MEV Final

0
6840
Madhumathi Bharath Tamil Novels

அவளை கைகளில் ஏந்திக் கொண்டு தன்னிடம் கொடுக்க மறுத்து தானாக அவளை சுமந்து கொண்ட விதமும்,அவளைத் தரக் குறைவாக பேசிய ஒருவரை அடிக்கப் பாய்ந்த அவனது ரௌத்திரமும் கண்டு அவனுக்கு திருப்தியாகத் இருந்தது.
தங்கை வாழ்க்கையை நன்றாக வாழுவாள் என்று நம்பத் தொடங்கியதுமே அவன் முகத்தில் ஒரு நிறைவு வந்து இருந்தது.


இத்தனை தூரம் அவன் கலங்கக் காரணம் அவனது தந்தை பசுபதி தான்.சாகும் வரை பௌர்ணமியின் பிறப்பு ரகசியத்தை அவர் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவே இல்லை…பௌர்ணமியுடைய தாயான சுமதியின் வேண்டுகோள் அது.அதுவரை பாஸ்கருக்குமே அந்த விவரங்கள் எதுவும் தெரியாது.மரணப்படுக்கையில் இருந்த பொழுது தான் அந்த விவரங்களை அவனிடம் பகிர்ந்து கொண்டார் பசுபதி.


“பாஸ்கர் நீ நினைக்கிற மாதிரி பௌர்ணமி உன்னோட கூடப் பிறந்த தங்கச்சி இல்லை…இன்னும் சொல்லப் போனால் அவள் எனக்கு பிறந்தவளே இல்லை”என்று சொல்ல பாஸ்கருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது அந்த விஷயம்.


“எ…என்னப்பா சொல்றீங்க?”


“ஆமா பாஸ்கர்..அதுக்காக சுமதியை தப்பா நினைக்காதே…அவளுக்கும் அந்த தப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை…அவளின் அனுமதியின்றி யாரோ ஒரு கயவனின் வெறியை தீர்த்துக் கொள்ள அவள் பலியாக்கப் பட்ட நிகழ்வு அது…”


“அந்த ஆளையே சித்திக்கு கல்யாணம் செஞ்சு வச்சு இருக்கலாமே அப்பா…”


“குடி போதையில் அந்த கேடு கெட்ட செயலை செய்த அந்த நாய்…குடிபோதையிலேயே ஆற்றில் தவறி விழுந்து உயிரை விட்டு விட்டான்.”என்றார் கோபமாக…


“அதுக்காக நீங்க ஏனப்பா சித்தியை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க?”


“வேற என்ன செய்யுறது?அவ என்னோட சொந்த அக்காவோட பொண்ணு. அப்போ அவளுக்கு வயசு பதினைஞ்சு தான்…தான் கெடுக்கப்பட்டோம் அப்படிங்கிற விவரமே அவளுக்கு தெரியலை.நாலு மாசம் கழிச்சு தான் அவ சரியா சாப்பிடாம வாந்தி எடுத்துக்கிட்டே இருக்கவும் டாக்டர் கிட்டே காட்டும் பொழுது தான் விவரமே தெரிஞ்சது…ஏற்கனவே புருஷனை இழந்த அக்காவுக்கு என்ன செய்றதுனே தெரியலை…


சுமதிகிட்டே விசாரிச்சு அவனைப் பார்க்க அவன் வீட்டிற்கு போனா…அவன் செத்து ஒரு மாசம் ஆகி இருந்தது.செத்துப் போன ஒருத்தன் தன்னை கெடுத்துட்டதா சொன்னா யாரு நம்புவா…அது தான் அவளை நானே கல்யாணம் செஞ்சுகிட்டேன்.என்னை கல்யாணம் செய்யும் பொழுது சுமதிக்கு பதினைஞ்சு வயசு…எனக்கு முப்பத்திரண்டு…வெளியே எத்தனையோ பேர் என்னை அசிங்கமா பேசினாங்க…


உங்க அம்மா இறந்து அப்போ ஒரு நாலு வருஷம் இருக்கும்…கல்யாண ஆசையில் இப்படி சின்னப்பிள்ளை வாழ்க்கையையே கெடுத்துட்டேன்னு என்னை நிறைய பேர் திட்டினாங்க…ஆனா அது எதையும் நான் காதில் வாங்கலை…என் கூடப் பிறந்த அக்கா என்னோட கால்ல விழுந்து கெஞ்சினப்போ எனக்கு வேற எந்த வழியும் தெரியலை.அவளை நானே கல்யாணம் செஞ்சுகிட்டேன்.குழந்தை மாதிரி அவளை பார்த்துக்கிட்டேன்.எனக்கு எப்பவுமே சுமதி ஒரு குழந்தை தான்.நான் தூக்கி வளர்த்த குழந்தை.சந்தர்ப்ப சூழ்நிலையால் எனக்கே மனைவி ஆகிட்டா…அவளுக்கு உரிய பக்குவம் வந்ததும் இந்த வாழ்க்கை குறித்து எந்த முடிவு எடுத்தாலும் அதை செஞ்சு கொடுக்கணும்னு தான் நான் ஆசைப்பட்டேன்.


இவ்வளவு தூரம் செஞ்சும் என்ன பிரயோஜனம்? பிரசவத்தில் பௌர்ணமி பிறந்ததும் ஜன்னி வந்து அவ இறந்தும் போய்ட்டா…


பிரசவ வலியில் துடிச்சப்போ கூட என்கிட்டே சத்தியம் வாங்கிட்டா சுமதி…தன்னோட பிறப்பு இவ்வளவு மோசமான ஒரு விஷயம்னு தனக்கு பிறக்கப் போற குழந்தைக்கு தெரியவே கூடாதுன்னு சொல்லிட்டா…நானும் அவளுக்கு கொடுத்த வாக்கை இந்த நிமிஷம் வரைக்கும் காப்பாத்தி இருக்கேன்.
இப்ப கூட இந்த உண்மையை உன்கிட்டே சொல்லுறதுக்கு ஒரு காரணம் இருக்கு…நாளைக்கே இந்த விஷயம் வேறு யார் மூலமாவது உனக்கு தெரிய வந்துச்சுன்னா உனக்கு பௌர்ணமியின் மீது வெறுப்பு ஏற்படலாம்…அப்படி நடக்கக்கூடாது பாஸ்கர்.


அவ என்னைக்கும் உன்னோட தங்கச்சி தான்.அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது உன் பொறுப்பு என்று சொல்லி கண் மூடிய தந்தையின் நினைவில் இன்றும் கண்ணீர் பெருகியது அவனுக்கு…
தந்தையின் ஆசைப்படி அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையாமல் போய் விட்டதோ என்ற வருத்தத்தில் இருந்தவனின் துயரம் இன்று பார்த்திபனின் நேசத்தை கண்ணெதிரில் பார்த்ததால் துணி வைத்து துடைத்ததைப் போல மாறி விட்டது.


அவன் உறுதியாக நம்பினான்.பௌர்ணமிக்கு அமைந்து இருப்பது சிறப்பான வாழ்க்கை தான் என்று…நேற்று மணமாகி வந்த பெண்ணுக்காக மொத்த குடும்பமும் தன்னுடைய நெருங்கிய உறவையே எதிர்க்க துணிந்து விட்டதே…அதற்குப் பிறகு அவன் மனம் அமைதி அடைந்து விட சுகன்யாவுடன் கலகலப்பாக பேசத் தொடங்கினான்.சுகன்யாவிற்கும் கணவன் இயல்புக்கு திரும்பி விட்டது மகிழ்ச்சியே.கோவிலில் இருந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க இங்கே பார்த்திபனும்,பௌர்ணமியும் வேறு மனநிலையில் இருந்தார்கள்.


பௌர்ணமி இறுகிப் போய் அமர்ந்து இருக்க…பார்த்திபனோ தவிப்புடன் ஜீப்பை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.


ஜீப்பை அவன் ஓட்டி வருவதை தொலைவில் இருந்தே பார்த்து விட்ட மெய்யாத்தா பேரனிடம் வம்பிழுக்க எண்ணி அவன் இறங்கும் முன்னரே அவனை கேலி பேசினார்.
“என்னடா பேராண்டி…கோவில் பூஜை முடியற வரை கூட உன்னால ஒழுங்கா இருக்க முடியலையா? பௌர்ணமியும் நீயும் மட்டும் வீட்டுக்கு வந்து இருக்கீங்க?”
“அட நீங்க வேற அப்பத்தா…இன்னைக்கு நடந்த கூத்து எதுவும் தெரியாம பேசாதீங்க” என்று சொல்லிவிட்டு பார்வையால் பௌர்ணமியை சுட்டிக்காட்ட அப்பொழுது தான் கவனித்தார் பௌர்ணமி தலையில் கட்டுடன் சோர்ந்து போய் இருந்ததை…


“டேய்! பிள்ளைக்கு என்னடா ஆச்சு…ஆத்தி”என்று அந்த வயதான காலத்திலும் வேகமாக ஒடி வந்தவரைக் கண்டு பௌர்ணமிக்கு உள்ளுக்குள் ஏதோவொன்று பொங்கியது.


பார்த்திபன் நடந்த அனைத்தையும் கதை…கதையாய் சொல்லிக் கொண்டே பௌர்ணமியின் மறுப்புகளை அலட்சியம் செய்து விட்டு அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.


மாடியில் தங்களது அறையில் அவளை படுக்க வைத்து விட்டு மருத்துவருக்கு அழைக்க சில நிமிடங்களில் வந்து சேர்ந்த மருத்துவர் அவளின் காயங்களை சுத்தப்படுத்தி வலி குறையவும்… கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க தூக்க மருந்தும் போட்டு விட்டு கிளம்பி விட்டார்.


பார்த்திபன் அறையை விட்டு எங்கேயும் நகரவில்லை.அவள் கண் விழிக்கும் வரை அங்கேயே இருக்க முடிவு செய்தவன் உறங்கும் மனைவியின் மதிமுகத்தையே நேசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.


சில மணி நேரத்திற்கு பிறகு கோவிலில் இருந்து எல்லாரும் வீட்டுக்கு வந்து விட உறங்கிக் கொண்டு இருந்த பௌர்ணமியை யாரும் தொந்தரவு செய்யாதபடி பார்த்துக் கொண்டான் பார்த்திபன்.
வீடே ஒரு வித அமைதியில் இருக்க அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒலித்தது மெய்யாத்தாவின் குரல்.


“எலேய்! பார்த்திபா…”என்ற அவரின் குரல் வீடு முழுக்க எதிரொலிக்க தூக்கி வாரிப் போட நிமிர்ந்தவன் அப்பத்தாவுடன் ராமன் இருப்பதைப் பார்த்ததும் அவனுக்கு புரிந்து போனது…என்ன நடந்து இருக்கும் என்று.
தான் அப்பத்தாவிடம் சொல்லாமல் விட்ட விஷயங்களை இட்டுக்கட்டி கூடுதலாகவே சொல்லி இருப்பார் என்று நினைத்தவன் ராமனை நோக்கி ஒரு இகழ்ச்சிப் பார்வை செலுத்தி விட்டு அறை வாயிலில் காத்துக் கிடந்த அப்பத்தாவை நோக்கி விரைந்தான்.
“அப்பத்தா..கீழே போய் பேசலாம்..அவ முழிச்சிடப் போறா?”


“நான் கேட்கிற கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு பார்த்திபா…ராமனை நம்ம சொந்தக்காரங்க முன்னாடி அடிச்சியா?”பேரனின் செயலை நம்ப முடியாமல் நிச்சயம் அவன் அவ்வாறு செய்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கையுடன் கேட்டார் மெய்யாத்தா.


‘நான் யாரு அப்பத்தா?”


“எலேய்! நான் என்ன கேள்வி கேட்கிறேன்…நீ என்ன கேட்கிற?”


“ம்ச்….கேட்டதுக்கு பதில் சொல்லுங்க அப்பத்தா..நான் யார்?”


“இதென்ன கேள்வி..நீ பார்த்திபன்…”


“இல்லை…நான் மெய்யாத்தாவின் பேரன்”என்று அழுத்தமாக கூறியவனின் அப்பத்தாவின் முகத்திலிருந்து கடுமை குறைவதை உறுதி செய்து கொண்டான்.


“ஆமா ராசா..நீ என்னோட பேரன் தான்…”


“நீங்க யாரு…எப்பேர்பட்ட ஆளு..உங்க பேரனோட பொண்டாட்டியைப் பத்தி ஒருத்தர் அசிங்கமா நாக்குல நரம்பில்லாம பேசுனா நீங்க என்ன செய்வீங்க?”


“பேசுறதா…வெட்டி போட்டுடுவேன் வெட்டி…”


“அதே தான் அப்பத்தா…பௌர்ணமியைப் பத்தி இவர் தப்பா பேசினார்…அப்பா,அம்மா…யார் சொல்லியும் கேட்காம என் பொண்டாட்டியைப் பத்தி தவறா பேசினா…நான் எப்படி அப்பத்தா சும்மா விட முடியும்?”

“அது தானா சங்கதி…இவ்வளவு நடந்து இருக்கா…எலேய்! ராமா”என்று கோபத்தோடு அப்பத்தா திரும்பிப் பார்க்க..அந்த இடத்தில் ராமன் இருந்தால் தானே…எப்பொழுது அம்பு அவர் பக்கம் திரும்பியதோ அப்பொழுதே அவர் ஒடி விட்டார்.


பார்த்திபனின் முகத்தையே கூர்ந்து பார்த்த மெய்யாத்தா அன்று கேட்ட அதே கேள்வியை இன்றும் கேட்டார்.


“என் கிட்டே எதுவும் மறைக்கறியா பார்த்திபா?”


அப்பத்தாவிடம் இனி எதையும் மறைக்க வேண்டாம் என்று முடிவு செய்தவன் அவரை அழைத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குள் சென்று கதவை தாழிட்டு விட்டு வந்தவன் பௌர்ணமி உறக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினான்.


“அப்பத்தா…சுகன்யா கல்யாண சமயம் வீடு எவ்வளவு போராட்டமா இருந்துச்சுனு உங்களுக்கே தெரியும்…சுகன்யாவின் பிடிவாதத்தால் மட்டுமே அவளது திருமணத்திற்கு நாம் எல்லாரும் சம்மதித்தோம்.அந்த சமயத்தில் எனக்கு உண்மையில் பாஸ்கரைப் பிடிக்கவில்லை.நல்ல பிள்ளை போல நடித்து சொத்துக்காக சுகன்யாவை மணக்கத் திட்டமிடுகிறார் என்ற எண்ணத்துடன் இருந்து வந்தேன்.ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா இந்த திருமணத்தை நிறுத்துவதற்கு என்று ஆவலுடன் இருந்தேன்.ஆனால் யாருடைய கெட்ட நேரமோ என்னால் பாஸ்கரிடம் எந்தக் குறையும் காண முடியவில்லை.


ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் துடித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் கல்யாணத்திற்காக பௌர்ணமி வந்து சேர்ந்தாள் ஹாஸ்டலில் இருந்து.


அப்போ அவ பன்னிரண்டாம் வகுப்பு தான் படிச்சுட்டு இருந்தா…கல்யாணப் பத்திரிக்கை டிசைன் காட்டுறதுக்கு அவங்க வீட்டுக்கு போய் இருந்தப்பத் தான் அவளை முதன்முதலா பார்த்தேன்.பார்த்தவுடனே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு…


குழந்தை மாதிரி முகம்…குண்டு கன்னம்…கோழி முட்டை கண்ணு…பார்த்த முதல் பார்வையிலேயே என் மனசில சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்டா…அதுக்கு அப்புறம் ஏதாவது சாக்கு வச்சுக்கிட்டு அவளைப் போய் பார்ப்பேன்.


என்னைப் பார்த்ததுமே அவ உடம்பெல்லாம் நடுங்கி,பயத்தில் வேர்க்க ஆரம்பிச்சுடும்…எனக்கு அவளை சீண்டுவது ரொம்பவே பிடிக்கும்…போகும் போதெல்லாம் அவளை சீண்டி ரொம்பவே விளையாடுவேன்…எனக்கு அவளை ரொம்பவே பிடிச்சு இருந்தாலும் பாஸ்கரோட தங்கச்சி அப்படிங்கிறதால அவளை என்னால முழு மனசோட நம்ப முடியலை.


என்ன தான் அவளுக்கு என் மேல பயம் இருந்தாலும் நான் வீட்டுக்கு வந்துட்டா எனக்கு வேணும்கிறது எல்லாம் பார்த்து பார்த்து செய்வா…ஆனா என்கிட்டே நின்னு கூட பேச மாட்டா..அதை எல்லாம் கூட அவ வேணும்னு என்னை ஈர்க்கிறதுக்காக செய்றாளோன்னு எனக்கு தோண ஆரம்பிச்சுது.ஆனா அதையும் தாண்டி அவ தினம் தினம் என்னை ஒவ்வொரு மாதிரி ஈர்க்க ஆரம்பிச்சா…அதை என்னால தாங்க முடியலை…


இன்னும் சொல்லப் போனா எங்கே தோத்துப் போய்டுவேனோன்னு ஒரு பயம் உள்ளுக்குள்ளே இருந்துகிட்டே இருந்துச்சு.


சுகன்யாவோட கல்யாணத்துக்கு முதல் நாள் மண்டபத்தில் யாருக்கும் தெரியாம அவளை தனியா சந்திச்சு பேசினேன்.அதுக்குக் காரணம் மண்டபத்தில் இருந்து வயசு பசங்க சில பேர் அவளை ஆர்வமா பார்க்க ஆரம்பிச்சாங்க.அதை…அதை என்னால தாங்கிக்க முடியலை.எப்படியாவது கல்யாணம் முடியறதுக்குள்ள அவகிட்டே பேசி சம்மதம் வாங்கிடணும்ன்னு நினைச்சேன்.” என்றவனின் பார்வை பின்னோக்கி சென்றது.


“பௌர்ணமி” கரகரத்த குரலுடனும் துளைக்கும் பார்வையுடனும் தனக்கு எதிரே நின்றவனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தலையை தாழ்த்திக் கொண்டாள் பௌர்ணமி.


“இப்போதைக்கு இந்த விஷயத்தைப் பத்தி பேசவே கூடாதுன்னு நினைச்சேன்…ஆனா என்னால முடியல…நான் பார்க்கும் பொழுது என் முகத்தைப் பார்க்கக் கூடப் விரும்பாமல் தலையை குனிஞ்சு நிற்கறியே…அதுக்கு என்ன காரணம்? வெட்கமா …இல்லை என்னைப் பார்க்க உனக்கு பிடிக்கலையா?”


“…”
“பேச மாட்டியா?”


“…”
“பேசேன் பொம்மிம்மா”


அதுவரை பதட்டமாக சுடிதார் துப்பட்டாவை விரல்களில் சுற்றிக் கொண்டு இருந்தவள் அதிர்ந்து போய் அவன் முகம் பார்த்தாள்.


“எ…என்ன சொன்னீங்க?”


“பொம்மிம்மான்னு கூப்பிட்டேன்…ஏன் கூப்பிடக் கூடாதா? உங்க அப்பா உன்னை சின்னப் பிள்ளையில் குட்டிமான்னு கூப்பிடுவாராமே…என்ன முழிக்கிற உன்னைப் பத்தின எல்லா விஷயமும் எனக்குத் தெரியும்”


“எல்லா விஷயமும் தெரிஞ்சவருக்கு உங்க கேள்விக்கு பதில் மட்டும் தெரியலையா…அதையும் நீங்களே கண்டுபிடிங்களேன்”என்று தலையை ஒரு பக்கமாக சாய்த்து அவள் கேட்க,
“அது சுலபம் தான் பொம்மிம்மா…ஆனா இவ்வளவு தள்ளி நின்னா கண்டுபிடிக்க முடியாது…கொஞ்சம் பக்கத்தில் வந்தா ஈஸியா கண்டு பிடிச்சுடுவேன்.வரட்டுமா?” என்று சொல்லிக் கொண்டே அவளை நெருங்க முயல வெட்கத்துடன் அந்த இடத்தை விட்டு ஒடி விட்டாள் பௌர்ணமி.


நாணத்தில் சிவந்த அவளது முகத்தை எண்ணி கனவு கண்டு கொண்டே படிகளில் இறங்கயவனின் காதில் இடியென வந்து விழுந்தன வார்த்தைகள்.பாஸ்கரின் சொந்தக்காரர் யாரோ ஒருவர் தன்னுடைய மகனை சமாதானம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தார்.


“டேய்!ரமேஷ்…சொல்றதை கேளுடா…அந்த பொண்ணு பௌர்ணமியை எல்லாம் என்னால மருமகளா ஏத்துக்க முடியாதுடா…அவங்க அம்மாவுக்கு முறை தவறி பிறந்தவ இவ…ஏதோ கல்யாண வீட்டில் அமைதியா இருக்கிறதையும்…உனக்கு சாப்பாடு பரிமாறினதையும் வச்சு நீயா கற்பனை செஞ்சுக்கிட்டு உளறாதே…”


“அப்பா…என்னோட மனசைக் கலைக்க இந்த மாதிரி தப்பு தப்பா பேசாதீங்க…”


“டேய் உன்கிட்டே நான் பொய் சொல்லணும்ன்னு எனக்கு என்னடா அவசியம்…உன் கல்யாண விஷயம் உன்னோட ஆசைப்படி தான் நடக்கும்..ஆனா நீ கூட்டிக்கிட்டு வர்ற பொண்ணு நம்ம குடும்ப கௌரவத்தை காப்பாத்துற மாதிரி இருக்கணும்…மோசமான குடும்பத்தில் இருந்து வந்தவளா இருக்கக்கூடாது”என்றெல்லாம் பேசி மகனை சமாதானம் செய்ய முயல அதைக் கேட்டுக் கொண்டிருந்த பார்த்திபனுக்கு உள்ளம் கொதித்தது.


‘எவ்வளவு பெரிய மோசக்காரி அவ..ஒரே நேரத்தில் நடிச்சு என்னையும் ஏமாத்தி இருக்கா…ரமேஷையும் ஏமாத்தி இருக்கா…என்கிட்டே எதிரில் நின்னு பேசவே யோசிப்பா…யாரோ ஒருத்தனுக்கு சாப்பாடு எல்லாம் பரிமாறி இருக்கா…இது அத்தனைக்கும் மேலா அவளோட அசிங்கமான பிறப்பைப் பத்தி என்கிட்டே சொல்லவே இல்லை…இது மாதிரி இன்னும் எத்தனை விஷயங்களை என்கிட்டே இருந்து மறைச்சு இருக்காளோ”என்று ஆத்திரம் பெருக அவளைத் தேடிப் போனான்.


பெண் அழைப்பு முடிந்ததும் பெண் வீட்டாரை சேர்ந்தவர்கள் மண்டபத்திலேயே தங்கி விட,ஒரு சில உறவினர்களும், மாப்பிள்ளை வீட்டை சேர்ந்தவர்களுக்கும் பார்த்திபனின் வீட்டிலேயே தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


வேகமாக வீட்டுக்கு வந்தவன் முதலில் தட்டியது பௌர்ணமியின் அறைக்கதவைத் தான்.இரவு நேரத்தில் கதவை அவன் வேகமாக தட்டிய சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து பாஸ்கர் வரவும்…தூக்கக் கலக்கத்தோடு பௌர்ணமி கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது.


முதலில் அவனை அந்த நேரத்தில் பார்க்கவும் கன்னங்கள் இரண்டும் வெட்கத்தில் சிவக்க நின்று கொண்டு இருந்தவள் அவனது கோபமான பார்வையின் அர்த்தம் புரியாமல் தடுமாறினாள்.


‘ஏன் இவ்வளவு கோபம்…கொஞ்ச நேரம் முன்னாடி கூட நல்லா தானே பேசிட்டு இருந்தார்….இப்ப ஏன் இப்படி முறைக்கிறார்?’என்று அவள் யோசித்துக் கொண்டே இருக்க..அதே கேள்வியை பாஸ்கர் கேட்டான்.


“என்ன விஷயம் பார்த்திபா..என்னைப் பார்க்க வந்தீங்களா? ரூம் மாறி வந்துட்டீங்களா?”


“ஆஹா..ஆஹா..அண்ணனும் தங்கச்சியும் என்னமா நடிக்கறீங்க?நடிச்சு நடிச்சு மத்தவங்களை ஏமாத்தலாம்…இந்த பார்த்திபனை அவ்வளவு சுலபமா ஏமாத்த முடியாது…”


“என்ன சொல்றீங்க பார்த்திபன்…கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன்?”


“ஹ..அந்த அசிங்கத்தை என் வாயால வேற சொல்லணுமா?என்னோட தங்கச்சியை உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க ஒத்துக்கிட்டதுக்கு ஒரே காரணம் பணம் காசு இல்லாட்டியும்…நல்ல குடும்பம்னு நினைச்சு தான்.ஆனா இந்த மாதிரி தரங்கெட்ட ஒருத்தி இருக்கிற வீட்டுக்கு என்னோட தங்கச்சியை நான் அனுப்ப மாட்டேன்”


“பார்த்திபா…வார்த்தையை அளந்து பேசுங்க…நீங்க பேசுறது யாரைப் பத்தின்னு நினைவு இருக்கா… இல்லையா?”


“என்ன பாஸ்கர்…மிரட்டுற மாதிரி பேசுற…பேசினா என்ன செய்வ… கல்யாணத்தை நிறுத்திடுவியா? அது எப்படி? அப்புறம் என் தங்கச்சி பங்கு சொத்து எதுவும் உனக்கு வராதே…”


“என்ன சொல்ல வர்றீங்க பார்த்திபன்…சொத்துக்காகத் தான் நான் சுகன்யாவை காதலிக்கறேன்ன்னு சொல்றீங்களா?”


“ஆமா…நீங்க மட்டும் இல்ல..இந்த ஆள் மயக்கியும் அதுக்காக தான் நல்லவ வேஷம் போடுறா…நல்ல குடும்பத்தில் பிறந்து இருந்தா…நல்ல குணம் இருக்கும்..கேடுகெட்ட குடும்பத்தில் பிறந்தவளுக்கு புத்தி சாக்கடையாகத் தானே இருக்கும்” என்று ஆத்திரத்துடன் பேசியவன் கண்களில் கனல் கக்க பௌர்ணமியின் முகமோ ரத்தப் பசையின்றி வெளுக்கத் தொடங்கியது.


“பார்த்திபா..நீ எல்லை மீறி பேசிக்கிட்டு போற..சுகன்யாவோட அண்ணன்கிறதால தான் நான் பொறுமையா இருக்கேன்”சுற்றிலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த உறவினர்களை எண்ணி கோபத்தை குறைத்துக் கொள்ள முயற்சித்தான் பாஸ்கர்.


“உண்மையை சொன்னா..உனக்கு ஏன் ரோஷம் வருது பாஸ்கர்…கல்யாணத்துக்கு முன்னாடியே வயித்தில் பிள்ளையை சுமந்தவ தானே இவ அம்மா…சம்பந்தமேயில்லாமல் இல்லாமல் எவனோ ஒருத்தனின் பிள்ளைக்கு உங்க அப்பனை ஏமாற்றி அப்பன் ஆக்கியவளின் வாரிசு தானே இவள்…இவ மட்டும் எப்படி ஒழுக்கத்தின் சிகரமாவா இருப்பா…இவளும் அதே மாதிரி தானே இருப்பா…” என்பர் கொடும் விஷம் போன்ற வார்த்தைகளின் வீரியம் தாங்க முடியாமல் உணர்விழந்து பற்றற்ற கொடி போல தரையில் விழுந்தாள் பௌர்ணமி.


நொடியும் தாமதிக்காமல் அவளை கைகளில் ஏந்திக் கொண்ட பாஸ்கரன் உடனடியாக ஹாஸ்பிடலில் சேர்த்து விட,எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று விட முடியாமல் பார்த்திபனின் மனம் பதற அவனும் அவர்களுடன் மருத்துவமனைக்கு சென்றான். டாக்டர் பரிசோதித்து முடிக்கும் வரை அறைக்கு வெளியில் காத்திருந்த பார்த்திபனிடம் வேதனையுடன் பேசினான் பாஸ்கர்.


“தப்பு பண்ணிட்டீங்க பார்த்திபன்… உங்களுக்கு ஒரு விஷயம் தெரிய வந்துச்சுன்னா அதைப் பத்தி என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாமே…இதுவரை அவளுக்கு தெரியாம நாங்க பூட்டி வச்சு இருந்த ரகசியத்தை இப்படியா போட்டு உடைப்பீங்க…அவ பூஞ்சை மனசுக்காரி பார்த்திபன்..இவ்வளவு பெரிய அதிர்ச்சியை எப்படி தாங்கிப்பா…”


“என்ன சொல்றீங்க பாஸ்கர்..அவ..அவளுக்கு இதெல்லாம் தெரியாதா?”பார்த்திபனின் அதிர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.


“ஆமா …இப்போ வரை இறந்து போன என்னோட அம்மா தான் அவளுக்கும் அம்மான்னு நினைச்சுக்கிட்டு இருக்கா…அவளை பெத்தவங்க பேர் கூட அவளுக்குத் தெரியாது”என்று சொன்னவன் தன்னுடைய தந்தை தன்னிடம் கூறியது அனைத்தையும் கூற இடிந்து போய் அமர்ந்து விட்டான் பார்த்திபன்.


தன்னுடைய அவசர புத்தியினாலும்,கோபத்தினாலும் அவன் எப்படிப்பட்ட கொடுமையான வார்த்தைகளை அவளை நோக்கி பேசி விட்டான் என்ற உண்மை கொஞ்சம் தாமதமாகவே அவனுக்கு புரிந்தது.


சில நிமிடங்களுக்கு முன் அறைக்கதவை திறந்ததும் எதிரில் அவனைப் பார்த்த பிறகு வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க அவள் நின்றிருந்த கோலம் இப்பொழுது அவன் நெஞ்சில் குத்தீட்டியாக மாறி குத்தியது.


முதலில் பாஸ்கரிடம் மன்னிப்பு கேட்டவன் அடுத்து பௌர்ணமி கண் விழிப்பதற்காக காத்திருக்கத் தொடங்கினான்.


சில மணி நேரத்தில் கண் விழித்த பௌர்ணமியை நிமிர்ந்து பார்க்கக் கூட அவனால் முடியவில்லை.அவளும் இவன் புறம் திரும்பவே இல்லை.உணர்வுகள் மரத்துப் போன மாதிரி ஒரு பார்வை பார்த்துக் கொண்டு இருந்தவளின் பார்வை பாஸ்கரிடம் மட்டும் நிலைத்து இருந்தது.


அவளது பார்வை பாஸ்கரிடம் கேட்டது ஒரே ஒரு கேள்வியைத் தான்…
‘இதெல்லாம் உண்மை தானா?’
உண்மை தான் என்று அவளின் முகம் பார்த்து கூட முடியாத பாஸ்கரின் தவிப்பு அவளுக்கு உண்மையை சொல்லாமல் சொல்ல கண்களை மூடி அப்படியே படுக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.


“இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க பார்த்திபன்…”என்று கண்களை மூடி பாஸ்கர் சொல்ல பார்த்திபனை விட அதிகம் அதிர்ந்தது பௌர்ணமி தான்.


“பாஸ்கர்…நாம பேசலாம்”


“இல்லை பார்த்திபன்..எது எப்படியோ பௌர்ணமி என்னோட தங்கச்சி..அவளை கேவலமா பேசுற ஒருத்தர் வீட்டுக்கு மாப்பிள்ளை ஆவதோ…என்னுடைய காதலை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய பின்னரும் உங்கள் தங்கையை நான் ஏற்றுக் கொள்வது என்பதோ என்னால் முடியாத காரியம்…தயவு செய்து செய்து என்னை மன்னிச்சுடுங்க…” என்று பாஸ்கர் சொல்ல பார்த்திபன் விக்கித்துப் போனான்.


இந்த விஷயம் மட்டும் அவனது வீட்டினருக்கு தெரிந்தால் அவன் தொலைந்தான்.அவன் முகத்தில் கூட யாரும் முழிக்க மாட்டார்கள்.என்று எண்ணியவனுக்கு கெஞ்சுவதற்கு கூட வார்த்தைகள் வரவில்லை.அப்படியே இடிந்து போய் அமர்ந்து விட்டான்.


“அண்ணா…இவர் பேசுறதுக்காக சுகன்யா அண்ணியைப் பழி வாங்கப் போறியா?சரி…அப்படியே நீ சொல்ற மாதிரி இந்த கல்யாணத்தை நிறுத்திட்டா எல்லாம் சரியாகிடுமா…அண்ணி என்ன தப்பு செஞ்சாங்க…எனக்கு அவங்க தான் அண்ணியா வரணும்”என்று வறண்டு போன குரலில் அழுத்தமாக சொல்லி விட்டு கண்களை இறுக மூடிக் கொண்டாள் பௌர்ணமி
அவளின் வார்த்தைக்கு கட்டுப்பட்டுத்தான் மறுநாள் காலையில் பாஸ்கர் சுகன்யாவின் கழுத்தில் தாலி கட்டினான் என்பது அவர்கள் மூவர் மட்டுமே அறிந்த ரகசியம்…கல்யாணம் முடியும் வரை கஷ்டப்பட்டு முகத்தை சிரித்தது போல வைத்து இருந்த பௌர்ணமியை பார்த்திபனால் அணுகவே முடியவில்லை.


திருமணம் முடிந்ததும் அவளது பக்க உறவினர்களுடன் அவள் ஊருக்கு கிளம்புவதாக அறிவிக்க பாஸ்கரனும் அவளது மனநிலையைக் கருத்தில் கொண்டு அவளை தன்னுடைய பாட்டி உறவுமுறை பெண்ணுடன் அனுப்பி வைத்து விட்டான்.


திருமணம் முடிந்ததும் அவளிடம் பேசி மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என்று பார்த்திபன் நினைத்துக் கொண்டு இருக்க அவனுக்கு தகவல் வந்து சேரும் முன்னரே அவள் கிளம்பி விட்டாள்.
எப்படியாவது அவளிடம் மன்னிப்பு கேட்டு தன்னுடைய மனநிலையை அவளுக்கு விளக்கி விட வேண்டும் என்று முடிவு செய்தவன் நேராக அவளைப் பார்க்க அவளின் பாட்டி வீட்டிற்கே சென்று விட்டான்.


அவளின் பாட்டி அப்பொழுது கோவிலுக்கு சென்று இருக்க பௌர்ணமி மட்டுமே வீட்டில் தனித்து இருந்த அந்த சந்தர்ப்பம் அவனுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது.


கதவை தட்டி விட்டு வெளியில் அவன் காத்திருக்க சில நிமிடங்கள் கழித்து வந்து சோர்வுடன் கதவை திறந்த பௌர்ணமியின் முகம் பார்த்திபனைக் கண்டதும் இருள் அடைந்தது.


ஒன்றும் பேசாமல் அவள் உள்ளே சென்று விட அவளைத் தொடர்ந்து வீட்டுக்குள் வந்த பார்த்திபனை அங்கிருந்த ஒரு சேரை சைகையிலேயே காட்டி அமர சொன்னவள் அவனுக்கு டீ போடுவதற்காக அடுப்படிக்குள் நுழைந்து கொள்ள பார்த்திபனின் பதட்டம் ஓரளவிற்கு குறைந்து இருந்தது.
‘தன்னைப் பார்த்ததும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வாள் அல்லது வீட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியே துரத்துவாள் என்றோ அவன் எதிர்பார்த்து இருக்க அவளின் இந்த அமைதி அவனுக்கு ஆச்சரியத்தை கொடுத்த அதே சமயம் பயத்தையும் கொடுத்தது.


ஏனெனில் அவள் கண்களில் ஒரு அந்நியத்தன்மை..யாரோ மூன்றாம் மனிதரிடம் நடந்து கொள்வதைப் போன்ற விதத்தில் அவள் நடந்து கொள்ள பார்த்திபன் தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான்.
‘நீ செய்தது ரொம்ப பெரிய தப்பு பார்த்திபா…அவளுக்கு கோபம் இருக்காதா என்ன?பேசி புரிய வை…’என்று சொன்னவன் அவள் வரும் வரை பொறுக்க முடியாமல் நேராக அடுப்படிக்குள் சென்று விட்டான்.
டீயை ஆத்திக் கொண்டிருந்தவள் திடீரென்று அவன் உள்ளே வரவும் ஒரு நொடி அதிர்ந்தவள் தண்ணி சமாளித்துக்கொண்டு டம்ளரை அவன் புறம் நீட்டினாள்.


மறுக்காமல் வாங்கி ஒரு வாய் குடித்தவன் கெஞ்சலான பார்வையுடன் பேச்சை ஆரம்பித்தான்.


“பொம்மிம்மா…அன்னைக்கு ஏதோ கோபத்தில் அப்படி பேசிட்டேன்…மன்னிச்சுடுடா…யாரோ ஒருத்தன் உன்னை கல்யாணம் செஞ்சுக்கப் போறதா என் காதுபடவே பேசுறான்…அந்த கோபம்…அதைத்தான் உன் மேல காட்டிட்டேன்…என்னை மன்னிச்சுடு பொம்மிம்மா”


அவளின் மரத்துப்போன பார்வையில் இப்பொழுதும் துளி கூட மாற்றமில்லை.
வேகமாக அவளை நெருங்கி அவளின் கைகளை பற்ற முனைந்தவன் அவளது அந்நியப் பார்வையில் அந்த முயற்சியைக் கை விட்டு அவளிடம் கெஞ்சலாக பேசத் தொடங்கினான்.


“உன் அண்ணன் மேல தான் எனக்கு சந்தேகம் பொம்மிம்மா…அதுதான் உன் பக்கம் அப்படியே திரும்பிடுச்சு…தப்பு தான் இல்லைன்னு சொல்லலை…அதுக்காக என்னை வெறுத்து ஒதுக்கிடுவியா பொம்மிம்மா…நீ இல்லாம என்னால வாழ முடியாதுடி…ப்ளீஸ் புரிஞ்சுக்கோ”


“…”
“நான் என்ன செய்யணும் பொம்மிம்மா…என்ன செஞ்சா உனக்கு என் மேல இருக்கிற கோபம் குறையும்…”
அதுநேரம் வரை மரத்த பார்வையுடன் இருந்தவள் அவன் முகத்தை பார்க்க விரும்பாத வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டு பேசத் தொடங்கினாள்.


“இனியொரு முறை நீங்க என்னைத் தேடி வரக்கூடாது.அப்படி வந்தா அன்னிக்கு நீங்க சொன்ன அதே வார்த்தையை மத்தவங்களும் சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க…இனி என்னைப் பார்க்க வராதீங்க…மீறி வந்தா…”அவள் கண்களில் இருந்த உறுதி அவனை அசைத்துப் பார்த்தது.அதே நேரம் அவளிடம் மீண்டும் மீண்டும் கெஞ்சவும் அவன் யோசிக்கவில்லை.


“ப்ளீஸ் பொம்மிம்மா…அப்படி எல்லாம் பேசாதடி…என்னால தாங்கிக்க முடியாது.இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சுடு”


“இப்போ நீங்க இங்கே இருந்து கிளம்பறீங்களா இல்லையா?”என்று கேட்டவள் கண் இமைக்கும் நொடிக்குள் கத்தியை எடுத்து தன்னுடைய மணிக்கட்டில் அழுத்தமாக பதித்துக் கொண்டாள்.


பார்த்திபன் பதற, அவளோ கொஞ்சமும் உணர்வின்றி தொடர்ந்து பேசினாள்.
“இனியொரு முறை என்னைத் தேடி வந்தா…அந்த நிமிஷமே என்னோட வாழ்க்கையை நான் முடிச்சுப்பேன்”என்று அவள் ஆணித்தரமாக பேச முகத்தில் அறை வாங்கியதைப் போல உணர்ந்தவன் சோர்ந்த நடையுடன் வீடு திரும்பி விட்டான்.


நடந்த அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த மெய்யாத்தா அவன் தலையை ஆறுதலாக வருடினார்.


அதுக்கு அப்புறம் நீ அவளைப் போய் பார்க்கவே இல்லையா பார்த்திபா?”


‘எப்படி போவேன் அப்பத்தா…அவ என்னைத் திட்டினாக் கூட பரவாயில்லை..அவளை ஏதாவது செஞ்சுகிட்டா…அந்த பயம் தான் எனக்கு…நானும் அவளுடைய கோபம் குறைஞ்சுடும்னு இவ்வளவு நாளா காத்துக்கிட்டு இருந்தேன்.வீட்டில் ஏதாவது விஷேசம் நடக்கும் சமயங்களில்,ஊரில் திருவிழா சமயங்களில் எல்லாம் பாஸ்கரை அனுப்பி அவளை வரவழைக்க முயற்சி செய்தேன்.அதன் பலன் என்னவோ பூஜ்யம் தான்.பாஸ்கர் தன்னுடைய சொந்த அண்ணன் இல்லை என்பது தெரிந்த பிறகு அவனுக்கு பாரமாக இருக்கக்கூடாது என்று முடிவு செய்து அவனை விட்டும் அவள் விலக ஆரம்பிச்சப்போ எனக்கு என்ன செய்றதுனே தெரியலை அப்பத்தா…கொஞ்ச நாள்ல அவளாவே மனசு மாறுவான்னு நினைச்சு ஏமாந்து போயிட்டேன்.


“கல்யாணத்துக்கு முதல் நாள் நீ இங்கே சண்டை போட்ட விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும் பார்த்திபா”என்று சொல்லி அவனை அதிர வைத்தவர் தொடர்ந்து பேசினார்.


“வீட்டுல நம்ம சொந்தக்காரங்க நாலைஞ்சு பேர் தங்கி இருந்தாங்க…அவங்க மூலமா எனக்கு அப்பவே தகவல் வந்துடுச்சு.அப்போ அதை நான் பெருசா எடுத்துக்கலை.ஏன்னா..அந்த பொண்ணைப் பத்தின விஷயத்தை முன்னாடியே பாஸ்கர் எனக்கு சொல்லிட்டார்.நான் தான் வெளியில் தெரிஞ்சா பிரச்சினை ஆகிடும்னு சொல்லி அதை யாரிடமும் சொல்ல வேண்டாம்னு சொல்லி இருந்தேன்.”என்று அவர் சொல்ல பார்த்திபனுக்கு பெரும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.


“எது எப்படியோ பார்த்தி…நீ செஞ்சது தப்பு…அந்த பிள்ளை மனசு ரணமாகிடுச்சு உன்னால…இனி அதை நீ தான் சரி செய்யணும்”என்று சொன்னவர் அறையை விட்டு வெளியேறும் முன் மீண்டும் பேரனை வம்பிழுத்து சகஜ நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்தார்.


“இப்படியே பழைய கதை பேசியே காலத்தை கடத்தாம சீக்கிரமா கொள்ளுப் பேரனைப் பெத்து என் கையில் கொடு பார்த்திபா” என்று சொன்னவர் சிரித்தபடி கீழிறங்கி சென்று விட இரவுப் பொழுது நெருங்கும் பொழுது கண் விழித்தாள் பௌர்ணமி.


அவள் எழுந்ததுமே அவளுக்கு முகம் கழுவ உதவி செய்தவன் அவளது அறைக்கே சாப்பாடு கொண்டு வந்து சாப்பிட வைத்தான்.


அவனது செய்கைகள் அனைத்தையும் அமைதியாக ஏற்றுக் கொண்டவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்பதையே அவனால் கணிக்க முடியவில்லை.


இரவு அவளுக்கு சூடாக பாலை கொண்டு வந்து கொடுத்தவன் மெல்ல அவளிடம் பேச முயன்றான்.


“பொம்மிம்மா…இன்னைக்கு ராமன் மாமா பேசினது எதையும் மனசுல வச்சுக்காதேடா…அவருக்கு நான் அவர் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கணும்ன்னு ஆசை..அது நடக்காத விரக்தியில் அப்படி பேசிட்டார்.இனி அவர் இந்த வீட்டுப் பக்கம் கூட வர மாட்டார்..சரிதானா?”


“இப்போ எதுக்கு எனக்கு விளக்கம் சொல்றீங்க?நான் எந்த விளக்கமும் உங்ககிட்ட கேட்கலையே…”என்று மென்குரலில் பெசியவளைப் பார்த்து அவனுக்கு அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது.


‘ஹம்..இன்னும் என் மீது இருக்கும் கோபம் குறையவில்லை போல…’என்று எண்ணி பெருமூச்செறிந்தவன் படுக்கையை சரி செய்து விட்டு,விளக்கை அணைத்து விட்டு அவளுக்கு முதுகு காட்டி உறங்கத் தொடங்கினான்.


அவள் உறங்காமல் அப்படியே இருந்தாலும் அவளிடம் பேச்சுக் கொடுக்க அவனுக்கு பயமாக இருந்தது.திருமணம் முடிந்த மறுநாளே இப்படி ஒரு சூழ்நிலையில் அவளை நிறுத்தி விட்டோமே என்ற குற்றவுணர்ச்சி அவனை வாட்டி வதைத்தது.


“தூங்கிட்டிங்களா?” அவளது மெல்லிய குரல் கேட்டு அடித்து பிடித்து எழுந்து வேகமாக லைட்டைப் போட்டான் பார்த்திபன்.


“என்ன ஆச்சு பொம்மிம்மா…எங்கேயும் வலிக்குதா…டாக்டருக்கு போன் செய்யட்டுமா?”என்று பதற அவளோ அவனைப் பார்த்து சிரித்தாள்.


“பகல் பூரா தூங்கினதால எனக்கு இப்பக் கொஞ்சம் கூட தூக்கம் வரலை…அதான் பேசிட்டு இருக்கலாம்னு கூப்பிட்டேன்.அதுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்றீங்க?”என்று கன்னத்தில் குழி விழ சிரித்தவளைப் பார்த்து கொஞ்சம் ஆசுவாசமானான்.


“கொஞ்சம் நேரம் டிவி போடட்டுமா பொம்மிம்மா…பார்க்கறியா?”என்று டிவி ரிமோட்டை எடுத்தவனை முறைத்து விட்டு வேகமாக அதை வாங்கி தூக்கிப் போட்டாள்.


“ஏன்…நீங்க பாட மாட்டீங்களா?” என்று கேட்க அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான் பார்த்திபன்.


‘இவ நிஜமா கேட்கிறாளா..இல்லை விளையாடுறாளா’


“ம்…சீக்கிரம் பாடுங்க…”அவள் குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு கெஞ்ச…கொஞ்சம் கூட பிகு இல்லாமல் பாடத் தொடங்கினான்.


வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது


என்றவன் அதற்கு மேல் பாடாமல் மௌனித்து விட்டான்.அவனது மௌனம் அவன் மனதில் இருந்த வருத்தத்தை அவளுக்கு உணர்த்த அதற்கு அடுத்த வரியை அவள் பாடி தன்னுடைய மனதை தெரிவிக்க எண்ணினாள் பௌர்ணமி.


வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா
தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும்
தனியாகாது


என்று மென்குரலில் காதலைக் குழைத்து அவள் பாட பார்த்திபன் அவள் பாடும் பாடலின் பொருள் உணர்ந்து ஆச்சரியத்தோடு அவளையே இமைக்காமல் பார்க்கத் தொடங்கினான்.


“பொம்மிம்மா…”அவன் குரல் நடக்க முடியாத ஒரு அதிசயம் நடந்து விட்ட ஆச்சரியத்தில் நெகிழ்ந்து போய் இருந்தது.


கைகளை அவன் புறம் நோக்கி நீட்டியவளை நம்ப முடியாமல் பார்த்தவன் அடுத்த நொடியே அவளை இறுகத் தழுவி இருந்தான்.


“என்னை மன்னிச்சுட்டியா பொம்மிம்மா?”


“இல்லை அன்னைக்கு நடந்ததை மறந்துட்டேன்.எனக்கு இப்போ நினைவில் இருக்கிறது எல்லாம்.என்னை தப்பா பேசின ஒருத்தரை அடிச்சீங்களே…அது மட்டும் தான்”


“பொம்மிம்மா…அன்னைக்கு நான் அப்படி நடந்துகிட்டதுக்கு காரணம் என்னன்னா?”


“எனக்கு அது எதுவும் தேவை இல்லை…கண்டிப்பா இந்த நாலு வருசத்துல அது தப்பு அப்படிங்கிறது உங்களுக்கு புரிஞ்சு இருக்கும்.அதனால தானே என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க”


“பொம்மிம்மா…இது ஒண்ணும் கனவு இல்லையே…”தவிப்புடன் வெளிவந்தது அவன் குரல்.


“இல்லை… இல்லை…இல்லை…”
அவளுடைய பதிலில் முகம் மலர்ந்தவன் அடுத்த நொடியே களை இழந்து அவளை விட்டு விலகி நின்றான்.


“நான் உன் கழுத்தில் தாலி கட்டினதுமே அதை கழட்ட முயற்சி செஞ்சியே… அந்த அளவுக்கா உனக்கு என் மேல வெறுப்பு?”


“கழட்ட மாதிரி நடிச்சேனே தவிர…நிச்சயம் அதை என்னால் செஞ்சு இருக்க முடியாது.என் மனசுல முதன்முதலில் பதிந்த உருவம் உங்களோடது தான்.இந்த நாலு வருசமா எவ்வளவோ முயற்சி செஞ்சும் என்னால உங்களை மறக்க முடியலை.எங்கே உங்க வீட்டுக்கு வந்தா என்னையும் அறியாமல் வெட்கம் கெட்டு உங்க கிட்டே காதலை பிச்சையா கேட்டுடுவேனோன்னு பயந்து தான் நான் இங்கே வரவே இல்லை.அதை விட என்னுடைய தன்மானத்திற்கு இழுக்கு வேற எதுவும் இல்லைன்னு நான் நம்பினேன்.


என்னை மோசமான பெண்ணா நினைச்சுக்கிட்டு இருக்க உங்ககிட்ட…நாலு வருசமா என்னை மறந்துட்டு நிம்மதியா இருக்கிற உங்க கிட்டே என்னுடைய காதலை சொல்றது எனக்கு நானே செய்து கொள்ளும் அசிங்கம்னு நினைச்சேன்.அதனால தான் உங்களை விட்டு ஒதுங்கிப் போக முடிவு செஞ்சேன்.


ஆனா நீங்க வந்த முதல் நாள்லயே என்னோட அஸ்திவாரத்தையே ஆட்டிப் படைக்க ஆரம்பிச்சிங்க…எங்கே தொடர்ந்து இங்கேயே தங்க நேர்ந்தா என்னையும் அறியாமல் ஏதாவது செய்து விடுவேனோன்னு பயந்து தான் நான் ஊருக்கு கிளம்பியது.”


“நான் தாலி கட்டினது உனக்கு பிடிக்கலையா பொம்மிம்மா?”


“அந்த நிமிஷம் என்னால நிச்சயமா அதை ஏத்துக்க முடியலை…என்னை சந்தேகப்பட்டு பேசினவரோட ஒருத்தரோட தாலியை நான் சந்தோசமா ஏத்துக்கிட்டு இருந்தா என்னோட மனசாட்சியே என்னைக் காறி துப்பி இருக்கும். அந்த அளவுக்கா சுயமரியாதை இல்லாதவ நீ அப்படின்னு”


“இப்போ மட்டும் எப்படி?”அவனுக்கு அவளது மனமாற்றதிற்க்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவல் அவன் குரலில்.


“முதல்ல நான் நீங்க பேசினதைக் கேட்டு உடைஞ்சு போய் தான் அப்படி இருந்தேன்.ஆனா அதுக்கு அப்புறம் அண்ணா கிட்ட கேட்டு என்னோட பிறப்பைப் பத்தி தெரிஞ்சுகிட்ட பிறகு என்னால உங்க வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளா இருக்க முடியுமான்னு சந்தேகம் வந்துச்சு…


அண்ணன் கல்யாணத்தப்போ நான் தான் நேரிலேயே பார்த்தேனே…இந்த ஊரில் உங்க குடும்பத்துக்கு எவ்வளவு மரியாதைன்னு…அப்படிப்பட்ட குடும்பத்துக்கு என்னை மாதிரி ஒருத்தி மருமகளா வர முடியுமான்னு தவிப்பு ஒரு பக்கமும்…என்னை உங்க வீட்டில் உள்ள எல்லாரும் முழுமனசோட ஏத்துப்பாங்களான்னு ஏக்கம் ஒரு பக்கமும் இருந்துச்சு…அதனால் தான் நான் விலகி விலகி போனேன்”


“இப்போ மட்டும் எல்லாம் சரியாகிடுச்சா?”


“கோவில்ல நீங்க பேசுனது,மாமா பேசுனது,அத்தை பேசுனது…எல்லாத்தையும் ஒண்ணு விடாம கேட்டேன்…அப்பவே புரிஞ்சு போச்சு எனக்கு”


“ஆனாலும் இன்னும் நான் என்னோட பக்கத்தில் எந்த விளக்கமும் கொடுக்கலையே?”


“கோவிலில் நீங்க பேசுனதை விடவா வேறு விளக்கம் வேணும்…எந்த சொந்தக்காரங்க முன்னாடி என்னை அசிங்கப்படுத்துற மாதிரி பேசுனீங்களோ..அதே ஆட்கள் முன்னாடி என்னை கௌரவப்படுத்தின பிறகு வேற விளக்கம் எதுவும் எனக்கு தேவையா இல்லை”


“இருந்தாலும்…”


“ஹம்…இது ஆவறது இல்லை..நானே இறங்கி வந்து இவ்வளவு தூரம் சொல்லியும் நீங்க பழைய பல்லவியை பாடினா என்ன அர்த்தம்…உங்களை கல்யாணம் செஞ்சதுக்கு யாராவது சாமியாரை கல்யாணம் செஞ்சு இருக்கலாம்.”


“ஏன் பொம்மிம்மா” என்றான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு…


“பின்னே நாலு வருஷ சண்டை முடிஞ்சு நான் சமாதனத்துக்கு வந்து இவ்வளவு நேரம் ஆகுது.. இன்னும் என்னவோ கேள்வி மேல கேள்வியா கேட்டுக்கிட்டு இருக்கீங்களே தவிர…வேற எதுவும் ஆரம்பிக்கிற மாதிரி இல்லை.” என்று சொல்லி அவள் திரும்பி படுத்துக் கொள்ள முயல பாய்ந்து அவளைத் தடுத்து நிறுத்தினான் பார்த்திபன்.


“பொம்மிம்மா…உனக்கு உடம்புல அடிபட்டு இருக்கு” என்றான் கேள்வியும் தவிப்புமாக.


“அது எனக்கு தெரியாது பாருங்க..தெரியாமத் தான் இவ்வளவு தூரம் பேசுறேனா” என்று சொல்லி விட்டு மீண்டும் தூங்க முயல அடுத்த நொடி அவளை இறுகத் தழுவி இருந்தான் பார்த்திபன்.


அவளை மூச்சு முட்ட அணைத்தவன் ஒரு நொடி நிதானித்து பின் மீண்டுமாக அவளின் முகம் பார்த்து கேட்டான்.


“பொம்மிம்மா …உனக்கு முழு சம்மதம் தானே?”


“ஊஹும்…நான் போய் அப்பத்தாவை கூட்டிட்டு வந்து துணைக்கு படுக்க வச்சுக்கப் போறே…”என்று பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே அவளது இதழ் வழி வந்த வார்த்தைகள் உறிஞ்சு எடுக்கப்பட்டது பார்த்திபனால்.


கொலுசொலிகளும்,மெல்லிய சிணுங்கல்களும் அறையில் நிறைந்து இருக்க பார்த்திபன் தன்னுடைய நான்கு ஆண்டு தவிப்பை அவளிடம் தீர்த்துக் கொள்ள முயன்றான்.பௌர்ணமியோ எந்த வாழ்க்கை தனக்கு கிடைக்கவே கிடைக்காதோ என்ற அச்சத்தில் இருந்தவள் இன்று அந்த வாழ்க்கையை தன்னுடைய மனதுக்கு இனியவனுடன் வாழ்ந்து விட துடித்தாள்.
மறுப்புகளும்,கெஞ்சல்களும் அங்கே புறக்கணிக்கப்பட்டு காதல்…காதல் …காதல் மட்டுமே அந்த இடத்தை ஆட்சி செய்தது.இதுநாள் வரை பெயரளவில் மட்டுமே அவனது துணைவியாக இருந்தவள் இன்று முதல் உள்ளத்து அளவிலும் அவனோட வாழத் தொடங்கினாள்.


பிறைமதியாக இருந்த அவர்களது வாழ்க்கை முழுமதியானது….
*** சுபம்***

Facebook Comments Box
What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Previous PostMEV Tamil novels 13
Next PostVanavil Sirpame – Book
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here