MEV Tamil Novels 11

0
4680
Madhumathi Bharath Tamil Novels

அடுத்த நொடியே தலையை நிமிர்த்தியவன் அவளை கண்ணோடு கண் நோக்கி நிமிர்வுடன் பேச ஆரம்பித்தான்.

“உன்னைக் கொன்னுட்டு நான் மட்டும் இங்கே சந்தோசமா இருந்தேன்னு நினைக்கறியா? நீ தானேடி என்னைத் தேடி நீ வரக்கூடாதுன்னு சொன்ன…”

“ஆமா சொன்னேன் தான்.. அதுக்காக விட்டது தொல்லைன்னு அப்படியே இருந்துடுவீங்களா?” என்று உதடு துடிக்க கேட்டவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“ஏய்! பைத்தியம்… இப்படி எல்லாமா இத்தனை நாளா நினைச்சுக்கிட்டு இருந்த… நான் எப்படிடி அந்த மாதிரி நினைப்பேன்… எங்கே இந்த முறையும் உன்னை விட்டா மறுபடியும் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமோ இல்லையோங்கிற பயத்தில் தானே இப்படி உன் கழுத்தில் அவசரமா தாலியை கட்டிட்டு முழிச்சுட்டு இருக்கேன்”

“ஓ…என்னை கல்யாணம் செஞ்சது மாட்டிகிட்டு முழிக்கிற மாதிரி இருக்கா உங்களுக்கு?”என்று கோபமாக கேட்டவள் அவனது தலை முடியைக் கொத்தாகப்  பிடித்து இடமும் வலமுமாக ஆட்ட விளையாட்டாக கத்தத் தொடங்கினான் பார்த்திபன்.

“ஹே..ராட்சசி.. விடுடி.. வலிக்குது… ஊருக்குள்ளே பெரிய மனுஷன்டி நானு… யாராவது பார்த்தா என்ன ஆகுறது?”

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுறீங்க?”என்று அவனுடைய தலையைப் பிடித்து கோபத்துடன் ஆட்டிக் கொண்டே இருந்தவள் சற்று நேரம் பொறுத்தே தன்னிலை உணர்ந்தாள்.அவசரமாக கையை எடுத்து விட்டாள்.

‘சே! என்ன காரியம் செய்து விட்டேன்..இது தான் நீ அவன் மீது கோபமாக இருக்கும் லட்சணமா?’என்று அவளின் மனசாட்சி அவளை சீண்டி விட வேகமாக அங்கிருந்து நகர முயன்றவளை கைப் பிடித்து தடுத்து நிறுத்தினான் பார்த்திபன்.

“பொம்மிம்மா…ஏன் இவ்வளவு பதட்டம்…நீ இப்படி நடந்துக்கிற அளவுக்கு நீ எந்த தப்பும் செய்யலை…”

‘இல்லை தப்பு தான்…’அவளின் மனசாட்சி அடித்துப் பேசியது.

“உனக்கு புரியலையா பொம்மிம்மா…உன் மனசு என் மேல் நீ வைத்திருக்கும் காதலுக்கும்,வெறுப்புக்கும் இடையில் போராடிக் கொண்டு இருக்கிறது உன் மனம்…கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிடும்டா…தேவை இல்லாமல் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதே”என்று சொன்னவன் அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு விடுவிக்க,அதற்கு பின் அங்கே நிற்க மனமில்லாமல் அவள் சென்று விட பார்த்திபன் முகம் முழுக்க யோசனையுடன் கிளம்பி கீழே வந்தான்.

அவனுக்கு முன்னரே குமரனும்,சுபத்ராவும் தயாராக இருக்க,அவர்களுக்கு அருகில் குமரனின் பெற்றோர்கள் பரமசிவமும்,வனஜாவும் காத்திருக்க…அவன் கண்கள் ஆவலுடன் மனைவியைத் தேடியது.

‘எங்கே போனாள் இவள்…இப்பொழுது தானே கீழே இறங்கி வந்தாள்?’என்று துழாவிக் கொண்டே வந்தவனின் பார்வையில் சுகன்யாவுடன் பேசி சிரித்தபடி உள்ளே வந்தவள் பட்டாள்.

மெய்யாத்தாவால் அதிக தூரம் பயணம் செய்ய முடியாது.அதனால் அவர் அங்கேயே தங்கி விட மற்றவர்கள் மட்டும் குலதெய்வ கோவிலுக்கு  செல்வதென முடிவு செய்யப்பட்டது.

அதுவும் இல்லாமல் பெரிய வீட்டாரின் சார்பில் இந்த இரட்டைத் திருமணங்களுக்கும் இன்று விருந்து ஏற்பாடு செய்து இருப்பதால் அது குறித்த ஏற்பாட்டை கவனிக்க வசதியாக இருக்கும் என்றி மெய்யாத்தா அந்த பயணத்தை தவிர்த்து விட்டார்.

கோவிலுக்கு செல்வதற்கு முன் இரண்டு ஜோடிகளும் மெய்யாத்தாவின் கால்களில் விழுந்து ஆசி வாங்கிக் கொண்டு கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்கள்.

கல்யாணத்திற்காக ஏற்பாடு செய்திருந்த வேனிலேயே எல்லாரும் கிளம்பி கோவிலுக்கு செல்ல அவரவர் தத்தமது ஜோடியுடன் ஒன்றாக அமர்ந்து கொண்டு வந்தனர்.

பார்த்திபனின் குல தெய்வக் கோவில் கிராமத்தில் இருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் ஒரு வனப்பகுதியில் இருந்தது.ஆள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் காட்டின் நடுவில் இருக்கும் பத்ர காளியம்மன் தான் பார்த்திபனின் குல தெய்வம்…

வருடத்திற்கு ஒரு முறை வந்து போனாலும் கூட அடர்த்தியான காட்டுப் பகுதியில் இருப்பதால் எப்பொழுதும் தகுந்த பாதுகாப்புடன் தான் ஆண்கள் செல்வார்கள்.

இந்த முறை வீட்டுப் பெண்கள் மட்டுமல்லாது சொந்த பந்தங்களும் வருவதால் பின்னாலேயே ஒரு ஜீப்பில் பார்த்திபனின் பண்ணை ஆட்கள் உதவிக்கு அழைத்து வரப்பட்டனர்.

சில மணி நேர பயணத்திற்குப் பிறகு காட்டின் எல்லைப் பகுதியிலேயே வேனை நிறுத்தி விட்டு எல்லாரும் இறங்கி நடக்கத் தொடங்கினர்.வேனை விட்டு இறங்கியதுமே பௌர்ணமியின் கரங்களை தன்னுடைய கரத்துடன் இறுக கோர்த்துக் கொண்டான் பார்த்திபன்.

“கொஞ்சம் ஆபத்தான இடம் பொம்மிம்மா…அதனால என் கையை பிடிச்சுக்கிட்டே வா” என்றவன் அவளுடன் இணைந்து நடந்தாலும் பார்வை லேசர் போல சுற்றுப்புறத்தை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே வந்தது.

‘இப்ப எதுக்கு இப்படி ஓவரா பில்ட் அப் பண்ணிட்டு வர்றார்…’என்று நினைத்தவள் வெளியே ஒன்றும் பேசாமல் மௌனமாக நடக்க சில நிமிட நடைகளுக்கு பிறகு காட்டின் நடுவில் மிகப் பெரிய அளவில் காளியின் திருவுருவ சிலை இருந்தது.

காளியின் சிலையைப் பார்த்ததும் பௌர்ணமியின் மனதில் இனம் புரியாத அச்சம் தோன்றியது.

நாக்கை வெளியே தொங்க விட்டுக் கொண்டு,விழிகள் வெளியே பிதுங்கி நிற்பதைப் போன்ற தோற்றத்துடன்,கையில் கூரிய ஆயுதங்களுடன் இருந்த காளியின் சிலை அவளது உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தியது.அவள் சொல்லாமலே அவளது நிலையை உணர்ந்து கொண்ட பார்த்திபன் அவளது கை விரல்களை லேசாக ஒருமுறை அழுத்தி கண்களால் தைரியம் கூறினான்.

“ரொம்ப சக்தி வாய்ந்த கடவுள் பொம்மிம்மா…இதுவரை நான் கேட்டு எதையும் இந்த அம்மா மறுத்தது இல்லை…அவங்க தோற்றத்தைப் பார்த்து பயப்படாதே…அந்த முகம் கெட்டவங்களுக்குத் தான்.பக்தர்களை எப்பவுமே பாசம் பொங்க கருணையான பார்வையோட தான் பார்ப்பாங்க…”என்று மேலும் எடுத்து சொல்லி அவளின் பயத்தை தெளிய வைத்தான்.

தன்னுடைய பண்ணை ஆட்கள் மூலம் கோவிலுக்கு அருகில் இருந்த நிலங்களை சுத்தப்படுத்தி பொங்கல் வைக்க தேவையான கற்களை தூக்கி வர ஏற்பாடு செய்து கொண்டிருந்தான்.

இந்த வேலைகள் ஒருபுறம் இருக்க…செல்வி சுபத்ராவையும், பௌர்ணமியையும் அருகில் இருந்த ஓடைக்கு போய் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருமாறு சொல்ல இருவரும் ஆளுக்கொரு குடத்துடன் தண்ணீர் எடுக்க சென்று விட்டார்கள்.

இங்கே பார்த்திபன் வேலையாட்களை வைத்து செடிகளை அகற்றி எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடவும்,பொங்கல் சமைக்கவும் வேண்டிய ஏற்பாடுகளை செய்து முடித்ததும் செல்வியிடம் வந்து பேசினான்.

“அம்மா…எல்லாம் தயார்…பொங்கல் வைக்க…”என்று சொல்ல செல்வியோ அவன் பேசியதை கவனிக்காதது போல முகத்தை திருப்பிக் கொண்டு நகர அவரின் கோபம் புரிந்தது பார்த்திபனுக்கு.

சிறுவயதில் பார்த்திபன் எப்பொழுதுமே செல்வியின் முந்தானையைப் பிடித்துக் கொண்டே அம்மாவின் பின்னாலேயே சுற்றுவான்.இப்பொழுதும் அவனுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் செல்வியின் முந்தானையை எடுத்து கையில் பிடித்துக் கொண்டு அவர் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து சென்று அவரை கெஞ்சி…கொஞ்சி தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்வான்.இப்பொழுதும் அதே முறையை கையாண்டான் பார்த்திபன்.

இரண்டு முறை கோபமாக செல்வி திரும்பிப் பார்க்கும் பொழுதெல்லாம் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டவன் செல்வியின் பின்னாலேயே முந்தானையைப் பிடித்துக் கொண்டு சுற்ற ஒரு கட்டத்திற்கு மேல் கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல் அவனை விளையாட்டாக அடித்து தன்னுடைய கோபத்தை தீர்த்துக் கொண்டார் செல்வி.

“செய்வியா…இனியொரு முறை இப்படி செய்வியா…பெத்தவ நான் கூட இல்லாம கல்யாணம் செய்வியா?”என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் தலையில் கொட்டு வைக்க வலிக்காவிட்டாலும் வலிப்பதைப் போலவே நடித்துக் கொண்டு முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு பேசினான்.

“இனி ஒருமுறை இப்படி செய்ய மாட்டேன்…மறுபடி கல்யாணம் செய்யும் பொழுது உங்களை வைச்சுகிட்டே செய்றேன்…ஆனா இன்னொரு முறை கல்யாணம் செய்ய முயற்சி செஞ்சா…ஹுஹும்…பேச்சுக்கு சொன்னா கூட உங்க மருமக விஜயஷாந்தி ஐபிஎஸ் சா மாறி சுவத்துல ஒரு காலை வச்சு பறந்து பறந்து சண்டை போடுவா பார்த்துக்கோங்க”என்று கேலி பேச அதைக் கேட்டுக் கொண்டே வந்த ராஜனும் உள்ளே சிரித்தாலும் வெளியே முகத்தை சோகமாக வைத்துக் கொண்டார்.

“ஹம்…ஆயிரம் தான் அப்பங்காரன் செஞ்சாலும்…கோபம்னு வந்தா முதலில் ஆத்தாக்காரியை மட்டும் தான்டா…நீங்க சமாதானம் செய்வீங்க…”என்று முறுக்கிக் கொள்ள அம்மாவின் புடவையை விடாமலே அப்பா,அம்மா இருவருக்கு  மட்டும் கேட்கும் வகையில் ரகசியம் பேசினான் பார்த்திபன்.

“வேற என்ன செய்யுறதுப்பா?…இவ்வளவு பேர் முன்னாடி உங்க வேட்டியை நான் பின்னாலே இருந்து பிடிச்சுக்கிட்டு வந்தா அப்புறம் பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க…நடிகர் விவேக் ஒரு படத்தில் வேஷ்டியை தூக்க ஆள் வச்சு இருப்பாரே..அது மாதிரி நினைச்சுட்டா என்ன செய்றது…அதான்”என்று சீரியசான தொனியில் ஆரம்பித்து நக்கலாக முடிக்க ராஜனின் முகம் போன போக்கைப் பார்த்து செல்வி விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்.

பெற்றவர்கள் இருவரும் சிரித்து முடித்ததும் இருவரிடமும் மனமார மன்னிப்பு கேட்டான் பார்த்திபன்.

“என்னை மன்னிச்சுடுங்க…எனக்கு வேற வழி தெரியலை…அதுவும் நீங்க பக்கத்தில் இல்லாத நேரம் நான் கல்யாணம் செஞ்சது ரொம்ப பெரிய தப்பு தான்…என்னோட சூழ்நிலை அப்படி…இன்னும் உங்களுக்கு என் மேல கோபம் போகலேன்னா…”

“கோபம் இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன் பார்த்திபா…ஆனா நடந்து முடிஞ்ச விஷயத்தை பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை.எங்களுக்கு உன்னோட சந்தோசம் தானேடா முக்கியம்…”என்று பார்த்திபனின் தோள் அணைத்து ஆறுதல் படுத்தினார் ராஜன்.

‘ஹம்…ஒரு வழியாக அப்பா,அம்மாவை சரி கட்டியாச்சு…இன்னும் அவளைத் தான் எப்படி சமாதானம் செய்றதுன்னே தெரியலை…அம்மா தாயே…நீ தான் அதுக்கும் ஒரு நல்ல வழியைக் காட்டணும்”என்று எதிரில் இருந்த காளியிடம் மனமுறுகி வேண்டினான். அம்மா,அப்பா இருவருடன் சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தவன் அதிர்ந்து போனான் சுபத்ராவின் அலறலைக் கேட்டு.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here