந்தோசமாத் தானே அனுப்பி வச்சா…அப்புறமும் என்ன அழுகை’என்று எண்ணியவனாக மனதில் நினைத்ததையே அவளிடம் கேட்கவும் செய்தான்.

“என்ன குரல் ஒரு மாதிரி இருக்கு…”

“ஒண்ணுமில்லையே…”

“இவ்வளவு தூரம் தள்ளி இருக்கும் கேனையனுக்கு அத்தனை மைலுக்கு அப்பால் நடக்கும் விஷயங்கள் தெரியவா போகுதுன்னு தானே இப்படி பொய் பேசுற”

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க…”

“பின்னே என்னடி..கிளம்பும் பொழுது சிரிச்சுக்கிட்டே வழி அனுப்பி வச்சுட்டு கிளம்பி இங்கே வந்ததுக்கு அப்புறம் தனியா உட்கார்ந்து அழுதியாக்கும்”

“புருஷன் வெளியே கிளம்பும் பொழுது சிரிச்ச முகமா வழி அனுப்பி வைக்கணும்ன்னு அம்மா சொல்லி இருக்காங்க…”லேசான அழுகையின் இடையே அவள் சொல்ல அவன் நெஞ்சம் சிலிர்த்தது.

“ஏனாம்?” லேசான சிரிப்பு இருந்தது அவன் குரலில்.

“அப்போ தான் போற வேலை நல்லபடியா முடியுமாம்…மனசுல எந்த வருத்தமும் இல்லாம வேலை பார்க்க முடியுமாம்…”

“அட பைத்தியமே…இப்படி நான் ஊருக்கு வந்த பிறகு நீ அழுதா, அப்ப மட்டும் எனக்கு வருத்தம் இருக்காதா?” என்று அவன் லேசாக கடிந்து கொள்ள

“இ..இல்லைங்க..நான் அழலை…” என்று அவள் சட்டென்று சிறுபிள்ளையாய் கூற அவன் மனம் குளிர்ந்து போனது.ஆனாலும் அவனது உள்மனது அவனை வழக்கம் போல எச்சரிக்கத் தவறவில்லை.

“இதோ பார்…உன்னை நம்பி தானே அவங்க ரெண்டு பேரையும் நான் விட்டுட்டு வந்து இருக்கேன்…இப்படி அழுது அவங்களை கவலைப் பட வைக்காதே”என்று அவளிடம் இயல்பாக பேசியவன் மேலும் சற்று நேரம் போன் பேசி விட்டு வைத்து விட ஏனோ அவன் மனதில் இனம் புரியா குறுகுறுப்பு.

ஏதோ யோசனையுடன் தன்னுடைய பெட்டியில் இருந்து துணிகளை அடிக்கி வைக்கத் தொடங்கினான்.இரவு சாப்பிடுவதற்கு முன் ஷேவ் செய்து விட்டு குளித்து வரலாம் என்று எண்ணி தன்னுடைய ஷேவிங் செட்டை தேடியவன் அது இல்லாமல் போகவே அலுப்புடன் கடைக்கு போய் வேறு ஒன்றை வாங்கிக் கொண்டு பின்னர் குளித்து முடித்தான்.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here