MEV Tamil Novels 10

1
4579
Madhumathi Bharath Tamil Novels

எப்பொழுதும் விடியற்காலையே எழுந்து பழக்கப்பட்ட பார்த்திபன் முன் தினம் கல்யாண வேலைகளுக்காக அலைந்தாலும், நடு இரவைத் தாண்டிய பிறகும் கூட யோசித்துக் கொண்டே தூங்காமல் இருந்ததாலும் அசந்து தூங்கி விட அவனுக்கு முன்னரே பௌர்ணமி விழித்துக் கொண்டாள்.

கண் விழித்ததும் அவள் முதலில் பார்த்தது கணவனின் முகத்தைத் தான்.ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் முகத்தில் இருந்து பார்வையை விலக்கிக் கொள்ளவில்லை அவள். ‘அவனுக்குத் தான் நான் பார்ப்பது தெரியப் போவது இல்லையே’ என்று எண்ணியவள் அவனை நன்றாக பார்வையிட்டாள்.

கம்பீரமான முகம்,ஜன்னல் வழி உள்ளே வந்த காற்றில் அழகாக அசைந்து கொண்டிருந்த அவனது கேசம்,கூரான நாசியும்,எந்த கெட்டப் பழக்கமும் இல்லாததால் சிவந்திருந்த அவனது உதடுகளும்,அவனது உதட்டையே பாதி மறைத்தார் போல இருந்த அவனது அடர்த்தியான மீசையும் அவளது பார்வையை அவனிடமிருந்து பிரிக்க முடியாமல் செய்தது.

‘ஏன் அப்படி செஞ்சீங்க?நீங்க பேசுன வார்த்தை என்னோட மனசுல முள்ளு மாதிரி தைச்சு இருக்கும் பொழுது அதை மறந்துட்டு எப்படி என்னால உங்களோட ஒரு இயல்பான கல்யாண வாழ்க்கை வாழ முடியும்…அதற்கு பயந்து தானே நான் வேறு ஒருத்தரை கல்யாணம் செஞ்சுக்க சம்மதம் சொன்னேன்…ஆனா அதைக் கூட உங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னு நினைச்சு தானே உங்க முன்னாடியே சொன்னேன்.அதுக்காக இப்படியா செய்வீங்க?’என்று தனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தவள் அவனிடம் அசைவு தெரியவும் வேகமாக எழுந்து குளியறைக்குள் புகுந்து கொண்டாள்.

பார்த்திபன் முழிப்பதற்குள் குளித்து முடித்து கீழே சென்றவள் முதலில் சென்றது பூஜை அறைக்குத் தான்.பூஜை அறையில் எல்லாம் தயாராக இருக்க,விளக்கேற்றியவள் கடவுளின் முன் கைக்கூப்பி வணங்கினாள்.

‘ஆண்டவா…இன்று முதல் நான் இந்த வீட்டுப் பெண்…என்னால் இந்த வீடு வளர்ந்தது என்ற பெயர் தான் இருக்க வேண்டுமே தவிர வேறு ஒரு அவச்சொல் என்னால் இந்த வீட்டிற்கு வந்து விடக்கூடாது ‘என்று மனமார வேண்டியவள் கண் திறக்கும் பொழுது அவளுக்கு எதிரில் திருப்தியான புன்னகையுடன் செல்வி நிற்கவும் லேசாக அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.

செல்வி மருமகளை தலை முதல் கால் வரை ஆராய்ச்சி பார்வை பார்க்கவும் இதழ் கடித்து பார்வையை தழைத்துக் கொண்டாள்.

“காபித்தண்ணி குடிச்சியா?”

“இ..இல்லை அத்தை…”

“சரி வா…குடிச்சுட்டு உன் புருஷனுக்கும் கொடு…காலையில் நேரமா குலதெய்வ கோவிலுக்கு போகணும்…கிளம்பி தயாராகுங்க”என்று சொன்னபடி அவள் கையில் காபி டம்ளரைத் திணிக்க வேறு வழியின்றி அதை வாங்கிக் கொண்டு மாடி ஏறினாள்.

அசந்து உறங்கிக் கொண்டிருந்தவனை எப்படி எழுப்புவது என்று யோசித்தவள் கையில் இருந்த காபியை டேபிளில் வைத்து விட்டு அவனை தொட்டு எழுப்புவதா வேண்டாமா என்ற யோசனையுடன் நிற்க,அவளுக்கு சிரமம் கொடுக்காது பார்த்திபனே கண் விழித்து விட்டான்.

தன்னை எப்படி எழுப்புவது என்ற யோசனையுடன் தான் கண் விழித்து விட்டதை கூட கவனிக்காமல் பதட்டமாக நின்றவளைப் பார்த்ததும் அவனுக்கு கோபம் தான் வந்தது.

“கட்டுன புருஷன் என்னை தொட்டு எழுப்பினா உன்னோட கற்புக்கு எந்த களங்கமும் வந்துடாது” என்று ஆத்திரமாக உரைத்தவன் வேகமாக குளியல் அறைக்குள் சென்று விட பௌர்ணமி திருத்திருத்தாள்.

‘இவர் எப்போ முழிச்சார்?’ என்று எண்ணியவள் அவர் திரும்பி வரும் பொழுது நிச்சயம் காபி ஆறி விடும் என்று எண்ணியவள் அவர் வந்ததும் கீழே போய் சூடு செய்து எடுத்து வரலாம் என்ற நினைவுடன் அப்படியே அறையின் ஜன்னல் வழி வெளியே வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.

குளித்து முடித்து இடுப்பில் துண்டோடு வெளியே வந்தவன் கண்ணெதிரில் அழகிய சிற்பம் போல இருந்தவளைக் கண்டு மெய் மறந்தான்.சில நிமிடங்களுக்கு முன் அவள் மீது ஏற்பட்ட கோபம் காற்றில் கரைந்து போன கற்பூரமாய் காணாமல் போய் விட்டது.

அதீத அலங்காரங்கள் எதுவும் இல்லை…சாதாரணமான புடவை தான்.ஆனால் கட்டியிருப்பது அவளாயிற்றே…குளித்து முடித்து ஈரக் கூந்தலின் நுனியில் முடிச்சிட்டு லேசான ஈரம் சொட்ட அவள் நின்று கொண்டு இருந்த கோலம் அவன் மனதை மயக்க அவளின் கவனத்தை கவராமல் அவளின் அருகில் சென்றவன் பின்னால் இருந்து அவளை இறுக்கி அணைத்தான்.

ஒரு நிமிடம் உடல் அதிர பதைத்தவள் அது யாரென்று உணர்ந்தும் தன்னுடைய எதிர்ப்பைக் கை விட்டாள்.

“அசத்துற பொம்மிம்மா” என்றவன் அவளுடைய பின்னங்கழுத்தில் சூடான முத்தங்களைப் பதிக்க இதழ் கடித்து தன்னுடைய உணர்வுகளை அடக்கிக் கொண்டாள் பௌர்ணமி.

‘தொடுவது அவளது கணவன் தான்…அவளது மனதுக்கு இனியவன் தான்…அவனை அவள் நேசிக்கிறாள் தான் இருந்தாலும்…அவளால் முழு மனதுடன் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியவில்லை.

அவளுடைய மனநிலையை அவனும் உணர்ந்தானோ என்னவோ அவளை மேலும் சோதிக்காமல் விலகியவன் அவளது கையை விடாமலே கட்டிலில் அமர வைத்து விட்டு தானும் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.

சற்று நேரம் தன்னுடைய கரங்களுக்குள் அவளுடைய கரங்களை பாதுகாப்பாக பொத்தி வைத்து கொண்டவன் அப்படியே கண் மூடி அந்த நொடியை ரசித்துக் கொண்டிருந்தான்.

“குல தெய்வத்தோட கோவிலுக்கு பொங்கல் வைக்க போகணும்…சீக்கிரம் கிளம்பி கீழே வர சொன்னாங்க அத்தை” தரையை பார்த்தபடியே பேசியவளைக் கண்டு அவனுக்கு கோபம் வரவில்லை.

“கிளம்பலாம் பொம்மிம்மா…அதுக்கு முன்னாடி கொஞ்சம் உன்கிட்டே பேச வேண்டி இருக்கு…பேசலாமா?” என்று பீடிகை போட்டவன் அவளின் அமைதியை சம்மதமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து பேசலானான்.

“எனக்கு உன்னை பிடிக்கும் பொம்மிம்மா…ரொம்பவே…உனக்கும் அதே மாதிரி தான்னு எனக்கு தெரியும்…என்னை விட அதிகமாவே நீ என்னை காதலிக்கிற…ஆனாலும் நம்ம கல்யாணம் இப்படி ஒரு சூழ்நிலையில் நடந்து போச்சு…இனி அதை மாத்த முடியாது.

அதுக்காக அப்பத்தா சொன்ன மாதிரி நீ உன்னோட அண்ணனுக்காக என்னை சகிச்சுக்கிட்டு வாழணும்ன்னு அவசியம் இல்லை…

உன் மனசை காயப்படுத்தியவன் நான் தானே…என்னோட தப்பை நீ மனசார மன்னிக்கிற வரைக்கும் நான் காத்துக்கிட்டு இருக்கேன்.எனக்கு நம்பிக்கை இருக்கு…உன் மனசுக்குள்ள இருக்கிற காயத்தை என்னோட காதல் மாத்திடும்ன்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.அதுவரை என்கிட்டே வெறுப்பா மட்டும் நடந்துக்காதே பொம்மிம்மா…என்னால தாங்க முடியாது”என்று கரகரப்பான குரலில் கூறியவன் அவளின் தோளோடு தோள் சேர்த்து அணைத்தவாறே சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்து இருந்தவன் கதவு தட்டும் ஓசையில் அவளை விடுவித்து விட்டு யார் என்று போய் பார்த்தான்.

“அண்ணா…சீக்கிரம் கிளம்புங்க…குலதெய்வ கோவிலுக்கு கிளம்ப சொல்லி அம்மா சொன்னாங்க”என்றாள் சுகன்யா.

“ஒரு பத்து நிமிஷம்  சுகன்யா…நீ கிளம்பி போ …நாங்க வந்திடறோம்”என்று சொன்னவன் திரும்பி மனைவியைப் பார்க்க அவளோ ஈரக் கூந்தலைப் பிரித்து தலையை சீவி கோவிலுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள்.

கதவை சாத்தி விட்டு மனைவி அறைக்குள் இருப்பதையே பொருட்படுத்தாது கடகடவென வேறு உடைக்கு மாற,தலை சீவி முடித்ததும் எதேச்சையாக விழி உயர்த்திப் பார்த்தவள் அரண்டு போய் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

அவளின் செய்கையை பார்த்தவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே வேறு உடைக்கு மாற…அவளோ அப்பொழுதும் கண்களை மூடியே இருந்தாள்.

அவளை சீண்டும் எண்ணம் அதிகமாக உந்த அவளின் அருகில் சென்றவன் தோளைப் பிடித்து அவளை தன்புறமாக திருப்பினான்.

அரைக்கண்ணில் பார்த்தவள் அவன் உடை மாற்றி விட்டதை அறிந்ததும் நன்றாக கோபத்துடன் அவனை முறைக்க அவனால் சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல் கலகலவென்று சிரிக்கத் தொடங்கினான்.

சிரிக்கையில் அவன் கண்களில் தெறித்த மின்னல் அவளை மேலும் அவன் புறம் ஈர்க்க தலையை ஆட்டி அதிலிருந்து வெளியே வர முயன்றாள்.அவளின் முயற்சியை உணர்ந்து கொண்டவன் மென்மையாக அவளின் மூக்கோடு மூக்கை உரசி மென்குரலில் ரகசியம் பேசினான்.

“நான் என்ன பூதமா…இல்லை பேயா? என்னைப் பார்த்து பயந்து போய் கண்ணை இறுக மூடிக்கிட்டே…”

பதில் சொல்லாமல் அவள் நகர முனைய அவனோ பிடியை கொஞ்சமும் தளர்த்தாமல் அப்படியே நிற்க…சில நிமிடங்கள் போராடியவளுக்கு புரிந்து போனது.அவனாக விடுவித்தால் அன்றி தன்னால் விடுபட முடியாது என்று..அவனிடம் மயங்கத் துடித்த மனதின் மீது கொண்ட கோபத்தை அவனிடம் காட்டி தன்னுடைய ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள எண்ணினாள்.

“நீங்க பேயோ..பூதமோ இல்லை…அதை விட மோசமானவர்…என்னை உயிரோடு கொன்னவர்…”என்று ஆத்திரமாக சொல்ல அவள் எதிர்பார்த்ததை போலவே அவன் முகம் ஒரு நொடி இருண்டு போனது.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here